Aug 23, 2009

நெருக்கடி நிலையில் நிறுவனங்கள்

உலக பொருளாதார மந்த நிலையின்* விழைவாக, நாளுக்கு நாள் பணி இழப்பு அதிகரித்துவருகிறது. பங்குசந்தையின் சமீபத்திய முன்னேற்றம், நெருக்கடி நிலை முடிவுக்கு வருவதாக நம்மை நம்ப வைக்க முயற்சித்தாலும், கார்பரேட் நிறுவனங்கள் அவற்றை ஏற்றுக்கொள்வதாயில்லை. அவை இன்னும் ஆட்குறைப்பை குறைத்தபாடில்லை. இப்பொருளாதார நெருக்கடியில் பாதிப்படையாத நிறுவனங்களும் அவற்றில் குளிர்காய நினைக்கிறது. இதே பணியை உன்னை விட குறைந்த ஊதியத்தில் செய்ய கதவிற்கு வெளியே பலர் காத்திருக்கிறார்கள் என்பதாக, விசுவாசமாய் பல ஆண்டுகள் பணியாற்றும் தன் ஊழியர்களையும் மிரட்டி ஊக்கத் தொகை, போக்குவரத்து படிப்பணம் போன்ற சம்பளத்திற்கு வெளியே கொடுக்கப்படும் இதர தொகைகளை நிறுத்திவிடுகிறது. ஊதிய உயர்விற்கான பேச்சே இல்லை. இவை பணியாளர்களுக்கான பிரச்சனை என்றால், நிறுவனங்களும் சில பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

நிறுவனங்கள் சந்தித்துவரும் நீண்டகாலப் பிரச்சனை, பணியாட்கள் தாமாக பணியிலிருந்து விலகிக்கொள்வது. இதற்கான காரணமான கருதப்படுவது, அவர்களுக்கு புதிய இடத்தில் கிடைக்கும் அதிக ஊதியமும், நல்ல நிலையும் என்பவை நம்பத்தகுந்த காரணங்கள் என்றாலும், இன்னுமொரு மறைக்கப்படும் காரணமும் உண்டு. அதை அலசும் முன், சென்ற ஆண்டின் ஒரு சாதாரண நிகழ்வை பார்த்துவிடுவோம்.

ஒரு நண்பர், மென்பொருள் நிறுவனத்தில் கைநிறைய சம்பளம், வாகனம் மற்றும் இதர வசதிகளோடு இருந்துவந்தார். ஒரு நாள் தான் வேலையை விட்டு நிற்கப்போவதாகச் சொன்னார். எனக்கு அதிர்ச்சி, ஏனென்று விசாரிக்கும் போது, இதைவிட பைநிறைய சம்பளத்தில் உலகத்தர நிறுவனத்தில் சேரப்போவதாகவும், அங்கு ஊழியரை நண்பராக பாவிக்கும் மனிதவளத்துறை, அட்டகாச அலுவலகம், உயர்ந்த தொழில்நுட்பம், உயர்தர உணவுவிடுதி ஆகியவை இருப்பதாகவும் சொன்னார். வேலைக்கு சேர்ந்த புதிதில், மூன்று முறை வெளிநாட்டிற்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டார். 'என் வாழ்நாளில் இந்தளவுக்கு குறுகிய காலத்தில் அதிகமாக கற்றுக்கொண்டதில்லை', என்றும் ஒரு முறை என்னிடம் சொன்னார். நிச்சயமாக அந்த வேலைக்குத் தகுதியானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், எட்டுமாதத்திற்குப்பிறகு அங்கு ரிசைன் செய்துவிட்டு, வேறு ஒரு நிறுவனத்தில் சேர்ந்துவிட்டதாகவும், அதைவிட குறைந்த சம்பளம் என்றாலும், பணியிடத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சொல்கிறார்.

இந்த நண்பர், தனக்கு மிகப்பொருத்தமாக இருந்த வேலையை விட்டுவிட்டு வரக்காரணம் என்ன? இதே நிலையில் பலரையும் பார்க்க முடிகிறதே ஏன்?

இதற்கான காரணத்தை அறிய Gallup Organisation மேற்கொண்ட ஒரு ஆய்வில், லட்சக்கணக்கான பணியாளர்களும், ஆயிரக்கணக்கில் மேலாளர்களும் உட்படுத்தப்பட்டு அதன் அறிக்கை First Break All The Rules என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அப்புத்தக ஆசிரியர்களான Marcus Buckingham மற்றும Curt Coffman என்ற மேலாண்மை அறிஞர்கள் சொல்வது,

'பெரும்பாலான பணியாட்கள், தன் மேலாளரை விட்டு விலகுகிறார்களே தவிர, நிறுவனத்தை அல்ல' என்பதாக.

உடனடி இடமாற்றம் விரும்பும் ஆட்கள், தன் மேலாளரிடமிருந்து உடனடி விடுதலையை எண்ணியே இடமாற்றத்தை தேர்வு செய்கிறார்கள். எனவே, ஒரு நிறுவனத்திலிருந்தது தொடர்ந்து பணியாட்கள் விலகிப் போகிறார்கள் எனில், அந்நிறுவனம் அத்துறையில் Direct Line Managers என்று சொல்லப்படுகிற நேரடி மேலாளரை கவனத்தில் கொள்ள வேண்டும். அவரது கொடுமையை (கொடுமை என்ற வார்த்தை சற்று அதிகமென்றாலும்) ஒன்று, இரண்டு முறை பொருத்துப்போகும் பணியாளர்கள் மூன்றாவது முறை விலகிப்போய் விடுகிறார்கள் என்பது, மனிதவளத்துறையினர் அவ்வாய்வின் போது கூறியவை. நேரடி மேலாளர்களே, பணியாட்களுக்கான பணியை நிர்ணயிப்பதும், அதை அவர்கள் மீது செலுத்துவதுமாக இருப்பதால், இவர்களே பணியாட்கள் பார்வையில் வில்லன்களாக பாவனை செய்யப்படுகிறார்கள். அவர்களால் பணியாட்கள் மீது செலுத்தப்படும், அதிகப்படியான கட்டுப்பாடு, அதிகப்படியான சந்தேகம், அதிகப்படியான இக்கட்டு நிலை மற்றும் அவர்களை அசையா சொத்துபோல பாவிக்கும் நிலையே பணியாட்களை விலகிவிடச் செய்கிறது.

இத்தகைய அதிகப்படிகளை உணரும் பணியாட்கள், தனக்கு வழங்கப்பட்ட பணியை தவிர வேறெதையும் அதிகப்படியாய் செய்யாதிருப்பதும் நிறுவனத்திற்கு இழப்பே. பணியாட்கள் சுய ஆர்வத்துடன் பணி செய்வதே, நிறுவனத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் முக்கிய சக்தி என்பதை நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலாளர்களின் இத்தகைய (Harassment) நடைமுறையை, நிறுவன தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை போலவே, மேலாளர்களும் தங்களிடம் பணியாற்றும் கடை நிலை ஊழியர்களுக்கும் இருக்கும் சிரமங்களையும் ஆலோசித்து, அதற்குத் தகுந்த செயல் திட்டம் வகுக்கப்படல் அவசியம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

திறமையானவர்கள் தானாக மாறுவார்கள், செத்த மரங்களை காட்டாறு தான் அடித்துச் செல்லவேண்டும்.

10 comments:

 1. நாம் கடந்த 50 ஆண்டுகளாக கடைபிடித்த பிரிட்டிஷ் வகை நபர்கள் மேலாண்மையை விட்டு விட்டு அமெரிக்கா பாணிக்கு அவரச கதியில் சென்றதன் விளைவு இது

  --

  நமது குடும்ப அமைப்பு, சமூக அமைப்பு ஆகியவை அமெரிக்காவை விட பிரிட்டனுக்கு அருக்கில் இருந்தன

  --

  அமெரிக்க நிறுவனங்கள் அதிகம் பிரகாசித்ததற்கு காரணங்கள்

  1. அவர்களிடம் இயற்கை வளங்கள் இருந்தன

  2. அதிகாரத்தை வைத்து - டாலர்:எண்ணை சுழற்சி

  --

  அதை அறியாமல் அவர்களது மேலாண்மை தான் காரணம் என்று நாம் இவ்வளவு நாள் கடைபிடித்த பல நல்ல விஷயங்களை மறந்தது / மறைத்தது தான் பிரச்சனை

  ReplyDelete
 2. //புருனோ Bruno said...
  நாம் கடந்த 50 ஆண்டுகளாக கடைபிடித்த பிரிட்டிஷ் வகை நபர்கள் மேலாண்மையை விட்டு விட்டு அமெரிக்கா பாணிக்கு அவரச கதியில் சென்றதன் விளைவு இது//

  கரெக்ட்டா சொன்னார் டாக்டர் சார்

  மாற்றம் என்ற வார்த்தையை தவிர அனைத்தும் மாறும் என்பது நியதிதானே

  ReplyDelete
 3. நல்ல அலசல் மற்றும் அருமையான பதிவு. டாக்டர் என்ன சொல்கிறார் என்று விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 4. Global Recession - ’பூகோள பண நெருக்கடி’ என்று சொல்கிறீர்களா?

  அதை உலக பொருளாதார மந்தநிலை என்று குறிப்பிட வேண்டும்.

  நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி என்றுதான் நினைத்து படிக்க ஆரம்பித்தேன். ஆனால் மனித வள மேலாண்மை பிரச்சினைகளைப் பற்றி விரிவாக சொல்லியிருக்கிறீர்கள்.

  Harassment அச்சுறுத்துதல் எங்குதான் இல்லை? அரசு அலுவலகங்களில் இல்லாத அச்சுறுத்தலா? தற்போது இந்தியாவில் திறந்த மேலாண்மை அதிகம் பாவிக்கப்படுவதால் இந்த அச்சுறுத்துதல் பலவிதங்களில் தெரிய வருகிறது. இதற்கு முன்னால் ‘அரைப் பணம் என்றாலும் அரசுப் பதவி’ என்று சொல்லிக் கொண்டு மேலாளரின் சப்பாத்துகள் நக்கும் பாவணைதான் அதிகம் உண்டு.

  அது மட்டுமல்ல. மேலாளரின் அச்சுறுத்துதலால் பணியிலிருந்து மாறுவதை மிகச் சுலபமாக கண்டு பிடித்து விடுவார்கள்.அதற்கு தான் மனித வள துறையில் Exit Interview என்று சொல்லப்படும் ஆய்வுகள் மேற்கொள்கிறார்கள். அப்படி ஒரு பணியாளர் தன்னால் பணிச் சுமை தாங்க முடியவில்லை என்று சொன்னால் உடனடியாக அதற்கு நிவாரணம் உண்டு.

  இந்த பொருளாதார மந்த நிலையால் attrition rate என்று சொல்லப்படும் வேலை விட்டு செல்வோர் விகுதியை அதிகம் கண்டு கொள்ள மாட்டார்கள். மற்றபடி மேலாளர் அச்சுறுத்தல் எல்லாம் இந்தியாவில் பெரிய மேட்டர் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். :)

  எனக்கு புரியாத புதிர் - புரூனோவின் பின்னூட்டம்தான். இவர் எதை அமெரிக்க நடைமுறை என்கிறார். எதை ப்ரிட்டிஷ் வகை என்கிறார்... அதில் எங்கு மேலாளரின் அச்சுறுத்துதல் வந்தது...

  //அதை அறியாமல் அவர்களது மேலாண்மை தான் காரணம் என்று நாம் இவ்வளவு நாள் கடைபிடித்த பல நல்ல விஷயங்களை மறந்தது / மறைத்தது தான் பிரச்சனை//

  எதை மறந்தோம்? எதை மறைத்தோம்? 90 களின் தொடக்கம் வரை நமக்கு அரசு நிறுவனங்கள்தான் வேலை அதிகம் உருவாக்கிக் கொடுத்தன. அரசு உத்தியோகங்களில் மேலாளர் அச்சுறுத்துதல் இல்லையா? அதை மறைத்து விட்டு இப்பொழுது என்ன புதிய முறையில் மேலாளருக்கு அதிகமாக அதிகாரங்கள் கொடுக்கப்படுகின்றன?

  ISO 9001 போன்ற governance முறைகளில் மனித வள மேம்பாட்டை பற்றி சொல்கிறாரா? அவை அமெரிக்காவிற்கு தனி, பிரிட்டனுக்கு தனி என்று இருக்கிறதா என்ன? ஒண்ணும் புரியல சாமீ.

  சரி விடுங்க. பெரியண்ணனை திட்டினா யாரும் எதுவும் கேள்வி கேக்க மாட்டாங்களே. பொத்தாம் பொதுவா ஏதாவது சொல்லி வைக்கனும்னு சொல்லிட்டிருப்பாராக்கும்.

  ReplyDelete
 5. அதை உலக பொருளாதார மந்தநிலை - நன்றி Sridhar Narayanan,


  இந்த இடுகைக்கு 'நெருக்கடியில் மனிதவளத்துறை' என்பதாகத்தான் தலைப்பிட நினைத்தேன்.

  Exit Interview சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா என்பது சந்தேகமே.
  அதற்காக பணியாளர்கள் மனிதவளத்துறை வரை கொண்டு செல்லப்படுவதில்லை. Resign செய்தவரின் கையொப்பம், அவர் பணியிலிருந்த துறை Admin ல் வாங்கப்பட்டு, EIF மட்டுமே மனிதவளத்துறைக்கு அனுப்பப்படுகிறது.

  Harassment எங்குதான் இல்லை என்று சாதாரணமாக விட்டுவிட முடியாது.

  >மரு.புருனோ< - நான் நினைக்கிறேன், அவர் இடுகையை முழுவதும் வாசிக்கவில்லை என்று :)

  ReplyDelete
 6. நன்றி அமர பாரதி,

  ---

  நன்றி வசந்த்,

  ---

  டாக்டர், உங்கள் கருத்தை விளக்கினால் நன்றாக இருக்கும்... முடிந்தால் ஒரு தனி இடுகையாக வெளியிடுங்கள்.

  ReplyDelete
 7. உலக பொருளாதார மந்தநிலை மற்ற நாடுகளை விடவும், இந்தியாவில் குறைவுதான். (நம் நாட்டில் இல்லை என்று நான் கூறவில்லை, அதனுடைய தாக்கம் மற்ற நாடுகளை விட நம் நாட்டில் குறைவு) அதற்கான காரணம், நாமே உற்பத்தியாளர்கள், நாமே தான் நுகர்வோர்கள். சில பாதிப்புகள் இருக்க காரணம், நாம் நம் தனித்தன்மையை இழந்ததுதான். ஆட்குறைப்பும், சம்பளகுறைப்பும், அமெரிக்கா, அமீரகம், மற்றும் நாம் இருக்கும் குவைதில் கண்கூடாக காணமுடிகின்றது.
  பணியாளர்களுக்கான பிரச்சனைகளாக நீங்கள் கூறிஉள்ளது நூறு சதம் உண்மை. அனால் ஒருவ(னை)ரை பணியில் அமர்த்தி தேவையான பயிற்சி, வசதிகள் அனைத்தும் செய்துகொடுத்த நிறுவனம் நெருக்கடியில்(அல்லது நெருக்கடி உள்ளமாதிரி) இருக்கும்போது சில சலுகைகள் கட்டுப்படுத்துவதில் தவறொன்றும் இல்லையே.
  This will test or show how far we are loyal to our employer.
  "both Employee & Employer has to follow Ethical & moral principles"
  this is my point of view.

  ReplyDelete
 8. தலைப்பைப் பார்த்து உலக ​​பொருளாதாரம் பற்றியதாக இருக்கும் என்று நினைத்தேன். அலுவலக மனிதவளம் பற்றி நல்ல விஷயங்கள் பகிர்ந்திருக்கிறீர்கள். ஸ்ரீதர் நாராயணன் கருத்துக்களுக்கு உடன்படுகிறேன். முக்கியமாக அரசு அலுவலக மேலாள இம்சைகளுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை. ராஸலீலா-வின் (சாரு நிவேதிதா) முதல் பகுதியில் இது பற்றி நன்றாக விளக்கியிருப்பார்.

  ReplyDelete
 9. //ஒருவ(னை)ரை பணியில் அமர்த்தி தேவையான பயிற்சி, வசதிகள் அனைத்தும் செய்துகொடுத்த நிறுவனம் நெருக்கடியில்(அல்லது நெருக்கடி உள்ளமாதிரி) இருக்கும்போது சில சலுகைகள் கட்டுப்படுத்துவதில் தவறொன்றும் இல்லையே.//

  பாலா, நெருக்கடியில் உள்ள நிறுவனம் ஆட்குறைப்பில் அல்லது சலுகைக் குறைப்பில் ஈடுபடுவதைத்தான் பணியாளர் பிரச்சனையாக முதல் பத்தியில் சொல்லியுள்ளேன்.
  ஆனால், இப்பொருளாதார நெருக்கடியால் பாதிப்படையாத நிறுவனங்களும் இவற்றால் பயனடைய நினைப்பது சரியில்லை என்பதே நான் சொல்வது.

  ReplyDelete
 10. மேலான்மை மற்றும் மனிதவளம் குறித்து இன்னும் நிறைய சொல்வதற்குண்டு, ஜெகா. வாய்பிருக்கும் போது எழுதலாம் என்றிருக்கிறேன்.

  ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.