நாம், நம் நண்பனுக்கு உண்மையாக இருக்கிறோமா? உறவினரிடத்தில்? மனைவியிடத்தில்? அட…முதலில் நாம், நமக்கு உண்மையாக இருக்கிறோமா? நமக்கு மட்டுமே தெரிந்த அந்தரங்க உண்மைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது, ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியின் ‘ஸச்கா சாம்னா’ என்ற தொடர், இதை 'உண்மைக்கு எதிராக' என்று தமிழிலும் படுத்தலாம்.
இது ஒரு கேம்-ஷோ. இதில் பங்கு பெறுபவருக்கு நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பாக, உண்மை கண்டறியும் (polygraphic) சோதனையில் 50 கேள்விகள், அவர் கடந்து வந்த வாழ்க்கை பாதையில் இருந்தே கேட்கப்படுகிறது. அவற்றில் தேர்ந்தெடுத்து கேட்கப்படும் 21 கேள்விகளுக்கான பதிலை நிகழ்ச்சியில் கேமரா, மனைவி, உறவினர்கள், நண்பர்களுக்கு முன்பாக சொல்ல வேண்டும். சொல்லப்படும் பதில், உண்மையறியும் சோதனையில் அவர் சொல்லியிருந்த பதிலுடன் ஒத்திருந்தால் பரிசு. 21 கேள்விகளுக்கும் சரியான பதில் ‘உண்மை’ சொல்லப்பட்டால் 1 கோடியாம். மற்ற கேம் ஷோக்கள் போலத்தான் விதிமுறைகள், இடையேயும் விலகி போகலாம. கேள்விகள் எது மாதிரியாகவும் இருக்கும். பதில், இனிக்குமா? கசக்குமா? உண்மை… எப்படியிருக்கும்? தெரிந்து கொள்ள நிகழ்ச்சியில் ஒருவருக்கு கேட்கப்பட்ட கேள்விகள்.
அவர் இந்திய விமான படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். நிகழ்ச்சிக்கு அவரது மனைவி, சகோதரன் மற்றும் அவருடைய மனைவி, நண்பர் ஆகியோர் பார்வையாளர்களாக வந்திருக்கிறார்கள். கேள்விகள்…
- விமான படையில் தங்களுக்கென வழங்கப்படும் மது வகைகளை வெளியே அதிக விலைக்கு விற்பனை செய்திருக்கிறீர்களா? பதில்: ம்யூட் செய்யப்பட்டுவிட்டது.
- பள்ளியில் படிக்கும் போது, பாலியல் புத்தகங்கள் படித்து ஆசிரியரிடம் மாட்டியதுண்டா? பதில்: ஆம்.
- உங்கள் மனைவி நன்றாக சமைப்பாரா? பதில்: இல்லை.
- உங்களைவிட உயரமானவர்களை கண்டால், தாழ்வு மனப்பான்மை வருவதுண்டா? பதில்: ஆம்.
- சகோதரனை, அவருடைய மனைவிக்கு எதிராக திருப்பி விட்டதுண்டா? பதில்: ஆம்.
- திருமணத்திற்கு பிறகு மனைவியிடம் அதிகமாக பொய் சொல்வதுண்டா? பதில்: ஆம்.
- இராணுவத்தில் இருந்த போது, இராணுவ விசாரனையில் குற்றம் சாட்டப்படும்படியாக (மாட்டியிருந்தால்) ஏதாவது செய்ததுண்டா? பதில்: ஆம்.
- உங்களுடைய தாயின் மரணத்திற்கு நீங்கள் காரணமென உணர்கிறீர்களா? பதில்: ஆம்
- உங்களுடைய மனைவி, உங்களைவிட சிறந்த கணவரை அடைய தகுதியுடையவர் என நம்புகிறீர்களா? பதில்: ஆம்.
- இரயிலில் பயணம் செய்த போது, உங்கள் மனைவி அருகில் இருந்த படுக்கையில் உறங்கிக்கொண்டிருக்க, வேறொருவரை உடல் ரீதியாக துன்புருத்தியதுண்டா? பதில்: ஆம்.
- தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் ஃபோன் செக்ஸ் செய்ததுண்டா? பதில்: ஆம்.
- விமான படையில் இயந்திர பணியாளராக இருந்த போது, கவனக்குறைவான ஏதேனும் வேலை செய்ததுண்டா? பதில்: ஆம்.
- விமான படையில் இயந்திர பணியாளராக இருந்த போது, நீங்கள் பணியாற்றிய ஏதேனும் விமானத்தின் விபத்திற்கு நீங்கள் காரணமாகியதுண்டா? பதில்: இல்லை.
- உங்கள் மனைவிக்குத் தெரியாத ஏதேனும் நோய் உங்களுக்கு உள்ளதா? பதில்: ஆம்.
- உங்கள் மனைவியை உண்மையிலேயே விரும்புகிறீர்களா? பதில்: இல்லை.
- பாலியல் தொடர்பிற்கான தேடுதலில், உங்கள் மனைவியுடைய ப்ரோஃபைலை இணையத்தில் கள்ளத்தனமாக ஏற்றியதுண்டா? பதில்: ஆம்.
- உங்களுடைய நிர்வாண புகைப்படத்தை முகம் தெரியாத வேறு யாருக்காவது அனுப்பியதுண்டா? பதில்: இல்லை.
தவறான பதில். அவர் வென்றிருந்த பத்து லட்சம் ரூபாயோடு வெளியேறினார்.
ஒவ்வொறு கேள்விகளுக்கும் இடையிடையே கலந்து கொண்டவருடைய கருத்தும் கேட்கப்படுகிறது. உறவினர் மற்றும் நண்பர்களுடைய கருதும் ஏதாவதிருப்பின். 15 ஆவது கேள்விக்கு அவரும் அவருடைய மனைவியும் தெரிவித்த கருத்து வியக்க வைத்தது. ‘இது எனக்கு முன்பே தெரியும்’ என்று மனைவியும். ‘விருப்பம், காதல் என்பதைவிட நான் அவளை கவனித்துக் (Care) கொள்கிறேன் என்பது தான் சரியாக இருக்கும்’ என்பதாக அவரும் சொல்கிறார்கள்.
‘ஸச்கா சாம்னா’ முதலாவது நிகழ்ச்சியின் கடைசிக் கேள்வி, திருமணமான பெண்ணிடம் கேட்கப்படுகிறது, “உங்கள் கணவரால் கண்டுபிடிக்க முடியாது என்றால், வேறு யாருடனாவது பாலியல் உறவு வைத்துக்கொள்வீர்களா?” உண்மை கண்டறியும் சோதனையில் அவர் சொல்லியிருந்த சரியான பதில் “ஆம்” என்பது. ஆனால் “இல்லை” என்பது தான் சரியான பதிலாக இருக்கக் கூடும் அல்லது இருக்க வேண்டும் என்ற சமூக நிர்பந்தத்தில் “இல்லை” என்று சொல்லிவிட, பரிசை இழந்தவராக வெளியேறியவருடைய திருமண வாழ்வு முறிந்து விட்டதாக செய்திகள் சொல்கின்றன. இனி அந்தப்பெண், தன்னுடைய மீதி வாழ்வை உண்மையறியும் சோதனையை மெய்பிக்க களிப்பாரா? அல்லது அதற்கு மாறாக சமூகத்திற்காக கழிப்பாரா? தெரியவில்லை :(
இந்த நிகழ்ச்சிக்கு சிலரை நான் முன்மொழிகிறேன்.
- அரசியல்வாதி: ஊழல், லஞ்சம்.
- ஆன்மீகவாதி: கடவுளுக்கு மாறு.
- வழங்கறிஞர்: நீதிக்கு மாறு.
- மருத்துவர்: யாரேனும் உயிரிழக்க காரணம்.
- நான், நீங்கள்: சுய துரோகம்.










