Aug 25, 2009

வீம்புநிலை வியாபாரிகள்

சரியாகச் சொல்லவதென்றால், இதை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. முன்னர் நான் எழுதியிருந்த விளிம்புநிலை வியாபாரிகள் இடுகையில் நணபர்களின் பின்னூட்டங்கள் பார்க்கும் வரை. தீபாவளி திடீர் கடைகளையும், பாலியல் தொழிலாளர்களையும் வீம்பு நிலை வியாபாரிகள் என்று நான் குறிப்பிட்டிருந்ததை சில நண்பர்கள் மறுத்திருந்தனர். என் கருத்தையே அனைவரும் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை, அதே போல நானும். நமது பார்வையினூடாய் நிலைபாடுகள் தீர்மானிக்கப்படுவதால், என் நிலைபாட்டிற்கான பார்வையை உங்களுக்கும் பகிர வேண்டியது என் உரிமையும் கடமையும் ஆகிறது.

தீபாவளி திடீர் கடைகள்; இவைகள் திடீரென்று முளைக்க காரணம், குறுகிய காலத்தில் அதிக லாபம் அள்ளும் தொழில், முதலீடு முடக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை மற்றும் தரமற்ற பொருளை விற்பனை செய்வதால், நுகர்வோர் திரும்ப வருவார் என்கிற அச்சம் இல்லை. வியாபார சரக்கு, தீபாவளிக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு, மொத்த வியாபாரியிடம் கொள்முதல் செய்யப்படும், விற்காத சரக்கு திரும்ப தரப்படும் என்ற ஒப்பந்தத்தோடு. தீபாவளிக்கு அடுத்த நாள், கையிருப்பு சரக்குகள் திரும்ப தரப்பட்டு கணக்கு முடிக்கப்படும். இத்தகைய சரக்கின் தரம், சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர்களுக்கு தெருவோரக்கடை அல்ல தொழில். வேறு தொழிலில் இருப்போரால் திடீர் கடைகள் நடாத்தப்படுகின்றன. நஷ்டத்திற்கான வாய்ப்பு இல்லாததால் லாபம் மட்டுமே இறுதி வடிவம் பெறும். அம்பானிகளுக்கும் அடிசறுக்கும் காலம் இது. லாபம் மட்டுமே வாரிச்சுருட்டும் ஒரு வியாபாரியை விளிம்பு நிலை வியாபாரி என்று சொல்வது பொருந்தாது என்பது என் புரிதல். ஏதோ ஒரு காரணத்தால், ஒரு வேளை இவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டாலும், ஒதுக்கித்தள்ளிவிட்டு ஒரிஜினல் தொழிலை பார்க்க போய் விடுவார்கள்.

சரி.. அப்போ பாலியல் தொழிலாளர்கள்? நான் தீபாவளி திடீர் கடைகளை மட்டும் அவ்வாறுச் சொல்லியிருந்தால் நண்பர்கள் ஒரு வேளை ஏற்றுக்கொண்டிருக்ககூடும். பாலியல் தொழிலாளர்கள், வியாபாரிகள் அல்லர். அவர்கள் ஒரு வியாபாரப் பொருள், உபயோகித்தபின் திரும்ப கொடுத்துவிடும் காஃபி கப் போன்ற சரக்கு அவர்கள். (சில இடங்களில் டிஸ்பாஸபில் கப் ஆகவும் பாவிக்கப்படுவதுண்டு) இந்தத் தொழிலில் வியாபாரி, பாலியல் தொழிலில் தள்ளப்பட்டவருடைய (சரக்கை சந்தைக்கு கொண்டு செல்லும்) சமூகச் சுழல்களாகிய, குடும்பம், வறுமை, அறியாமை, ஆசை, உணர்ச்சி, போதை, மன அழுத்தம் மற்றும் சந்தேகமில்லாமல் அவர்கள் மீது திணிக்கப்படும் இன்ன பிறவும் அடங்கும். இந்தச் சூழல்களை வீம்புநிலை வியாபாரிகள் எனச் சொல்கிறேனா என்றால்… இல்லை. நகைமுரண் :) குழப்பாமல் விஷயத்திற்கு வருகிறேன்.

பாலியல் தொழிலை யாரும் விரும்பி செய்வதில்லை. அதீத உணர்ச்சி, ஒரு வகையான ஆசை, போதா இன்பம் போன்ற காரணங்களினால் விரும்பியே சிலர் வந்திருந்தாலும், இவை எல்லாம் போதும் என்றானாலும், பரவலாக அறியப்பட்ட பின் சமூகம் இவர்களது மீள்வரவை ஏற்றுக்கொள்வதில்லை. வறுமை காரணமாக இத்தொழிலில் நுழைபவர்களுக்கும் இதே நிலை தான். வறுமானத்திற்கான மாற்று ஏற்பாட்டில் இனி வறுமை இல்லை என்றான பிறகும், குடும்பமே இவர்களை புறக்கணிக்கும் சூழலில் உணர்ச்சியற்ற உயிர் பொருளாக உடலை சில நிமிடங்கள் கிடத்தி வைக்க வேண்டிய நிலை. விரும்பியும் விரும்பாமலும் தொடர வேண்டிய நிர்பந்தம். ஆண் பாலியல் தொழிலாளியின் நிலை இன்னும் மோசம். விருப்பமில்லாமலேயே அவன் இயங்க வேண்டியிருக்கிறது. சில சூழ்நிலையில் அதைவிட கொடுமையாக அவன் மீது இயக்கம் செலுத்தப்படுகிறது. இவர்கள் கூட எந்த நேரத்திலும் தொழிலை மாற்றிக்கொண்டு மீண்டு விடுவார்கள். பெண் தொழிலாளியின் நிலையே, வேதனைக்குள்ளானது. anti-prostitution_Ii3GZ_22980

இதற்கான தற்போதைய தீர்வு பாலியல் தொழிலாளர்களுடைய மீள்வாழ்வு. இடமாற்றத்தின் மூலம் வாழ்வாதார உரிமைகள் மீட்கப்பட்டு மீள்வாழ்வு சாத்தியம் என்றாலும், உடற்சந்தையில் கிராக்கியும், முதலீடு இல்லாமல் குறைந்த நேரத்தில் அதிக பணம் பண்ணக்கூடிய ஒரே தொழிலாக, அனுபவமிக்க தொழிலாக பாலியல் தொழில் இருப்பதால் சட்டென்று விட்டுவிட முடியாத பாலியல் தொழிலாளர்களுடைய நிலை, வீம்பு நிலை. இந்நிலையில் அவர்களுக்கு இறுதியில் மீதமிருப்பது பணம், தொற்றிய நோய் மற்றும் வேதனைகளே. அவர்களிடையே மீள்வாழ்விற்கான அவசியத்தை உணர்த்தி, அதை நடைமுறைப்படுத்தல் அவசரமான அவசியம்.

பாலியல் தொழிலாளர்கள் மீதான பரிதாபப் பார்வை, போலி முற்போக்குவாதத்தின் முகமூடியாகப்படுகிறது. பாலியல் தொழிலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் எனக்கு சரியாகப்படவில்லை. கண்டும் காணாமல் நடக்கும் தொழில் எங்கும் காணக்கிடைக்கும். வறுமையை காரணம் காட்டி, பல புதியவர்கள் உள்ளே நுழையும் / நுழைக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். நடைமுறைப்படுத்தப்பட்ட சந்தையில் பொருளுக்கான கிராக்கி கூடிவிடுவதால், கடத்திவரப்படும் பெண்வணிகம் அதிகரிக்கும். அதேபோல பாலியல் தொழில் நடைமுறைப்படுத்தப்பட்டால், பெண்களுக்கெதிரான வன்கொடுமை குறையும் என்பதையும் ஏற்களாகாது. பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமையானது இனக்கவர்ச்சியில் நடத்தப்படுவது. அவை கடுமையான சட்டங்கள் அல்லது முறையான பாலியல் கல்வி மூலம் மட்டுமே குறைக்கப்படலாம் என்பதும் என் புரிதல். பாலியல் முற்றிலுமாக தடுக்கப்பட்ட நாடுகளில் வன்கொடுமை விகிதம் குறைவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாலுறுப்புகளை அவற்றின் நேரடி பெயர் கொண்டு எழுதுவது பாவம் என்ற சமூக கட்டமைப்பை எதிர்த்தாலும், இன்னும் நாம் அவற்றை எழுத்தாக்கத் தயங்குவதற்கு காரணம், நம் கலாச்சாரம், சுழல் என்றால் அது மிகையாகாது. கலாச்சாரம் குப்பைத்தொட்டி என்பதால் மட்டுமே அது இல்லை என்றாகிவிடாது. என்னதான் நவீனத்துவம் பேசினாலும், வெகுசன சமூகத்தினூடே ஒன்றிப்போயிருக்கும் கலாச்சாரம் என்ற குப்பைத்தொட்டியும் முன்நிறுத்தப்பட்டு முரணான விவாதங்கள் செய்யப்படுவதால் மட்டுமே, ஏதேனும் மாற்றம் நிகழ வாய்ப்புண்டு. அல்லாது காலச்சாரத்தையே முற்றிலுமாக மாற்ற முயல்வது, எதிர்மறை விளைவுகளையே தரும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நன்றி!

20 comments:

 1. ஆழமான கட்டுரையா ? மீ த எஸ்கேப்பு !
  :)

  ReplyDelete
 2. பாலியல் தொழில் தேவையா இல்லையா என்று பார்ப்பதைவிட அவை அனைத்து சமூகத்திலும் ஒரு அங்கமாக இருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.

  இந்திய சமூகத்தில் 35 வயது வரை பல்வேறு சூழல்களால், பொறுப்புகளால் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறான் என்றால் அவன் சாமியார் மனநிலையிலேயே திருமணம் செய்து கொள்ளும் வரையில் தொடரவேண்டும், அல்லது திருமணம் செய்து கொள்ள வாய்ப்பே இல்லாதவர்கள் தன் கையே தனக்கு உதவி என்பதாக தொடரவேண்டும் என்று ஒரு கருத்து நிலவினால் அவை சரி என்பீர்களா ?

  குடும்பச் சுமை, பிள்ளை வளர்ப்பின் தொல்லைகள் ஆகியவற்றை விரும்பபதவர்கள், திருமண வாழ்க்கை தேவையற்ற ஒன்றாக கருதும் ஒருவர் சாமியாராகவே இருக்க வேண்டும் என்ற கருத்து இருந்தால் சரியா ?

  ReplyDelete
 3. //இந்திய சமூகத்தில் 35 வயது வரை பல்வேறு சூழல்களால், பொறுப்புகளால் திருமணம் செய்து கொள்ளாமல்//

  //திருமணம் செய்து கொள்ள வாய்ப்பே இல்லாதவர்கள் //

  திருமணம் என்பது வெறும் சடங்காகிப்போனதனால் வந்த விழைவு இது. இரு மணங்களின் ஒப்பந்தம் தான் திருமணம் என்கிற புரிதலுடனான சமூக மாற்றமும் அவசியமாகிறது.

  குடும்பத்தை சுமையாகவும், பிள்ளை வளர்ப்பை தொல்லையாகவும் நினைத்து திருமண வாழ்க்கை தேவையற்ற ஒன்றாக கருதும் ஒருவர் சாமியாராகவே இருப்பதனால் ஒன்றும் கேடு வந்துவிடப்போவதில்லை.
  இன்னும் சொல்வதேன்றால் அத்தகையோரிடம் மாட்டி குடும்பமும் பிள்ளைகளும் அவதிப்படுவதை விட அவர் சாமியாராகிப்போவதே மேல்.

  ReplyDelete
 4. மாற்று வாழ்வு திட்டம் இல்லாமல் , பாலியல் தொழில் தேவையா இல்லையா என்ற விவாதம் அர்த்தமற்றது . ஒரு திருடன் ஜெயில் போய்விட்டால் , அவனக்கு வேலை கெடைக்க ரொம்ப கஸ்டமா இருக்கு, இதில பாலியல் தொழில் விட்டவருக்கு கல்யாணமோ மாற்று தொழ்ளிலோ கிடைபதோ கஷ்டம்.

  ReplyDelete
 5. பாலியல் தொழில் அங்கிகரிக்கப்பட்ட நாடுகளில் வன்கொடுமைகள் குறைவாக இருப்பதற்கு ஆதாரம் உள்ளது!
  நமக்கு தேவையில்லைனா போகாம இருந்துக்கலாம்! நமக்கு வேண்டாம்னு ஊருக்கே வேண்டாம்னு சொல்றது என்ன நியாயம்!

  தாய்ன்னு ஒரு அமைப்பு பாலியல் தொழிலாளர்களின் மாற்று வாழ்வுக்கு ஆவண செய்யுது!, விழிப்புணர்வை ஏற்ப்படுத்துது, ஆண்கள் மட்டுமல்ல, சில பெண்களும் பாலியல் வியாதி வர்றதுக்கு கார்னமா இருக்காங்க, சரியான வழிகாட்டுதல் இல்லைனா, நாம என்ன தான் புத்தி சொன்னாலும் தப்பு பண்ணத்தான் செய்வாங்க!

  காலம் கெட்ட பிறகு அட்வைஸ் பண்றதை விட இப்போதே செக்ஸ் கல்வி அவசியம்!

  ReplyDelete
 6. பீர்,அசத்தல் பதிவு,இதைபோல வேண்டும், சமூக அக்கறையுள்ள பதிவுகள். தொடருங்கள்,வருகிறோம்..

  ReplyDelete
 7. நண்பர் வால் சொல்றது சரிதான்..

  ReplyDelete
 8. பாலியல் தொழிலை முறைப்படுத்துவதன் மூலம் ,அல்லது அதை சட்ட பூர்வமாக அங்கீகரிப்பதன் மூலம்
  பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என்று நானும் நினைக்கவில்லை.முறையான பாலியல் கல்வியும் இதைத் தடுக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.கடுமையான சட்டம் மட்டுமே இருக்கிற ஒரே வழி. இதற்க்கு என்றல்ல எல்லா குற்றங்களுக்கும் இது பொருந்தும்.மிக நல்ல இடுகை பீர்.வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. //நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

  ReplyDelete
 10. நன்றாய் சொன்னீர்கள்

  ReplyDelete
 11. //அவர்களிடையே மீள்வாழ்விற்கான அவசியத்தை உணர்த்தி, அதை நடைமுறைப்படுத்தல் அவசரமான அவசியம்.//

  கொஞ்சம் கஷ்டம்தான் ஆனால் முயற்சி செய்தால் முடியும்,,,,,,,,,

  ReplyDelete
 12. சென்னையில் நடந்த ஒர் சம்பவம் தங்கள் பார்வைக்கு...

  பாலியல் தொழில் இருந்து மீண்டு வந்த ஒரு சகோரியை -- விபச்சார தடுப்பு பிரிவில் உள்ள கறுப்பு ஆடுகள் அவரை மிரட்டி பணம் பறிக்கையில் ஒரு தணியார் பத்திரிக்கை நிருபர் மூலம் நடிவடிக்கை எடுக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.... இது போலும் கொடுமைகள் பல அவர்கள் திருந்தினாலூம் துன்புறுத்தும் சில குள்ளநரிக்கூட்டம்

  ReplyDelete
 13. நன்றி கார்த்தி, சரியான கருத்து, பாலியல் தொழிலாளர்களின் மீள் வாழ்விற்கான விழிப்புணர்வே தற்போதைய தேவை.

  ---

  நன்றி டக்ளஸ்,

  ReplyDelete
 14. வால்,

  >வன்கொடுமை< அதான் சொல்லியிருக்கேனே, பாலியல் முற்றிலும் தடுக்கப்பட்ட நாடுகளில் வன்கொடுமை அதைவிட குறைவு.

  >ஊருக்கே வேண்டாம்< நமக்கு ஏன் தேவையில்லாம போனது, நம்மிடம் இருக்கும் முறையான பாலியல் விழிப்புணர்வு. அதையேதான் மற்றவர்களுக்கும் வேண்டும்ன்னு சொல்றேன்.

  தாய் விழிப்புணர்வு வரவேற்கத்தக்கது, அதேபோல பாலியல் கல்வியும்.

  ReplyDelete
 15. நன்றி ஜெர்ரி,

  ---

  நன்றி உழவன் (வாலுக்கு பதிலளித்துவிட்டேன்)

  ---

  நன்றி ஸ்ரீ, சரியான கருத்து.

  ---

  நன்றி பிரபா, வருகிறோம்.

  ---

  நன்றி TVR,

  ---

  நன்றி ஐந்திணை,

  ---

  நன்றி வசந்த்,

  ---

  நன்றி தமிழ் சரவணன், ம்... இப்படியும் இருக்கத்தான் செய்கிறது.

  ---

  நன்றி chidambararajan,

  வருகைக்கும் கருத்துக்கும் அனைவருக்கும் நன்றி!

  ReplyDelete
 16. பாலியல் தொழிலுக்கு முக்கிய காரணம் கயவனை நம்பி வாழ்க்கையை இழத்தல்...அறியாத வயதில் புரியாத ஒன்றை காதல் என்று எண்ணி அந்த மாயையில் சிக்குதல்...

  இது வளர காரணம் ஆண் தான் பெண்ணல்ல. ஆனால், மறைமுக காரணம் பெண். வீட்டில் ஒரு பெண் சரியாக இருந்தால், ஆண் ஏன், வேறொருத்தியை நாடி போகிறான்?

  பலரால் சுயகட்டுப்பாட்டுடன் இருக்கும் போது, சிலரால் முடியாதா? இச்சைகளை தணிக்க ஒரு பெண் தான் வேண்டும் என்பதில்லையே?

  ஆனால், இளமையின் எல்லைவரை, குறுகிய காலத்தில், இழக்கக்கூடாததை எல்லாம் இழந்து, கடைசியில், நோயையும் வாங்கி சறுகாக ஆகிறாள். சில ருவாய்களுக்காக அவள் சாற்றை உறுஞ்சிய கயவன், சமூகத்தில், எந்த ஒரு உறுத்தலும் இல்லாமல்...இது முரண்பாடாக தெரியவில்லையா யாருக்கும்?

  இஸ்லாத்தில், பாலியல் குற்றத்துக்கு ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, அவர்கள் திருமணம் முடிக்காதவர்களாக இருந்தால், எண்பது கசையடிகள்...திருமணம் முடித்திருந்தால், கல்லால் அடித்தே கொல்ல வேண்டும். இது தான் தண்டனை!

  ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்களுடைய மகன், சந்தர்ப்ப வசத்தால், ஜினா செய்து விட்டார். அவர், தந்தை கேட்கிறார், “இதோ, இந்த அசா என்னும் குச்சியை நீரில் மூழ்கடிப்பது போலும், சுர்மா கோல் சுர்மா கூட்டினுள் போவது போலுமா?” என்று! இவர் ஆம் என்கிறார். அதோடு தவறை வருந்தியவராக, தண்டனையை ஏற்றுக் கொள்ள முன்வருகிறார்.

  இவருக்கு திருமணம் ஆகவில்லையாததால், எண்பது கசையடிகள். அறுபது கசையடிகள் கொடுக்கப்பட்டதும், அவர் மயங்கி விழுந்து விடுகிறார். இனி ஒரு அடி கூட தாங்க மாட்டார் என்ற நிலையில், அவர் தாய், கலிபாவாகிய தன் கணவனிடம் கெஞ்சுகிறார், ‘மகனை விட்டு விடுங்கள். பாக்கி இருக்கும் ஒவ்வொரு அடிக்கும், நான் கால் நடையாக சென்று ஒரு ஹஜ்ஜு செய்து விடுகிறேன்’ என்று!

  ஆனால், இறை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நீத குணத்தால், மீதி அடியும் கொடுக்கப்படுகிறது. மகன் சுருண்டு விழுந்து இறந்து விடுகிறார். இப்போ, அவரை தந்தை மடியில் கிடத்தி கதறி அழுகிறார்.

  அடுத்த நாள், அவர் மகனைப் பற்றி அவையோர் அவதூறாக பேசுவதை கேள்விப்பட்ட, உமர்(ரலி) அவர்கள், ‘என் மகன் சுவர்க்கத்து கனிகளை புசித்து கொண்டிருப்பதை கனவில் கண்டேன்; யாரும் அவனை அவதூறாக பேச வேண்டாம்’ என்று கூறிகிறார்.

  இவ்வளவு பெரிய தண்டனை இருப்பது தெரிந்தும், சில நிமிட இச்சைகளை தீர்த்து கொள்வதற்காக ஒருவர், இத்தகைய பாவ காரியத்தில் ஈடு படுகிறார் என்றால்....

  உணர்வுகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானதே! நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதனால் தான் போருக்கு செல்லும் போது, தன் மனைவியிடம் கேட்கிறார்கள், ‘ஒரு பெண்ணால் எத்துணை மாதங்கள் கணவன் இல்லாமல் இருக்க முடியும் என...’ ‘நான்கு மாதங்கள்’ என்று இவர் பதில் தர, தீனுக்காகவோ, போருக்காகவோ, வெளியூர் செல்லும் எல்லாரையும், நான்கு மாதத்துக்கு ஒரு முறை, சுழற்சி முறையில் வீடு திரும்ப செய்தார்கள்.

  ஆனால், இன்று இளம் மனைவியை தவிக்க விட்டு விட்டு, வெளிநாடு செல்பவர்கள், தன் மனைவி மட்டும் பத்தினியாக காத்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால், தாம் அதை பற்றி கவலைப்படாமல், நோயை விலை கொடுத்து வாங்கி, அப்பாவி மனைவியையும் அதற்கு பலியாக்குகிறார்கள். நான் எல்லாரையும் சொல்லவில்லை, நல்லவர்கள் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள், நம் இணைய நட்புள்ளங்கள் போல:-)

  ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.