Aug 28, 2009

ஹிந்தி கற்பது பாவச்செயலா?

அண்மையில் நமது மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ள 'தாய் மொழியுடன் சேர்த்து, ஹிந்தியும் கற்க வேண்டும்' என்ற கருத்து இங்கு மீண்டும் சில அசைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

எந்த தமிழனும் தமிழை தாழ்த்தி பேசுபவனில்லை. தமிழை தாழ்த்துபவன் தமிழனாக இருக்க முடியாது. தாய் மொழியை தாழ்த்தும் எவனும் பேச தகுதியற்றவன். எந்த மொழியும் பேச தகுதியற்றவன். தாய் பேசும் மொழிதான் தாய் மொழி என்பதில்லை. தாய் நாட்டு மொழிதான் தாய் மொழி என்பேன். இந்தியா பொன்ற பல மொழிகளை தன்னகத்தே கொண்டுள்ள நாடுகளில், மாநில எல்லைகள் மொழியால் பகுக்கப்பட்டிருப்பதால், அந்தந்த மாநிலங்களில் பேச்சுவழக்கில் உள்ள மொழியே அவரவர் தாய் மொழி எனலாம். தமிழ்நாட்டிலிருக்கும் தமிழர்களாகிய நமக்கு தாய் மொழி ‘தமிழ்’.

பணிநிமிர்த்தமாகவோ அல்லது சுற்றுலா போன்ற இதர காரணங்களுக்காகவோ தன் தாய் மாநிலத்திற்கு வெளியே செல்லும், எல்லையில் வரையப்பட்டிருக்கும் ஒரு கோட்டைத்தாண்டி செல்லும் ஒருவர் தாய் மொழி தவிர வேறு மொழி தெரியாத போது தான் அனுபவிக்கும் சிரமங்களை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. 1997ல் மும்பை சென்றபோது நான் அனுபவித்திருக்கிறேன். நம் அண்டை மாநிலமான கேரளா செல்லும் போது மலையாளமும், அதேபோல ஆந்திரா, கர்நாடகா செல்லும் போது தெலுகும், கனடமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது சற்று சிரமமே. ஆந்திராவை தாண்டி சென்று விட்டால், ஹிந்தி பொதுமொழியாக இருக்கிறது. ஹிந்தி என்ற ஒரு மொழி பேச தெரிந்தால் பெரும்பாலான வட மாநிலங்களில் சிரமமின்றி தம் தேவையை நிறைவேற்றிக்கொள்ளலாம். ஹிந்தி என்ற, இந்தியாவில் பெரும்பாலானோர் பேச்சு மொழியாக கொண்டிருக்கும் மொழியை வெளி மாநிலங்களோடு தொடர்பு இருக்கும் அனைவரும் பேச கற்றுகொள்ளுதல், அவரவர் வாழ்வில் நன்மைபயக்கும். நம் அண்டை மாநிலத்தவர் எப்போதோ இதை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் பொது மொழியான ஆங்கிலத்தையே கற்கலாமே, ஹிந்தி எதற்கு? என்ற வாதமும் கூடவே வருகிறது. ஆங்கிலம் கற்பதற்கு யார் தடை விதித்தார்கள்? தாராளமாக கற்கலாம். சர்வதேச தொடர்பில் தொழில் செய்பவர்களுக்கு கட்டாயம் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்பது போலவே, நம்தேசம் முழுக்க தொழில் தொடர்பு செய்பவர்களுக்கு சாமானியர்களோடு பேச ஹிந்தி அவசியமாகிறது. ஹிந்தி பேசும் ஒருவனுக்கு தமிழ் நாட்டில் தொழில் தொடர்பு வேண்டும் என்றால், தமிழ் பேச கற்றுக்கொள்கிறான். தமிழ் திரைப்படங்களில் வருவது போல, நம்மிள் தங்கம் தரான், நிம்மிள் பொண்ணு தரான் என்பது போலல்லாமல் அழகாகவே தமிழ் பேசுவதை பார்க்கிறோம் / கேட்கிறோம். ஆனால், வட மாநிலங்களுக்குச் சென்று ஹிந்தி பேச கற்றுக்கொள்ளும் நம்மவர்களின் ஹிந்தி ஆயகா, ஜாயகா என்பதாகவே இருக்கிறது. ஆள் பாதி ஆடை பாதி என்பது போலவே நாம் உதிர்க்கும் சொற்களும் நம்மில் பாதி, நமக்கு மரியாதையை பெற்றுதருகிறது என்பதை மறுக்க முடியாது. இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்.

சர்வதேச அளவில் அதிகமாக பேசப்படும் மொழி வரிசையில ஹிந்தி இரண்டாவது இடத்தில் வருகிறது என்பதையும், அதற்கடுத்த நிலையிலேயே ஆங்கிலம் இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். துபாய் அரபிகளில் பெரும்பாலானோர் ஹிந்தி பேசுபவர்களாக இருக்கின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர், பெங்காளியர், நேபாளியர் மற்றும் ஆப்கானியருக்கான பொது மொழியாக ஹிந்தி இருக்கிறது. இவர்களுடைய தாய் மொழிக்கும் ஹிந்தி சொற்களுக்கும் சிறிதளவே மாற்றம் இருப்பதால், இவர்களால் எளிதில் பேச கற்றுக்கொள்ள முடிகிறது. தேவையிருக்கும் அனைவரும் கற்றுக்கொண்டு பேசுகின்றனர். ஆனால் தமிழர்களாகிய நம் பாடுதான் திண்டாட்டம், புதிய மொழி ஒன்றினை கற்றுக்கொள்ளும் முன் (சில தவறான வார்த்தை உச்சரிப்பால்) நரக வேதனையுடன் அவமானப்பட வேண்டியிருக்கிறது. ஹிந்தி மட்டும் அல்ல, நம் காதால் கேட்டிராத மலையாளம், தெலுகு மற்றும் கனடம் கற்ற முயலும் போதும் இதே நிலைதான்.

தமிழ்நாட்டிற்கு வரும் வெளி மாநிலத்தவரும் தமிழ் பேசுவது மகிழ்ச்சியளிப்பது போலவே, சிங்கப்பூர், மலேசியா பொன்ற நாடுகளில் தமிழ் இரண்டாம் மொழியாக இருப்பதால், அங்குவரும் மற்ற இந்திய மாநிலத்தவர் / நாட்டவர் தமிழ் கற்றுக்கொண்டு பேச முயற்சிப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ் நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு ஒரு கழுகு பார்வை.
1937, தமிழ்நாட்டில் (அப்போது சில ஆந்திர பகுதிகளையும் உள்ளடக்கியது)  ஆங்கிலேயர் ஆட்சியில் ராஜாஜி தலைமையிலான அரசு 'பள்ளிகளில் கட்டாய ஹிந்தி' என்ற சட்டம் கொண்டுவருகிறது. தீவிர தமிழ் ஆர்வலர்கள் சிலர் மற்றும் ராஜாஜி எதிர்பாளர்கள் சிலரும் சேர்ந்து அத்திட்டத்தை எதிர்கின்றனர்.  கைது நடவடிக்கையின் போது சிலர் உயிர் நீத்தனர் என்றும் வரலாறு சொல்கிறது. 1940, அதே ராஜாஜியால் இச்சட்டம் திரும்ப பெறப்படுகின்றது. 1965, இந்திய அலுவல் மொழியான ஹிந்தி 'ஒரே மூச்சாக, அரபிக்கடலில் தூக்கி எறியப்பட வேண்டும்' என்ற கொள்கையோடு முதலாம் ஹிந்தி எதிர்ப்பு மாநாடு திருச்சியில் நடத்தப்படுகிறது. முன்னதாக குடியரசு பத்திரிக்கை, 'ஹிந்தி, ஆரிய மொழி என்பதாலும், சமஸ்கிருதம் தெரிந்த ஒரு சாதியினரின் மத கோட்பாடுகளை முன்னிருத்தும் முயற்சியே ஹிந்தி திணிப்பு' என்றும், மேலும் 'ஹிந்தியை ஏற்றுக்கொண்டால், ஹிந்தி பேசும் வட நாட்டவரைவிட நாம் தாழ்ந்த நிலையிலேயே இருக்க வேண்டிவரும்' என்பதாகவும் சொல்லிற்று. இயல்பான இனப்பற்று உணர்ச்சி மிகுதியில் ஹிந்தி எதிர்ப்பு பலமாகவே நடந்திருக்கிறது. ஹிந்தி ஆசிரியர்கள் கடைவீதியில் அடித்துவிரட்டப்பட்டிருக்கின்றனர். அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. இதே நிலையில், சுதந்திர போராட்ட வீரர்கள் ஆங்கில எதிர்ப்பில் இருந்திருக்கின்றனர். அப்போதும், இவற்றை கண்டுகொள்ளாமல், ஆங்கிலம் கற்றவர்களின் சந்ததியின் வாழ்க்கைதரம் இன்று நல்ல நிலையில் உள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ஹிந்தி எதிர்ப்பு முன்னுக்கு வர ஆங்கில எதிர்ப்பு பின்னால் சென்றது. அதைத்தொடர்ந்து திராவிட இயக்கங்கள், ஹிந்தி எதிர்ப்பு அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றன. மத்திய ஆட்சியில் பங்குபெறும் திராவிட அரசுகளின் பிரதிநிதிகள் ஹிந்தி பேச்சுத் திறமைமிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். இந்தியாவை ஆட்சி செய்ய ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பது, இயல்பான எதிர்பார்ப்பு.

ஹிந்தி எதிர்ப்பு என்பது அரசியலாகவும், சமஸ்கிருதம் தெரிந்த ஒரு சமுதாயத்தின் மீது அல்லது சமஸ்கிருதத்தின் மீது இருந்த / இருக்கும் வெறுப்பாகவுமே படுகிறது. ஒரு பொருளால் பலன்பெறும் அல்லது அந்தப்பொருள் இல்லாமல் அவதிப்படும் மக்களுக்கே புரியம் அப்பொருளின் அருமை. அப்பொருளுக்கு தொடர்பில்லாதவர்கள் அது கூடாதென்ற சாபம் இடக்கூடாது. அப்பொருளை பாவிக்காது, அதன் தீங்கு பற்றிய பொத்தாம்பொதுவான அவதானிப்பு கூடாது. ஒரு கற்பனை; எனக்கு ஹிந்தி தெரியாது, வட மாநிலத்திற்கு சென்றிருக்கிறேன். தமிழர்களுக்கெதிரான திடீர் கலவரம், ஹிந்தியில் பேசினால் உயிர் பிழைப்பேன். சொல்லுங்கள்… நான் ஹிந்தி கற்றிருக்க வேண்டுமா? கூடாதா?

தாய் மொழி தவிர பிற மொழிகள் கற்றுக்கொள்வது தவறா? பாவச் செயலா? அட, என்னங்க… உலகமயமாக்கலின் பலன்களை அனுபவித்து வரும் இந்த காலத்திலும், கற்றலுக்கு தடைவிதிப்பது கட்டுப்பெட்டித்தனம் இல்லயா? கல்விக்கு ஏது எல்லை, கற்கும் சூழலும் வாய்ப்பும் இருப்பவன் கற்கட்டும், அதை தடுக்கக்கூடாது. தனக்கு கணினிப் பாடம் வரவில்லை என்றால், கணினியை குறை சொல்வது மனித இயல்பு. ஆடத் தெரியாதவளுக்கு…. கல்வியின் மூலம் யாருக்கும் எந்த கேடும் வந்துவிடாது. கற்றது கை மண் அளவு. சீனா சென்றேனும் சீர்மிகு கல்வியை கற்றுக்கொள், என்பதான சொல்லாடல்கள் கற்றலை ஊக்குவிக்கின்றன.

பிற மொழி கற்பதனால் தமிழின் தொன்மையை, பெருமையை மறந்துவிடக் கூடாது என்பதை மட்டும் நினைவில் கொண்டு, கற்றலுக்கு அணை போடாமல், முறையாக பல மொழிகள் கற்று வாழ்வில் முன்னேற அனைவரையும் வாழ்த்துகிறேன்.

நன்றி!

 • அதிகம் திருத்தம் செய்யாமல், அவசரமாக எழுத முயற்சித்தது.
 • கொஞ்ச நாளைக்கு விடுப்பு தேவைப்படுகிறது. யாருக்கு ‘விடுப்பு விண்ணப்பக்கடிதம்’ அனுப்பணும்?

Aug 25, 2009

வீம்புநிலை வியாபாரிகள்

சரியாகச் சொல்லவதென்றால், இதை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. முன்னர் நான் எழுதியிருந்த விளிம்புநிலை வியாபாரிகள் இடுகையில் நணபர்களின் பின்னூட்டங்கள் பார்க்கும் வரை. தீபாவளி திடீர் கடைகளையும், பாலியல் தொழிலாளர்களையும் வீம்பு நிலை வியாபாரிகள் என்று நான் குறிப்பிட்டிருந்ததை சில நண்பர்கள் மறுத்திருந்தனர். என் கருத்தையே அனைவரும் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை, அதே போல நானும். நமது பார்வையினூடாய் நிலைபாடுகள் தீர்மானிக்கப்படுவதால், என் நிலைபாட்டிற்கான பார்வையை உங்களுக்கும் பகிர வேண்டியது என் உரிமையும் கடமையும் ஆகிறது.

தீபாவளி திடீர் கடைகள்; இவைகள் திடீரென்று முளைக்க காரணம், குறுகிய காலத்தில் அதிக லாபம் அள்ளும் தொழில், முதலீடு முடக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை மற்றும் தரமற்ற பொருளை விற்பனை செய்வதால், நுகர்வோர் திரும்ப வருவார் என்கிற அச்சம் இல்லை. வியாபார சரக்கு, தீபாவளிக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு, மொத்த வியாபாரியிடம் கொள்முதல் செய்யப்படும், விற்காத சரக்கு திரும்ப தரப்படும் என்ற ஒப்பந்தத்தோடு. தீபாவளிக்கு அடுத்த நாள், கையிருப்பு சரக்குகள் திரும்ப தரப்பட்டு கணக்கு முடிக்கப்படும். இத்தகைய சரக்கின் தரம், சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர்களுக்கு தெருவோரக்கடை அல்ல தொழில். வேறு தொழிலில் இருப்போரால் திடீர் கடைகள் நடாத்தப்படுகின்றன. நஷ்டத்திற்கான வாய்ப்பு இல்லாததால் லாபம் மட்டுமே இறுதி வடிவம் பெறும். அம்பானிகளுக்கும் அடிசறுக்கும் காலம் இது. லாபம் மட்டுமே வாரிச்சுருட்டும் ஒரு வியாபாரியை விளிம்பு நிலை வியாபாரி என்று சொல்வது பொருந்தாது என்பது என் புரிதல். ஏதோ ஒரு காரணத்தால், ஒரு வேளை இவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டாலும், ஒதுக்கித்தள்ளிவிட்டு ஒரிஜினல் தொழிலை பார்க்க போய் விடுவார்கள்.

சரி.. அப்போ பாலியல் தொழிலாளர்கள்? நான் தீபாவளி திடீர் கடைகளை மட்டும் அவ்வாறுச் சொல்லியிருந்தால் நண்பர்கள் ஒரு வேளை ஏற்றுக்கொண்டிருக்ககூடும். பாலியல் தொழிலாளர்கள், வியாபாரிகள் அல்லர். அவர்கள் ஒரு வியாபாரப் பொருள், உபயோகித்தபின் திரும்ப கொடுத்துவிடும் காஃபி கப் போன்ற சரக்கு அவர்கள். (சில இடங்களில் டிஸ்பாஸபில் கப் ஆகவும் பாவிக்கப்படுவதுண்டு) இந்தத் தொழிலில் வியாபாரி, பாலியல் தொழிலில் தள்ளப்பட்டவருடைய (சரக்கை சந்தைக்கு கொண்டு செல்லும்) சமூகச் சுழல்களாகிய, குடும்பம், வறுமை, அறியாமை, ஆசை, உணர்ச்சி, போதை, மன அழுத்தம் மற்றும் சந்தேகமில்லாமல் அவர்கள் மீது திணிக்கப்படும் இன்ன பிறவும் அடங்கும். இந்தச் சூழல்களை வீம்புநிலை வியாபாரிகள் எனச் சொல்கிறேனா என்றால்… இல்லை. நகைமுரண் :) குழப்பாமல் விஷயத்திற்கு வருகிறேன்.

பாலியல் தொழிலை யாரும் விரும்பி செய்வதில்லை. அதீத உணர்ச்சி, ஒரு வகையான ஆசை, போதா இன்பம் போன்ற காரணங்களினால் விரும்பியே சிலர் வந்திருந்தாலும், இவை எல்லாம் போதும் என்றானாலும், பரவலாக அறியப்பட்ட பின் சமூகம் இவர்களது மீள்வரவை ஏற்றுக்கொள்வதில்லை. வறுமை காரணமாக இத்தொழிலில் நுழைபவர்களுக்கும் இதே நிலை தான். வறுமானத்திற்கான மாற்று ஏற்பாட்டில் இனி வறுமை இல்லை என்றான பிறகும், குடும்பமே இவர்களை புறக்கணிக்கும் சூழலில் உணர்ச்சியற்ற உயிர் பொருளாக உடலை சில நிமிடங்கள் கிடத்தி வைக்க வேண்டிய நிலை. விரும்பியும் விரும்பாமலும் தொடர வேண்டிய நிர்பந்தம். ஆண் பாலியல் தொழிலாளியின் நிலை இன்னும் மோசம். விருப்பமில்லாமலேயே அவன் இயங்க வேண்டியிருக்கிறது. சில சூழ்நிலையில் அதைவிட கொடுமையாக அவன் மீது இயக்கம் செலுத்தப்படுகிறது. இவர்கள் கூட எந்த நேரத்திலும் தொழிலை மாற்றிக்கொண்டு மீண்டு விடுவார்கள். பெண் தொழிலாளியின் நிலையே, வேதனைக்குள்ளானது. anti-prostitution_Ii3GZ_22980

இதற்கான தற்போதைய தீர்வு பாலியல் தொழிலாளர்களுடைய மீள்வாழ்வு. இடமாற்றத்தின் மூலம் வாழ்வாதார உரிமைகள் மீட்கப்பட்டு மீள்வாழ்வு சாத்தியம் என்றாலும், உடற்சந்தையில் கிராக்கியும், முதலீடு இல்லாமல் குறைந்த நேரத்தில் அதிக பணம் பண்ணக்கூடிய ஒரே தொழிலாக, அனுபவமிக்க தொழிலாக பாலியல் தொழில் இருப்பதால் சட்டென்று விட்டுவிட முடியாத பாலியல் தொழிலாளர்களுடைய நிலை, வீம்பு நிலை. இந்நிலையில் அவர்களுக்கு இறுதியில் மீதமிருப்பது பணம், தொற்றிய நோய் மற்றும் வேதனைகளே. அவர்களிடையே மீள்வாழ்விற்கான அவசியத்தை உணர்த்தி, அதை நடைமுறைப்படுத்தல் அவசரமான அவசியம்.

பாலியல் தொழிலாளர்கள் மீதான பரிதாபப் பார்வை, போலி முற்போக்குவாதத்தின் முகமூடியாகப்படுகிறது. பாலியல் தொழிலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் எனக்கு சரியாகப்படவில்லை. கண்டும் காணாமல் நடக்கும் தொழில் எங்கும் காணக்கிடைக்கும். வறுமையை காரணம் காட்டி, பல புதியவர்கள் உள்ளே நுழையும் / நுழைக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். நடைமுறைப்படுத்தப்பட்ட சந்தையில் பொருளுக்கான கிராக்கி கூடிவிடுவதால், கடத்திவரப்படும் பெண்வணிகம் அதிகரிக்கும். அதேபோல பாலியல் தொழில் நடைமுறைப்படுத்தப்பட்டால், பெண்களுக்கெதிரான வன்கொடுமை குறையும் என்பதையும் ஏற்களாகாது. பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமையானது இனக்கவர்ச்சியில் நடத்தப்படுவது. அவை கடுமையான சட்டங்கள் அல்லது முறையான பாலியல் கல்வி மூலம் மட்டுமே குறைக்கப்படலாம் என்பதும் என் புரிதல். பாலியல் முற்றிலுமாக தடுக்கப்பட்ட நாடுகளில் வன்கொடுமை விகிதம் குறைவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாலுறுப்புகளை அவற்றின் நேரடி பெயர் கொண்டு எழுதுவது பாவம் என்ற சமூக கட்டமைப்பை எதிர்த்தாலும், இன்னும் நாம் அவற்றை எழுத்தாக்கத் தயங்குவதற்கு காரணம், நம் கலாச்சாரம், சுழல் என்றால் அது மிகையாகாது. கலாச்சாரம் குப்பைத்தொட்டி என்பதால் மட்டுமே அது இல்லை என்றாகிவிடாது. என்னதான் நவீனத்துவம் பேசினாலும், வெகுசன சமூகத்தினூடே ஒன்றிப்போயிருக்கும் கலாச்சாரம் என்ற குப்பைத்தொட்டியும் முன்நிறுத்தப்பட்டு முரணான விவாதங்கள் செய்யப்படுவதால் மட்டுமே, ஏதேனும் மாற்றம் நிகழ வாய்ப்புண்டு. அல்லாது காலச்சாரத்தையே முற்றிலுமாக மாற்ற முயல்வது, எதிர்மறை விளைவுகளையே தரும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நன்றி!

Aug 24, 2009

நீங்கள் காதலில் இருப்பதை அறிய 12 அரிய வழிகள்.

OLYMPUS DIGITAL CAMERA

பதின்இரண்டு: நள்ளிரவு வரை அவளிடம் / அவனிடம் கதைத்துவிட்டு சென்றாலும், படுக்கையில் அவளையே / அவனையே நினைத்துக்கொண்டிருப்பது.

பதின்ஒன்று: அவள் / அவன் உடன் வரும் போது மிக மெதுவாக நடப்பது.

பத்து: அவன் / அவள் அருகில் இல்லாத போது, கவலையாய் உணருவது.

ஒன்பது: அவன் / அவள் குரல் கேட்கும் போது, புன்னகைப்பது.

எட்டு: அவளை / அவனை பார்க்கும் போது, அருகில் இருப்பவரை கவனிக்காதிருப்பது.

ஆறு: அவன் / அவள் உங்களுக்கான அனைத்துமாய் நினைப்பது.

ஐந்து: அவள் / அவன் உங்களை பார்க்கும் போதெல்லாம் சிரிப்பதாக உணருவது.

நான்கு: அவனை / அவளை பார்ப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்ய துணிவது.

மூன்று: இதை வாசித்துக்கொண்டிருக்கும் போது உங்கள் மனதில் ஒருவரை நினைத்துக் கொண்டிருப்பது.

இரண்டு: அந்த ஒருவரையே நினைத்துக்கொண்டிருந்ததால், இந்த வரிசையில் ஏழு வராததை கவனிக்காதது.

ஒன்று: அதை உறுதிப்படுத்த மீண்டும் ஒருமுறை மேலே வாசித்து பார்ப்பது.

love-wallpaper24

Aug 23, 2009

நெருக்கடி நிலையில் நிறுவனங்கள்

உலக பொருளாதார மந்த நிலையின்* விழைவாக, நாளுக்கு நாள் பணி இழப்பு அதிகரித்துவருகிறது. பங்குசந்தையின் சமீபத்திய முன்னேற்றம், நெருக்கடி நிலை முடிவுக்கு வருவதாக நம்மை நம்ப வைக்க முயற்சித்தாலும், கார்பரேட் நிறுவனங்கள் அவற்றை ஏற்றுக்கொள்வதாயில்லை. அவை இன்னும் ஆட்குறைப்பை குறைத்தபாடில்லை. இப்பொருளாதார நெருக்கடியில் பாதிப்படையாத நிறுவனங்களும் அவற்றில் குளிர்காய நினைக்கிறது. இதே பணியை உன்னை விட குறைந்த ஊதியத்தில் செய்ய கதவிற்கு வெளியே பலர் காத்திருக்கிறார்கள் என்பதாக, விசுவாசமாய் பல ஆண்டுகள் பணியாற்றும் தன் ஊழியர்களையும் மிரட்டி ஊக்கத் தொகை, போக்குவரத்து படிப்பணம் போன்ற சம்பளத்திற்கு வெளியே கொடுக்கப்படும் இதர தொகைகளை நிறுத்திவிடுகிறது. ஊதிய உயர்விற்கான பேச்சே இல்லை. இவை பணியாளர்களுக்கான பிரச்சனை என்றால், நிறுவனங்களும் சில பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

நிறுவனங்கள் சந்தித்துவரும் நீண்டகாலப் பிரச்சனை, பணியாட்கள் தாமாக பணியிலிருந்து விலகிக்கொள்வது. இதற்கான காரணமான கருதப்படுவது, அவர்களுக்கு புதிய இடத்தில் கிடைக்கும் அதிக ஊதியமும், நல்ல நிலையும் என்பவை நம்பத்தகுந்த காரணங்கள் என்றாலும், இன்னுமொரு மறைக்கப்படும் காரணமும் உண்டு. அதை அலசும் முன், சென்ற ஆண்டின் ஒரு சாதாரண நிகழ்வை பார்த்துவிடுவோம்.

ஒரு நண்பர், மென்பொருள் நிறுவனத்தில் கைநிறைய சம்பளம், வாகனம் மற்றும் இதர வசதிகளோடு இருந்துவந்தார். ஒரு நாள் தான் வேலையை விட்டு நிற்கப்போவதாகச் சொன்னார். எனக்கு அதிர்ச்சி, ஏனென்று விசாரிக்கும் போது, இதைவிட பைநிறைய சம்பளத்தில் உலகத்தர நிறுவனத்தில் சேரப்போவதாகவும், அங்கு ஊழியரை நண்பராக பாவிக்கும் மனிதவளத்துறை, அட்டகாச அலுவலகம், உயர்ந்த தொழில்நுட்பம், உயர்தர உணவுவிடுதி ஆகியவை இருப்பதாகவும் சொன்னார். வேலைக்கு சேர்ந்த புதிதில், மூன்று முறை வெளிநாட்டிற்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டார். 'என் வாழ்நாளில் இந்தளவுக்கு குறுகிய காலத்தில் அதிகமாக கற்றுக்கொண்டதில்லை', என்றும் ஒரு முறை என்னிடம் சொன்னார். நிச்சயமாக அந்த வேலைக்குத் தகுதியானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், எட்டுமாதத்திற்குப்பிறகு அங்கு ரிசைன் செய்துவிட்டு, வேறு ஒரு நிறுவனத்தில் சேர்ந்துவிட்டதாகவும், அதைவிட குறைந்த சம்பளம் என்றாலும், பணியிடத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சொல்கிறார்.

இந்த நண்பர், தனக்கு மிகப்பொருத்தமாக இருந்த வேலையை விட்டுவிட்டு வரக்காரணம் என்ன? இதே நிலையில் பலரையும் பார்க்க முடிகிறதே ஏன்?

இதற்கான காரணத்தை அறிய Gallup Organisation மேற்கொண்ட ஒரு ஆய்வில், லட்சக்கணக்கான பணியாளர்களும், ஆயிரக்கணக்கில் மேலாளர்களும் உட்படுத்தப்பட்டு அதன் அறிக்கை First Break All The Rules என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அப்புத்தக ஆசிரியர்களான Marcus Buckingham மற்றும Curt Coffman என்ற மேலாண்மை அறிஞர்கள் சொல்வது,

'பெரும்பாலான பணியாட்கள், தன் மேலாளரை விட்டு விலகுகிறார்களே தவிர, நிறுவனத்தை அல்ல' என்பதாக.

உடனடி இடமாற்றம் விரும்பும் ஆட்கள், தன் மேலாளரிடமிருந்து உடனடி விடுதலையை எண்ணியே இடமாற்றத்தை தேர்வு செய்கிறார்கள். எனவே, ஒரு நிறுவனத்திலிருந்தது தொடர்ந்து பணியாட்கள் விலகிப் போகிறார்கள் எனில், அந்நிறுவனம் அத்துறையில் Direct Line Managers என்று சொல்லப்படுகிற நேரடி மேலாளரை கவனத்தில் கொள்ள வேண்டும். அவரது கொடுமையை (கொடுமை என்ற வார்த்தை சற்று அதிகமென்றாலும்) ஒன்று, இரண்டு முறை பொருத்துப்போகும் பணியாளர்கள் மூன்றாவது முறை விலகிப்போய் விடுகிறார்கள் என்பது, மனிதவளத்துறையினர் அவ்வாய்வின் போது கூறியவை. நேரடி மேலாளர்களே, பணியாட்களுக்கான பணியை நிர்ணயிப்பதும், அதை அவர்கள் மீது செலுத்துவதுமாக இருப்பதால், இவர்களே பணியாட்கள் பார்வையில் வில்லன்களாக பாவனை செய்யப்படுகிறார்கள். அவர்களால் பணியாட்கள் மீது செலுத்தப்படும், அதிகப்படியான கட்டுப்பாடு, அதிகப்படியான சந்தேகம், அதிகப்படியான இக்கட்டு நிலை மற்றும் அவர்களை அசையா சொத்துபோல பாவிக்கும் நிலையே பணியாட்களை விலகிவிடச் செய்கிறது.

இத்தகைய அதிகப்படிகளை உணரும் பணியாட்கள், தனக்கு வழங்கப்பட்ட பணியை தவிர வேறெதையும் அதிகப்படியாய் செய்யாதிருப்பதும் நிறுவனத்திற்கு இழப்பே. பணியாட்கள் சுய ஆர்வத்துடன் பணி செய்வதே, நிறுவனத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் முக்கிய சக்தி என்பதை நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலாளர்களின் இத்தகைய (Harassment) நடைமுறையை, நிறுவன தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை போலவே, மேலாளர்களும் தங்களிடம் பணியாற்றும் கடை நிலை ஊழியர்களுக்கும் இருக்கும் சிரமங்களையும் ஆலோசித்து, அதற்குத் தகுந்த செயல் திட்டம் வகுக்கப்படல் அவசியம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

திறமையானவர்கள் தானாக மாறுவார்கள், செத்த மரங்களை காட்டாறு தான் அடித்துச் செல்லவேண்டும்.

Aug 20, 2009

கழிவறை நீதி - வள்ளுவன்

உங்கள் வீட்டு கழிவறை குழாய் ஓட்டையால் பொதுப்பாதை வரை நாற்றம் வருகிறது என்றால், அந்த பொதுப்பாதை பாவிக்கும் ஒருவனாகிய நான், இரண்டு செயல்கள் செய்யலாம். ஒன்று, உங்கள் வீட்டு கழிவறை ஓட்டையை அடைக்கச்சொல்லி உங்களிடம் கேட்பது, செய்து முடிக்கப்படும் வரை சட்டத்திற்குட்பட்ட எந்த செயலும் செய்ய எனக்கு அனுமதி உண்டு. அது என் உரிமை. மாறாக அறிவற்ற முறையில் பேசக்கூடாது என்பதை வள்ளுவர்,

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர். - குறள்

எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.

என்கிறார்.

இரண்டாவதான மூக்கை பொத்திக்கொண்டு அவ்வழியே நடந்து செல்வது, என் பொறுமையை காட்டுகிறது. பொதுப்பாதை வரை நாற்றம் வருவதை அறிந்து நீங்களே மாறிக்கொள்வது வரை நான் பொறுமையாக இருப்பதற்கு எந்த சட்டமும் தனிநபரும் குறுக்கிட முடியாது. பரஸ்பரம் இரு நபர்களுக்கிடையேயான புரிந்துணர்வு.

இதை,

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி யொழுகப் படும். - குறள்

பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.

என்று பொறுமையை இவ்வாறு புகழ்கிறார்.

என் வீட்டில் கழிவறை இல்லை என்பதற்காக, உங்களிடம் வந்து உன் வீட்டில் கழிவறை இருப்பதால் தான் பொதுப்பாதையில் நாற்றம் வருகிறது, உடனே அதை இடித்துவிடு என்று நான் சொல்வது, நியாயமாகுமா? கழிவறையால் தான் நாற்றம் வருகிறது என்பது ஏற்புடையதாக இருந்தாலும், குழாய் ஓட்டையை அடைக்கச் சொல்வது தானே நியாயம்.

கழிவறையை இடிக்கச்சொல்லி குற்றம் புரியாமல் இருக்கவேண்டும் என்பதை,

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை. - குறள்

குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

என்பதாகச் சொல்கிறார்.

கழிவறை என்பது கழிவிறக்கத்திற்கான பயன்பாட்டிற்கு மட்டுமே என்றாலும், கழிவறையை பயன்படுத்தினால் தான் சுகாதாரம், தனிமை போன்ற முழுப்பயனும் அறியக்கிடைக்கும். மாறாக கழிவறையை பயன்படுத்தாமலேயே காட்டிலோ அல்லது முட்டுச்சந்திலோ கழிவிறக்கலாம் என்று தன் குறையை நியாப்படுத்துவது அறுவுடைமையாகாது.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு. - குறள்

முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?.

என்று கேட்கிறார்.

கழிவறை ஓட்டை சிறியதாய் இருந்தாலும் அதை உடனே அடைப்பதன் மூலம் மற்றவருக்கு தொந்தரவு செய்யாதிருப்பது நலம். அதையும் அய்யன்,

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். - குறள்

பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

என்கிறார்.

கழிவறைக்காக சச்சரவு செய்வதைக் காட்டிலும், நட்புதான் பெரிது என்போரை அறிவுடையோர் என்கிறார் வள்ளுவர்.

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு. - குறள்

உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.

கழிவறையை இடிக்கச் சொல்வோரையும் மன்னித்து நட்பு பாராட்டல், வாழ்நாள் முழுக்க புகழ்மிக்கதாய் அமையும் என்கிறார்.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.

தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.

இறுதியாக,

அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்.

ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

நன்றி!!!

Aug 18, 2009

ஷாருக், அமெரிக்கா, சினிமா - ஜிகர்தண்டா

அமெரிக்க விமான நிலையத்தில் நடிகர் ஷாருக்கானை 2 மணிநேர பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தியது சர்ச்சையாக எழுப்பப்பட்டது.

9/11 க்கு பிறகான அமெரிக்கர்களின் உயிர் பயம் உலகறிந்தது, தன்னைப் பாதுகாக்க அவர்கள் எடுக்கும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை இது. அங்கு எழுதப்படாத சட்டமாக இருக்கலாம். இச்சட்டங்கள் தேவையா என்பது முன்பே விவாதிக்கப்பட்டது என்றாலும், அம்மாதிரி சட்டம் இருக்கும் நாட்டிற்கு சென்று விட்டு, தன்னை சோதனைக்குட்படுத்திவிட்டார்கள் என்று ஊரைக்கூட்டுவது நியாயமற்றது. ஒரு நாட்டின் பாதுகாப்பு சோதனைகளை இத்தனை சர்ச்சைக்குள்ளாக்குவது அர்த்தமற்றது. இங்கு இதுதான் சட்டம் இஷ்டமிருந்தால் வா, என்கிறது அமெரிக்கா. இந்தியாவிலேயே இந்திய முன்னால் முதற்குடிமகனையே சோதனைக்குள்ளாக்கியது அவர்கள் சட்டம். இனியும் அமெரிக்கா செல்வதில்லை என்று சொல்லியுள்ளார் நடிகர் ஷாருக்கான். நல்லது, இனி உங்களை கலைச் சேவை இந்தியாவில் மட்டும் இருந்தால் போதும். ஐங்கரன் DVD யில் மற்றவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.

வேறு கோணத்தில் இதை வாசிக்க இங்கே செல்லலாம்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

மதுரையின் முக்கிய வீதிகளில் சுவரொட்டிகள் மற்றும் சுவரெழுத்துக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க வரவேற்கப்பட வேண்டிய செய்தி. சென்னையில் இச்சட்டம் அமலுக்கு வந்தபோதே நான் நினைத்தேன், அதென்ன சென்னைக்கு மட்டும் ஒரு சட்டம் என்று. இப்போது காதி தேனாய் இனிக்கிறது. இனியாவது நான் சாலையை பார்த்து வாகனம் ஓட்டலாம். ஒரு முறை ஜெய்ஹிந்த்புரத்தில் இருந்து ராஜ்தூத்தில் வந்த நான், தமிழ்நாடு பாலிடெக்னிக் சுவற்றில் எப்போதும் ஒட்டப்பட்டிருக்கும் சினிமா சுவரொட்டிகளை பார்த்தவாறே சாலையை கடக்க, எதிரே பெரியாரில் இருந்து வந்த ஒரு இரு சக்கர வாகனத்துடன் மோத நேரிட்டது. அந்த நேரம், இரண்டு பக்கமிருந்தும் பெரிய வாகனங்களை வராதது அவர் உயிரை காப்பாற்றி, உங்கள் உயிரை எடுக்கிறது. ;)

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

காலச்சுவட்டின் வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு – எந்த அளவுக்கு அதில் உண்மையான அனுபவங்கள் இருக்கிறது என்பதில் சந்தேகமே, குறிப்பாக அனுபவித்து எழுத்தாக்கிய நபர் குறித்தான தகவல்கள் தரப்படா நிலையில் சந்தேகம் வழுக்கிறது. மறுபக்கம், அதில் சொல்லப்பட்டுள்ள பல கருத்துக்கள் ஏற்கும்படியாய் இருந்தாலும், நிகழ்வுகளின் நம்பகத்தன்மையை எடைபொடும் மற்ற தட்டில் சுமை இல்லாததால் உண்மையாக இருக்கலாமோ என்ற எண்ண ஓட்டத்தை மட்டுப்படுத்த முடியவில்லை.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

பொக்கிஷம் நல்லாயில்லை என்று பலராலும் சொல்லப்படுவதாலேயே, அப்படி என்ன தான் இருக்கிறது அல்லது இல்லை என்று பார்க்கத் தோண்றுகிறது. (பாலா, டவுன்லோட் பண்ணியாச்சா?)

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

மென் அட் ஒர்க் என்ற ஆங்கில நகைச்சுவைப்படம் பார்த்தேன். (முழுக்கB000063JDM_01_LZZZZZZZ சினிமா நிரப்பப்பட்ட 120 GB HD உபயம், பாலா. நன்றி) படம் முடியும் வரை ஹீரோ இடத்தில் கமலை வைத்து பார்த்ததை தவிர்க்க முடியவில்லை. அதே போல ஹீரோவின் நண்பனாக மாதவன். கூட வரும் இன்னொருவர் பசுபதி. நாயகி மனிஷா. சினிமாவை முழுக்க மும்பை எக்ஸ்பிரஸ் வகை தமிழ்த் திரைப்படமாக உணர்ந்தேன். எனக்கு சினிமா விமர்சனம் வருவதில்லை. எனவே, படத்தின் பெயரில் க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

மீண்டும் அமெரிக்கா, தன் வீட்டுக்கதவை திறக்கும் முயற்சியில் கூச்சலிட்டு அண்டை வீட்டுக்காரர்களை தொந்தரவு செய்ததாக கருப்பின அமெரிக்க பேராசிரியர் ஒருவர், வெள்ளையின போலீஸால் கைது செய்யப்பட்டார். இதற்கு ஒபாமா, ‘இன்னமும் அமெரிக்காவில் நாம் நிறத்தால் அடையாளப்படுத்தப்படுகிறோம்’ என்பது போல கருத்து சொல்லப்போக, அதிபர் இவ்வாறு பேசியது விவகாரமானது. பின்னர் இருவருக்கும் ஒபாமா பீர் விருந்து கொடுத்து, நிலைமையை சமாளித்தாராம்.

எனக்கு பீர் குடிக்கும் பழக்கமில்லை. மோர்?

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

குவைத்தில் எண்ணைக் கிணறுகளை தகர்க்க வந்த சிலர் பிடிபட்டனராம்.

தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளது, போற வார வழியெல்லாம் செக் பண்றாங்க. வீட்டுக் கதவை திறந்து ஒண்ணுக்கு அடிக்க வெளிய வந்தாலும் அடையாள அட்டை இல்லாம வராதீங்க, குவைத்தில் வாழும் எந்தமிழ் மக்கா. உள்ள தூக்கி போட்டா, ஐஆம் சாரி…எங்க அண்ணனை இதுக்கெல்லாம் அழைத்து தொந்தரவு பண்ண முடியாது.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

சென்றவாரம் நான் விரும்பி வாசித்த இடுகை, அண்ணன் ஜமாலன் அவர்கள் (சொல்லித் தெரிய வேண்டியதில்லை) உடலரசியல் பதிவில் எழுதியிருக்கும், குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் –பகுதி:2 . இது மதுவிற்கும் மதத்திற்கும் உண்டான தொடர்பை அலசுகிறது.

ஆழ்ந்த விமர்சனம், நேரமிருப்பவர்கள் வாசித்து பாருங்கள்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

பன்றிக்காய்சல் நமக்கு தொற்றியுள்ளதா என்பதை எளிதில் அறிய, தினமும் காலை கண்ணாடியில் முகம் பார்க்கவும். கீழே இருக்கும் இந்தப்படத்தில் இருப்பது போல முகம் தெரிந்தால், ஊரை விட்டு ஒதுங்கி விடலாம்.

இப்பல்லாம் கண்ணாடி பார்க்கவே பயமாயிருக்கு…

Symptoms

Aug 16, 2009

மொக்கையும் நிஜமும் – பயோகிராஃபி

பெயர் : தமிழ் பதிவுலகம் வயது : அதிகமில்லை ஜென்டில்மென், (ரொம்ப கம்மி பியூட்டிஃபுல் லேடீஸ்)

தொழில் : அரிப்புக்கு சொறிதல் (தனக்கும் பிறருக்கும்) உபதொழில் : முதுகு புண்ணுக்கு மருந்திடல் (மற்றும் விளம்பரம்)

நண்பர்கள் : ஆமாஞ்சாமி போடும் அனைவரும் எதிரிகள் : அதை மறுக்கும் அனைவரும்

குணம் : எவ்வளவு அடிச்சாலும் தாங்குவது குடும்பம் : தனிமனித தாக்குதல் வேண்டாமே... அய்ய்ய்.

பிடித்த வேலை : எல்லோரையும் ஓட்டுவது. பிடிக்காத வேலை : யாருக்கும் ஓட்டு போடுவது.

பிடித்த திரட்டி : தன்னை தலையில் வைக்கும் அனைத்தும். பிடிக்காத திரட்டி : மதிக்காதது

பிடித்த பதிவு : சொறிந்துவிடும் அனைத்தும் பிடிக்காத பதிவு : சொறியச் சொல்லும் அனைத்தும்.

விரும்புவது : ஹிட்ஸ் விரும்பாதது : குட்ஸ்

பொழுதுபோக்கு : இதைவிட்டா வேற என்ன இருக்கு?

சமீபத்திய எரிச்சல் : மொக்கைகள் குறைந்தது. நீண்டகால எரிச்சல் : மொக்கைகள் அதிகமானது.

சமீபத்திய சாதனை : சுனாமிகள் தொழிலில் பிஸியாகியிருப்பது நீண்டகால சாதனை : கத்துக்குட்டிகள் ஆட்டம்

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

பெயர் : தமிழ் பதிவுலகம் வயது : கல்தோன்றி மண் தோன்றா காலத்தே....

தொழில் : தமிழ் வளர்ப்பது உபதொழில் : தமிழர்களையும் சேர்த்து

நண்பர்கள் : முகம் காணா பதிவர்கள் எதிரிகள் : முகம் மறைக்கும் பதிவர்கள்

குணம் : வந்தாரை வாழ்த்தி வரவேற்பது குடும்பம் : தமிழன் உணர்வுள்ள அனைவரும்.

பிடித்த வேலை : இலக்கியம், மொக்கைகள். (எழுத்தும், வாசிப்பும்) பிடிக்காத வேலை : பதிவுக்கு கரு கிடைக்காமல், இப்படி காப்பி, எடிட் செய்வது.

பிடித்த திரட்டி : பதிவை பரவலாக்கும் அனைத்தும் பிடிக்காத திரட்டி : அப்படி ஏதும் இருக்கா?

பிடித்த பதிவு : படிக்காமலேயே புரிவது. பிடிக்காத பதிவு : பத்து முறை படித்தாலும் புரியாதது.

விரும்புவது : அங்கீகாரம் விரும்பாதது : ஏளனம்

பொழுதுபோக்கு : இதைத்தவிர அனைத்தும்.

சமீபத்திய எரிச்சல் : சீரியஸ் விவாதங்கள் நீண்டகால எரிச்சல் : அரசியல்

சமீபத்திய சாதனை : உயிருக்கு போராடும் சக பதிவருக்கு உலகலாவிய உதவி. நீண்டகால சாதனை : எதற்கும் தயாராயிருப்பது.

Aug 15, 2009

உண்மைத் தமிழனுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்

உண்மைத் தமிழன் அண்ணாச்சி, அவரது அண்ணன் சேரன் இயக்கிய பொக்கிஷம் என்ற திரைப்படத்தை முதல் ஷோ பார்த்துவிட்டு வந்து, செய்திகளை முந்தித்தரும் அவசரத்தில் அத்திரைப்படத்தை விமர்சனம் செய்துள்ளார், கூடவே ஒரு சமூகத்தையும்.
அண்ணாச்சி, நீங்கள் திரைவிமர்சனத்தோடு நின்றிருந்தால் நான் இந்த பதிவை எழுத வேண்டிய அவசியம் வந்திருக்காது. விமர்சனத்தின் இடையிடையே இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கம் எதிரான கருத்துகளை தனது வாசகர்கள் மனதில் நாசூக்காக ஏற்ற முயற்சிப்பது வருத்தமளிக்கிறது. இஸ்லாத்தை பின்பற்றும் நான், மற்ற கடவுள் நம்பிக்கையாளர்களையும் அவர்களது நம்பிக்கைகளையும் குறைகூறி ஏளனம் செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படாதோ / நியாயமில்லையோ, அதைவகையில் நீங்கள் செய்ததும். திரைப்பட விமர்சனத்தில் ஒரு சமூகத்தின் மீது உங்கள் வெறுப்பை காட்ட வேண்டிய அவசியம் என்ன அண்ணாச்சி? உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எங்கள் நம்பிக்கை எங்களுக்கு. ஒருவர் நம்பிகையில் மற்றவர் குறுக்கிடாதவரை இங்கே எந்த சச்சரவும் எழப்போவதில்லை.
உங்களது கருத்துக்களை மறுத்து விளக்க வேண்டிய கடமை எனக்குள்ளது. நீங்கள் சொல்லியுள்ள,
அந்த பர்தாவை அணிந்து கொண்டு ஒரு ஐந்து நிமிடம்கூட நம்மால் நிற்க முடியாது.. எப்படித்தான் அந்தப் பெண்கள் அணிகிறார்களோ தெரியவில்லை.
பர்தா மட்டுமல்ல, இன்னும் பெண்கள் அணியும் பலவற்றை உங்களால் அணியமுடியாது அண்ணாச்சி. அது பெண்களுக்கேயான உடல் அமைப்பிற்கானது, பாதுகாப்பிற்கானது. அந்நிய ஆண்களின் இச்சைப் பார்வையில் இருந்து தன்னையும் தன் உடலையும் பாதுகாத்துக் கொள்ள அவசியமாகிறது.
முதலில் பர்தா என்றால் என்ன என்று விளங்கிக் கொள்ளுங்கள். ஒரு பெண் தன் முகம் மற்றும் மணிக்கட்டிற்கு கீழான கை ஆகியவை தவிர மறைக்க வேண்டிய பாகங்களை ஆடையால் மறைப்பது. அந்த ஆடை, இறுக்கமானதாகவோ, உடல் பாகங்களை வெளிக்காட்டக்கூடிய மெல்லியதாகவோ இருக்கக் கூடாது. முக்கியமாக ஒரு ஆணின் உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்தாத உடையாக இருக்க வேண்டும். அது எந்த நிறத்திலும் இருக்கலாம். எதற்காக இந்த உடை? கண்ணியமான உடை, பெண்களுக்கு, ஆண்களிடத்தில் கண்ணியத்தை ஏற்படுத்துகிறது. அதனால் அவர்கள் சீண்டப்பட மாட்டார்கள், தொல்லைகள் படுத்தப்பட மாட்டார்கள். பர்தா அணியும் பெண்களைக் கேட்டால் சொல்லுவார்கள், அது தன் மானத்தை எந்தளவு பாதுகாக்கிறது என்று. பர்தா அணியும் பெண்களிடம் பாலியல் வன்கொடுமை குறைவு என்பதும் அறிந்திருப்பீர்கள்.
கடைவீதியில் நடந்து செல்லும் சம அழகுள்ள இரட்டைப்பிறவி சகோதரிகளில், ஒரு பெண் இஸ்லாமிய முறைப்படி உடையணிந்திருக்கிறாள். மற்றொரு பெண் உடலின் பாகங்களை வெளிக்காட்டும் மெல்லிய இறுக்கமான உடை அணிந்திருக்கிறாள். இப்போது இவ்விரு பெண்களில் கடைத்தெருவில் இருக்கும் சிலரால் கேலிக்கும், கிண்டலுக்கும், தொல்லைக்கும் ஆளாவது இஸ்லாமிய உடையணிந்திருக்கும் பெண்ணா? அல்லது இறுக்கமான உடையணிந்திருக்கும் பெண்ணா? நிச்சயமாக இறுக்கமான உடை அணிந்தவள் தான் கேவலத்திற்கு உள்ளாவாள். ஏனென்றால் அவளுடைய ஆடை கடைத்தெருவிலிருக்கும் சிலரின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களை அவ்வாறு தவறு செய்யத் தூண்டுகிறது.
ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாட்டுக்கு முதல் உதாரணம் அந்த பர்தாதான் என்பதில் எனக்கு இன்றைக்கும் சந்தேகமில்லை.
உங்கள் அண்ணன் சேரன் தன் காதலியை பாடல் காட்சிகளில் திறந்து காட்டச்சொல்லியிருப்பாரே… அது போதாதா உங்களுக்கு? மறைக்கப்பட வேண்டிய தனது அந்தரங்க பகுதிகளை அந்நியரிடமிருந்து ஒரு பெண் மறைத்துக் கொள்வது தான் ஆணாதிக்கச் சிந்தனையா? உங்கள் பார்வையில் படும் அனைத்து பெண்களும் உங்களுக்கு இடுப்பையும், அந்தரங்க பகுதிகளையும் காட்டிவிட வேண்டுமா. இறுக்கமான, அரைகுறை அடையுடன் கவர்ச்சிப் பொருளாக காட்சித் தரவேண்டும் என்பது தான் உங்கள் சிந்தனையா? அவ்வாறு சிந்திப்பது தான் முற்போக்கு என்று நினைத்தால், மாற்றிக் கொள்ளுங்கள், அதுதான் ஆணாதிக்கப் போக்கு.
இஸ்லாம் பெண்களைக் கண்ணியமானவர்களாகக் கருதுவதால் இத்தகைய சீர்கேட்டை ஒரு போதும் அனுமதிப்பதில்லை. இறுக்கமான அல்லது உள்ளே உள்ளவைகளை வெளியே காண்பிக்கும் மெல்லிய ஆடைகளை அணிபவர்களை, ஆடை அணிந்தும் அணியாதது போன்றவர்கள் என்று இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
முஸ்லீம் வீடுங்கிறதால வீட்டுக்குள்ள வெளி ஆளை அனுமதிக்க மாட்டோம். ஆனா நீங்க எங்களுக்கு பெரும் உதவி செய்தவர்ங்கிறதால அதையெல்லாம் நான் பார்க்கலை.." என்று சொல்கின்றபோது முஸ்லீம சமுதாயத்தினரின் கட்டுப்பெட்டியான அந்த விதிமுறைகள் மீதிருக்கும் கோபம் தெறிக்கிறது.
எதை ஐயா கட்டுப்பெட்டியான விதிமுறைகள் என்று சொல்கிறீர்கள? பெண்கள் இருக்கும் வீட்டில் வெளி ஆண்களுக்கு அனுமதி இல்லை என்பததா?. பெண்கள் இருக்கும் வீடுகளில் எல்லாம் உங்களுக்கு ரெட் கார்பெட் விரிக்கணுமா?
முஸ்லீம் பெண்களுக்குத்தான் எத்தனை, எத்தனை கஷ்டங்கள்..? 'வெளியாட்கள் யாரைப் பார்த்தாலும் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும்..' 'உடல் முழுக்க போர்த்திக் கொண்டுதான் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டும்'. 'வெளி நபர்களிடம் பேசக் கூடாது..' 'பழக்கம் கூடாது' என்று காட்டுமிராண்டித்தனமான இந்தப் பழக்கத்தை தட்டிக் கேட்கும் வாய்ப்பு அண்ணன் சேரனுக்கு இருந்தும், அவரது ஒரே நோக்கம் 'காதல்'தான் என்பதால் அதனை லேசாகத் தொட்டுப் பார்த்து அகன்றுவிட்டார்.
எது காட்டுமிராண்டித்தனம்? அந்நிய ஆண்களிடம் பேசாமல் இருப்பது காட்டுமிராண்டித்தனமா? வெளியாட்களிடம் முகத்தை காட்டி, உடல் முழுக்க திறந்து கொண்டும், பார்க்கும் நபர்களிடம் எல்லாம் பேசிக் கொண்டும், பழகிக் கொண்டும் இருப்பது தான் நாகரிகத்தின் வளர்ச்சி என்று நினைக்கிறீர்களா?
மருத்துவமனையில் ஆபரேஷனுக்காக வந்து படுத்திருக்கும் நதீராவின் தாயாரே மிகக் கஷ்டப்பட்டு பேசும் நிலையில் இருக்கும்போது தனக்காகவும், நதீராவுக்காகவும் பேச வருகின்ற காட்சியே இதற்கு சாட்சி. இப்படியொரு சூழல் முஸ்லீம் பெண்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்.. வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டாமா..? என்று தணியும் இந்தக் கொடுமை..
ரொம்ப அக்கறை தான் உங்களுக்கு, உங்கள் அண்ணன் சேரன் அப்படி காட்டிவிட்டார் என்பதற்காக அதுவே சாட்சியாகிவிடுமா? ஐயா, இன்றும் வலையில் எத்தனையோ முஸ்லீம் பெண்கள் எழுதுகிறார்கள். இங்கு எழுதும் பல ஆண்களைக் காட்டிலும் நல்ல எழுத்தாக இருக்கிறது. ஒரு சகோதரி தமிழில், உங்களுக்கும் எனக்கும் தெரியாத கணினி துறை சார்ந்த நுண் விசயங்களை அவ்வப்போது பதிவேற்றி வருகிறார். ஒருவர் அரசியல் கட்சி தலைவியாகவும் இருந்து வருகிறார். வெளியுலகில் அவரை பர்தா இல்லாமல் பார்க்க முடியாது. வசதியும் வாய்ப்பும் உள்ள பலரும் பட்டப் படிப்புகள் படித்து வருகிறார்கள். இவர்கள் எல்லாம் கண்ணியமான முறையில் மற்றவருடன் பேசுகிறார்கள் / கண்ணியமான நட்பும் வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
எனது இந்த இடுகையை நீங்களை வாசித்திருக்க வாய்ப்பில்லை. உங்கள் எழுத்தை நீண்ட நாட்களாக வாசித்து வருகிறேன். உங்களிடமிருந்து நிறைய ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன். இப்படி அடுத்தவர் நம்பிக்கையில் மூக்கை நுழைக்கும் ஒரு சமூகத்தாக்குதல் வேண்டாமே, அண்ணாச்சி.
நான் பார்க்காத பொக்கிஷம் சினிமாவை விமர்சிக்கவில்லை, தேவையும் இல்லை. அந்தப்பட விமர்சனத்தின் ஒரு சமூகத் தாங்குதலைத் தான் தவறென்று விளக்கியுள்ளேன்.

Aug 14, 2009

யாருக்கு சுதந்திரம் இந்த தினம்?

சுதந்திர இந்தியாவின் இலவச காற்றையும் சுகமாய் இங்கே சுவாசிக்க பயம்.

வீடு திரும்பியும் முகம் கழுவாது முத்திமிட மறுக்கும் மாஸ்க் மனைவி.

வைகையில் நாளை வருவதாய் சொன்னேன் சென்னை முழுக்க ஸ்வைன் ஃப்ளூவாமே இப்போது வேண்டாம் பிறகெப்போதாவது வா- மதுரை மாமா.

திருடனுக்கும் எமக்கும் வித்தியாசம் இல்லா வழியெங்கும் முகமூடி போலி மனிதர்கள்.

சுயமாய் சிந்திக்கவும் சுதந்திரம் அற்றுப்போய் கம்பிக்கு வெளியும் சிறைக் கைதியாய் கட்டளைக்கு காத்திருக்கும் இயந்திரமாய் மனிதன்.

கோவத்தோடு சேர்ந்தே குடும்ப நினைவும் உடனே மாறும் பாசாங்கு சிரிப்பின் மொன்னை மனிதன்.

எனது நாளையை தனதாக்கிக் கொள்ள கூடவே நிற்கும் கொள்ளைக் கூட்டம்.

ஆங்கிலேயன் விடுதலையான ஆகஸ்ட் பகுதியில் யாருக்கு சுதந்திரம் இந்த தினம்?

Aug 12, 2009

விளிம்புநிலை வியாபாரிகள்

அந்த இட்லிக்கடை நடத்துபவர் பெயர் இட்டலிக்காரம்மா. கடைக்குப் பெயரில்லை, கடை நடத்துபவர் பெயரையும் யாரும் தெரிந்து கொள்ள விரும்பியதில்லை. இது பெரும்பாலான தெருவோர கடைகளுக்குப் பொருந்தும். இத்தகைய கடைகளுக்குப் பெயர் போனது மதுரை. விலை உயர்ந்த உணவகங்களை காட்டிலும், நமக்கான விருப்ப சுவை கிடைப்பதும், அவை பர்ஸை பதம் பார்காததும் பலரை அங்கு அழைத்துச் செல்வதுண்டு. அதில் கடைக்காரர் பெயர் தெரிந்து என்ன செய்ய. போத்தீஸ்கடை, ஆத்தா கடை, ஐயப்பசாமி கடை என்று அந்த கடைகள் அடையாளப் படுத்தப்படுவதுண்டு. இரவு 7 மணிக்குப்பிறகு ஆரம்பமாகும் இக்கடைகள் நள்ளிரவு 2 மணிவரை கூட (திறந்திருப்பதுண்டு என்று சொல்வது பொருந்தாது, கதவில்லாக் கடைகள்) அடுப்பு எரிப்பதுண்டு. சென்றமர்ந்ததும் 4 இட்லி, பிறகு ஒரு தோசை அடுப்பில் இருந்து நேரடியாக நம் தட்டுக்கு மாற்றப்படும். கடைசியாக ஒரு முட்டை தோசையுடன் கை கழுவலாம். ‘14;50 குடுப்பா’. ‘ஒர்ருவா கம்மியா இருக்கேக்கா...’ ‘பரவாயில்லப்பா.. நாளபின்ன வந்தா குடு’. இருவரும் வியர்வையின் விலை தெரிந்தவர்கள், ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கை.

சில குடியிருப்பு பகுதிகளில் காலை மட்டுமே விரிக்கப்பட்டிருக்கும் கடைகளில் ஒன்றுதான் இட்லிக்காரம்மாவுடையது. ஜீவாநகரில் இருந்தபோது, எங்கள் தெருவோரத்தில் இருந்த இட்லி கடையில் எனக்கு பள்ளி மதிய உணவிற்கு இட்லி வாங்கித் தருவது அம்மாவின் வழக்கமாயிருந்தது. வீட்டை ஒட்டியே என் உறவினரின் பிரபல ஹோட்டல் இருந்தும் தெருவோரக் கடையில் இட்லி வாங்குவதற்கான சில காரணங்கள், ஹோட்டலை விட இங்கு பெரிதாய் கிடைக்கும் இட்லி, வீட்டுச் சுவையிலேயே சாம்பார் சட்னி, சில நேரங்களில் இலவசமாய் கிடைக்கும் குழிப்பணியாரம். அதைவிட முக்கியம் கைராசி.

தினமும் அதிகாலையில் பெருக்கி, நீர் தெளித்து கோலமிட்டு அதன் மேல் அடுப்பு ஏற்றப்படும். இரண்டே அடுப்புதான். இட்லி, குழிப்பணியாரம் இரண்டே மெனு தான். தோசைக்கு காத்திருக்க வேண்டும், இட்லி பாத்திரம் இறக்கப்பட்டு தோசைக்கல் ஏற்றப்படும்வரை. என்னயிருந்தாலும் ஏழு மணிக்கு முன்பு வியாபாரம் ஆரம்பிப்பதில்லை. ஏழு மணி என் தம்பி தூங்கி எழும் நேரம். அவன் கை ராசிக்கையாம். அவன் கையால் வியாபாரம் ஆரம்பித்தால் சுபிச்சமாக இருக்கும் என்பது இட்லிக்காரம்மாவுடைய நம்பிக்கை. அப்பாவிற்கு அந்த நம்பிக்கையில் நம்பிக்கை இல்லை என்றாலும் இட்லிக்காரம்மாவுடைய நம்பிக்கைக்காக தம்பியை தினமும் அனுப்பிவைப்பார், போனி செய்ய. அவனும் அந்தம்மா கடையில் இருந்தே 10 பைசா எடுத்து கொடுத்து ஒரு குழிப்பணியாரம் வாங்கி வருவான். அவன் கையால் பணம் வாங்குவதற்கு முன் இட்லிக்காரம்மா பணத்தைத் தொட மாட்டார். அவசரம் என்றால் மட்டுமே, தாமாக பணத்தை தட்டில் போட்டு இட்லியை எடுத்துச் செல்ல வேண்டும். அவருக்கு நம்பிக்கை என் தம்பிக் கை மீது. நாங்கள் வீடு மாறிய சில நாட்களிலேயே அவரும் கடையை நிறுத்திவிட்டதாக அறியப்பெற்றேன். ராசிக்கை போன கவலையாயிருக்கும்.

டவுன்ஹால் ரோடு, மதுக்கடைகள் அதிகமாக இருக்கும் தெருவில் ஒருவர் தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்கிறார். வண்டியை தள்ளலாம் என்றாலும் ஒரே இடத்தில் தான் வியாபாரம். வியாபாரம் இல்லாத நாட்களிலும் வண்டி அங்கேயே இடப்பட்டிருக்கும். சரக்கு தானியில் கொண்டுவரப்படலாம். ஆள் பார்க்க சுத்தமாக இருப்பார். நெற்றியில் எப்போதும் காணப்படும் ஒரு இன்ஞ் திருநீறு, வாடிக்கையாளரை வரவேற்கும் இன்முகம். அவருக்கு தன் வியாபார சரக்கு சுத்தமாக இருக்க வேண்டும். கடலையை கரண்டியில் தான் எடுப்பார், சரக்கில் கைபடுவதில்லை, யாரையும் கைவைக்க விடமாட்டார். சுத்தம் தான் என் முதலீடு என்பார். அதற்காகவே பலரும் அங்கு செல்வதுண்டு. ஃபுட் ஸேஃப்டி படித்த எனக்கு, சில குறைபாடுகள் கண்ணில் தெரியும். முக்கியமாக கடலை மடித்து கொடுக்கும் குமுதம், குங்குமம், ஆவி, தினமலர், மாலைமலர் போன்றவை வாசிக்கப்படும் சூழல், அதை நேரடியாக எடைக்கு வாங்கும் பழைய பொருள் தரகர். அது விற்கப்படும் மொத்தக் கடை. அங்கெல்லாம் நிறைந்திருக்கும் சுத்தமும் சுகாதாரமும். ஆனாலும் தன்னளவில் சுத்தமாக இருக்கமுனைபவரிடம் அவையெல்லாம் நினைவூட்டுவது அவரது நம்பிக்கையை தகர்ப்பதாக ஆகிவிடும். எனக்கு கடலை நினைவு வரும் போது சொந்த பாத்திரத்தில் வாங்கிவருவதன் காரணம் அதன் சுவை, என் விருப்ப சுவை.

மீனாட்சியை தருசிக்க வரும் கேரள ஆந்திர பக்தர்களை குறிவைத்து நடத்தப்படும் மார்கழி மாத மாசி வீதி கடைகளும் பிரசித்தி. அத்தகைய நடைகடை வியாபாரிகளில் பெரும்பாலானோர் ஐயப்ப பக்தர்களாக இருக்க பார்த்திருக்கிறேன். வியாபார நுண்ணரசியல். எழுகடல் தெருவில் ப்ளாஸ்டிக் பொருட்கள் மொத்தமாக வாங்கி, மதுரை முழுக்க தள்ளுவண்டியில் சில்லறைக்கு விற்பவர். சுக்குமல்லி காபி, போளி, போண்டா போன்றவற்றை சைக்கிள் உருட்டியே தினமும் விற்று தீர்ப்பவர் மற்றும் இளநீர், காய்கறி விற்கும் இன்னும் பலர்.

இவர்களுக்கெல்லாம் அன்றைய வியாபாரத்தின் லாபம் தான் அடுத்த நாளுக்கான சோறும், முதலீடும். நான்கைந்து நாட்கள் தொடர்ந்தார்போல் வியாபாரமோ அல்லது வியாபாரியோ படுத்துவிட்டால், அடுத்த நாள் சோற்றுக்கு கந்துவட்டியிடம் கையேந்தும் விளிம்புநிலை வியாபாரிகள் இவர்கள்.

மணிகளில் ஆயிரங்கள் பார்க்கும் தீபாவளி திடீர் கடைகளையும், பாலியல் தொழிலாளர்களையும் விளிம்புநிலை வியாபாரிகள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. நான் இவர்களை வீம்புநிலை வியாபாரிகள் எனச் சொல்லுவேன்.

நன்றி!!!

பன்றிக்காய்சல் பாதுகாப்பு நடவடிக்கை

மின் அஞ்சலில் வந்த தகவல்;

நீலகிரி தைலத்தை (Eucalyptus oil) சில துளிகள் கைக்குட்டையில் விட்டு, மூக்கை மூடிக்கொள்வதுவும் பன்றிக்காய்சலுக்கு எதிரான ஒரு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும் என்று நேஷனல் இன்ஸ்ட்யூட் ஆப் வைராலஜி தெரிவிக்கிறது.

சென்னையில் பன்றிக்காய்சல் குறித்தான தொடர்பிற்கு; 044 2432 1569 என்ற எண்ணை அழைக்கலாம்.

Cipla has launched a new drug against Swine Flu (Virenza), as an alternative option to Osetalmavir drug. Please find attached herewith the availability centers.

Swine

பன்றிக்காய்சல் பற்றிய விபரங்களுக்கு வாசிக்கவும்

பன்றி காய்ச்சல் சில கேள்விகள் பதிலுடன். - இட்லிவடை

பன்றிக் காய்ச்சல்- காத்துக்கொள்ள-14 !! - மருத்துவர் தேவா

பன்றிக் காய்ச்சல்-2 - மருத்துவர் தேவா

இன்ஃப்ளுயென்சா A (H1N1) (பன்றிக் காய்ச்சல்) - பத்ரி (மருத்துவர் புருனோ - ஒலிவடிவம்)

பன்றி காய்சல் அபாயம். - எனது இடுகை

Aug 10, 2009

சிறந்த பின்னூட்டம் எது? எப்படி?

பின்னூட்டம் அல்லது மறுமொழி என்று சொல்லப்படும் இவற்றில் சிறந்தவற்றை பார்க்கும் முன்பு, பின்னூட்டம் இடுவது எப்படி என்பதை பார்த்துவிடுவோம். இது பலருக்கும் தெரிந்திருக்கும் ஆனாலும் முதலில் வலைப்பூ சுவாசிக்க வரும் சிலருக்கு (முன்பு எனக்கும்) அந்த பதிவுக்குச் சொல்ல கருத்திருந்தும், எப்படி பின்னூட்டுவது என்று தெரியாமல், வாசித்ததோடு செல்வதுண்டு. எனவே சுருக்கமாக ஒரு முன்னுரை, (இந்த பத்தி தெரிந்தவர்கள் நேராக இதற்கடுத்த பத்தி செல்லலாம்)
ஒவ்வொரு இடுகையின் (பின்னூட்டத்திற்கு) கீழும் Post Comment அல்லது கருத்துரையிடுக என்பதாக இருக்கும், சிலரது வார்ப்புறுவில் இடுகை தலைப்பிற்கு நேரே 2 பின்னூட்டம் (or 23 Comments) என்பதாக இருக்கும் அதை க்ளிக்கினால், ப்ளாக்கர் கமென்ட் விண்டோ திறக்கும். அதில் (சில வலைபூவில் இடுகைக்கு கீழேயே) காணப்படும் வெற்று பெட்டியில் கருத்துகளை பதிவு செய்யலாம். அங்கு கேட்கப்படும் அடையாளத்தை கூகில் ஐடி அல்லது ஓப்பன் ஐடி எனப்படும் வலை முகவரியுடன் கடவுச்சொல் கொடுத்து பின்னூட்டம் வெளியிட வேண்டியது தான். அடையாள தெரிவிலேயே அனானி அதர் ஆப்ஷன் இருக்கும். அதை தேர்வு செய்தால் ஐடி கடவுச்சொல் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்தமுறையில் பின்னூட்டத்தில் பின்னூட்டுபவர் யாரென்பது மற்றவருக்குத் தெரியாது. அடையாளத்திற்கு கொடுக்கப்படும் கடவுச்சொல் மற்றவரால் அறியப்படுமோ என்ற சந்தேக பயம் தேவையற்றது.
இனி பிரபல பின்னூட்ட வகைகளைப் பார்ப்போம்.
மீ த பர்ஸ்டு; இவை பிரபல பதிவர்களுக்கு, பெரும்பாலும் பிரபலம் அல்லாதவர்களால் அல்லது பிரபலமாக ஆசைப் படுபவர்களால் இடப்படுவது. இதற்கு, ‘உங்கள் வலைப்பூவையே நான் எப்போதும் உற்றுநோக்கி, புதிய இடுகைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். என்னையும் கொஞ்சம் கவனியுங்கள்’ என்பதாகவும் விளக்கம் கொள்ளலாம்.
மீ த 40; இது சற்று வித்தியாசமானது. 40 பின்னூட்டங்கள் தாண்டிவிட்டால் ஒரு மறுமொழி திரட்டியிலிருத்து பின்னூட்டம் விரட்டப்பட்டுவிடும். அதற்காக சிலர் 40 வரை அடித்து ஆடி விட்டு பின்பு ஓடி விடுவார்கள். நானும் சில ஆயிரங்கள் வரை கூட பார்த்திருக்கிறேன். ஆனால் இதுவரை காணாதது, மீ த 9 மட்டுமே.
;) ; வெறும் ஸ்மைலி மட்டும் விட்டு செல்வதில் மூன்று வகையுண்டு. 1. நானும் இந்த பதிவை வாசித்தேன். 2. பின்னூட்ட நேரமில்லை, ம்.. ;) நல்ல இடுகை அல்லது ;( சரியில்லை என்பதை சிரிப்பானில் சொல்வது 3. பின்னூட்ட பின்தொடருதல் (Comment Follow-up) செய்வதற்காகவும் இடப்படுவதுண்டு.
ரிப்பீட்டு; இடுகை குறித்த தனது கருத்தை முன்னமே ஒருவர் தெரிவித்திருந்தால், அதையே எடுத்திட்டு ரிப்பீட்டு என்று தட்டிச் செல்வது. சொந்த கருத்து இல்லாதவர்களுக்கு இது கருத்து கொடுக்கும் ஆபத்பாந்தவான்.
//………………….// ; இடுகையிலிருந்தோ அல்லது பின்னூட்டத்திலிருந்தோ ஒருசில வார்த்தைகளை மட்டும் இரண்டு ஸ்லாஷிற்கு இடையில் வைத்து, அதற்கு கருத்து சொல்வது. இந்த முறை பெரும்பாலும் அனைவராலும் பின்பற்றப்படுவது. யார் எப்போது வாசித்தாலும் நேராக விசயத்தை விளங்கிக்கொள்ளலாம்.
கும்மி; இடுகைக்கு தொடர்பாகவோ அல்லது தொடர்பின்றியோ ஒருவரோ ஒன்றுக்கும் மேற்பட்டவரோ தொடர்ச்சியாக பின்னூட்டி சில நேரங்களில் சிரிப்பையும் வரவழைக்கும் பின்னூட்ட விளையாட்டு.
உள்குத்து; ஒன்றுக்கும் மேற்பட்ட உள் அர்த்தங்களோடு பின்னூட்டப்படுபவை. சில நேரங்களில் இடுகைக்கு தொடர்பாகவும் அமைந்துவிடுவதுண்டு.
அனானி; நான் முன்பே சொல்லியுள்ளது போல, தனது பெயர் வெளியிட விரும்பாதவர்களால் பின்னூட்டப்படுவது. பெயிரில்லா பின்னூட்டவாதி சில நேரங்களில் உண்மைகளை சொல்லிவிடுவதாலோ அல்லது முகம் சுளிக்கும்படியான ஆபாச வார்த்தைகளை விட்டு செல்வதாலோ, இந்த வகை பின்னூட்டங்கள் பதிவர்களால் விரும்பப்படுவதில்லை. அதனாலேயே சிலரது வலைப்பூவில் அனானி ஆபஷன் மட்டுறுத்தப்பட்டிருக்கும்.
பின் நவீனத்துவம்; முழுமையடையாத வாக்கியத்தில் இடம் மாற்றி எழுதப்பட்ட வார்த்தைகளால் பின்னப்பட்டிருக்கும் இந்தவகை பின்னூட்டங்களில் தீவிரஇலக்கியம், விளிம்புநிலை, கட்டுடைப்பு போன்ற வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். பெரும்பாலும் இவை எந்த கருத்தாலனாலும் மறுத்து விவாதம் செய்வதாகவே இருக்கும். இரண்டு மூன்று முறை வாசித்தால் புரியும், ஆனால் புரியாது.
சரி.. இவற்றில் சிறந்த பின்னூட்டம் எது? பதிவுகளை வாசித்து தனது கருத்தைச் சொல்லும் அனைத்துமே, சிறந்த பின்னூட்டம்தான். அது பெயரில்லா பின்னூட்டமாக இருந்தாலும் சரியே. ஆனாலும் இதை நாம் சொன்னால் நம்மை தவறாக நினைப்பார்களே என்று நினைக்காமல் சொல்வதை தெளிவாக நேரடியாகச் சொல்லிவிடுவதே நல்லது. நகைக்கும் போது மட்டும் முகம் திறந்திருக்காமல், தவறை சுட்டும் போதும் இருக்கும் திறந்த முகமே நட்பை வலுவாக்கும், நல்ல பலன் தரும். நான் இதுவரை எங்கும் அனானியாக பின்னூட்டியதில்லை, இனியும் அந்த எண்ணமில்லை.
சில சுவாரஸ்ய பின்னூட்டர்கள்,
அனைவரும் விளங்கும் அழகான எளிய தமிழில் எந்த விசயத்திற்கும் தனது கருத்தை கவனமாக சொல்லும் பலரில் நான் அறிந்த வரையில் மணிகண்டன், ப்ராபகர் மற்றும் ஜெகநாதன் ஆகியோரின் பின்னூட்டங்கள் பிரபலம்.
சிந்தனையோடு சிரிப்பையும் வரவழைக்கும் பின்னூட்ட புயல் வால்பையன், வாசிக்கும் அனைத்து இடுகைகளிலும் பின்னூட்டும் ரொம்ப நல்ல மனதுக்காரர்.
அதிஷா பின்னூட்டுவது அபூர்வம். பானைக்கு ஒரு சொறு பதம் என்பது போல, இவரது பின்னூட்டத்தால் ஊரே அதிரும் ஒன்று சிரிப்பால், சிந்தனையால் அல்லது வன்முறையால். ரத்தக்களரி பின்னூட்டம்.

நாமெல்லாம் நாலு நாள் மல்லாக்க படுத்து யோசித்தாலும் வராத வார்த்தைகள், குசும்பனுக்கு நொடியில் வந்துவிழும். அசத்தல் ரகப் பின்னூட்டம்.
நையாண்டி நைனா, யாரையும் நோகடிக்காத நையாண்டி என்ன நையாண்டி?, நைனா நையாண்டி.
இன்னும் சில பி.ப மற்றும் மூ.ப எல்லாம் வட்டத்திற்குள் சதுரங்கம் ஆடுவதால் சுவாரஸ்யமாக இருந்தாலும், இங்கு வேண்டாம். இது பிரபல பின்னூட்டர்களை மட்டுமே அலசிய பகுதி.
வாசிக்கும் அனைத்து இடுகையிலும் அதைப்பற்றிய கருத்தை ஒரு ஸ்மைலியாவது இட்டு சொல்லிவிடுவது நல்லது. காசா பணமா...சிறு ஊக்கம்தானே... ஏனென்றால் இணைய வாசகன் ஒருவன் புதிதாக எழுத வரும்போது, அவனுக்கான ஊக்கமாக, உளியாக இந்தப்பின்னூட்டங்கள் இருக்கிறது.  ஆரம்பகட்ட இணைய எழுத்தானளின் படைப்புக்கான மதிப்பெண்ணும், அவனுக்கு இடப்படும் பின்னூட்டங்களே. ஆனால் எழுத்தில் வெற்றி பெற, எதிர்பார்ப்பில்லா எழுத்து அவசியமாகிறது. பின்னூட்டம், எதிர்வினை, பாராட்டு என்ற எதிர்பார்ப்பில் மட்டுமே எழுதப்படும் எழுத்தில் படைப்பாளன் சமரசம் செய்துகொள்ள வேண்டிவரும். இத்தகைய எழுத்தில் படைப்பாளனுடைய உண்மை முகம் தெரிய வாய்ப்பில்லை. எதிர்பார்ப்பை தாண்டிய, சமரசமில்லா எழுத்து வேண்டும், அதை கொடுப்பது படைப்பாளனின் கடமையாகிறது.
நன்றி!

Aug 4, 2009

ஜிகர்தண்டா - சென்றவை

சென்ற வாரம் - ஒரு அலசல்;

சமஉ களுக்கு சென்னையில் வீடு கட்ட மனை வேண்டும் என்று சமஉ ஆ.ஞானசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐயா, உங்களுக்குதான் சென்னை வந்தால் தங்க சமஉ மாளிகை இருக்கே, அதுவும் நல்ல வசதிகளோட இருக்கறதா கேள்விப் பட்டிருக்கேனே. ஓ… அத்த ஐந்து வருஷத்துக்கு (அதுவே சந்தேகம்) தானே உபயோகப்படுத்த முடியும். வாழ்நாள் முழுவதுக்கும் ஒரு சின்ன வீடா சென்னையிலேயே கட்டிக்கலாம்னு பாத்தீங்களா? அது சரிதான். தொழில் முதலீடு அதிகமாகிடுச்சுல்ல… ஓட்டு வெல ஏறிப்போச்சு, இப்பல்லாம் ஒரு ஓட்டுக்கு 100, 200 கொடுத்தா வாங்க மாட்டிக்கிறாங்கலே, மதுர பக்கத்ல 500, 1000 கொடுத்து குடி மக்களயெல்லாம் கெடுத்து வச்சிருக்காங்ஞ. அடுத்ததா ஓட்டு போடுற உரிமை எதுக்கு இந்த குடிமக்களுக்குன்னு ஒரு அறிக்கை விடுங்க. சமஉ க்கான முதலீடாவது குறையும்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

உபியில் சொந்த சிலை நிறுவிவரும் மாயாவதிக்கு ஏற்கனவே எதிர்ப்புகள் இருந்துவருகிறது. இந்நிலையில் உபி அரசின் சிலை வைக்கும் முடிவில் தலையிட உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டதால், இன்னும் சிலை வைப்பதற்காக 27 கோடி ரூபாய் ஒதுக்க கோரியுள்ளார். ஏற்கனவே 1,500 கோடி ரூபாய் செலவில் உபி முழுவதும் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் மற்றும் டாக்டர் அம்பேத்கருக்கு நினைவுச் சின்னங்கள் நிறுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது சொசெசூ வா? இல்ல அசெஆ வா? அட எதுனாலும் அஇசா ப்பா…

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

வருகிற 9 ம் தேதி பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு கைமாறாக சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞனரின் சிலை 13ம் தேதி திறக்கப்படவுள்ளது. (நமக்கு திருவள்ளுவர் மாதிரி கன்னடர்களுக்கு சர்வக்ஞர். திருவள்ளுவர் இரண்டு அடியில் வாழ்க்கையை வழி நடத்தும் வழியை திருக்குறளில் சொன்னார், சர்வக்ஞர் மூன்று அடியில் சொன்னது திருபாதி. 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சர்வக்ஞரின் இயற்பெயர் புஷ்பதத்தா.) வழக்கம் போல பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்க சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சிலையால் எங்கும் பிரச்சனைதான். சிலை திறக்காட்டியும் பரவாயில்லை, எட்டையூரப்பா தவிச்ச வாய்க்கு கொஞ்சம் தண்ணி கொடப்பா… புண்ணியமா போகும். திருவள்ளுவர நாங்க நெஞ்சில் வச்சுக்கிறோம்

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

இடைதேர்தலில் திமுகவின் வேதனை சாரி சாதனைகளை சொல்லி ஓட்டு கேளுங்கள் நாம் அதிமுக வினரின் ஓட்டுகளையும் வாங்க வேண்டும். இதுகுறித்த ரகசியத்தை நான் கடைசியில் சொல்லித் தருகிறேன் என்று அஞ்சா நெஞ்சன் அறிக்கை.

கொடுத்தவச்ச தொகுதி மக்கா…

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

சென்ற வாரம் முழுவதும் ‘அரசுக்கு ஒளிவட்டம் உண்டு; ஊழியர்களுக்கு இல்லை’ என்ற தோழர் மாதவராஜ் இடுகையில் தொடர் பின்னூட்டம் நீண்டது. இந்த வாரம் திசை மாறி நீள்வதாய் இருந்த ‘லேசா லேஸா ஈசா ஈஸா’ என்ற கோவியாரின் இடுகை நிறைவுக்கு? வந்ததில் மகிழ்ச்சி.

விஜய் டிவியில் நீயா நானா பார்க்கும் வாய்ப்பு முதல் முறையாக கிடைத்தது. கோவில் திருவிழாக்களில் ஆபாசமா? என்ற தலைப்பென்று நினைவு. தலைப்பு எதுவாகினும் கரு அதுதான். அதில் இரு தரப்புமே அவர்களுக்கு வாய்ப்பிருந்தும் தெளிவான கருத்துகளை முன்வைக்கவில்லை. கடைசியில் திருவிழாக்கள் அவசியமே என்பதாக நிகழ்ச்சியில் வணக்கம் சொல்லப்பட்டது. அதில் ஆபாச நடனங்கள் / வசனங்கள் மற்றும் நேரம் ஆக ஆக அவிழ்க்கப்படும் ஆடைகள் குறித்த விவாதங்கள் எல்லாம் முற்றுப்பெறவில்லை.

ஒரு நல்ல விவாதம் மூலம் சிந்தனை விரிவடைகிறது, தெளிவடைகிறது, தெளிவுபடுத்தப்படுகிறது. அது எதிராளியின் நம்பிக்கையை மாற்ற வேண்டும் என்றோ அல்லது தகர்த்தெறிய வேண்டும் என்றோ செய்யப்படுவதல்ல. தெளிவு ஒன்றே அதன் முடிவாகும். துரதிஷ்டவசமாக (அல்லது அதிஷ்டவசமாக) இணைய விவாதங்களில் அந்த தெளிவை எந்த தரப்பும் அடையாமல் விவாதங்கள் முடிவடைந்துவிடுகிறது. விவாதத்தினூடே சில கு’பீர்’ சிரிப்புகளும் அவசியம், அது விவாதப் பொருளின் தன்மையை மாற்றாமல் விவாதத் தன்மையை / போக்கை மட்டும் சிறிதாக மாற்றுகிறவரை விவாதம் இன்னும் ஆரோக்கியம் ஆகும் என்பது என் புரிதல். கார்ப்ரேட்களின் ரெக்ரியேஷன் போல,

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

10 ஹாட் என்ற வலையில் மூத்தபதிவர் பாஸ்டன் பாலாஜி தலை பத்துகளை (சில இடுகைகளில் பலபத்தும்) பட்டியலிடுகிறார். சுவாரஸியமாக இருக்கிறது. அதில் தொகுக்கப்பட்டிருந்த தமிழ் பதிவர்கள் / ட்விட்டர்கள் பயன்படுத்தும் சுவாரஸிய சுருக்கெழுத்து பட்டியல்.

 1. கககபோ: ருத்துக்களை ச்சிதமாக வ்விக் கொண்டாய் போ!
 2. சொசெசூ: சொந்த செலவில் சூனியம்
 3. நாபிமுமூகா: நான் பிடிச்ச முயலுக்கு மூணே கால்
 4. அஇசா: ரசியல்ல தெல்லாம் சாதாரணமப்பா
 5. இரூபோயோ: துக்குன்னே ரூம் போட்டு யோசிப்பாங்களோ ?
 6. அசெஆ: அடுத்தவன் செலவில் ஆப்பு
 7. புதசெவி: புரியவில்லை; யவு செய்து விளக்கவும்
 8. எகொஇச: ன்ன கொடுமை து… ரவணன் (சந்திரமுகியில் பிரபு)
 9. ஏஇகொவெ: ன் ந்த கொலை வெறி?
 10. OSI – ஒசொஇ: ண்ணும் சொல்றதுக்கு ல்ல!
 11. நுகபிநி: நுண்ணரசியலை ண்டு பிரமித்து நிற்கிறேன்!
 12. இசெநாபா: ன்னைக்கு செத்தால் நாளைக்கு பால்.
 13. அஆகூ - னுபவிக்கணும்! ராயக் கூடாது
 14. இமா: ரண்டாம் மாடி = டூ மச்சு!
 15. சாநீஎபோ: சார் நீங்க ங்கேயோ போய்டீங்க
 16. எவேபொஇ: னக்கு வேபொழப்பு ல்லே?
 17. எதஇசொ: ன்ன லைவா ப்படி சொல்லிடீங்க
 18. வேவேவஅ: வேண்டாம்…வேண்டாம்…லிக்கிறது, ழுதுவிடுவேன்
 19. இஎவபோ: து ன்னடா ம்பா போச்சு!
 20. கெகெ: கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்கய்யா
 21. OPU - ஒபிஉ: ண்ணுமே பிரியல லகத்தில

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

இனி ஒவ்வொரு ஜிகர்தண்டாவிலும் நான் வாசித்ததில் எனக்கு ருசித்த இடுகையை பகிரலாமென்றிருக்கிறேன். இது நல்ல இடுகையை நாலு பேருக்கு கொண்டுசெல்லும் முயற்சியே. அந்த வகையில் இந்த இடுகையில்,

என்ன தலைப்பு வைப்பது? என்ற இடுகையை ‘சென்றவார சிறப்பு’ இடுகை என்பேன். ‘என்’ எழுத்து இகழேல் என்ற பூவில் சுமஜ்லா என்ற பெயரில் எழுதிவரும் சகோதரி, சிலகாலம் முன்பு தன் வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் துணிச்சலை தந்த கருப்பு தினங்களை கண்முன்னே கொண்டு வருகிறார். இடையிடையே தேர்ந்த மருத்துவரைப் போல சில நோய்தன்மைகளையும், சிகிச்சைகளையும் சொல்லி ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். நீங்களும் வாசித்துப் பாருங்கள்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

நான் எழுதிய இடுகைகளிலேயே எனக்கு பிடித்தது, இதற்கு முந்தைய எனது வெண் பாவம் தான். விருப்பத்திற்கான காரணம் பல இருந்தாலும், முக்கியமானது அது தோற்றுப்போன குதிரை என்பதே. என் நண்பர்களால் ரசிக்கப்படாத என் குதிரை. மற்ற அனைத்தையும் விட அதைத்தான் தட்டிக்கொடுத்து அரவணைக்க வேண்டும். அதன் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். செம்மைபடுத்த வேண்டும்.

ஜெமோ சொல்லுவார் ‘இது என் பக்கம். வாசகர்களுக்கு பிடித்தமானதாக இருக்க இங்கே எந்த முயற்சியும் செய்யப்படாது.’ என்று. அப்படியே நானும் இருக்க இது என்ன என் பக்கமா, இது என் நண்பர்களுக்கான பக்கம். என் நினைவுகளை நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளும் நம் பக்கம். என் வாழ்வின் மறு பக்கம். இதுதான் என்னை விமர்சனத்திற்கு வைத்து பக்குவப்பட்டவனாக ஆக்கும் முயற்சிகளை நான் எடுக்கும் தளம்.

கடைசியாக,

ட்விட்டரில் நல்ல பல தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. வாய்ப்பிருப்பவர்கள் நுழைந்துபாருங்கள். நானும் பேருக்கு ட்விட்டுறேன், http://twitter.com/jaihindpuram என்ற பேரில். நம்மிடம் விசயம் இல்லாவிட்டாலும் வேடிக்கை பார்க்கலாம். பல உபயோகமான தகவல்கள் கிடைக்கும்.

நன்றி!!!

Aug 3, 2009

வெண் பாவம்

எண்ணிச் செய்யலம்மா கன்னி முயற்சியம்மா மன்னிப்பது ஐயம்மா பாராமாத்மா?

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

ஒன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட – ஆனது ஆகிப்போச்சு ஓடிப்போயி ரெண்டு பேரும் ஒண்ணா வாழாத... பின்ன,

காதலிச்ச உன்ன அங்க கைவிட்டு வந்தா இங்க காக்கா குருவி கூட காறிதுப்பி கதக்கிதடி கண்கலங்காம அவள காப்பாத்த வக்கில்ல கணக்கெழுத வந்திட்டானாம் - கம்பனாட்டம் இவன் கம்ப்யூட்டர் முன்னால தூ.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

ஊரெல்லாம் சொத்து நீ சேக்கற நாளெல்லாம் செத்து நான் பொழைக்கிறேன் ஏசி காத்தில நீ உறங்கற - தூக்கமில்லா என்னை தூசு கட்டில்ல பார்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

பானைல இருக்கற பாயாசம் ஊத்துன்னா… ஏனையா ஒமக்கு இந்த அவசரம், பேசாம இருமையா மிஞ்சினா பாப்போங்கறா - தவிச்ச என் வாய்ல தண்ணி கொஞ்சம் காணிச்சாக்கா - பிரிச் தண்ணி பையனுக்கு வேணுங்கறா.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

ஆத்திகரா நாத்திகரா அதுதான் மீண்டும் அனைவருக்கும் சந்தேகம் - அறிந்தது நான் நாத்திகம் பேசும் ஆத்திகர் அவர் என - தெரிந்தாலும் அண்ணன் கோ ச்சுக்க மாட்டார்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

கம்பனின் காதலை கண்ணியமாய் சொல்லி கண்முன் காட்டினான் கார்பரேட் கவிஞன் விளையாட்டாய் சிலர் விரித்த வீம்பு வலையில் விழாமல் விரட்டி - விட்டான் திரட்டி

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

கதைகள் சில பின்னினான் கின் என்ற பையன் அவைகள் பல கண்களுக்கு பலாதென் தெரிய ஒவ்வொன்றாய் எடுத்துச்சொல்லி அவ்வாறே அவன் வினவ - அவ்விதழ் அவதானிப்பு அங்கணம் - அதனால்நான் ஆக்கினேன் அங்ஙனம் - அதுதான் எமக்கிருந்த அக்குத்து - நீ கொஞ்சம் அப்டிகா ஒத்து மாமேன்னான் - நீலர் ஆட்டமாடும் நம் வாலிபகண்ணன்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

பிரபல பதிவர் அவர் - எவருக்கும் பிறர் பலம் பாராது பின்னூட்டார் - அவருக்கும் பின்னாளிட்டார் ஆப்பு யார்?

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

சத்தியமா நான் பத்தாப்பு தாண்டலப்பு சந்திச்ச பத்தியில ஏதாச்சும் தப்பிருந்தா பக்குவமா திட்டுங்கப்பு - என் தாத்தா பயபுள்ள திண்ணையில நிக்கறவ - பாத்தா ஆகிடுவா பத்திரகாளியாட்டம்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

இவைக்கெல்லாம் வைத்த பெயர் வெண்பாம் அவையோர் வைதார், இங்கு வந்த எமக்கு இதுவும் வேணுமாம் இன்னமும் வேணுமாம், இத்தோடு வைத்தேன் பேனாவை தூர.

இனியேனும் அங்கே இனியதாய் இருக்கட்டும் இன்ஷா அல்லாஹ்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

எண்ணிச் செய்யலம்மா கன்னி முயற்சியம்மா மன்னிப்பாரம்மா என்னை பாராமாத்மா! ;)

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>> <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>> <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

இது வெண்பா

ஓரடி முக்கால் குறள்வெண் பாவே ஈரடி முக்கால் சிந்தியல் வெண்பா மூவடி முக்கால் அளவியல் வெண்பா பலவடி முக்கால் பஃறொடை வெண்பா பஃறொடை மிக்கது கலிவெண் பாவே. -தொல்காப்பியம்.