Feb 7, 2016

Shame on you JEMO

கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம்? கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்? - ஜெயமோகன்

இவையொன்றும் ஜெமோவிற்கு புதிதல்ல, திரைப்படத்திற்கு வசன வாய்ப்பு இல்லாத போது தம் இரத்தத்தில் ஊறிப்போயிருக்கும் இஸ்லாமிய வெறுப்பை கதையெடுக்கிறார். அந்த மதவெறி இவர் கண்ணை மறைத்து நெடுந்தூரம் கொண்டு சென்றுவிட்டது. மதவெறி வாந்தி இல்லாத இவரது கட்டுரையை காண்பது அறிதாகிவிட்டது. தனக்குத்தானே கடிதம் எழுதும் இவரது சுயபிரபல வெறி எளிதில் தீ பற்றும் இஸ்லாமிய சப்ஜக்டை எப்போதும் உரசிப்பார்ப்பதில் ஆச்சரியமில்லை.

என் திருமணத்திற்கு வெளியூரிலிருந்து குடும்பத்துடன் வந்திருந்தான் சோமு. அவர்களுக்காகவே சைவ உணவு சமைத்திருந்தோம். ஆனால் நண்பன் சித்தீக் தனியாகத்தான் வந்திருந்தான். 10 வருடத்திற்கு முன்பு என்னுடன் குவைத் அறையில் இருந்த நசீர், பாஷா இருவருடைய போன் நம்பர் கூட என்னிடம் இல்லை. ஆனால் பெருமாள் ராஜு இப்போதும் தொடர்பில் இருக்கிறார்.

கடந்த ஈகைப் பெருநாளில் என் வீட்டு பிரியாணி (ஒன்றிரண்டு முஸ்லிம் நண்பர்களைத்தவிர) அனைத்தும் அக்கம் பக்கத்து இந்து, கிருத்தவ வீடுகளுக்குத்தான் சென்றது. கூடவே தினமணி ஈகைத்திருநாள் சிறப்பு மலரும், அடையாறு ஆனந்தபவன் இனிப்பும். இடப்பக்க வீட்டில் முன்பே வாய்க்கால் தகராறு இருந்தது. ஆனாலும் வீட்டுக்கதவு தட்டி உள் சென்றோம். அவர்களும் புன்னகையுடன் வரவேற்றனர். அதேபோல ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தீபாவளி ஸ்வீட் என் வீட்டிற்கும் வருவது வழக்கம்.

இந்துத்துவ கப்பலில் சொகுசு சவாரி செய்தாலும் சமகால தமிழின் சிறந்த எழுத்தாளரான உங்களுக்கு இத்தகைய மதம்கடந்த மனிதநேயங்கள் தெரியாதிருக்க வாய்ப்பில்லை.


- உங்களது ஆசான்கள் கற்றுக் கொடுத்த பிரித்தாளும் சூழ்ச்சி விசத்தை, கண்ணாடி பார்த்துக்கொண்டு விருந்தினர் மாளிகை மலக்கூடம் சென்று வெளியெடுங்கள்... இங்கு வேண்டாம். விளம்பர வெறி உங்கள் கண்ணை மறைக்கிறது, வெட்கப்பட வேண்டும், ஜெமோ.  #shameonyouJEMO 

Dec 29, 2012

புனிதம் காப்போம்

பெண்களைப் புனிதங்களாகச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை என்று எழுதிவைத்து முழக்கமிட்டாலும், எம்பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதை மறுக்கவியலாது. இப்போற்றலே இவர்கள் புனிதங்கள் என்பதையும் நமக்கு புரியவைக்கும். இப்புனிதங்களைப் பாதுகாக்கவே, தனிப் பேருந்து, தனியாக இரயில் பெட்டி, குற்றங்களை விசாரிக்க தனிக்காவல் நிலையம், தனியான சட்டங்கள் என்ற தனிமைப்படுத்தல்கள். தனிச் சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதற்கு இவர்களுடைய இயற்கையான உடலமைப்பே காரணம். உடற்கூற்றளவில் ஆணும் பெண்ணும் ஒருபோதும் சமமாக முடியாது. பெண்கள் கண்ணியமாக ஒரு படி மேலே வைத்து போற்றப்பட வேண்டியவர்கள், புனிதமானவர்கள்.

பல நூறு பேரைக் கொன்றவனுக்குக்கூட மரண தண்டனை கூடாது என்று பலமாக எதிர்த்த ஆர்வலர்கள் பெண் வன்கொடுமை விஷயத்தில் மவுனம் சாதிக்கிறார்கள். இதற்கு உணர்ச்சிநிலை மட்டுமே காரணம் என்று ஒதுக்கிவிட முடியாது. நேற்று புதுவருடப் பிறப்பை எந்த மதுக்கடையில் கொண்டாடலாம் என்று அறிவுரை சொன்னவர்கள் இன்று மதுவை ஒழிப்போம் என்கிறார்கள். நாளை மீண்டும் மதுக்கடை வாசலில் வரிசைக் கட்டலாம். இத்தகைய ஒருநாள் பிரச்சாரத்திற்கும் பெண்கள் மீதிருக்கும் கருணைப் பார்வையே காரணமாகிறது. இதுவே புனிதத்தின் வெளிப்பாடு, சிலருக்கு கடவுளை நினைத்ததும் தவறு செய்ய மனம் தடுப்பதைப் போல, வேறு சிலருக்கு காதலோ, கணவனோ, தாயோ புனிதமாகிப்போவதுண்டு,
எத்தைத்தின்றால் பித்தம் தெளியும் என்பது போல ஊடகங்களுக்கு ஏதாவதொரு தீனி தேவைப்படுகிறது. இவைகளுக்கு சூழ்நிலைக்கேற்ப இவ்விளைய சமுதாயத்தைச் சூடேற்ற தீனி தேவைப்படுகிறது. ஹஜாரேவோ, மோடியோ, அப்சல் குருவோ சூழலுக்கேற்றவாறு சூடாக்கப்படுகிறார்கள். முந்தைய விடயம் குளிர்விட்டுப்போனால் முரணாக முல்லைப்பெரியாறும், அணுவும் அவ்வப்போது உலையில் ஏற்றப்படுகிறது. சில சமயம் உணர்வுப்பூர்வமான புனிதங்களான மதம், இனம், கற்பு இம்முறை பெண்.

முன்னெப்போதும் இல்லாமல் கடந்த சில நாட்களாக வரும் செய்திகள், இந்திய ஆண்கள் அனைவரும் எதிரே வரும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வதையே குலத்தொழிலாகக் கொண்டவர்கள் என்பது போன்ற தோற்ற பிம்பத்தை உண்டாக்குகிறது. அதுவும் சில நிலைத்தகவல்கள் ஆண்கள் அனைவரும் வாய்ப்பு கிடைக்காத வன்கொடுமையாளர்கள் என்கிற தொனியில் பரப்புரையாற்றுகிறது. இவற்றில் ஊடகங்களின் பங்கு சொல்லித்தெரியவேண்டியதில்லை. தினம் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருவரை அழைத்து பெண்களுக்கெதிரான வன்கொடுமைக்கு என்ன காரணம் என்ற விவாதம் நடத்தி அன்றைய தினத்திற்கான 24 மணிநேரத்தை கடத்திவிடுகிறது.
 
அது நிற்க, வாச்சாத்தி, இருளர் பெண் வன்கொடுமையும், கீழவெண்மணி, தர்மபுரி போன்ற சாதிய வன்கொடுமையும் உலக வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுவதில்லை. மோடியை வளர்ச்சி நாயகன் என வர்ணித்து இளைய சமுயாத்தை நம்பவைத்திருக்கும் ஊடகத்திற்கு அங்கு நடந்த இனவறுப்பை வெளிக்கொணற வீரமில்லை. வன்கொடுமை யாரால் யார்மீது நிகழ்தப்பட்டாலும் அது வன்கொடுமையே. ஊடகமும் உயர்சாதிப் பேதமும் இவற்றைத் தீர்மானிப்பதாக இருக்கக்கூடாது.

வெறுமனே ஊடகத்தை மட்டுமே குறைசொல்லலாகாது, இவை நிகழ்விற்குப் பிறகான காட்சி மாற்றத்தையே பெரும்பாலும் தீர்மானிக்கின்றன. வெகு சில சமயங்களிலேயே ஊடகம் குற்ற நிகழ்விற்கு காரணியாகிவிடுகிறது.

தண்டனை; இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இவை இன்னும் விவாதப் பொருளாகவே இருக்கிறது. அணு ஆயுத மற்றும் ஏவுகணைச் சோதனையினூடே மரண தண்டனைக் கெதிரான பிரச்சாரத்தையும் நம்மால் செய்ய முடிகிறது. எதிரிகளிடமிருந்த நம்மைக் காக்க ஏவுகணையெனில், நம்மை நாமே காத்துக் கொள்ள தண்டனை. தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும். மரணம் உச்சம்.

என் உயிரை எடுத்தவனுடைய உயிரை எடுப்பதே எனக்கான நீதியாக இருக்க முடியும். எனக்கு அநீதி இழைத்தவனை மன்னிக்கும் அதிகாரம் என்னிடம் மட்டுமே இருக்க வேண்டும். அவனுக்கான தண்டனையை குறைக்கும் அதிகாரம் என்னைத்தவிர யாருக்கும் இருக்கக் கூடாது, அது கடவுளாக இருந்தாலும் சரியே. குற்றத்தைக் குறைக்கும் மார்க்கம் தண்டனை, நீதி தண்டனை. இங்கு மலிந்து கிடக்கும் ஊழலே தண்டனை கடுமையாவதையும் பயமுறுத்துகிறது. பணம் கொடுத்து யாரையும் தண்டித்துவிடவோ, தப்பவிடவோ முடியும் என்பதே நம்முடைய சாபக்கேடு.

கடுந்தண்டனைத் தவிர்த்து நம்மிடையே சுய பரிசோதனையும் அவசியமாகிறது. நமது உடை, நடை அலங்காரம் பொன்றவற்றை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பெண் அலங்காரம் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். - அந்நூர் [24:31]
திருக்குறள் அறத்துப்பால்;
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. - குறள் 57
இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.
சிலருக்கு கடவுளும், காதலும் புனிதமாகிக் குற்ற நிகழ்வைத் தடுப்பது போல, பலருக்கு தண்டனை புனிதமாகப்பட வேண்டும். இப்புனிதங்களே நம்மிடமிருந்து நம்மைக் காக்கும். 

புனிதம் காக்கும்.

Sep 21, 2012

உயிரினும் மேலான...!


இஸ்லாமியர்கள் வரலாற்று தவறிழைத்துவிட்டார்கள்.  இவர்களின் போராட்டத்திற்குப் பிறகுதான் அந்தத் திரைப்படம் பற்றி பலருக்கும் தெரியவந்தது. அது ஒரு இரண்டாம்தர, மஞ்சள் திரைப்படம். அதை இயக்கியவன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி வெளியே இருப்பவன். இவர்களுக்கு விளம்பரம் தேடித்தந்திருக்க வேண்டாம். - இவையெல்லாம் தம்மை நடுநிலைவாதி, கடவுள் மறுப்பாளன் என்று சொல்லிக் கொள்பவர்களின் விமர்சனம். தினமணி ஒருபடி மேலே போய் கூத்தாடி ஷாருக் கானும், சாமியார் அப்துல் கலாமும் அமெரிக்கா சென்ற போது அவமானப்படுத்தப்பட்டார்களே அப்போது நீங்கள் போராடவில்லையே என்று சொல்கிறது.

இவை மேலோட்டமாக கேட்கும் போது நியாயமான அக்கறை போல தோன்றினாலும், அவர்கள் இழிவுபடுத்தியிருப்பது நாம் உயிரினும் மேலாக நேசிக்கும் முஹம்மது நபியை (அவர் மீது அமைதி நிலவட்டும்). உயிரினும் மேலாக என்பது போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போவதல்ல, நமது உயிரைவிட அவர் மீது மதிப்பு வைத்துள்ளோம் என்பதைச் சரியாக புரிந்துகொண்ட மேற்கத்தீய சக்திகள் முஸ்லிம்களின் உணர்சியை தூண்டிவிட தவறான இடத்தில் கல்லடித்துள்ளனர். 9/11க்குப் பிறகான இஸ்லாத்தின் வளர்ச்சி வேகம் இவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கலாம். அதனாலேயே ஒன்றன் பின் ஒன்றாக முஸ்லிம்கள் மீதான இவர்களின் காழ்புணர்ச்சியை வெளிக்காட்டுகிறார்கள்.இப்போது ஃப்ரான்ஸில் வெளியிடப்பட்டிருக்கும் கார்டூனும் இதற்குச் சான்று. இது இன்னசன்ஸ் முஸ்லிகளை கொதிப்படையச் செய்து, கலவரத்தை உண்டுபண்ணச் செய்யும் என்ற எண்ணமாக இருக்கலாம்.

முஸ்லிம்கள் கலகக்கார்கள் அல்ல, அமைதியான முறையில் தமது எதிர்ப்பைக் காட்ட அறவழிப்போராட்டம் மேற்கொண்டாலும், இவர்களைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் தீவிரவாதத் சுவர் இவர்களை தீவிரவாதிகளாகவே வெளிக்காட்ட வேண்டும என்பதில் தீவிர இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் முனைப்பாக இருக்கிறார்கள். இவர்களுடைய எண்ணமெல்லாம் இஸ்லாம் ஒருபோதும் தன்னுடைய உண்மை முகத்தை வெளிக்காட்டிவிடக் கூடாது என்பதுதான். இஸ்லாமினுடைய உண்மையான அமைதி முகம் வெளித்தெரிகையில் இவர்கள் மீது இத்தனை நாளாக கட்டி எழுப்ப முற்படும் தீவிரவாத முகத்திரை பொய்த்துவிடும் என்பது இயல்பான பயம்.

சமீபத்தில் நடந்துவரும் ஏனைய போராட்டங்களின் போது காவல்துறை அத்துமீறலை, அடக்குமுறையை கண்டித்த பலரும், இந்தப் போராட்டத்தில் இன்னசன்ஸ் முஸ்லிம்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார்கள். மாமியார் உடைத்தால் மண்குடமாம். அமெரிக்க நாடுகளில் கூலி வாங்கும் பலரும் அவர்களுக்கு விசுவாசமாகவே இருந்து தொலைக்க வேண்டியிருக்கிறது. 

வெள்ளையர்களைச் சுட்டு வீழ்த்திய கட்டபொம்மனையும், பகத்சிங்கையும், சுபாஷ் சந்திர போஸையும் இந்திய  விடுதலைப் போராட்ட வீரர்களாக, தியாகிகளாக ஏற்றுக் கொள்ளும் நாம், சதாம் உசைனையும், ஒசாமாவையும் தீவிரவாதிகள் என சட்டென முத்திரை குத்திவிட்டோம். திப்பு சுல்தான் கோயில்களை கொள்ளையடித்தான் என்று சொல்லப்படுவதையும் மறுப்பேதும் இல்லாமல் ஏற்றுக்கொள்கிறோம். குறைந்தபட்சம் இவர்களுடைய வரலாறுகளையாவது படித்துப் பார்த்திருந்திருக்கலாம். இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் அதற்கெல்லாம் இடம் கொடுக்கவில்லை. 

அதே இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல்தான் சென்னையில் மய்யப் பகுதியில் வரலாறு காணாத பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சிப்  பெருக்கக் கூடிவந்து பேருந்து ஒன்றையும், இருசக்கர வாகனம் ஒன்றையும் எரித்தார்கள் என்பதை நம்ப வைக்கிறது. உயிரினும் மேலான முஹம்மது நபியை இழிவுபடுத்திய அமெரிக்கர்களை எதிர்க்க உணர்ச்சிப் பெருக்கில் அமெரிக்க தூதரகம் மீது கல்லெரிந்தாலும் (இதை நான் ஆதரிக்கவில்லை) அருகில் இருக்கும் வேறெந்த சொத்திற்கும் சேதம் விளைவிக்கவில்லை. காவல் துறையினரை திருப்பி அடிக்கவில்லை. அடிவாங்கியே பழக்கப்பட்ட இந்த சமுதாயம், இப்பவும் அடிவாங்கியவாறே ஓடிக் கலைந்தது. இதற்கு முந்தைய வாரத்தில் கூடங்குளத்தில் காவல்துறை தடியடி நடத்தியதைக் கண்டித்து முதலில் சென்னையில் மறியலில் ஈடுபட்டு கைதாகியது ஒரு முஸ்லிம் அமைப்பு. 

இத்தகைய அறவழிப்போராட்டம் நடந்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இன்னும் சிலருக்கு சென்னையில் இத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பதே அதிர்சியாக இருக்கிறதாம். சிலருக்கு இனி அமெரிக்க விசா கிடைப்பது சிரமமாகிவிடும் என்ற கவலை. இன்னும் சிலர், அமெரிக்காகாரன் படமெடுத்தால் அமெரிக்க தூதரகத்தை ஏன் முற்றுக்கையிட வேண்டும் என்ற கோபம். 

இவையெல்லாவற்றையும் விட இணையப் போராளிகளின் அக்கறை புல்லரிக்க வைக்கிறது. அலுவலகத்தில் நேரம் போக்க ஃபேஸ் புக், ட்விட்டர், கூகள்+ல் தினம் போராட்டம் நடத்துகிறது இந்தக்கூட்டம். ஒரே போராட்டத்திற்கு தினமும் எழுதினால் போரடித்துவிடும் என்பதால் தினம் தினம் புதிய அவலை தேடி அலைகிறார்கள். ஈழம், கூடங்குளம், முல்லைப் பெரியாறு, ஹஜாரே, டீஸல், டி20 என இவர்களது சமூக ஆர்வம் பரந்து விரிந்தது. ராஜபக்சே மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்று ட்விட்டரில் எழுதும்போது கூடங்குளத்தில் அணுஉலை ஆபத்தானது என்று ஃபேஸ்புக்கில் எழுதுவார்கள். கூடங்குளத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம், அண்டை மாநிலத்துக்கு கொடுக்கக்கூடாது என்று கூகள்+ல் எழுதினால், காவிரி நீரில் நமக்கு முழு உரிமை உள்ளதென ப்ளாக்கில் எழுதுவார்கள். இலங்கை சுற்றுலா பயணிகளை அடித்து விரட்டியதை வெல்டன் என் எழுதிய கை, தூதரக சன்னல் கண்ணாடி உடைந்ததை அந்தோ பரிதாபம் என்று எழுதுகிறது.

கட்டிட நெரிசலில் சிக்கி உயிரிழந்த தூதரின் குடும்பத்திற்கு அழ்ந்த அனுதாபங்கள். அது நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய செயல், குற்றம் செய்தவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அதுபோலவே,  இப்பிரச்னையில் சற்றும் தொடர்பில்லாத மாநகரப் பேருந்தை சேதப்படுத்திய உண்மையான குற்றவாளியும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இஸ்லாத்தை விமர்சிக்க உங்களுக்கு தாராள உரிமை இருக்கிறது, இழிவுபடுத்த எவருக்கும் உரிமையில்லை. 

முஹம்மது நபியை உயிரினும் மேலாக நேசிக்கிறோம் என்பதை உலகிற்கு உணர்த்தவே இந்தப் அறப்போராட்டம். ஆம், நம் உயிரினும் மேலாக!