Nov 15, 2010

பிணந்தின்னும் சாத்திரங்கள்

மதுரை இப்போது ஜொலித்துக் கொண்டிருக்கிறது. பின்னே, மத்திய அமைச்சரின் மகனுக்கல்லவா திருமணம்?

ஒரு சராசரி பணக்காரனின் திருமணம் என்றாலே அந்தப் பகுதி கொஞ்சம் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகத்தான் செய்யும். (எல்லாம் ஒரு விளம்பரம்தான்!) மதுரை இளவரசருக்குக் கல்யாணம் என்றால் கேட்கவா வேண்டும்?

தயாநிதியை மதுரை இளவரசர் எனச் சொல்வதற்கு எனக்குக் கொஞ்சமும் கூச்சமில்லை. ஏனெனில் மதுரை மன்னருக்கு மகன் என்றால்... நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர் இளவரசர்தான்.

மதுரையில் (நான் பார்த்தவரை)ரயில்வே பாலம் மற்றும் மேயர் முத்து பாலங்கள் முழுவதும் சீரியல் லைட் அலங்காரம். மேலும், யானைக்கல் பாலம், விக்டர் ஆல்பர்ட் பாலம் முழுவதும் சீரியல் லைட்டுகள், சூரிய வடிவ டியூப் லைட்டுகள், கொடிகள், தோரணங்கள்.

என் நண்பன் சொன்னான்: வேற வீட்டுக்குக் கல்யாணத்துக்கு இவர்கள் வருவதாக இருந்தாலே அலங்கார வளைவுகள், தோரணங்கள், பேனர்கள் வானையும் நம் மூச்சையும் முட்டும்... இவர்களின் வீட்டுத் திருமணம் என்றால் என்னென்ன நடக்கப் போகுதோ?

ஆனால் அப்படியொன்றும் பெரிய அளவில் பேனர், தோரணங்கள் இல்லைதான் என முதலில் ஆறுதலடைந்தேன். ஆனால் இப்போது அப்படியிருந்தால் கூடப் பரவாயில்லை எனத் தோன்றுகிறது.

மதுரை உள்ளிட்ட தமிழக நகரங்கள் முழுவதும் மின்பற்றாக்குறையால் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. ஆனால் 13ஆம் தேதியிலிருந்து மதுரை நகர் இரவு முழுவதும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. நான்கு பாலங்கள் முழுவதும் டியூப் லைட்டுகள், சீரியல்கள் அத்துடன் தமுக்கம் மைதானம் போகும் வழியெங்கும் ஃபோகஸ் லைட்டுகள் எரிக்கப்படுவதற்காக நாம் பகலெல்லாம் புழுங்கிச் சாகிறோம். பிறகு இந்தியாவில் இரண்டாவது பணக்கார அமைச்சரின் பணத்தை செலவளிப்பதற்கு வேறு நியாயமான காரணம் வேண்டாமோ?
சூரியனுக்கு வெளிச்சம் காட்டும் பல்பு

பாதை மறிக்கும் சூரியக்கூட்டம்
நோ கமண்ட்ஸ் (இடம் மதுரை கல்லூரி)

ஆனால் நமது கேள்வியெல்லாம் ஒன்றுதான்... சூரிய குடும்பம் என்று தமிழகமே உங்களைப் போற்றுகிறது. உங்கள் பேனர்கள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன. சேகுவெரா, ஜார்ஜ் புஷ், சத்ரபதி சிவாஜி போன்ற உலக ஆளுமைகளின் பிம்பங்கள் எல்லாம் உங்கள் உடல்களில் பிரதி செய்யப்படுகின்றன... ரொம்ப மகிழ்ச்சி...

உங்கள் சூரிய குடும்பத்திலிருந்து மின்சாரம் எடுத்து இரண்டு மணி நேரம் மின்வெட்டை நிறுத்தினால் உங்களையும், திருமணம் செய்யப் போகும் இளவரசரையும் நாடு போற்றும். உங்கள் கட்சியினர் மட்டுமல்ல, கட்சி சாராத பொது மக்களும் போற்றுவார்கள்.

மதுரை மக்கள் மணமக்களைப் போற்றுவதற்கு மேலும் சில ஆலோசனைகள்

1. உடனடியாக மதுரை முழுவதும் சேதமடைந்திருக்கும் சாலைகளை புதிதாகப் போட்டால் அதற்குக் காரணமான மணமக்களை மதுரை மக்கள் மனம் நிறைவாகப் பாராட்டுவார்கள். வாழ்த்துவார்கள்.
2. கல்யாண விளக்குகள் எரியும் நாளிலிருந்து ஒரு மாதத்துக்கு மதுரை மக்களுக்கு மின்வெட்டு இல்லை.
3. திருமணத்திற்கு முன்னும் பின்னும் மொத்தம் மூன்று நாட்கள் மதுரை நகருக்குள் பேருந்தில் எங்கு சென்றாலும் இலவசம். (ஒரு நாளைக்காவது ஷேர் ஆட்டோ தொல்லையிலிருந்து மக்களுக்கு நிம்மதி கிடைக்கும்.)
4. யாரோ எம்.எல்.ஏ ஆவதற்காக ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தவர், மகன் திருமணத்துக்கு ஒரு வீட்டுக்கு ஆயிரம் ரூபாயாவது தருவார் என எதிர்பார்க்கலாம்.
5. திருமணத்தையொட்டி பெட்ரோல் விலையை சட்டென்று பாதியாகக் குறைக்கலாம்.
6. திருமணத்தன்று வாழ்த்துச் செய்தி அதிகமாகப் பரிமாறிக் கொள்ளப்படும் என்பதால் அன்று அனைத்து மொபைல் சர்வீஸும் எஸ்.எம்.எஸ் இலவசமாக்கப்படும்.
7. அன்று பிறக்கும் குழந்தைகளில் தயாநிதி பெயர் சூட்டுவோருக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்படும்.
8. அன்று மதுரை நகர் முழுவதும் மையங்கள் நிறுவி மக்களுக்கு விருந்தளிக்கப்படும்.

சட்டமன்ற தேர்தல் வெகு அண்மையில் இருப்பதால் அதை வெற்றிகரமாக எதிர்கொள்ள மேற்கண்ட ஆலோசனைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜோக்ஸ் அபார்ட், உண்மையில் தற்கால அமைச்சர் மகனுடைய திருமணம் என்கிற ஆடம்பர விதிகளின்படி திருமணம் நடந்தது எனில் ஜெயலலிதா ஆட்சியில் வளர்ப்பு மகன் திருமணம் ஏற்படுத்திய விளைவையே தி.மு.க.வும் சந்திக்கும். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாதபோது விதி எல்லோருக்கும் ஒன்றுதான், அது நியூட்டன் ஆனாலும் சரியே!

மறுபுறம், ஜெயலலிதாவை விமர்சித்த அளவுக்கு திமுகவை விமர்சிக்கும் நெஞ்சுரமோ துணிச்சலோ அஞ்சா நெஞ்சமோ தமிழகத்தின் பிழைப்புவாத ஊடகங்களுக்கு இல்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

`பேயாட்சி செய்யும் நாட்டில் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று சொன்ன பாரதியின் பாடல் இன்று எவ்வளவு கனகச்சிதமாய்ப் பொருந்துகிறது. பிறகு, எவ்வளவு அராஜகம் நடந்தாலும் வேறு வழியேயில்லாமல் முதலமைச்சரும், காவல்துறையும், அமைச்சர்களும், வணிக நிறுவனங்களும், பொதுமக்களும் இந்தத் திருமணத்தை வாழ்த்தித்தானே ஆக வேண்டியிருக்கிறது.

(சம்பந்தமில்லாத ஒரு குறிப்பு: நேற்று சி.டி.யில் மனோகரா திரைப்படம் பார்த்தேன். கதை, வசனம்: மு.கருணாநிதி)

Nov 2, 2010

ஜனநாயகம் - சாபமான வரம்


தமிழ் நாட்டில் தேர்தல் அடுப்பு பற்றவைத்தாகிவிட்டது. இனி சூடுபிடித்து கொழுந்துவிட்டு எரியும்.  கருப்புகள் வெளியே வந்து ஓரளவுக்காவது பொதுசன மையத்தில் பணம் புரளும். அண்மையில் நடந்து முடிந்த ஆர்பாட்டங்களில் தலைக்கு 500+பிரியாணி விநியோகம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எனில் முத்திரைக்கு இன்னும் அதிகமாகவே பேரம் பேசலாம், பேசுவார்கள். போலி முக்த்திரையுடன் நம் காலில் விழுந்து, காசு கொடுத்து ஓட்டு பெற்றதும், வாய்கரிசி போட்டு செத்த பாம்பாக்கிவிடும் நிலை இங்கே மிகச்சாதாரணம். சாலையோரத்தில் அல்லது 'நடு' சென்டரில் நிற்கவைக்கப்பட்டிருக்கும் இலவச பறவை கழிப்பிடத்திற்கு காட்டப்படும் கரிசனம் கூட மனித மலக்கழிப்பிடத்தின் மீது இருப்பதில்லை. ஆண்டுக்கு ஒரு முறையேனும் பறவை கழிப்பிடத்தை சுத்தப்படுத்தி சுண்ணாம்பு தடவி, அதன் பெயரில் ஒரு கலவரத்தையும் நடத்துபவர்களும் சுயகழிவிறக்க முட்டுச்சந்தையே நாடும் அவலம் இங்கு மட்டுமே காணக்கிடைக்கும்.

கடந்த மாதத்தில் இரண்டு தினப்பத்திரிக்கை புண்ணியத்தில் இரண்டு பறவை கழிப்பிடங்களுக்கு மீள்வாழ்வு கிடைத்துள்ளது. அதற்கு சிறகில்லா காக்கைகளும் நன்றி செலுத்திதை தினமணி செய்திக்கு கிடைத்த வெற்றி என்று புகைப்படத்துடன் ஆதாரம் செய்துள்ளனர். சிம்மக்கல் பகுதியில் நடுரோட்டில் இருக்கும் அந்த சிலையை சற்றே இடம் மாற்றிவைக்கவும் அனுமதிக்காமல் போராட்டம் நடத்தி வெற்றிபெற்றது இந்தியாவை ஆளும் கட்சியினரே. கட்சத்தீவை இன்னும் மீட்கக்காணோம். காவேரி தண்ணீரை திறந்துவிட வக்கில்லை. சிலையை மீட்டுவிட்டதாய் போட்டோவிற்கு பல்லிளிக்கிறார்கள். அதைவிடக்கொடுமை, மதுரையின் சாலையோர வியாபாரிகளை தகர்த்து கொண்டுபோய் தல்லாகுளம் பகுதியில் ஒருங்கிணைந்த விற்பனைக்கூடத்தில் அடைத்திருக்கிறார்கள், தீபாவளி சிறப்பு விற்பனையாம். அங்கு ஏற்கனவே இருந்த சிலைக்கு அருகில் கடை விரித்தையும் கண்டித்து தினமணி செய்திவெளியிட அதற்கும் உடனடி நடவடிக்கை எடுத்து அந்த கடைகளை அப்புறப்படுத்திவிட்டது மாநகராட்சி. தினமணி செய்திக்கு துரித நடவடிக்கையாம்.

மதுரையில் தொழில் தொடங்குவதாய் இருந்த பன்னாட்டு கணிணி நிறுவனத்தினர் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை பார்வையிடச் செல்ல ரோட்டில் பல சாகசங்களை நிகழ்த்த வேண்டிய நிலை. 'ஐயோ போதும் ஆளை விடுங்க' என்று மேற்கு பக்கம் சென்றுவிட்டனராம். உள்கட்டுமானம் இல்லாத நாட்டில் ஒரு குப்பனும் குப்பை கொட்ட வரமாட்டான் என்பது சுப்பனுக்கு தெரிந்திருந்தும், சுற்றுவட்டாரத்திற்கு தெரியவில்லை. டிவிஎஸ் நகர் பளபளத்தால், மதுரை முழுக்க தங்கத்தால் தார் போட்டிருக்கும் என்ற நினைப்பாயிருக்கும்.

வெளிநாட்டு நிறுவனங்கள் வருவதற்கு உள்ளே வரச்சாலையில்லை சரி, குழிகளுக்கிடையில் அறிதாய் இருக்கும் குவிகளினூடே ஊர்ந்து வந்து கடை வைத்திருக்கும் பண முதலைகளையும் ஓடச்செய்யும் வழியை தம்பிகள் இனிதே செய்துவருகிறார்கள். முன்பு நகைக்கடையை எதிர்த்தது போல இப்போதும் ஒரு நகை மற்றும் ஜவுளிக் கடைக்கு தரும் நெருக்கடியில் அவர்கள் மதுரையை விட்டு ஓடும் எண்ணத்தில் இருப்பதாகப் பேச்சு.

இணையதளங்களில் பதிவு செய்யும் போது கேட்கப்படுவதால் என்னுடைய பிறந்த நாள் இன்னும் நினைவிருக்கிறது, ஆனால் எனக்கு எந்தவிதத்திலும் சொந்த/பந்தமில்லாத ஒருவரின் பிறந்தாள் என்றும் என் நினைவிலிருந்து மறப்பதில்லை. இது எனக்கு மட்டுமல்ல, மதுரை வாழ் மரத்தமிழன் ஒருவனுக்கும் மறக்க வாய்ப்பே இல்லை. மறந்துவிடாதீர்கள் மறந்தும் இருந்து விடாதீர்கள், மறந்துவிட்டால் இருக்க மாட்டீர்கள். என்று சொல்லாமல் சொல்லி எங்களை இம்சிக்கிறார்கள். ஜனவரிக்கு ஆறு மாதம் முன்பே சுவரெழுத்துகள் ஆரம்பமாகிவிட்டது. தன் தாய் தந்தை பிறந்தநாளையும் இப்படி செலவுசெய்து விளம்பரப்படுத்த மாட்டார்கள். உடன்பிறந்த அண்ணன் கஞ்சிக்கு வழியில்லாமல் இருப்பான், இவன் ஊருக்கு பிரியாணி பொட்டலம் கொடுத்துக்கொண்டிருப்பான். அதுசரி... இதெல்லாம் நேரடி முதலீடு. சொந்த அண்ணனுக்கு சோறு போட்டால், சொத்தையா எழுதி வைக்கப்போறான்.

இவை நம் நாட்டின் சாபக்கேடு. சாபத்தை சகித்தே வாழ வேண்டும். இத்துர்பாக்கிய நிலை நம்மீது திணிக்கப்பட்டிருப்பதை அறிந்தோ அறியாமலோ நாமும் ஏற்றுக்கொண்டுவிட்டோம். சகித்து வாழ்கிறோம், சந்தோஷமாக!

Oct 30, 2010

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீடு செய்ய நான் தயார்

நான் இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறேன். இங்கு தொழில் செய்வதற்கு ஒரு நம்பிக்கையான துணையை தேடிக்கொண்டிருக்கிறேன். கைவசம் XXXXX பணம் இருக்கிறது. .................

இப்படியாகச் செல்கிறது அந்த மின்னஞ்சல். அது அப்படியே இங்கே...

Dear Friend.
Good day to you, I am so sorry for sending you unsolicited mail, I got your contact from a Gulf Business directory I saw in my agents office and decided to contact you directly for the sake of business,
 
My name is steven madurn from Gambia. I am now in United Arab Emirates searching for a reliable business partner, I have about 5.5 million dollars and would want to invest it here in Dubai, am only soliciting for your assistance to help me .If you are willing to invest in this business please give me your confidential,

contact phone number so that we can see and discuss in details.
Thank you once again for your interest.
Steven madurne

அது இன்று மதியம் என்னுடைய பெட்டியில் வந்து கிடந்தது. என்னால் முடிந்த வரையில் முதல் இரண்டு வரியை மட்டும் தமிழில் படுத்தியுள்ளேன். அதில் சொல்லப்பட்டுளளள 5.5 மில்லியன் என்பதற்கு எத்தனை பூஜ்யம் அதை எவ்வாறு இந்திய மதிப்பில் மாற்றுவது என்பது கூடத் தெரியாத என்னை எப்படி தேர்ந்தெடுத்தார்கள். நான் பிஸினஸ் செய்வதாகவோ, செய்யப்போவதாகவோ எந்த ஒரு பொதுத்தளத்திலும் சொன்னதில்லையே. அல்லது நான் செய்யப்போகும் பிஸினஸ்க்கு பணம் வேண்டும் என்று கூட யாரையும் கேட்டதில்லை. ஒருவரைத்தவிர, ஒரு வேளை அவர்... ச்சே ச்சே. வாய்ப்பில்லை. பிள்ளை பூச்சி அவர். ரொம்ம்ம்ப நல்லவர் கூட.  அது கிடக்கட்டும்...

இது போன்ற மின்னஞ்சல்களில் மட்டுமே மயங்கிவிடுவோம் என்று எப்படி நம்புகிறார்கள்? ஒருவேளை இதில் மயங்கி மடிபவர்களும் இருப்பார்களோ? ஒருவேளை மடலின் நடுவே மானே, தேனே, பொன்மானே இதெல்லாம் போட்டிருந்தால் கூட நானோ அல்லது அன்புக்கு அடிமையாகும் சக அன்பர்களோ மயங்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இத்துடன் டீ செலவுக்கு பணம் அனுப்பியுள்ளோம் என்றாவது இருந்திருக்கலாம். எதுவும் இல்லாமல் வெறுமனே.. ச்சே. என்ன பிஸினஸ் ப்ரப்போஸல் இது.

நானும் ஒருவருக்கு பிஸ்னஸ் ப்ரப்போஸ் செய்திருந்தேன். நாம் இருவரும் பாட்னர்ஸ். இருவருமே ஒர்கிங் பார்ட்னர்ஸ், (இருக்கும் இடத்திலிருந்தே) லாபத்தில் இருவருக்குமே பங்கிருக்கிறது. மட்டுமல்லாது, இதில் நீங்கள் பண முதலீடும் செய்ய விரும்பினால் அதற்கென தனியான லாபமும் கணக்கிடப்படும். ப்ராடக்ட் தயாரான உடனே, உங்களது அறிவு முதலீட்டிற்கான கூலி தரப்படும், சரக்கு விற்பனையாகும் போது பண முதலீட்டிற்கான லாபமும் கணக்கட்டு பகிரப்படும். இதுதான் நம்ம ப்ரப்போஸல். நீங்கள் தயார் என்றால் மேலே பேசலாம். 

அவர் இன்னும் தயாராகவில்லை, அவருக்கென வடிவமைத்த அந்த ப்ராடக்ட் அப்படியே நிற்கிறது.

Oct 28, 2010

ஜிகர்தண்டா - மீண்டு மீண்டும்

நீண்ட நாட்களுக்குப் பிறகு...


மீண்டும் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்து ஏறக்குறைய ஒரு வருடமாகிறது. ஒரு பத்தி எழுதியதும் பணிச்சுமை, அலுப்பு, எனக்கே வாசிக்க விருப்பமின்றி என பல காரணங்களால் அத்தோடு குப்பைக்கு சென்ற எழுத்துக்கள் ஏராளம். இதை சிசுக்கொலை அல்லது கருக்கலைப்பு என்றும் சொல்லிக் கொல்லலாம். இம்முறை சாண் பிள்ளையானாலும் என் பிள்ளை என்ற எண்ணத்திலேயே எழுத ஆரம்பிக்கிறேன். இது நான் வீட்டிற்கு சென்று உண்டுறங்கும் நேரம். இதற்கு மேலும் யாரும் வந்து என் அலுவலகத்தில் 'க்யூ' வரிசையில் நிற்க மாட்டார்கள். என் வீட்டிலிருந்து அழைப்பு வருவதற்குள் இதை எழுதி பதித்து விட வேண்டும் என்றே எழுதுகிறேன். அப்படியொன்றும் அவசரமாகச் சொல்வதற்கொன்றுமில்லை. இது ஒரு மீள் தொடக்கமாக இருக்கட்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன். இதில் ஏதும் விஷயத்தை தேடாதீர்கள், தொலைந்த நான் இங்கு மீண்டு வந்ததாக எண்ணம் கொள்ளலாம்.

ஒரு வருடமாக இங்கு ஏதும் எழுதவில்லையே தவிர வாசிக்க வேண்டிய பதிவுகளை வாசித்து வந்திருக்கிறேன். நேரமிருக்கும் போது தேவைப்படும் இடங்களில் மறுமொழியும் இட்டுவந்திருக்கிறேன்.

கடந்த வருடத்தை திரும்பி பார்க்கிறேன்-
குவைத்தில் இருந்து இந்தியா திரும்பியதும், நண்பர் நர்சிம் உதவியால் கிழக்கு பதிப்பகத்துடனான நட்புறவில் சிறிய வியாபாரம் செய்தது. சென்னையில் சில மாதங்கள் இருந்த போது ஒரு பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டது. அங்கு சற்றே கலவரச்சூழல் நிலவிய போது ஆளவிடுங்கப்பா என்று அடிபடாமல் திரும்பியது. மறுநாள் பதிவுச் செய்திகளில் எந்த வித சம்பாவிதமும் நடக்கவில்லை என்பதை வாசித்தறிந்து சற்றே ஏமாற்றம் அடைந்தது.

சற்றும் எதிர்பாராத நிகழ்வு நண்பர் நர்சிம் சர்ச்சையில் சிக்கிக்கொண்டது. எதிர்பார்த்தது போலவே அதிலிருந்து அவர் மீண்டு வந்தது. அந்த சர்ச்சையின் போதும் எதிர்பாராத திருப்பங்களும் சில பூனைகளும் வெளியே வந்தது. எப்போதும் போலவே லக்கி அதிஷா பெயர் கடிபட்டது.

அதைத் தொடர்ந்து இப்போதும் அடிக்கடி பிரிந்து சேரும் பதிவுலக பிதாமகன்கள் அவ்வப்போது அடித்துகொள்வது.

மதுரையில் நடந்த புத்தக கண்காட்சியில் ஞாநியுடனான சந்திப்பு மறக்க முடியாதது. மீண்டும் பதிவர்களை சந்தித்துக்கொண்டது. இடுகை, பின்னூட்டம் என்ற சொற்களை ஏற்றுக்கொள்ளாத ஞாநி, பதிவு, மறுமொழி என்பதே சரி என்பதை சரியாகச் சொல்லி விளக்கியது. மீண்டும் சீனா ஐயா வீட்டில் பதிவர்களை சந்தித்தது.

இடையே நடந்த ஆல் இன் ஆல் ராஜன் திருமண நிகழ்வு. (வாழ்த்துகள் ராஜன், நீங்கள் இருவரும் எல்லா வளமும், நம்பிக்கையும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நன்றி திருமதி. ராஜன், அவரை 'மனம்' மாற்றியதற்காக)

-------------

சமூக ஆர்வலர் அருந்ததி ராய் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசியதற்காக தேச பிரிவினைவாத சட்டத்தில் கைது செய்யப்படலாம் என்ற செய்தியை தொடர்ந்து கஷ்மீரில் இருந்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 'இந்த நாட்டை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது' என்கிறார். ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும் அவருடைய குரல் அரசியல்வாதிகளுக்கு தொண்டையை அடைக்கிறது. அ.மார்க்ஸ் எழுதியிருக்கும் காஷ்மீர்- என்ன நடக்குது அங்கே? என்ற புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதை விரிவாக பிறகு அலசுவோம்.

அடுத்த மாதம் மதுரை அழகர் மகனுக்கு திருமணமாம், இப்போதே பெரிய போஸ்டர்கள் சுவர்களை ஆக்கிரமிக்கத்தொடங்கிவிட்டன. அவர் ஹனிமூன் போகும் வரை மதுரை விழி பிதுங்கி திணரப் போகிறது. நகரெங்கும் வளரும் பெரிய பெயர் தாங்கிகளைத் தவிர ஒன்றும் வளர்ந்துவிடவில்லை. சூரியன் ஆட்சி செய்தும் மதுரைக்கு விடியல் இல்லை.

ஐந்து வருடங்களுக்குப்பிறகு மழையில் நனைகிறேன். போகும் இடமெல்லாம் கிடைக்கும் தண்ணீர் குடிக்கிறேன். நேரம் தவறிவிட்டால் கிடைப்பதை சாப்பாடாக்கிக் கொள்கிறேன். இப்போதெல்லாம் என் வயிற்றில் கடலை மிட்டாயும், கமர்கட்டுமே அதிக இடங்களை நிரப்பிக் கொள்கிறது. இப்போதும் 21;15 இரவு உணவு பற்றிய நினைப்பின்றி எழுதிக்கொக்..கொ.. கொண்டிருக்க முடியாமல் இத்தோடு பப்ளிஷ் பட்டனை அழுத்திவிடுகிறேன்.

Aug 18, 2010

உமாசங்கருக்காக - ஒரு விண்ணப்பம்

தமிழக அரசே இது நியாயமா?

  • சுடுகாட்டு ஊழலை வெளிக்கொணர்ந்த...
  • திருவாரூர் மாவட்டத்தை திறம்பட நிர்வகித்த...
  • கேபிள் டிவிசுரண்டலை எதிர்த்த...
நேர்மையான அதிகாரி உமாசங்கர் I.A.S ஐ, சஸ்பெண்ட் செய்தது நியாயமா?

May 28, 2010

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு - புதிய வலைப்பூ

நண்பர்களுக்கு,

மிக நீண்ட இடைவேளைக்குப்பிறகு நான் இங்கே மீண்டும். (வெல்கம் பேக்கு ;) அதுவும் என் புதிய வலைப்பக்கத்தை அறிமுகம் செய்யவே.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக புதிதாய் ஒரு வலைப்பக்கத்தை திறந்துள்ளேன். பயனர்களுக்கு பயன்பெறத்தாருங்கள். உங்களிடம் இருக்கும் வேலைவாய்ப்புகளையும் அனுப்பித்தாருங்கள்.

அங்கு புதிய பதிவு...

http://nafjobs.blogspot.com/2010/05/urgent-recruitments-netsol-ibm.html

நன்றி

Feb 16, 2010

விருதும் விமர்சனமும்

பதிவுலகில் பெரிய அளவில் பேசப்படும் தமிழ்மணம் இணையத்தின் சிறந்த படைப்புகளுக்கான விருதுகள் பட்டியல் கண்டேன்.வழக்கம் போல இங்கும் அரசியல்தானா என்று நொந்து கொண்டேன்.ஒரு படைப்பின் தரத்துக்கு அதன் பொருளடக்கத்திற்கு விருதா அல்லது பெரும்பான்மையாக ஒரு படைப்புக்கு வாக்களித்தால் விருதா ஒன்றும் புரியவில்லை.(தமிழக அரசின் சிறந்த திரைப்பட வசனகர்த்தா விருது பெற்ற கலைஞர் நினைவுதான் வருகிறது)தலித் மக்களின் பிரச்சனைகள்,மனித உரிமைகள் என்று ஒரு தலைப்பு அதில் விருது பெற்ற ஒரு பதிவு "ஷாருக் கானுக்கு ஒரு நியாயம்,தமிழனுக்கு ஒரு நியாயமா" .அமெரிக்கா சென்ற ஷாருக் கான் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைகுள்ளக்கபட்டார்.அதற்காக குரல் கொடுத்த ஊடகங்கள் ஈழ தமிழ் ஆதரவாளரான ஒரு மனித உரிமை போராளி இந்தியா வர விசா மறுக்கப்பட்டதற்கு குரல் கொடுக்கவில்லை என்று எழுதி இருந்தார்.விருது கொடுக்கும் அளவுக்கு இந்த பதிவில் என்ன கருத்து இருக்கிறது என்று தெரியவில்லை.ஷாருக் கான் அமெரிக்க விசா பெற்று முறையாக அமெரிக்கா சென்று இருக்கிறார்.கான் என்ற அவரது பூர்விக முஸ்லிம் பெயரை பார்த்து முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக அவர் தனிமைபடுதபட்டு விசாரிக்கபடுகிறார்.ஷாருக் கான் போன்றவர்கள் தாங்கள் முஸ்லிம் என்று சொல்லிகொள்வதையே விரும்பாதவர்கள்.இந்தியாவில் பிரபலமான ஒரு நடிகனாக இருந்தாலும் அவன் முஸ்லிம் பெயர் வைத்திருந்தால் என்ன கதி என்று அவர் தெரிந்திருப்பார்.இருந்தாலும் அமெரிக்காவின் பாசிச நடவடிக்கைகளை எதிர்த்து அவர்  குரல் கொடுக்க போவதில்லை.இந்தியாவில் தீவிரவாதிகள் என்று தினந்தோறும் கேவலபடுதபடுகிறதே முஸ்லிம் சமூகம் அது பற்றியும் அவர் வருத்தப்பட போவதில்லை.ஆனால் இந்தியாவின் புகழ் பெற்ற ஒரு நடிகன் கேவலபடுதப்பட்டான் என்பதால் ஊடகங்கள் குரல் கொடுக்கின்றனவே தவிர அவன் முஸ்லிம் என்பதால் சந்தேகிக்கப்பட்டான் என்பதை எவரும் கண்டு கொள்ளவில்லை.இது ஒரு முஸ்லிம் எவ்வளவு பெரிய புடுங்கியா (நடிகனா) இருந்தாலும் அவன் மீதும் தீவிரவாத முத்திரை குத்தப்படும் என்பதற்கு எடுத்துகாட்டு.ஒரு சமூகம் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு அதன் ஒவ்வொரு உறுப்பினரும் சந்தேக கண் கொண்டு பார்க்கபடுவது எவ்வளவு வேதனை தரும் விஷயம்.மனித உரிமை ஆர்வலர் இந்தியா வர மறுக்கப்பட்டதற்கு நாமும் கண்டனம் தெரிவிக்கிறோம்.ஆனால் எதை கொண்டு போய் எந்த விசயத்தோடு ஒப்பிடுகிறார் பொன்னு சாமீ.இதற்க்கு ஒரு விருது.

இரண்டாவதாக "இஸ்லாமியர்களும் தீவிரவாதமும்" என்ற ஒரு கட்டுரை அதற்க்கு ஒரு விருது.அதுவும் ஆன்மிகம் என்ற தலைப்பில்.தீவிரவாதம் பற்றி ஆன்மிகம் என்ற தலைப்பில்தான் தமிழ்மணத்தார் பேசுவார்கள் போலிருக்கிறது."இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற சொல்லாடல் இஸ்லாமியர்களுக்கு கசப்பு தருவது எந்தளவு உண்மையோ அதே அளவு உண்மையே தீவிரவாத விகிதாச்சாரத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக இருப்பதும்".என்று எடுத்தவுடனே சரண்டர் ஆகி ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் ஜெய்ஹிந்துபுரத்தார்.எந்த தீவிரவாத விகிதாசாரத்தில் இஸ்லாமியர்கள் (முதலில் இஸ்லாமியர் என்ற சொல்லாடலே தவறு,முஸ்லிம்கள் என்பதுதான் சரி)முதலில் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தையும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.நாட்டில் சங்கபரிவார் அமைப்புகள் நடத்திய மத கலவரங்களில் இதுவரை  ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லபட்டிருக்கிரர்கள்.ஆனால் இது வரை  பத்து சதவிகிதம் பேர் கூட தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் இறந்திருக்கமாட்டர்கள்.அதற்காக தங்களை கொலை செய்து தங்கள் பெண்களை கற்பழித்த பொருளாதாரங்களை நாசம் செய்ததற்கு பதிலடியாக முஸ்லிம்கள்தான் குண்டு வெடிப்பு நடத்தி கொலை செய்கிறார்கள் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவிர்கள் என்று நான் கூறவில்லை. மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் பிரக்யா சிங் தாக்கூர்,ராணுவ மேஜர் ஸ்ரீகாந்த் புரோஹிட் ஆகியோரை கைது செய்த காவல் துறை அதிகாரி மறைந்த ஷஹித் ஹேமந்த் கர்கரே கூறுகிறார்.மாலேகான் சிமி அலுவலக குண்டு வெடிப்பு,மாலேகான் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு,ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு,அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு,பாகிஸ்தான் இந்தியாவின் நல்லிணக்கத்திற்காக விடப்பட்ட சம்ஜவ்தா ரயில் குண்டுவெடிப்பு,கோவா குண்டு வெடிப்பு என அனைத்திற்கும் மூல காரணம்  R.S.S  உள் அமைப்பான அபினவ் பாரத் என்ற அமைப்புதான் என்று கண்டுபிடித்த குற்றத்திற்காக சுட்டு கொல்லபட்டாரே(மேலும் தகவலுக்கு WHO KILLED KARKARE என்ற புத்தகத்தை படிக்கவும்) ஹேமந்த் கர்கரே அவர் உயிரோடிருந்தால் உங்களை சுட்டிருப்பார் விகிதாசாரத்தை தவறாக சொல்லியதற்காக. பொடா எனும் கொடிய சட்டத்தில்  சிறையில் அடைக்கப்பட்ட  கைதிகளில் 90 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள் அதில் குற்றம் நிருபிக்கபடதவர்கள் 89 சதவிகிதம் பேர் என்ற விவரத்தையும் இந்திய சிறைகளிலே தனது மக்கள் தொகையை விட அதிகமாக 30 சதவிகிதம் முஸ்லிம்கள் சிறையில் வாடி கொண்டிருப்பவர்கள் என்ற விவரமும் உங்களுக்கு தெரியுமா.தொடர்ந்து தீவிரவாதிகள் என்று ஊடகங்களும் காவல் துறையும் உளவுத்துறையும், சங்பரிவாரும் அமெரிக்காவும் இன்ன பிற அயோக்கியர்களும் செய்து வரும் பிரசாரத்திற்கு நீங்கள் பலியாகி விட்டீர்கள்.அதனால் அமைதி மண்ணாங்கட்டி என்று பஜனை பாடுகிறீர்கள்.இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று இந்த அயோக்கியர்கள் எல்லாருக்கும் தெரியும்.தெரிந்துதான் இந்த பிரசாரத்தை செய்து வருகிறார்கள்.சர்வதேச தீவிரவாதி யார் என்றால் ஒரு முஸ்லிம் சிறுவன் கூட ஒசாமா என்று சொல்வதில்லையா அப்படித்தான்.நமது சகோதரர்களில் ஒரு பிரிவினரை நாமே தீவிரவாதி என்று காட்டி கொடுத்து நாங்களெல்லாம் நல்லவர்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று இவர்களிடம் பஜனை பாடி கொண்டே இவர்கள் செய்யும் அட்டூழியத்தை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் .அதற்க்கு தமிழ் மணம் விருது மட்டுமல்ல நோபல் பரிசு கூட கொடுப்பார்கள்.எனவே சகோதரா முதலில் இஸ்லாத்தின் எதிரிகள் அவர்களின் முழு பரிணாமத்தை புரிந்து கொண்டு அப்புறம் எழுதுங்கள்.

மூன்றாவதாக.தலித்,ஈழ தமிழர்கள்  என ஒடுக்கப்படும் மக்களுக்கான பதிவுகளுக்கு தனி தலைப்புகள் ஒதுக்கப்பட்டதை போல் சிறுபான்மையினர் என்று ஒரு தனி தலைப்பை தமிழ்மணத்தார் அடுத்த தடவை ஒதுக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். 
நன்றி - -இனியவன் 

Jan 11, 2010

புத்தகக்காட்சி, தொலைக்காட்சி, பைரஸி, அரசு - ஜிகர்தண்டா

புத்தக காட்சிக்கு போய் நானும் ஒரு நாலஞ்சு பதிவு போட்றலாம்னு பார்த்தேன். முடியல.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். காட்சியில் விற்பனையான புத்தகங்கள் மட்டும் 7 கோடியாம். நானும் போயிருந்தா 7 கோடியே 1 ஆகியிருக்கும். புரிஞ்சிருப்பீங்க.. கோடிக்கு எத்தன பூஜ்யம்னு தெரியலைங்க.
சில விருப்பப்பதிவுகளை வாசிக்கையில் ஸைடு பாரில் மிதக்கும் விளம்பரங்களும் இசைகளும் எரிச்சலடையச் செய்கிறது. இன்னும் சில ஆனைக்கு முன்னே மணி ஓசை மாதிரி,  பதிவுகளை திறந்ததும் விளம்பரங்கள் பாப்அப் ஆகிறது. அந்த பதிவுகளை அப்படியே மூடிவிட்டு வந்துவிடுவேன். இந்த வார நட்சத்திர பதிவிலும் அப்படித்தான். நட்சத்திரம் குட்டிரேவதி கண்ணகி பற்றி எழுப்போகிறாராம், ரீடரில் இருக்கும் படித்துக்கொள்கிறேன்.
நெல்லையில் காவல்துறை அதிகாரி கொலைசெய்யப்பட்டதும் அவரை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் மீடியாக்களில் கிழிக்கப்பட்டனர். தண்டனையாக அவர்களுடைய பதவி பறிக்கப்பட்டாலும் தவறே இல்லை. (கொலையாளிகள் விட்டுச்சென்ற பைக்கில் அதிமுக சின்னம் இருந்ததாம். இனி.. எதிர்கட்சி வாய்திறக்காது) அது போகட்டும், அந்த வீடியோ ஒளிப்பதிவு செய்த நபரை என்ன செய்யலாம். இதே போல சென்றவாரம் ராமேஸ்வரத்தில் ஒரு பெரியவர் நடு ரோட்டில் தேங்கி கிடந்த தண்ணீரில் விழுந்து குளிரிலேயே இறந்துவிட்டாராம். அதையும் படம் பிடித்து கல்லாகட்டுகிறார்கள். தொட்டதற்கெல்லாம் அரசாங்கத்தை குறை சொல்லியே காலம் தள்ள வேண்டியிருக்கிறது.
ஜக்குபாய் படத்தை தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள்  இந்தியாவில் வெளியிடப்படும் முன்பே இணையத்தில் கிடைக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னதாக லண்டனில் இசை வெளியிடப்பட்டும் தமிழ் ரசிகர்களுக்கு கிடைக்கச்செய்யாதது நிர்வாக குறைபாடு என்றே சொல்லலாம். பின்ன எங்கிருந்து பைரஸியை ஒழிப்பது?
இளம் இயக்குனர்கள், தங்களது ஐந்து நிமிட படைப்பான குறுப்படங்களை காட்சிப்படுத்தும் கலைஞர் டிவியின் 'நாளைய இயக்குனர்' பாராட்டப்படவேண்டிய நிகழ்ச்சி. மதன், போத்தன் மற்றும் வாரம் ஒரு வெற்றி இயக்குனர் என நடுவர்களால் அக்குறும்படம் குறித்த கருத்துக்கள் பதிவு செய்யப்படுகிறது. விரைவில் ஆதியை அங்கு எதிர்பார்க்கிறேன்.
இரண்டு வாரமாக மாலை நேர பொழுது போக்கு விஜய் டிவி சீரியல்கள் தான். ச்சும்மா சொல்லப்படாது... நல்லாதாங்க இருக்கு. குறிப்பா கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், அன்பேவா இரண்டு தொடர்களும் சூப்பர். கதைய விடுங்க, காட்சியமைப்புகளும் யதார்த்த வசனங்களும் தொடரோடு ஒன்ற வைக்கிறது. பள்ளிக்கூட நடிக பசங்களின் நடிப்பும், மதுர ஸ்லாங்கும்... ம் க்ரேட்.
நேற்று Duel என்ற ஒலகப்படம் பார்த்தேன். வழக்கம்போல உபயம்; பாலா. (புரியாத மொழில இருந்தா ஒலகப்படம் தான?).  ஆங்கிலமில்லை, வேறெந்த மொழி என்பதும் தெரியவில்லை, அது தேவையும் இல்லை. இயக்குனர்; ஸ்பீல்பர்க். டப் செய்யப்பட்ட ஹாலிவுட் படமாகத்தான் இருக்கவேண்டும். கதை இதுதான்; ஹைவேஸில் ஒரு கார், புகை கக்கிச்செல்லும் ட்ரக்கை முந்திச்செல்ல.. அந்தக் கார்காரரை கொல்லவரும் ட்ரக். ஆமாம்... ட்ரக் ஓட்டுனரை கடைசிவரை காட்டவில்லை. இதைத்தான் தரம் என்கிறேன். இதற்கு உலகத்தரம் உள்ளூர்தரம் என்று என்ன பெயரும் வைத்துக்கொள்ளலாம். திருட்டு டிவிடியை ஒழிக்க இதை போல தரமான படம் கொடுங்கள் என்றுதான் தமிழ் இயக்குனர்களை கேட்கிறேன்.

ரைட்டர் பேயோன் (http://twitter.com/writerpayon) ட்விட்டுகள் புத்தகமாக வெளிவருகிறதாம். விலை 60 /-. பேயோன் பேரவையின் புதிய உறுப்பினர். அங்கு நண்பர் மணிகண்டனின் பின்னூட்டமும் வாசிக்கவும். ;)

அடுத்த வார நீயாநானாவின் தலைப்பு 'பர்தா' (நன்றி லோகு). ஒரு நிமிட க்ளிப்பிங் பார்க்கத்தூண்டுகிறது. மீண்டும் பதிவுலகம் வீண் சர்ச்சைகளில் மூழ்காது என்ற நம்பிக்கை இருக்கிறது. பர்தாவிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அத்தனையையும் அடைத்துக்கொண்டிருந்தாலே பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆரோக்கிய விவாதத்திற்கு நாம் எப்போதும் தயாரே. ஆனால், இணையவிவாதங்களில் ஆரோக்கியத்தை எதிர்பார்ப்பது அதீதம் தான். இருக்கட்டும்... அடுத்த வாரம் பார்ப்போம்.

Jan 9, 2010

சினிமா திருட்டு குண்டர் குற்றமா?

தமிழ்மணம் முதற்கட்ட வாக்கெடுப்பில் 'ஜெய்ஹிந்த்புரத்தின்' விளிம்புநிலை வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்களும் தீவிரவாதமும் என்ற இரண்டு இடுகைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வாக்களித்த பதிவர்களுக்கு நன்றி ! இறுதிச் சுற்றிலும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் பதிவர்கள், பொது வாசகர்கள் அனைவருக்கும் நன்றி !!! - பீர்.

ஜக்குபாய் - திரைக்கு வருவதற்கு முன்பே டிவிடி வெளியாகிவிட்டதாம். திரைத்துறையில் இருக்கும் சில 'பொதுநலவாதிகளே' மார்கெட்டில் வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. திரைத்துறை வியாபாரிகள் எல்லோரும் சேர்ந்து ஒப்பாரி வைக்கிறார்கள். ஜக்குபாய்க்கு சகுனம் சரியில்லை என்கிறார் ஒரு அறிவு ஜீவி. திருட்டி டிவிடி விற்பவனின் கையை வெட்ட வேண்டும் என்கிறார்கள். திருட்டு டிவிடியை ஒழிக்க தமிழக அரசு குண்டர் சட்டம் பாயும் என்கிறது.

குண்டர் சட்டம் பாயுமளவுக்கு இது குற்றமா? உண்மையில் தமிழகம் தடுக்கப்பட வேண்டிய வேறு குற்றங்கள் இல்லாத அமைதி பூங்காவாகிவிட்டதா? நெல்லையில் காவலரை கொல்லும் ரவுடி, அவரை காப்பாற்ற முடியாத அரசியல் தலைவர்கள். இவர்களை தண்டிப்பதைவிட சினிமாக்காரர்களுக்காக அறிக்கை விடுவதை முக்கியச் செய்தியாகக் காட்ட இந்தத் தொழிலில் என்ன இருக்கிறது? சினிமாக்காரர்களின் ஓட்டுக்காகத்தான் இந்த படங்காட்டப்படுகிறது என்பதையும் யாரும் சொல்ல மாட்டார்கள். கூத்தாடிகளில் எத்தனை பேருக்கு ஓட்டுப்போடும் தகுதியும், தமிழக வாக்குச்சீட்டில் பெயரும் இருக்கிறது என்பது அரசியல்வாதிகளுக்கும் நன்கு தெரியும்.இருந்தும் ஒரு சினிமாக்காரன் நடத்தும் விழாவிற்காக நம் பணத்திலிருந்து லட்சங்களை வாரி வழங்க தயாராக இருப்பதும், படோபட வாழ்க்கை நடத்தும் அவர்களுக்கு வீடுகட்டித்தரவிருப்பதும், தினம் அவர்களுக்காக அறிக்கை தயாரித்து முதலைக்கண்ணீர் விடுவதற்கும் என்ன காரணமாக இருக்க முடியும்? பணம். கணக்குவழக்கில்லாமல் கேட்கும் போதெல்லாம் கோடிகளை அள்ளிக்கொடுக்கத் தயாராக இருப்பது போலவே, கொள்ளையடிக்கும் கருப்புப் பணத்தை உள்வாங்கும் தொழில்துறை அது. கூத்தாடிகள் கையில் நாட்டை கொடுத்தால் குட்டிச்சுவராக்கிவிடுவார்கள் என்பதை மீண்டும் மீண்டும் மெய்பிக்கும் நிகழ்வுகள் நடந்தேருவது வருத்தத்தையே மிச்சப்படுத்துகிறது.

திருட்டு டிவிடிக்காரர்கள் கொடுக்கும் கமிஷன் அரசியல்வாதி முதல் காவல்துறை வரை பங்கு பிரிக்கப்படுகிறது. தயாரிப்பாளருக்கும் பங்கு  சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கைநீட்டி லஞ்சம் வாங்குபவர்கள், (இனி வருமானம் தடைபடும் என்பதை தவிர்த்து யோசித்தாலும்) நிச்சயம் காசு கொடுப்பவனுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள். எனவே திருடர்களாய் பார்த்து திருந்தாத வரை இத்திருட்டை ஒழிக்க முடியாது. டிவிடி திருடன் ஏன் திருந்த வேண்டும்? என்பதற்கான பொதுவான காரணம் எங்கும் சொல்லப்படவில்லை. நம் புத்திக்கு எட்டியவரை (பணம் கொடுத்து நாம் வாங்கும் டிவிடி எப்படி திருட்டு டிவிடியாகும் என்ற நுணுக்கங்களை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு) நாமே சிந்திக்கலாம்.
நமக்கும் திரைப்பட தயாரிப்பாளருக்கும் சம்பந்தமில்லை. திருட்டு(?) டிவிடி வியாபாரி பேர் கூட தெரியாது. ஆனால் நாம் நுகர்வோர். திருட்டுதனமாய் வாங்கி, திருட்டுதனமாய் ப்ரிண்ட் போட்டு, திருட்டுதனமாய் விற்கப்படும் டிவிடியை காசு கொடுத்து வாங்கி படம் பார்க்கும் திருட்டு டிவிடி பயனர்.  இந்த திருட்டு டிவிடியை வாங்காவிட்டால் நமக்கு என்ன நன்மை, வாங்குவதால் என்ன கேடுவந்துவிடப்போகிறது என்ற அளவிலேயே மிஸ்டர் காமன் மேன் சிந்திக்க முடியும், அவ்வளவே சிந்திக்கிறான். உண்மையை சொல்வதென்றால் திருட்டி டிவிடியால் நம் காமன் மேனுக்கு லாபமே. குடும்பத்துடன் ஒரு புதிய திரைப்படத்தை 20 ரூபாய்க்கு பார்த்துவிடுவதென்பது, நடுத்தரவர்க்கத்தின் அன்றாட செலவில் குறிப்படத்தக்க சேமிப்பை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகும்.
கோடிகளை கொட்டி படமெடுப்பதால் மட்டுமே மில்லியனில் லாபம் தர வேண்டும் என்று நினைப்பது முட்டள்தனம் என்பது போலவே, அந்த கோடி ரூபாய் படத்தை 20 ரூபாய்க்கு வாங்கி பார்த்தால் குண்டர் சட்டம் பாய வேண்டும் என்பதும். டிவிடியில் பார்த்தாலுமே மீண்டும் தியேட்டரில் பார்க்கத்தூண்டும் தரத்துடன் உங்களுடைய படைப்பு இருக்கவேண்டும்.உலகப்படங்களை உருவியாவது அந்த தரத்தை கொண்டுவாருங்கள் தவறில்லை.
திருட்டி டிவிடி விற்பனையில் வரும் பணம் தீவீரவாதத்திற்கு பயன்படுத்தப்படுவதாகச் சொல்லி கமல் என்றொரு நடிகன் மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார்.  டிவிடி வியாபாரிகளை தூக்கிலிட வேண்டும் எனுமளவுக்கு மேடை கட்டி நடிக்கும் கூத்தாட்ட வியாபாரிகள், பெரும்பாலான ஒலகப்படங்களை ஓசியில் டவுன்லோடு செய்தும், திருட்டு டிவிடியிலுமே பார்க்கிறார்கள்.டிவிடி தேயும் அளவு திரும்ப திரும்ப பார்க்கிறார்கள். போகட்டும்.. டிவிடி தேய்ந்தாலும் ரசிகனுக்கு உலகத்தரத்தில் ஒரு தமிழ்திரைப்படம் கிடைக்கிறதா என்றால் இல்லை.அந்தப்படங்களிலிருந்து காட்சிகளையும் தொழில் நுட்பங்களையும் திருடி 'எ ப்ளிம் பை' என்று கொட்டை எழுத்தில் தன் பெயரை பதித்துக்கொள்வதோடு மட்டுமில்லாமல். திருடி எடுத்தது யாருக்கும் தெரியாதிருக்க 'நான் இதுவரை உலகப்படம் பார்ததில்லை' எனும் பேட்டிகள் வேறு. உகாண்டா நாட்டு மொக்கைப்படத்தை காப்பி அடித்தாலும், சரியாக கண்டுபிடித்து எழுத இங்கே பலர் காத்திருக்கிறார்கள். ரசிகர்கள் அனைவரும் மொன்னைகள் என்று  நினைத்துவிட வேண்டாம். மொன்னைகளில் சில ரசிகர்களும் உண்டு அவ்வளவே.
அது போக, எய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்களை பரப்பும் விபச்சாரத்தை அங்கீகரிக்கச்சொல்லும் 'நியாயவான்கள்', நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் இல்லாத டிவிடி தொழிலை அங்கீகரிக்க சொல்லாததேன் என்பதும் புரியவில்லை. குண்டர் சட்டம் போட்டும் தடுக்க முடியாத திருட்டை 'சட்டபூர்வமாக அங்கீகரித்தால்' என்ன? இலவச வண்ண தொலைக்காட்டிப் பெட்டியும், ஒரு ரூபாய்க்கு அரிசியும் தரும் கருணாநிதி அரசு, புதிய திரைப்படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் வசதியையும் செய்து கொடுத்துவிட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளும் இப்போதிருக்கும் கம்பெனியே தொடர்ந்து சம்பாதிக்கலாம் என்பதை யாரும் சொல்லித்தரவில்லையா?

எது எப்படி இருந்தாலும் கதை, இசை, தொழில்நுட்பம், சக தொழிலாளியின் உழைப்பு இன்னபிறவற்றை திருடி எடுத்து பல சமூக குற்றங்கள் நிகழ காரணமாக இருக்கும் சினிமாவைத் திருடி டிவிடியில் விற்பதை நடுத்தரவர்க்கத்திற்கான ராபின் ஹூட் வகை 'சமூக சேவை' என்றும் சொல்லலாம்.

'திருட்டு டிவிடி ஒழிக்கப்பட வேண்டும்' என்று கீ போர்டை தட்டும் சினிமா வியாபாரிகளில் எத்தனை பேர் தங்கள் கம்யூட்டரில் ஜென்யூன் ஓ.எஸ் மற்றும் பிற ஸாஃப்ட்வேர் பாவிக்கிறார்கள் என்பதையும் நினைவில் நிறுத்தட்டும்.

  • நான் திருட்டு டிவிடி வாங்கி படம் பார்ப்பதில்லை என்பதை ஒரு குறிக்கோளாகவே வைத்திருக்கிறேன். பின்ன... அரை தினாருக்கு வாங்கினாலும் ப்ரிண்டு அலையடிக்குதே.
  • ஆமா.. இதுக்கு முன்ன திருட்டு விசிடிய ஒழிக்கணும்னு சொன்னாங்க. முற்றிலும் ஒழிஞ்சிடுச்சு. இப்போ திருட்டு டிவிடிய ஒழிக்கணும்னு சொல்றாங்க... இதுவும் ஒழிஞ்சிடுச்சுன்னா.. அப்போ அடுத்து திருட்டு டிவ் எக்ஸா?


Jan 8, 2010

கஃ பா - ஓர் அற்புதம்

முஸ்லீம்களின் புனித ஆலயமான சவுதி அரேபியா, மக்கா நகரில் இருக்கும் க'ஃபா பற்றிய காணொளிப் பகிர்வு. (யூ ட்யூபில் உலாவிய போது கிடைத்தது.)


அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மக்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா (எனும் மக்காவில்) உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹூமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. புனித குர்ஆன் 3: 96,97
நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள், எனக்கே அஞ்சுங்கள் - புனிதகுர்ஆன் 2:150



க'ஃபா வரலாறு பற்றிய சகோதரி ஹூசைனம்மா எழுதிய அண்மை பகிர்வு அது என்னுடையதல்ல

Jan 5, 2010

உங்கள் தங்கமணியிடம் உதை வாங்குவது எப்படி?

திருமணம், விருந்து போன்ற நிகழ்வுகளில்...
தங்ஸ்ஸயே சுத்தி சுத்தி வாரீங்க >>> ம்.. பொழச்சு போங்க.
அப்படி சுத்தி வரும்போது சக பதிவரிடம் சீரியஸா பேசறீங்க >>> மூக்கிற்கு மேல் கோபத்தை பார்க்கலாம்.
அப்படி பேசும் போது இடையே ஹாய் சொல்பவருக்குப் பெயர் ரீடா, கீதா, ஜமீலா வாக இருந்துவிட்டால் >>> மூக்கிற்கு கீழேயும் கோபத்தை கேட்கலாம்.
அவர் உண்மையில் அழகி, புத்திசாலியும் கூட >>> வாழ்த்துக்கள்... உதை உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ் பிறந்தநாளின் போது...
வெளியே அழைத்துச் சென்றால் >>> ம்.. பொழச்சு போங்க.
அந்த இடம் உங்கள் விருப்ப இடமாக (மட்டும்) இருந்தால் >>> மூ. மே. கோ.
அங்கு தங்கஸ்க்கு பிடித்த டிஷ்/பொருள் கிடைக்காவிட்டால் >>> மூ. கீ. கோ.
இதையெல்லாம் விட ஆரம்பத்திலேயே பிறந்தநாள் தேதியை மறந்து (நினைவிருந்தாலும்) தொலைத்துவிட்டால் >>> வாழ்த்துக்கள்... உதை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ் சமைத்த உணவை சுவைக்கும்(?) போது...
ஒன்றும் பேசாமல் சாப்பிட்டால் >>> ம்.. பொழச்சு போங்க.
அட.. சுடுதண்ணி நல்லா பண்ணியிருக்கம்மா >>> மூ. மே. கோ.
இன்னிக்கும் அதே சாம்பாரா >>> மூ. கீ. கோ.
எங்க அம்மா சாம்பார் நல்லா வெப்பாங்க >>> வாழ்த்துக்கள்... உதை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ் கூட சினிமாவிற்கு செல்லும் போது...
சினிமா தங்ஸ்க்கு பிடிச்சிருக்கு >>> ம்.. பொழச்சு போங்க.
அதே சினிமா உங்களுக்கு பிடிக்கவில்லை >>> மூ. மே. கோ.
உங்களுக்கு பிடிச்சிருக்கு, தங்ஸ்க்கு பிடிக்கவில்லை >>> மூ. கீ. கோ.
அந்த சினிமா உலகத்தரத்தில் இருந்தால் >>> வாழ்த்துக்கள்... உதை உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ், உங்களிடம், 'இந்த ட்ரெஸ் எனக்கு எப்பிடியிருக்கு?' என்று கேட்கும் போது...
நீங்கள், 'நீ உடுத்தியிருப்பதால் தான் இந்த உடைக்கே அழகு' >>> ம்... பொழச்சு போங்க.
நல்லாயிருக்கு.. நல்லாயிருக்கு >>> மூ. மே. கோ.
அந்த நீலக்கலர் இதைவிட நல்லாயிருக்குமே >>> மூ. கீ. கோ.
வேறு ஏதாவது ஏடாகூட உண்மை சொல்றீங்க >>> வாழ்த்துக்கள்... உதை உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ், உங்களிடம் ஏதாவது பிரச்சனை பற்றி பேசும் போது...
லேப்டாப்பை மடித்துவைத்துவிட்டு கேட்டுக் கொண்டிருந்தால் >>> ம்.. பொழச்சு போங்க.
பின்னூட்டமிட்டுக்கொண்டே ம்.. ம்... என்று மட்டும் சொன்னால் >>> மூ. மே. கோ.
நீங்களும் திரும்ப ஏதாவது அறிவுரை சொன்னால் >>> மூ. கீ. கோ.
தங்ஸ் பேசிக்கொண்டிருக்கும் போது, நீங்கள் குறட்டைவிட்டால் >>> வாழ்த்துக்கள்.. உதை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

இனி வரப்போகும் நாட்களில் இன்னும் அதிகமாக டிப்ஸ் கிடைக்க வாய்ப்பிருக்கிறது :-)