Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Jul 16, 2011

மேரிக்குண்டொரு குஞ்ஞாடு

மிகவும் பிரமாதம் என்றெல்லாம் சொல்லவில்லை. ஒற்றைவரிக் கதை என்றாலும், நேர்த்தியாக பின்னப்பட்ட திரைக்கதை. பொதுவாகவே திலீபுக்கு பெரும்பாலான சினிமாக்கள் இவ்வாறாக அமைந்துவிடுகிறது. 'எண்ட ஜோஸட்டன்' என்று நெஞ்சு நிமிர்த்தி நடக்கையில் திலீப் நிற்கிறார். எடிஸனின் விதிப்படி அங்கு காதலி வந்ததும் அவருடன் பாடலும் வந்திருக்க வேண்டும், நான் கவனிக்கவில்லை. காதலி அவ்வளவு முக்கியமில்லை என்றாலும் பெயர் பாவனா. மொத்தமாக இரண்டு நாட்கள் தான் சூட்டிங் வந்திருப்பார். முதல் நாள் நடிக்கவும், இரண்டாவது நாள் குறை கலையவும், இரண்டாவது நாளை உபயோகிக்கவில்லை போலும்.


திரையில் கதை ஏன் இவ்வாறு தொடங்க வேண்டும் என நினைத்திருக்கையில், அங்குதான் திரையை இறக்கி சுபம் இடவும் உத்தி வகுக்கப்படுவது பின்னால் தெரியவருகிறது.


மஞ்சப்பையை கையில் சுற்றி பேருந்திலிருந்து இறங்கும் போது பிஜூ மேனன், சாதாரண ஒரு வில்லன் அறிமுகத்தை நினைவு படுத்தினாலும் பிறகு உடல் மொழியால் அசத்துகிறார். ஆழக் குழிதோண்டி அதிலே வாழைக்கன்று நடுவதும், 'இங்க ஒரு மாமரம் இருந்துச்சே என்னாச்சு' என்று கேட்பதும் வீணாகவில்லை. வீணான காட்சிகளை விட்டு வெளியே வர நமது சினிமாக்களை எதிர்பார்க்கிறேன்.


ஊரில் ஒரு இழவு விழுந்தால் உள்ளூர மட்டுமின்றி சந்தோஷப்படும் சலீம் குமாரின் நூற்றுக்கும் மேலான சினிமாக்களின் முதிர்ச்சி தெரிகிறது. (ரொம்ப மெலிந்து இருக்கிறாரே, ஏன்?)


'என் அப்பா சினிமாக்களில் காமெடி ரோல் செய்தாலும் நிஜத்தில் மிகவும் கண்டிப்பானவர்' என்று ஜெகதி ஸ்ரீகுமாருடைய மகன் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியில் சொல்லிக்கொண்டிருந்தார். அது ஏனோ இந்த சினிமாவில் ஜெகதியை பார்க்கும் போதல்லாம் நினைவில் வந்தது. ஒரு காமெடிக் கதையில் ஜெகதி காமெடியன் அல்ல.


பொதுவாக ஒரு மதத்தை கதைக்கலனாகக் கொண்டு எடுக்கப்படும் (காமெடியோ, க்ரைமோ) சினிமாக்களில் யாரையோ திருப்திபடுத்த சாமான்ய பார்வையாளனின் முகம் சுளிக்க வைப்பது எப்போதும் எரிச்சல் தரும் ஒன்று. மேரிக்குண்டொரு குஞ்ஞாடு, தலைப்பும் கதையும் கிருத்துவர்களை சுற்றி நடத்தப்பட்டாலும், பார்வையாளர்கள் மனம் நோகாத கதையமைப்பு.


இவையெல்லாம் தான் தமிழுக்குமாக தொடர்ந்து வெற்றிப்படங்களை ஷாஃபியால் தர முடிகிறது.


இதையும் சொல்லியாக வேண்டும்; தொன்று தொட்ட வழக்கப்படி, ஊருக்கு வரும் சரக்கு வாகன ஓட்டி ட்விஸ்ட் கொண்டு வருகிறார். பணம் வைத்திருப்பவர்கள் இங்கும் வில்லன்களாவே இருக்கிறார்கள்.
  • மனதில் தொன்றியதை அப்படியே எழுத்தில் தட்டி வெளியிடுகிறேன். எடிட் செய்யவென்று கிடப்பில் போட்ட பல பதிவுகள் காலாவதியாகிவிட்டது.
  • நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு பதிவு, அதுவும் சினிமாவைப் பற்றியதாகிப்போனதில் சிறு வருத்தமே. #சேர்க்கை சரியில்லை.

Jan 11, 2010

புத்தகக்காட்சி, தொலைக்காட்சி, பைரஸி, அரசு - ஜிகர்தண்டா

புத்தக காட்சிக்கு போய் நானும் ஒரு நாலஞ்சு பதிவு போட்றலாம்னு பார்த்தேன். முடியல.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். காட்சியில் விற்பனையான புத்தகங்கள் மட்டும் 7 கோடியாம். நானும் போயிருந்தா 7 கோடியே 1 ஆகியிருக்கும். புரிஞ்சிருப்பீங்க.. கோடிக்கு எத்தன பூஜ்யம்னு தெரியலைங்க.
சில விருப்பப்பதிவுகளை வாசிக்கையில் ஸைடு பாரில் மிதக்கும் விளம்பரங்களும் இசைகளும் எரிச்சலடையச் செய்கிறது. இன்னும் சில ஆனைக்கு முன்னே மணி ஓசை மாதிரி,  பதிவுகளை திறந்ததும் விளம்பரங்கள் பாப்அப் ஆகிறது. அந்த பதிவுகளை அப்படியே மூடிவிட்டு வந்துவிடுவேன். இந்த வார நட்சத்திர பதிவிலும் அப்படித்தான். நட்சத்திரம் குட்டிரேவதி கண்ணகி பற்றி எழுப்போகிறாராம், ரீடரில் இருக்கும் படித்துக்கொள்கிறேன்.
நெல்லையில் காவல்துறை அதிகாரி கொலைசெய்யப்பட்டதும் அவரை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் மீடியாக்களில் கிழிக்கப்பட்டனர். தண்டனையாக அவர்களுடைய பதவி பறிக்கப்பட்டாலும் தவறே இல்லை. (கொலையாளிகள் விட்டுச்சென்ற பைக்கில் அதிமுக சின்னம் இருந்ததாம். இனி.. எதிர்கட்சி வாய்திறக்காது) அது போகட்டும், அந்த வீடியோ ஒளிப்பதிவு செய்த நபரை என்ன செய்யலாம். இதே போல சென்றவாரம் ராமேஸ்வரத்தில் ஒரு பெரியவர் நடு ரோட்டில் தேங்கி கிடந்த தண்ணீரில் விழுந்து குளிரிலேயே இறந்துவிட்டாராம். அதையும் படம் பிடித்து கல்லாகட்டுகிறார்கள். தொட்டதற்கெல்லாம் அரசாங்கத்தை குறை சொல்லியே காலம் தள்ள வேண்டியிருக்கிறது.
ஜக்குபாய் படத்தை தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள்  இந்தியாவில் வெளியிடப்படும் முன்பே இணையத்தில் கிடைக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னதாக லண்டனில் இசை வெளியிடப்பட்டும் தமிழ் ரசிகர்களுக்கு கிடைக்கச்செய்யாதது நிர்வாக குறைபாடு என்றே சொல்லலாம். பின்ன எங்கிருந்து பைரஸியை ஒழிப்பது?
இளம் இயக்குனர்கள், தங்களது ஐந்து நிமிட படைப்பான குறுப்படங்களை காட்சிப்படுத்தும் கலைஞர் டிவியின் 'நாளைய இயக்குனர்' பாராட்டப்படவேண்டிய நிகழ்ச்சி. மதன், போத்தன் மற்றும் வாரம் ஒரு வெற்றி இயக்குனர் என நடுவர்களால் அக்குறும்படம் குறித்த கருத்துக்கள் பதிவு செய்யப்படுகிறது. விரைவில் ஆதியை அங்கு எதிர்பார்க்கிறேன்.
இரண்டு வாரமாக மாலை நேர பொழுது போக்கு விஜய் டிவி சீரியல்கள் தான். ச்சும்மா சொல்லப்படாது... நல்லாதாங்க இருக்கு. குறிப்பா கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், அன்பேவா இரண்டு தொடர்களும் சூப்பர். கதைய விடுங்க, காட்சியமைப்புகளும் யதார்த்த வசனங்களும் தொடரோடு ஒன்ற வைக்கிறது. பள்ளிக்கூட நடிக பசங்களின் நடிப்பும், மதுர ஸ்லாங்கும்... ம் க்ரேட்.
நேற்று Duel என்ற ஒலகப்படம் பார்த்தேன். வழக்கம்போல உபயம்; பாலா. (புரியாத மொழில இருந்தா ஒலகப்படம் தான?).  ஆங்கிலமில்லை, வேறெந்த மொழி என்பதும் தெரியவில்லை, அது தேவையும் இல்லை. இயக்குனர்; ஸ்பீல்பர்க். டப் செய்யப்பட்ட ஹாலிவுட் படமாகத்தான் இருக்கவேண்டும். கதை இதுதான்; ஹைவேஸில் ஒரு கார், புகை கக்கிச்செல்லும் ட்ரக்கை முந்திச்செல்ல.. அந்தக் கார்காரரை கொல்லவரும் ட்ரக். ஆமாம்... ட்ரக் ஓட்டுனரை கடைசிவரை காட்டவில்லை. இதைத்தான் தரம் என்கிறேன். இதற்கு உலகத்தரம் உள்ளூர்தரம் என்று என்ன பெயரும் வைத்துக்கொள்ளலாம். திருட்டு டிவிடியை ஒழிக்க இதை போல தரமான படம் கொடுங்கள் என்றுதான் தமிழ் இயக்குனர்களை கேட்கிறேன்.

ரைட்டர் பேயோன் (http://twitter.com/writerpayon) ட்விட்டுகள் புத்தகமாக வெளிவருகிறதாம். விலை 60 /-. பேயோன் பேரவையின் புதிய உறுப்பினர். அங்கு நண்பர் மணிகண்டனின் பின்னூட்டமும் வாசிக்கவும். ;)

அடுத்த வார நீயாநானாவின் தலைப்பு 'பர்தா' (நன்றி லோகு). ஒரு நிமிட க்ளிப்பிங் பார்க்கத்தூண்டுகிறது. மீண்டும் பதிவுலகம் வீண் சர்ச்சைகளில் மூழ்காது என்ற நம்பிக்கை இருக்கிறது. பர்தாவிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அத்தனையையும் அடைத்துக்கொண்டிருந்தாலே பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆரோக்கிய விவாதத்திற்கு நாம் எப்போதும் தயாரே. ஆனால், இணையவிவாதங்களில் ஆரோக்கியத்தை எதிர்பார்ப்பது அதீதம் தான். இருக்கட்டும்... அடுத்த வாரம் பார்ப்போம்.

Jan 9, 2010

சினிமா திருட்டு குண்டர் குற்றமா?

தமிழ்மணம் முதற்கட்ட வாக்கெடுப்பில் 'ஜெய்ஹிந்த்புரத்தின்' விளிம்புநிலை வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்களும் தீவிரவாதமும் என்ற இரண்டு இடுகைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வாக்களித்த பதிவர்களுக்கு நன்றி ! இறுதிச் சுற்றிலும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் பதிவர்கள், பொது வாசகர்கள் அனைவருக்கும் நன்றி !!! - பீர்.

ஜக்குபாய் - திரைக்கு வருவதற்கு முன்பே டிவிடி வெளியாகிவிட்டதாம். திரைத்துறையில் இருக்கும் சில 'பொதுநலவாதிகளே' மார்கெட்டில் வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. திரைத்துறை வியாபாரிகள் எல்லோரும் சேர்ந்து ஒப்பாரி வைக்கிறார்கள். ஜக்குபாய்க்கு சகுனம் சரியில்லை என்கிறார் ஒரு அறிவு ஜீவி. திருட்டி டிவிடி விற்பவனின் கையை வெட்ட வேண்டும் என்கிறார்கள். திருட்டு டிவிடியை ஒழிக்க தமிழக அரசு குண்டர் சட்டம் பாயும் என்கிறது.

குண்டர் சட்டம் பாயுமளவுக்கு இது குற்றமா? உண்மையில் தமிழகம் தடுக்கப்பட வேண்டிய வேறு குற்றங்கள் இல்லாத அமைதி பூங்காவாகிவிட்டதா? நெல்லையில் காவலரை கொல்லும் ரவுடி, அவரை காப்பாற்ற முடியாத அரசியல் தலைவர்கள். இவர்களை தண்டிப்பதைவிட சினிமாக்காரர்களுக்காக அறிக்கை விடுவதை முக்கியச் செய்தியாகக் காட்ட இந்தத் தொழிலில் என்ன இருக்கிறது? சினிமாக்காரர்களின் ஓட்டுக்காகத்தான் இந்த படங்காட்டப்படுகிறது என்பதையும் யாரும் சொல்ல மாட்டார்கள். கூத்தாடிகளில் எத்தனை பேருக்கு ஓட்டுப்போடும் தகுதியும், தமிழக வாக்குச்சீட்டில் பெயரும் இருக்கிறது என்பது அரசியல்வாதிகளுக்கும் நன்கு தெரியும்.இருந்தும் ஒரு சினிமாக்காரன் நடத்தும் விழாவிற்காக நம் பணத்திலிருந்து லட்சங்களை வாரி வழங்க தயாராக இருப்பதும், படோபட வாழ்க்கை நடத்தும் அவர்களுக்கு வீடுகட்டித்தரவிருப்பதும், தினம் அவர்களுக்காக அறிக்கை தயாரித்து முதலைக்கண்ணீர் விடுவதற்கும் என்ன காரணமாக இருக்க முடியும்? பணம். கணக்குவழக்கில்லாமல் கேட்கும் போதெல்லாம் கோடிகளை அள்ளிக்கொடுக்கத் தயாராக இருப்பது போலவே, கொள்ளையடிக்கும் கருப்புப் பணத்தை உள்வாங்கும் தொழில்துறை அது. கூத்தாடிகள் கையில் நாட்டை கொடுத்தால் குட்டிச்சுவராக்கிவிடுவார்கள் என்பதை மீண்டும் மீண்டும் மெய்பிக்கும் நிகழ்வுகள் நடந்தேருவது வருத்தத்தையே மிச்சப்படுத்துகிறது.

திருட்டு டிவிடிக்காரர்கள் கொடுக்கும் கமிஷன் அரசியல்வாதி முதல் காவல்துறை வரை பங்கு பிரிக்கப்படுகிறது. தயாரிப்பாளருக்கும் பங்கு  சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கைநீட்டி லஞ்சம் வாங்குபவர்கள், (இனி வருமானம் தடைபடும் என்பதை தவிர்த்து யோசித்தாலும்) நிச்சயம் காசு கொடுப்பவனுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள். எனவே திருடர்களாய் பார்த்து திருந்தாத வரை இத்திருட்டை ஒழிக்க முடியாது. டிவிடி திருடன் ஏன் திருந்த வேண்டும்? என்பதற்கான பொதுவான காரணம் எங்கும் சொல்லப்படவில்லை. நம் புத்திக்கு எட்டியவரை (பணம் கொடுத்து நாம் வாங்கும் டிவிடி எப்படி திருட்டு டிவிடியாகும் என்ற நுணுக்கங்களை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு) நாமே சிந்திக்கலாம்.
நமக்கும் திரைப்பட தயாரிப்பாளருக்கும் சம்பந்தமில்லை. திருட்டு(?) டிவிடி வியாபாரி பேர் கூட தெரியாது. ஆனால் நாம் நுகர்வோர். திருட்டுதனமாய் வாங்கி, திருட்டுதனமாய் ப்ரிண்ட் போட்டு, திருட்டுதனமாய் விற்கப்படும் டிவிடியை காசு கொடுத்து வாங்கி படம் பார்க்கும் திருட்டு டிவிடி பயனர்.  இந்த திருட்டு டிவிடியை வாங்காவிட்டால் நமக்கு என்ன நன்மை, வாங்குவதால் என்ன கேடுவந்துவிடப்போகிறது என்ற அளவிலேயே மிஸ்டர் காமன் மேன் சிந்திக்க முடியும், அவ்வளவே சிந்திக்கிறான். உண்மையை சொல்வதென்றால் திருட்டி டிவிடியால் நம் காமன் மேனுக்கு லாபமே. குடும்பத்துடன் ஒரு புதிய திரைப்படத்தை 20 ரூபாய்க்கு பார்த்துவிடுவதென்பது, நடுத்தரவர்க்கத்தின் அன்றாட செலவில் குறிப்படத்தக்க சேமிப்பை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகும்.
கோடிகளை கொட்டி படமெடுப்பதால் மட்டுமே மில்லியனில் லாபம் தர வேண்டும் என்று நினைப்பது முட்டள்தனம் என்பது போலவே, அந்த கோடி ரூபாய் படத்தை 20 ரூபாய்க்கு வாங்கி பார்த்தால் குண்டர் சட்டம் பாய வேண்டும் என்பதும். டிவிடியில் பார்த்தாலுமே மீண்டும் தியேட்டரில் பார்க்கத்தூண்டும் தரத்துடன் உங்களுடைய படைப்பு இருக்கவேண்டும்.உலகப்படங்களை உருவியாவது அந்த தரத்தை கொண்டுவாருங்கள் தவறில்லை.
திருட்டி டிவிடி விற்பனையில் வரும் பணம் தீவீரவாதத்திற்கு பயன்படுத்தப்படுவதாகச் சொல்லி கமல் என்றொரு நடிகன் மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார்.  டிவிடி வியாபாரிகளை தூக்கிலிட வேண்டும் எனுமளவுக்கு மேடை கட்டி நடிக்கும் கூத்தாட்ட வியாபாரிகள், பெரும்பாலான ஒலகப்படங்களை ஓசியில் டவுன்லோடு செய்தும், திருட்டு டிவிடியிலுமே பார்க்கிறார்கள்.டிவிடி தேயும் அளவு திரும்ப திரும்ப பார்க்கிறார்கள். போகட்டும்.. டிவிடி தேய்ந்தாலும் ரசிகனுக்கு உலகத்தரத்தில் ஒரு தமிழ்திரைப்படம் கிடைக்கிறதா என்றால் இல்லை.அந்தப்படங்களிலிருந்து காட்சிகளையும் தொழில் நுட்பங்களையும் திருடி 'எ ப்ளிம் பை' என்று கொட்டை எழுத்தில் தன் பெயரை பதித்துக்கொள்வதோடு மட்டுமில்லாமல். திருடி எடுத்தது யாருக்கும் தெரியாதிருக்க 'நான் இதுவரை உலகப்படம் பார்ததில்லை' எனும் பேட்டிகள் வேறு. உகாண்டா நாட்டு மொக்கைப்படத்தை காப்பி அடித்தாலும், சரியாக கண்டுபிடித்து எழுத இங்கே பலர் காத்திருக்கிறார்கள். ரசிகர்கள் அனைவரும் மொன்னைகள் என்று  நினைத்துவிட வேண்டாம். மொன்னைகளில் சில ரசிகர்களும் உண்டு அவ்வளவே.
அது போக, எய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்களை பரப்பும் விபச்சாரத்தை அங்கீகரிக்கச்சொல்லும் 'நியாயவான்கள்', நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் இல்லாத டிவிடி தொழிலை அங்கீகரிக்க சொல்லாததேன் என்பதும் புரியவில்லை. குண்டர் சட்டம் போட்டும் தடுக்க முடியாத திருட்டை 'சட்டபூர்வமாக அங்கீகரித்தால்' என்ன? இலவச வண்ண தொலைக்காட்டிப் பெட்டியும், ஒரு ரூபாய்க்கு அரிசியும் தரும் கருணாநிதி அரசு, புதிய திரைப்படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் வசதியையும் செய்து கொடுத்துவிட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளும் இப்போதிருக்கும் கம்பெனியே தொடர்ந்து சம்பாதிக்கலாம் என்பதை யாரும் சொல்லித்தரவில்லையா?

எது எப்படி இருந்தாலும் கதை, இசை, தொழில்நுட்பம், சக தொழிலாளியின் உழைப்பு இன்னபிறவற்றை திருடி எடுத்து பல சமூக குற்றங்கள் நிகழ காரணமாக இருக்கும் சினிமாவைத் திருடி டிவிடியில் விற்பதை நடுத்தரவர்க்கத்திற்கான ராபின் ஹூட் வகை 'சமூக சேவை' என்றும் சொல்லலாம்.

'திருட்டு டிவிடி ஒழிக்கப்பட வேண்டும்' என்று கீ போர்டை தட்டும் சினிமா வியாபாரிகளில் எத்தனை பேர் தங்கள் கம்யூட்டரில் ஜென்யூன் ஓ.எஸ் மற்றும் பிற ஸாஃப்ட்வேர் பாவிக்கிறார்கள் என்பதையும் நினைவில் நிறுத்தட்டும்.

  • நான் திருட்டு டிவிடி வாங்கி படம் பார்ப்பதில்லை என்பதை ஒரு குறிக்கோளாகவே வைத்திருக்கிறேன். பின்ன... அரை தினாருக்கு வாங்கினாலும் ப்ரிண்டு அலையடிக்குதே.
  • ஆமா.. இதுக்கு முன்ன திருட்டு விசிடிய ஒழிக்கணும்னு சொன்னாங்க. முற்றிலும் ஒழிஞ்சிடுச்சு. இப்போ திருட்டு டிவிடிய ஒழிக்கணும்னு சொல்றாங்க... இதுவும் ஒழிஞ்சிடுச்சுன்னா.. அப்போ அடுத்து திருட்டு டிவ் எக்ஸா?


Nov 5, 2009

பத்துக்கு பத்து - பிடித்ததும் பிடிக்காததும்

1. அரசியல் தலைவர்
பிடித்தவர்: ஸ்டாலின்
பிடிக்காதவர்: அன்புமணி

2. எழுத்தாளர்
பிடித்தவர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பிடிக்காதவர்: ஞாநி

3. கவிஞர்
பிடித்தவர்: மு.கருணாநிதி
பிடிக்காதவர்: உயிரோடு இல்லை

4. திரைப்பட இயக்குனர்
பிடித்தவர்: அமீர்
பிடிக்காதவர்: மணிரத்னம்

5. நடிகர்/கை
பிடித்தவர்: ஜெயலலிதா
பிடிக்காதவர்: விஜயகாந்த்

6. விளையாட்டு வீரர்
பிடித்தவர்: விஸ்வநாதன் ஆனந்த்
பிடிக்காதவர்: அஜீத்

7. தொழில் அதிபர்
பிடித்தவர்: கலாநிதி மாறன்
பிடிக்காதவர்: ஷங்கர்

8. மதத் தலைவர்
பிடித்தவர்: கி.வீரமணி
பிடிக்காதவர்: இராமகோபாலன்

9. மருத்துவர்
பிடித்தவர்: புருனோ
பிடிக்காதவர்: ராமதாஸ்

10. வலைபதிவர்
பிடித்தவர்: லக்கிலுக்
பிடிக்காதவர்: யுவகிருஷ்ணா

என்னைத் தொடர அழைத்தது:  நாடோடி இலக்கியன்

நான் தொடர அழைப்பது:
விதி இங்க இருக்கு. 

டிஸ்கி: பிடித்த/பிடிக்காதவர் எந்த நிமிடமும் மாற்றப்படலாம்.

Nov 4, 2009

எம்.ஆர்.ராதா, தொலைக்காட்சி, பர்தா - ஜிகர்தண்டா

நடிகர் எம்.ஆர். ராதா பற்றிய கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி கேட்டேன். அதில் எம்.ஆர்.ராதா மலேசிய மேடையில் பேசியதன் ஒரு பகுதியை ஒலிபரப்பியிருந்தார்கள். கேடுகெட்ட அயோக்கியர்கள், வரி ஏய்ப்பு செய்பவர்கள்  என்று சினிமாக்காரர்களை திட்டுகிறார். கேட்டுப்பாருங்கள்...
எம்.ஆர்.ராதாவுடைய முழு உரையும் இங்கே கிடக்கிறது. அதில் அரசியல்வாதிகளையும் விமர்சிப்பதோடு, எம்.ஜி.ராமசந்திரனை தான் சுட்ட கதையையும் விளக்குகிறார்.

இன்று ஆதித்யாவில் விவேக் சேலையில் நடித்த ஒரு காமெடியை பார்க்க நேரிட்டது. சகிக்கவில்லை... தினமலர் விவகாரத்திற்குப் பிறகு விவேக் காமெடியை ரசிக்க முடிவதில்லை. திரைக்கு வெளியே நடிக்கும் போது, சக நடிகைகளுக்கு கோயில் கட்டி கும்பிடச் சொல்லும் விவேக், திரையில் பெண் வேடத்தில் அல்லது முற்போக்குவாதி வேடத்தில் வந்து பெண்களை (சக நடிகைகளையும்) கொச்சைப்படுத்தும் போது டிவியை உடைத்துவிடலாமா என்று ஆத்திரம் வருகிறது.

வீட்டிற்கு ஒரு தொலைக்காட்சிப்பெட்டி இலவசமாக கொடுத்து, மானும் மயிலும் ஆடுவதை கண்டு கைகொட்டி சிரித்தும், திருமதி செல்வத்தை பார்த்து கண்ணீர்விட்டு அழுதும் கிடக்கச் செய்துவிட்டார்கள். மெகா தொடருக்கு அப்பால் நம்முடைய அறிவு செல்லக்கூடாது என்பதில் தீர்மானமாய் இருப்பதன் மூலம், நாட்டு மக்களுக்கு நடப்பு அரசியலை பற்றிய விமர்சனம் / மாற்றுக்கருத்து எழாதவாறு கவனமாக பார்த்துக்கொள்கிறார்கள். எதிர் கட்சிகள் நடத்தும் தொலைக்காட்சி செய்திகளுக்கும் தன் தலைவர்களுடைய அரை மணி நேர அறிக்கையை வாசிப்பதற்கே நேரம் கிடைப்பதில்லை. அநியாயம்.. நமது பொழுதை எந்த வழியில் போக்க வேண்டும் என்பதை அரசே தீர்மானித்து நமது அறிவை மழுங்கச்செய்கிறது.

நண்பர் நர்சிம், கோலங்கள் தொடரின் ஒரு காட்சிக்காக அதன் இயக்குனரை பாராட்டி ஒரு பதிவிட்டிருந்தார். நல்ல காட்சியமைப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், தொடரை தொடர்ந்து பார்க்கும் யாருக்கும் 'அந்த' நிகழ்வு நினைவு வந்திருக்க வாய்ப்பில்லை. அண்டை நாட்டில் ஒரு இனம் அழிக்கப்பட்ட அண்மைய துர் நிகழ்வு, மெகா சீரியல் பார்க்கும் பெண்களில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்பது சந்தேகமே.

சமையில் எரிவாயுவிற்கு வழங்கிவந்த மானியத்தொகையை தமிழக அரசு விலக்கிக்கொண்டுள்ளது. பாதகமில்லை.. தேர்தல் நெருங்கும் போது முற்றிலும் இலவசமாகக்கூட தருவார்கள். அது கிடக்கட்டும், எரிவாயு சிலிண்டர் காலாவதியாகும் தேதி ஒவ்வொரு சிலிண்டரிலும் அச்சிடப்பட்டிருக்கும். C10 என்றிருந்தால், மூன்றாம் காலாண்டு 2010ல் காலாவதியாகிறது என்று கொள்ளவேண்டும். அதாவது. A B C D முறையே முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் காலாண்டை குறிக்கிறது. 10 என்பது வருடத்தை குறிக்கிறது என்பது தெரிந்திருக்கும். காலாவதி (எக்ஸ்பயர்டு) ஆன பிறகு சிலிண்டரை பாவிக்காது திரும்ப கொடுத்துவிடுவதன் மூலம் விபத்துக்களை தவிர்க்கலாம்.

சென்றவாரத்தின் ஒரேநாளில் Wrong Turn 3, Rest Stop என்ற இரண்டு திரைப்படங்களை அடுத்தடுத்து பார்த்தேன். இரண்டுமே கானிபலிஸம் வகை. இரண்டையும் பார்த்து முடித்ததும் ஒரே திரைப்படம் பார்த்தது போன்ற எண்ணம். ஒரே மாதிரியான பழைய பிக்அப்,  பேசாத 'அதுகள்', பேசும் ஆயுதங்கள், நிலா வெளிச்ச இரவுகள் என நான் பார்த்த அனைத்து 'மனித மாமிச உண்ணி' திரைப்படங்களின் காட்சிப்படுத்துதலிலும் கதை அம்சத்திலும் எந்த வித்தியாசமும் காட்டப்பட்டதில்லை. இதே உணர்வு பல விஜய் திரைப்படங்களை பார்க்கும் போதும் ஏற்படுவதுண்டு. கார்க்கி அடிக்கவர வேண்டாம், நான் சொல்வது திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பை மட்டுமே. யார் மனதையும் புண்படுத்த அல்ல.

அவிய்ங்க ராசா, சென்னையில் தனக்கு வீடு கிடைக்காத கதையை பதிவிட்டிருக்கிறார். சாதி மத சிறுபான்மையினருக்கு பெருநகரங்களில் வாடகைக்கு வீடு கொடுக்க யாரும் தயாராயில்லை. இவர்களுக்கு வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்படுவதை பற்றிய கவலை, குறைந்தபட்சம் அனுதாபம் கூட இங்கே இல்லை. போலி தேசியம் பேசுகிறார்கள், கடந்த கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வெற்றிபெற பிராத்தனை செய்த விளையாட்டு வெறியர்களான போலி தேசியவாதிகள்.

பஹ்ரைன் நாட்டை சார்ந்த ருகையா அல் கஸ்ரா என்ற பெண்,  ஹிஜாப்-பர்தா (தலை முதல் கால் வரை மறைக்கப்பட்ட உடை) அணிந்து ஒலிம்பிக் 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்திருக்கிறார்.  இஸ்லாம், பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கவில்லை என்று சொல்லி மற்றவர் நம்பிக்கையில் மூக்கை நுழைந்து போலி மதசார்பின்மை பேசும் ‘மதவாதிகளின்’ முகத்தில் கரியை பூசியிருக்கிறார். பர்தா பெண்களுடைய முன்னேற்றத்திற்கும், விளையாட்டு துறையில் வெற்றி பெறவும் தடையாக இருப்பதில்லை என்பதை ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்று நிரூபித்திருக்கிறார். பெண்களின் அரைகுறை ஆடை ஆண்களின் கழுகுப்பார்வைக்கான விருந்தேயன்றி, அது அவர்களுடைய நேர்மையான முன்னேற்றத்திற்கு அல்ல என்பதை போலி பெண்ணியவாதிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். பொது இடங்களில் ஆடை குறைப்பதில்தான் பெண் சுதந்திரம் அடங்கியிருக்கிறது என்ற பிம்பத்தை உடைத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
Rukaiya2 Rukaiya1

டிஸ்கி: இது மீள்பதிவு இல்லீங்க... :(