Sep 28, 2009

இஸ்லாமியர்களும் தீவிரவாதமும்

"அமைதி" என்ற ஒற்றை வார்த்தையிலிருந்து பிறந்த சொல்லையே தனது மதத்தின் பெயராகக்கொண்ட இஸ்லாமியர்களுக்கெதிரான பிரச்சாரத்தில் "இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற சொல்லாடலுக்கான எண்ணம் / திட்டம் ஒரளவு வெற்றி பெற்றுவிட்டது என்றே சொல்லவேண்டும். நீண்டகாலமாக கட்டவிழ்த்து விடப்படும் இப்பிரச்சாரத்தின் பெரும் பங்கு ஊடகத்துறையையே சாரும் என்பதையும் மறுக்க முடியாது. பொதுஅறிவு வளர்க்க வேண்டிய பத்திரிக்கை, தொலைக்காட்சி, திரைப்படம் போன்றவையே இந்த பாதகச்செயலை முன்னின்று செய்வது துரதிஷ்டவசமானது. பொழுதுபோக்கு சாதனமாக திரைப்படம் பார்க்கப்பட வேண்டும் என்றாலும், பார்க்கப்பட்டாலும், அதற்கு மிகப்பெரிய (அழிவு) ஆக்கசக்தி உண்டு என்பதையும், உளவியல் ரீதியில் நிச்சயம் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதையும் சமீபத்திய திரைப்பட விமர்சனங்களில் பார்க்க முடிகிறது. இத்திரைப்பட விமர்சனமானது, படைப்பை விமர்சித்து, படைப்பாளனை விமர்சித்து, தற்போது விமர்சகனை விமர்சிக்கும் நிலையில் நிற்கிறது. இந்நிலையில் இரண்டு விஷயங்களை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்று; பொழுதுபோக்கு சாதனமான திரைப்படம், முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்று சொல்லக்கூடிய இணைய நண்பர்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை நேரடியாகக் காண முடிவது. (தவிர, எந்த முற்போக்கு சிந்தனையுமில்லாமல், பொழுதுபோக்கிற்கு திரைப்படம் காண வரும் ஒருவனின் உளவியல் பாதிப்புக்களை அவதானிக்க முடியாது, அது எத்தன்மை கொண்டதாகவும் இருக்கலாம்.) இரண்டாவது; இணையம் என்ற ஊடக வெளியும், முன்னெப்போதையும் விட தற்போது மிக வீரியமாக துவேஷப்பரப்புரையை நிகழ்த்தி வருவது. அதற்கான மிக முக்கிய காரணமாக நான் விளங்குவது, மற்ற ஊடகங்களைப்போல இங்கு முகம் காட்டவேண்டியதில்லை என்பதே. மேலும், இப்பதிவு திரைப்பட விமர்சனமோ, விமர்சக விமர்சனமோ இல்லையாதலால், இது… இங்கேயே கிடக்க.

k1057276
"இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற சொல்லாடல் இஸ்லாமியர்களுக்கு கசப்பு தருவது எந்தளவு உண்மையோ அதே அளவு உண்மையே தீவிரவாத விகிதாச்சாரத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக இருப்பதும். அமைதியை போதிக்கும் இஸ்லாத்தில், சிலரது இத்தகைய தீவிர நடவடிக்கைகள், இஸ்லாத்தை காக்கும் என்பதோ, அதன் வளர்ச்சிக்கு உதவும் என்பதோ எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல, வரலாற்றில் இதுவரை நிரூபிக்க முடியாததும் கூட. அமைதியை அமைதி எனச் சொல்லும், அமைதியாய் வாழ்ந்து காட்டும் முயற்சியும் இதனால் சாத்தியப்படாமல் போகிறது என்பதே உண்மை. வன்முறையால் அவர்கள் தமக்குத்தாமே 'கபர்' குழிபறித்துக்கொள்ளவதோடு, இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் தடையாகிறார்கள் என்பதை உணரவேண்டும். வன்முறையால் எதையும் சாதிக்கலாம் என்பது இஸ்லாமிய சிந்தனை அல்ல. வன்முறையால் வளர்ந்த சித்தாந்தம் காலப்போக்கில் மக்கிக்போன வரலாறுகளைப் பார்க்க முடிகிறது. இத்தகைய செயல்களாலேயே, இஸ்லாம் போதிக்கும் முறைப்படி, 'தன்னை படைத்தவனுக்கு நன்றி செலுத்தி, அமைதியாய் வாழும்' பெரும்பான்மை முஸ்லீம்களும், '“என்னடா! எங்க குண்டு வைக்கலாம்ன்னு பிளான் செய்யறீங்களா?”' போன்ற அருவருக்கத்தக்க கேளிச் சொற்களால் கூனிக்குறுகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இஸ்லாமியன் பெயரைக்கேட்டாலே 'வீடு காலி இல்லை' என்பது இன்றைய பெரு நகர சகோதரர்களின் டெம்ப்ளேட் பதிலாகிவிட்டது. தீவிரவாதத்தின் ஒருசில எதிர்வினைகளான இவற்றையும் மனச் சங்கடங்களோடு எதிர்கொள்ள வேண்டியிருப்பது, ஆண்டாண்டு காலமாக சகோதர சமூகத்தில் 'மாமு, மச்சான்' எனப்பழகிவந்த முஸ்லீம்களுக்கு வேதனையளிக்கிறது.

இஸ்லாத்தை பற்றிய தவறான உருவகத்தை மாற்ற வேண்டிய கடமை, பொறுப்பு, இஸ்லாமியர்களுக்கே இருக்கிறது. பேச்சிலும் எழுத்திலும், குர்ஆன் மற்றும் நபிமொழி ஆதாரங்களை எடுத்துக்காட்டி "இஸ்லாம் அமைதி மார்க்கம்" எனச் சொல்லிவிடுவதால் மட்டுமே, அது உண்மை என்பதை நிரூபித்துவிட முடியாது. இஸ்லாம் கூறும் அமைதி முறையை, மனித நேயத்தை, சீறிய வாழ்க்கை நெறியை பின்பற்றி வாழ்ந்து காட்டுவதால் மட்டுமே, இஸ்லாம், தீவீரவாதத்தை, பயங்கரவாதத்தை வெறுக்கிறது, இஸ்லாத்திற்கும் அதற்கும் துளியளவும் தொடர்பில்லை என்பதை நிரூபிக்க முடியும். அதன் மூலமே, சிலரது செய்கைக்கு முழு சமூகமும் பொறுப்பாகாது என்ற புரிதலுடனான, மாற்று மத சகோதரர்களின் நம்பிக்கையையும் நல்மதிப்பையும் பெறமுடியும். இஸ்லாமியர்களுக்கெதிரான மிகமோசமான சூழல் நிலவும் இந்தியப் பன்முகச் சமூகத்தில், இவற்றை சாத்தியப்படுத்துவது மிகக்கடினம் என்றாலும், செய்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய சிறுபான்மையினர் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

books_terrorism_facts_myth_ தீவிரவாதம் என்பது நாடு, இனம், மதம் (சார்பு, சார்பற்ற), மொழி என்ற அனைத்திற்கும் அப்பாற்பட்டது என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் பலமுறை  உரக்கச்சொல்லியும் பெரும்பாலானவர்கள் காதுகளில் விழுவதில்லை. நாடு, இனம், மதம் மற்றும் மொழி அடையாளங்களைச் சொல்லி தீவிரவாதத்தை தூண்டும் (i), அவற்றால் உந்தப்பட்டு தீவிரவாதம் செய்யும் (ii), தீவிரவாதத்திற்கு (நேரடி தொடர்பில்லை எனினும்) வர்க்க அடையாளங்கள் பூசும் (iii) அனைவரும் குற்றவாளிகளே, தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டியவர்களே. இவை மூன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையது போலவே சங்கிலித்தொடரானதும் கூட. 

சிறுவயது முதல் கற்பித்து வளர்க்கப்படும் பல கருத்துக்களே மனிதர்களிடத்தில் ஆழமான நம்பிக்கைகளாக வேர் விடுகின்றன. (என்னை அப்படியெல்லாம் வளர்க்கவில்லை என்று நாம் இப்போதும் சொல்லவதுண்டு.) அசோகர் மரம் நட்டார், பாலம் கட்டினார் என்பதாகச் சொல்லும் ஆரம்பப் பள்ளிக்கல்வியின் வரலாறு, முகலாய மன்னரின் பதின்மூன்று மனைவிகளையும், கஜினியின் பதின்நான்கு படையெடுப்பையும் மட்டும் சொல்லி ஒருதலைபட்ச இஸ்லாமியர்களுக்கெதிரான துவேஷப்பரப்புரையை தொடங்குகிறது. இத்தகைய விஷவேர்கள் பிற்பாடு, "இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது" எனும் பொய் கூற்றை பகுத்தறியாமல் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை ஏற்படுத்திவிடுகிறது. அதுபோலவே, "இஸ்லாமியர்களுக்கு தேசப்பற்று இல்லை" எனும் விஷமத்திற்கு வெள்ளையின எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த இஸ்லாமியர்களின் வரலாறு மறைக்கப்படுவதும் காரணமாக அமைந்து விடுகிறது. இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் (கடவுள் நம்பிக்கை, வழிபாடு, நோன்பு, தானம் மற்றும்) கடைசியான ஹஜ் எனப்படும் புனித காபா செல்லும் கடமையை எந்த முகலாய மன்னரும் நிறைவேற்றிதாக குறிப்பு இல்லை. இஸ்லாத்தின் கடமையையே செய்யத்தவறிய முகலாய மன்னர்கள், இஸ்லாத்தை பரப்ப வாளேந்தியிருப்பார்கள் என்பதை பகுத்தறிவால் ஏற்க முடியவில்லை. வெள்ளையர்களுக்கு முன்பு நாடு பிடிக்க வந்தவர்கள், 600 ஆண்டுகளுக்கு முன்பான அகண்ட இந்தியாவை 1000 ஆண்டுகளுக்கும் மேலாக முழுதுமாக ஆண்டபோதே, இஸ்லாத்தை வன்முறையால் பரப்ப நினைத்திருக்க சாத்தியம் இல்லை என்பதற்கு இந்த சமூகம் இப்போதும் சிறுபான்மையாக இருப்பதே சாட்சி. இவர்கள், வாணிபத்திற்காக வந்தவர்களின் வாழ்க்கை முறை மற்றும் சாதீய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத மனிதநேயத்தை பார்த்து மனம் மாறி இஸ்லாத்தை தழுவியதனாலேயே இன்றளவும் இஸ்லாம் எனும் கயிற்றை பற்றிப்பிடித்து கொண்டிருப்பதை காணலாம். 

அது நிற்க... வணிக மையங்களிலும், இரயில் நிலையங்களிலும் வெடிகுண்டுகளை வீசி நூற்றுக்கணக்கில் உயிர்களைப் பறிப்பது நியாயம்தானா? விமானங்களைக் கடத்திப் பயங்கரவாதிகளை விடுவிக்கப் பணயம் வைப்பது இஸ்லாம் சார்ந்த பணிகளா? ஒரு பாவமும் செய்யாத பச்சிளங்குழந்தைகளும், பெண்களும் செத்து மடிவதை வேடிக்கை பார்க்கத்தானா இஸ்லாம் கூறுகிறது? இத்தகைய வன்முறைச் செயலுக்கெல்லாம் இஸ்லாத்தை பொதுப்படுத்தி நியாயம் சொல்வது சரியா? என்பது போன்ற பல கேள்விகள் எல்லோருக்கும் எழலாம். இவற்றிற்கெல்லாம் பதில்.
இல்லை... இல்லை.. இல்லை... இஸ்லாம் இதை கற்பிக்கவில்லை. வன்முறையை வெறுக்கும் மார்க்கம் இஸ்லாம். 'மனிதர்களிடம் நீதியுடனும் நேசத்துடனும் நடந்துகொள்ளுங்கள்' என்றுதான் முஹம்பது நபி சொல்லிச் சென்றிருக்கிறார்.

Godhra-Riots1ஒரு சிலரின் வன்செயலுக்கு அவர்களது மதத்தையோ, மதத்தை பின்பற்றும் மக்களையோ குற்றவாளியாக்குவது எந்த விதத்தில் நியாயமாகும்? குஜராத்தில் கொடுஞ்செயல் நிகழ்த்திய மோடி, பாபு பஜ்ரங்கி மற்றும் மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யாசிங் தாக்கூர்  போன்றோரால் ஒட்டு மொத்த இந்து சகோதரர்களையும் குற்றவாளியாக்கிப்பார்ப்பது எந்தளவு மடத்தனமோ, நியாயமில்லையோ... அதேபோல... இஸ்லாத்தின் பெயர் சொல்லும் சில தீவிரவாதிகளுக்காக மற்ற பெரும்பான்மை இஸ்லாமியர்களை குற்றஞ்சாட்டுவதும் அறிவிலித்தனம்.

எலி இருக்கும் இடத்தில் பூனை வருமாம்... எலியை விரட்ட மனிதனால் முடியாதா? எலியை கொல்ல, பூனை என்ற மிருகம் தான் வேண்டுமெனில், பூனையை கொல்ல, புலி வருவது அதைவிட ஆபத்தாச்சே. புலி என்ற மிருகத்திற்கு, சக மிருகமாகிய பூனை, மனிதன் என்ற வித்தியாசம் இல்லாமல், மனிதத்தையும் சேர்த்தே கொன்றுவிடுமே... எலியானாலும் புலியானாலும் மனிதர்கள் கைகோர்த்து காட்டுக்கு விரட்ட முடியாதா? மனிதர்கள் ஒன்றுபட்டால் மிருகங்களை விரட்டி விடலாமே.

எங்கோ செய்திகளில் கேட்பதையும், முகம் இல்லாதவர்களின் இணைய எழுத்தின் போலி குற்றச்சாட்டுகளையும், துவேஷத்தையும், கட்டுக்கதைகளையும் அப்படியே நம்பிவிடாமல், நம் அண்டை, எதிர் வீடுகளிலிருக்கும் மாற்று மத சகோதர்களை மனிதநேயத்துடன் கை கோர்த்து பார்ப்போம். நிச்சயம் என் அப்பாவி நண்பனால் இத்தகைய வன்செயல்களை ஈடுபடமுடியாது என்பதையும், எந்த கடவுள் கொள்கையும் அத்தகைய சமூக விரோதத்தை செய்யச்சொல்வதில்லை என்பதையும் உணர்ந்து கொள்வோம். மதத்திற்கு அப்பாற்பட்டவனாய் இருந்தாலும், பன்முகச் சமூகத்துடன் ஒன்றியிருக்கும் ஒருவனால் அச்சமூகத்தின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடமுடியாது என்பதை அனுபவித்து உணரலாம்.

தீவிரவாதத்திற்கு 'புறக்கணிப்பு' என்ற ஒற்றைச்சொல் தானே காரணமாக இருக்கிறது. தான், தன் இனம், மொழி, மதம் புறக்கணிக்கப்படுகிறது என்ற காரணம் தானே தீவிரவாதி உருவாக காரணியாகிறது.

சிலர் செய்யும் தவறுக்கு ஒரு சிறுபான்மைச் சமூகத்தையே புறந்தள்ளி ஒதுக்கிவிடாமல், 'மற்றவர்கள் செய்யும் தவறுக்கு நீ என்ன செய்வாய்' என்று தோளோடு கை கோர்த்து அரவணைத்து, அழைத்துச் செல்லவேண்டியது பெரும்பான்மையான ஒவ்வொருவரின் கடமையல்லவா? பயங்கரவாதத்தை வெறுக்கும் அனைவரும் ஒன்றுபட்டால், அதை முற்றிலுமாக ஒழித்துவிட முடியாதா? வாருங்கள்...
பயங்கரவாத ஒழிப்பில் கை கோர்ப்போம். மதவேறுபாடுகளை மறந்த மனிதநேயம் காப்போம்,.

Sep 22, 2009

மொ போல் ஒருவன்

கடைசியாக நான் சொந்த செலவில் பார்த்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. அதற்குப் பிறகு, ஒரு நண்பன் செலவில் சிவாஜி பார்க்கவைக்கப்பட்டேன். முன்னது சொசெசூ என்றால், இரண்டாவது அசெஆ. இதுவரை தனியாக திரையரங்கு செல்லாத நான், இப்படம் பார்க்க ஒரு நாளுக்கு முன்பே ஒரு இருக்கை முன்பதிவு செய்திருந்தேன். நேற்று திரையரங்கு சென்றிருந்த போது, கவ்ண்டரில் இரண்டு நாளுக்கான டிக்கெட்டும் விற்றுவிட்டதாக பலர் திரும்பி வந்தனர். எனக்கான டிக்கெட்டை மெஷினில் எடுத்துக்கொண்டு, அரங்கினுள் சென்றமர்ந்தேன். 15:30 க்கு ஆரம்பித்த படம் 17:15 க்கு முடிந்தது. இடையில் 10 நிமிட இடைவெளி. கூட்டிக்கழித்து பார்த்தால், பல இடங்களில் வெட்டப்பட்டுள்ளது தெளிவாகியது. ஏற்கனவே வெட்னஸ்டே பார்த்திருந்ததால், வெட்டல் வெளிச்சமாகியது. மாலையில் ஒரு பிறந்த நாள் விருந்தில் கலந்து கொண்டேன். மிக்ஸிங் சரியில்லை என்று பலருக்கும் வருத்தம். 22 மணிவாக்கில் வீடு வந்து இழுத்து போர்த்தி உறங்கிவிட்டேன்.

காசு கொடுத்து பார்த்ததற்காக விமர்சனம் பண்ணியாக வேண்டுமா? அது மட்டுமின்றி எனக்கு சினிமா விமர்சனம் வருவதில்லை. விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே, கண்ணில் ஆலிவ் ஆயில் ஊற்றி திரைப்படம் பார்ப்பதில்லை. பொழுது போனால் சரியே. ஆனாலும், ஒரு முயற்சி செய்து நிறை குறைகளைச் சொல்கிறேன்.

‘கமல் அசத்திவிட்டார்’ என்று சொல்ல,  அவர் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக நடித்துவிடவில்லை. அவர் ஏன் இந்தப் படத்தில் நடித்திருக்க வேண்டும், என்பதே பலரின் கேள்வி, என்னதும். புதனில் நஸ்ருத்தீன் ஷா நடிப்பை பார்த்தவர்களுக்கு இது பிரமாதமாக தெரியாது. அதே போல், நஸ்ருத்தின் ஷா, ஒலக நாயகன் ஆகிவிட முடியாது.

நிறை.
 • 1 1/2 மணிநேரம் பொழுது போனது தெரியவில்லை. கொடுத்த காசுக்கு பாதகமில்லை. (போன பொழுது, சற்று கவலையோடு போனது வேறு விஷயம்.)

குறைகள் அல்லது யதார்த்த மீறல்கள்.
 • வெற்று பைகளை பொது இடங்களில் வைப்பதாக சுற்றப்பட்ட காட்சியமைப்பு தேவையில்லாதது. அதே போல, பல இடங்களில் சுற்றியிருக்கிறார், காதிலும்.

 • மாடியில் ஏறும் போது, இஸ்லாமியர்களின் இறை வழிபாட்டு அழைப்பான ‘பாங்கு’ சொல்லப்படும். அது நேரம் தோராயமாக 8 - 9 மணியிருக்கலாம். அந்நேரத்தில் (காலை 6 லிருந்து உச்சி 12 வரை) ‘பாங்கு’ சொல்லப்படுவதில்லை.

 • 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்திற்கு பழிதீர்க்கவே 1998ல் கோவையில் குண்டுவைத்ததாக தீவிரவாதிக்கு கொசுவத்தி. (கமலுக்கும் தேசிய வியாதி?)

சில சந்தேகங்கள்.
 1. ஊடகத்துறையில், எல்லா பெண்களும் புகை பிடிக்கிறார்களா?பெண்களிடம் மைக்கை கொடுத்து, கேமரா பிடிப்பது தான் ஆண்கள் வேலையா?

 2. எல்லா கணவன்களும் மனைவியிடம் அடி வாங்குகிறார்களா?மனைவியிடம் அடிவாங்கும், எல்லா கணவன்களும் காவல்துறையில் புகார் செய்கிறார்களா?

 3. எல்லா வீட்டிலும் சந்தைக்குச் செல்வது கணவன்களா? காலையில் தக்காளி வாங்க சென்றவர், மாலையில் தான் வீடு திரும்புவாறா? மாலை வீடு திரும்ப இருப்பவர் ஏன் காலையே தக்காளி வாங்க வேண்டும்?

 4. எல்லா கணினி ஹேக்கர்களும் ஒரு மாதிரி தலையை ஆட்டி ஆட்டித்தான் பேசுவார்களா?

 5. எல்லா கணினி மேதைகளும், ஒரு முறை பாவித்த மடிக்கணினியை மறு முறை பாவிக்க மாட்டார்களா?

 6. வாங்கிய 6 கிலோ ஆர்டிஎக்ஸில், காவல் நிலையத்தில் வைத்தது போக மீதி எங்கே?

 7. ரிலையன்ஸில் போலி சிம் வாங்குவது எளிதா? 5 அல்லது 6 முறை தொலைபேசுவதற்கு, ஒரு பிஸ்னஸ் கார்ட் ஆல்பம் முழுவதும் சிம் கார்ட் வைத்திருப்பது ஏன்?

 8. வெடிகுண்டு தீவிரவாதிக்கு, வெடிகுண்டு தண்டனை, சரி. பிறப்புறுப்பில் கைவைத்த தீவிரவாதிக்கு? :-( தீவிரவாதத்திற்கு தீவிரவாதம் தான் தீர்வா? எனில், குறை எண். 3 ற்கும் இதற்கும் தொடர்புள்ளதா?  ஆம் எனில், ஒவ்வொரு காமன் மேனுக்காகவும் ஆர்டிஎக்ஸ், ரேஷன் கடையில் விற்பனை செய்ய வேண்டி வருமே... யு... ஸ்டுப்பிட் காமன் மேன்.

வெட்னஸ்டே பார்த்தவர்களும் ஒரு முறை பார்க்கலாம்.

மாறுபட்ட விமர்சனங்களுக்கு - உன்னைப் போல் ஒருவன் - வலையுலக விமர்சனங்களின் தொகுப்பு – உண்மைத்தமிழன்.


Sep 21, 2009

மோசடி, பெண்ணியம், தமிழ்மணம் - ஜிகர்தண்டா

சிட்டி லிமோஸின்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிதி நிறுவனம், 500 கோடிக்கும் மேல் மோசடி செய்திருப்பதாக செய்தி.

குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாய் சொல்லும் எவனும் நேர்மையான தொழிலில் (அல்லது எந்த தொழிலிலும்) முதலீடு செய்திருக்க முடியாது. அவனும் ஏதாவது மோசடி செய்துதான் தன் பங்காளர்களுக்கும் அதன் லாபத்தை பங்கிட்டுத்தர முடியும். மோசடிகள் நீண்ட நாட்களுக்கு நடக்காது. இனிதே ஒருநாள் இடியோடு நிறைவுபெறும். பிறகு சொல்ல வேண்டியது தான், ஸ்டார்டிங்கெல்லாம் நல்லாத்தான் இருந்தது, ஆனா.. ஃபினிஷிங் சரியில்லையேப்பா… என்று. எவ்வளவு அடிச்சாலும் தாங்குற ரொம்ப நல்ல வடிவேலுவை விட, ரொம்ப ரொம்ப நல்ல மக்கா… திருந்தவே மாட்டீங்களா? வால் ஸ்ட்ரீட்காரனே வேர் கடல தின்னுக்கிட்டிருக்கான். இந்தியா லிமிடட்னு பேர் இருந்ததால, நம்பி இன்வெஸ்ட் பண்ணிணோம்னு ஒரு பெண் சொல்கிறார்… அளவுக்கு அதிகமா அசைப்படுகிற பெண் மட்டுமல்ல… எவனும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்ல. – வேதனை.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

திருநாவுக்கரசர், காங்கிரசுக்கு தாவுகிறாராம்.

தவறான இடத்தில் இருக்கும் நல்ல மனிதர் என்று சொல்லப்பட்டவர், திருநாவுக்கரசர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், ராமநாதபுரத்தில், இவருக்கே வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக பரவலாகப் பேசப்பட்டது. இவருக்கு பயந்து, ரித்தீஷ் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து டிவிஎஸ் நகரில் ரூம் போட்டு விட்டதாக சொல்லப்பட்டது. கடைசியில் திருநாவுக்கரசர் சார்ந்திருந்த கட்சியின் தமிழக எதிர்ப்பு அலை காரணமாக தோற்கடிக்கப்பட்டார். கட்சி மாறும் அவரை வரவேற்போம். – வாழ்த்துக்கள்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

புதசெவி – பெண்ணியம் என்றால் என்ன? அமெரிக்க பெண்ணியம், இந்திய பெண்ணியம், தமிழ் பெண்ணியம், மதுரை பெண்ணியம் என்று வேவ்வேறு பெண்ணியம் உள்ளதாமே, அமெரிக்கா சென்ற மதுரைப் பெண்ணுக்கானது எந்தப்பெண்ணியம்? அவரே திரும்ப மதுரை வந்தால்? அனைத்து பெண்ணியத்திலும் பொது அம்சமாக இருப்பது ஆண்களை எதிர்ப்பதும், காப்பி அடிப்பது மட்டும்தானா?

சரி.. ஆணியம் என்றால் என்ன? பெண்ணியத்திற்கு எதிராக பேசுவதா? பெண்ணியவாதிகள் லெஸ்பியன் ரைட்ஸ் கேட்பது போல, ஹோமோ செக்ஸூவல் ரைட்ஸ் கேட்பது ஆணியமா? – புதசெவி.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

திரட்டிகளில் நான் இணைக்காத, இணைக்க விரும்பாத, என் இடுகையை தமிழ்மணத்தில் வேறொருவர் இணைக்கிறார். மற்ற திரட்டிகளில் இணைத்தவர் யாரென தெரிந்து கொள்ள முடிகிறதே? தமிழின் முண்ணனி திரட்டியான தமிழ் மணம் அந்த வசதியை வழங்க முடியாதா? அதே போல… ஓட்டுப்போட்டவர் யாரென தெரிந்து கொள்ளவது, இடுகையை இணைத்தவருக்கு மட்டும் ஓட்டுப்போட்டவர் யாரென தெரிந்து கொள்ளும் வசதி கொடுக்கலாமே. எக்ஸ்ப்ளோரரில், ஓட்டு எண்ணிக்கையும் தெரிவதில்லை. அண்மை காலங்களில் தமிழிஷில் இருந்து பதிவுக்கு வருபவர்கள் எண்ணக்கை கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. – ஆலோசனை.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

சென்ற வாரம் வாசித்ததில் மோகன் கந்தசாமியின் போலி டோண்டு விவகாரம் என்ற தொடர் இடுகை (இதுவரை 6 பகுதிகள்), ஒரளவு இந்த விவகாரத்தை புதியவர்களுக்கு புரியவைக்கிறது.

மூர்த்தியின் தந்தை திரு. மருதமுத்து, கீழ்திருப்பாலக்குடி மண்ணார்குடியில் நேற்று காலமானதாக செய்தி – அன்னாருக்கு அஞ்சலி.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

பால்பொருள் அங்காடியில் ஒருவர் அரைக் கிலோ வெண்ணை வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு கடை பணியாளர், ‘இங்கு ஒரு கிலோ பேக்தான் இருக்கிறது, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… மேனேஜர் கிட்ட கேட்டுட்டு வரேன்’ என்று உள்ளே சென்று மேனேஜரிடம் கேட்கிறார். ‘சார்.. ஒரு வெண்ணை வந்து அரைக் கிலோ வெண்ணை வேணும்னு கேட்கிறான்’ என்று சொல்லிவிட்டு திரும்பும் போது வெண்ணை கேட்டவர் பின்னால் நின்று பேசுவதை கவனித்துக்கொண்டிருக்கிறார். உடனே கடை பணியாளர், ‘அதே மாதிரி இந்த ஜென்டில் மேனுக்கும் அரை கிலோ வேணுமாம்’ என்று நிலைமையை சமாளித்தாராம்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

ஜிகர்தண்டா எழுதுவது எனக்கு எப்போதும் எளிதாக இருக்கிறது. இரண்டு, மூன்று வரிகளை வைத்து பில்ட்அப் கொடுக்கலாம். அதிகம் யோசிக்க வேண்டாம், (மற்ற இடுகைகளுக்கு!?), சமகால நிகழ்வுகளில் நமது கருத்தை சொல்லிக்கலாம். ஒரு வணிகத் திரைப்படம் போல, சென்டிமெண்ட், காமெடி, அதிரடி என எல்லாம் அமையப்பெற்று கமர்ஷியலாக இருப்பது. இப்படியே எழுதுவதால் என்றாவது ஒருநாள் சுவாரஸியமாக எழுதிவிட மாட்டோமா என்று கனவோடு எழுதுவது.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

clip_image001

Sep 18, 2009

யானைக்கு மதம் பிடிக்கும், வாலுக்கு?

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. – குறள்.

மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும். – உரை.

என் நண்பர், எங்கள் ஊர்காரர், என் முந்நாள் தெருவாசி, கோபக்காரர் திருமிகு வால்பையன் என்ற அருண் அவர்கள், இஸ்லாத்தை பற்றி தெளிவுபடுத்த கேட்டிருந்தார். அவருக்கான ப்ரத்தியேக இடுகை. என் நிலையை அவருக்குத் தெளிவுபடுத்துவதால் எங்கள் நட்பு பலப்படும் என்பதாலேயே இந்த இடுகை. இதன் உள்அர்த்தங்கள் எங்கள் இருவருக்கும் தெரியும் என்பதால் கலகக்காரர்களை கண்டு பயமில்லை. என்ன வால் நான் சொல்றது?

"இஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் குறித்து இன்னும் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் விமர்சிக்கும் தகுதிக்காகவாவது படித்து தெரிந்துகொள்ளுங்கள், பின்பு விவாதிக்கலாம்" என்று நான் சொன்னதற்கு...

வால்பையன், "படித்து தெரிந்து கொள்வதற்கு பதில் இப்போது உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன்! படி படி என்று சொல்லமால் நீங்கள் படித்ததை தெளிவுற சொல்லி கொடுங்களேன்!" என்று கேட்டிருந்தார்.

மிக்க மகிழ்ச்சி வால், இந்த தெளிவு ஒரு பொருளின் மீது விமர்சனத்தை வைக்கும் முன்பு இருந்திருக்க வேண்டும். பிழையான கருத்தை, ஆதாரமில்லாத குற்றச்சாட்டை அவையில் வைக்கும் முன்பு, அதை பாவிப்பவர்களின் புத்தகங்களை படித்தோ அல்லது நண்பர்களிடம் கேட்டோ தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பது தான் நான் சொன்னது. இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு, அதை கற்றுத்தேர்ந்த நம் பரஸ்பர நண்பர் அ.மு.செய்யது மற்றும் தேடிப்படித்த நான் இருக்கிறேன். இஸ்லாத்தை பற்றிய சந்தேகத்தை எந்நேரமும் எப்படியும் கேட்கலாம். (இரவு 12 மணிக்கு எழுப்பி, உன் பெயர் என்ன என்றும் என்னிடம் கேட்கலாம். மாத்ருபூதம் மாதிரி கோவப்படமாட்டேன். எனக்கு இப்போ நைட் ஷிஃப்ட் :-) ) உங்களுக்கான சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக எனது தேடல் இன்னும் அதிகமாகும் என்பதில் கூடுதல் மகிழ்ச்சியே. அது கிடக்கும்...

முஸ்லீம்கள் அரபியில் வழிபாடு நடத்துவதேன்? அல்லாவுக்கு அரபி மட்டும் தான் தெரியுமா?

முதலில் ஒரு விஷயம் புரிந்து கொள்ளுங்கள். எந்தவொரு மொழிக்கும் தனிச்சிறப்பென்பது கிடையாது. அதே போல எந்த மொழியும் தாழ்ந்த மொழி கிடையாது. அது காலத்தால் அழிந்த மொழியானாலும், பன்நெடுங்காலம் வாழ்ப்போகும் மொழியானாலும் சரியே. ஒரு மொழியில் புலமை பெற்றவர்கள், அதன் ஈர்ப்பினால், அம்மொழி மீது பற்று கொள்வது இயல்பே. அதேபோலத்தான் ஒருவர் தாய்மொழிப்பற்று கொள்வதும் இயற்கை, கடமை.

அரபி மொழி பேசுவர், அரபி அல்லாத மொழி பேசுபவரை விட உயர்ந்தவர் அல்லர். அரபி அல்லாத மொழி பேசுபவர், அரபி பேசுபவரைவிட உயர்ந்தவர் அல்லர் என்பது முஹம்மது நபியின் வாக்கு. (நபி = தூதர்)

வழிபாட்டிற்கான அழைப்பு அரபியில் 'அல்லாஹூ அக்பர்...' என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். இதை தமிழில்,' இறைவன் மிகப்பெரியவன்... வழிபாட்டிற்கு வாருங்கள்...' என்பதாக மொழி மாற்றம் செய்யலாம். சரி... இதை தமிழிலேயே சொல்லலாமே.. என்று கேட்பீர்கள். இஸ்லாம், ஒரு குறிப்பிட்ட பிராந்திய மக்களின் மார்க்கம் இல்லை. உலகம் முழுமைக்குமான மார்க்கம். அரபுநாட்டில் இருக்கும் தமிழ், மலையாளம், தெலுகு, பெங்காளி மற்றும் இன்னபிறவற்றை பேச்சு மொழியாக் கொண்டவர்களையும் இறை வழிபாட்டிற்கு அழைக்க ஒரு பொதுமொழியான குர்ஆன் எழுதப்பட்டிருக்கும் அரபியிலேயே 'பாங்கு' எனப்படும் வழிபாட்டிற்கான அழைப்பு விடுக்கப்படுகிறது. இதைக்கேட்பவர்கள் வழிபாட்டுதளம் சென்று தனது கடமையை நிறைவேற்றுகின்றனர். இறை வழிபாடும் அரபியிலேயே நிறைவேற்றப்படுவதற்கு காரணம் இதுவே. தனிப்பட்ட வேண்டுதல்களை அவரவருக்கு விருப்ப மொழியிலேயே கேட்டுக்கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே நிலைதான் மலையாளிகள் அல்லது நைஜீரியர்கள் தமிழ்நாடு வந்தாலும். மேலும், உலகெங்கும் வழிபாட்டை ஏற்று நடத்த, “அரபி கற்றவர், வயதில் மூத்தவர்” என்ற தகுதியே போதுமானது. அரபு நாட்டில் நானும் வழிபாட்டை முன்நின்று நடத்தியிருக்கிறேன். எனக்கு பிறகு வந்த அரபிகள் பின்னால் நின்று, என்னை தொடர்ந்தே இறைவனை வழிபட்டனர். (கருப்பர்கள், வெள்ளையர்கள், அரபிகள், அரபி அல்லாதோர் என்ற பாகுபாடும் இஸ்லாத்தில் இல்லை என்பதற்கும் இதை உதாரணமாக சொல்லலாம்) இறை வழிபாட்டிற்கு மொழி குறுக்கீடாகக்கூடாது என்பதே இதன் சாராம்சம்.

சரி… குர்ஆன் ஏன் அரபியில் இருக்க வேண்டும்? - முஹம்மது நபி அரபு நாட்டில் வாழ்ந்தார். அரபு மொழி பேசினார். அதனாலேயே அவருக்கு குர்ஆன் அரபி மொழியில் அருளப்பட்டது.

அன்னிய மொழியான அரபியை தமிழர் ஏன் படிக்க வேண்டும்? - மேற்சொன்ன ஒருமைப்பாட்டிற்குத்தான் அரபியை கற்றுக்கொள்கிறோம். மட்டுமல்லாது, அரபியில் உள்ள குர்ஆனை நேரடியாக விளங்கிக் கொள்வதற்காகவும்தான்.

அரபி தமிழர்கள் மீது திணிக்கப்படுகிறதே? - இல்லை. இது முற்றிலும் தவறான கருத்து. அரபி எந்த தமிழக பள்ளியிலும் கட்டாய பாடமில்லை. ஹிந்தி திணிப்பை எதிர்த்த நண்பர்கள், “ஹிந்தி தேவைப்படுவோர், விருப்பமுள்ளவர்கள் மட்டும் படிக்கட்டும்” என்று சொன்னது போல, விருப்பமுள்ளவர்கள் மட்டுமே, விருப்ப பாடமாக அரபியை படிக்கிறார்கள். அரபி படிக்கத்தெரியாத முஸ்லீம்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்கள், தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆனை படித்து விளங்கிக்கொள்கின்றனர். (குர்ஆன், பெரும்பாலான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்திலும் கூட) விரும்ப பாடமாக அரபி படிப்பவர்களிடம், ‘அது கூடாது, தமிழில் மட்டுமே படி’ என்று சொல்வதும் திணிப்புதான். அந்த திணிப்பு தவறென்றால், படிப்பதை தடுக்கும் இந்த திணிப்பும் தவறுதான்.

“இந்துக்கள் அனைவரும் சமஸ்கிருதத்தில் தான் பூஜை செய்ய வேண்டும் என்ற பார்பனீய சிந்தனையை ஒட்டி வருகிறது இது!, நான் பதிவில் கேட்டது போல் இஸ்லாமியர்களுக்கும் பார்பனீய சிந்தனை உள்ளதா?” – வால்பையன்.

வால், அரபியே முஸ்லீம்களின் பொது மொழியாக இருக்கிறது. அவ்வாறு இருப்பது எந்த ஒரு முஸ்லீமிற்கும் தொந்தரவில்லை என்பதால், அதையே அனைத்து முஸ்லீமும் விரும்புகின்றான். இதில் உங்களுக்கு ஏதாவது தொந்தரவு இருக்கிறதா? குறிப்பாக, கடவுளே இல்லை என்று சொல்லும் உங்களுக்கு, அவரை நம்புபவர்கள் எந்த மொழியில் வழிபாடு செய்தால் என்ன?

வால், நீங்களாக கேட்கும் கேள்விகளை விட, முகம் இல்லாதவர்கள் பத்தவைத்துவிட்டு போகும், முற்றிலும் அடிப்படை அறிவற்ற, ஆதாரமற்ற, கேவலமான கருத்துக்களைத்தான் ‘ஆமாம், எனக்கும் அதே கேள்வி உண்டு, நானும் அதுதான் நினைத்தேன்’ என்பதாக அதிகம் சொல்கிறீர்கள்.

எந்த சந்தேகம் என்றாலும் நேரடியாக கேட்கலாம். குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் சொல்லலாம்.

முன்பு உங்களுக்கு அதிகமான இஸ்லாமிய நண்பர்கள் இருந்ததாகவும் இப்போது குறைந்து விட்டதாகவும் அதனால் பிரியாணி வருவதில்லை என்றும் சொல்லியிருந்தீர்கள். ஆம்.. எனக்கும் தான். முன்பு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருந்தார்கள். இப்போது அவர்களுடைய தொடர்பில்லை. வேறென்ன… சோம்பேறித்தனம், அலுப்பு. ஆனால் எனக்கு சிறந்த நண்பர்கள் இப்போது கிடைத்துள்ளார்கள், வால்பையன், கோவியார், டக்ளஸ், கார்த்திகை பாண்டியன், லோகு, பாலா, ஜெகநாதன், மணிகண்டன், அப்துல்லா அண்ணன், செய்யது மற்றும் முகம் தெரியா பலர். உங்கள் குறை பிரியாணிதான் என்றால் நமது அடுத்த சந்திப்பில் என் வீட்டு பிரியாணி சாப்பிடலாம். ;)

 • இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் அபாண்டமாக குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிப்பதே நோக்கம். இவற்றை சொல்லாமல் விட்டால், தவறான எண்ணங்கள் வால்பையன் மனதிலும் உங்கள் மனதிலும் தங்கிவிட சாத்தியமுண்டு என்பதால் மட்டுமே. என் நண்பர்கள் மனதில் என்னைப்பற்றிய தவறாக எண்ணம் இருப்பதை நான் விரும்பவில்லை. எனக்கு கலங்கமில்லா நட்பு முக்கியம்.
 • மாற்று மத நண்பர்களின் கடவுள் கொள்கையையோ, அவர்களின் நம்பிக்கையையோ நான் எங்கும் கேள்வி எழுப்பியதில்லை. அது அவர்களின் நம்பிக்கை. என் பார்வையில் படுவதை கேள்வி கேட்க, கருத்து சொல்ல முழு உரிமை இருந்தும், நம் பண்பாடு, நாகரிகம் அதை செய்யச்சொல்லவில்லை.
 • அதற்காக இஸ்லாம் விமர்சனத்திற்கு அப்பார்பட்ட மார்க்கம் என்றும் சொல்லமாட்டேன். உங்கள் சந்தேகங்களை, தனி மெயிலில் அனுப்புங்கள். பதில் மெயிலிலோ அல்லது நீங்கள் விருப்பப்பட்டால், தனி இடுகையிலோ விவாதிப்போம்.

நன்றி.

Sep 15, 2009

இணைய விவாதம்

இணையம் தந்திருக்கிற கட்டற்ற பயன்பாடுகளில் ஒன்று, விவாதபயன். பிற தளங்களில் நடத்தப்படும் விவாதங்களை விட இணையதளத்தின் விவாதங்களுக்கு தனிச்சிறப்புகளுண்டு. விவாதிப்பவர் தனது முகம் மறைத்தும் மாற்றுத்தரப்பின் முகம் காணாதும் விவாதிப்பதால், தன் கருத்தில் நிலையாக நின்று, வேறெந்த விசயத்திற்கும் சமரசம் ஆகாமல் தயக்கமின்றி விவாதிக்க முடிகிறது. இதுவே இணைவிவாதத்தின் நேர் மற்றும் எதிர்மறை விழைவாகிப்போவதால், பெரும்பாலான இணைய விவாதங்கள் கருத்து ஒன்றுபடாமலேயே விழலுக்கு இரைத்த நீராகி விடுகிறது என்பதை நான் இதற்கு முன்னரும் சொல்லி உங்களை அலுப்படையச் செய்திருக்கிறேன். பலர் தன் கருத்தை முன்வைத்து அலுப்படையாது திரும்ப திரும்ப விவாதிப்பதாலேயே எதிர் கருத்தாளனிடம் தன் கருத்து சென்றடையும், அதையே மிகப்பெரிய வெற்றி என நான் கருதுகிறேன். ஒத்த கருத்துள்ளவர்களிடமே தமது நட்பை வளர்த்துக்கொண்டு, அதையே பெரும்பான்மை கருத்தாக முன் முடிவோடு விவாதிக்கும் சிலரிடம் இக்கருத்துக்கள் சென்றடைவதால் யாராவது மனம் மாற வாய்ப்புண்டு. குறைந்தபட்சம், மாற்றுக்கருத்தின் ஆழத்தன்மையாவது புரியப்பட்டு விவாதிப்பதிலிருந்து ஒதுங்கியிருக்கும் 'வெளியிலிருந்து ஆதரவு' என்ற நிலையாவது வரலாம். மீண்டும் மீண்டும் ஒரே வாதத்தை முன்வைப்பதால் வேறொரு அபாய எதிர் வினைக்கான வாய்ப்புமிருக்கிறது. இதற்கு மிகச்சமீபத்திய உதாரணமாக ஒரு நபரை தாக்கி வரும் நீண்ண்ட இடுகைகளைச் சொல்லலாம். அடுத்தடுத்து எய்யப்படும் அம்பின் ஒரே குறியும், எதிர்தரப்பின் மௌனமும், ஒரு வேளை இதில் உண்மை இருக்குமோ என்ற எண்ணத்தை (என் போன்ற அப்பாவிகளுக்கு) ஏற்படுத்துவதை தவிர்க்க முடிவதில்லை. ஆனால், இவை உண்மை (க்கு பித்தம் தெளிந்து) வெளிச்சத்திற்கு வரும் வரை மட்டுமே என்பதால் இவ்வகை வினைக்கு பெரிதாக அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்பது என் புரிதல். மட்டுமல்லாது, தெரியாத விசயத்தில் மூக்கை நுழைப்பானேன். மீ த எஸ்கேப்பு... ஒருவரின் நம்பிக்கையுடன் எதிர் வாதம் செய்வது, வீண் விவாதமாகி வெற்றியடையா நிலையிலேயே தாவு தீர்ந்துவிடும். எதிர் கருத்துக்களுடன் செய்யும் விவாதமே, ஓரளவு பயன் தரும் என்பதும் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய புரிதலாக இருக்கிறது. உதாரணமாக, தமிழனுக்கு தமிழ் நம்பிக்கை, ஹிந்தி பற்றிய கருத்துக்கள் எதிர் கருத்துக்கள். ஒருவரின் நம்பிக்கையை சந்தேகப்பட்டு தகர்க்க முயற்சிக்காமல், மாற்று கருத்துக்களுடன் விவாதிப்பதே ஆரோக்கிய விவாதமாகி பயன் தரலாம். நமது நம்பிக்கை தமிழ் மீதென்றால், அவர்கள் நம்பிக்கை ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் இன்னபிற மொழிகளின் மீதிருக்கிறது. அவர்கள் கொண்டிருப்பது தமிழ் மீது எதிர் கருத்து. அவர்களின் எதிர்கருத்தான தமிழின் பயன்பாடுகளைச் சொல்லியே அவர்களிடம் விவாதிக்க வேண்டும். மாறாக, எல்லாத்தரப்பிலும் ஒரே விவாதத்தை எடுத்துச் செல்வது, விவாத முரணாகிவிடுகிறது. சரி.. விசயத்திற்கு வருவோம். ஹிந்தி கற்பது பாவச்செயலா என்ற எனது இடுகைக்கு வரிக்கு வரி வரிந்து கட்டிக்கொண்டு எதிர்வினையாற்றிய மருத்துவர் புருனோ, கோவியார் மற்றும் ஏனைய நண்பர்கள் ஏனோ என் எண்ணங்களை புரிந்து விவாதித்ததாகத் தெரியவில்லை. அது வழக்கமான கும்மி என்றாகும் பொருட்டு அதை குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், நான் மேல் சொன்னது போல, எதிர்கருத்தாளின் மனதிற்குள் நம் கருத்து சென்றடைய வேண்டுமாயின், முதலில் அவன் நிலைபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். ஹிந்தி கற்பது குறித்தான என் நிலைபாடு, 'ஹிந்தியும் ஒரு விருப்ப பாடமாக இருந்துவிட்டு போகட்டுமே' என்பதாகத்தான் இருந்தது. அந்நிலையை ஹிந்தி மீதான ஒரு அனுதாபம் என்பதாகவும் கொள்ளலாம். அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் சொன்னேன், 'எனக்கு உங்கள் நிலைப்பாட்டை தெளிவாக்கி, என்னை என் நிலையிலிருந்து மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், ஹிந்தி கற்பதால் உள்ள பாதகங்களை மட்டும் சொல்லுங்கள் அதுவே உங்களுக்கு உதவக்கூடும்' என்பதாக. ஆனால் துரதிஷ்டமோ அல்லது அதிஷ்டமோ, ஹிந்தியை ஆதரிப்பவன் 'தமிழ் மொழிப்பற்று இல்லாதவன்' என்பதான தங்களுடைய தவறான எண்ணத்தில் நின்றே கடைசிவரை விவாதித்தனர் என்பதை விவாத நடையிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களுக்கு விளங்கவைக்க எனது தமிழ் பற்றை சற்று ஓவர் ஆக்டிங் செய்தும் பலனில்லை. என் சிந்தனையை இவர்கள் பக்கமாய் விரிவடையச் செய்ய முடியாது போனதிற்கு, இவர்கள் (என் மொழிப்பற்றை சந்தேகிக்கும்) சிந்தனையை விட்டு வெளியே வராததுதான் காரணமென்பேன். ஆனால், ஹிந்திக்கு போதாகாலம் நண்பர் Maximum India, தனது விவாதத்தை சரியான திசையில் கொண்டு சென்றது. ஒரு சாதாரண இணைய அரட்டை என்பதாகவோ, இவனுக்கு சொன்னால் விளங்கிவிடவா போகிறது என்பதாகவோ எண்ணாமல், எனக்கு என்ன சொல்லவேண்டுமோ அதை அருமையாகச் சொன்னார். ஒருவருடைய நம்பிக்கையை புறக்கணிக்காமல், கருத்தில் மட்டும் மாறுபடும் வேளையில் அவருடைய நம்பிக்கையையே தமக்கு சாதகமாக்கி விவாதிப்பது. அதாவது, ஒரு ஹிந்தி ஆதரவாளின் தமிழ் பற்றை சந்தேகிக்காமல், அவனது தமிழ்பற்றையே மூலதனமாக்கி விவாதத்தை நகர்த்துவதென்பது, வெற்றியை நோக்கி நம்மை நகர்த்திச்செல்வது போன்றாகும். இதில் கவனிக்க வேண்டிய விசயம், அவர் ஹிந்தி கற்றிருந்ததால், 'ஹிந்தியே தேவையில்லை என்ற ஹிந்தி எதிர்ப்பிலிருந்து விலகி, தேவைப்படுவோர் கற்கலாம்' என்பதாக என் கருத்தை ஒரளவு ஒட்டியே சொல்லி என்னை கவனிக்கச்செய்தது. அது மட்டுமின்றி, உங்களுக்கு தேவை என்றால், '3 நாட்களில் ஹிந்தி கற்பது எப்படி' என்ற பதிவு இடுகிறேன் என்றும் சொன்னார். இம்மாதிரியான விவாத போக்கே, மாற்றுக் கருத்தாளனின் தன்மையை மாற்றக்கூடியது என்பதை மீண்டும் ஒரு முறை அறிந்துகொண்டேன். ஆம்... எதிர் கருத்தின் ஆழத்தை புரிந்து கொண்டேன். என்னை தெளிவுபடுத்தி சிந்தனை விரிவடையச்செய்ய, மாற்றுக்கருத்திற்கும் தளம் அமைத்து விவாத தன்மை மாறாது நடைபெறச்செய்த வலைப்பூ உலகத்திற்கு நன்றி. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். - பொருட்பால் சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள். - உரை

Sep 7, 2009

அந்தரங்க கேள்விகள் – அதிரும் ஸ்டார்

நாம், நம் நண்பனுக்கு உண்மையாக இருக்கிறோமா? உறவினரிடத்தில்? மனைவியிடத்தில்? அட…முதலில் நாம், நமக்கு உண்மையாக இருக்கிறோமா? நமக்கு மட்டுமே தெரிந்த அந்தரங்க உண்மைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது, ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியின் ‘ஸச்கா சாம்னா’ என்ற தொடர், இதை 'உண்மைக்கு எதிராக' என்று தமிழிலும் படுத்தலாம்.

sackkasamna_full

இது ஒரு கேம்-ஷோ. இதில் பங்கு பெறுபவருக்கு நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பாக, உண்மை கண்டறியும் (polygraphic) சோதனையில் 50 கேள்விகள், அவர் கடந்து வந்த வாழ்க்கை பாதையில் இருந்தே கேட்கப்படுகிறது. அவற்றில் தேர்ந்தெடுத்து கேட்கப்படும் 21 கேள்விகளுக்கான பதிலை நிகழ்ச்சியில் கேமரா, மனைவி, உறவினர்கள், நண்பர்களுக்கு முன்பாக சொல்ல வேண்டும். சொல்லப்படும் பதில், உண்மையறியும் சோதனையில் அவர் சொல்லியிருந்த பதிலுடன் ஒத்திருந்தால் பரிசு. 21 கேள்விகளுக்கும் சரியான பதில் ‘உண்மை’ சொல்லப்பட்டால் 1 கோடியாம். மற்ற கேம் ஷோக்கள் போலத்தான் விதிமுறைகள், இடையேயும் விலகி போகலாம. கேள்விகள் எது மாதிரியாகவும் இருக்கும். பதில், இனிக்குமா? கசக்குமா? உண்மை… எப்படியிருக்கும்? தெரிந்து கொள்ள நிகழ்ச்சியில் ஒருவருக்கு கேட்கப்பட்ட கேள்விகள்.

அவர் இந்திய விமான படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். நிகழ்ச்சிக்கு அவரது மனைவி, சகோதரன் மற்றும் அவருடைய மனைவி, நண்பர் ஆகியோர் பார்வையாளர்களாக வந்திருக்கிறார்கள். கேள்விகள்…

 1. விமான படையில் தங்களுக்கென வழங்கப்படும் மது வகைகளை வெளியே அதிக விலைக்கு விற்பனை செய்திருக்கிறீர்களா? பதில்: ம்யூட் செய்யப்பட்டுவிட்டது.
 2. பள்ளியில் படிக்கும் போது, பாலியல் புத்தகங்கள் படித்து ஆசிரியரிடம் மாட்டியதுண்டா? பதில்: ஆம்.
 3. உங்கள் மனைவி நன்றாக சமைப்பாரா? பதில்: இல்லை.
 4. உங்களைவிட உயரமானவர்களை கண்டால், தாழ்வு மனப்பான்மை வருவதுண்டா? பதில்: ஆம்.
 5. சகோதரனை, அவருடைய மனைவிக்கு எதிராக திருப்பி விட்டதுண்டா? பதில்: ஆம்.
 6. திருமணத்திற்கு பிறகு மனைவியிடம் அதிகமாக பொய் சொல்வதுண்டா? பதில்: ஆம்.
 7. இராணுவத்தில் இருந்த போது, இராணுவ விசாரனையில் குற்றம் சாட்டப்படும்படியாக (மாட்டியிருந்தால்) ஏதாவது செய்ததுண்டா? பதில்: ஆம்.
 8. உங்களுடைய தாயின் மரணத்திற்கு நீங்கள் காரணமென உணர்கிறீர்களா? பதில்: ஆம்
 9. உங்களுடைய மனைவி, உங்களைவிட சிறந்த கணவரை அடைய தகுதியுடையவர் என நம்புகிறீர்களா? பதில்: ஆம்.
 10. இரயிலில் பயணம் செய்த போது, உங்கள் மனைவி அருகில் இருந்த படுக்கையில் உறங்கிக்கொண்டிருக்க, வேறொருவரை உடல் ரீதியாக துன்புருத்தியதுண்டா? பதில்: ஆம்.
 11. தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் ஃபோன் செக்ஸ் செய்ததுண்டா? பதில்: ஆம்.
 12. விமான படையில் இயந்திர பணியாளராக இருந்த போது, கவனக்குறைவான ஏதேனும் வேலை செய்ததுண்டா? பதில்: ஆம்.
 13. விமான படையில் இயந்திர பணியாளராக இருந்த போது, நீங்கள் பணியாற்றிய ஏதேனும் விமானத்தின் விபத்திற்கு நீங்கள் காரணமாகியதுண்டா? பதில்: இல்லை.
 14. உங்கள் மனைவிக்குத் தெரியாத ஏதேனும் நோய் உங்களுக்கு உள்ளதா? பதில்: ஆம்.
 15. உங்கள் மனைவியை உண்மையிலேயே விரும்புகிறீர்களா? பதில்: இல்லை.
 16. பாலியல் தொடர்பிற்கான தேடுதலில், உங்கள் மனைவியுடைய ப்ரோஃபைலை இணையத்தில் கள்ளத்தனமாக ஏற்றியதுண்டா? பதில்: ஆம்.
 17. உங்களுடைய நிர்வாண புகைப்படத்தை முகம் தெரியாத வேறு யாருக்காவது அனுப்பியதுண்டா? பதில்: இல்லை.

தவறான பதில். அவர் வென்றிருந்த பத்து லட்சம் ரூபாயோடு வெளியேறினார்.

ஒவ்வொறு கேள்விகளுக்கும் இடையிடையே கலந்து கொண்டவருடைய கருத்தும் கேட்கப்படுகிறது. உறவினர் மற்றும் நண்பர்களுடைய கருதும் ஏதாவதிருப்பின். 15 ஆவது கேள்விக்கு அவரும் அவருடைய மனைவியும் தெரிவித்த கருத்து வியக்க வைத்தது. ‘இது எனக்கு முன்பே தெரியும்’ என்று மனைவியும். ‘விருப்பம், காதல் என்பதைவிட நான் அவளை கவனித்துக் (Care) கொள்கிறேன் என்பது தான் சரியாக இருக்கும்’ என்பதாக அவரும் சொல்கிறார்கள்.

‘ஸச்கா சாம்னா’ முதலாவது நிகழ்ச்சியின் கடைசிக் கேள்வி, திருமணமான பெண்ணிடம் கேட்கப்படுகிறது, “உங்கள் கணவரால் கண்டுபிடிக்க முடியாது என்றால், வேறு யாருடனாவது பாலியல் உறவு வைத்துக்கொள்வீர்களா?” உண்மை கண்டறியும் சோதனையில் அவர் சொல்லியிருந்த சரியான பதில் “ஆம்” என்பது. ஆனால் “இல்லை” என்பது தான் சரியான பதிலாக இருக்கக் கூடும் அல்லது இருக்க வேண்டும் என்ற சமூக நிர்பந்தத்தில் “இல்லை” என்று சொல்லிவிட, பரிசை இழந்தவராக வெளியேறியவருடைய திருமண வாழ்வு முறிந்து விட்டதாக செய்திகள் சொல்கின்றன. இனி அந்தப்பெண், தன்னுடைய மீதி வாழ்வை உண்மையறியும் சோதனையை மெய்பிக்க களிப்பாரா? அல்லது அதற்கு மாறாக சமூகத்திற்காக கழிப்பாரா? தெரியவில்லை :(

இந்த நிகழ்ச்சிக்கு சிலரை நான் முன்மொழிகிறேன்.

 • அரசியல்வாதி: ஊழல், லஞ்சம்.
 • ஆன்மீகவாதி: கடவுளுக்கு மாறு.
 • வழங்கறிஞர்: நீதிக்கு மாறு.
 • மருத்துவர்: யாரேனும் உயிரிழக்க காரணம்.
 • நான், நீங்கள்: சுய துரோகம்.

Sep 1, 2009

ஸ்விஸ், பதிவர் சங்கம், ஆன்மீகம் - ஜிகர்தண்டா

ஸ்விஸ் வங்கியிலிருக்கும் இந்திய கருப்பு பணத்தை மீட்க வருகிற டிசம்பர் மாதம் முதற்கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்படும் – நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.

ஜெஃப்ரி ஆர்ச்சருடைய கதையில் வரும் நைஜீரிய நிதியமைச்சர், தன் நாட்டு கருப்பு பண முதலைகளின் ஸ்விஸ் வங்கி கணக்கு விபரத்தை வெளிக்கொண்டுவர நடத்தும் முயற்சி நினைவு வந்தது. அந்த கதை உண்மை சம்பவத்தின் அடிப்படையில் பின்னப்பட்டதாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது. அதுபோலத்தானா இதுவும்?

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 24 அன்று, 20 மருத்துவர்கள், 14 மார்பக புற்று நோயாளிகளுக்கு, 3 மணிநேரத்தில் செய்த அறுவை சிகிச்சை சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அன்று அறுவை சிகிச்சையில் பங்கு பெற்ற ஒரு மருத்துவர் தொலைக்காட்சிக்கு பேட்டி தருகிறார் ‘நாங்கள் 10 நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்திருந்தோம். அப்போது உடன் இருந்த மருத்துவர் சொன்னார், இன்னும் 2 செய்தால் ஒரு டஜன் ஆகிவிடும் என்று. எனவே மேலும் இரண்டு பேருக்கு செய்ய தீர்மானித்தோம்’.

நம் மருத்துவர் இடுகை இன்னும் வரவில்லை. என்ன எழுதுவார்... அந்த அறுவை சிகிச்சை, சாதனைக்காக செய்யப்படவில்லை என்று புள்ளிவிபரங்களையும் ஆதாரங்களையும் அடுக்குவார். அதற்கு போலி மருத்துவர், ‘சாதனைக்காக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றி’ என்பதாக எழுதுவார். போலி மருத்துவர பார்த்திருக்கிறேன், ஆனா... மருத்துவருக்கு போலிய இப்பதான் பார்க்கிறேன்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

Body of Lies என்ற ஆங்கிலப்படம் பார்த்தேன். சர்வதேச தீவிரவாதத்தைFarahani ஒடுக்க பெரியண்ணன் நடத்தும் திட்டங்களும் நாடகங்களும் என படம் விருவிருவென நகர்கிறது. இடையே ஈரானிய செவிலிப் பெண்ணுடனான (ஃபராஹனி) காதலை ஒரு கோடு காட்டியபோது நினைத்தேன், ஆஹா… தீவிரவாத திட்டங்களுக்கிடையே காதலையும் தொட்டுக்கொள்கிறார்களே என்று. அந்த காதலே கதாவின் தலையை காவு கேட்கும் போது க்ளைமாக்ஸ்…டைட்டானிக் டி’ காப்ரியோ வா இது… அசத்தியிருக்கிறார்.

கிழக்கு பாட்காஸ்டில் ‘குரு’ பாராவுடனான தீவிரவாதம் பற்றிய ஒலிபரப்பு மனதில் ஓடியது. தீவிரவாதம் குறித்த சரியாக கணித்து சொல்கிறார். தீவிரவாதத்தில் டாக்டர் பட்டம் வாங்கிவிடுவார் போல…

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

வாசிப்பனுபவம் உள்ள சமுதாயம் வாழ்வில் முன்னேறும். அதை சமகால தமிழ் சமுதாயத்தில் காண முடிகிறது. வாசகர்களை கவரும் பல சூடான தலைப்புகளில் புத்தகங்களை அறிமுகப்படுத்திவரும் கிழக்கு பதிப்பகம், கிழக்கு புக் கிளப் என்ற சூப்பர் ஆஃபர் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அங்கு பட்டியலிடப்பட்டுள்ள கிழக்கு பதிப்பகத்தின் சில புத்தகங்களில், 20 (எந்தவிலை) புத்தகங்கள் வாங்கினாலும் அவற்றின் விலை ரூபாய் 1000/- மட்டுமே. நான் 1774 ரூபாய்க்கு வாங்கிய 20 புத்தகங்களுக்கு 1000 ரூபாய் மட்டுமே பில் வந்தது. மேலதிக விபரங்களுக்கு நண்பர் பத்ரி அவர்களின் பதிவு.

பட்டியலில் மேலும் சில பிரபல புத்தகங்களையும் சேர்த்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்பது என் கருத்து. சேர்க்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

சிங்கை செந்தில் நாதன் அவர்களுக்கு தமிழ் வலைபதிவர் மற்றும் நண்பர்களின் நிதி உதவி மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அன்றைய தினம் தூங்கி எழுந்ததும் முதலாவதாக அவருடைய சிகிச்சை என்னானது என்ற எண்ணம் தான் மனதில் ஓடியது. முகம் கழுவாமல் கூட கணிணியை திறந்து நிலையறிந்த பின்பே பதட்டத்தை தணித்து சுவாசிக்க முடிந்தது. நாம் கொடுத்த பணத்தை விட நம்முடைய பிராத்தனையே செந்தில் நாதன் அவர்களை காப்பாற்றியதாக நான் நினைக்கிறேன். மத, கடவுள், மொழி, இன, நாத்திகர், ஆத்திகர் என எந்த பேதமும் இல்லாமல் அவருக்காக அனைவரும் செய்த பிராத்தனையை, கடவுள் நிச்சயம் கேட்டிருப்பார் என்றுதான் நினைக்கிறேன். ஆன்மீகத்திற்கு எப்போதும் எதிர்வினையாற்றும் கோவியாருடைய சில நாள் ஸ்டேடஸ் மெஸேஜ் செந்தில் நாதனுக்காக பிராத்தனை செய்ய சொல்லியது. உயிர் என்று வரும் போது நாத்திகமாவது, சாத்திகமாவது.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

சென்ற வாரம் நான் வாசித்ததில் நண்பர் அப்பாவி முரு எழுதியிருக்கும் மசுரு – உசுரு என்ற எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது. எந்த ஒரு செயலுக்கான எதிர்பார்ப்பை பதிவு செய்யும் போதும் நம்முடைய காலடி முதலாவதாக இருக்க வேண்டும். வெறும் வாய்சவடால்கள் வேலைக்குதவாது என்கிறார். வாசித்து பாருங்கள்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

சமீபத்திய தமிழ் வலைப்பதிவர்களின் முயற்சி ஒரு உயிரை காப்பாற்றியது போலவே இன்னும் பலருக்கு வேலைவாய்ப்பு, கல்வி, பயிற்சி மற்றும் பல உதவிகளை செய்ய ”சர்வதேச தமிழ் வலைப்பதிவர் கூட்டமைப்பு” என்ற ஒரு அமைப்பை உருவாக்கினால் என்ன? கூட்டமைப்பாக ஒரு தலைமையின் கீழ் செயல்பட்டால், நிச்சயம் அதன் பலன் அபாரமானது. நம்மிடையே சச்சரவுகள் எழாமல் அல்லது எழுந்தவற்றை சுமுகமாக தீர்த்துவைக்கவும் தலைமையால் முடியும் என்பதும் என் கருத்து. வலைபதிவர்கள் வெகுசன ஊடங்களால் வெகுவாக கவனிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் நிச்சயமாக அவசியமான ஒன்றாக கூட்டமைப்பும் தலைமையும் இருக்கிறது. செந்தில் நாதன் விசயத்தில் ஆயிரத்தில் ஒருவனாய் முதலடி எடுத்து வைத்த நண்பர் நர்சிம் அவர்களே இதற்கு தகுதியானவர் என நான் முன்மொழிந்து என் முதல் அடியை எடுத்து வைக்கிறேன். உங்கள் கருத்துகளை அறியவும் காத்திருக்கிறேன்.

நன்றி!