May 13, 2009

நாளை வருகிறேன் முத்தமிட...

இரண்டு மாத பிரிவாயினும், பல யுகங்களை பிரிந்த உணர்வு. நீ இல்லாத குவைத்தில் குப்பை கொட்டுவதும் பிடிக்கவில்லை. நாளை வருகிறேன் பெண்ணே முத்தமிட, உன்னையும் தாய் மண்னையும் - அன்பு மகனுக்கும் சொல்லிவிடு, அப்பா வருகிறார் நம்மை அள்ளிக் கொஞ்ச என்று - உனக்காய் நான் வாங்கியதைச் சொன்னால் வெட்கப்படுவாய், சோப்பு சீப்போடு சேர்த்து நீ சொல்லாத உன் ஆடையும் - நாளைய ஆரம்பத்திற்கு ஆயத்தமாயிரு.

உன்னைக் காண ஊர் வருவது எப்போதும் போல இப்போதும் மகிழ்ச்சி, இம்முறை சற்று அதிகம் ஆம்...இதுவரைக் காணாத பதிவர் சகாக்களையும் சந்திக்கப் போகிறேன்.

மற்றவை நேரில்...

சகாக்களே, இன்று இரவு இங்கிருந்து விமானம். நாளை முதல் இருபது நாட்களுக்கு நம் மதுரையில் இருப்பேன். என் புதிய சகாக்களை சந்திப்பது சத்தியமாய் ஆவல்.

மற்றவை நேரில்...

இந்திய செல்பேசி எண்; 9791579981.

சென்ற முறை ஆயுளுக்காய் வாங்கியது, ஆயுல் உள்ளதா என்பது அங்கு வந்தால்தான் தெரியும்.

May 11, 2009

கருணாநிதி, மோடி, ஜெயலலிதா - ஜிகர்தண்டா

வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது - கருணாநிதி.

ஆமாங்கையா உங்க தெற்கு நல்லாவே தேறுது.

ஈழத் தமிழர்களுக்காக இந்தியாவே கண்ணீர் விடுகிறது மோடி

பிணந்தின்னி நாயே, 2002 குஜராத்தை பார்த்து உலகமே கண்ணீர் விட்டதை நீ மறைத்தாலும எங்களால் மறக்க முடியாதடா. தேர்தலுக்காக மலம் தின்னச் சொன்னாலும் தின்னுவாய் நீ.

ஆம், பிணம் தின்ன உனக்கு மலம் எம்மாத்திரம்.

ஆமா...அம்மா வீட்ல தின்ன வரலையா, சோறு?

ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பறந்து தேர்தல் பரப்புரை

இதைத்தான் ஜெயலலிதா பிரதமர் கனவில் மிதக்கிறார் என்று சொல்கிறார்களோ...

கலைஞர் தொலைக்காட்சியில் வரும தேர்தல் விளம்பரங்களில் ஒன்று,

ஒரு பெண்ணுக்கு நிச்சயதார்த்த புடவை, நகைகள் வாங்கிவந்த தந்தை மாறடைப்பால் கீழே விழுகிறார். நலம் விசாரிக்க வந்த ஒருவர், "கவலைப்பட வேண்டாம்.. கலைஞர் மருத்துவ காப்பீடு திட்டம் இருக்கு. அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இலவச மருத்துவ காப்பீடு செய்து கொடுத்திருக்கார்" என்று சொல்வதாக வருகிறது,

ஆமா... அரசு ஊழியர் உசிரு மட்டும் தான் உசிரா... அப்ப எங்க உசிரெல்லாம்..........

ஆனாலும் அந்த பெண் கேட்பதற்காக வேண்டுமானால் போடலாம், ஓட்டு... உதயசூரியனுக்கு.

ஹி ஹி ஹி.. நமக்குத்தான் இளகிய மனமாச்சே...

மற்றொரு விளம்பரம், ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... என்று. சகிக்கல... எல்லாம் முடிந்துவிட்டது, இனிமேல் அனுதாப ஓட்டுதான் வாங்க வேண்டும் என்பதற்காக இப்படியா? இறந்து போன முரசொலி மாறனைக்காட்டி...

மாறனின் பிள்ளைகளும் ஓட்டுக்காக எதைவேண்டுமானாலும் காட்டத் துணிந்துவிட்டாரகள். பாவம்.

இதற்காகவே அவர்களுக்கு ஓட்டு போட வேண்டாம்.

கஷ்மீர் இந்தியாவுக்குத்தான் சொந்தம் - ஆதாரம் நகைச்சுவையாக

அண்மையில் ஐ.நா சபையில் நடந்த ஒரு சம்பவம்.

கஷ்மீர் விடயமாக பேசுவதற்காக, இந்தியா மற்றும் பாகிஸ்தானை சார்ந்த பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இருவருக்கும் தங்கள் கருத்துக்களைச் சொல்ல நேரம் வழங்கப்பட்டிருந்தது.

முதலில் இந்தியப் பிரதிநிதி ஆரம்பிக்கிறார், 'நான் எனது உரையை ஆரம்பம் செய்யும் முன்பு, கஷ்மீர் என்று பெயர் வைத்த ரிஷி கஷ்யாப் பற்றிய ஒரு சம்பவத்தை இங்கு நினைவுபடுத்திக்கொள்ள ஆசைப்படுகிறேன். அவர் ஒரு நாள், ஒரு பாறையில் தட்டுகிறார். அப்போது அங்கிருந்து நீரூற்று கிளம்பி நல்ல சுவையான தண்ணீர் வழிந்தோடுகிறது. அதைக்கண்டதும் அவருக்கு குளிக்கலாம் என்ற ஆசை வந்துவிடுகிறது. தனது உடைகளை களைந்து, பாறையில் இருந்து சற்று தூரமாக வைத்துவிட்டு குளிக்கச் செல்கிறார். திரும்பி வந்து பார்க்கும் போது, அவரது உடைகளை காணவில்லை. அதை ஒரு பாகிஸ்தானி திருடிக்கொண்டு போயிருந்தார்' என்று சொல்லும் போது, பாகிஸ்தான் பிரதிநிதி குறுக்கிட்டு, 'அப்போது அங்கு பாகிஸ்தானி இருக்கவில்லை' எனகிறார். உடனே நம்மாள், 'இதைத்தான் எதிர்பார்த்தேன், இப்போது எனது உரையை ஆரம்பம் செய்கிறேன்' என்றாராம்.

தொலைபேசி கோப்பில் நம் பெயர் இடம் பிடிப்பது எளிது,

ஒருவரின் மனதில் இடம் பிடிப்பது கடினம்.

அடுத்தவரின் தவறுகளை மதிப்பிடுவது எளிது,

நம் சொந்த தவறுகளை புரிந்துகொள்வது கடினம்.

பிரியமானவரின் மனதை காயப்படுத்துவது எளிது,

அம்மனதின் காயம் ஆற்றுவது கடினம்.

மற்றவரை மன்னிப்பது எளிது,

மற்றவரிடம் மன்னிப்பு கேட்பது கடினம்.

வெற்றியை காட்டுவது எளிது,

தோல்வியை ஏற்றுக்கொள்வது கடினம்.

சவுதியில் ஆல்கஹால் பாவித்தால் 20 கசையடி தண்டனை.

இந்த செய்தியைவைத்து இச்சம்பவம் கட்டப்பட்டது.

ஒரு நாள் பெங்காலி, பாகிஸ்தானி மற்றும் சந்தேகமில்லாமல் நம் இந்தியன் ஆகிய மூவரும் ஆல்கஹால் பாவித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு தண்டனைக்கு மன்னர் முன் அழைத்துவரப்படுகிறார்கள். மன்னர் கேட்கிறார், 'சொல்லுங்கள், கசையடிக்கு முன் உங்கள் ஆசை என்ன?' என்று.

பெங்காலி, 'எனது முதுகில் ஒரு தலையனை கட்டிவிடுங்கள்'

அவ்வாறே செய்யப்படுகிறது, ஆனால் 10 அடிகளில் தலையனை பிய்ந்துவிட்டது. மீதி 10 அடி வெற்றுடம்பில் கிடைக்கிறது.

பாகிஸ்தானி 'என் முதுகில் 2 தலையனை கட்டிவிடுங்கள்'

அவ்வாறே கட்டப்பட்டது. 15 அடிகளில் தலையனை பிய்ந்துவிட, 5 வெற்றுடம்பில் கிடைக்கிறது.

நம்ம இந்தியனிடம் மன்னர் சொல்கிறார், 'எனக்கு இந்தியர்களை மிகவும் பிடிக்கும். மன்மோகன் சிங் எனது நாட்டிற்கு நிதி ஆலோசனை வழங்கியுள்ளார். நீ 2 ஆசைகளை சொல்லலாம்' என்று.

நம்மாள் சொல்ல வேண்டுமா என்ன, (கேப்பு கிடைத்தால் காற்று அடிப்போம். காற்றே கிடைத்தால் பறந்துவிட மாட்டோமா), மன்னரிடம், 'நீங்கள் எங்கள் மேல் வைத்துள்ள நன்மதிப்பை காப்பற்றுவோம், நான் செய்த தவற்றை உணர்ந்துவிட்டேன். எனக்கு 20 அல்ல 40 கசையடி தாருங்கள், இது தான் முதல் ஆசை' என்கிறான்.

மன்னர், 'இந்தியர்கள் வீரமானவர்கள் என்று கேள்விப்பட்டதுண்டு, இன்றுதான் காண்கிறேன், சொல் உனது இரண்டாவது ஆசை என்ன' என்று கேட்கிறார்.

நம்மாள், 'என் முதுகில் பாகிஸ்தானியை கட்டிவிடுங்கள்' என்கிறான்.

பணக்கார கைப்புள்ள இரண்டு நச்சல்குளம் கட்டுகிறார். ஒன்று அவருக்காகவும் மற்றொன்று பொதுநலன் (அடுத்த தேர்தலில் போட்டியிட உத்தேசம்) கருதி மக்களுக்காகவும்.

ஆனால் அவருக்கான குளத்தில் ஒருபோதும் தண்ணீர் நிரப்பியதில்லை.

வால் கேட்கிறான், 'ஏன் தல, உங்க நீச்ச தொட்டில தண்ணி நெரப்பாம வச்சிருக்கீங்க?'

கைப்புள்ள, 'எனக்குத்தான் நீச்சல் தெரியாதேடா'

கைப்புள்ள அவர் மகன் படிக்கும் பள்ளியின் ஆசிரியையிடம் சென்று, 'மிஸ், நீங்க நேத்து எனக்கு போன் பண்ணியிருந்தீங்களா?'

மிஸ், 'இல்லையே, ஏன் கேக்குறீங்க?'

கைப்புள்ள, 'இல்ல, என் மொபைல்ல பார்த்தேன், 1 மிஸ் கால்டு ன்னு இருந்தது'

May 9, 2009

நானும் சிறை சென்றேன் – ஜெய்ஹிந்துபுரம் நினைவுகள் 02

அது 2002 ன் நவம்பர். நான் சவுதியில் விசா முடித்துவிட்டு ஊர் வந்திருந்தேன். இன்னும் 10-15 நாட்களில் ஈகைத் திருநாள் வரவிருந்தது. 5 வருடங்களுக்குப் பறகு குடும்பத்தினருடன் கொண்டாடும் திருநாள் என்பதால் தடபுடல் ஏற்பாடுகளோடு அனைவரும் ஆவலாயிருந்தோம். திருநாளுக்கு முதல் நாள், என் வீட்டிற்கு வந்திருந்த பெரியப்பா மகன் அனீஸ், மற்றொரு பெரியப்பா மகன் ஜலீல் மற்றும் உறவினரோடு வீடு மகிழ்ச்சியாகத் தானிருந்தது., அன்றிரவு வெளியே செல்லும் வரை.

ஒவ்வொரு திருநாளின் போதும் அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு இனிப்புகளோடு தினமணியின் ஈகைத்திருநாள் சிறப்பிதழும் அன்பளிப்பாக வழங்குவது வழக்கம். இரவு பத்து பதின்ஒரு மணியிருக்கும், இனிப்புகளும் ஈகைத்திருநாள் மலரும் வாங்கிவரலாம் என்று வெளியே கிளம்புகிறோம் நாங்கள் மூவரும். ஒன்று சேர்ந்தால் எங்களுக்கு ஒரு பழக்கம் தொற்றிக்கொள்ளும், நாயை கல்லால் அடிப்பது (அந்த அனுபவம் பிறகு). எங்கள் வீட்டிலிருந்து 30 வீடு கடந்து போயிருப்போம், ஒரு நாய் எங்களைப் பார்த்து குரைத்தது. நாய் சும்மா கிடந்தாலும் அடிப்போம், குரைத்தால் சும்மாவா விடுவோம். பின்னால் நடந்து வந்துகொண்திருந்த அனீஸ் கல்லை எடுத்துவிட்டான், 'கவனிக்க எடுத்தான் அடிக்கவில்லை.'

ஒரு குரல் வருகிறது, 'டேய்… கல்ல கீழ போடுடா..'

உடனே அனீஸ், 'நாய குரைக்காம இருக்க சொல்லுங்க'

நாயை நாய் என்று சொன்னதும் அவருக்கு கோவம், 'அதென்ன கடிக்கவா செஞ்சுது. அப்டித்தான்டா குரைக்கும், என்னடா செஞ்சுடுவ'

'ஏங்க, நான் மரியாதையாதான பேசுறேன், நீங்களும் மரியாதையா பேசுனா நல்லது'

'இல்லனா என்னடா செஞ்சுடுவ'

'கல்லால அடிப்பேன், நாய' இவண் நாய என்று சொன்னது அவருக்கு நாயே என்று கேட்டிருக்க வேண்டும்.

'…..த்தா, நில்ரா அங்கயே… இந்தா வரேன்' என்று சொல்லியவாறே (எதிர் வீட்டிலிருந்தவர், எங்களுக்கு குறுக்காக) அவர் வீட்டிற்குள் ஓடுகிறார்.

ஓடும் போதுதான் கவனித்தோம், அவர் யாரென்பதை.

எனது முந்தைய ஜெய்ஹிந்துபுரம் நினைவுகளில் சொல்லியிருக்கும் தெரு, தேவர்நகரில் இருந்து குறுக்கலாக பாரதியார் ரோடுவரை நீண்டிருக்கும் அந்த தெருவில் தான் அவர்களது வீடு இருக்கிறது, சம்பவமும் நடக்கிறது. நான் அப்போது பாடசாலை செல்லும் போது பார்த்திருக்கிறேன், இந்த வீட்டின் முன்னால் ஒரு பெரிய புல்லட் இருக்கும் ஒருவர் பெரிய மீசையுடன் செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருப்பார். இவர்களுக்கு பிரதான தொழில் அடிதடி, சைடில் கட்டப் பஞ்சாயத்தும் நடக்கும் என்பதும் சம்பவம் நடக்கும் போது பெரிய மீசைக்காரர் சிறையில் ஆயுல்கைதியாக இருப்பதாகவும் அவ்வப்போது பரோலில் வருவதாகவும் பிற்பாடு தெரிந்துகொண்டோம். உள்ளே ஓடியவனுக்கு 25 வயதும் மீசைக்காரரின் மகனாகவும் இருக்கலாம்.

சரி சம்பவத்திற்குள் செல்வோம்,

அதற்குள் சத்தம் பெரிதாக நானும் ஜலீலும் அங்கு வருகிறோம். அங்கிருந்து பத்து வீடு தாண்டினால் அனீஸ் வீடு, அங்கு அனீஸின் தம்பி, அக்கா பையன் எல்லாம் உறங்குகிறார்கள். வேகமாக நான் தான் வீட்டிற்குள் சென்று, 'டேய்… எந்திரிங்கடா.. ஒருத்தன் நம்மல அடிக்க சாமான் எடுக்க போயிருக்குறான்' என்று எழுப்பி வீட்டில் மறுநாள் பிரியாணிக்கு அடுப்பெரிக்க வைத்திருந்த விறகுகளை எடுத்துக்கொள்கிறோம். நாங்கள் 5 பேரும் வெளியே ஓடி வந்தால், அவர்கள் வீட்டு கேட் அடைத்தவாறே கிடக்கிறது. வெளியில் யாருமில்லை. எங்களுக்கோ இரத்தம் சூடாகிவிட்டது, ஏதாவது செய்தாக வேண்டும். (ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு)

ஜலீல் அவர்கள் வீட்டு கேட்டை தட்டிவாறே சப்தமிடுகிறான், 'யார்ரா அவன்… வெளிய வாடா… யார்கிட்ட… வெளியவாடா டேய்'

20 வயது மதிக்கத்தக்க ஒருவன் வெளியே வருகிறான், சாதாரணமாகத்தான். ஜலீல் அவன் சட்டையை பிடித்திழுத்து தெருவில் கிடத்துகிறான். அனைவரும் சேர்ந்து கட்டையால் அடிக்கிறோம், மிதிக்கிறோம். சரியாகச் சொல்வதென்றால், சட்டக்கல்லூரியில் ஒருவரை அடித்தார்களே அதேபோல. நமக்குத்தான் இயற்கையிலேயே இரக்க குணம் அதிகமாச்சே, நான் தான் சொன்னேன், 'விட்றா…செத்துர கித்துர போறான்' சரியாக அடித்துமுடிக்க உள்ளே சென்றவனும் உருட்டுக்கட்டையுடன் வருகிறான். அவனையும் இழுத்து போட்டு அடிக்கிறோம். ஆனால் அவனுக்கு சரியாக அடி விழுவதற்குள், அவன் வீட்டிலிருக்கும் பெண்கள் வந்து, 'ஐயோ… ஐயோ… கொல்றாங்ஞலே… விடுங்கடா டேய்' என்று கத்த ஆரம்பிக்க விட்டு விட்டு வந்துவிடுகிறோம்.

எங்களை அடையாளம் கண்டுவிட்டார்கள். அனீஸ் வீடு அவர்களுக்கு தெரியும் என்பதால் இரண்டு பையன்களையும் வீட்டில் நிறுத்திவிட்டு நாங்கள் புலிப்பாண்டியன் தெரு வழியாக ஜெய்ஹிந்துபுரம் முக்கிய வீதிக்கு வந்துவிட்டோம். எங்கள் மூன்று வீட்டினருக்கும் பொதுவான பெரியவர் என் மச்சான் என்பதால் அவருக்கு தொலைபேசியில் சம்பவத்தை சொல்லலாம் என்று பொது தொலைப்பேசி தேடினால், ஒன்று கூட பொதுவில் இல்லை எல்லாம் மூடிக்கிடந்தது. ஜலீல்தான் ஜெகதலக்கில்லாடி ஆச்சே (அதைப்பற்றியும் பிறகு) ஒரு பேக்கரியில் போய் பேசி தொலைபேசி பாவித்துக்கொள்ள அவரை சம்மதிக்க வைத்துவிட்டான். விடயத்தை கேட்டதும் என் மச்சான், சற்று கோவமாக, 'ஏண்டா அறிவு கெட்டவங்ஞளே… அடிதடி பண்ற அளவுக்கு நீங்க சண்டியராயிட்டீங்களா… அதும் நாளைக்கு பெருநாளை வச்சுக்கிட்டு. முட்டாப்பயல்களா… சேகர போய் பார்த்து, என்ன செய்யலாம்னு கேளுங்கடா' என்றார். அப்போதுதான் நினைவு வந்தது மறுநாள் திருநாள் என்பது. சரி சேகர் மாமா வை பார்க்கலாம் என்று ஜீவாநகர் வழியாக, அவர் வீட்டிற்குச் சென்றோம்.

சேகர் பற்றி, M.R.மணி ஜீவாநகரின் முக்கிய பிரமுகராயிருந்தார். இவரின் மகன்தான் M.R.M.சேகர். இவரும் பிரபலம் தான், இவரை தெரியாதவர்கள் ஜீவாநகர் சுற்றுவட்டாரத்தில் இருக்க முடியாது. முன்பு ஒரு மாதிரி இருந்து பிறகு மனிதர் ஆனார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர். சிறு வயதில் இருந்து நான் மாமா என்று தான் அழைப்பதுண்டு. எங்கள் குடும்ப நண்பர் கூட. ஒரு முறை 64வது வார்டு மாநகராட்சி கவுன்சிலருக்கு போட்டியிட்ட போது நானெல்லாம் நாயாக (மறுபடியும் நாயா) உழைத்தும் சிறு வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனார். எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லாவிட்டாலும் நமக்கு தெரிந்த ஒருவர் கவுன்சிலர் ஆகினால், நாமும் ஏதாவது காரியம் சாதிக்கலாமே என்ற சுயநலம் தான். அதுசரி, ஒவ்வொரு பொது நலத்திற்கு பின்னாலும் ஒரு சுயநலம் இருக்கத் தானே செய்கிறது. சுயநலம் இல்லாத பொதுநலம் ஏது? ஆஹா…ரூட்டு மாற்ற மாதிரி இருக்கு… புடிச்சு இழுத்துகிட்டுவா….

சம்பவத்திற்கு வருவோம்.

சேகர் மாமா வீட்டு கதவை தட்டுகிறோம்,

'என்ன மாப்ள இந்தநேரம், இப்ப தான் ப்ரசர் மாத்தர போட்டு படுத்தேன். சொல்லுப்பா'

'மாமா, இந்த மாதிரி ஆகிப்போச்சு' நடந்ததை நடந்த மாதிரியே சொன்னோம்.

'என்னடா… உங்களுக்கு அடிக்க வேற ஆள் கெடக்கலயா, அவிங்ஞ மேல போயா கைவெக்கனும்? கெரகம் புடிச்சவங்ஞலாச்சேடா… உங்க மச்சான்ட சொல்டீங்களா?'

'சொல்லிட்டோம் மாமா, அவங்க தான் உங்கள பார்க்க சொன்னாங்க'

'அவிங்ஞ ஒரு பஞ்சாயத்துங்கும் வர மாட்டாங்ஞலே… சரி நீங்க போயி போலீஸ் ஸ்டேசன்ல கம்ளைன்ட் குடுத்து எஃப்.ஐ.ஆர். பைல் பண்ண சொல்லுங்க, சீக்கிரம் போங்கடா மாப்ள… வண்டி வேணுமா?'

'இல்ல, வண்டி இருக்கு மாமா'

'அவிங்ஞ போறதுக்கு முன்னாடி போகணும், சீக்கிரம் போங்கடா. மத்தத காலைல பார்த்துக்கலாம்'

'சரி மாமா', என்று ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையம் கிளம்புகிறோம்.

காவல் நிலையத்திற்குள் நாங்கள் நுழையும் போது, அடிபட்டவர்கள் அங்கிருந்து வெளியே வருகிறார்கள். ஒருத்தன் முறைக்கிறான் மற்றவன் சிறிதாக சிரிக்கிறான். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வெளியில் நின்ற காவலரிடம் புகார் செய்கிறோம். அவர் உள்ளே பார்த்தவாறு, 'இந்தா… வந்துட்டாங்ஞப்பா, புடிச்சு உள்ள போடு' என்கிறார். நாங்களும் உள்ளே செல்கிறோம், நடக்கப்போவதை அறியாமல்.

'அப்டி உட்காருங்கப்பா' ஒரு காவலர்

வயர்லெஸ் கருவியை எடுக்கிறார். ஏதேதோ சொல்கிறார், அந்தப்பக்கமிருந்தும் ஏதோ சொல்லப்படுகிறது. இவர் மீண்டும், 'ஐயா, அக்யூஸ்ட புடிச்சுட்டோங்கய்யா… ஆமாங்கய்யா…இங்கதான்யா இருக்காங்ஞ, சரிங்கய்யா… ஐயா சரிங்கய்யா..' என்று வைத்துவிட்டு 'எப்பா ரைட்ரு, ஸ்டேட்மன்ட் வாங்கிக்கப்பா' என்கிறார். எழுத்தர் எங்கள் பக்கம் திரும்பி, 'வாங்க தம்பிகளா, என்ன நடந்தது சொல்லுங்க' என்கிறார். நாங்கள் விவரிக்கிறோம்.

'முதல்ல நீங்க அடிச்சிங்களா, இல்ல அவிங்ஞ அடிச்சாங்ஞளா?'

'சார், நாங்கதான் அடிச்சோம்'

'போலிஸ் ஸ்டேசன்ல வந்துட்டு அநியாயத்துக்கு நல்லவனா இருக்கீங்களேப்பா, கேஸ் வேற மாதிரி ஆகிப்போகும்… அவிங்ஞதான் அடிச்சாங்ஞன்னு போட்டுமா? அப்பதான் உங்க பக்கம் நிக்கும், என்ன சொல்றீங்க'

'சரிங்க சார்'

'இந்தாப்பா, மூனு பேரும் கையெழுத்து போடுங்க'

கையெழுத்து போட்டுவிட்டு, 'சார், நாங்க கெளம்பட்டுமா?'

'எங்க கெளம்ம போறீங்க?, இருங்கப்பா இன்னும் நாளிருக்கு'

அவர்கள் இருவரும் ஒரேபோல் 'சார்' என்று சொல்ல எனக்கு தொண்டை அடைத்து கண்ணீர் வரும் போலிருந்தது.

'உள்ள போயி உக்காருங்க'

உள்ளே இருந்த மர நாற்காலியில் அமர்ந்தோம். கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை. அங்கிருந்த ஒரு காவலர், 'ஃபேன வேணா போட்டுக்குங்க, டீ சாப்டுறீங்களா?' குடித்தால் தேவலாம் போலிருந்தது 'சரிங்க சார்'

தூக்கம் வரவில்லை. தினமும் விடியும் முன்பு எங்களுக்கு கடமையாக்கப்பட்ட அதிகாலை தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.

'சார், இங்க தொழுகலாமா?, விடியுறதுக்கு முன்னால தொழுதாகனும்'

'ஆங், அப்டி ஓரமா செஞ்சுக்கங்கப்பா'

'சார், மூஞ்சி, கை, கால் கழுவணும்'

'பின்னால தண்ணி இருக்கும், போங்க'

தொழுதுவிட்டு வந்தமர்ந்தோம். விடிந்து விட்டிருந்தது, இப்போது கேட்காமலேயே டீ வந்தது. குடித்தோம். காவலர்கள் இவ்வளவு நல்லவர்களா.

6 மணியிருக்கும் மச்சான், சேகர் மாமா மற்றும் 63வது வார்டு கவுன்சிலர் (மா. கம்யூனிஸ்டு) விஜயன் ஆகியோர் வந்தனர். எஸ்.ஐ இன்னும் வந்திருக்கவில்லை.

தோழர் விஜயன் எழுத்தரிடம், 'ஐயா இன்னும் வரலங்களா?'

'இன்னும் வரல சார், உட்காருங்க'

'பரவாயில்ல, நாங்க வெளில இருக்கோம்'

அரை மணி நேரத்தில் எஸ்.ஐ வந்தார். தோழர் விஜயன் அவரிடம் ஏதோ பேசினார். பிறகு நாங்களும் அழைக்கப்பட்டோம். சேகர் மாமா என் காதில் கிசு கிசுத்தார், 'நீ சவுதில இருக்கிறத சொல்லிடாத' பிறகு மூவருக்கமாக 'அவரு என்ன சொன்னாலும் தலயாட்டுங்க'

எழுத்தர், 'இங்க கையெழுத்து போடுங்க'

கையெழுத்து போடும் போது எஸ்.ஐ சொல்கிறார், 'அவிங்ஞ என்ன கம்ளைன்ட் குடுத்திருக்காங்ஞ தெரியுமா, நீங்க அவிங்ஞள அடிச்சு 10 பவுன் சங்கிலிய புடுங்கிட்டு போயிட்டீங்களாம், அவிங்ஞள பத்தி எனக்கு தெரியும், அவிங்ஞளோட கெட்ட பேருதான் உங்கள காப்பாத்துச்சு, இனிமேல் அடிதடின்னு போகாம ஒழுங்கா பொழக்கிற வழிய பாருங்கப்பா. எந்த பிரச்சனைனாலும் முதல்ல போலீஸ் ஸ்டேசன் வாங்க, புரியுதுல்ல? போங்க'

'சரிங்க சார்'

வெளியே வரும் போது, வாசலில் நின்ற காவலர் பணம் கேட்க, நான் ஐநூறு ரூபாய் குடுக்கலாமா என்று சேகர் மாமாவின் காதுக்குள் கேட்கிறேன் அவரோ 20 ரூபாய் எடுத்து கொடுக்கிறார்.

வீட்டிற்கு சென்றால், ஏதோ ஆயுல் தண்டனை கைதியை பார்ப்பது போல் பார்கிறார்கள்.

அக்கா, 'தாடிய ஷேவ் பண்ணிடு, இல்லனா… தீவிர வாதின்னு சொல்லிடுவாங்ஞ'

அது ஒரு வாரம் ஷேவ் செய்யாமல் வளர்ந்திருந்த முடி தான். என்ன செய்ய எனக்கும் பயம் உடனே எடுத்துவிட்டேன்.

Chill: சென்ற வாரம் அனீஸ் உடன் ஜிடாக் செய்து கொண்டிருந்த போது அவனிடம் சொன்னேன், 'நம்மளும் ஜெயிலுக்கு போயிட்டு வந்தவங்ஞதான், சொல்லி வையி… சொருகிடுவோம்னு' என்று சொல்ல, அவன் 'டேய் நம்ம போனது பேரு ஜெயில் இல்லடா, அது லாக்அப், யார்டையாவது சொல்லிடாத… சிரிச்சுவிட்டுட போறாங்ஞ' என்றான்.

அட இதுல இவ்வளவு விசயம் இருக்கா…. இது தெரியாம தலைப்பு வச்சுபுட்டேனே… சரி விடு எல்லாம் நம்ம ஆளுங்க தான், எதாயிருந்தாலும் பேசி தீத்துக்கலாம்.

May 7, 2009

ஆசிப் அண்ணாச்சி, லக்கிலுக், அதிஷா இன்ன பலர்

எனக்கு நாட்குறிப்பு (டையரி) எழுதுவதில் எந்த காலத்திலும் விருப்பமிருந்தது இல்லை. ஆனாலும் திறந்த நாட்குறிப்பேடு (ஓபன் டையரி) எனப்படுகிற இந்த வலைப்பூ உலகம் என்னை கவர்ந்தது ஏனென்று தெரியவில்லை. ஒரு வேளை 8 மணிநேர அலுவலகத்திற்கு பிறகான தனிமைச் சூழல் காரணமாக இருக்கலாம். எத்தனையோ நாட்கள் கணினியை மடியில் வைத்தவாறே உறங்கிப் போயிருக்கிறேன். ஆரம்பக்கட்ட மன உளைச்சலுக்கு ஆக்கப்பட்ட என்னை மீட்டுவந்தது இ(வலை)ப்பூ உலகம் எனலாம். இப்பதிவை முன்னமே ஆயத்தப்படுத்திவிட்டு இதற்கு முன்பாக மன உளச்சல் பற்றிய எனது தேடலை வெளியடவும் இதுவே காரணம். முதன் முதலில் டையரியில் எழுத நினைத்ததை இங்கே பதிவிடுகிறேன். இவற்றில் தவறுகளும் இருக்கலாம் சுட்டிக்காட்டுக.

நான் வலை உலகில் முதிலில் வாசித்தது 'சாத்தான்குளத்து வேதத்தை' தான். அப்போதெல்லாம் எனக்கு ஆசிப் மீரான் அண்ணாச்சியை பற்றி அவ்வளவாகத் தெரியாது. (இப்பம்னாப்ல என்னவே தெரிஞ்சுக்கிட்ட…) எனக்கும் பூர்வீகம் நெல்லை மாவட்டம் தென்காசி என்பதால், அவரது நெல்லைத் தமிழ் எழுத்துநடை என்னைக் கவர்ந்தது, கூடவே அவரது கருத்துக்களும் (நல்லா இருங்கடே…). அண்ணாச்சியின் பதிவுகளில் மெல்லிய நகைச்சுவையை இழைத்திருப்பது ரசனை. அவர் பதிவுகளைப் போலவே பதிலூட்டமும் அசத்தல். இந்த சாத்தான் ஓதும் வேதத்தை தொடர்ந்து வாசித்துவந்தாலும் இதுவரை பின்னூட்டமிட்டதில்லை.

அதன் பிற்பாடுதான் தெரிந்துகொண்டேன்…

மிகப்பெரிய சங்கிலித்தொடர் வலை உலகம் இயங்கிக்கொண்டிருப்பதை.

இந்த உலகை எனக்கு அறிமுகப்படுத்திய அண்ணன் ஆசிப் மீரானுக்கு நன்றிகள் பல.

ஏன் அண்ணாச்சி நீங்க அடிக்கடி எழுதுவதில்லை?

இவ்வுலகில் நான் மேயத்தொடங்கியதும் என்னைக்கவர்ந்தவர் லக்கிலுக் என்று தன்னை அழைத்துக்கொள்கின்ற உடன்பிறப்பு யுவகிருஷ்ணா. இவரது எழுத்துநடை வாசகனை சுண்டியிழுக்கும் வசீகரத்தன்மை கொண்டது. தான் சொல்லவந்த விடயத்தை சமரசம் செய்துகொள்ளாமல் சொல்லும் அவரது 'நான் இப்படித்தான்' பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். உள்குத்து, நுண்ணரசியில் லக்கி லக்கிதான். இவர் ஒரே நாளில் 11 பதிவுகள்(மீள் பதிவுகள் உட்பட) இட்டாலும், அவை அனைத்துமே சூடான இடுகைகளில் இடம்பெறும் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை. நான் பின்தொடருவோர் (Follower) பட்டியலில் சேர எத்தனித்த போது முதலில் என் மனதில் வந்த பெயர் 'லக்கிலுக்'. என் கருத்து எனக்கு உங்கள் கருத்து உங்களுக்கு என்று அடிக்கடி சொல்லுவார். நண்பர் அதிஷா சொன்னது போல இவர் ஒரு வளரும் காட்டெருமை, வெகுவிரைவில் இவர் மிக உயரத்தில் இருப்பார் என்பது மறுக்க முடியாதது.

'கழுகு' இவரை ஸ்டார் எண்டர்டைனர் என்று வர்ணித்திருப்பது மிகச்சரியானது. ஆம் இவர் ஒரு எண்டர்டைனர் தான், இவரது எழுத்துநடை என்னை வசீகரித்த அளவு இவரது கருத்து வசீகரிக்கவில்லை. இவர் ஒரு கருத்து திணிப்பு வகை எழுத்தாளர் எனச்சொல்லுவேன். விளம்பர உலகம் இவரை சுண்டியிழுக்கிறது. இவரது எழுத்துநடைக்கு இருக்கும் வாசகர்களைப்போல கருத்திற்கு இருக்கும் எதிரிகள் எண்ணிக்கையும் அதிகம். (பைசாவுக்கு பிரயோசனம் இல்லாத பசங்க…)

மற்றபடி, லக்கிலுக்கின் எழுத்திற்கு நான் ரசிகன். ஊர் வந்ததும் முதலில் யுவகிருஷ்ணாவின் இரண்டு புத்தகங்களும் வாங்கி படிப்பதாயுள்ளேன்.

எதிர் கருத்தில் நேர்மை இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள், கிருஷ்ணா.

லக்கிலுக் சொல்லியாச்சு அடுத்து அதிஷா தான், இயற்பெயரில் வினோத் ஆன இவர் புத்தமத துறவியின் மீதுள்ள பற்றால் அதிஷா வானாராம். (லக்கி அதிஷா) இருவருடைய வலைப்பூவிலும் இருவரும் குழுஉறுப்பினர். எனக்கு சில சமயம் இருவரும் ஒருவர் தானா என்று சந்தேகம் வருவதுண்டு. வெவ்வேறெனில், லக்கி சொல்கின்ற பின்னூட்ட ரிலீசர் என்று ஒருவர் இருந்தால் அது அதிஷாவாகத்தான் இருக்கமுடியும் என்றும் கணிப்பு. ஏறக்குறைய ஒரே ஸ்லாங்.. ஒரு குறுகிய வட்டம் போட்டு அதற்குள்ளேயே அமர்ந்துவிடாமல், எல்லா சப்ஜெக்டயும் பின்னியெடுக்கிறார். இதே வேகத்தில் சென்றால் இவரது இலக்கான நூறு கோடி ஹிட்ஸ் பெற்று லக்கியை முந்திவிடலாம். இவரது பின்னூட்ட விளையாட்டும் அசத்தல். (ஜானி வாக்கர் பிளாக் லேபில் 2 பெக் அடிச்சு குப்புற படுத்த மாதிரி இருக்கு) அண்மையில் லக்கிக்கு ஒரு பின்னூட்டம், 'Earlier this blog used to be as good as a semi-porn site' என்பதாக, அதைப்பற்றி எல்லாம் நீங்க கவலைப்பட வேண்டாம்.

நீங்க, உங்க ரூட்லயே போங்க, அதிஷா.

மருத்துவர். ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ் எழுதும், அவரது மனத்தின், காலங்களின், பருவங்களின், இடங்களின் பயணங்கள் அருமை. அனைவரும் விளங்கும் எளிய தமிழில் அருமையாய் பதிவிடுகிறார். அவர் பதிவை வாசித்த பிறகு, அவர் சொல்லவரும் விடயத்தை பற்றி எந்த மேல்வினாவும் எழுவதில்லை. அத்தகையதொரு தெளிவான விளாவலான விளக்கம். அது கதையாகட்டும் அல்லது மருத்துவம் சுகாதாரம் சார்ந்த புள்ளிவிபரமாகட்டும், 'சூப்பர்'. அண்மையில் பரிசல்காரனின் ஜேபியார் பதிவில் இவர் இட்ட பின்னூட்டம் இவர் மேலிருந்த மதிப்பை மேலும் கூட்டிவிட்டது. நன்றி ஐயா.

எனக்கு நீண்ட நாட்களாக பல் கூச்சம் இருக்கறது, பல ஆயிரம் செலவு செய்தும் சரியாகவில்லை. என்ன செய்யலாம் டாக்டர்? (டாக்டர் கிட்ட வேறென்ன சொல்ல)

எனது முந்தைய ஒரு பதிவில் சொல்லியிருப்பது போல, நானும் பதிவு எழுத காரணம் நண்பர் கோவி.கண்ணன் அவர்கள். ஆர்.எஸ்.எஸ் இல் இருந்திருந்தாலும் ஆதிக்க சக்தி(சாதி)களுக்கு எதிரான இவரது எழுத்துக்கள் தான் இவரை பின்தொடர வைத்தது. தமிழ் மொழி மீதான அவதூறுகளை மறுத்தும் தமிழ் விழிப்புணர்வோடும் தொடர்ந்து பதிவிடுகிறார். இவரது கருத்திற்கும் தனிப்பட்ட முறையிலும் எதிரிகள் பலர் இருக்கலாம். இவரது விவாதத்திறன் எப்போதும் என்னை மலைக்க வைப்பதுண்டு.

எந்த விதியும் காலத்தில் அடக்கம், விதி காலத்தால் மாறும். நீங்கள் விதியா காலமா, கோ?

பரிசல்காரன் கிருஷ்ணா, ரசிப்போர் வழிதேடி செல்லும் இவரை வாசித்தவரையில் ரசனைக்கு குறைவில்லை. கிருஷ்ணன் கதை அருமையாக சொல்கிறார். புதிர், அவியல், கடிதங்களிலும் சுவாரசியத்திற்கு குறைவில்லை. தனது கருத்தை மற்றவர் மனம் நோகாமலும் சுவாரசியம் குறையாமல் சொல்லுவதிலும், தவறிருந்தால் ஏற்றுக்கொள்வதிலும் பரிசலுக்கு ப்ரைஸ் குடுக்க வேண்டும். வலைப்பூ வார்ப்புரு நம்மை மீண்டும் வரச்சொல்கிறது. நந்து f/o நிலா மங்களகரமாக ஆரம்பித்த ஃபாலோவர் பட்டியல் 300 ஐ தொடப்போகிறது. அனேகமாக இந்நேரம் 'தமிழ் வலை உலகில் 300 பின் தொடருவோர் பெற்ற முதல் தனி நபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள்' என்ற சைடு பார் நோட் தயாராக்கி வைத்திருப்பாரோ.

பரிசல்காரண்ணே, என்ன எப்போ கரை ஏத்திவிடப்போறீங்க?

வால்பையன் என்கிற வால் இல்லா அருண் அண்ணன். இவரது டைமிங் ஸென்ஸ் அபாரம். இவர் இடும் பதிவுகளைகாட்டிலும் பின்னூட்டத்தில் பிரபலம். அவற்றை வாசித்து பல நேரங்களில் தனி அறையில் வாய்விட்டு சிரித்திருக்கிறேன்.

எனக்கு ஊக்கம் தரும் என் மதுரை மண்ணின் மைந்தர்களான 'பொன்னியின் செல்வன்' விரிவுரையாளர் கார்த்திகைப் பாண்டியன், நண்பர் டக்லஸ் என்கிற ராஜு,

நான் தொடர்ந்து வாசித்துவரும் அண்ணன்கள் அனுஜன்யா (கவிதை எனக்கு புரியாவிட்டாலும்), CableSankar (திரைப்படத்தில் ஆர்வமில்லாதிருந்த என்னை திரும்பி பார்க்கவைத்தவர்), 'புலம்பல்கள்' ஆதிமூலகிருஷ்ணன் (அனுபவித்து எழுதுகிறார்), கார்க்கி (அசராம அடிக்கிராப்ல), குசும்பர் (ஓவர் குசும்பு), உண்மைத்தமிழன் (எல்லா வேலையும் முடித்துவிட்டுதான் இங்கு செல்வேன், ஆர அமர வாசிக்கணும்ல), செந்தழல் ரவி, மற்றும் தமிழ் பிரியன்,

என்னை பட்டை தீட்டிக்கொள்ளும் சுயநலத்தில் நான் வாசித்துவரும் பிரபல எழுத்தாளர்கள் மாலன் ஐயா, பாரா சார், பத்ரி சார், தோழர்கள் ஷோபாசக்தி, மோகன்தாஸ், மருதன், என்.சொக்கன், ஆர்.முத்துக்குமார், 'அகநாழிகை' பொன் வாசுதேவன்,

ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த

நன்றி!

சொல்லவேண்டியவை நிறையவே என்னுள்ளே கிடக்கிறது, அதை சொல்வதற்கான எழுத்துநடையை கற்றுவருகிறேன். அதன் ஒரு சிறு முயற்சி தான் இப்பதிவுகள். இவற்றில் இருக்கும் கருத்து, எழுத்து, வாக்கியப்பிழைகளை பின்னூட்டினால், என்னுள் ஏற்றிக்கொள்ள ஏதுவாயிருக்கும்.

இனி பந்து உங்கள் முற்றத்தில்...

May 6, 2009

மன உளைச்சல்

மன உளைச்சல் உங்களை மாற்றும் முன் நீங்கள் அதை மாற்றுங்கள்.

உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லையா?

உங்களுக்கு எப்போதும் மனக்கவலையா?

உங்கள் கை நடுக்கம் மற்றும் உள்ளங்கை வியர்வை சுரக்கிறதா?

இவை எல்லாம் மன உளைச்சலுக்கான அறிகுறிகள்.

மன உளைச்சலை கட்டுப்படுத்த முடியும், அது உங்களை கட்டுப்படுத்தும்முன்.

மன உளைச்சல் என்றால் என்ன?

அன்றாட வாழ்க்கையில் நமக்கு உண்டாகும் உடலியல் மற்றும் உளவியல் மாற்றத்தின் நம் உடலின் பதில் தான் மன உளைச்சல் என்பது. இதில் ஹார்மோன்கள் மற்றும் அட்ரினாலின் வெளிப்பாடும் அடங்கும். அட்ரினாலின் சுரப்பியின் விளையாக இருதயத்துடிப்பு, சுவாசம் மற்றும் இரத்த சக்கரை அளவு கூடுகிறது. மேலும் இது, இரத்த ஓட்டத்தை செரிமான அமைப்பிலிருந்து தசைகளுக்கு மாற்றுகிறது.

மட்டுமல்லாது அதிக நாட்கள் மன உளைச்சலுடன் வாழ்வது, நமது உடல் ஆரோக்கியம், உறவு மற்றும் சந்தோசங்களுக்கு கேடு விளைவிக்கும் என்பதும் மறுக்க முடியாதது.

மன உளைச்சலுக்கான காரணங்கள் என்ன?

நேர் மறையான மற்றும் எதிர் மறையான நிகழ்வுகள் இரண்டுமே மன உளைச்சலுக்கு காரணங்களாக அமைந்துவிடுகிறது.

பொதுவான காரணங்களாக கருதப்படுபவை;

பெரும்பாலும் வாழ்க்கை மாற்றங்கள்:

அன்புக்குறியோரின் மரணம்.

விபத்து.

சட்டப்பிரச்சனை,

இடமாற்றம்

கடன்,

உடல் நலக்குறைவு,

திருமணம்,

கர்பம்,

புதிய பணி,

விவாகரத்து,

பணியின்மை.

சுற்றுச்சூழல் நிகழ்வு;

அதிகப்படியான ஒலி,

போக்குவரத்து நெரிசல்,

நேர அழுத்தம்,

போட்டி,

தொற்று நோய்,

மன உளைச்சலின் பாதிப்புகள் என்ன?

உடலியல் பாதிப்புகள்;

தலை மற்றும் வயிற்று வலி,

தசை அழுத்தம்,

வேகமான இருதயத்துடிப்பு,

தூக்கமின்மை,

பசியின்மை அல்லது அதிக பசி,

உள்ளங்கை வியர்வை,

உணர்வியல் பாதிப்புகள்;

பதட்டம்,

எளிதில் உணர்ச்சிவசப்படுதல்,

அதிகப்படியான கவலை,

துன்பம்,

பற்றாமை எண்ணம்,

மனவியல் பாதிப்புகள்;

கவனமின்மை,

மறதி,

நம்பிக்கையின்மை

மன உளைச்சலை கட்டுப்படுத்துவது எப்படி?

சிலர் எதிர் மறையான நடவடிக்கைகளான புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் போதை உட்கொள்வதன் மூலம் மன உளைச்சலை சமாளிக்க முற்படுவர். இது மன உளைச்சலை கட்டுப்படுத்தியதாக முகமூடியை தந்து இவர்களுக்கு ஆரோக்கியக் கேட்டை விளைவிப்பது மட்டுமல்லாது குடும்பத்தினருக்கும் பொருளாதார நெருக்கடியை உண்டாக்கும். இத்தகைய பழக்கங்கள் முற்றிலும் தவறு மற்றும் தவிர்கப்படவேண்டியதாகும்.

மன உளைச்சலை தகர்த்தெரிய;

நேரத்தை சரியாக திட்டமிடுதல்.

தினசரி திட்டமிடல் அவசியம். மிக முக்கியமான செயல்களுக்கு முக்கியத்துவம், பெரிய தேவைகளை உடைத்து சமாளிக்க முடிந்த சிறியவைகளாக ஆக்குதல், ஒரு சமயத்தில் ஒரு வேலை மட்டுமே செய்தல் ஆகியவை இவற்றில் அடங்கும்.

செய்வதை நேர்மையாய் செய்தல்.

நமக்கு தகுதியான மற்றும் விருப்பமான வேலைகளை மட்டும் தேர்ந்தெடுத்தல். நம்மால் செய்ய முடிந்த வேலைக்கான திட்டமிடல் மற்றும் உற்றுநோக்குதல்.

முக்கியமான வாழ்க்கை மாற்றங்களை பிரித்தல்.

நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொறு மாற்றத்திற்கும் போதிய இடைவெளி, அதாவது ஒரே சமயத்தில் பணி மாற்றம், புது வீடு வாகனம் வாங்குதல் ஆகியவற்றை தவிர்த்தல்.

நமக்கிருக்கும பிரச்சனைகளை பற்றி யாரிடமாவது பேசுதல்.

உதவிகோருதல் என்பது இயலாமையின் வெளிப்பாடாகிவிடாது. நமது பிரச்சனைகளை குடும்பத்தினரிடமோ, சக பணியாளரிடமோ, மேற்பார்வையாளரிடமோ அல்லது மதத்தலைவரிடமோ மனம்விட்டு பேசுவதன் மூலம் உணர்ச்சிவசப்படுவது குறையும் மற்றும் உளவியல் ரீதியாக ஆதரவு கிடைக்கும்.

குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒன்றியிருத்தல்.

குடும்பத்தினரும் நண்பர்களும் தான் நம் வாழ்க்கையின் அங்கம், அவர்களே நமக்கு அன்பு, பாசம், நட்பு மற்றும் தேவையானபோது ஆதரவு தருபவர்கள்.

நம்மை நாமே விரும்ப கற்றுக்கொள்ளுதல்.

நம்மை கண்டு நாம் முதலில் சந்தோசப்படவேண்டும். மற்றவர் முன்னிலையில் நாம் எப்படி தோன்றமளிக்கின்றோம் என்பதில் கவலை கொள்ளாமல், நம் தோற்றத்தில் மகிழ்தல். நேர் எண்ணங்களின் வகையாதல் மிக முக்கியம். அது நமக்கு காட்டித்தரும், நம்மால் எதை மாற்ற முடியும் எதை நமது வாழ்வின் மிகச்சிறந்ததாக ஆக்கிக்கொள்ள முடியும் என்பதை.

ஆரோக்கியமான வாழ்க்கை.

உடற்பயிற்சியின் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். சரியான உணவு உட்கொள்ளுதலும், அளவான உறக்கமும் மிக அவசியம்.

நமக்காக நேரம் ஒதுக்குதல்.

நமக்கு விருப்பமானவற்றை செய்ய நேரம் ஒதுக்குதல், பாட்டு, நடனம், ஓவியம், சுற்றுலா மற்றும் விளையாட்டு போன்றவற்றில் நமக்கு விருப்பமானவற்றை செய்தல். சோர்வாகும் போது சிறிது ஓய்வெடுத்தல்.

இளைப்பாற கற்றுக்கொள்ளுதல்

ஆழ்ந்த சுவாச உடற்பயிற்சி, ஆசனம் போன்றவற்றையும் கற்றுக்கொள்ளுதல்.

ஆழ்ந்த சுவாசம் பயிற்சி.

 1. ஒலிபெருக்கியில் மெல்லிய இசையை ஓடவிடுங்கள்.
 2. முடிந்தால் விளக்கின் ஒளியை குறைத்துக்கொள்ளுங்கள்.
 3. வசதியாக அமர்ந்துகொள்ளுங்கள்.
 4. கண்களை மூடிக்கொண்டு ஒரு கையை வயிற்றில் வைக்கவும்.
 5. மெதுவாக சுவாசத்தை மூக்கினூடாய் உள்ளிழுக்கவும்,
 6. பின்பு மெதுவாக வாய்வழியே வெளியிடவும்.
 7. இதே பயிற்சியை 4-5 முறை 5-10 நிமிடங்கள் செய்யவும், நீங்கள் ஆசுவாசப்படும்வரை.

விழிசார் கற்பனை பயிற்சி.

இந்த பயிற்சிக்கு 10-15 நிமிடங்கள் எடுக்கும். உங்களுக்கு நேரமிருந்தால் ஆழ்ந்த சுவாசப்பயிற்சியை தொடர்ந்து இதை செய்யலாம்.

 1. வசதியான இடத்தில் நல்ல அமைதியான மெல்லிசையை ஒலிபெருக்கியில் ஓட விடுங்கள்.
 2. முடிந்தால் விளக்கின் ஒளியை குறைத்துக்கொள்ளுங்கள்.
 3. வசதியான இருக்கையில் அமர்ந்துகொள்ளுங்கள்.
 4. கண்களை மூடிக்கொள்ளுங்கள். கவலைகளை ஒரு ஓரமாக மூட்டைகட்டி வையுங்கள்.
 5. மெதுவாக சுவாசிக்கவும்.
 6. நீங்கள் பச்சை புல்வெளியில் நடந்துகொண்டிருக்கிறீர்கள், சுற்றிலும் பூக்கள் பூத்துக்குலுங்குகிறது, பறவைகளின் ரீங்காரம் கேட்பதாக கற்பனை செய்யுங்கள்
 7. தென்றல் உங்களை தழுவுவதாகவும் உணருங்கள்.
 8. நடைபாதையின் முடிவில் வெள்ளை மணல் கடற்கரையும், சூரிய உதயத்தையும் பாருங்கள்.
 9. நீங்கள் ஆசுவாசப்படும்வரை இந்த பயிற்சியை தொடருங்கள்.

இந்த பகிர்வு உங்களுக்கு பிடித்திருந்தால் வாக்களிப்பது உங்கள் மீது கடமையாகிறது...

May 4, 2009

அம்மா

நான் மழையில் நனைந்துவந்த ஒரு நாள், அண்ணன் அதட்டுகிறான், ‘ ஏன் குடை கொண்டுபோகவில்லை?’ அக்கா அறிவுருத்துகிறாள், ‘மழை நின்ற பிறகு வந்திருக்கலாமே?’ தந்தை திட்டுகிறார், ‘உடம்புக்கு ஏதாவது ஆன பிறகுதான் அறிவுவரும்’ அம்மா மட்டும்தான்,’என் தலை துவட்டியவாறே, அறிவுகெட்ட மழை… என் மகன் வீடு வரும் வரை பொறுத்திருக்க கூடாதா?’ என்றாள். அதுதான் அம்மா… **************************************************** Chill: அம்மான்னா அப்டித்தான் யோசிக்கணுமோ? **************************************************** அன்பார்ந்த வாக்காள பெருங்குடிமக்களே.. ஒங்க பொன்னான வாக்குகள்ல ஒண்ண எனக்கும் க்ளிக்குங்க......

May 3, 2009

அத்வானி, பன்றிக்காய்சல், இலங்கை - ஜிகர்தண்டா

செய்தி; இந்தியாவிலும் பன்றிக்காய்சல். லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து டெல்லி வந்த 6 பேரில் 5 பேருக்கு பன்றி காய்சல் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதாக சுகாதாரதுறை செயலர் தெரிவித்துள்ளார்.

நல்லா செக் பண்ணுங்கப்பா… கோட்டை சண்டைல இத கோட்ட விட்றாதீங்க…

பன்றி காய்சல் பற்றிய எனது முந்தைய பதிவை வாசிக்க இங்கே செல்லவும்.

செய்தி; ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல். இலங்கைக்கு ஆயுதம் கொண்டு செல்வதாக சந்தேகம் எழுந்ததால், கோவையில் இந்திய ராணுவ வாகனம் தாக்கப்பட்டது.

சாலைமறியல் போன்று எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கலாம். ராணுவ வாகனம் தாக்குதல் கொஞ்சம் ஓவராயிடுச்சோ?

செய்தி; முதல்வர் கருணாநிதி கடும் காய்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

என்ன காய்சல் னு பார்த்து, அவர ரெஸ்ட் எடுக்கவிடுங்கப்பா… ரெஸ்ட் இன் பீஸ்.

செய்தி; இந்தியா உடனடியாக அணுகுண்டு தயாரிக்க வேண்டும் – அத்வானி.

ராஜபக் ஷே ட்டருந்து எத்தன கிலோவுக்கு பர்சஸ் ஆர்டர் வந்திருக்கு?

ஒரு திருமணமாகாத பெண் தன் அம்மாவிடம் தான் கருவுற்றிருக்கதாக சொல்கிறாள். அவளுடைய அம்மா காச் மூச் என்று கத்திவிட்டு,'யார் அந்த கருப்பாடுன்னாவது தெரியுமான்னு' கேட்க, உடனே அந்த பெண் மொபைல எடுத்து SMS அனுப்பினாளாம். அடுத்த 5 நிமிசத்துல ஒரு BMW வாசல்ல வந்து நிக்குது, அதிலருந்து நம்ம ___________(யார் பேரையாவது போட்டுக்குங்கப்பா) மாதிரி ஒருத்தர் இறங்கி வீட்டுக்குள்ள வந்து, ஜென்டில்மென் அக்ரிமென்ட் போடுகிறார்.

நடந்தது நடந்து போச்சு, உங்க பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தால், '50 லட்ச ரூபாய் பேங்ல டெபாசிட் பண்றேன். பெண் குழந்தைன்னா, 1 கோடி. ரெட்டைக்குழந்தை பிறந்தால், ஒவ்வொறுத்தர் பேர்லயும் 50 லட்சமும் அம்பத்தூர்ல இருக்குர என்னோட ஒரு பேக்டரியும் சேர்த்து தருகிறேன். ஆனால், இடையிலேயே அபார்ஷன் ஆயிடுச்சுன்னா என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க' என்று கேட்க..

அவ்வளவு நேரமா அமைதியா இருந்த அந்தப்பெண்ணுடைய அப்பா, 'இன்னொரு தடவ முயற்சி பண்ணுங்கன்னு' சொன்னாறாம்.

Chill: better luck next time.

அன்பார்ந்த வாக்காள பெருங்குடிமக்களே.. ஒங்க பொன்னான வாக்குகள்ல ஒண்ண எனக்கும் க்ளிக்குங்க......

பன்றி காய்சல் அபாயம்

ஸ்வைன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் (Swine Influenza Virus)

SIV என்று சொல்லப்படக்கூடிய ஸ்வைன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் (Swine Influenza Virus) தமிழில் பன்றி காய்சல் என்பது, ஐரோப்பிய நாடுகளிலிருந்து உலகம் முழுக்க பரவுவதற்கு சாத்தியமுள்ள நச்சுக்கிருமியாகும். (Swine Flu) பன்றி காய்சலானது (Birds Flu) பறவை காய்சலிலிருந்து மாறுபட்டு, மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவக்கூடியது.

2009 ல் முதல் பன்றி காய்சலின் திடீர் கிளர்ச்சியானது உடைந்த H1N1 இன்ஃப்ளூயன்ஸா வைரஸிலிருந்து வெடித்ததாக மெக்ஸிக்கோ பொது சுகாதார நிறுவனத்தால் மார்ச் 2009 ல் கண்டறியப்பட்டது. அதன் தொடற்சியாக, மெக்ஸிகோவின் எல்லைக்கு அருகாமையிலிருக்கும் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்லாது, கனடா,ஸ்பெயின் மற்றும் ஐக்கிய நாடுகளிலும் இதன் பாதிப்பு சுமார் 1800 நோயாளிகளுக்கு இருக்குமென்று அறியப்படுள்ளது.

பன்றி காய்சல் என்றால் என்ன?

ஸ்வைன் இன்ஃப்ளூயன்ஸா அல்லது ஸ்வைன் ஃப்ளு எனப்படுகிற பன்றி காய்சலானது, அதிகப்படியான ஸ்வைன் A(H1N1) வைரஸிலிருந்து மூர்கத்தனமாக பன்றிகளுக்கு தொற்றிக்கொண்டு அவற்றை செயலிலக்கச்செய்யும் ஒரு நுண் கிருமி ஆகும். இக்கிருமியின் பாதிப்பால் பன்றிகளுக்கு திடீர் நலக்குறைவு உண்டாகுமே தவிர அதிகமான பன்றிகள் கொல்லப்படுவதில்லை

இதே H1N1 வைரஸ் தான் மனித H1N1 வைரஸா?

இல்லை இந்த H1N1 ஆனது முற்றிலும் மாறுபட்டது, எனவே மனித H1N1 வைரஸிற்கான மருந்தானது இவற்றிக்கு பாதுகாப்பளிக்காது.

மனிதற்களுக்கு இந்நோய்கிருமி பரவும் அபாயம் உள்ளதா?

பன்றி காய்சலானது மனிதர்களுக்கு பரவும் அபாயம் இல்லை எனினும் சில சந்தர்பங்களில் பன்றி காய்சல் பாதிக்கப்பட்ட பன்றிகளுடன் நேரடி தொடர்புடைய தொழிலாளர் போன்றோருக்கு தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது.

அவ்வாறு தொற்றிக்கொண்டால் அதன் அறிகுறிகள் என்ன?

காய்சல், இருமல், சோர்வு, பசியின்மை, தொண்டை புண், உடல் வலி, தலை வலி சிலருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியும் ஏற்படலாம்

இதே வகையான (ஸ்வைன் ஃப்ளு) பன்றி காய்சல் தான் மெக்ஸிகோ, அமெரிக்கா மற்றும் இதர நாடுகளில் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு தொற்றிக்கொண்டுள்ளதா?

மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவில் பாதிப்படைந்த நோயாளிகளின் கிருமி மாதிரி ஒரே வகையானது என்று நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. அந்த கிருமியானது வட அமெரிக்காவிலிருந்து மனித கிருமி மற்றும் பறவை கிருமியும், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆசிய நாடுகளின் பன்றி கிருமியும் சேர்ந்த கலவையாகும். அதாவது மிக்ஸ் வைரஸ்.

இதற்கு நிவாரண மருந்து?

டாமிஃப்ளு (TamiFlu) மாதிரியான 4 வகை மருந்துகள் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டுள்ளது, எனினும் பாதிப்பிற்கான அறிகுறிகள் தென்பட்டால் முதலில் அருகிலுள்ள மருத்துவமனையை அனுகுவது நல்லது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மற்றும் டெக்ஸாஸில் வாழ்பவர்களுக்கு ப்ரத்யேகமாக ஏதாவது?

நோய் பரவுவதிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க; அடிக்கடி கைகழுவுதல், இருமல் அல்லது தும்மலின் போது வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ளுதல், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து விலகியிருத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர் நீங்களாயிருந்தால் வீட்டிலேயே இருக்கவும் மற்றவர்களிடமிருந்து விலகியிருக்கவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.

இது அனைத்து நாட்டினருக்குமான பொது அறிவுரையாகவே தோன்றுகிறது

நாடு

உறுதி

செய்யப்பட்டது

மற்ற

வாய்ப்பிருப்பது

இறப்பு

தொடுப்பு

மெக்ஸிக்கோ (details)

26

1,995

149 (20)

[1][2]

அமெரிக்கா (details)

48

212+

0

[3][2][4]

கனடா (details)

6

28+

0

[2][5]

ஐக்கிய நாடுகள் (details)

2

21

0

[6]

ஸ்பெயின் (details)

1

35

0

[7][8]

நியுஸிலாந்து

0

56

0

[9]

ஆஸ்திரேலியா

0

19

0

[10][11]

கொலம்பியா

0

12

0

[12]

பிரேசில்

0

11

0

[13][14]

ஸ்விசர்லாந்து

0

5

0

[15]

டென்மார்க்

0

4

0

[16]

ஐயர்லாந்து

0

4

0

[17]

செக் குடியரசு

0

3

0

[18]

போலந்து

0

3

0

[19]

பிரான்ஸ்

0

3

0

[20]

கவுட்மாலா

0

3

0

[21]

இஸ்ரேல்

0

2

0

[22]

அர்ஜன்டீனா

0

1

0

[23]

கொஸ்டாரிகா

0

1

0

[24]

பெரு

0

1

0

[25]

ரஷ்யா

0

1

0

[26]

தென் கொரியா

0

1

0

[27]

மொத்தம்

83

2,443+

149 (20)

* Not all cases have been confirmed as being due to this strain. Possible cases are cases of influenza-like illness (ILI) that have not been confirmed through testing to be due to this strain. ‡ Deaths with confirmed presence of virus in parentheses.

இந்த தகவல்கள் யாவும் பொதுநலன் கருதி கீழே குறிப்பிட்டுள்ள வலைகளில் இருந்து திரப்பட்டது.

www.cdc.gov/travel

http://www.who.int/

http://www.mayoclinic.com/

http://en.wikipedia.org/wiki/2009_swine_flu_outbreak_in_Mexico