Aug 20, 2009

கழிவறை நீதி - வள்ளுவன்

உங்கள் வீட்டு கழிவறை குழாய் ஓட்டையால் பொதுப்பாதை வரை நாற்றம் வருகிறது என்றால், அந்த பொதுப்பாதை பாவிக்கும் ஒருவனாகிய நான், இரண்டு செயல்கள் செய்யலாம். ஒன்று, உங்கள் வீட்டு கழிவறை ஓட்டையை அடைக்கச்சொல்லி உங்களிடம் கேட்பது, செய்து முடிக்கப்படும் வரை சட்டத்திற்குட்பட்ட எந்த செயலும் செய்ய எனக்கு அனுமதி உண்டு. அது என் உரிமை. மாறாக அறிவற்ற முறையில் பேசக்கூடாது என்பதை வள்ளுவர்,

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர். - குறள்

எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.

என்கிறார்.

இரண்டாவதான மூக்கை பொத்திக்கொண்டு அவ்வழியே நடந்து செல்வது, என் பொறுமையை காட்டுகிறது. பொதுப்பாதை வரை நாற்றம் வருவதை அறிந்து நீங்களே மாறிக்கொள்வது வரை நான் பொறுமையாக இருப்பதற்கு எந்த சட்டமும் தனிநபரும் குறுக்கிட முடியாது. பரஸ்பரம் இரு நபர்களுக்கிடையேயான புரிந்துணர்வு.

இதை,

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி யொழுகப் படும். - குறள்

பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.

என்று பொறுமையை இவ்வாறு புகழ்கிறார்.

என் வீட்டில் கழிவறை இல்லை என்பதற்காக, உங்களிடம் வந்து உன் வீட்டில் கழிவறை இருப்பதால் தான் பொதுப்பாதையில் நாற்றம் வருகிறது, உடனே அதை இடித்துவிடு என்று நான் சொல்வது, நியாயமாகுமா? கழிவறையால் தான் நாற்றம் வருகிறது என்பது ஏற்புடையதாக இருந்தாலும், குழாய் ஓட்டையை அடைக்கச் சொல்வது தானே நியாயம்.

கழிவறையை இடிக்கச்சொல்லி குற்றம் புரியாமல் இருக்கவேண்டும் என்பதை,

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை. - குறள்

குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

என்பதாகச் சொல்கிறார்.

கழிவறை என்பது கழிவிறக்கத்திற்கான பயன்பாட்டிற்கு மட்டுமே என்றாலும், கழிவறையை பயன்படுத்தினால் தான் சுகாதாரம், தனிமை போன்ற முழுப்பயனும் அறியக்கிடைக்கும். மாறாக கழிவறையை பயன்படுத்தாமலேயே காட்டிலோ அல்லது முட்டுச்சந்திலோ கழிவிறக்கலாம் என்று தன் குறையை நியாப்படுத்துவது அறுவுடைமையாகாது.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு. - குறள்

முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?.

என்று கேட்கிறார்.

கழிவறை ஓட்டை சிறியதாய் இருந்தாலும் அதை உடனே அடைப்பதன் மூலம் மற்றவருக்கு தொந்தரவு செய்யாதிருப்பது நலம். அதையும் அய்யன்,

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். - குறள்

பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

என்கிறார்.

கழிவறைக்காக சச்சரவு செய்வதைக் காட்டிலும், நட்புதான் பெரிது என்போரை அறிவுடையோர் என்கிறார் வள்ளுவர்.

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு. - குறள்

உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.

கழிவறையை இடிக்கச் சொல்வோரையும் மன்னித்து நட்பு பாராட்டல், வாழ்நாள் முழுக்க புகழ்மிக்கதாய் அமையும் என்கிறார்.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.

தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.

இறுதியாக,

அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்.

ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

நன்றி!!!

20 comments:

 1. எனக்கு புரிஞ்சிடுச்சு....


  நண்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருப்பதால்

  சமாதானமாய் போனால் ஊருக்கே நல்லது. ஆனால்

  வாதம், விவாதம் பண்ணினாலோ இல்லை

  சண்டையே போட்டுக்கிட்டாலோ

  தகாத வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாதுன்னு தானே சொல்ல வர்றீங்க..

  எனக்கு புரிஞ்சிடுச்சு... ஆனா....

  ReplyDelete
 2. எனக்கு புரியுது! இது சாட்டையடியல்ல, சவுக்கடி!

  ReplyDelete
 3. நல்ல அலசல் - கடைசியில் ...

  ReplyDelete
 4. அண்ணே, எனக்கு உங்க பழைய பதிவு சந்தைப்படுத்துதல் ஞாபகம் வந்துச்சு.

  @சுமஜ்லா.

  சாட்டையடியும் சவுக்கடியும் ஒன்னுதானே.
  :)

  ReplyDelete
 5. நீங்கள் வள்ளுவர் சொன்ன அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறீர்களா?

  ReplyDelete
 6. இது பின்னூட்டம் இடும் மற்றவர்களுக்கான பதிவு மாதிரி இருக்குது

  ReplyDelete
 7. இடுகை புரியுது... ஆனா உள்குத்து தான் புரியல..

  ReplyDelete
 8. குறளின் மீதான உங்கள் காதல் என்னை அசர வைக்கிறது நண்பா.. அருமையான கருத்துகளுடன் கூடிய இடுகை..

  ReplyDelete
 9. அருமை பீர் அண்ணா.
  ஒரு சின்ன வேண்டுகோள் "எந்த அதிகாரம்" என்பதையும்
  சொன்னா இன்னும் நல்லா இருக்குமே!

  ReplyDelete
 10. எனக்கு புரிஞ்சிடுச்சு....ஆனா புரியல....

  ReplyDelete
 11. மதுரை தந்த இரண்டாம் பரி மேல் அழகரே ! வாழ்க திருக்குறள் ! வளர்க நின் புகழ்

  ReplyDelete
 12. வள்ளுவரை கக்கூஸ் வரைக்கும் இழுத்து நாரடித்திருக்க வேண்டாம்!

  ReplyDelete
 13. வால், வாழ்க்கையின் அனைத்து தளத்திற்கும் பொருந்தும் குறள். அதனால் தான் இது உலகப்பொதுமறை என்று சொல்லப்படுகிறது.

  வள்ளுவன் கக்கூஸ் வரை வந்தது, வள்ளுவனுக்கு இழுக்கா? இல்லை... கக்கூஸூக்கு பெருமையா?

  ReplyDelete
 14. நன்றி முரளிகண்ணன்,

  <<<>>>

  நன்றி சுந்தர்,

  <<<>>>

  நன்றி நைனா,

  <<<>>>

  நன்றி Thomas Ruban, (புரிஞ்சவரை நல்லது)

  <<<>>>

  நன்றி பாலா, (அடுத்த முறை செய்யலாம்)

  <<<>>>

  நன்றி நர்சிம், (மரு.புருனோ சொல்லும், 'வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்' நானும் ரிப்பீட்டுறேன்..)

  <<<>>>

  நன்றி கார்த்திக், எனக்கு எப்போதும் குறள் மீது ஈர்ப்பு இருப்பதுண்டு.

  <<<>>>

  நன்றி லோகு, (யோவ்.. பத்தவக்காத..)

  <<<>>>

  நன்றி ஜெய்,

  <<<>>>

  அனானி, நல்ல கருத்துக்கள் நீங்கள் சொன்னாலும் ஏற்றுக்கொள்வேன். (முகத்தை மறைக்காமல்...)

  <<<>>>

  நன்றி டக்ளஸ், (ஏதோ.. மறந்துடாம இருந்தா சரி,, எங்களையெல்லாம் ;)

  <<<>>>

  நன்றி ஜமால், (கடைசியில்...??)

  <<<>>>

  நன்றி சுமஜ்லா,

  <<<>>>

  நன்றி TVR,

  <<<>>>

  நன்றி முரு, புரிஞ்சா சரி.. ;)

  <<<>>>

  நன்றி வசந்த்.

  ReplyDelete
 15. மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் இணையதளம் :)

  ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.