Oct 30, 2010

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீடு செய்ய நான் தயார்

நான் இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறேன். இங்கு தொழில் செய்வதற்கு ஒரு நம்பிக்கையான துணையை தேடிக்கொண்டிருக்கிறேன். கைவசம் XXXXX பணம் இருக்கிறது. .................

இப்படியாகச் செல்கிறது அந்த மின்னஞ்சல். அது அப்படியே இங்கே...

Dear Friend.
Good day to you, I am so sorry for sending you unsolicited mail, I got your contact from a Gulf Business directory I saw in my agents office and decided to contact you directly for the sake of business,
 
My name is steven madurn from Gambia. I am now in United Arab Emirates searching for a reliable business partner, I have about 5.5 million dollars and would want to invest it here in Dubai, am only soliciting for your assistance to help me .If you are willing to invest in this business please give me your confidential,

contact phone number so that we can see and discuss in details.
Thank you once again for your interest.
Steven madurne

அது இன்று மதியம் என்னுடைய பெட்டியில் வந்து கிடந்தது. என்னால் முடிந்த வரையில் முதல் இரண்டு வரியை மட்டும் தமிழில் படுத்தியுள்ளேன். அதில் சொல்லப்பட்டுளளள 5.5 மில்லியன் என்பதற்கு எத்தனை பூஜ்யம் அதை எவ்வாறு இந்திய மதிப்பில் மாற்றுவது என்பது கூடத் தெரியாத என்னை எப்படி தேர்ந்தெடுத்தார்கள். நான் பிஸினஸ் செய்வதாகவோ, செய்யப்போவதாகவோ எந்த ஒரு பொதுத்தளத்திலும் சொன்னதில்லையே. அல்லது நான் செய்யப்போகும் பிஸினஸ்க்கு பணம் வேண்டும் என்று கூட யாரையும் கேட்டதில்லை. ஒருவரைத்தவிர, ஒரு வேளை அவர்... ச்சே ச்சே. வாய்ப்பில்லை. பிள்ளை பூச்சி அவர். ரொம்ம்ம்ப நல்லவர் கூட.  அது கிடக்கட்டும்...

இது போன்ற மின்னஞ்சல்களில் மட்டுமே மயங்கிவிடுவோம் என்று எப்படி நம்புகிறார்கள்? ஒருவேளை இதில் மயங்கி மடிபவர்களும் இருப்பார்களோ? ஒருவேளை மடலின் நடுவே மானே, தேனே, பொன்மானே இதெல்லாம் போட்டிருந்தால் கூட நானோ அல்லது அன்புக்கு அடிமையாகும் சக அன்பர்களோ மயங்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இத்துடன் டீ செலவுக்கு பணம் அனுப்பியுள்ளோம் என்றாவது இருந்திருக்கலாம். எதுவும் இல்லாமல் வெறுமனே.. ச்சே. என்ன பிஸினஸ் ப்ரப்போஸல் இது.

நானும் ஒருவருக்கு பிஸ்னஸ் ப்ரப்போஸ் செய்திருந்தேன். நாம் இருவரும் பாட்னர்ஸ். இருவருமே ஒர்கிங் பார்ட்னர்ஸ், (இருக்கும் இடத்திலிருந்தே) லாபத்தில் இருவருக்குமே பங்கிருக்கிறது. மட்டுமல்லாது, இதில் நீங்கள் பண முதலீடும் செய்ய விரும்பினால் அதற்கென தனியான லாபமும் கணக்கிடப்படும். ப்ராடக்ட் தயாரான உடனே, உங்களது அறிவு முதலீட்டிற்கான கூலி தரப்படும், சரக்கு விற்பனையாகும் போது பண முதலீட்டிற்கான லாபமும் கணக்கட்டு பகிரப்படும். இதுதான் நம்ம ப்ரப்போஸல். நீங்கள் தயார் என்றால் மேலே பேசலாம். 

அவர் இன்னும் தயாராகவில்லை, அவருக்கென வடிவமைத்த அந்த ப்ராடக்ட் அப்படியே நிற்கிறது.

Oct 28, 2010

ஜிகர்தண்டா - மீண்டு மீண்டும்

நீண்ட நாட்களுக்குப் பிறகு...


மீண்டும் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்து ஏறக்குறைய ஒரு வருடமாகிறது. ஒரு பத்தி எழுதியதும் பணிச்சுமை, அலுப்பு, எனக்கே வாசிக்க விருப்பமின்றி என பல காரணங்களால் அத்தோடு குப்பைக்கு சென்ற எழுத்துக்கள் ஏராளம். இதை சிசுக்கொலை அல்லது கருக்கலைப்பு என்றும் சொல்லிக் கொல்லலாம். இம்முறை சாண் பிள்ளையானாலும் என் பிள்ளை என்ற எண்ணத்திலேயே எழுத ஆரம்பிக்கிறேன். இது நான் வீட்டிற்கு சென்று உண்டுறங்கும் நேரம். இதற்கு மேலும் யாரும் வந்து என் அலுவலகத்தில் 'க்யூ' வரிசையில் நிற்க மாட்டார்கள். என் வீட்டிலிருந்து அழைப்பு வருவதற்குள் இதை எழுதி பதித்து விட வேண்டும் என்றே எழுதுகிறேன். அப்படியொன்றும் அவசரமாகச் சொல்வதற்கொன்றுமில்லை. இது ஒரு மீள் தொடக்கமாக இருக்கட்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன். இதில் ஏதும் விஷயத்தை தேடாதீர்கள், தொலைந்த நான் இங்கு மீண்டு வந்ததாக எண்ணம் கொள்ளலாம்.

ஒரு வருடமாக இங்கு ஏதும் எழுதவில்லையே தவிர வாசிக்க வேண்டிய பதிவுகளை வாசித்து வந்திருக்கிறேன். நேரமிருக்கும் போது தேவைப்படும் இடங்களில் மறுமொழியும் இட்டுவந்திருக்கிறேன்.

கடந்த வருடத்தை திரும்பி பார்க்கிறேன்-
குவைத்தில் இருந்து இந்தியா திரும்பியதும், நண்பர் நர்சிம் உதவியால் கிழக்கு பதிப்பகத்துடனான நட்புறவில் சிறிய வியாபாரம் செய்தது. சென்னையில் சில மாதங்கள் இருந்த போது ஒரு பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டது. அங்கு சற்றே கலவரச்சூழல் நிலவிய போது ஆளவிடுங்கப்பா என்று அடிபடாமல் திரும்பியது. மறுநாள் பதிவுச் செய்திகளில் எந்த வித சம்பாவிதமும் நடக்கவில்லை என்பதை வாசித்தறிந்து சற்றே ஏமாற்றம் அடைந்தது.

சற்றும் எதிர்பாராத நிகழ்வு நண்பர் நர்சிம் சர்ச்சையில் சிக்கிக்கொண்டது. எதிர்பார்த்தது போலவே அதிலிருந்து அவர் மீண்டு வந்தது. அந்த சர்ச்சையின் போதும் எதிர்பாராத திருப்பங்களும் சில பூனைகளும் வெளியே வந்தது. எப்போதும் போலவே லக்கி அதிஷா பெயர் கடிபட்டது.

அதைத் தொடர்ந்து இப்போதும் அடிக்கடி பிரிந்து சேரும் பதிவுலக பிதாமகன்கள் அவ்வப்போது அடித்துகொள்வது.

மதுரையில் நடந்த புத்தக கண்காட்சியில் ஞாநியுடனான சந்திப்பு மறக்க முடியாதது. மீண்டும் பதிவர்களை சந்தித்துக்கொண்டது. இடுகை, பின்னூட்டம் என்ற சொற்களை ஏற்றுக்கொள்ளாத ஞாநி, பதிவு, மறுமொழி என்பதே சரி என்பதை சரியாகச் சொல்லி விளக்கியது. மீண்டும் சீனா ஐயா வீட்டில் பதிவர்களை சந்தித்தது.

இடையே நடந்த ஆல் இன் ஆல் ராஜன் திருமண நிகழ்வு. (வாழ்த்துகள் ராஜன், நீங்கள் இருவரும் எல்லா வளமும், நம்பிக்கையும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நன்றி திருமதி. ராஜன், அவரை 'மனம்' மாற்றியதற்காக)

-------------

சமூக ஆர்வலர் அருந்ததி ராய் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசியதற்காக தேச பிரிவினைவாத சட்டத்தில் கைது செய்யப்படலாம் என்ற செய்தியை தொடர்ந்து கஷ்மீரில் இருந்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 'இந்த நாட்டை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது' என்கிறார். ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும் அவருடைய குரல் அரசியல்வாதிகளுக்கு தொண்டையை அடைக்கிறது. அ.மார்க்ஸ் எழுதியிருக்கும் காஷ்மீர்- என்ன நடக்குது அங்கே? என்ற புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதை விரிவாக பிறகு அலசுவோம்.

அடுத்த மாதம் மதுரை அழகர் மகனுக்கு திருமணமாம், இப்போதே பெரிய போஸ்டர்கள் சுவர்களை ஆக்கிரமிக்கத்தொடங்கிவிட்டன. அவர் ஹனிமூன் போகும் வரை மதுரை விழி பிதுங்கி திணரப் போகிறது. நகரெங்கும் வளரும் பெரிய பெயர் தாங்கிகளைத் தவிர ஒன்றும் வளர்ந்துவிடவில்லை. சூரியன் ஆட்சி செய்தும் மதுரைக்கு விடியல் இல்லை.

ஐந்து வருடங்களுக்குப்பிறகு மழையில் நனைகிறேன். போகும் இடமெல்லாம் கிடைக்கும் தண்ணீர் குடிக்கிறேன். நேரம் தவறிவிட்டால் கிடைப்பதை சாப்பாடாக்கிக் கொள்கிறேன். இப்போதெல்லாம் என் வயிற்றில் கடலை மிட்டாயும், கமர்கட்டுமே அதிக இடங்களை நிரப்பிக் கொள்கிறது. இப்போதும் 21;15 இரவு உணவு பற்றிய நினைப்பின்றி எழுதிக்கொக்..கொ.. கொண்டிருக்க முடியாமல் இத்தோடு பப்ளிஷ் பட்டனை அழுத்திவிடுகிறேன்.