Jan 11, 2010

புத்தகக்காட்சி, தொலைக்காட்சி, பைரஸி, அரசு - ஜிகர்தண்டா

புத்தக காட்சிக்கு போய் நானும் ஒரு நாலஞ்சு பதிவு போட்றலாம்னு பார்த்தேன். முடியல.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். காட்சியில் விற்பனையான புத்தகங்கள் மட்டும் 7 கோடியாம். நானும் போயிருந்தா 7 கோடியே 1 ஆகியிருக்கும். புரிஞ்சிருப்பீங்க.. கோடிக்கு எத்தன பூஜ்யம்னு தெரியலைங்க.
சில விருப்பப்பதிவுகளை வாசிக்கையில் ஸைடு பாரில் மிதக்கும் விளம்பரங்களும் இசைகளும் எரிச்சலடையச் செய்கிறது. இன்னும் சில ஆனைக்கு முன்னே மணி ஓசை மாதிரி,  பதிவுகளை திறந்ததும் விளம்பரங்கள் பாப்அப் ஆகிறது. அந்த பதிவுகளை அப்படியே மூடிவிட்டு வந்துவிடுவேன். இந்த வார நட்சத்திர பதிவிலும் அப்படித்தான். நட்சத்திரம் குட்டிரேவதி கண்ணகி பற்றி எழுப்போகிறாராம், ரீடரில் இருக்கும் படித்துக்கொள்கிறேன்.
நெல்லையில் காவல்துறை அதிகாரி கொலைசெய்யப்பட்டதும் அவரை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் மீடியாக்களில் கிழிக்கப்பட்டனர். தண்டனையாக அவர்களுடைய பதவி பறிக்கப்பட்டாலும் தவறே இல்லை. (கொலையாளிகள் விட்டுச்சென்ற பைக்கில் அதிமுக சின்னம் இருந்ததாம். இனி.. எதிர்கட்சி வாய்திறக்காது) அது போகட்டும், அந்த வீடியோ ஒளிப்பதிவு செய்த நபரை என்ன செய்யலாம். இதே போல சென்றவாரம் ராமேஸ்வரத்தில் ஒரு பெரியவர் நடு ரோட்டில் தேங்கி கிடந்த தண்ணீரில் விழுந்து குளிரிலேயே இறந்துவிட்டாராம். அதையும் படம் பிடித்து கல்லாகட்டுகிறார்கள். தொட்டதற்கெல்லாம் அரசாங்கத்தை குறை சொல்லியே காலம் தள்ள வேண்டியிருக்கிறது.
ஜக்குபாய் படத்தை தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள்  இந்தியாவில் வெளியிடப்படும் முன்பே இணையத்தில் கிடைக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னதாக லண்டனில் இசை வெளியிடப்பட்டும் தமிழ் ரசிகர்களுக்கு கிடைக்கச்செய்யாதது நிர்வாக குறைபாடு என்றே சொல்லலாம். பின்ன எங்கிருந்து பைரஸியை ஒழிப்பது?
இளம் இயக்குனர்கள், தங்களது ஐந்து நிமிட படைப்பான குறுப்படங்களை காட்சிப்படுத்தும் கலைஞர் டிவியின் 'நாளைய இயக்குனர்' பாராட்டப்படவேண்டிய நிகழ்ச்சி. மதன், போத்தன் மற்றும் வாரம் ஒரு வெற்றி இயக்குனர் என நடுவர்களால் அக்குறும்படம் குறித்த கருத்துக்கள் பதிவு செய்யப்படுகிறது. விரைவில் ஆதியை அங்கு எதிர்பார்க்கிறேன்.
இரண்டு வாரமாக மாலை நேர பொழுது போக்கு விஜய் டிவி சீரியல்கள் தான். ச்சும்மா சொல்லப்படாது... நல்லாதாங்க இருக்கு. குறிப்பா கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், அன்பேவா இரண்டு தொடர்களும் சூப்பர். கதைய விடுங்க, காட்சியமைப்புகளும் யதார்த்த வசனங்களும் தொடரோடு ஒன்ற வைக்கிறது. பள்ளிக்கூட நடிக பசங்களின் நடிப்பும், மதுர ஸ்லாங்கும்... ம் க்ரேட்.
நேற்று Duel என்ற ஒலகப்படம் பார்த்தேன். வழக்கம்போல உபயம்; பாலா. (புரியாத மொழில இருந்தா ஒலகப்படம் தான?).  ஆங்கிலமில்லை, வேறெந்த மொழி என்பதும் தெரியவில்லை, அது தேவையும் இல்லை. இயக்குனர்; ஸ்பீல்பர்க். டப் செய்யப்பட்ட ஹாலிவுட் படமாகத்தான் இருக்கவேண்டும். கதை இதுதான்; ஹைவேஸில் ஒரு கார், புகை கக்கிச்செல்லும் ட்ரக்கை முந்திச்செல்ல.. அந்தக் கார்காரரை கொல்லவரும் ட்ரக். ஆமாம்... ட்ரக் ஓட்டுனரை கடைசிவரை காட்டவில்லை. இதைத்தான் தரம் என்கிறேன். இதற்கு உலகத்தரம் உள்ளூர்தரம் என்று என்ன பெயரும் வைத்துக்கொள்ளலாம். திருட்டு டிவிடியை ஒழிக்க இதை போல தரமான படம் கொடுங்கள் என்றுதான் தமிழ் இயக்குனர்களை கேட்கிறேன்.

ரைட்டர் பேயோன் (http://twitter.com/writerpayon) ட்விட்டுகள் புத்தகமாக வெளிவருகிறதாம். விலை 60 /-. பேயோன் பேரவையின் புதிய உறுப்பினர். அங்கு நண்பர் மணிகண்டனின் பின்னூட்டமும் வாசிக்கவும். ;)

அடுத்த வார நீயாநானாவின் தலைப்பு 'பர்தா' (நன்றி லோகு). ஒரு நிமிட க்ளிப்பிங் பார்க்கத்தூண்டுகிறது. மீண்டும் பதிவுலகம் வீண் சர்ச்சைகளில் மூழ்காது என்ற நம்பிக்கை இருக்கிறது. பர்தாவிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அத்தனையையும் அடைத்துக்கொண்டிருந்தாலே பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆரோக்கிய விவாதத்திற்கு நாம் எப்போதும் தயாரே. ஆனால், இணையவிவாதங்களில் ஆரோக்கியத்தை எதிர்பார்ப்பது அதீதம் தான். இருக்கட்டும்... அடுத்த வாரம் பார்ப்போம்.

Jan 9, 2010

சினிமா திருட்டு குண்டர் குற்றமா?

தமிழ்மணம் முதற்கட்ட வாக்கெடுப்பில் 'ஜெய்ஹிந்த்புரத்தின்' விளிம்புநிலை வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்களும் தீவிரவாதமும் என்ற இரண்டு இடுகைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வாக்களித்த பதிவர்களுக்கு நன்றி ! இறுதிச் சுற்றிலும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் பதிவர்கள், பொது வாசகர்கள் அனைவருக்கும் நன்றி !!! - பீர்.

ஜக்குபாய் - திரைக்கு வருவதற்கு முன்பே டிவிடி வெளியாகிவிட்டதாம். திரைத்துறையில் இருக்கும் சில 'பொதுநலவாதிகளே' மார்கெட்டில் வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. திரைத்துறை வியாபாரிகள் எல்லோரும் சேர்ந்து ஒப்பாரி வைக்கிறார்கள். ஜக்குபாய்க்கு சகுனம் சரியில்லை என்கிறார் ஒரு அறிவு ஜீவி. திருட்டி டிவிடி விற்பவனின் கையை வெட்ட வேண்டும் என்கிறார்கள். திருட்டு டிவிடியை ஒழிக்க தமிழக அரசு குண்டர் சட்டம் பாயும் என்கிறது.

குண்டர் சட்டம் பாயுமளவுக்கு இது குற்றமா? உண்மையில் தமிழகம் தடுக்கப்பட வேண்டிய வேறு குற்றங்கள் இல்லாத அமைதி பூங்காவாகிவிட்டதா? நெல்லையில் காவலரை கொல்லும் ரவுடி, அவரை காப்பாற்ற முடியாத அரசியல் தலைவர்கள். இவர்களை தண்டிப்பதைவிட சினிமாக்காரர்களுக்காக அறிக்கை விடுவதை முக்கியச் செய்தியாகக் காட்ட இந்தத் தொழிலில் என்ன இருக்கிறது? சினிமாக்காரர்களின் ஓட்டுக்காகத்தான் இந்த படங்காட்டப்படுகிறது என்பதையும் யாரும் சொல்ல மாட்டார்கள். கூத்தாடிகளில் எத்தனை பேருக்கு ஓட்டுப்போடும் தகுதியும், தமிழக வாக்குச்சீட்டில் பெயரும் இருக்கிறது என்பது அரசியல்வாதிகளுக்கும் நன்கு தெரியும்.இருந்தும் ஒரு சினிமாக்காரன் நடத்தும் விழாவிற்காக நம் பணத்திலிருந்து லட்சங்களை வாரி வழங்க தயாராக இருப்பதும், படோபட வாழ்க்கை நடத்தும் அவர்களுக்கு வீடுகட்டித்தரவிருப்பதும், தினம் அவர்களுக்காக அறிக்கை தயாரித்து முதலைக்கண்ணீர் விடுவதற்கும் என்ன காரணமாக இருக்க முடியும்? பணம். கணக்குவழக்கில்லாமல் கேட்கும் போதெல்லாம் கோடிகளை அள்ளிக்கொடுக்கத் தயாராக இருப்பது போலவே, கொள்ளையடிக்கும் கருப்புப் பணத்தை உள்வாங்கும் தொழில்துறை அது. கூத்தாடிகள் கையில் நாட்டை கொடுத்தால் குட்டிச்சுவராக்கிவிடுவார்கள் என்பதை மீண்டும் மீண்டும் மெய்பிக்கும் நிகழ்வுகள் நடந்தேருவது வருத்தத்தையே மிச்சப்படுத்துகிறது.

திருட்டு டிவிடிக்காரர்கள் கொடுக்கும் கமிஷன் அரசியல்வாதி முதல் காவல்துறை வரை பங்கு பிரிக்கப்படுகிறது. தயாரிப்பாளருக்கும் பங்கு  சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கைநீட்டி லஞ்சம் வாங்குபவர்கள், (இனி வருமானம் தடைபடும் என்பதை தவிர்த்து யோசித்தாலும்) நிச்சயம் காசு கொடுப்பவனுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள். எனவே திருடர்களாய் பார்த்து திருந்தாத வரை இத்திருட்டை ஒழிக்க முடியாது. டிவிடி திருடன் ஏன் திருந்த வேண்டும்? என்பதற்கான பொதுவான காரணம் எங்கும் சொல்லப்படவில்லை. நம் புத்திக்கு எட்டியவரை (பணம் கொடுத்து நாம் வாங்கும் டிவிடி எப்படி திருட்டு டிவிடியாகும் என்ற நுணுக்கங்களை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு) நாமே சிந்திக்கலாம்.
நமக்கும் திரைப்பட தயாரிப்பாளருக்கும் சம்பந்தமில்லை. திருட்டு(?) டிவிடி வியாபாரி பேர் கூட தெரியாது. ஆனால் நாம் நுகர்வோர். திருட்டுதனமாய் வாங்கி, திருட்டுதனமாய் ப்ரிண்ட் போட்டு, திருட்டுதனமாய் விற்கப்படும் டிவிடியை காசு கொடுத்து வாங்கி படம் பார்க்கும் திருட்டு டிவிடி பயனர்.  இந்த திருட்டு டிவிடியை வாங்காவிட்டால் நமக்கு என்ன நன்மை, வாங்குவதால் என்ன கேடுவந்துவிடப்போகிறது என்ற அளவிலேயே மிஸ்டர் காமன் மேன் சிந்திக்க முடியும், அவ்வளவே சிந்திக்கிறான். உண்மையை சொல்வதென்றால் திருட்டி டிவிடியால் நம் காமன் மேனுக்கு லாபமே. குடும்பத்துடன் ஒரு புதிய திரைப்படத்தை 20 ரூபாய்க்கு பார்த்துவிடுவதென்பது, நடுத்தரவர்க்கத்தின் அன்றாட செலவில் குறிப்படத்தக்க சேமிப்பை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகும்.
கோடிகளை கொட்டி படமெடுப்பதால் மட்டுமே மில்லியனில் லாபம் தர வேண்டும் என்று நினைப்பது முட்டள்தனம் என்பது போலவே, அந்த கோடி ரூபாய் படத்தை 20 ரூபாய்க்கு வாங்கி பார்த்தால் குண்டர் சட்டம் பாய வேண்டும் என்பதும். டிவிடியில் பார்த்தாலுமே மீண்டும் தியேட்டரில் பார்க்கத்தூண்டும் தரத்துடன் உங்களுடைய படைப்பு இருக்கவேண்டும்.உலகப்படங்களை உருவியாவது அந்த தரத்தை கொண்டுவாருங்கள் தவறில்லை.
திருட்டி டிவிடி விற்பனையில் வரும் பணம் தீவீரவாதத்திற்கு பயன்படுத்தப்படுவதாகச் சொல்லி கமல் என்றொரு நடிகன் மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார்.  டிவிடி வியாபாரிகளை தூக்கிலிட வேண்டும் எனுமளவுக்கு மேடை கட்டி நடிக்கும் கூத்தாட்ட வியாபாரிகள், பெரும்பாலான ஒலகப்படங்களை ஓசியில் டவுன்லோடு செய்தும், திருட்டு டிவிடியிலுமே பார்க்கிறார்கள்.டிவிடி தேயும் அளவு திரும்ப திரும்ப பார்க்கிறார்கள். போகட்டும்.. டிவிடி தேய்ந்தாலும் ரசிகனுக்கு உலகத்தரத்தில் ஒரு தமிழ்திரைப்படம் கிடைக்கிறதா என்றால் இல்லை.அந்தப்படங்களிலிருந்து காட்சிகளையும் தொழில் நுட்பங்களையும் திருடி 'எ ப்ளிம் பை' என்று கொட்டை எழுத்தில் தன் பெயரை பதித்துக்கொள்வதோடு மட்டுமில்லாமல். திருடி எடுத்தது யாருக்கும் தெரியாதிருக்க 'நான் இதுவரை உலகப்படம் பார்ததில்லை' எனும் பேட்டிகள் வேறு. உகாண்டா நாட்டு மொக்கைப்படத்தை காப்பி அடித்தாலும், சரியாக கண்டுபிடித்து எழுத இங்கே பலர் காத்திருக்கிறார்கள். ரசிகர்கள் அனைவரும் மொன்னைகள் என்று  நினைத்துவிட வேண்டாம். மொன்னைகளில் சில ரசிகர்களும் உண்டு அவ்வளவே.
அது போக, எய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்களை பரப்பும் விபச்சாரத்தை அங்கீகரிக்கச்சொல்லும் 'நியாயவான்கள்', நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் இல்லாத டிவிடி தொழிலை அங்கீகரிக்க சொல்லாததேன் என்பதும் புரியவில்லை. குண்டர் சட்டம் போட்டும் தடுக்க முடியாத திருட்டை 'சட்டபூர்வமாக அங்கீகரித்தால்' என்ன? இலவச வண்ண தொலைக்காட்டிப் பெட்டியும், ஒரு ரூபாய்க்கு அரிசியும் தரும் கருணாநிதி அரசு, புதிய திரைப்படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் வசதியையும் செய்து கொடுத்துவிட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளும் இப்போதிருக்கும் கம்பெனியே தொடர்ந்து சம்பாதிக்கலாம் என்பதை யாரும் சொல்லித்தரவில்லையா?

எது எப்படி இருந்தாலும் கதை, இசை, தொழில்நுட்பம், சக தொழிலாளியின் உழைப்பு இன்னபிறவற்றை திருடி எடுத்து பல சமூக குற்றங்கள் நிகழ காரணமாக இருக்கும் சினிமாவைத் திருடி டிவிடியில் விற்பதை நடுத்தரவர்க்கத்திற்கான ராபின் ஹூட் வகை 'சமூக சேவை' என்றும் சொல்லலாம்.

'திருட்டு டிவிடி ஒழிக்கப்பட வேண்டும்' என்று கீ போர்டை தட்டும் சினிமா வியாபாரிகளில் எத்தனை பேர் தங்கள் கம்யூட்டரில் ஜென்யூன் ஓ.எஸ் மற்றும் பிற ஸாஃப்ட்வேர் பாவிக்கிறார்கள் என்பதையும் நினைவில் நிறுத்தட்டும்.

  • நான் திருட்டு டிவிடி வாங்கி படம் பார்ப்பதில்லை என்பதை ஒரு குறிக்கோளாகவே வைத்திருக்கிறேன். பின்ன... அரை தினாருக்கு வாங்கினாலும் ப்ரிண்டு அலையடிக்குதே.
  • ஆமா.. இதுக்கு முன்ன திருட்டு விசிடிய ஒழிக்கணும்னு சொன்னாங்க. முற்றிலும் ஒழிஞ்சிடுச்சு. இப்போ திருட்டு டிவிடிய ஒழிக்கணும்னு சொல்றாங்க... இதுவும் ஒழிஞ்சிடுச்சுன்னா.. அப்போ அடுத்து திருட்டு டிவ் எக்ஸா?


Jan 8, 2010

கஃ பா - ஓர் அற்புதம்

முஸ்லீம்களின் புனித ஆலயமான சவுதி அரேபியா, மக்கா நகரில் இருக்கும் க'ஃபா பற்றிய காணொளிப் பகிர்வு. (யூ ட்யூபில் உலாவிய போது கிடைத்தது.)


அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மக்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா (எனும் மக்காவில்) உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹூமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. புனித குர்ஆன் 3: 96,97
நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள், எனக்கே அஞ்சுங்கள் - புனிதகுர்ஆன் 2:150க'ஃபா வரலாறு பற்றிய சகோதரி ஹூசைனம்மா எழுதிய அண்மை பகிர்வு அது என்னுடையதல்ல

Jan 5, 2010

உங்கள் தங்கமணியிடம் உதை வாங்குவது எப்படி?

திருமணம், விருந்து போன்ற நிகழ்வுகளில்...
தங்ஸ்ஸயே சுத்தி சுத்தி வாரீங்க >>> ம்.. பொழச்சு போங்க.
அப்படி சுத்தி வரும்போது சக பதிவரிடம் சீரியஸா பேசறீங்க >>> மூக்கிற்கு மேல் கோபத்தை பார்க்கலாம்.
அப்படி பேசும் போது இடையே ஹாய் சொல்பவருக்குப் பெயர் ரீடா, கீதா, ஜமீலா வாக இருந்துவிட்டால் >>> மூக்கிற்கு கீழேயும் கோபத்தை கேட்கலாம்.
அவர் உண்மையில் அழகி, புத்திசாலியும் கூட >>> வாழ்த்துக்கள்... உதை உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ் பிறந்தநாளின் போது...
வெளியே அழைத்துச் சென்றால் >>> ம்.. பொழச்சு போங்க.
அந்த இடம் உங்கள் விருப்ப இடமாக (மட்டும்) இருந்தால் >>> மூ. மே. கோ.
அங்கு தங்கஸ்க்கு பிடித்த டிஷ்/பொருள் கிடைக்காவிட்டால் >>> மூ. கீ. கோ.
இதையெல்லாம் விட ஆரம்பத்திலேயே பிறந்தநாள் தேதியை மறந்து (நினைவிருந்தாலும்) தொலைத்துவிட்டால் >>> வாழ்த்துக்கள்... உதை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ் சமைத்த உணவை சுவைக்கும்(?) போது...
ஒன்றும் பேசாமல் சாப்பிட்டால் >>> ம்.. பொழச்சு போங்க.
அட.. சுடுதண்ணி நல்லா பண்ணியிருக்கம்மா >>> மூ. மே. கோ.
இன்னிக்கும் அதே சாம்பாரா >>> மூ. கீ. கோ.
எங்க அம்மா சாம்பார் நல்லா வெப்பாங்க >>> வாழ்த்துக்கள்... உதை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ் கூட சினிமாவிற்கு செல்லும் போது...
சினிமா தங்ஸ்க்கு பிடிச்சிருக்கு >>> ம்.. பொழச்சு போங்க.
அதே சினிமா உங்களுக்கு பிடிக்கவில்லை >>> மூ. மே. கோ.
உங்களுக்கு பிடிச்சிருக்கு, தங்ஸ்க்கு பிடிக்கவில்லை >>> மூ. கீ. கோ.
அந்த சினிமா உலகத்தரத்தில் இருந்தால் >>> வாழ்த்துக்கள்... உதை உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ், உங்களிடம், 'இந்த ட்ரெஸ் எனக்கு எப்பிடியிருக்கு?' என்று கேட்கும் போது...
நீங்கள், 'நீ உடுத்தியிருப்பதால் தான் இந்த உடைக்கே அழகு' >>> ம்... பொழச்சு போங்க.
நல்லாயிருக்கு.. நல்லாயிருக்கு >>> மூ. மே. கோ.
அந்த நீலக்கலர் இதைவிட நல்லாயிருக்குமே >>> மூ. கீ. கோ.
வேறு ஏதாவது ஏடாகூட உண்மை சொல்றீங்க >>> வாழ்த்துக்கள்... உதை உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ், உங்களிடம் ஏதாவது பிரச்சனை பற்றி பேசும் போது...
லேப்டாப்பை மடித்துவைத்துவிட்டு கேட்டுக் கொண்டிருந்தால் >>> ம்.. பொழச்சு போங்க.
பின்னூட்டமிட்டுக்கொண்டே ம்.. ம்... என்று மட்டும் சொன்னால் >>> மூ. மே. கோ.
நீங்களும் திரும்ப ஏதாவது அறிவுரை சொன்னால் >>> மூ. கீ. கோ.
தங்ஸ் பேசிக்கொண்டிருக்கும் போது, நீங்கள் குறட்டைவிட்டால் >>> வாழ்த்துக்கள்.. உதை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

இனி வரப்போகும் நாட்களில் இன்னும் அதிகமாக டிப்ஸ் கிடைக்க வாய்ப்பிருக்கிறது :-)