Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Feb 7, 2016

Shame on you JEMO

கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம்? கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்? - ஜெயமோகன்

இவையொன்றும் ஜெமோவிற்கு புதிதல்ல, திரைப்படத்திற்கு வசன வாய்ப்பு இல்லாத போது தம் இரத்தத்தில் ஊறிப்போயிருக்கும் இஸ்லாமிய வெறுப்பை கதையெடுக்கிறார். அந்த மதவெறி இவர் கண்ணை மறைத்து நெடுந்தூரம் கொண்டு சென்றுவிட்டது. மதவெறி வாந்தி இல்லாத இவரது கட்டுரையை காண்பது அறிதாகிவிட்டது. தனக்குத்தானே கடிதம் எழுதும் இவரது சுயபிரபல வெறி எளிதில் தீ பற்றும் இஸ்லாமிய சப்ஜக்டை எப்போதும் உரசிப்பார்ப்பதில் ஆச்சரியமில்லை.

என் திருமணத்திற்கு வெளியூரிலிருந்து குடும்பத்துடன் வந்திருந்தான் சோமு. அவர்களுக்காகவே சைவ உணவு சமைத்திருந்தோம். ஆனால் நண்பன் சித்தீக் தனியாகத்தான் வந்திருந்தான். 10 வருடத்திற்கு முன்பு என்னுடன் குவைத் அறையில் இருந்த நசீர், பாஷா இருவருடைய போன் நம்பர் கூட என்னிடம் இல்லை. ஆனால் பெருமாள் ராஜு இப்போதும் தொடர்பில் இருக்கிறார்.

கடந்த ஈகைப் பெருநாளில் என் வீட்டு பிரியாணி (ஒன்றிரண்டு முஸ்லிம் நண்பர்களைத்தவிர) அனைத்தும் அக்கம் பக்கத்து இந்து, கிருத்தவ வீடுகளுக்குத்தான் சென்றது. கூடவே தினமணி ஈகைத்திருநாள் சிறப்பு மலரும், அடையாறு ஆனந்தபவன் இனிப்பும். இடப்பக்க வீட்டில் முன்பே வாய்க்கால் தகராறு இருந்தது. ஆனாலும் வீட்டுக்கதவு தட்டி உள் சென்றோம். அவர்களும் புன்னகையுடன் வரவேற்றனர். அதேபோல ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தீபாவளி ஸ்வீட் என் வீட்டிற்கும் வருவது வழக்கம்.

இந்துத்துவ கப்பலில் சொகுசு சவாரி செய்தாலும் சமகால தமிழின் சிறந்த எழுத்தாளரான உங்களுக்கு இத்தகைய மதம்கடந்த மனிதநேயங்கள் தெரியாதிருக்க வாய்ப்பில்லை.


- உங்களது ஆசான்கள் கற்றுக் கொடுத்த பிரித்தாளும் சூழ்ச்சி விசத்தை, கண்ணாடி பார்த்துக்கொண்டு விருந்தினர் மாளிகை மலக்கூடம் சென்று வெளியெடுங்கள்... இங்கு வேண்டாம். விளம்பர வெறி உங்கள் கண்ணை மறைக்கிறது, வெட்கப்பட வேண்டும், ஜெமோ.  #shameonyouJEMO 

Sep 21, 2012

உயிரினும் மேலான...!


இஸ்லாமியர்கள் வரலாற்று தவறிழைத்துவிட்டார்கள்.  இவர்களின் போராட்டத்திற்குப் பிறகுதான் அந்தத் திரைப்படம் பற்றி பலருக்கும் தெரியவந்தது. அது ஒரு இரண்டாம்தர, மஞ்சள் திரைப்படம். அதை இயக்கியவன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி வெளியே இருப்பவன். இவர்களுக்கு விளம்பரம் தேடித்தந்திருக்க வேண்டாம். - இவையெல்லாம் தம்மை நடுநிலைவாதி, கடவுள் மறுப்பாளன் என்று சொல்லிக் கொள்பவர்களின் விமர்சனம். தினமணி ஒருபடி மேலே போய் கூத்தாடி ஷாருக் கானும், சாமியார் அப்துல் கலாமும் அமெரிக்கா சென்ற போது அவமானப்படுத்தப்பட்டார்களே அப்போது நீங்கள் போராடவில்லையே என்று சொல்கிறது.

இவை மேலோட்டமாக கேட்கும் போது நியாயமான அக்கறை போல தோன்றினாலும், அவர்கள் இழிவுபடுத்தியிருப்பது நாம் உயிரினும் மேலாக நேசிக்கும் முஹம்மது நபியை (அவர் மீது அமைதி நிலவட்டும்). உயிரினும் மேலாக என்பது போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போவதல்ல, நமது உயிரைவிட அவர் மீது மதிப்பு வைத்துள்ளோம் என்பதைச் சரியாக புரிந்துகொண்ட மேற்கத்தீய சக்திகள் முஸ்லிம்களின் உணர்சியை தூண்டிவிட தவறான இடத்தில் கல்லடித்துள்ளனர். 9/11க்குப் பிறகான இஸ்லாத்தின் வளர்ச்சி வேகம் இவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கலாம். அதனாலேயே ஒன்றன் பின் ஒன்றாக முஸ்லிம்கள் மீதான இவர்களின் காழ்புணர்ச்சியை வெளிக்காட்டுகிறார்கள்.இப்போது ஃப்ரான்ஸில் வெளியிடப்பட்டிருக்கும் கார்டூனும் இதற்குச் சான்று. இது இன்னசன்ஸ் முஸ்லிகளை கொதிப்படையச் செய்து, கலவரத்தை உண்டுபண்ணச் செய்யும் என்ற எண்ணமாக இருக்கலாம்.

முஸ்லிம்கள் கலகக்கார்கள் அல்ல, அமைதியான முறையில் தமது எதிர்ப்பைக் காட்ட அறவழிப்போராட்டம் மேற்கொண்டாலும், இவர்களைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் தீவிரவாதத் சுவர் இவர்களை தீவிரவாதிகளாகவே வெளிக்காட்ட வேண்டும என்பதில் தீவிர இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் முனைப்பாக இருக்கிறார்கள். இவர்களுடைய எண்ணமெல்லாம் இஸ்லாம் ஒருபோதும் தன்னுடைய உண்மை முகத்தை வெளிக்காட்டிவிடக் கூடாது என்பதுதான். இஸ்லாமினுடைய உண்மையான அமைதி முகம் வெளித்தெரிகையில் இவர்கள் மீது இத்தனை நாளாக கட்டி எழுப்ப முற்படும் தீவிரவாத முகத்திரை பொய்த்துவிடும் என்பது இயல்பான பயம்.

சமீபத்தில் நடந்துவரும் ஏனைய போராட்டங்களின் போது காவல்துறை அத்துமீறலை, அடக்குமுறையை கண்டித்த பலரும், இந்தப் போராட்டத்தில் இன்னசன்ஸ் முஸ்லிம்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார்கள். மாமியார் உடைத்தால் மண்குடமாம். அமெரிக்க நாடுகளில் கூலி வாங்கும் பலரும் அவர்களுக்கு விசுவாசமாகவே இருந்து தொலைக்க வேண்டியிருக்கிறது. 

வெள்ளையர்களைச் சுட்டு வீழ்த்திய கட்டபொம்மனையும், பகத்சிங்கையும், சுபாஷ் சந்திர போஸையும் இந்திய  விடுதலைப் போராட்ட வீரர்களாக, தியாகிகளாக ஏற்றுக் கொள்ளும் நாம், சதாம் உசைனையும், ஒசாமாவையும் தீவிரவாதிகள் என சட்டென முத்திரை குத்திவிட்டோம். திப்பு சுல்தான் கோயில்களை கொள்ளையடித்தான் என்று சொல்லப்படுவதையும் மறுப்பேதும் இல்லாமல் ஏற்றுக்கொள்கிறோம். குறைந்தபட்சம் இவர்களுடைய வரலாறுகளையாவது படித்துப் பார்த்திருந்திருக்கலாம். இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் அதற்கெல்லாம் இடம் கொடுக்கவில்லை. 

அதே இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல்தான் சென்னையில் மய்யப் பகுதியில் வரலாறு காணாத பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சிப்  பெருக்கக் கூடிவந்து பேருந்து ஒன்றையும், இருசக்கர வாகனம் ஒன்றையும் எரித்தார்கள் என்பதை நம்ப வைக்கிறது. உயிரினும் மேலான முஹம்மது நபியை இழிவுபடுத்திய அமெரிக்கர்களை எதிர்க்க உணர்ச்சிப் பெருக்கில் அமெரிக்க தூதரகம் மீது கல்லெரிந்தாலும் (இதை நான் ஆதரிக்கவில்லை) அருகில் இருக்கும் வேறெந்த சொத்திற்கும் சேதம் விளைவிக்கவில்லை. காவல் துறையினரை திருப்பி அடிக்கவில்லை. அடிவாங்கியே பழக்கப்பட்ட இந்த சமுதாயம், இப்பவும் அடிவாங்கியவாறே ஓடிக் கலைந்தது. இதற்கு முந்தைய வாரத்தில் கூடங்குளத்தில் காவல்துறை தடியடி நடத்தியதைக் கண்டித்து முதலில் சென்னையில் மறியலில் ஈடுபட்டு கைதாகியது ஒரு முஸ்லிம் அமைப்பு. 

இத்தகைய அறவழிப்போராட்டம் நடந்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இன்னும் சிலருக்கு சென்னையில் இத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பதே அதிர்சியாக இருக்கிறதாம். சிலருக்கு இனி அமெரிக்க விசா கிடைப்பது சிரமமாகிவிடும் என்ற கவலை. இன்னும் சிலர், அமெரிக்காகாரன் படமெடுத்தால் அமெரிக்க தூதரகத்தை ஏன் முற்றுக்கையிட வேண்டும் என்ற கோபம். 

இவையெல்லாவற்றையும் விட இணையப் போராளிகளின் அக்கறை புல்லரிக்க வைக்கிறது. அலுவலகத்தில் நேரம் போக்க ஃபேஸ் புக், ட்விட்டர், கூகள்+ல் தினம் போராட்டம் நடத்துகிறது இந்தக்கூட்டம். ஒரே போராட்டத்திற்கு தினமும் எழுதினால் போரடித்துவிடும் என்பதால் தினம் தினம் புதிய அவலை தேடி அலைகிறார்கள். ஈழம், கூடங்குளம், முல்லைப் பெரியாறு, ஹஜாரே, டீஸல், டி20 என இவர்களது சமூக ஆர்வம் பரந்து விரிந்தது. ராஜபக்சே மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்று ட்விட்டரில் எழுதும்போது கூடங்குளத்தில் அணுஉலை ஆபத்தானது என்று ஃபேஸ்புக்கில் எழுதுவார்கள். கூடங்குளத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம், அண்டை மாநிலத்துக்கு கொடுக்கக்கூடாது என்று கூகள்+ல் எழுதினால், காவிரி நீரில் நமக்கு முழு உரிமை உள்ளதென ப்ளாக்கில் எழுதுவார்கள். இலங்கை சுற்றுலா பயணிகளை அடித்து விரட்டியதை வெல்டன் என் எழுதிய கை, தூதரக சன்னல் கண்ணாடி உடைந்ததை அந்தோ பரிதாபம் என்று எழுதுகிறது.

கட்டிட நெரிசலில் சிக்கி உயிரிழந்த தூதரின் குடும்பத்திற்கு அழ்ந்த அனுதாபங்கள். அது நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய செயல், குற்றம் செய்தவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அதுபோலவே,  இப்பிரச்னையில் சற்றும் தொடர்பில்லாத மாநகரப் பேருந்தை சேதப்படுத்திய உண்மையான குற்றவாளியும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இஸ்லாத்தை விமர்சிக்க உங்களுக்கு தாராள உரிமை இருக்கிறது, இழிவுபடுத்த எவருக்கும் உரிமையில்லை. 

முஹம்மது நபியை உயிரினும் மேலாக நேசிக்கிறோம் என்பதை உலகிற்கு உணர்த்தவே இந்தப் அறப்போராட்டம். ஆம், நம் உயிரினும் மேலாக!

Jan 8, 2010

கஃ பா - ஓர் அற்புதம்

முஸ்லீம்களின் புனித ஆலயமான சவுதி அரேபியா, மக்கா நகரில் இருக்கும் க'ஃபா பற்றிய காணொளிப் பகிர்வு. (யூ ட்யூபில் உலாவிய போது கிடைத்தது.)


அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மக்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா (எனும் மக்காவில்) உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹூமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. புனித குர்ஆன் 3: 96,97
நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள், எனக்கே அஞ்சுங்கள் - புனிதகுர்ஆன் 2:150



க'ஃபா வரலாறு பற்றிய சகோதரி ஹூசைனம்மா எழுதிய அண்மை பகிர்வு அது என்னுடையதல்ல

Dec 14, 2009

கடவுள் மறுப்பு - நம்பிக்கையாளன் பார்வையில்

என் மதம் சிறந்தது என்று சொல்லும் வரை பிரச்சனை இல்லை. உன் மதம் தாழ்ந்தது என்று சொல்லும் போதுதான் பிரச்சனைகள் ஆரம்பமாகிறது என்று எங்கோ யாரோ சொல்லியிருந்தார். இந்தக்கூற்றை இனம், மொழி, சாதி, மாநிலம், நாடு என பல விஷயங்களோடு பொருத்திப்பார்க்கலாம். குறிப்பாக பன்முகைத்தன்மை கொண்ட இந்தியா போன்ற நாடுகளின் ஒறுமைப்பாட்டிற்கு இதைப் பொருத்திப்பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

மதவாதிகள் என அடையாளம் காட்டப்படுவோரும், காட்டுவோரும் மேற்சொன்ன வாக்கியத்திலிருக்கும் உண்மையை உணர்ந்து கடைபிடித்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் எழுப்போவதில்லை. மதவாதிகளுக்கு இவற்றை உணரும் தன்மை இல்லையென்று 'இவர்கள்' சொல்லிக்கொள்வதால், அவர்களை ஒரு பக்கமாக ஒதுக்கிவைத்துவிடலாம். கடவுள் நம்பிக்கை இல்லாதவன், பகுத்தறிவாளி, மூட நம்பிக்கைகளின் எதிரி , முற்போக்குச் சிந்தனையாளன் என்று தனக்குத் தானே சொல்லிக்கொள்ளும் 'நியாயவான்கள்' இவ்விசயத்தை உணர்ந்தபாடில்லை. கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரமாக கடவுளையே சொல்வது இவர்களுடைய தொன்றுதொட்ட தொண்ணூற்றியெட்டு  வழக்கத்தில் ஒன்றாக இருக்கிறது. அதாவது, கடவுள் இருந்தால் அவனை இதை செய்து காட்டச்சொல், அதை நிறுத்திக்காட்டச்சொல் என்பதாகவே வாதிடுகிறார்களே தவிர ஒருபோதும் அதைவிடுத்து வெளியே வருவதில்லை.
கடவுளையும், கடவுள் நம்பிக்கையாளர்களையும் சாடுவதே இவர்களுடைய முழுநேரத் தொழிலாக இருக்கிறது.
கடவுள் இருக்கிறான் என்பதை என்னால் நிரூபித்துவிட முடியும் என்றால் அவன் கடவுளாக இருக்க முடியாது. அவனை சிந்தித்துணரலாம், சந்தித்தல்ல. அதனாலேயே நான் கடவுளை நம்புகிறேன். கடவுள் இல்லையென்று சொல்பவர்களுக்கு பலமுறை விடப்பட்ட சவால், நிரூபிக்க முடியாத சவாலாக இன்னும் தொடர்கிறது.
ஒன்றும் இல்லாததிலிருந்து ஏதாவதொன்றையோ அல்லது ஏதாவதொன்றை ஒன்றும் இல்லாததாகவோ ஆக்கிக்காட்டுங்கள். இது கடவுளால் மட்டுமே முடியும்.
இதற்கு ஒரே ஒரு கேள்வியைத்தான் திரும்ப திரும்ப வைக்கிறார்கள். 'கடவுள் எங்கிருந்து வந்தான்?' என்று. யாரும் படைக்க வேண்டியதில்லை என்பதாலேயே அவன் கடவுள், 'தி சூப்பர் நேச்சர் பவர்' என்கிறோம். மனித கற்பனைக்கு எட்டாத சக்தி அவனிடம் இருக்கிறது. சற்றே வேறு விதமாக வாசிக்க..
அவன் எத்தேவையும் அற்றவன். அவன் யாரையும் பெறவும் இல்லை. யாராலும் பெறப்படவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் இல்லை.
அதனாலேயே அவனை வணங்குகிறோம். அவனிடத்தில் உதவி தேடுகிறோம்.

ஐயாமார்களே, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக வேறு யாருக்கும் இருக்கக்கூடாது என்று நினைப்பது வாத நியாயமாகுமா? சரி..  நியாயமாமென்று ஏற்றுக்கொண்டாலும், முதலில் நீங்கள் அதை ஒழுங்காக கடைபிடிக்கிறீர்களா?  கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் கடவுள் சார்ந்த மத விழாக்களில், சடங்குகளில், கலந்து கொள்வதிலிருந்து தவிர்ந்திருக்க வேண்டும். இதைச்சொன்னாலும், 'உங்கள் வீட்டு விழாக்களில் கலந்து கொள்ளக்கூடாதா?' என்று கேட்கின்றனர். தாராளமாக வந்து கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். ஆனால், எங்கள் வீட்டு பிரியாணியில் ஆட்டுக்கறி போட்டிருப்போம். அந்த ஆட்டை இறைவனின் பெயர் சொல்லி அறுத்திருப்போம். இவ்வளவும் தெரிந்து கொண்டு பிரியாணியில் ஆட்டுக்கறி போட்டிருக்கிறார்கள் அந்த ஆட்டை இறைவனின் பெயர் சொல்லி அறுப்பது மூட நம்பிக்கை. அந்த வீட்டிற்கு வரும் பெண்கள் பர்தா போட்டிருப்பது பெண்ணடிமைத்தனம். இஸ்லாமிய பெண்கள் பர்தாவை வீசியெறிய வேண்டும் என்றெல்லாம் பகுத்தறிவு கொள்கைகளை அவிழ்த்து விடுகின்றனர். பர்தா அணியும் பெண்கள் அனைவரும், 'நான் விரும்பியே பர்தா அணிகிறேன்' என்று சொன்ன பிறகும், இவர்களுக்கு அதற்கும் பின்னால் என்ன வேண்டிகிடக்கு என்பதும் புரியவில்லை.

ஒருவர் பொதுவில் ஒரு கருத்தை/கொள்கையை சொல்லும் முன்பு, தான் அந்தக்கொள்கையை கடைபிடிக்க வேண்டும். மாற்று மதத்தவரின் கடவுள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். அவர்களுடைய வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்கிறேன். அங்கு கடைபிடிக்கப்படும் மதம் சார்ந்த சில நிகழ்வுகளில் எனக்கு விருப்பம் இல்லாததால் அவற்றில் இருந்து மட்டும் விலகி இருப்பேன். அது அவர்களுடைய நம்பிக்கை. அதனாலேயே வேறு எங்கும் சென்று அவற்றை  நான் குறை கூறுவதில்லை. ஆனால், வரதட்சணை வாங்கப்படும் கொடுக்கப்படும் சில திருமணங்களுக்குச் செல்லாமல் என்னை கட்டுப்படுத்திக்கொள்கிறேன். என் சொந்த சகோதரனுடைய திருமணத்தில் வரதட்சணை வாங்கப்பட்டாலும் என்னுடைய நிலை அதுவாகவே இருக்கும். இந்நிலையில்  இருக்கும் நான் வரதட்சணைக்கெதிராக எழுதுவது நியாயமாகும். அந்த கொடுமையை, மூட நம்பிக்கையையை எதிர்ப்பதில் அர்த்தம் இருக்கிறது. வரதட்சணை ஒரு சமூக குற்றம், கொடுமை, பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்றெல்லாம் கருத்துக்களை வாரிவழங்கிவிட்டு, அக்கா சொன்னாள், அம்மா அழுதாள் என்பதற்காக நானும் வரதட்சணை வாங்கினால் என்னை எதைக்கொண்டு அடித்தாலும் தகும். இன்னும் சொல்வதென்றால், நான் வரதட்சணையில் இருந்து விலகி இருக்கிறேன். அதையே மற்றவருக்கும் நாடுகிறேன் என்றால் முதலில் என் குடும்பம், சுற்றத்திற்கே அதைச் சொல்லி நடைமுறைப்படுத்த வேண்டும். கேட்காத பட்சத்தில் அங்கிருந்த வெளியேறி ஊருக்கு உபதேசம் செய்ய வரவேண்டும். மாறாக, என் சுற்றத்தில் இதைச்சொல்லி கெட்ட பெயர் வாங்கிக்கொள்ள விருப்பமில்லை என்ற நிலையிலிருப்பவர்களுக்கும் மேற்சொன்ன தண்டனை பொருந்தும். அதேபோல் விபச்சாரம் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வுகளிலும் நான் கலந்துகொள்வதில்லை. அதனாலேயே விபச்சாரத்தை எதிர்க்க எனக்கு முழுத்தகுதி இருக்கிறது. அதைப்பற்றிய எனது எண்ணத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.
'ஊருக்கு ஒரு கருத்தை சொல்லும் முன், நீ முதலில் கடைபிடியப்பா' என்று சொன்னால் மூக்கிற்கு மேல் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.
தனக்கென்று வரும்போது தான் வலி தெரியும். மதவாதிகளைவிட கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொள்பவர்களே விஷக் கருத்துக்களை பரப்பி பயங்கரவாதம் செய்கிறார்கள். சமீப காலமாக வட மாநிலங்களில் நடந்து வரும் குண்டுவெடிப்புகளும் கடத்தல் கொலைகளும் கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொள்பவர்களாலேயே நடந்தேருகிறது. தெலுங்கானா பிரச்சனையிலும் நக்ஸலைட்டுகள் ஊடுருவல் இருப்பதாக செய்திகள் சொல்கிறது.

கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் எந்நேரமும் அணியும் கருப்புசட்டையை விட்டுவிடுவார்கள், முஸ்லீம்கள் அணியும் வெள்ளைச்சட்டை மீது இவர்களுக்கு எந்த வெறுப்போ தெரியவில்லை. மட்டுமல்லாது...
முஸ்லீம்கள் அமர்ந்து சிறுநீர் கழிப்பதிலும்,
தாடி வைத்துக்கொள்வதிலும்,
மெக்காவிலிருக்கும் காபா 'வை முகம் நோக்கி வணக்குவதிலும்,
அரபியில் வணக்க வழிபாடுகளை செய்வதிலும்,
பின்னர் பிராத்தனைகளை தமிழில் செய்தாலும்,
பிரியாணியில் உப்பு குறைந்துவிட்டாலும்... என ஆகாத மருமகள் போல தொட்டதற்கெல்லாம் குற்றம் சொல்வதையே முழு நேரத்தொழிலாக வைத்திருக்கிறார்கள். குறைகளை கண்டுபிடிப்பதற்கென்றே பெயர் தெரியாதவர்கள் எழுதும் புத்தகங்களை வாங்கிப் படித்து தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்கிறார்கள்.

இன்னும் சிலர், தங்களுக்கிருக்கும் உயர்சாதி/சமஸ்கிருத வெறுப்பை சொல்லும் போது தன்னை நடுநிலையாளன் என காட்டிக்கொள்ளும் முயற்சிக்காக இஸ்லாமியர்களையும், கிறித்துவர்களையும் வலிந்து இழுத்து கருத்துச் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் கடவுள் மறுப்பாளன் என்று சொல்லிக்கொண்டே 'தமிழில் வழிபாடு' எனும் கோஷத்தையும் முன்வைக்கிறார்கள். மூட நம்பிக்கையின் எதிர்ப்பவன் என்று சொல்லிக்கொண்டே குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக அதை செய்பவர்களும் உண்டு. குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக சில பழக்கங்கள் கடைபடிப்பதை சரி என்று ஏற்றுக்கொண்டாலும், அதே பழக்கத்தை 'மூடநம்பிக்கையின் உச்சம்' என்று பொதுத்தளத்தில் முழங்குவதை என்னவென்று சொல்வது.

மதவாதிகளை விட அதி மூட நம்பிக்கையில் இருப்பது இவர்களே
  • பெரியார் என்ற மனிதருக்கு மாலை மரியாதை செய்து வழிபடுவது. அவரது எழுத்தையே வேதமாக கடைபிடிப்பது.
  • திருமணம் சட்டவிரோதமாக்கப்பட வேண்டும், பெண்களின் கருப்பையை அறுத்தெறிய வேண்டும் என்ற பெரியாரின் கூற்றை எதிர்க்காதது.
  • கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் என்றாலும் சிவில் சட்டத்தில் அவர்களுடைய சொத்து ஏதாவதொரு மதச் சட்டதை சார்ந்தே கையாளப்படும். சொத்துக்காக்க ஏதாவதொரு மதச்சட்டத்தை ஏற்க தயாராயிருப்பது.
  • இந்துவின் வாரிசு இந்து, முஸ்லீமின் வாரிசு முஸ்லீமாக வருவதைப்போல அல்லாமல் கடவுள் நம்பிக்கையில்லாதவரின் வாரிசுகளில் பெரும்பாலானவர்கள் பகுத்தறிந்து கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாகவே வளர்வதைப் பார்க்கிறோம்.
  • இவர்களுக்கிருக்கும் முக்கியமான பிரச்சனை கட்டுப்பாடு.  'என்னை யாரும் கட்டுப்படுத்தக்கூடாது. நான் தான்தோன்றியாக வாழப்பிறந்தவன்' என்றுச் சொல்லி, மதங்கள் மனிதர்களை கட்டுப்படுத்துவதாக நினைக்கிறார்கள். இவர்களை கட்டுப்படுத்த யாரும் தேவையில்லை என்று நினைத்துக்கொண்டால் அப்படியே இருந்துவிட்டு போக வேண்டியதுதானே. கட்டுப்பாடாக வாழ நினைப்பவனை ஏன் நொட்டை சொல்ல வேண்டும்?
  • கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால், பலர் காட்டுமிராண்டிகளாக போயிருப்பார்கள். 
கடவுள் நம்பிக்கையையும், வேத வாக்கையும் சரியாக கடைபிடிப்பவர்கள் நிச்சயம் மதவாத செயல்களில் ஈடுபட மாட்டார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் அவ்வாறென நிரூபித்துக்காட்டவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு வந்திருக்கிறது, நியாயவான்களாக இருக்கும்பட்சத்தில்.
பல தளங்களில் நான் சொன்னதையே இங்கும் பதிக்கிறேன்.
நான் மனிதனாக இருக்கக் காரணம் என் கடவுள் நம்பிக்கையே என்று திடமாக நம்புகிறேன். இந்த கடவுள் நம்பிக்கையிலிருந்து மாறிவிட்டால் மிருகமாகிவிடுவேனோ என்று அச்சப்படுகிறேன்.
அதைவிட, எனக்கும் கடவுள் நம்பிக்கை அற்றுப்போனால், இப்போதிருக்கும் 'கடவுள் நம்பிக்கையில்லாதவன்' என்று சொல்லிக் கொள்பவர்களைப் போல அடுத்தவர்களை குறை சொல்லியே காலம் கடத்த வேண்டுமோ என்ற பயமே அதிகமாக இருக்கிறது. நான் இங்கு முன்மாதிரியாகவே இருக்க எண்ணுகிறேன். அது கடவுள் நம்பிக்கையாளனுக்கான முன்மாதிரியா அல்லது நம்பிக்கை இல்லாதவனுக்கா என்பதற்கு அவர்களுடைய வாழ்வையே பார்க்க வேண்டியிருக்கிறது. இதுவரை பார்த்த வரையில் கடவுள் நம்பிக்கையாளனுக்கு முன்மாதிரியாக வாழ்ந்துவிடவே ஆசைப்படுகிறேன். ஏனென்றால் கடவுள் நம்பிக்கையாளனை விட நம்பிக்கை இல்லாதவன்  என்று சொல்லிக்கொள்பவன் போலி வேஷம் போட்டுச் செய்யும் மதவாதமே மிகவும் கொடியதாகத் தெரிகிறது.

மனிதர்களுக்கிடையே கடவுள் பெயரால் துவேஷத்தைப் பரப்பும் அனைவரும்  மதவாதிகளே. அது, கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொண்டு பரப்பினாலும் சரியே.


முக்கிய டிஸ்கி: உண்மையில் மூட நம்பிக்கையை எதிர்க்கும் பல சகோதரர்கள், பதிவுலகிலும், அதற்கு வெளியிலும் எனக்கு நட்பாய் இருக்கிறார்கள். அவர்களிடம் நானும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

Nov 16, 2009

வந்தேமாதரமும் எம்.எஃப்.ஹூசைனும் - இரு தோழமை பதிவுகள்


இந்துக் கடவுள்களில் ஒன்றான கலைவாணியை நிர்வாண ஓவியமாக வரைந்ததற்காக 2006ம் ஆண்டு ஓவியர் எம்.எஃப்.ஹூசைன் நாடு கடத்தப்பட்டார். அதாவது அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாதுகாப்புத்துறையால் அறிவுருத்தப்பட்டார்.  இப்போது இந்தியா திரும்ப இருக்கும் அவரை எதிர்க்க சில இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. 

இந்தியப் பன்முகச்சமூகத்தில் ஒரு மதத்தை சார்ந்தவர்கள் வணங்கும் கடவுள்களில் ஒன்றை நிர்வாண ஓவிமாகவோ சிலையாகவோ வடிப்பதென்பது கண்டிக்கத்தக்கது, ஒறுமைப்பாட்டிற்கு எதிரானது.  இத்தகைய குற்றத்தைச்செய்தவர் எந்த மதத்தவரானாலும் குற்றவாளியே, குறிப்பாக மாற்று மதத்தை சார்ந்தவர் அதைச்செய்யும் போது கண்டித்து அடக்குவதே சரியான தீர்வாகவும், பன்முகத்தன்மை கொண்ட சமுதாயத்தின் ஒற்றுமையை வழுப்படுத்துவதாகவும் அமையும். நாம் நியாயவான்களாக இருக்கும்பட்சத்தில், நீதி வழியில் போராடி தண்டனை பெற்றுத்தருவதும் அவசிமாகிறது. இல்லையென்றால் குற்றம்சாட்டப்பட்டவரை திட்டி தீர்ப்பதோ, கொலைமிரட்டல் விடுத்து நாடு கடத்துவதோ அல்லது ஓவியம் வரைந்த அவனது கைகளை காவு கேட்பதோ கூட அருவருப்போடு ஏற்றுக்கொள்ளப்படலாம். அதைவிடுத்து, (அல்லது அதையும் செய்துவிட்டு) அவர் சார்ந்திருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கும் (மதக் கொள்கைக்குட்பட்டு இச்செயலை அவர் செய்யாதவரை) மதத்தையும் அதன் மரியாதைக்குரியவர்களையும் இழிவுபடுத்துவதென்பது வெறுக்கத்தக்கது, கண்டிக்கத்தக்கது. 

தோழர் மாதவராஜ் பதிவில் சகோதரி நாஸியா சொல்வதுபோல, '
என்னை பொறுத்த‌ வ‌ரையில் இன்னொருவ‌ரின் ந‌ம்பிக்கை சார்ந்த விஷ‌ய‌ங‌க‌ளை கொச்சை ப‌டுத்த யாருக்கும் உரிமை இல்லை.. அது த‌ஸ்லிமாவாக‌ இருந்தாலும் ச‌ரி, ஹூசஸைனாக‌ இருந்தாலும் ச‌ரி. நிச்சயமாக அது கண்டிக்க்கத்தக்கது.'
இஸ்லாத்தில் சிலை கூடாது, உருவ ஓவியமும் கூடாது. கூடாததை வரைந்த ஓவியர் முஸ்லீமாகவும் இருக்க முடியாது. இஸ்லாமியர்களோ, இஸ்லாமிய நாடுகளோ எம்.எஃப்.ஹூசைனுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. இருந்தும், இஸ்லாமியர்கள் தன் உயிரினும் மேலாக மதிக்கும் முகம்மது நபியை அவமதித்து வார்த்தைகள் விழுவது இந்தியப்பன்முகச் சமூகத்திற்கு அழகில்லை. எங்கு அடித்தால் எதிரிக்கு வலிக்கும் என்று குருட்டுக் கணிப்பு செய்திருக்கிறார்கள். இங்கு எதிரியாக ஹூசைனை சொல்லவில்லை என்பதை கவனிக்க. மதம் சாராத ஒருவனின் 'சுயவிளம்பர' செயலுக்காக ஒரு மதத்தை இழிவுபடுத்துவதென்பது எந்த கோணத்தின் நியாயமாக பார்த்தாலும் அநியாயமே. இவ்வாறு செய்வதன் மூலம் இத்தகைய செயல்கள் நின்றுவிடும் என்று நம்பினால், அது முற்றிலும் தவறு. இத்தகைய இழிவுபடுத்துதலுக்கு எதிர்மறை விழைவுகளை ஏற்படுத்தும் ஆற்றலே அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

வந்தேமாதரம் என்ற பாடலை இஸ்லாமியர்கள் பாடவேண்டாம் என்று ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் என்ற அமைப்பு தனது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

முதலில் ஒன்றை தெளிவுபடுத்துகிறேன், இந்த 'ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த்' இந்திய இஸ்லாமியர்களின் பிரதிநிதி அல்ல. இஸ்லாமியர்கள் எதைப்பாட வேண்டும், எதைக்கூடாது என்று இவர்கள் தீர்மானம் நிறைவேற்றுவதால் அது ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் தீர்மானமாகிவிடாது. இஸ்லாமியர்களின் இறை வேதமான குர்ஆனிலும், வழிகாட்டியான நபிமொழியிலுமே இதற்கான ஆதாரத்தை தேட வேண்டும். இது ஒருபுறம் இருந்தாலும், சர்ச்சைக்குரிய 'வந்தேமாதரம்' என்ற வங்காள, சமஸ்கிருதப்பாடலை தவிர்ப்பதே நல்லது. ஏனென்றால், அந்தப்பாடலில் வரும் 'தாய் மண்ணே வணக்கம்' என்ற சொல்லும் அதை தொடர்ந்து வரும் வரிகளில் இந்துக்களின் கடவுள்களான துர்கையோடும் சரஸ்வதியோடும் இந்திய மண் ஒப்பிடப்பட்டுள்ளதுமே காரணம். மதச்சார்பற்ற இந்திய நாட்டில் ஒரு மதக்கடவுளை மட்டுமே வணங்குவதாக சொல்லும் இந்தப்பாடலை பிற மதத்தவர்களையும் பாடச் சொல்லி கட்டாயப்படுத்துவது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இத்தகைய விஷம பிரச்சாரத்தை மதவாத அமைப்புகள் தொடர்ந்து செய்துவருவது, சமூக ஒற்றுமையை சீர்கெடுக்கும் என்பதை தெரிந்திருந்தும் ஆட்சி அரசியலுக்காக இவற்றை மீண்டும் மீண்டும் அரங்கேற்றிவருகின்றனர்.

இஸ்லாமியர்களின் முதல் நம்பிக்கையும் அவர்கள் முஸ்லீமாக இருப்பதற்கு தகுதியும் அல்லாஹ்'வை மட்டுமே வணக்கத்திற்குரியவனாக ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது. அவனைத்தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை, வணங்கக்கூடாது. அல்லாஹ்'வுக்கு வேறு எதையும்/யாரையும் இணைவைத்தல் கூடாது.  அது தாயாக, நாடாக, மண்ணாக ஏன்.. இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக மதிப்பு வைத்திருக்கக்கூடிய முஹம்மது நபியாக இருந்தாலும் சரியே. ஒருவன் அல்லாஹ்வைத்தவிர மற்ற ஒன்றை வணக்குவானேயானால், இணைவைப்பானேயானால், அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டவனாகவே கருதப்படுவான். வணக்கத்திற்குரியதாக மண்ணையும், அதற்கு இணையான துர்கையும் சரஸ்வதியும் இணையாக சொல்லப்படும் இந்தப்பாடலை கட்டாயம் பாடியே ஆக வேண்டும் என்று இஸ்லாமியர்களை வற்புறுத்துபவர்கள், இஸ்லாமியர்களை கட்டாய மத மாற்றம் செய்கிறார்கள் / தூண்டுகிறார்கள் என்று சொல்வதே சரியாகும். கிட்டத்தட்ட அவர்களுடைய எண்ணமும் அதுவே. 

இந்தியனாக இருப்பதற்கு தகுதி வந்தேமாதரம் என்ற வங்காள, சமஸ்கிருதப்பாடலை பாடுவதில் மட்டுமே இருக்கிறதா? உதட்டில் தாய் மண்ணே வணக்கம் என்று பாடிக்கொண்டே இராணுவ ரகசியங்களையும் ஆயுதங்களையும் தீவிரவாதிகளுக்கும் அதை ஊக்குவிக்கும் நாடுகளுக்கும் விற்பனை செய்வதைக் காட்டிலும் இந்தப்பாடலை பாடாமல் இருந்துவிடுவதில் சிறந்த நாட்டுப்பற்று இருக்கிறது என்றே தோன்றுகிறது. ஏதோ ஒரு பாடல்தான் நாட்டுப்பற்றை தீர்மானிக்கிறது என்றால், இந்தியப் பன்முகச்சமூகத்தில் ஒரு சமுதாயத்தவரின் நம்பிக்கைக்கு எதிரான இருக்கும் ஒரு பாடலை மாற்றி புதிய ஒன்றை 'நாட்டுப்பற்று பாடலாக' அறிவிப்பதில் என்ன கேடுவந்துவிடப்போகிறது. அல்லது பாடலே இல்லையென்றாலும் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. இதைவிட நாடு எதிர் நோக்கியிருக்கும் பிரச்சனைகள் ஏராளம்.


ஆட்சி அரசியலில் மதத்தை கலந்து விஷமேற்றுபவர்களாலேயே இத்தகைய சச்சரவுகள் முன் நின்று நடத்தப்படுகிறது. மட்டுமின்றி, மதச்சார்பற்ற ஒரு நாட்டின் நாட்டுப்பண்ணாகக்கூடிய தகுதி இந்தப்பாடலுக்கு இருக்கிறதா என்பதையும் அலசிப்பார்க்க வேண்டும். இப்பாடல் வரிகளில் உள்ள கருத்துக்களை விலக்கிவிட்டு பார்த்தால், இதை எழுதிய பன்கிம் சந்திர சட்டோபாத்யாய் என்ற வங்கமொழி நூலாசிரியர் ப்ரிட்டிஷ் அரசுப்பணியில் இருந்தவர். அனந்தமடம் என்ற மதநூலில்தான் இந்தப்பாடல் முதலில் இடம்பெற்றிருக்கிறது. ஜெகத்தாரி, காலி, துர்கா என் மூன்று கடவுள் உருவங்களாக பாரத மாதாவை பார்ப்பதாக ஆனந்தமாதாவில் எழுதியுள்ளார். மேலும் இந்நூலில் இஸ்லாமியர்களுக்கெதிரான துவேஷப்பரப்புரையை எழுதியிருக்கிறார்.  அவர் புழமை பெற்றிருந்த வங்காளம் மற்றும் சமஸ்கிருத மொழிகளை கலந்தே இதை எழுதியுள்ளார். மேலும் வாசிக்க... 

மதச்சார்பற்ற நாட்டின் நாட்டுப்பண்ணை எழுதும் தகுதி ஒரு மதச்சார்பற்றவருக்கே உண்டு அல்லது தன்னை மதச்சார்பற்றவராக சொல்லிக்கொள்பவரால் மத நம்பிக்கை சாராமல் எழுதப்படும் ஒரு பாடலை நாட்டுப்பாடலாக சொல்லிக்கொள்ளலாம். இத்தகை எந்த தகுதியும் இல்லாத ஒரு மதக்கடவுளை மட்டுமே முன்னிருத்தும் இந்தப்பாடலை நாட்டுப்பாடலாக ஏற்றுக்கொள்ள வேண்டாம், பாடவேண்டாம் என்று சீக்கியர்களும் தமது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய சுதந்திரத்திற்கு முன்பாகவே வந்தே மாதரம் பாடுவதை தேசிய தலைவர்கள் விட்டு விட்டார்கள். 1911ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில்தான் “ஜனகனமன…” என்று தொடங்கும் தேசிய கீதம் முதன் முதலாக பாடப்பட்டது.

இந்நிலையில் 1923ம் ஆண்டு காக்கி நாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த விஷ்ணு திகம்பர் பலுங்கர் என்பவர் இந்தப் பாடலைப் பாட முயன்றார். அப்போது சபையில் இருந்த மௌலானா முஹம்மது, “இது இஸ்லாத்திற்கு எதிரான பாடல். அதனால் இதைப் பாட அனுமதிக்க முடியாது…” என தடுத்தார்.

முஹம்மது அந்தப் பாடலை பாடக்கூடாது என்று தடுத்ததற்கு நியாயமான காரணங்கள் இருந்தன.
1. காங்கிரஸ் கட்சி வந்தே மாதரம் பாடலுக்கு விடை கொடுத்து விட்டுத்தான் “ஜனகனமன…” பாடலை 1911ல் எடுத்துக் கொண்டது.

2. 1922ல் அல்லாமா முஹம்மது இக்பா ன் “சாரே ஜஹான்ஸே அச்சா… ஹிந்துஸ் தான் ஹமாரா…” என்ற பாடலை காங்கிரஸ் துணை தேசிய கீதமாக ஏற்றுக் கொண்டது. (ஆதாரம் : ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேசிய பொதுச் செயலாளர் ஹொ.வெ. சேஷாத்திரி எழுதிய தேசிய பிரிவினையின் சோக வரலாறு. பக்கம் 169).
மேலும் வாசிக்க...

மேலே அலசப்பட்ட இரண்டு சச்சரவுகளுக்கும் சூத்திரதாரியான, உருவ வழிபாடு இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. பாடல், இசை வெறுக்கப்பட்டிருக்கிறது.

Nov 4, 2009

எம்.ஆர்.ராதா, தொலைக்காட்சி, பர்தா - ஜிகர்தண்டா

நடிகர் எம்.ஆர். ராதா பற்றிய கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி கேட்டேன். அதில் எம்.ஆர்.ராதா மலேசிய மேடையில் பேசியதன் ஒரு பகுதியை ஒலிபரப்பியிருந்தார்கள். கேடுகெட்ட அயோக்கியர்கள், வரி ஏய்ப்பு செய்பவர்கள்  என்று சினிமாக்காரர்களை திட்டுகிறார். கேட்டுப்பாருங்கள்...
எம்.ஆர்.ராதாவுடைய முழு உரையும் இங்கே கிடக்கிறது. அதில் அரசியல்வாதிகளையும் விமர்சிப்பதோடு, எம்.ஜி.ராமசந்திரனை தான் சுட்ட கதையையும் விளக்குகிறார்.

இன்று ஆதித்யாவில் விவேக் சேலையில் நடித்த ஒரு காமெடியை பார்க்க நேரிட்டது. சகிக்கவில்லை... தினமலர் விவகாரத்திற்குப் பிறகு விவேக் காமெடியை ரசிக்க முடிவதில்லை. திரைக்கு வெளியே நடிக்கும் போது, சக நடிகைகளுக்கு கோயில் கட்டி கும்பிடச் சொல்லும் விவேக், திரையில் பெண் வேடத்தில் அல்லது முற்போக்குவாதி வேடத்தில் வந்து பெண்களை (சக நடிகைகளையும்) கொச்சைப்படுத்தும் போது டிவியை உடைத்துவிடலாமா என்று ஆத்திரம் வருகிறது.

வீட்டிற்கு ஒரு தொலைக்காட்சிப்பெட்டி இலவசமாக கொடுத்து, மானும் மயிலும் ஆடுவதை கண்டு கைகொட்டி சிரித்தும், திருமதி செல்வத்தை பார்த்து கண்ணீர்விட்டு அழுதும் கிடக்கச் செய்துவிட்டார்கள். மெகா தொடருக்கு அப்பால் நம்முடைய அறிவு செல்லக்கூடாது என்பதில் தீர்மானமாய் இருப்பதன் மூலம், நாட்டு மக்களுக்கு நடப்பு அரசியலை பற்றிய விமர்சனம் / மாற்றுக்கருத்து எழாதவாறு கவனமாக பார்த்துக்கொள்கிறார்கள். எதிர் கட்சிகள் நடத்தும் தொலைக்காட்சி செய்திகளுக்கும் தன் தலைவர்களுடைய அரை மணி நேர அறிக்கையை வாசிப்பதற்கே நேரம் கிடைப்பதில்லை. அநியாயம்.. நமது பொழுதை எந்த வழியில் போக்க வேண்டும் என்பதை அரசே தீர்மானித்து நமது அறிவை மழுங்கச்செய்கிறது.

நண்பர் நர்சிம், கோலங்கள் தொடரின் ஒரு காட்சிக்காக அதன் இயக்குனரை பாராட்டி ஒரு பதிவிட்டிருந்தார். நல்ல காட்சியமைப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், தொடரை தொடர்ந்து பார்க்கும் யாருக்கும் 'அந்த' நிகழ்வு நினைவு வந்திருக்க வாய்ப்பில்லை. அண்டை நாட்டில் ஒரு இனம் அழிக்கப்பட்ட அண்மைய துர் நிகழ்வு, மெகா சீரியல் பார்க்கும் பெண்களில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்பது சந்தேகமே.

சமையில் எரிவாயுவிற்கு வழங்கிவந்த மானியத்தொகையை தமிழக அரசு விலக்கிக்கொண்டுள்ளது. பாதகமில்லை.. தேர்தல் நெருங்கும் போது முற்றிலும் இலவசமாகக்கூட தருவார்கள். அது கிடக்கட்டும், எரிவாயு சிலிண்டர் காலாவதியாகும் தேதி ஒவ்வொரு சிலிண்டரிலும் அச்சிடப்பட்டிருக்கும். C10 என்றிருந்தால், மூன்றாம் காலாண்டு 2010ல் காலாவதியாகிறது என்று கொள்ளவேண்டும். அதாவது. A B C D முறையே முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் காலாண்டை குறிக்கிறது. 10 என்பது வருடத்தை குறிக்கிறது என்பது தெரிந்திருக்கும். காலாவதி (எக்ஸ்பயர்டு) ஆன பிறகு சிலிண்டரை பாவிக்காது திரும்ப கொடுத்துவிடுவதன் மூலம் விபத்துக்களை தவிர்க்கலாம்.

சென்றவாரத்தின் ஒரேநாளில் Wrong Turn 3, Rest Stop என்ற இரண்டு திரைப்படங்களை அடுத்தடுத்து பார்த்தேன். இரண்டுமே கானிபலிஸம் வகை. இரண்டையும் பார்த்து முடித்ததும் ஒரே திரைப்படம் பார்த்தது போன்ற எண்ணம். ஒரே மாதிரியான பழைய பிக்அப்,  பேசாத 'அதுகள்', பேசும் ஆயுதங்கள், நிலா வெளிச்ச இரவுகள் என நான் பார்த்த அனைத்து 'மனித மாமிச உண்ணி' திரைப்படங்களின் காட்சிப்படுத்துதலிலும் கதை அம்சத்திலும் எந்த வித்தியாசமும் காட்டப்பட்டதில்லை. இதே உணர்வு பல விஜய் திரைப்படங்களை பார்க்கும் போதும் ஏற்படுவதுண்டு. கார்க்கி அடிக்கவர வேண்டாம், நான் சொல்வது திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பை மட்டுமே. யார் மனதையும் புண்படுத்த அல்ல.

அவிய்ங்க ராசா, சென்னையில் தனக்கு வீடு கிடைக்காத கதையை பதிவிட்டிருக்கிறார். சாதி மத சிறுபான்மையினருக்கு பெருநகரங்களில் வாடகைக்கு வீடு கொடுக்க யாரும் தயாராயில்லை. இவர்களுக்கு வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்படுவதை பற்றிய கவலை, குறைந்தபட்சம் அனுதாபம் கூட இங்கே இல்லை. போலி தேசியம் பேசுகிறார்கள், கடந்த கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வெற்றிபெற பிராத்தனை செய்த விளையாட்டு வெறியர்களான போலி தேசியவாதிகள்.

பஹ்ரைன் நாட்டை சார்ந்த ருகையா அல் கஸ்ரா என்ற பெண்,  ஹிஜாப்-பர்தா (தலை முதல் கால் வரை மறைக்கப்பட்ட உடை) அணிந்து ஒலிம்பிக் 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்திருக்கிறார்.  இஸ்லாம், பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கவில்லை என்று சொல்லி மற்றவர் நம்பிக்கையில் மூக்கை நுழைந்து போலி மதசார்பின்மை பேசும் ‘மதவாதிகளின்’ முகத்தில் கரியை பூசியிருக்கிறார். பர்தா பெண்களுடைய முன்னேற்றத்திற்கும், விளையாட்டு துறையில் வெற்றி பெறவும் தடையாக இருப்பதில்லை என்பதை ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்று நிரூபித்திருக்கிறார். பெண்களின் அரைகுறை ஆடை ஆண்களின் கழுகுப்பார்வைக்கான விருந்தேயன்றி, அது அவர்களுடைய நேர்மையான முன்னேற்றத்திற்கு அல்ல என்பதை போலி பெண்ணியவாதிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். பொது இடங்களில் ஆடை குறைப்பதில்தான் பெண் சுதந்திரம் அடங்கியிருக்கிறது என்ற பிம்பத்தை உடைத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
Rukaiya2 Rukaiya1

டிஸ்கி: இது மீள்பதிவு இல்லீங்க... :(

Sep 28, 2009

இஸ்லாமியர்களும் தீவிரவாதமும்

"அமைதி" என்ற ஒற்றை வார்த்தையிலிருந்து பிறந்த சொல்லையே தனது மதத்தின் பெயராகக்கொண்ட இஸ்லாமியர்களுக்கெதிரான பிரச்சாரத்தில் "இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற சொல்லாடலுக்கான எண்ணம் / திட்டம் ஒரளவு வெற்றி பெற்றுவிட்டது என்றே சொல்லவேண்டும். நீண்டகாலமாக கட்டவிழ்த்து விடப்படும் இப்பிரச்சாரத்தின் பெரும் பங்கு ஊடகத்துறையையே சாரும் என்பதையும் மறுக்க முடியாது. பொதுஅறிவு வளர்க்க வேண்டிய பத்திரிக்கை, தொலைக்காட்சி, திரைப்படம் போன்றவையே இந்த பாதகச்செயலை முன்னின்று செய்வது துரதிஷ்டவசமானது. பொழுதுபோக்கு சாதனமாக திரைப்படம் பார்க்கப்பட வேண்டும் என்றாலும், பார்க்கப்பட்டாலும், அதற்கு மிகப்பெரிய (அழிவு) ஆக்கசக்தி உண்டு என்பதையும், உளவியல் ரீதியில் நிச்சயம் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதையும் சமீபத்திய திரைப்பட விமர்சனங்களில் பார்க்க முடிகிறது. இத்திரைப்பட விமர்சனமானது, படைப்பை விமர்சித்து, படைப்பாளனை விமர்சித்து, தற்போது விமர்சகனை விமர்சிக்கும் நிலையில் நிற்கிறது. இந்நிலையில் இரண்டு விஷயங்களை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்று; பொழுதுபோக்கு சாதனமான திரைப்படம், முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்று சொல்லக்கூடிய இணைய நண்பர்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை நேரடியாகக் காண முடிவது. (தவிர, எந்த முற்போக்கு சிந்தனையுமில்லாமல், பொழுதுபோக்கிற்கு திரைப்படம் காண வரும் ஒருவனின் உளவியல் பாதிப்புக்களை அவதானிக்க முடியாது, அது எத்தன்மை கொண்டதாகவும் இருக்கலாம்.) இரண்டாவது; இணையம் என்ற ஊடக வெளியும், முன்னெப்போதையும் விட தற்போது மிக வீரியமாக துவேஷப்பரப்புரையை நிகழ்த்தி வருவது. அதற்கான மிக முக்கிய காரணமாக நான் விளங்குவது, மற்ற ஊடகங்களைப்போல இங்கு முகம் காட்டவேண்டியதில்லை என்பதே. மேலும், இப்பதிவு திரைப்பட விமர்சனமோ, விமர்சக விமர்சனமோ இல்லையாதலால், இது… இங்கேயே கிடக்க.

k1057276
"இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற சொல்லாடல் இஸ்லாமியர்களுக்கு கசப்பு தருவது எந்தளவு உண்மையோ அதே அளவு உண்மையே தீவிரவாத விகிதாச்சாரத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக இருப்பதும். அமைதியை போதிக்கும் இஸ்லாத்தில், சிலரது இத்தகைய தீவிர நடவடிக்கைகள், இஸ்லாத்தை காக்கும் என்பதோ, அதன் வளர்ச்சிக்கு உதவும் என்பதோ எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல, வரலாற்றில் இதுவரை நிரூபிக்க முடியாததும் கூட. அமைதியை அமைதி எனச் சொல்லும், அமைதியாய் வாழ்ந்து காட்டும் முயற்சியும் இதனால் சாத்தியப்படாமல் போகிறது என்பதே உண்மை. வன்முறையால் அவர்கள் தமக்குத்தாமே 'கபர்' குழிபறித்துக்கொள்ளவதோடு, இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் தடையாகிறார்கள் என்பதை உணரவேண்டும். வன்முறையால் எதையும் சாதிக்கலாம் என்பது இஸ்லாமிய சிந்தனை அல்ல. வன்முறையால் வளர்ந்த சித்தாந்தம் காலப்போக்கில் மக்கிக்போன வரலாறுகளைப் பார்க்க முடிகிறது. இத்தகைய செயல்களாலேயே, இஸ்லாம் போதிக்கும் முறைப்படி, 'தன்னை படைத்தவனுக்கு நன்றி செலுத்தி, அமைதியாய் வாழும்' பெரும்பான்மை முஸ்லீம்களும், '“என்னடா! எங்க குண்டு வைக்கலாம்ன்னு பிளான் செய்யறீங்களா?”' போன்ற அருவருக்கத்தக்க கேளிச் சொற்களால் கூனிக்குறுகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இஸ்லாமியன் பெயரைக்கேட்டாலே 'வீடு காலி இல்லை' என்பது இன்றைய பெரு நகர சகோதரர்களின் டெம்ப்ளேட் பதிலாகிவிட்டது. தீவிரவாதத்தின் ஒருசில எதிர்வினைகளான இவற்றையும் மனச் சங்கடங்களோடு எதிர்கொள்ள வேண்டியிருப்பது, ஆண்டாண்டு காலமாக சகோதர சமூகத்தில் 'மாமு, மச்சான்' எனப்பழகிவந்த முஸ்லீம்களுக்கு வேதனையளிக்கிறது.

இஸ்லாத்தை பற்றிய தவறான உருவகத்தை மாற்ற வேண்டிய கடமை, பொறுப்பு, இஸ்லாமியர்களுக்கே இருக்கிறது. பேச்சிலும் எழுத்திலும், குர்ஆன் மற்றும் நபிமொழி ஆதாரங்களை எடுத்துக்காட்டி "இஸ்லாம் அமைதி மார்க்கம்" எனச் சொல்லிவிடுவதால் மட்டுமே, அது உண்மை என்பதை நிரூபித்துவிட முடியாது. இஸ்லாம் கூறும் அமைதி முறையை, மனித நேயத்தை, சீறிய வாழ்க்கை நெறியை பின்பற்றி வாழ்ந்து காட்டுவதால் மட்டுமே, இஸ்லாம், தீவீரவாதத்தை, பயங்கரவாதத்தை வெறுக்கிறது, இஸ்லாத்திற்கும் அதற்கும் துளியளவும் தொடர்பில்லை என்பதை நிரூபிக்க முடியும். அதன் மூலமே, சிலரது செய்கைக்கு முழு சமூகமும் பொறுப்பாகாது என்ற புரிதலுடனான, மாற்று மத சகோதரர்களின் நம்பிக்கையையும் நல்மதிப்பையும் பெறமுடியும். இஸ்லாமியர்களுக்கெதிரான மிகமோசமான சூழல் நிலவும் இந்தியப் பன்முகச் சமூகத்தில், இவற்றை சாத்தியப்படுத்துவது மிகக்கடினம் என்றாலும், செய்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய சிறுபான்மையினர் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

books_terrorism_facts_myth_ தீவிரவாதம் என்பது நாடு, இனம், மதம் (சார்பு, சார்பற்ற), மொழி என்ற அனைத்திற்கும் அப்பாற்பட்டது என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் பலமுறை  உரக்கச்சொல்லியும் பெரும்பாலானவர்கள் காதுகளில் விழுவதில்லை. நாடு, இனம், மதம் மற்றும் மொழி அடையாளங்களைச் சொல்லி தீவிரவாதத்தை தூண்டும் (i), அவற்றால் உந்தப்பட்டு தீவிரவாதம் செய்யும் (ii), தீவிரவாதத்திற்கு (நேரடி தொடர்பில்லை எனினும்) வர்க்க அடையாளங்கள் பூசும் (iii) அனைவரும் குற்றவாளிகளே, தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டியவர்களே. இவை மூன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையது போலவே சங்கிலித்தொடரானதும் கூட. 

சிறுவயது முதல் கற்பித்து வளர்க்கப்படும் பல கருத்துக்களே மனிதர்களிடத்தில் ஆழமான நம்பிக்கைகளாக வேர் விடுகின்றன. (என்னை அப்படியெல்லாம் வளர்க்கவில்லை என்று நாம் இப்போதும் சொல்லவதுண்டு.) அசோகர் மரம் நட்டார், பாலம் கட்டினார் என்பதாகச் சொல்லும் ஆரம்பப் பள்ளிக்கல்வியின் வரலாறு, முகலாய மன்னரின் பதின்மூன்று மனைவிகளையும், கஜினியின் பதின்நான்கு படையெடுப்பையும் மட்டும் சொல்லி ஒருதலைபட்ச இஸ்லாமியர்களுக்கெதிரான துவேஷப்பரப்புரையை தொடங்குகிறது. இத்தகைய விஷவேர்கள் பிற்பாடு, "இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது" எனும் பொய் கூற்றை பகுத்தறியாமல் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை ஏற்படுத்திவிடுகிறது. அதுபோலவே, "இஸ்லாமியர்களுக்கு தேசப்பற்று இல்லை" எனும் விஷமத்திற்கு வெள்ளையின எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த இஸ்லாமியர்களின் வரலாறு மறைக்கப்படுவதும் காரணமாக அமைந்து விடுகிறது. இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் (கடவுள் நம்பிக்கை, வழிபாடு, நோன்பு, தானம் மற்றும்) கடைசியான ஹஜ் எனப்படும் புனித காபா செல்லும் கடமையை எந்த முகலாய மன்னரும் நிறைவேற்றிதாக குறிப்பு இல்லை. இஸ்லாத்தின் கடமையையே செய்யத்தவறிய முகலாய மன்னர்கள், இஸ்லாத்தை பரப்ப வாளேந்தியிருப்பார்கள் என்பதை பகுத்தறிவால் ஏற்க முடியவில்லை. வெள்ளையர்களுக்கு முன்பு நாடு பிடிக்க வந்தவர்கள், 600 ஆண்டுகளுக்கு முன்பான அகண்ட இந்தியாவை 1000 ஆண்டுகளுக்கும் மேலாக முழுதுமாக ஆண்டபோதே, இஸ்லாத்தை வன்முறையால் பரப்ப நினைத்திருக்க சாத்தியம் இல்லை என்பதற்கு இந்த சமூகம் இப்போதும் சிறுபான்மையாக இருப்பதே சாட்சி. இவர்கள், வாணிபத்திற்காக வந்தவர்களின் வாழ்க்கை முறை மற்றும் சாதீய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத மனிதநேயத்தை பார்த்து மனம் மாறி இஸ்லாத்தை தழுவியதனாலேயே இன்றளவும் இஸ்லாம் எனும் கயிற்றை பற்றிப்பிடித்து கொண்டிருப்பதை காணலாம். 

அது நிற்க... வணிக மையங்களிலும், இரயில் நிலையங்களிலும் வெடிகுண்டுகளை வீசி நூற்றுக்கணக்கில் உயிர்களைப் பறிப்பது நியாயம்தானா? விமானங்களைக் கடத்திப் பயங்கரவாதிகளை விடுவிக்கப் பணயம் வைப்பது இஸ்லாம் சார்ந்த பணிகளா? ஒரு பாவமும் செய்யாத பச்சிளங்குழந்தைகளும், பெண்களும் செத்து மடிவதை வேடிக்கை பார்க்கத்தானா இஸ்லாம் கூறுகிறது? இத்தகைய வன்முறைச் செயலுக்கெல்லாம் இஸ்லாத்தை பொதுப்படுத்தி நியாயம் சொல்வது சரியா? என்பது போன்ற பல கேள்விகள் எல்லோருக்கும் எழலாம். இவற்றிற்கெல்லாம் பதில்.
இல்லை... இல்லை.. இல்லை... இஸ்லாம் இதை கற்பிக்கவில்லை. வன்முறையை வெறுக்கும் மார்க்கம் இஸ்லாம். 'மனிதர்களிடம் நீதியுடனும் நேசத்துடனும் நடந்துகொள்ளுங்கள்' என்றுதான் முஹம்பது நபி சொல்லிச் சென்றிருக்கிறார்.

Godhra-Riots1ஒரு சிலரின் வன்செயலுக்கு அவர்களது மதத்தையோ, மதத்தை பின்பற்றும் மக்களையோ குற்றவாளியாக்குவது எந்த விதத்தில் நியாயமாகும்? குஜராத்தில் கொடுஞ்செயல் நிகழ்த்திய மோடி, பாபு பஜ்ரங்கி மற்றும் மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யாசிங் தாக்கூர்  போன்றோரால் ஒட்டு மொத்த இந்து சகோதரர்களையும் குற்றவாளியாக்கிப்பார்ப்பது எந்தளவு மடத்தனமோ, நியாயமில்லையோ... அதேபோல... இஸ்லாத்தின் பெயர் சொல்லும் சில தீவிரவாதிகளுக்காக மற்ற பெரும்பான்மை இஸ்லாமியர்களை குற்றஞ்சாட்டுவதும் அறிவிலித்தனம்.

எலி இருக்கும் இடத்தில் பூனை வருமாம்... எலியை விரட்ட மனிதனால் முடியாதா? எலியை கொல்ல, பூனை என்ற மிருகம் தான் வேண்டுமெனில், பூனையை கொல்ல, புலி வருவது அதைவிட ஆபத்தாச்சே. புலி என்ற மிருகத்திற்கு, சக மிருகமாகிய பூனை, மனிதன் என்ற வித்தியாசம் இல்லாமல், மனிதத்தையும் சேர்த்தே கொன்றுவிடுமே... எலியானாலும் புலியானாலும் மனிதர்கள் கைகோர்த்து காட்டுக்கு விரட்ட முடியாதா? மனிதர்கள் ஒன்றுபட்டால் மிருகங்களை விரட்டி விடலாமே.

எங்கோ செய்திகளில் கேட்பதையும், முகம் இல்லாதவர்களின் இணைய எழுத்தின் போலி குற்றச்சாட்டுகளையும், துவேஷத்தையும், கட்டுக்கதைகளையும் அப்படியே நம்பிவிடாமல், நம் அண்டை, எதிர் வீடுகளிலிருக்கும் மாற்று மத சகோதர்களை மனிதநேயத்துடன் கை கோர்த்து பார்ப்போம். நிச்சயம் என் அப்பாவி நண்பனால் இத்தகைய வன்செயல்களை ஈடுபடமுடியாது என்பதையும், எந்த கடவுள் கொள்கையும் அத்தகைய சமூக விரோதத்தை செய்யச்சொல்வதில்லை என்பதையும் உணர்ந்து கொள்வோம். மதத்திற்கு அப்பாற்பட்டவனாய் இருந்தாலும், பன்முகச் சமூகத்துடன் ஒன்றியிருக்கும் ஒருவனால் அச்சமூகத்தின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடமுடியாது என்பதை அனுபவித்து உணரலாம்.

தீவிரவாதத்திற்கு 'புறக்கணிப்பு' என்ற ஒற்றைச்சொல் தானே காரணமாக இருக்கிறது. தான், தன் இனம், மொழி, மதம் புறக்கணிக்கப்படுகிறது என்ற காரணம் தானே தீவிரவாதி உருவாக காரணியாகிறது.

சிலர் செய்யும் தவறுக்கு ஒரு சிறுபான்மைச் சமூகத்தையே புறந்தள்ளி ஒதுக்கிவிடாமல், 'மற்றவர்கள் செய்யும் தவறுக்கு நீ என்ன செய்வாய்' என்று தோளோடு கை கோர்த்து அரவணைத்து, அழைத்துச் செல்லவேண்டியது பெரும்பான்மையான ஒவ்வொருவரின் கடமையல்லவா? பயங்கரவாதத்தை வெறுக்கும் அனைவரும் ஒன்றுபட்டால், அதை முற்றிலுமாக ஒழித்துவிட முடியாதா? வாருங்கள்...
பயங்கரவாத ஒழிப்பில் கை கோர்ப்போம். மதவேறுபாடுகளை மறந்த மனிதநேயம் காப்போம்,.

Sep 22, 2009

மொ போல் ஒருவன்

கடைசியாக நான் சொந்த செலவில் பார்த்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. அதற்குப் பிறகு, ஒரு நண்பன் செலவில் சிவாஜி பார்க்கவைக்கப்பட்டேன். முன்னது சொசெசூ என்றால், இரண்டாவது அசெஆ. இதுவரை தனியாக திரையரங்கு செல்லாத நான், இப்படம் பார்க்க ஒரு நாளுக்கு முன்பே ஒரு இருக்கை முன்பதிவு செய்திருந்தேன். நேற்று திரையரங்கு சென்றிருந்த போது, கவ்ண்டரில் இரண்டு நாளுக்கான டிக்கெட்டும் விற்றுவிட்டதாக பலர் திரும்பி வந்தனர். எனக்கான டிக்கெட்டை மெஷினில் எடுத்துக்கொண்டு, அரங்கினுள் சென்றமர்ந்தேன். 15:30 க்கு ஆரம்பித்த படம் 17:15 க்கு முடிந்தது. இடையில் 10 நிமிட இடைவெளி. கூட்டிக்கழித்து பார்த்தால், பல இடங்களில் வெட்டப்பட்டுள்ளது தெளிவாகியது. ஏற்கனவே வெட்னஸ்டே பார்த்திருந்ததால், வெட்டல் வெளிச்சமாகியது. மாலையில் ஒரு பிறந்த நாள் விருந்தில் கலந்து கொண்டேன். மிக்ஸிங் சரியில்லை என்று பலருக்கும் வருத்தம். 22 மணிவாக்கில் வீடு வந்து இழுத்து போர்த்தி உறங்கிவிட்டேன்.

காசு கொடுத்து பார்த்ததற்காக விமர்சனம் பண்ணியாக வேண்டுமா? அது மட்டுமின்றி எனக்கு சினிமா விமர்சனம் வருவதில்லை. விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே, கண்ணில் ஆலிவ் ஆயில் ஊற்றி திரைப்படம் பார்ப்பதில்லை. பொழுது போனால் சரியே. ஆனாலும், ஒரு முயற்சி செய்து நிறை குறைகளைச் சொல்கிறேன்.

‘கமல் அசத்திவிட்டார்’ என்று சொல்ல,  அவர் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக நடித்துவிடவில்லை. அவர் ஏன் இந்தப் படத்தில் நடித்திருக்க வேண்டும், என்பதே பலரின் கேள்வி, என்னதும். புதனில் நஸ்ருத்தீன் ஷா நடிப்பை பார்த்தவர்களுக்கு இது பிரமாதமாக தெரியாது. அதே போல், நஸ்ருத்தின் ஷா, ஒலக நாயகன் ஆகிவிட முடியாது.

நிறை.
  • 1 1/2 மணிநேரம் பொழுது போனது தெரியவில்லை. கொடுத்த காசுக்கு பாதகமில்லை. (போன பொழுது, சற்று கவலையோடு போனது வேறு விஷயம்.)

குறைகள் அல்லது யதார்த்த மீறல்கள்.
  • வெற்று பைகளை பொது இடங்களில் வைப்பதாக சுற்றப்பட்ட காட்சியமைப்பு தேவையில்லாதது. அதே போல, பல இடங்களில் சுற்றியிருக்கிறார், காதிலும்.

  • மாடியில் ஏறும் போது, இஸ்லாமியர்களின் இறை வழிபாட்டு அழைப்பான ‘பாங்கு’ சொல்லப்படும். அது நேரம் தோராயமாக 8 - 9 மணியிருக்கலாம். அந்நேரத்தில் (காலை 6 லிருந்து உச்சி 12 வரை) ‘பாங்கு’ சொல்லப்படுவதில்லை.

  • 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்திற்கு பழிதீர்க்கவே 1998ல் கோவையில் குண்டுவைத்ததாக தீவிரவாதிக்கு கொசுவத்தி. (கமலுக்கும் தேசிய வியாதி?)

சில சந்தேகங்கள்.
  1. ஊடகத்துறையில், எல்லா பெண்களும் புகை பிடிக்கிறார்களா?பெண்களிடம் மைக்கை கொடுத்து, கேமரா பிடிப்பது தான் ஆண்கள் வேலையா?

  2. எல்லா கணவன்களும் மனைவியிடம் அடி வாங்குகிறார்களா?மனைவியிடம் அடிவாங்கும், எல்லா கணவன்களும் காவல்துறையில் புகார் செய்கிறார்களா?

  3. எல்லா வீட்டிலும் சந்தைக்குச் செல்வது கணவன்களா? காலையில் தக்காளி வாங்க சென்றவர், மாலையில் தான் வீடு திரும்புவாறா? மாலை வீடு திரும்ப இருப்பவர் ஏன் காலையே தக்காளி வாங்க வேண்டும்?

  4. எல்லா கணினி ஹேக்கர்களும் ஒரு மாதிரி தலையை ஆட்டி ஆட்டித்தான் பேசுவார்களா?

  5. எல்லா கணினி மேதைகளும், ஒரு முறை பாவித்த மடிக்கணினியை மறு முறை பாவிக்க மாட்டார்களா?

  6. வாங்கிய 6 கிலோ ஆர்டிஎக்ஸில், காவல் நிலையத்தில் வைத்தது போக மீதி எங்கே?

  7. ரிலையன்ஸில் போலி சிம் வாங்குவது எளிதா? 5 அல்லது 6 முறை தொலைபேசுவதற்கு, ஒரு பிஸ்னஸ் கார்ட் ஆல்பம் முழுவதும் சிம் கார்ட் வைத்திருப்பது ஏன்?

  8. வெடிகுண்டு தீவிரவாதிக்கு, வெடிகுண்டு தண்டனை, சரி. பிறப்புறுப்பில் கைவைத்த தீவிரவாதிக்கு? :-( தீவிரவாதத்திற்கு தீவிரவாதம் தான் தீர்வா? எனில், குறை எண். 3 ற்கும் இதற்கும் தொடர்புள்ளதா?  ஆம் எனில், ஒவ்வொரு காமன் மேனுக்காகவும் ஆர்டிஎக்ஸ், ரேஷன் கடையில் விற்பனை செய்ய வேண்டி வருமே... யு... ஸ்டுப்பிட் காமன் மேன்.

வெட்னஸ்டே பார்த்தவர்களும் ஒரு முறை பார்க்கலாம்.

மாறுபட்ட விமர்சனங்களுக்கு - உன்னைப் போல் ஒருவன் - வலையுலக விமர்சனங்களின் தொகுப்பு – உண்மைத்தமிழன்.


Sep 18, 2009

யானைக்கு மதம் பிடிக்கும், வாலுக்கு?

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. – குறள்.

மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும். – உரை.

என் நண்பர், எங்கள் ஊர்காரர், என் முந்நாள் தெருவாசி, கோபக்காரர் திருமிகு வால்பையன் என்ற அருண் அவர்கள், இஸ்லாத்தை பற்றி தெளிவுபடுத்த கேட்டிருந்தார். அவருக்கான ப்ரத்தியேக இடுகை. என் நிலையை அவருக்குத் தெளிவுபடுத்துவதால் எங்கள் நட்பு பலப்படும் என்பதாலேயே இந்த இடுகை. இதன் உள்அர்த்தங்கள் எங்கள் இருவருக்கும் தெரியும் என்பதால் கலகக்காரர்களை கண்டு பயமில்லை. என்ன வால் நான் சொல்றது?

"இஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் குறித்து இன்னும் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் விமர்சிக்கும் தகுதிக்காகவாவது படித்து தெரிந்துகொள்ளுங்கள், பின்பு விவாதிக்கலாம்" என்று நான் சொன்னதற்கு...

வால்பையன், "படித்து தெரிந்து கொள்வதற்கு பதில் இப்போது உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன்! படி படி என்று சொல்லமால் நீங்கள் படித்ததை தெளிவுற சொல்லி கொடுங்களேன்!" என்று கேட்டிருந்தார்.

மிக்க மகிழ்ச்சி வால், இந்த தெளிவு ஒரு பொருளின் மீது விமர்சனத்தை வைக்கும் முன்பு இருந்திருக்க வேண்டும். பிழையான கருத்தை, ஆதாரமில்லாத குற்றச்சாட்டை அவையில் வைக்கும் முன்பு, அதை பாவிப்பவர்களின் புத்தகங்களை படித்தோ அல்லது நண்பர்களிடம் கேட்டோ தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பது தான் நான் சொன்னது. இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு, அதை கற்றுத்தேர்ந்த நம் பரஸ்பர நண்பர் அ.மு.செய்யது மற்றும் தேடிப்படித்த நான் இருக்கிறேன். இஸ்லாத்தை பற்றிய சந்தேகத்தை எந்நேரமும் எப்படியும் கேட்கலாம். (இரவு 12 மணிக்கு எழுப்பி, உன் பெயர் என்ன என்றும் என்னிடம் கேட்கலாம். மாத்ருபூதம் மாதிரி கோவப்படமாட்டேன். எனக்கு இப்போ நைட் ஷிஃப்ட் :-) ) உங்களுக்கான சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக எனது தேடல் இன்னும் அதிகமாகும் என்பதில் கூடுதல் மகிழ்ச்சியே. அது கிடக்கும்...

முஸ்லீம்கள் அரபியில் வழிபாடு நடத்துவதேன்? அல்லாவுக்கு அரபி மட்டும் தான் தெரியுமா?

முதலில் ஒரு விஷயம் புரிந்து கொள்ளுங்கள். எந்தவொரு மொழிக்கும் தனிச்சிறப்பென்பது கிடையாது. அதே போல எந்த மொழியும் தாழ்ந்த மொழி கிடையாது. அது காலத்தால் அழிந்த மொழியானாலும், பன்நெடுங்காலம் வாழ்ப்போகும் மொழியானாலும் சரியே. ஒரு மொழியில் புலமை பெற்றவர்கள், அதன் ஈர்ப்பினால், அம்மொழி மீது பற்று கொள்வது இயல்பே. அதேபோலத்தான் ஒருவர் தாய்மொழிப்பற்று கொள்வதும் இயற்கை, கடமை.

அரபி மொழி பேசுவர், அரபி அல்லாத மொழி பேசுபவரை விட உயர்ந்தவர் அல்லர். அரபி அல்லாத மொழி பேசுபவர், அரபி பேசுபவரைவிட உயர்ந்தவர் அல்லர் என்பது முஹம்மது நபியின் வாக்கு. (நபி = தூதர்)

வழிபாட்டிற்கான அழைப்பு அரபியில் 'அல்லாஹூ அக்பர்...' என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். இதை தமிழில்,' இறைவன் மிகப்பெரியவன்... வழிபாட்டிற்கு வாருங்கள்...' என்பதாக மொழி மாற்றம் செய்யலாம். சரி... இதை தமிழிலேயே சொல்லலாமே.. என்று கேட்பீர்கள். இஸ்லாம், ஒரு குறிப்பிட்ட பிராந்திய மக்களின் மார்க்கம் இல்லை. உலகம் முழுமைக்குமான மார்க்கம். அரபுநாட்டில் இருக்கும் தமிழ், மலையாளம், தெலுகு, பெங்காளி மற்றும் இன்னபிறவற்றை பேச்சு மொழியாக் கொண்டவர்களையும் இறை வழிபாட்டிற்கு அழைக்க ஒரு பொதுமொழியான குர்ஆன் எழுதப்பட்டிருக்கும் அரபியிலேயே 'பாங்கு' எனப்படும் வழிபாட்டிற்கான அழைப்பு விடுக்கப்படுகிறது. இதைக்கேட்பவர்கள் வழிபாட்டுதளம் சென்று தனது கடமையை நிறைவேற்றுகின்றனர். இறை வழிபாடும் அரபியிலேயே நிறைவேற்றப்படுவதற்கு காரணம் இதுவே. தனிப்பட்ட வேண்டுதல்களை அவரவருக்கு விருப்ப மொழியிலேயே கேட்டுக்கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே நிலைதான் மலையாளிகள் அல்லது நைஜீரியர்கள் தமிழ்நாடு வந்தாலும். மேலும், உலகெங்கும் வழிபாட்டை ஏற்று நடத்த, “அரபி கற்றவர், வயதில் மூத்தவர்” என்ற தகுதியே போதுமானது. அரபு நாட்டில் நானும் வழிபாட்டை முன்நின்று நடத்தியிருக்கிறேன். எனக்கு பிறகு வந்த அரபிகள் பின்னால் நின்று, என்னை தொடர்ந்தே இறைவனை வழிபட்டனர். (கருப்பர்கள், வெள்ளையர்கள், அரபிகள், அரபி அல்லாதோர் என்ற பாகுபாடும் இஸ்லாத்தில் இல்லை என்பதற்கும் இதை உதாரணமாக சொல்லலாம்) இறை வழிபாட்டிற்கு மொழி குறுக்கீடாகக்கூடாது என்பதே இதன் சாராம்சம்.

சரி… குர்ஆன் ஏன் அரபியில் இருக்க வேண்டும்? - முஹம்மது நபி அரபு நாட்டில் வாழ்ந்தார். அரபு மொழி பேசினார். அதனாலேயே அவருக்கு குர்ஆன் அரபி மொழியில் அருளப்பட்டது.

அன்னிய மொழியான அரபியை தமிழர் ஏன் படிக்க வேண்டும்? - மேற்சொன்ன ஒருமைப்பாட்டிற்குத்தான் அரபியை கற்றுக்கொள்கிறோம். மட்டுமல்லாது, அரபியில் உள்ள குர்ஆனை நேரடியாக விளங்கிக் கொள்வதற்காகவும்தான்.

அரபி தமிழர்கள் மீது திணிக்கப்படுகிறதே? - இல்லை. இது முற்றிலும் தவறான கருத்து. அரபி எந்த தமிழக பள்ளியிலும் கட்டாய பாடமில்லை. ஹிந்தி திணிப்பை எதிர்த்த நண்பர்கள், “ஹிந்தி தேவைப்படுவோர், விருப்பமுள்ளவர்கள் மட்டும் படிக்கட்டும்” என்று சொன்னது போல, விருப்பமுள்ளவர்கள் மட்டுமே, விருப்ப பாடமாக அரபியை படிக்கிறார்கள். அரபி படிக்கத்தெரியாத முஸ்லீம்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்கள், தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆனை படித்து விளங்கிக்கொள்கின்றனர். (குர்ஆன், பெரும்பாலான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்திலும் கூட) விரும்ப பாடமாக அரபி படிப்பவர்களிடம், ‘அது கூடாது, தமிழில் மட்டுமே படி’ என்று சொல்வதும் திணிப்புதான். அந்த திணிப்பு தவறென்றால், படிப்பதை தடுக்கும் இந்த திணிப்பும் தவறுதான்.

“இந்துக்கள் அனைவரும் சமஸ்கிருதத்தில் தான் பூஜை செய்ய வேண்டும் என்ற பார்பனீய சிந்தனையை ஒட்டி வருகிறது இது!, நான் பதிவில் கேட்டது போல் இஸ்லாமியர்களுக்கும் பார்பனீய சிந்தனை உள்ளதா?” – வால்பையன்.

வால், அரபியே முஸ்லீம்களின் பொது மொழியாக இருக்கிறது. அவ்வாறு இருப்பது எந்த ஒரு முஸ்லீமிற்கும் தொந்தரவில்லை என்பதால், அதையே அனைத்து முஸ்லீமும் விரும்புகின்றான். இதில் உங்களுக்கு ஏதாவது தொந்தரவு இருக்கிறதா? குறிப்பாக, கடவுளே இல்லை என்று சொல்லும் உங்களுக்கு, அவரை நம்புபவர்கள் எந்த மொழியில் வழிபாடு செய்தால் என்ன?

வால், நீங்களாக கேட்கும் கேள்விகளை விட, முகம் இல்லாதவர்கள் பத்தவைத்துவிட்டு போகும், முற்றிலும் அடிப்படை அறிவற்ற, ஆதாரமற்ற, கேவலமான கருத்துக்களைத்தான் ‘ஆமாம், எனக்கும் அதே கேள்வி உண்டு, நானும் அதுதான் நினைத்தேன்’ என்பதாக அதிகம் சொல்கிறீர்கள்.

எந்த சந்தேகம் என்றாலும் நேரடியாக கேட்கலாம். குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் சொல்லலாம்.

முன்பு உங்களுக்கு அதிகமான இஸ்லாமிய நண்பர்கள் இருந்ததாகவும் இப்போது குறைந்து விட்டதாகவும் அதனால் பிரியாணி வருவதில்லை என்றும் சொல்லியிருந்தீர்கள். ஆம்.. எனக்கும் தான். முன்பு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருந்தார்கள். இப்போது அவர்களுடைய தொடர்பில்லை. வேறென்ன… சோம்பேறித்தனம், அலுப்பு. ஆனால் எனக்கு சிறந்த நண்பர்கள் இப்போது கிடைத்துள்ளார்கள், வால்பையன், கோவியார், டக்ளஸ், கார்த்திகை பாண்டியன், லோகு, பாலா, ஜெகநாதன், மணிகண்டன், அப்துல்லா அண்ணன், செய்யது மற்றும் முகம் தெரியா பலர். உங்கள் குறை பிரியாணிதான் என்றால் நமது அடுத்த சந்திப்பில் என் வீட்டு பிரியாணி சாப்பிடலாம். ;)

  • இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் அபாண்டமாக குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிப்பதே நோக்கம். இவற்றை சொல்லாமல் விட்டால், தவறான எண்ணங்கள் வால்பையன் மனதிலும் உங்கள் மனதிலும் தங்கிவிட சாத்தியமுண்டு என்பதால் மட்டுமே. என் நண்பர்கள் மனதில் என்னைப்பற்றிய தவறாக எண்ணம் இருப்பதை நான் விரும்பவில்லை. எனக்கு கலங்கமில்லா நட்பு முக்கியம்.
  • மாற்று மத நண்பர்களின் கடவுள் கொள்கையையோ, அவர்களின் நம்பிக்கையையோ நான் எங்கும் கேள்வி எழுப்பியதில்லை. அது அவர்களின் நம்பிக்கை. என் பார்வையில் படுவதை கேள்வி கேட்க, கருத்து சொல்ல முழு உரிமை இருந்தும், நம் பண்பாடு, நாகரிகம் அதை செய்யச்சொல்லவில்லை.
  • அதற்காக இஸ்லாம் விமர்சனத்திற்கு அப்பார்பட்ட மார்க்கம் என்றும் சொல்லமாட்டேன். உங்கள் சந்தேகங்களை, தனி மெயிலில் அனுப்புங்கள். பதில் மெயிலிலோ அல்லது நீங்கள் விருப்பப்பட்டால், தனி இடுகையிலோ விவாதிப்போம்.

நன்றி.

Aug 20, 2009

கழிவறை நீதி - வள்ளுவன்

உங்கள் வீட்டு கழிவறை குழாய் ஓட்டையால் பொதுப்பாதை வரை நாற்றம் வருகிறது என்றால், அந்த பொதுப்பாதை பாவிக்கும் ஒருவனாகிய நான், இரண்டு செயல்கள் செய்யலாம். ஒன்று, உங்கள் வீட்டு கழிவறை ஓட்டையை அடைக்கச்சொல்லி உங்களிடம் கேட்பது, செய்து முடிக்கப்படும் வரை சட்டத்திற்குட்பட்ட எந்த செயலும் செய்ய எனக்கு அனுமதி உண்டு. அது என் உரிமை. மாறாக அறிவற்ற முறையில் பேசக்கூடாது என்பதை வள்ளுவர்,

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர். - குறள்

எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.

என்கிறார்.

இரண்டாவதான மூக்கை பொத்திக்கொண்டு அவ்வழியே நடந்து செல்வது, என் பொறுமையை காட்டுகிறது. பொதுப்பாதை வரை நாற்றம் வருவதை அறிந்து நீங்களே மாறிக்கொள்வது வரை நான் பொறுமையாக இருப்பதற்கு எந்த சட்டமும் தனிநபரும் குறுக்கிட முடியாது. பரஸ்பரம் இரு நபர்களுக்கிடையேயான புரிந்துணர்வு.

இதை,

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி யொழுகப் படும். - குறள்

பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.

என்று பொறுமையை இவ்வாறு புகழ்கிறார்.

என் வீட்டில் கழிவறை இல்லை என்பதற்காக, உங்களிடம் வந்து உன் வீட்டில் கழிவறை இருப்பதால் தான் பொதுப்பாதையில் நாற்றம் வருகிறது, உடனே அதை இடித்துவிடு என்று நான் சொல்வது, நியாயமாகுமா? கழிவறையால் தான் நாற்றம் வருகிறது என்பது ஏற்புடையதாக இருந்தாலும், குழாய் ஓட்டையை அடைக்கச் சொல்வது தானே நியாயம்.

கழிவறையை இடிக்கச்சொல்லி குற்றம் புரியாமல் இருக்கவேண்டும் என்பதை,

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை. - குறள்

குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

என்பதாகச் சொல்கிறார்.

கழிவறை என்பது கழிவிறக்கத்திற்கான பயன்பாட்டிற்கு மட்டுமே என்றாலும், கழிவறையை பயன்படுத்தினால் தான் சுகாதாரம், தனிமை போன்ற முழுப்பயனும் அறியக்கிடைக்கும். மாறாக கழிவறையை பயன்படுத்தாமலேயே காட்டிலோ அல்லது முட்டுச்சந்திலோ கழிவிறக்கலாம் என்று தன் குறையை நியாப்படுத்துவது அறுவுடைமையாகாது.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு. - குறள்

முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?.

என்று கேட்கிறார்.

கழிவறை ஓட்டை சிறியதாய் இருந்தாலும் அதை உடனே அடைப்பதன் மூலம் மற்றவருக்கு தொந்தரவு செய்யாதிருப்பது நலம். அதையும் அய்யன்,

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். - குறள்

பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

என்கிறார்.

கழிவறைக்காக சச்சரவு செய்வதைக் காட்டிலும், நட்புதான் பெரிது என்போரை அறிவுடையோர் என்கிறார் வள்ளுவர்.

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு. - குறள்

உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.

கழிவறையை இடிக்கச் சொல்வோரையும் மன்னித்து நட்பு பாராட்டல், வாழ்நாள் முழுக்க புகழ்மிக்கதாய் அமையும் என்கிறார்.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.

தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.

இறுதியாக,

அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்.

ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

நன்றி!!!

Aug 15, 2009

உண்மைத் தமிழனுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்

உண்மைத் தமிழன் அண்ணாச்சி, அவரது அண்ணன் சேரன் இயக்கிய பொக்கிஷம் என்ற திரைப்படத்தை முதல் ஷோ பார்த்துவிட்டு வந்து, செய்திகளை முந்தித்தரும் அவசரத்தில் அத்திரைப்படத்தை விமர்சனம் செய்துள்ளார், கூடவே ஒரு சமூகத்தையும்.
அண்ணாச்சி, நீங்கள் திரைவிமர்சனத்தோடு நின்றிருந்தால் நான் இந்த பதிவை எழுத வேண்டிய அவசியம் வந்திருக்காது. விமர்சனத்தின் இடையிடையே இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கம் எதிரான கருத்துகளை தனது வாசகர்கள் மனதில் நாசூக்காக ஏற்ற முயற்சிப்பது வருத்தமளிக்கிறது. இஸ்லாத்தை பின்பற்றும் நான், மற்ற கடவுள் நம்பிக்கையாளர்களையும் அவர்களது நம்பிக்கைகளையும் குறைகூறி ஏளனம் செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படாதோ / நியாயமில்லையோ, அதைவகையில் நீங்கள் செய்ததும். திரைப்பட விமர்சனத்தில் ஒரு சமூகத்தின் மீது உங்கள் வெறுப்பை காட்ட வேண்டிய அவசியம் என்ன அண்ணாச்சி? உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எங்கள் நம்பிக்கை எங்களுக்கு. ஒருவர் நம்பிகையில் மற்றவர் குறுக்கிடாதவரை இங்கே எந்த சச்சரவும் எழப்போவதில்லை.
உங்களது கருத்துக்களை மறுத்து விளக்க வேண்டிய கடமை எனக்குள்ளது. நீங்கள் சொல்லியுள்ள,
அந்த பர்தாவை அணிந்து கொண்டு ஒரு ஐந்து நிமிடம்கூட நம்மால் நிற்க முடியாது.. எப்படித்தான் அந்தப் பெண்கள் அணிகிறார்களோ தெரியவில்லை.
பர்தா மட்டுமல்ல, இன்னும் பெண்கள் அணியும் பலவற்றை உங்களால் அணியமுடியாது அண்ணாச்சி. அது பெண்களுக்கேயான உடல் அமைப்பிற்கானது, பாதுகாப்பிற்கானது. அந்நிய ஆண்களின் இச்சைப் பார்வையில் இருந்து தன்னையும் தன் உடலையும் பாதுகாத்துக் கொள்ள அவசியமாகிறது.
முதலில் பர்தா என்றால் என்ன என்று விளங்கிக் கொள்ளுங்கள். ஒரு பெண் தன் முகம் மற்றும் மணிக்கட்டிற்கு கீழான கை ஆகியவை தவிர மறைக்க வேண்டிய பாகங்களை ஆடையால் மறைப்பது. அந்த ஆடை, இறுக்கமானதாகவோ, உடல் பாகங்களை வெளிக்காட்டக்கூடிய மெல்லியதாகவோ இருக்கக் கூடாது. முக்கியமாக ஒரு ஆணின் உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்தாத உடையாக இருக்க வேண்டும். அது எந்த நிறத்திலும் இருக்கலாம். எதற்காக இந்த உடை? கண்ணியமான உடை, பெண்களுக்கு, ஆண்களிடத்தில் கண்ணியத்தை ஏற்படுத்துகிறது. அதனால் அவர்கள் சீண்டப்பட மாட்டார்கள், தொல்லைகள் படுத்தப்பட மாட்டார்கள். பர்தா அணியும் பெண்களைக் கேட்டால் சொல்லுவார்கள், அது தன் மானத்தை எந்தளவு பாதுகாக்கிறது என்று. பர்தா அணியும் பெண்களிடம் பாலியல் வன்கொடுமை குறைவு என்பதும் அறிந்திருப்பீர்கள்.
கடைவீதியில் நடந்து செல்லும் சம அழகுள்ள இரட்டைப்பிறவி சகோதரிகளில், ஒரு பெண் இஸ்லாமிய முறைப்படி உடையணிந்திருக்கிறாள். மற்றொரு பெண் உடலின் பாகங்களை வெளிக்காட்டும் மெல்லிய இறுக்கமான உடை அணிந்திருக்கிறாள். இப்போது இவ்விரு பெண்களில் கடைத்தெருவில் இருக்கும் சிலரால் கேலிக்கும், கிண்டலுக்கும், தொல்லைக்கும் ஆளாவது இஸ்லாமிய உடையணிந்திருக்கும் பெண்ணா? அல்லது இறுக்கமான உடையணிந்திருக்கும் பெண்ணா? நிச்சயமாக இறுக்கமான உடை அணிந்தவள் தான் கேவலத்திற்கு உள்ளாவாள். ஏனென்றால் அவளுடைய ஆடை கடைத்தெருவிலிருக்கும் சிலரின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களை அவ்வாறு தவறு செய்யத் தூண்டுகிறது.
ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாட்டுக்கு முதல் உதாரணம் அந்த பர்தாதான் என்பதில் எனக்கு இன்றைக்கும் சந்தேகமில்லை.
உங்கள் அண்ணன் சேரன் தன் காதலியை பாடல் காட்சிகளில் திறந்து காட்டச்சொல்லியிருப்பாரே… அது போதாதா உங்களுக்கு? மறைக்கப்பட வேண்டிய தனது அந்தரங்க பகுதிகளை அந்நியரிடமிருந்து ஒரு பெண் மறைத்துக் கொள்வது தான் ஆணாதிக்கச் சிந்தனையா? உங்கள் பார்வையில் படும் அனைத்து பெண்களும் உங்களுக்கு இடுப்பையும், அந்தரங்க பகுதிகளையும் காட்டிவிட வேண்டுமா. இறுக்கமான, அரைகுறை அடையுடன் கவர்ச்சிப் பொருளாக காட்சித் தரவேண்டும் என்பது தான் உங்கள் சிந்தனையா? அவ்வாறு சிந்திப்பது தான் முற்போக்கு என்று நினைத்தால், மாற்றிக் கொள்ளுங்கள், அதுதான் ஆணாதிக்கப் போக்கு.
இஸ்லாம் பெண்களைக் கண்ணியமானவர்களாகக் கருதுவதால் இத்தகைய சீர்கேட்டை ஒரு போதும் அனுமதிப்பதில்லை. இறுக்கமான அல்லது உள்ளே உள்ளவைகளை வெளியே காண்பிக்கும் மெல்லிய ஆடைகளை அணிபவர்களை, ஆடை அணிந்தும் அணியாதது போன்றவர்கள் என்று இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
முஸ்லீம் வீடுங்கிறதால வீட்டுக்குள்ள வெளி ஆளை அனுமதிக்க மாட்டோம். ஆனா நீங்க எங்களுக்கு பெரும் உதவி செய்தவர்ங்கிறதால அதையெல்லாம் நான் பார்க்கலை.." என்று சொல்கின்றபோது முஸ்லீம சமுதாயத்தினரின் கட்டுப்பெட்டியான அந்த விதிமுறைகள் மீதிருக்கும் கோபம் தெறிக்கிறது.
எதை ஐயா கட்டுப்பெட்டியான விதிமுறைகள் என்று சொல்கிறீர்கள? பெண்கள் இருக்கும் வீட்டில் வெளி ஆண்களுக்கு அனுமதி இல்லை என்பததா?. பெண்கள் இருக்கும் வீடுகளில் எல்லாம் உங்களுக்கு ரெட் கார்பெட் விரிக்கணுமா?
முஸ்லீம் பெண்களுக்குத்தான் எத்தனை, எத்தனை கஷ்டங்கள்..? 'வெளியாட்கள் யாரைப் பார்த்தாலும் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும்..' 'உடல் முழுக்க போர்த்திக் கொண்டுதான் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டும்'. 'வெளி நபர்களிடம் பேசக் கூடாது..' 'பழக்கம் கூடாது' என்று காட்டுமிராண்டித்தனமான இந்தப் பழக்கத்தை தட்டிக் கேட்கும் வாய்ப்பு அண்ணன் சேரனுக்கு இருந்தும், அவரது ஒரே நோக்கம் 'காதல்'தான் என்பதால் அதனை லேசாகத் தொட்டுப் பார்த்து அகன்றுவிட்டார்.
எது காட்டுமிராண்டித்தனம்? அந்நிய ஆண்களிடம் பேசாமல் இருப்பது காட்டுமிராண்டித்தனமா? வெளியாட்களிடம் முகத்தை காட்டி, உடல் முழுக்க திறந்து கொண்டும், பார்க்கும் நபர்களிடம் எல்லாம் பேசிக் கொண்டும், பழகிக் கொண்டும் இருப்பது தான் நாகரிகத்தின் வளர்ச்சி என்று நினைக்கிறீர்களா?
மருத்துவமனையில் ஆபரேஷனுக்காக வந்து படுத்திருக்கும் நதீராவின் தாயாரே மிகக் கஷ்டப்பட்டு பேசும் நிலையில் இருக்கும்போது தனக்காகவும், நதீராவுக்காகவும் பேச வருகின்ற காட்சியே இதற்கு சாட்சி. இப்படியொரு சூழல் முஸ்லீம் பெண்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்.. வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டாமா..? என்று தணியும் இந்தக் கொடுமை..
ரொம்ப அக்கறை தான் உங்களுக்கு, உங்கள் அண்ணன் சேரன் அப்படி காட்டிவிட்டார் என்பதற்காக அதுவே சாட்சியாகிவிடுமா? ஐயா, இன்றும் வலையில் எத்தனையோ முஸ்லீம் பெண்கள் எழுதுகிறார்கள். இங்கு எழுதும் பல ஆண்களைக் காட்டிலும் நல்ல எழுத்தாக இருக்கிறது. ஒரு சகோதரி தமிழில், உங்களுக்கும் எனக்கும் தெரியாத கணினி துறை சார்ந்த நுண் விசயங்களை அவ்வப்போது பதிவேற்றி வருகிறார். ஒருவர் அரசியல் கட்சி தலைவியாகவும் இருந்து வருகிறார். வெளியுலகில் அவரை பர்தா இல்லாமல் பார்க்க முடியாது. வசதியும் வாய்ப்பும் உள்ள பலரும் பட்டப் படிப்புகள் படித்து வருகிறார்கள். இவர்கள் எல்லாம் கண்ணியமான முறையில் மற்றவருடன் பேசுகிறார்கள் / கண்ணியமான நட்பும் வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
எனது இந்த இடுகையை நீங்களை வாசித்திருக்க வாய்ப்பில்லை. உங்கள் எழுத்தை நீண்ட நாட்களாக வாசித்து வருகிறேன். உங்களிடமிருந்து நிறைய ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன். இப்படி அடுத்தவர் நம்பிக்கையில் மூக்கை நுழைக்கும் ஒரு சமூகத்தாக்குதல் வேண்டாமே, அண்ணாச்சி.
நான் பார்க்காத பொக்கிஷம் சினிமாவை விமர்சிக்கவில்லை, தேவையும் இல்லை. அந்தப்பட விமர்சனத்தின் ஒரு சமூகத் தாங்குதலைத் தான் தவறென்று விளக்கியுள்ளேன்.

Jul 27, 2009

தீர்ப்பு நாள்

முன்னரே சொல்லி விடுக்கிறேன், இது கோவியாரின் இடுகைக்கு எதிர் இடுகை அல்ல. ஆனால் அதை வாசித்த பின்பு தான், இதை எழுத எண்ணினேன். அவர் இடுகையில் சொல்லியுள்ள ஒரு வார்த்தை, இஸ்லாமியர்கள் குறிப்பிடும் 'தீர்ப்பு நாள்'. இவர்கள் குறிப்பிடும் தீர்ப்பு நாள் என்றால் என்ன? என்பதை இங்கே மிகச்சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன். இதே போன்று 'கலி முத்திடுத்து, கல்கி வரப்போறான்', 'ஜீஸஸ் வருகிறார்', என்பதையும் யாராவது சுருங்கச் சொன்னால், நான் புரிந்து கொள்வேன். இவைகள் சொல்லும் கருத்துக்களில் பெரிய வேறுபாடுகள் ஏதும் இல்லை என்பது என் புரிதல்.

முஸ்லீம் யார்?

இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ள உயிரினங்களையும் படைத்தவன் ‘அல்லாஹ்’ (ஒருவனே) என்று நம்பிக்கைவைத்து, அவனது இறைச்செய்தியைச் சொல்ல வந்த (கடைசி) தூதராக ‘முஹம்மது’ வை எற்றுக்கொண்டவர்கள் முஸ்லீம்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் அல்லது கருதப்படுகிறார்கள். பிறப்பால் மட்டுமே ஒருவர் முஸ்லீம் ஆகிவிட முடியாது. மேற்சொன்ன செய்தி, அதாவது

‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது அவனின் தூதராக இருக்கிறார்கள்’

என்று நம்பிக்கை கொள்ளும் அனைவரும் முஸ்லீம் தான். நம்பிக்கை கொண்டால் மட்டும் போதுமா…

முஸ்லீம் என்ன செய்ய வேண்டும்?

பாவச் செயல்களில் இருந்து விலகி, நன்மையான செயல்கள் மட்டுமே செய்ய வேண்டும். நன்மையே ஏவி தீமையை தடுக்க வேண்டும்.

  • பாவச் செயல்; இறைவனுக்கு இணை வைத்தல். உயிரினங்களுக்கு தீங்கிழைத்தல்.
  • நன்மையான செயல்கள்; இறைவனை வணங்குதல். உயிரினங்களுக்கு நன்மை செய்தல்.

நன்மையான செயல்களை செய்ய மக்களை ஏவ வேண்டும். தீமையை கண்டால் தடுக்க வேண்டும். (முதலில் கரம் கொண்டு தடுத்தல். முடியாவிட்டால், நா கொண்டு தடுத்தல். அதுவும் முடியாவிட்டால், குறைந்தபட்சம் அதிலிருந்து விலகி இருத்தல்)

ஏன் இவற்றை செய்ய வேண்டும்?

இறைவனின் வேதமான குர்ஆனிலும் தூதரின் வாழ்க்கையான ஹதீஸிலும் சொல்லியுள்ளது போல, இந்த உலக வாழ்க்கை நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு தேர்வுக் கூடம். இங்கு செய்யப்படும் வினைகளுக்கான கூலி தீர்ப்புநாளில் வழங்கப்பட்டு மறுமையில் நிறைவேற்றப்படும். அந்த நாளில் பணத்தாலும் பாசத்தாலும் யாரும் எதையும் சாதித்துவிட முடியாது. இவ்வுலகில் விதைத்ததை அறுவடை செய்யும் நாள் அது.

மறுமை

எந்தவொரு மனிதனும் மரணத்தை விரும்புவதில்லை. மரணிக்காமல் வாழவே விரும்புகிறான். அவன் விரும்பும் மரணமில்லா வாழ்க்கை மறுமையில் கிடைக்கும். மறுமை வாழ்க்கை முடிவற்ற ஒன்று. இறுதி தீர்ப்பு நாள் இருக்கிறது என்பதை இறைவேதம் குர்ஆன் பல வசனங்களில் சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக…

இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது, நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர் என்று அவர்கள் கூறினார்கள். (குர்ஆன், 006:029)

மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள். (குர்ஆன், 083:004 – 006)

அந்த நாள் எப்போது வரும்?

மறுமை நிச்சயமாக உண்டு என்று சொன்ன இறைவன், அந்த நாள் எப்போது வரும் என்பதை மறைத்து வைத்திருப்பதாகச் சொல்கின்றான்.

நிச்சயமாக அந்த நாள் வரக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது முயற்சிக்கேற்ப கூலி வழங்கப்படுவதற்காக அந்த நாளை மறைத்து வைத்திருக்கிறேன். (குர்ஆன், 020:015)

மேலும்,

அந்த நாள் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. (குர்ஆன், 31:34)

அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வராதென்றோ அல்லது, அவர்கள் அறியாதிருக்கும்போது திடீரென்று அந்த நாள் வராது என்று அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா? (குர்ஆன், 012:107)

இத்தகைய வசனங்களின் மூலம் தீர்ப்புநாள் நிச்சயம் வரும் எனபதில் நம்பிக்கை கொண்டோருக்கு எந்த சந்தேகமும் இல்லை. நாம் எதிர்பாராத நேரத்தில் அது சம்பவிக்கும் என்று நம்பிக்கை கொண்டு, பாவ செயல்களில் இருந்து விலகி நாம் நன்மையானவற்றை மட்டுமே செய்வதோடு மட்டுமல்லாமல், நன்மையை ஏவி தீமையை தடுக்கவும் வேண்டும்.

நான்

பாவச் செயல்களில் இருந்து விலகி இருக்கிறேன். முடிந்தவரை சக உயிரினங்களுக்கு நன்மை செய்கிறேன், அதையே ஏவுகிறேன். தீமையை கண்டால் என்னால் ஆன மட்டும் தடுக்கின்றேன். இதற்கெல்லாம், இறைவனை நம்புவதும் அதனால் தீர்ப்புநாளில் கூலி உண்டு என்ற நம்பிக்கையுமே காரணம். இந்த இறை நம்பிக்கை எனக்குள் இல்லாவிட்டால், கட்டுப்பாடில்லாமல் தான் தோன்றித்தனமாகத் திரிவேன். சுயத்தை மட்டுமே மனதில் கொண்டு, கொள்ளை கொலைகளை மலியச் செய்வேன். உடற்பசியை தீர்க்க உறவுகள் பாராது சமுதாயத்தை சீரழித்துவிடுவேன். இன்னும் கற்பனைக் கெட்டா குற்றங்களும் இங்கே நடத்தப்படும் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை.

நம்பிக்கை

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் யாரும் இல்லை. சிலருக்கு கடவுள் இருக்கிறான் என்ற நம்பிக்கை, சிலருக்கு கடவுள் இல்லை என்ற நம்பிக்கை. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. ஒருவருடைய நம்பிக்கையில் மற்றவர் குறுகிடாதவரை எந்த பிரச்சனையும் எழப்போவதில்லை.

நன்றி!