Sep 15, 2009

இணைய விவாதம்

இணையம் தந்திருக்கிற கட்டற்ற பயன்பாடுகளில் ஒன்று, விவாதபயன். பிற தளங்களில் நடத்தப்படும் விவாதங்களை விட இணையதளத்தின் விவாதங்களுக்கு தனிச்சிறப்புகளுண்டு. விவாதிப்பவர் தனது முகம் மறைத்தும் மாற்றுத்தரப்பின் முகம் காணாதும் விவாதிப்பதால், தன் கருத்தில் நிலையாக நின்று, வேறெந்த விசயத்திற்கும் சமரசம் ஆகாமல் தயக்கமின்றி விவாதிக்க முடிகிறது. இதுவே இணைவிவாதத்தின் நேர் மற்றும் எதிர்மறை விழைவாகிப்போவதால், பெரும்பாலான இணைய விவாதங்கள் கருத்து ஒன்றுபடாமலேயே விழலுக்கு இரைத்த நீராகி விடுகிறது என்பதை நான் இதற்கு முன்னரும் சொல்லி உங்களை அலுப்படையச் செய்திருக்கிறேன். பலர் தன் கருத்தை முன்வைத்து அலுப்படையாது திரும்ப திரும்ப விவாதிப்பதாலேயே எதிர் கருத்தாளனிடம் தன் கருத்து சென்றடையும், அதையே மிகப்பெரிய வெற்றி என நான் கருதுகிறேன். ஒத்த கருத்துள்ளவர்களிடமே தமது நட்பை வளர்த்துக்கொண்டு, அதையே பெரும்பான்மை கருத்தாக முன் முடிவோடு விவாதிக்கும் சிலரிடம் இக்கருத்துக்கள் சென்றடைவதால் யாராவது மனம் மாற வாய்ப்புண்டு. குறைந்தபட்சம், மாற்றுக்கருத்தின் ஆழத்தன்மையாவது புரியப்பட்டு விவாதிப்பதிலிருந்து ஒதுங்கியிருக்கும் 'வெளியிலிருந்து ஆதரவு' என்ற நிலையாவது வரலாம். மீண்டும் மீண்டும் ஒரே வாதத்தை முன்வைப்பதால் வேறொரு அபாய எதிர் வினைக்கான வாய்ப்புமிருக்கிறது. இதற்கு மிகச்சமீபத்திய உதாரணமாக ஒரு நபரை தாக்கி வரும் நீண்ண்ட இடுகைகளைச் சொல்லலாம். அடுத்தடுத்து எய்யப்படும் அம்பின் ஒரே குறியும், எதிர்தரப்பின் மௌனமும், ஒரு வேளை இதில் உண்மை இருக்குமோ என்ற எண்ணத்தை (என் போன்ற அப்பாவிகளுக்கு) ஏற்படுத்துவதை தவிர்க்க முடிவதில்லை. ஆனால், இவை உண்மை (க்கு பித்தம் தெளிந்து) வெளிச்சத்திற்கு வரும் வரை மட்டுமே என்பதால் இவ்வகை வினைக்கு பெரிதாக அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்பது என் புரிதல். மட்டுமல்லாது, தெரியாத விசயத்தில் மூக்கை நுழைப்பானேன். மீ த எஸ்கேப்பு... ஒருவரின் நம்பிக்கையுடன் எதிர் வாதம் செய்வது, வீண் விவாதமாகி வெற்றியடையா நிலையிலேயே தாவு தீர்ந்துவிடும். எதிர் கருத்துக்களுடன் செய்யும் விவாதமே, ஓரளவு பயன் தரும் என்பதும் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய புரிதலாக இருக்கிறது. உதாரணமாக, தமிழனுக்கு தமிழ் நம்பிக்கை, ஹிந்தி பற்றிய கருத்துக்கள் எதிர் கருத்துக்கள். ஒருவரின் நம்பிக்கையை சந்தேகப்பட்டு தகர்க்க முயற்சிக்காமல், மாற்று கருத்துக்களுடன் விவாதிப்பதே ஆரோக்கிய விவாதமாகி பயன் தரலாம். நமது நம்பிக்கை தமிழ் மீதென்றால், அவர்கள் நம்பிக்கை ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் இன்னபிற மொழிகளின் மீதிருக்கிறது. அவர்கள் கொண்டிருப்பது தமிழ் மீது எதிர் கருத்து. அவர்களின் எதிர்கருத்தான தமிழின் பயன்பாடுகளைச் சொல்லியே அவர்களிடம் விவாதிக்க வேண்டும். மாறாக, எல்லாத்தரப்பிலும் ஒரே விவாதத்தை எடுத்துச் செல்வது, விவாத முரணாகிவிடுகிறது. சரி.. விசயத்திற்கு வருவோம். ஹிந்தி கற்பது பாவச்செயலா என்ற எனது இடுகைக்கு வரிக்கு வரி வரிந்து கட்டிக்கொண்டு எதிர்வினையாற்றிய மருத்துவர் புருனோ, கோவியார் மற்றும் ஏனைய நண்பர்கள் ஏனோ என் எண்ணங்களை புரிந்து விவாதித்ததாகத் தெரியவில்லை. அது வழக்கமான கும்மி என்றாகும் பொருட்டு அதை குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், நான் மேல் சொன்னது போல, எதிர்கருத்தாளின் மனதிற்குள் நம் கருத்து சென்றடைய வேண்டுமாயின், முதலில் அவன் நிலைபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். ஹிந்தி கற்பது குறித்தான என் நிலைபாடு, 'ஹிந்தியும் ஒரு விருப்ப பாடமாக இருந்துவிட்டு போகட்டுமே' என்பதாகத்தான் இருந்தது. அந்நிலையை ஹிந்தி மீதான ஒரு அனுதாபம் என்பதாகவும் கொள்ளலாம். அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் சொன்னேன், 'எனக்கு உங்கள் நிலைப்பாட்டை தெளிவாக்கி, என்னை என் நிலையிலிருந்து மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், ஹிந்தி கற்பதால் உள்ள பாதகங்களை மட்டும் சொல்லுங்கள் அதுவே உங்களுக்கு உதவக்கூடும்' என்பதாக. ஆனால் துரதிஷ்டமோ அல்லது அதிஷ்டமோ, ஹிந்தியை ஆதரிப்பவன் 'தமிழ் மொழிப்பற்று இல்லாதவன்' என்பதான தங்களுடைய தவறான எண்ணத்தில் நின்றே கடைசிவரை விவாதித்தனர் என்பதை விவாத நடையிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களுக்கு விளங்கவைக்க எனது தமிழ் பற்றை சற்று ஓவர் ஆக்டிங் செய்தும் பலனில்லை. என் சிந்தனையை இவர்கள் பக்கமாய் விரிவடையச் செய்ய முடியாது போனதிற்கு, இவர்கள் (என் மொழிப்பற்றை சந்தேகிக்கும்) சிந்தனையை விட்டு வெளியே வராததுதான் காரணமென்பேன். ஆனால், ஹிந்திக்கு போதாகாலம் நண்பர் Maximum India, தனது விவாதத்தை சரியான திசையில் கொண்டு சென்றது. ஒரு சாதாரண இணைய அரட்டை என்பதாகவோ, இவனுக்கு சொன்னால் விளங்கிவிடவா போகிறது என்பதாகவோ எண்ணாமல், எனக்கு என்ன சொல்லவேண்டுமோ அதை அருமையாகச் சொன்னார். ஒருவருடைய நம்பிக்கையை புறக்கணிக்காமல், கருத்தில் மட்டும் மாறுபடும் வேளையில் அவருடைய நம்பிக்கையையே தமக்கு சாதகமாக்கி விவாதிப்பது. அதாவது, ஒரு ஹிந்தி ஆதரவாளின் தமிழ் பற்றை சந்தேகிக்காமல், அவனது தமிழ்பற்றையே மூலதனமாக்கி விவாதத்தை நகர்த்துவதென்பது, வெற்றியை நோக்கி நம்மை நகர்த்திச்செல்வது போன்றாகும். இதில் கவனிக்க வேண்டிய விசயம், அவர் ஹிந்தி கற்றிருந்ததால், 'ஹிந்தியே தேவையில்லை என்ற ஹிந்தி எதிர்ப்பிலிருந்து விலகி, தேவைப்படுவோர் கற்கலாம்' என்பதாக என் கருத்தை ஒரளவு ஒட்டியே சொல்லி என்னை கவனிக்கச்செய்தது. அது மட்டுமின்றி, உங்களுக்கு தேவை என்றால், '3 நாட்களில் ஹிந்தி கற்பது எப்படி' என்ற பதிவு இடுகிறேன் என்றும் சொன்னார். இம்மாதிரியான விவாத போக்கே, மாற்றுக் கருத்தாளனின் தன்மையை மாற்றக்கூடியது என்பதை மீண்டும் ஒரு முறை அறிந்துகொண்டேன். ஆம்... எதிர் கருத்தின் ஆழத்தை புரிந்து கொண்டேன். என்னை தெளிவுபடுத்தி சிந்தனை விரிவடையச்செய்ய, மாற்றுக்கருத்திற்கும் தளம் அமைத்து விவாத தன்மை மாறாது நடைபெறச்செய்த வலைப்பூ உலகத்திற்கு நன்றி. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். - பொருட்பால் சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள். - உரை

23 comments:

  1. சகோதரர் பீர், எனக்கும் இந்தி கொஞ்சம் தெரியும். இந்தி பிரச்சார் சபா மூலமாகக்கற்றுக்கொண்டேன். விருப்பமுள்ளவர்கள் அப்படி கற்றுக்கொள்ளலாம். பள்ளியில் அதை ஒரு பாடமாக அரசாங்கம் நம்மை கட்டாயப்படுத்தக்கூடாது என்பதே என் நிலை.

    ReplyDelete
  2. நன்றி சின்ன அம்மிணி,

    உங்கள் நிலைபாட்டை நான் புரிந்துகொண்டேன் என்று பதிவிலேயே சொல்லியிருக்கிறேன்.. :)

    ReplyDelete
  3. //(என் போன்ற அப்பாவிகளுக்கு)//

    மன்னிக்கணும்,

    அப்பாவி என்கிற வார்த்தைக்கான உலக உரிமை என்னிடம் மட்டுமே உள்ளது.

    ReplyDelete
  4. உங்களுக்கு என் ஓட்டு!!

    ReplyDelete
  5. \\அப்பாவி முரு said...
    அப்பாவி என்கிற வார்த்தைக்கான உலக உரிமை என்னிடம் மட்டுமே உள்ளது.\\

    நீங்க அப்பாவி இல்லண்ணேய்...!
    அடப்பாவி.

    ReplyDelete
  6. நான் இந்த பதிவை கடந்த வாரமே எதிர்பார்த்தேன்.
    மாற்றான் வீட்டு மல்லிக்கும் மனம் உண்டு என்ற மனப்பான்மை இருந்தால், எல்லா விவாதங்களுமே ஆரோக்கியமானதாக இருக்கும்.

    ReplyDelete
  7. //பெரும்பாலான இணைய விவாதங்கள் கருத்து ஒன்றுபடாமலேயே விழலுக்கு இரைத்த நீராகி விடுகிறது என்பதை நான் இதற்கு முன்னரும் சொல்லி உங்களை அலுப்படையச் செய்திருக்கிறேன்.//

    ஆர‌ம்ப‌த்தில் விவாத‌ங்க‌ளில் வெகுஆர்வ‌மாக‌ ப‌ங்கு பெற்ற நான்,இந்த‌ க‌ருத்து
    ஒன்று ப‌டாம‌லை நினைத்தே இப்போது அற‌வே நிறுத்தி விட்டேன்.

    இருப்பு அப்ப‌டி !! எதாக‌ இருந்தாலும் உட‌னுக்குட‌ன் அலைபேசியில் பேசித் தீர்க்கா விட்டால் ந‌ம‌க்கு தூக்க‌ம் வ‌ராது.

    ReplyDelete
  8. இவ்விசயத்தில் உங்கள் மனநிலை தான் எனக்கும்!
    நண்பர் மேக்ஸிக்கு நன்றி!

    ReplyDelete
  9. //என் சிந்தனையை இவர்கள் பக்கமாய் விரிவடையச் செய்ய முடியாது போனதிற்கு, இவர்கள் (என் மொழிப்பற்றை சந்தேகிக்கும்) சிந்தனையை விட்டு வெளியே வராததுதான் காரணமென்பேன்.///
    கொஞ்சம் கடுமையா எழுதிருக்கீங்க.

    சரி அதை விடுங்க...பின்னூட்டம் எழுதுபவர்கள், சில சமயம் பதிவின் ஆசிரியர்க்கு மாற்றாக எழுதுவார்கள், சிலர் மற்ற பின்னூடங்களுக்கு மாற்று கருத்தாக எழுதுவார்கள், சிலர் மேல சொன்ன ரெண்டு பேருக்கும் இல்லாமல்...இனிமேல் படிக்க போகும் சில பேருக்காக எழுதுவார்கள்.."ஹிந்தி கற்பது பாவச்செயலா " விவாதங்கள் இப்படி பல பேருக்காக பண்ண பட்டது...இதை நீங்கள் சிந்தனை விட்டு வெளியே வராமல் பண்ணிகிறார்கள் என்று தப்பாக நினைத்திருக்கீர்கள்.

    ReplyDelete
  10. இது ஒரு நல்ல பதிவு.

    விவாதங்கள் கருத்துக்களை மையமாக கொண்டே நடைபெற வேண்டுமே தவிர விவாதங்களை முன்வைத்தவர்களை மையமாக கொண்டு நடைபெற கூடாது என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

    என்னைப் பற்றியும் பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள். மிக்க நன்றி. பொதுவாக பதிவுலகில் நடைபெறும் விவாதங்களில் (நேரமின்மை காரணமாக) கலந்து கொள்ளாத நான் உங்களை (உங்கள் பதிவுகள் வாயிலாக) ஒரு மென்மையானவர், புரிந்து கொள்ளக் கூடியவர் என்று கருதியதாலும், ஹிந்தி கல்வி பற்றிய கருத்துக்களுக்கு இன்னொரு பக்கமும் உண்டு என்பதை வெளிக் கொணரவே அந்த விவாதத்தில் கலந்து கொண்டேன்.

    ஒரு மொழியை பேச்சு மற்றும் எழுத்து மொழியாக அறிந்து கொள்வது வேறு. அந்த மொழியின் இலக்கிய, இலக்கண பாடங்களை படிப்பது வேறு என்பதை சொந்த அனுபவத்தில் புரிந்து கொண்டவன் நான். முன்னது நல்ல விஷயம் எளிமையானது, அதிக காலம் பிடிக்காதது என்றாலும் பின்னது (தனி விருப்பு இல்லாவிடில்) கால விரயம் மற்றும் கவனம் திசை திருப்பலுக்கு உள்ளாக்கும்.

    அதிலும் வணிக மயமாகி விட்ட இந்த உலகின் அறிவு மொழியான (lingua franca) ஆங்கிலம், கணினி, சமூக அறிவியல், கணிதம், தாய்மொழி போன்ற அவசியமான, ஆழ்ந்து கற்க வேண்டிய பாடங்களுக்கான நேரத்தை பிறமொழியின் பழங்கால செய்யுள்களை மனப்பாடம் செய்ய வைப்பதற்கு ஒதுக்குவது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். அதே போல, ஒரு சமுதாயத்தின் மொழியை (அது எவ்வளவு பெரிய பெரும்பான்மையாக இருந்தாலும் சரி) இன்னொரு சமுதாயத்தின் மீது திணிப்பது தனி மனித உரிமையை அவமதிப்பதாகும்.

    ஹிந்தி கல்வி பற்றிய எனது கருத்துக்களின் சாரம் இதுவேவாகும்.

    ஏற்றுக் கொள்ளவில்லையென்றாலும், இந்த கருத்துக்களுக்கு உள்ள ஆத்ம பலத்தை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    வாலுக்கும் (உண்மையில் நீங்க தல) ஒரு நன்றி.

    நன்றி.

    ReplyDelete
  11. அங்கே நடந்தது விவாதமோ, அல்லது தங்கள் கருத்துக்களை வலுவான ஆதாரங்களோடு எடுத்துவைப்பதாகவோ இல்லை.

    கல்லூரி நாட்களில், கூட்டம் நடக்கும்போது, பிடிக்கவில்லை என்றால் அர்த்தமில்லாமல் எதையாவது கூச்சல் போட்டு, பேசுபவரைக் குழப்பும் அதே வேலை தான்! மதுரையில், தியேட்டர்களில் படம் போரடித்தது என்றாலோ, பிலிம் அறுந்துவிட்டது என்றாலோ விசில் சத்தத்துக்கு மேல், பருத்தீப்பால்ல்னு ஒரு சவுண்ட் வரும். அந்த மாதிரித் தான் அங்கே பின்னூட்டங்கள் இருந்தது.

    போகட்டும், இதற்கு என் இவ்வளவு முக்கியத்துவம் திரும்பவும் கொடுக்கவேண்டும், திரும்பவும் பேச வேண்டும் என்பது தான் எனக்குப் புரியவில்லை.

    சில விஷயங்களில், பேசி நேரத்தை வீணாக்குவதை விட, பட்டறி அல்லது கெட்டறி என்ற சொலவடையைத் தான் நினைவு படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

    இங்கே வந்து கத்தினவர்கள் எவராவது, கபில் சிபிலுக்கோ, குறைந்தபட்சம் உள்ளூர்த் தங்கபாலுவுக்கோ தங்களுடைய எதிர்ப்பைச் சொல்லி இருந்தால், கொஞ்சமாவது அர்த்தம் இருந்திருக்கும்.

    ReplyDelete
  12. //ஒருவருடைய நம்பிக்கையை புறக்கணிக்காமல், கருத்தில் மட்டும் மாறுபடும் வேளையில் அவருடைய நம்பிக்கையையே தமக்கு சாதகமாக்கி விவாதிப்பது. //
    இதுதான் நல்ல ஆரோக்கியமான விவாதம்! உங்கள் மனநிலை நன்றாக புரிகிறது. நீங்கள் வருத்தப்பட ​வேண்டியதில்லை. முக்கியமான கருத்தைப் பற்றி விவாதிக்க பலருக்கு நல்ல களம் அமைத்திருக்கறீர்கள் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்! என் அன்புகள்!

    ReplyDelete
  13. சென்ற இடுகையில் சாமி என்ற அன்பர் ஹிந்தியை நாடு முழுவதும் பரவச் செய்யும்போது தமிழ் அழிந்தாலும் பரவாயில்லை என்கிறாரே?

    தமிழ் பால் பற்று கொண்டவன் எனும் நீங்கள் அதைக் கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லையே?

    இவ்வாறு எண்ணம் கொண்ட அன்பர்கள் இருக்கும்போது தமிழ் குறித்து உறுதியாகக் கருத்து தெரிவிப்பதில் என்ன தவறு கண்டீர்கள்?

    நீங்களே சொன்ன மாதிரி உங்கள் தமிழ் ஆதரவெல்லாம் வெறும் பிட்டு தானா?

    என்னதான் நாங்கள் தமிழை வெறுக்கவில்லை/ஹிந்தியை ஆதரிக்கிறோம் என்று சொன்னாலும் கடைசியில் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டதே?

    தமிழ் ஆதரவாளர்கள் தங்கள் கருத்தை கடுமையாகக் கூறக் காரணம், எத்தனை முறை விவாதித்தாலும், எத்தனை லாஜிக்கலான கருத்துகளைச் சொன்னாலும், ஆறு மாதத்துக்கு ஒரு முறை திராவிடக் கட்சிகளைச் சாடி ஏதாவது ஒரு பதிவு வரும். சில குழுக்கள் வந்து கும்மி எடுப்பார்கள். திரும்பத் திரும்ப சொல்லுவதால் வரும் சலிப்பாக இருக்கலாம்.

    அதெல்லாம் இருக்கட்டும். இவ்வளவு விவாதத்திற்கு பிறகு, உங்கள் கருத்துக்களில் ஏதாவது மாற்றம் உண்டா?

    மேலும் சில இரு காசுகள்.

    1. மொழியை பற்றி புதிதாக விவாதிக்க விரும்புபவர்கள் அதற்கு முன்னால் கொஞ்சம் கூகுளில் தேடிப் பார்த்தால் பழைய விவாதங்களை படித்து பல கருத்துகளை அறிந்து கொள்ளலாம்.

    2. நமது நாட்டின் ஃபெடரல் ஆட்சி முறை, மொழி குறித்த அரசியல் சாசன நிலைப்பாடு, இந்தியா என்பது பல மொழிக் குழுக்கள் இணைந்த பகுதிகள், என்பது பற்றிய தகவல் போதாமை

    3. பக்கச் சார்பு கொண்டவர்களின் தகவல் புரட்டுகள்

    4. தன் சுய அனுபவத்திலிருந்து மட்டுமே பிரச்சினையைப் பார்ப்பது

    ReplyDelete
  14. //மருத்துவர் புருனோ, கோவியார் மற்றும் ஏனைய நண்பர்கள் ஏனோ என் எண்ணங்களை புரிந்து விவாதித்ததாகத் தெரியவில்லை. //

    மன்னிக்க வேண்டும். நாங்கள் சரியாகவே விவாதித்தோம். உங்களின் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்தோம்

    ஆனால் எங்களின் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்க வில்லை. அதற்கு பதில் நீங்கள் முதலில் கூறிய அதே கருத்தையே மீண்டும் கூறினீர்கள்

    ஒரு கட்டத்திற்கு பிறகு தான் அது நகைச்சுவையாக மாறியது

    --

    சரி

    உங்கள் எண்ணங்கள் என்ன என்று 1,2,3 வரிசையாக கூறுங்கள்

    இப்பொழுதும் ஆட்டத்திற்கு ரெடி :) :)

    ReplyDelete
  15. //ஹிந்தியும் ஒரு விருப்ப பாடமாக இருந்துவிட்டு போகட்டுமே' என்பதாகத்தான் இருந்தது.//

    அது உங்கள் நிலைப்பாடு

    இதற்கான எங்களின் பதில் - தற்பொழுது இந்தி விருப்பபாடமாகத்தான் உள்ளது

    இதில் எந்த பிரச்சனையும் இல்லை

    ஆனால் அனைவரும் கற்ற வேண்டும் என்பது தான் பிரச்சனை

    //அந்நிலையை ஹிந்தி மீதான ஒரு அனுதாபம் என்பதாகவும் கொள்ளலாம். //
    உங்களுக்கு இந்தி மற்றும் சமஸ்கிருதம் மீது மட்டும் அனுதாபம் இருப்பதும் அசாமி மற்றும் ஜெர்மன் மீது அனுதாபம் இல்லாதது தான் பிரச்சனை :) :) :)

    ReplyDelete
  16. // 'எனக்கு உங்கள் நிலைப்பாட்டை தெளிவாக்கி, என்னை என் நிலையிலிருந்து மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், ஹிந்தி கற்பதால் உள்ள பாதகங்களை மட்டும் சொல்லுங்கள் அதுவே உங்களுக்கு உதவக்கூடும்'//

    அனைவரும் கட்டாயமாக இந்தி கற்பதால், தமிழ் அழியும் என்று நான் தெளிவாகவே கூறினேனே.

    இது தான் தமிழுக்கு பாதகம், இந்திக்கு சாதகம் என்று கூட கூறினோமே

    இதில் என்ன சந்தேகம்

    ReplyDelete
  17. //ஹிந்தியை ஆதரிப்பவன் 'தமிழ் மொழிப்பற்று இல்லாதவன்' என்பதான தங்களுடைய தவறான எண்ணத்தில் நின்றே கடைசிவரை விவாதித்தனர் என்பதை விவாத நடையிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது//

    மன்னிக்கவும்

    அப்படி எல்லாம் நாங்கள் விவாதிக்க வில்லை

    மீண்டும் ஒரு முறை அந்த விவாதத்தை வாசித்து பாருங்கள்

    ReplyDelete
  18. //இவ்வாறு எண்ணம் கொண்ட அன்பர்கள் இருக்கும்போது தமிழ் குறித்து உறுதியாகக் கருத்து தெரிவிப்பதில் என்ன தவறு கண்டீர்கள்?

    நீங்களே சொன்ன மாதிரி உங்கள் தமிழ் ஆதரவெல்லாம் வெறும் பிட்டு தானா?

    என்னதான் நாங்கள் தமிழை வெறுக்கவில்லை/ஹிந்தியை ஆதரிக்கிறோம் என்று சொன்னாலும் கடைசியில் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டதே?
    //

    பீர் சார்
    இது குறித்து உங்கள் பதிலை அறிய ஆவல்

    ReplyDelete
  19. //ம்... எதிர் கருத்தின் ஆழத்தை புரிந்து கொண்டேன்.//

    ஆக பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்குவதன் மூலம் தமிழ் போன்ற மொழிகளுக்கு பாதகம் என்பதை புரிந்து கொண்டீர்கள். மிக்க மகிழ்ச்சி :) :)

    ReplyDelete
  20. ஆமா டாக்டர்.. திணிப்பின் மூலம் எந்த மொழியையும் வளர்க்க முடியாது, அது பயன்தராது என்பதையும் புரிந்து கொண்டேன்.

    ஹிந்தி எழுதப்படிக்க தெரிந்த பலர், பேசத்தெரியாது இருப்பது.. அவர்கள் விரும்பியே கற்றிருந்தாலும், பேச்சு வழக்கில் இல்லாத மொழியை கற்பதால் பலனில்லை, என்பதும் அனுபவத்தில் உணர்ந்தது.

    ReplyDelete
  21. //பீர் சார்
    இது குறித்து உங்கள் பதிலை அறிய ஆவல்//

    டாக்டர்,
    பூனைக்குட்டி வெளியே வந்த குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக நம்புகிறீர்களா?

    தமிழ் குறித்த என் கருத்தை, நான் உறுதியாக சொல்லவில்லையா?

    'தமிழ் அழிந்தாலும் சரி' என்பதை நான் ஆதரிப்பேன் என்று நினைக்கிறீர்களா?

    வீணான, ஆதாரமில்லாத குற்றச்சாட்டிற்காக நாக்கு தள்ளுவதை நான் விரும்பவில்லை.
    தமிழ் தவறென்று யாராவது குற்றம் சாட்டினால், எனக்கு தெரிந்த மட்டும் பதிலளிக்க தயார். மாறாக, என் தமிழ் பற்றை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை டாக்டர்.

    ReplyDelete
  22. //வீணான, ஆதாரமில்லாத குற்றச்சாட்டிற்காக//

    கருத்திற்கு நன்றி :) :)

    ReplyDelete
  23. டாக்டர்,

    உங்களுக்கு விளங்கும்படியாக, என்னால் சரியாகச் சொல்லத்தெரியவில்லை என்று நினைக்கிறேன். :(

    'பூனைக்குட்டி வெளியே வந்தது' என்பதைத்தான் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று சொல்கிறேன். முகம் இல்லாத ஒருவர், போகிற போக்கில் கோர்த்துவிட்டுப்போகிற வார்த்தைக்காக நாம் தாவு தீர வேண்டுமா? மட்டுமல்லாது தமிழை ஒருவர் குறைசொல்லியிருந்தால் நிச்சயம் விளக்க கடமைப்பட்டுள்ளோம், மாறாக என் தமிழ் பற்றை நிரூபிக்க அல்ல.

    நண்பர் 'மேக்ஸிமம் இந்தியா' விளக்கத்திற்கு பிறகு, மொழி திணிப்பின் விழைவுகளை புரிந்து கொண்டேன் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். ஜெமோவின் விளக்கத்திற்குப்பிறகு ஹிந்தியின் அவசியமினைமையையும் தெரிந்து கொண்டேன்.

    நான் சொல்லவந்தது, 'தமிழ் அழிந்துபோனாலும் பரவாயில்லை' என்பவர்களுக்கு, உங்களது விளக்கம் சரியாக இருக்கும். தமிழ் பற்றாளனுக்கு மேக்ஸிமம் இந்தியாவுடைய விளக்கம், புரிந்து கொள்ள உதவியது என்பதே. புரிந்து கொள்க:

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.