Jul 27, 2009

தீர்ப்பு நாள்

முன்னரே சொல்லி விடுக்கிறேன், இது கோவியாரின் இடுகைக்கு எதிர் இடுகை அல்ல. ஆனால் அதை வாசித்த பின்பு தான், இதை எழுத எண்ணினேன். அவர் இடுகையில் சொல்லியுள்ள ஒரு வார்த்தை, இஸ்லாமியர்கள் குறிப்பிடும் 'தீர்ப்பு நாள்'. இவர்கள் குறிப்பிடும் தீர்ப்பு நாள் என்றால் என்ன? என்பதை இங்கே மிகச்சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன். இதே போன்று 'கலி முத்திடுத்து, கல்கி வரப்போறான்', 'ஜீஸஸ் வருகிறார்', என்பதையும் யாராவது சுருங்கச் சொன்னால், நான் புரிந்து கொள்வேன். இவைகள் சொல்லும் கருத்துக்களில் பெரிய வேறுபாடுகள் ஏதும் இல்லை என்பது என் புரிதல்.

முஸ்லீம் யார்?

இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ள உயிரினங்களையும் படைத்தவன் ‘அல்லாஹ்’ (ஒருவனே) என்று நம்பிக்கைவைத்து, அவனது இறைச்செய்தியைச் சொல்ல வந்த (கடைசி) தூதராக ‘முஹம்மது’ வை எற்றுக்கொண்டவர்கள் முஸ்லீம்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் அல்லது கருதப்படுகிறார்கள். பிறப்பால் மட்டுமே ஒருவர் முஸ்லீம் ஆகிவிட முடியாது. மேற்சொன்ன செய்தி, அதாவது

‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது அவனின் தூதராக இருக்கிறார்கள்’

என்று நம்பிக்கை கொள்ளும் அனைவரும் முஸ்லீம் தான். நம்பிக்கை கொண்டால் மட்டும் போதுமா…

முஸ்லீம் என்ன செய்ய வேண்டும்?

பாவச் செயல்களில் இருந்து விலகி, நன்மையான செயல்கள் மட்டுமே செய்ய வேண்டும். நன்மையே ஏவி தீமையை தடுக்க வேண்டும்.

  • பாவச் செயல்; இறைவனுக்கு இணை வைத்தல். உயிரினங்களுக்கு தீங்கிழைத்தல்.
  • நன்மையான செயல்கள்; இறைவனை வணங்குதல். உயிரினங்களுக்கு நன்மை செய்தல்.

நன்மையான செயல்களை செய்ய மக்களை ஏவ வேண்டும். தீமையை கண்டால் தடுக்க வேண்டும். (முதலில் கரம் கொண்டு தடுத்தல். முடியாவிட்டால், நா கொண்டு தடுத்தல். அதுவும் முடியாவிட்டால், குறைந்தபட்சம் அதிலிருந்து விலகி இருத்தல்)

ஏன் இவற்றை செய்ய வேண்டும்?

இறைவனின் வேதமான குர்ஆனிலும் தூதரின் வாழ்க்கையான ஹதீஸிலும் சொல்லியுள்ளது போல, இந்த உலக வாழ்க்கை நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு தேர்வுக் கூடம். இங்கு செய்யப்படும் வினைகளுக்கான கூலி தீர்ப்புநாளில் வழங்கப்பட்டு மறுமையில் நிறைவேற்றப்படும். அந்த நாளில் பணத்தாலும் பாசத்தாலும் யாரும் எதையும் சாதித்துவிட முடியாது. இவ்வுலகில் விதைத்ததை அறுவடை செய்யும் நாள் அது.

மறுமை

எந்தவொரு மனிதனும் மரணத்தை விரும்புவதில்லை. மரணிக்காமல் வாழவே விரும்புகிறான். அவன் விரும்பும் மரணமில்லா வாழ்க்கை மறுமையில் கிடைக்கும். மறுமை வாழ்க்கை முடிவற்ற ஒன்று. இறுதி தீர்ப்பு நாள் இருக்கிறது என்பதை இறைவேதம் குர்ஆன் பல வசனங்களில் சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக…

இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது, நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர் என்று அவர்கள் கூறினார்கள். (குர்ஆன், 006:029)

மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள். (குர்ஆன், 083:004 – 006)

அந்த நாள் எப்போது வரும்?

மறுமை நிச்சயமாக உண்டு என்று சொன்ன இறைவன், அந்த நாள் எப்போது வரும் என்பதை மறைத்து வைத்திருப்பதாகச் சொல்கின்றான்.

நிச்சயமாக அந்த நாள் வரக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது முயற்சிக்கேற்ப கூலி வழங்கப்படுவதற்காக அந்த நாளை மறைத்து வைத்திருக்கிறேன். (குர்ஆன், 020:015)

மேலும்,

அந்த நாள் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. (குர்ஆன், 31:34)

அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வராதென்றோ அல்லது, அவர்கள் அறியாதிருக்கும்போது திடீரென்று அந்த நாள் வராது என்று அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா? (குர்ஆன், 012:107)

இத்தகைய வசனங்களின் மூலம் தீர்ப்புநாள் நிச்சயம் வரும் எனபதில் நம்பிக்கை கொண்டோருக்கு எந்த சந்தேகமும் இல்லை. நாம் எதிர்பாராத நேரத்தில் அது சம்பவிக்கும் என்று நம்பிக்கை கொண்டு, பாவ செயல்களில் இருந்து விலகி நாம் நன்மையானவற்றை மட்டுமே செய்வதோடு மட்டுமல்லாமல், நன்மையை ஏவி தீமையை தடுக்கவும் வேண்டும்.

நான்

பாவச் செயல்களில் இருந்து விலகி இருக்கிறேன். முடிந்தவரை சக உயிரினங்களுக்கு நன்மை செய்கிறேன், அதையே ஏவுகிறேன். தீமையை கண்டால் என்னால் ஆன மட்டும் தடுக்கின்றேன். இதற்கெல்லாம், இறைவனை நம்புவதும் அதனால் தீர்ப்புநாளில் கூலி உண்டு என்ற நம்பிக்கையுமே காரணம். இந்த இறை நம்பிக்கை எனக்குள் இல்லாவிட்டால், கட்டுப்பாடில்லாமல் தான் தோன்றித்தனமாகத் திரிவேன். சுயத்தை மட்டுமே மனதில் கொண்டு, கொள்ளை கொலைகளை மலியச் செய்வேன். உடற்பசியை தீர்க்க உறவுகள் பாராது சமுதாயத்தை சீரழித்துவிடுவேன். இன்னும் கற்பனைக் கெட்டா குற்றங்களும் இங்கே நடத்தப்படும் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை.

நம்பிக்கை

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் யாரும் இல்லை. சிலருக்கு கடவுள் இருக்கிறான் என்ற நம்பிக்கை, சிலருக்கு கடவுள் இல்லை என்ற நம்பிக்கை. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. ஒருவருடைய நம்பிக்கையில் மற்றவர் குறுகிடாதவரை எந்த பிரச்சனையும் எழப்போவதில்லை.

நன்றி!

Jul 26, 2009

நட்பு, குங்குமம், பதிவர்கள்

நட்பு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். துக்கத்தில் பங்கு கொள்ளும். – பழஞ்சொல்.

அரை ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது, இவர்களில் யாருக்கும் என்னைத் தெரியாது. இன்று பல யுக பழக்கம் போல பேசிக்கொள்கிறோம். நல்ல விஷயங்களில் தோள் தட்டிக்கொடுப்பதும், தவறென்றால் தட்டிக்கேட்பதும், நட்புக்கு இலக்கணமாய் இருக்கிறோம். விவேகானந்தர் சொன்னாராம், ‘உன் நண்பர்களில் நான்கு பேரை காட்டு, நீ எப்படிப்பட்டவன் என்று சொல்கிறேன்’ என்று. நான் பெறுமையாகக் காட்டுவேன், இந்த இணைய நட்பு வட்டத்தை, இனிய வட்டத்தை. இதுவரை நான் கண்டிராத பிரபலம் நேற்று ஜிடாக்கில் சொல்கிறார், ‘என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் தைரியமாக கேளுங்கள், நிச்சயம் செய்கிறேன்’ என்று. இத்தனைக்கும் நேற்றுதான் அவரிடம் முதல்முறையாக ஜிடாக்கியதும். (இவருக்கா கட்டம் கட்டினார்கள்?, பாவிகள்.) இந்தகைய நட்பு அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் எங்கோ கொடுத்து வைத்திருக்கிறேன் போல…

இந்த நட்பை இன்னும் வழுப்படுத்தும் விதமாக, பாசமிகு மருத்துவர் தேவா அவர்கள் நட்புக்கான ஒரு வலைப்பூ பட்டை எனக்கும் கொடுத்திருக்கிறார். இது ஒரு தொடர் நட்பு பாராட்டல், நான் என் நட்பு வட்டத்திற்கு இதை வழங்க வேண்டும். யாருக்கும், எத்தனை பேருக்கும் இதை வழங்கலாம். நட்புக்கு ஏது வரைமுறை, சட்டசிக்கல் எல்லாம். எனவே நான் எனக்குத்தெரிந்த என்னைத்தெரிந்த அனைத்து வலைப்பூ வட்டார நண்பர்களுக்கும் இதை வழங்குகிறேன்.

Award Image

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

எனது முந்தைய ஒரு இடுகை ருசித்ததும் ரசித்ததும் என்பதில் நான் ரசித்த சிலவற்றை குங்குமம் வாசகர்களும் அல்லது ரசிகர்களும் ரசிப்பதற்காக குங்குமம், 23 ஜூன் 2009, 90 மற்றும் 91 ம் பக்கங்களில் வெளியிட்டுள்ளது. நன்றி!!!

90

91

நாமும் அச்சு ஊடகங்களால் கவனிக்கப்படுகிறோம். இனி எழுதுவது வாசிக்கத்தக்கதாக ரசனைக்குரியதாக மட்டுமின்றி சமூகத்திற்கானதாகவும் இருக்க வேண்டும். – எனக்குள் சொல்லிக் கொண்டது.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

இந்தப்பகுதியை வாசிக்கும் போது, இதைச்சொல்ல இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். எனக்கு இருக்கும் தகுதி ‘நான் உங்கள் நண்பன்’ என்பதே, அது மட்டுமே. சில நாட்களாக இங்கு நடந்துவரும் கோஷ்டி மோதல்களை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவற்றில் சில பற்றவைக்கப்பட்டவை, மற்றும் சில எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றப்பட்டவை. இன்னும் சில விளையாட்டு வினைஆன கதை.

நான் அறிந்தவரை இங்கு யாரும் பணமோ பொருளோ வாங்கிக்கொண்டு எழுதுவதில்லை, எழுதுவதில் எற்படும் ஒரு ஆத்மதிருப்தி, சிறிய மகிழ்ச்சி மட்டுமே எஞ்சி இருப்பது. இங்கு எழுத்துப் பயிற்சி செய்து, அச்சு ஊடகத்தில் கால் ஊன்றியவர்களும் உண்டு என அறியப்பெறுகிறேன். பல இடுகைகள் கருத்துப் பரிமாற்றத்திற்காகவும் ஆரோக்ய விவாதத்திற்காகவும் இங்கே இடப்படுவது நமது வாசிப்பனுபவத்தை அதிகரிக்கச் செய்கிறது. சில நாட்கள் முன்பு நண்பர் சதாசிவம், மேன்சன் தண்ணிருக்காக தான் பட்ட சிரமங்களை இடுகையிட, அங்கே ஒலித்த பின்னூட்ட ஆதரவு குரல்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்தின. இவை ஒரு பக்கம் இருந்தாலும்…

ஒரு பதிவர் திரட்டி மோசடி என்று இடுகை இடுகிறார், அவர் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருப்பார் அல்லது அவரால் எழுத முடிந்தது அதுதான். அந்த இடுகையில், நான் மிகவும் மதிப்பு வைத்திருந்த பல பிரபலங்களும் அவரை கேலி கிண்டல் செய்து பின்னூட்டிய விதம் சற்றும் ரசிக்கும் படியாக இல்லை. அது போதாதேன்று பின்னர் தனி இடுகைகள் வேறு. உங்களுக்கு எழுத் தெரியும், சுவாரசியமாகவும் எழுதத் தெரியும், அதற்காக வேறு யாரும் இங்கு எழுதக்கூடாதா? தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள், கற்றுக்கொடுங்கள், ஏற்றுக்கொள்கிறோம். பிறக்கும் போது யாரும் பதிவர் இல்லை, உள்ளிருக்கும் அனைத்தும் கற்றுக்கொண்டது தானே…

ஒரு பெயர் இல்லாதவர், அனைவருக்கும் ஆப்பு வைக்கப்போவதாகச் சொல்லி ஒரு பதிவு தொடங்கினார். அதில் ஆழ்ந்த வாசிப்பும், எழுத்தனுபவமும் உள்ள சுவாரஸ்ய பதிவர்கள் பலரையும் அவர்களது தனிப்பட்ட வாழ்வை கொச்சைப்படுத்தி, அசிங்கமான வார்த்தைகளை மட்டுமே உள்ளடக்கிய இடுகைகள் இடுகிறார். பின்பு காணாமல் போகிறார். ஐயா, உங்களுக்கு அவர்களது எழுத்தோ அல்லது மற்ற நடவடிக்கைகளோ தவறாகப்பட்டால் கண்ணியமான முறையில் சொல்லுங்கள். உங்கள் எழுத்துக்கள் பலராலும் கவனிக்கப்படும், அங்கு சுட்டிக்காட்டப்படுபவர்கள் தன்னை மாற்றிக்கொள்ள வாய்ப்புண்டு. புதிய பதிவர்களுக்காக நீங்கள் கொடுத்த குரலுக்கு அவர்கள் ஆதரவே இல்லாமல் போய் உங்கள் முயற்சியும் தோற்றுப்போனது. தகாத வார்த்தைகள் என்றும் தீயவர்களை திருத்தாது.

நான் சினிமா பார்ப்பதில்லை என்பதை பல முறை சொல்லி இருக்கிறேன். எப்போதாவது பார்க்கத் தோன்றினால் அஜீத் நடித்த படங்கள் விரும்பி பார்ப்பதுண்டு. அஜீத் சினிமாவில் மட்டுமல்ல தன் தனிப்பட்ட வாழ்விலும் நாகரீகமானவர். ஆனால் இங்கு விஜய் ரசிகர்கள் கடைபிடிக்கும் நாகரீகம் கூட அஜீத் ரசிகர்களால் கடைபிடிக்கப் படுவதில்லை என்பது என் எண்ணம். சமீபத்திய பத்துக்களும் அதற்கு சான்றாக இருக்கிறது. தல ரசிகர்களே, குறைந்தபட்ச நாகரீகமாவது எழுத்தில் காட்டுங்கள். உங்கள் நடிகர்களுக்கு வைஸ்வெர்ஸாவாக இருக்கின்றீர்களே…

நன்றி!

Jul 23, 2009

சிக்கி

நான் எட்டு முடித்து ஒன்பதின் முதல்நாள் வகுப்பில் அமர்ந்திருந்தேன். என் பழைய நண்பர்களில் சிலர் காணாமல் போயிருந்தனர். விசாரித்ததில், அடுத்த வருடம் பொது தேர்வு என்பதால் வேறு நல்ல பள்ளியில் சேர்ந்துவிட்டதாக அறியப்பெற்றேன். முதல் நாள் வகுப்பாசிரியர் வர தாமதம் ஆகும் என்பதால் அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம். அப்போது தான் அவர் வாசலில் நின்று எட்டிப்பார்த்தார். அரைக்கை காட்டன் சட்டை. மடித்து வாரப்பட்ட அடர்த்தியான தலைமுடி. மீசை மட்டுமல்லாது ஆளும் வளர்ந்திருந்ததால், பத்தாம் வகுப்பறையை தேடி வந்திருப்பார் போல என நினைத்து நான் தான் சொன்னேன், “என்ன பாஸ், பத்தாவதா? ரெண்டு க்ளாஸ் தாண்டி இருக்கு. போங்க”. அதற்கு அவர் சொன்னார், “இல்ல நைன்த் பி”. “அட நம்ம க்ளாஸ் தானா? உள்ள வாங்க, கடைசி பெஞ்சுல வந்து உட்காருங்க பாஸூ”. கவனிக்கவும் நானும் கடைசிபெஞ்ச் தான். சரியாக படிக்காதவர்களுக்குத் தான் கடைசி பெஞ்சு என்று நீங்கள் நினைத்தால், தவறு. நாங்கள் சுமாராக படித்தும், சற்றே உயரம் அதிகம் என்பதால் தான் கடைசியில் அமர வைக்கப்பட்டோம்.

கடைசி பெஞ்சில் என்னருகிலேயே வந்து அமர்ந்தார். வகுப்பில் அனைவரும் அவரையே பார்த்துக்கொண்டிருக்க, நான் தான் ஆரம்பித்தேன் “உங்க பேரு என்ன பாஸூ?” . “சிக்கந்தர் அலி” ‘”பாக்க பெரிய ஆளாட்டம் இருக்கீங்க, பெயில் ஆகிட்டீங்களா, சிக்கந்தர் அலி?”. “இல்ல. எங்க வாவாக்கு(அப்பாவுக்கு) மிலிட்டரில வேல, நார்த் சவுத்ன்னு மாறி மாறி அலஞ்சதுனால இடைல ரெண்டு வருஷம் மிஸ் ஆயிடுச்சு” “சிக்கந்தர் அலின்னு முழுப்பேரச் சொல்லி கூப்பிட வசதியா இல்ல, ஷாட்டா அலின்னு கூப்பிடவா, பாஸூ? அலி ன்னா அரபியில வீரன் ன்னு அர்த்தம், ஆனா இங்க அப்படி கூப்பிட்டா ஒரு மாதிரியா இருக்கும், சிக்கந்தர் – சிக் - சிக்கி ன்னு கூப்பிடலாமா?” இப்படியாக சிக்கி என்று நாமகரணம் சூட்டப்பட்டது. சிக்கி என்னைவிட இரண்டு வயது மூத்தவர். எனக்கு எப்படி அழைப்பது என்று தடுமாற்றம் இருந்ததை அவரேதான் கழைந்தார். “நீங்கன்னு ஏன் சொல்லிக்கிட்டு, நீ ன்னே சொல்லு. அப்பதான் நட்பு வலுப்படும்”. சிக்கந்தர் அலி என்ற அவர், சிக்கி என்ற அவனானான்.

எங்கள் பள்ளியிலேயே எட்டு ‘சி’யில் படித்த ராதா கிருஷ்ணன் என்ற ராதாவும், ஒன்பது ‘பி’க்கு மாற்றப்பட்டான். அவனும் சற்று உயரம் என்பதால் கடைசி பெஞ்சில் வந்தமர்ந்தான். மூவரும் சம்பிரதாயமாக பார்த்து சிரித்துக் கொண்டோம். சிக்கி, ராதா, நான் என்ற மூவர் கூட்டணி உருவானது இப்படித்தான்.

அந்த வருடம் நடந்த பள்ளி தேர்தலில், ஒவ்வொரு வகுப்பாக சென்று நாங்கள் மூவரும் சிக்கிக்காக வாக்கு சேகரிக்க, பள்ளி மாணவத் தலைவனாக சிக்கி தேர்ந்தெடுக்கப்பட்டான். அதன் பிறகு இரண்டு வருடம் பள்ளி எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது நல்ல அனுபவமாக இருந்தது. தைரியமாக பல சேட்டைகள் செய்தோம்.

சிக்கியிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. சக மாணவிகளை சைட் அடிக்க மாட்டான். அவனது தோற்றத்திற்கு மாணவிகள் தரும் மரியாதைக்காக இருக்கலாம் என்று நானாக எண்ணிக்கொண்டேன். அனைத்து மாணவிகளிடமும் அவன் சகஜமாக பேசுவான், அவைகளும் அவ்வாறே. ராதாவை கண்டாலே அனைவருக்கும் பயம் இருந்திருக்கும். யாரும் அவனிடம் பேசுவதில்லை. நான் மாணவிகளிடம் என்ன என்றால் என்ன அவ்வளவுதான் பேசுவேன்.

சிக்கிக்கு கொஞ்சம் டெக்னிகல் அறிவு இருந்தது. வீட்டில் பழைய ரேடியோ, டேப் ரிக்கார்டர் பொன்றவை அடுக்கிவைக்கப்பட்ட மேசை ஒன்றை வைத்திருந்தான். ஒருமுறை பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் நாங்களே எங்கள் வீடுகளில் இருந்து மைக், ஸ்பீக்கர் செட் கொண்டு வந்து பள்ளியை ஒலியில் மூழ்கடித்தோம். அந்த ஏற்பாடு தலைமைக்கு பிடித்துப்போக, பள்ளியில் நிரந்தரமாக இதே ஏற்பாட்டைச் செய்து தினமும் காலை ப்ரேயர் ஒலியை பெருக்க முடிவு செய்துவிட்டனர். அதற்கான பொறுப்பும் எங்களிடமே வழங்கப்பட்டது. அஹூஜாவில் 4 ஸ்பீக்கரும் மைக்கும் வாங்கியதில் ஒரு தொகை கிடைத்தது. ஆளுக்கு ஒரு வெள்ளைச் சட்டை வாங்கியது போக மீதி இருந்த பணத்தில் ஒரு பாட்டில் வாங்கி இருவரும் குடித்தார்கள். அது பற்றி கேட்டதற்கு, “பீர், நீ குடிக்க வேண்டாம் சும்மா இருந்தால் போதும்” என்று சிக்கி சொன்னான். அப்போதுதான் தெரிந்தது அவர்கள் தண்ணி அடிப்பார்கள் என்று. அதன் பிறகு ராதா தம் பற்றவைக்க, சிக்கியும் அதிலேயே அவனது தம்மையும் நெருப்பாக்கினான். “அடப்பாவிகளா…” “இல்லடா, தண்ணி அடிச்சிட்டு தம் அடிக்கலைன்னா ஒரு மாதிரியா இருக்கும்” “இதெல்லாம் நல்லதுக்கு இல்லடா…” “அப்ப… நீ பண்றது மட்டும் நல்லதா?” “நான் என்னடா பண்ணேன்?” “டேய் அந்த சுதா மேட்ரு எங்களுக்கும் தெரியும்டா” அவர்கள் வாயில் நெருப்பு வைத்து என் வயிற்றில் ஐஸ் வைத்தார்கள்.

சுதா அப்போதுதான் என்னை திரும்பி பார்க்க ஆரம்பித்து இருந்தாள். அதை நான் பார்ப்பதற்குள் இவர்கள் பார்த்துவிட்டார்கள் போல, க்ராதகர்கள். ஆனால் நல்லவர்கள், எப்போதாவது நான் அவளை பார்க்காமல் பாடத்தை கவனித்தால், சிக்கிதான் என் தொடையில் கிள்ளி திரும்பி பார்க்கச் சொல்லுவான். சில நாட்களிலேயே எங்கள் பார்வை புன்னகையாக உறுப்பெற்றது. அப்படி ஒருநாள் புன்னகைத்துக் கொண்டிருந்த போதுதான் தலையில் ‘டொய்ங்’ ஒரு குட்டு விழுந்தது, ஆ… தமிழம்மா. அடுத்த நாள் சுதா வகுப்பில் இல்லை. 9 ‘ஏ’ க்கு மாற்றிவிட்டார்களாம். புள்ளி வைப்பதற்குள் கொள்ளி வைத்து விட்டார்கள்.

ராதா அப்போதே தீபாவளிக்கு கிடைத்த பண்டிகை பணத்தை சேர்த்து வட்டிக்கு விட்டிருந்தான். இப்போதும் அதே தொழில் தான் என்று சிக்கி சொல்லக் கேட்டிருக்கிறேன். கடந்த மாதம் தான் திருமணம் முடிந்தது. நான் ஊரில் இருந்தேன், இருந்தாலும் கலந்து கொள்ளவில்லை. முதலாவது வரதட்சணை வாங்கப்படும் / கொடுக்கப்படும் திருமணங்களுக்கு செல்வதில்லை என்ற எனக்குள் நான் வைத்திருக்கும் கோட்பாடு. இரண்டாவது, வட்டி.

சிக்கி க்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். என் திருமண வரவேற்பிற்கும் வந்திருந்தார்கள். சின்னதாக ஒரு செல்போன் சர்வீஸ் சென்டர் வைத்திருக்கிறான். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருப்பதாகவும், வெளிநாட்டில் நல்ல வேலை வந்தால் தெரியப்படுத்தவும் சொன்னான். சிக்கிக்கு அப்போது நான் சொன்னது, “வெளிநாடு ஒரு போதை மாதிரி, அங்கிருப்பவர்கள் இங்கு வரவும், இங்கிருப்பவர்கள் அங்கு செல்லவும் நினைப்பார்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இழப்புகள் அதிகம். இதுவரை இழந்தது போதும் என்றுதான், நான் இங்கு வர நினைக்கிறேன். உனது தொழிலில் முழு திறமையை வெளிப்படுத்தினால் நிச்சயமாக இதை முன்னேற்றலாம், இதிலிருந்து முன்னேறலாம். வெளிநாட்டில் கூலி வேலை செய்யும் உன் மனோநிலையை மாற்றி, இந்த தொழிலை முன்னேற்ற அல்லது குறைந்தபட்சம் இதே நிலையில் தொடர்ந்து நடக்குமாறு பார்த்துக்கொள். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். எனக்கு நம்பிக்கை இருக்கிறது நிச்சயம் இருப்பாய்” என்று வாழ்த்திவிட்டு வந்தேன்.

நன்றி!

Jul 21, 2009

சுவாரஸ்ய பதிவு விருது

ஒளிஒருவற் உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல். - குறள்

கலைஞர் விளக்கம்; ஒருவரின் வாழ்வில் ஒளி தருவது ஊக்கமேயாகும். ஊக்கமின்றி உயிர் வாழ்வது இழிவு தருவதாகும்.

மு.வ விளக்கம்; ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.

award_interesting.2e2avjzomu

செந்தழல் ரவி ஆரம்பித்த தொடர் விருது, இன்று நண்பர் மணிகண்டன் மூலமாக எனக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதை நான், சுவாரஸ்ய பதிவு என நினைக்கும் 6 பதிவுகளுக்கு வழங்க வேண்டும். (ரவி, ஒரு சந்தேகம், இது சுவாரஸ்ய பதிவு விருதா? அல்லது சுவாரஸ்ய பதிவர் விருதா?)

விருதின் நோக்கம், அது வழங்கப்படுபவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பதே. அவ்வகையில் இந்த சுவாரஸ்ய பதிவு விருதானது, பதிவர்களுக்கு ஊக்கத்தை தரும் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை.

எனது வாசிப்பனுபவத்தை அதிகரிக்கவே ‘ஜெய்ஹிந்துபுரம்’ என்ற இந்த வலைப்பூவை தொடங்கினேன். பின்னர் பிற பதிவுகளில் பின்னூட்டம் இடவேண்டி எழுத்துப் பயிற்சிக்காகவே இங்கு எழுதவும் ஆரம்பித்தேன். இப்போது விருதும் வழங்கப்பட்டுள்ளது, இது என்னை ஊக்கப்படுத்துவதுடன், எனக்கிருக்கும் பொறுப்பையும் அதிகரித்துள்ளது. இனியாவது ஏதேனும் எழுத வேண்டும், வாசிக்கும்படியாய் எழுத வேண்டும் என்ற அச்சமும் கூடவே…

நன்றி மணி, (என்னையும் ஜீப்புல ஏத்திவிட்டீங்க :))

விருது வழங்கும் விழா;

செந்தழல் ரவி இந்த விருது விழாவை தொங்கிவைத்த போது அவரிடம் மொக்கையாக கேட்டிருந்தேன், ‘இந்த விருது கொடுக்கறவங்களுக்கு ஏதாவது தகுதி இருக்கணுமா, ரவி?’ என்று. (அவர் பதில் சொல்லவில்லை… பிரபலபதிவராச்சே…;)) விருது கொடுக்கப்படும் தகுதியே எனக்கு இருக்கிறதா என்று சந்தேகத்தில் இருக்கும் போது விருது கொடுக்கும் தகுதி எனக்கிருக்கிறதா என்று நிச்சயமாக தெரியவில்லை. ஆனால் எனக்கு பிடித்த சுவாரஸ்ய பதிவுகள் / பதிவர்கள் ஏராளம். அனைவருக்கும் கொடுக்கமுடியாதவாறு சட்டச்சிக்கல் இருப்பதால், ஆறு பேருக்கு மட்டும்.

மகா நக்கல் பேர்வழி. இரண்டு தனிநபர் பதிவுகளுக்கு சொந்தகாரர். இம்சையை கூட்டும் இம்சைக்கு விருது வழங்குகிறேன். செந்தழல் ரவி; அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

பங்கு சந்தை நிலவரத்தையும் உலக நடப்புகளை முக்கியமாக நிதி நிலைகளையும் ஆலோசனைகளையும் மும்பையில் இருந்து எளிய தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் எழுதுகிறார். அவ்வப்போது சுவாரஸ்ய நிகழ்வுகளையும் எழுதும் இவர் சுரவாரஸ்யப் பதிவர். அண்ணன் சந்தைநிலவரம் பதிவர் அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

நல்லவர், அன்பானவர், எனக்கு ஊக்கமளித்து வருபவர். என் மண்ணின் மைந்தர் தோழர் கார்த்திகைப் பாண்டியன்; அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

இவரும் எங்கள் மண்ணுக்குச் சொந்தகாரர். சுவாரஸ்யம் குறையாமல் எழுதுவதில் மட்டுமல்ல பேசுவதிலும் வல்லவர். அனுபவஸ்தர் அண்ணன் ஸ்ரீ; அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

சமகால பிரச்சனைகளை இஸ்லாம் எவ்வாறு அணுகுகிறது என்பதை குர்ஆன் மற்றும் நபிமொழி ஆதாரத்துடன் எழுதுகிறார். அனைவரும் விளங்கும் எளிய நடை. அண்ணன் சுவனப்பிரியன்; அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

டக்ளஸ் என்ற புனைப் பெயரில் இருந்து ராஜூ என்ற சொந்த பெயருக்கு மாறியிருக்கிறார். எனக்கு நல்லது கெட்டது சொல்லும் பாசக்கார ஊர்காரர். ரொம்ப நல்லவர். நண்பர் ராஜூ; அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

எப்போதும் எனக்கு பிடித்த பதிவர், கருத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ளாத பிடிவாதக்காரர். ஏற்கனவே விருது வழங்கப்பட்டவர். அண்ணன் சிங்கை சிங்கம் கோவி. கண்ணன்; அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

சகாக்களே இனி பந்து உங்கள் முற்றத்தில்… ஆறு பேருக்கு வீசுங்கள், ஆயிரம் பேரை சென்றடையட்டும்.

நன்றி!!!

Jul 15, 2009

ஒரு கடிதம் - பொக்கிஷம்

அடுத்தது ஒரு கடித இடுகை என்று முடிவு செய்துவிட்டேன். அதில் இரண்டு வகைகள் உண்டு ஒன்று, நாம் யாருக்காவது எழுதி அதை அவருக்கு அனுப்பாமல் இங்கு இடுகையாக்கலாம். ஆனால் அதிலும் ஒரு சிக்கல், நமக்கோ உறப்படியாய் ஒன்றும் எழுத வராது. அப்படியே எழுதினாலும், சரியா வராது. நாலு பேர் வந்து சிரித்துவிட்டு போய்விடுவார்கள். சரி அது வேண்டாம், நமக்கு வந்த ஆயிரங்கணக்கான கடிதங்களில் ஒன்றை எடுத்து இடுகையாக்கலாம் என்று, தேடினால்... கிடைத்ததெல்லாம்,

நான் நலம் நீ நலத்துடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன். ஏன் இப்பல்லாம் அடிக்கடி கடிதம் எழுதுவதில்லை. நீ எப்ப ஊருக்கு வருகிறாய். வீட்டில் உன்னை எல்லோரும் தேடுகிறோம். எங்களை நினைத்து கவலை பட வேண்டாம். மற்றபடி நீ போன மாதம் பணம் அனுப்ப வில்லை. இந்த மாதம் மறக்காமல் அனுப்பிவிடு.....

அடுத்து தூரத்து உறவினரிடமிருந்து,

அன்புள்ள அண்ணனுக்கு, இங்கு அனைவரும் நலம், நீங்கள் நலமா? எங்களை மறந்து இருக்க மாட்டீர்கள் என் நம்புகிறோம். எங்களுக்கு சிறு உதவி, என் தம்பி பத்தாம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் சும்மா இருக்கான். அவனுக்கு ஏதாச்சும் விசா இருந்தால் ஏற்பாடு செய்யவும். ...

இப்படி போகும்...

என்ன செய்யலாம், சரி வந்த கடித்தை மட்டும் தான் இடுகையாக்குவது என்று ஏதும் வரைமுறை இருக்கிறதா, என்ன? நாமே ஒன்றை எழுதி வந்ததாகச்சொன்னால் என்ன. அட, அதிலும் ஒரு சிக்கல். நமக்குதான் பொய் சொல்ல தெரியாதே. சொன்னாலும் மாட்டிக்கொள்வோம். என்ன செய்வது, யோசி... யோசி.. மாத்தி யோசி.... அப்படி மாற்றி யோசித்தபோது தான் நினைவு வந்தது. தமிழ் ஆசிரியர் எனக்கு வரைந்த மடல். எனக்கு வந்த பொக்கிஷம் இது, இன்றும் பத்திரமாய் வைத்துள்ளேன். என் பள்ளி இறுதி ஆண்டின் தமிழ் ஆசிரியர் அருமை கனி அவர்கள் எனக்கு எழுதிய மடல். இறுதி நாளின் போது அவரிடமிருந்து பெற்ற வாழ்த்தையும் சேர்த்து இங்கே ஏற்றியுள்ளேன். வாழ்த்து எழுதியதும் அவரிடம் கேட்டேன், 'இந்த வாழ்த்தோடு முடிந்துவிட்டது, இனி நீங்கள் யாரோ நாங்கள் யாரோ, இல்லையாம்மா?'

'இல்லை பீர், மற்ற மாணவர்களைப் போலல்ல நீ, வகுப்பில் தனித்து நின்றாய். உன்னை நான் என்றும் மறக்க மாட்டேன்.' என்றார்.

'டேய், நீ அந்த கிழவிட்ட சொல்றா, நீ சொன்னா கேட்கும்' என்று சக மாணவர்கள சொன்ன போது நான் நம்பவில்லை அன்றுதான் உணர்ந்தேன், என் தமிழ் அம்மா என் மீது வைத்திருந்த அன்பை, மதிப்பை. தமிழ் அம்மா மீது கொண்டிருந்த மதிப்பு, எனக்கும் தமிழ் காதல் வந்தது. அதற்கு நேர் எதிராக கணக்கு டீச்சர் மீது இருந்த வெறுப்பு எனக்கு இன்றளவும் கணக்கு வராததிற்கு காரணமா என்று தெரியவில்லை. 15 + 5 என்றாலும் கால்சி யை தேட வேண்டிய நிலை.

தமிழ் தந்த வாழ்த்து

புன்னகை மன்னனே! பொல்லாதவனே!

புறம் பேசாத நல்லவனே!

நன்றாய் (போதையின்றி) நீ வாழ

நானிலத்தில் புகழ் பெற்று வாழ்

இன்றும் என்றும் மறவாது

இதயம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

என்னை பல வேளைகளில்

சினம் கொள்ள வைத்தவனே!

உன்னை உளமார வாழ்த்துகிறேன்.

என்றும் அன்புடன்,

அதன் பிறகு சில நாட்கள் சென்று ஒரு புத்தாண்டோ அல்லது பொங்கலோ நினைவில்லை என் தமிழ் அம்மாவிற்கு ஒரு வாழ்த்து அனுப்பினேன். மறக்காமல்...'நீங்கள் என்னை மறந்து விட்டீங்கள் அம்மா, ஒரு கடிதம் கூட இதுவரை எழுதவில்லையே. மறக்கவில்லை என்றால் கடிதம் எழுதவும்' என்று குறிப்பிட்டு. அதற்கு தமிழ் அம்மாவின் கடிதம்,

பொக்கிஷம்

அன்புள்ள மாணவன் போதைக்கு, (Peer Mohammed)

பாசமுடன் தமிழாசிரியை வரைவது, பிரியமுடன் நீ அனுப்பிய வாழ்த்து கிடைக்கப் பெற்றேன். மனம் நிறைந்த மகிழ்ச்சி அடைந்தேன். நிற்க! (Standup)

ஆங்கில வாழ்த்தால் மட்டுமல்ல யாராலும் நான் தமிழ் மீது கொண்ட பற்று மாறாது. தமிழு மொழி என் உயிரினும் மேலானது என்பதை விட உயிருடன் கலந்தது என்பதே உண்மை! சரி! சரி! அறுவையை நிருத்திக் கொள்கிறேன் மகனே! அமர்க! (Sitdown)

நீ எப்படி இருக்கிறாய்? உன் குடும்ப சூழல் எப்படி உள்ளது? முக்கியமாக உன் மனநிலை எப்படி உள்ளது? மறந்தும் தவறான பாதைகளில் சென்றுவிடாதே! இந்த தமிழ்கிழவியை; இந்தக் கிழவி தந்த அறிவுரைகளை மறந்து விடாதே! எந்தச்சூழலிலும் நற்பண்புகளில் இருந்து மாறவே கூடாது.

நல்ல பண்புகளாலும் நல்ல செயல்களாலும் தான் நாம் வாழ்வில் உயர முடியும். நீ நன்கு நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

என்றென்றும் என் அன்பும் பாசமும் வாழ்த்தும் உனக்கு உண்டு! என் அன்பு மாணவன் பீர் முகம்மதுவை என்றும நான் நல்லவனாய், அமைதியானவனாய் அன்பானவனாய் மட்டுமே காண வேண்டும்.

ஏண்டா இந்தக்கிழவியைக் கட்டாயம் கடிதம் கூறினோம்! கிழவி இப்படி அறுத்துவிட்டாளே என்று நீ திட்டுவது இங்கு கேட்கிறது. எனவே நிறுத்திக்கொள்கிறேன். கோபப்படாதே! நன்றி!

இவள்,

தமிழ்ஆசிரியைகனி.
தமிழ் அம்மாவின் கடிதத்திற்கு பதில் எழுதும் நேரம் வந்துவிட்டது. அடுத்த இடுகையில்....

Jul 11, 2009

நமக்காகத்தான் இந்த குறள்

(18+) தப்பா நினைக்காதிங்க...

ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் மருத்துவமனை சென்று ஸெமன் சோதனை செய்ய வேண்டும் என்கிறார். மருத்துவரும் அவருக்கு ஒரு சிறிய ப்ளாஸ்டிக் டப்பா கொடுத்து, அதில் சிறிது அளவு ஸ்பெர்ம் பிடித்து கொண்டு வரச்சொல்கிறார். ப்ளாஸ்டிக் டப்பாவுடன் சென்றவர் மறுநாள் வந்து அதை மருத்துவரிடம் கொடுக்கிறார்.

மருத்துவர் அதைப்பார்த்து விட்டு, 'என்னையா, உள்ள ஒண்ணுமே இல்ல, டப்பா நான் கொடுத்த மாதிரி அப்படியே இருக்கு' என்று கேட்க,

அவர் சொன்னாராம், ' ஐயா, நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன் முடியவில்லை, என் மனைவியிடம் உதவி செய்யச்சொன்னேன் அவளும் வலது கை, இடது கை, வாய், பல் என முயற்சி செய்தும் முடியவில்லை. பிறகு அவளே அடுத்த வீட்டு பெண்ணிடம் முயற்சி செய்யச்சொன்னாள், அவளும் பலவாறு முயன்றும் முடியவில்லை, டாக்டர்.

மருத்துவர், ‘என்னது பக்கத்து வீட்டு பொண்ணா?’

‘ஆமாம் டாக்டர், இனி நீங்கள் தான் முயற்சி செய்ய வேண்டும். என்று சொல்ல...

மருத்துவர் மிரண்டு போகிறார், 'நானா?' '

‘ஆமா டாக்டர். நீங்கள் தான் எப்படியாவது இந்த டப்பாவை திறந்து தர வேண்டும்' என்றாராம்.

எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்பொருள் காண்ப தறிவு. - குறள்

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

(16+) மறுபடியும் தப்பா நினைக்காதீங்க

ஒரு அமெரிக்கர், ஒரு பாகிஸ்தானி, ஒரு இந்தியர் (அதாங்க நம்மாள்) மூவரும் கடும் வெய்யில் காலத்தில் நயாகராவில் குளிக்கச் செல்கிறார்கள். வெய்யில் அதிகம் என்பதால் முற்றும் திறந்த மேனியோடு குளித்துவிட்டு, அப்படியே வந்து சாய்விருக்கையில் சாய்ந்து கிடக்கிறார்கள். அப்போது அவ்வழியே இளம் பெண்கள் நான்கைந்து பேர் செல்வதைக்கண்டதும், உடைகள் எட்டும் தூரத்தில் இல்லை என்பதால் உடனடியாக அமெரிக்கரும் பாகிஸ்தானியும் தங்களது ப்ரைவேட் பார்ட்டை கைகளால் மூடுகின்றனர். நம்மாள் தன் கைகளால் முகத்தை மட்டும் மூடிக்கொண்டார். பெண்கள் சென்றதும் அவர்கள் நம்மாளிடம் கேட்டார்களாம், ‘ஏன்யா… முகத்தை மூடிக்கொண்டாய்’ என்று. அதற்கு நம்மாள், ‘எங்கள் ஊரில் முகத்தைதான் அடையாளம் வைத்துக் கொள்வார்கள்’ என்று சொன்னாராம்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் – குறள்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

(60+) பதிவுலக பிரபலம்

ஒரு அரசியல்வாதி, ஒரு திருடன், ஒரு பதிவுலக பிரபலம் மூவரும் இறந்த பின்பு நரகம் செல்கின்றனர். (பிறகு இவர்களுக்கெல்லாம் சொர்கமா கிடைக்கும்)

அரசியல்வாதி நரக வரவேற்பு பெண்ணிடம் வந்து, 'நான் என் நாட்டையும், நாட்டு மக்களையும், என் தொண்டர்களையும் இழந்து மிகவும் தவிக்கிறேன். அவர்களுடன் பேச விரும்புகிறேன்' என்று சொல்லி 10 நிமிடம் தொலைபேசுகிறார்.

பேசி முடித்தவுடன் வரவேற்பு பெண் பில் தருகிறார் ‘பத்தாயிரம் ரூபாய்.’

இதைப்பார்த்த திருடனும் பேச வேண்டும் என்று 20 நிமிடம் தொலை பேசுகிறான், அவனுக்கு இருபதாயிரம் பில் வருகிறது.

நம்ம பதிவுலக பிரபலம், இவருக்கு தான் யார் எது செய்தாலும் உடனே அதுக்கு எதிரா ஏதாவது செய்தாகனுமே, அவரும் பதிவுலக சகாக்களிடம் பேச ஆசைப்படுகிறார். ஒரு மணி நேரம் கிசு கிசு, எதிர் கவிதை, எதிர் கடிதம், யார் செய்தது தவறு சரி இன்னபிற பிற பிற தொலை பேசிவிட்டு, பில்லுக்காக காத்திருக்கிறார்.

அப்போ அந்தப்பெண் சொன்னாராம், 'லோக்கல் கால் இலவசம், நீ போகலாம்'

இதை ஒரு குறளில் அடக்கிவிட முடியுமா, என்ன…

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

பொருள் அறிந்து பொருத்துக.

பொருத்தியதை பொருந்தியதோடு பொருத்திப்பார்க்க வேண்டியது அவரவர் பொறுப்பு.

எண்

குறள்

யாருக்கு

1

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்.

வஜ்ராயுதம்

2

எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்பொருள் காண்ப தறிவு.

பக்கவாத்தியங்கள்

3

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அசொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

வாதி

4

அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையரிந்த தூய்மை யவர்.

பிரதிவாதி

5

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்கப்பட்டு.

நமக்கு

6

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட டொழுகப்பெறின்.

எனக்கு

7

நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு.

நடுவர்

குறள் உரை

1. இனிமையாக பழகி நட்புறவை தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்கு புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.

2. வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல் அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடமையாகும்

3. இந்தச்சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச்சொல்லை பயன்படுத்த வேண்டும்.

4. ஒவ்வொர் சொல்லின் தன்மையை உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், (அவையையும்) அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

5. ஒருவர் எதைக்காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கி காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகிவிடும்.

6. பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.

7. அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

1 = 5 2 = 25 3 = 125 4 = 625 5 = ?

சுவற்றில் எறிந்த பந்து, சேற்றில் வீசிய கல்.

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

நன்றி!

Jul 9, 2009

ஜிகர்தண்டா

நான் விரும்பி பருகும் ஜிகர்தண்டா இம்முறை என்னை பருகத் தவறியது விமான நிலையம் வந்த பின்புதான் நினைவு வந்தது.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

சிங்கை பதிவர்கள் – தமிழ்வெளி இணைந்து நடத்தும் மணற்கேணி 2009 போட்டியில் வெற்றி பெறுபவர்கள், ஸ்ரீலங்கன் விமானத்தில் டிக்கெட் கேளுங்கள். அதில் தான் இறைக்க இறைக்க ஊறும் நீரைப்போல கேட்ட கேட்ட ஊற்றித்தருகிறார்கள், இல்லை என்று சொல்லாமல். அட ஆமாங்க, எப்போதும் இல்லாமல் கடந்த இரண்டு முறையாக அதுதான் நடக்கிறது. இருந்தாலும் இருக்கைகள் காலியாகவே இருந்தன. ரிஷிசன் தான் காரணமோ?

Manarkeni 2009

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

விமானத்தில் செல்பவர்கள் கூடவே மௌஸ் ட்ராப்பும் கொண்டு செல்ல வேண்டும் போல, பிரட்டனில் இருந்து இஸ்லாமாபாத் வந்த விமானத்தில் எலிகள் தொல்லை தாங்க முடியவில்லையாம். வழக்கமா கொசு தொல்லைதான் இருக்கும். இப்போ எலி… புலி… ஐயோ நானில்லை.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

மறைந்த மைக்கேல் ஜாக்ஸன் சிறிது காலம் முன்பு இஸ்லாத்திற்கு மாறி தனது பெயரை மீகாயில் என மாற்றிக் கொண்டாராம். நெவர்லேண்ட் பண்ணை வீட்டில் அவரது ஆவியை பார்த்தாகவும், இன்னும் சாகவில்லை நாடகமாடுகிறார் என்று ஒரு கூட்டமும், அவர் கொலை செய்யப்பட்டார் என்று சிலரும், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார் என்பதாகவும் பல செய்திகள் வருகின்றன. இருக்கும் போதுதான் சர்ச்சையில் இருந்தார் இறந்த பின்பும் அது அவரை விடவில்லை.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

தேர்தலுக்கு முன்பு நடந்ததாக சொல்லப்படும் சம்பவம். மதுரை A குடும்பத்துடன் AA என்ற தேங்காய் நாட்டை சேர்ந்த சர்வதேச நகைக்கடைக்கு போய் 15 L க்கு நகை வாங்கிவிட்டு, ‘பில்ல வீட்டுக்கு குடுத்தனுப்பு’ என்று சென்றுவிட்டாராம். இரண்டு நாட்களாகியும் பில் செட்டில் ஆகாம இருக்க, மூன்றாவது நாள் வீட்டுக்கு ஆள் அனுப்பி கேட்க போக, கடைக்கு முன்னால் வரிசையா குழி தோண்டி போட்டதும் இல்லாமல் பணமும் தர முடியாது என்று சொல்லப்பட்டதாம். விற்ற சரக்குக்கு பணம் வராதது மட்டுமல்லாது, புது சரக்கும் விற்க முடியாமல் போனதால AA பவரை காட்ட வேண்டியதாப் போச்சாம். D கிணற்றில் பதுங்கி இருக்கும் D காதில் விசயத்தை போட, ஒரு மணி நேரத்தில் குழி மூடப்பட்டு பில்லும் செட்டில் செய்யப்பட்டு விட்டதாம்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

திரை அரங்குகளில் பாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், நம்ம டெயில் டெரர் ஆகப்போவதாக வதந்தி.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

வெல்லை பதிவரை விரட்டியதில், சமீப காலமாக கிசு கிசு எழுதியே கடை நடத்தும் நம்ம ஜன்னலுக்கும் முக்கிய பங்குண்டாம்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

ஒரு வரலாற்றுச் சம்பவம்; நபிகள் நாயகத்தின் சகாவாக இருந்த உமர் அவர்கள் ஒரு முறை 1000 ஒட்டகங்கள் வியாபாரத்திற்காக மொத்த விலைக்கு வாங்கி, அனைத்து ஒட்டகங்களையும் வாங்கிய விலைக்கே சில்லறைக்கும் விற்பனை செய்தார்கள். அதைப்பார்த்துக் கொண்டிருந்த உதவியாள், ‘இதனால் தங்களுக்கு என்ன லாபம்’ என்று கேட்ட, உமர் சொன்னாராம், ‘ஒட்டகத்தின் கழுத்தில் இருந்த கயிற்றை அவிழ்த்து வைத்துக்கொண்டு தானே அவற்றை விற்றேன், அந்தக்கயிறு தான் லாபம்’ என்பதாக.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

ஒரு சிறு பயிற்சி; இருக்கையில் அமர்ந்து, வலது காலை தூங்கி கடிகார சுழற்சி திசையில் சுற்றியவாறே வலது கையால் 6 என்று காற்றில் எழுதிப்பாருங்கள்… முடிந்தால்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

ஒரு சிறு முயற்சி;

கடக்கவேண்டிய பாதை

பின் வர - நான்

எனக்காய்

என்றும் வாழாத

என் நாட்கள்

முன் வந்து

என்னைக் கொல்கிறது.

நன்றி!!!

Jul 7, 2009

ருசித்ததும் ரசித்ததும்

இம்முறை ஊரில் இருந்த போது நான் ரசித்தவற்றையும் ருசித்தவற்றையும் இங்கு உங்களோடும் பகிர்ந்து கொள்ள ஆசை. வாருங்கள் முருகனில் இருந்து ஆரம்பிப்போம்.

எனக்கு முருகன் இட்லிகடை இட்லி எப்போதும் விருப்ப உணவாகவே இருந்திருக்கிறது. இந்த முறை சுவைக்கும் வரை, முன்பெல்லாம் தினமும் நாலு முருகன் இட்லி உள்ளே போகவில்லை என்றால் உறக்கம் வராது. இப்போது ஒரே ஒரு நாள் சென்றும் ஏன் சென்றோம் என்றாகிவிட்டது. இட்லியின் சுவை குறைந்துவிட்டது. சாம்பாரும் நாலு வகை சட்னியும் சற்று தேவலாம். ஆனால் அங்கு எப்போதும் சேவை அவ்வளவு சிறப்பானதாக இருந்தது இல்லை. இப்போது மிகவும் மோசமான சேவை. கிட்டத்தட்ட அன்னதான முறையில் தான் சப்ளை செய்கிறார்கள். இப்படித்தான் கிடைக்கும், விருப்பமிருந்தால் வா என்பது போல, வெறுத்துவிட்டேன்.

அதேபோல டவுன்ஹால் ரோடு தாஜ் உணவகம், நண்பர்களுடன் மதிய உணவருந்திவிட்டு வீட்டிற்கும் வாங்கிச் சென்றேன். அன்று தாஜ் பிரியாணி உண்ட எங்கள் அனைவருக்கும் வயிறு கேடானது. ஃபுட் பாய்ஸன்? மற்றபடி அவர்கள் சேவையை குறை சொல்வதற்கில்லை.

டவுன்ஹால் ரோடு பெருமாள் தெப்பம் தெற்குத்தெருவிற்கு எதிர் தெருவில் (பெயர் நினைவில்லை) இருக்கும் மூகாம்பிகை மெஸ்ஸில் மதிய சாப்பாடு சுவை அப்படியே வீட்டு சமையலைப்போலிருக்கும். அண்ணன் தம்பி அனைவரும் கூட்டு குடும்பமாக இருந்து சமைப்பார்கள். வெண்டிக்காய் கூட்டும் நல்ல சுவையாக இருக்கும். ஆணி அதிகமென்றால் வீட்டிற்குச் செல்லாமல் மூகாம்பிகை செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தோம், நானும் எனது ஒரு நண்பரும். விலை குறைவைக்காட்டிலும் வீட்டுச்சுவை தான் அங்கு இழுத்துச் செல்லும். இப்போதும் ஒருநாள் அங்கு சென்ற போது இருக்கை காலி இல்லை. திரும்பி வரவேண்டிதாகிவிட்டது. பிறகுதான் அறிந்தேன் கூட்டுக்குடும்பம் பிரிந்த பிறகு சுவையும் அவர்களை விட்டு பிரிந்துவிட்டதாக.

காளவாசல் பெல் ரெஸ்டரண்ட், கேட்டரிங் மாணவர்களைக் கொண்டு நடத்தப்படுவதால் நல்ல சேவையும் சுமாரான சுவையும் கிடைக்கிறது. ஒரு முறை சுவைக்கலாம். இரண்டாவது முறையாக சுவைத்தேன். பரவாயில்லை.

பைபாஸ் ரோட்டிலிருக்கும் அழகப்பச்செட்டி அசைவ உணவகத்தில் நாட்டுக் கோழி குழம்பு நல்ல சுவையாக இருக்கும். சுவைக்க நேரம் இல்லை.

பெரியார் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் சுல்தான் உணவகத்திலும், மேல மாசி தெற்கு மாசி வீதி சந்திப்பில் இருக்கும் புகாரியிலும் புரோட்டா நன்றாக இருக்கும். எப்படியாவது ஒரு இரவு உணவு அங்கு அமைந்துவிடுகிறது, நண்பர்களுடன் சுற்றுவதால்.

குற்றாலம் சென்றிருந்த போது, தென்காசி பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ரஹ்மத் புரோட்டா கடையில் புரோட்டா சால்னா அடித்தேன். சும்மாச் சொல்லக்கூடாது. அருமை.

அனைத்தையும் விட, தென்காசியில் என் மாமாவுடைய தோப்பில் குடித்த இளநீர். இதைச் சொல்லவில்லை என்றால் நான் ருசித்த பட்டியல் பூர்த்தி அடையாது. முதல் முறையாக மரத்திலிருந்து வெட்டிய உடன் இளநீர் குடித்தேன். என்ன சுவை, விறு விறுவென்று உள்ளே இறங்கியது. ஒரே நேரத்தில் ஐந்து இளநீர் வெட்ட வெட்ட குடித்தேன். அன்று இரவு வயிறு என்னை அடித்ததை பொறுட்டாகக் கொள்ளவில்லை.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

சிகரெட்

சிறிது புகையிலை சுற்றப்பட்ட ஒரு பேப்பரின் ஒரு முனையில் பத்தவைக்கப்பட்ட நெருப்பும் மறு முனையில் முட்டாளும்.

காதல்

கிரிக்கெட்டைப் போல, ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளை விட ஒருநாள் சர்வதேச போட்டிகள் பிரபலம்.

திருமணம்

ஒரு ஒப்பந்தம், இங்கு ஆண் தனது பேச்சுலர் டிகிரியை இழக்கிறான் பெண் தனது மாஸ்டர் டிகிரியை பெறுகிறாள்.

விவாகரத்து

திருமணத்தின் எதிர்காலப்பதம்.

சமாதானம்

தனக்கு கிடைத்ததுதான் பெரிய துண்டு என் அனைவரும் எண்ணும்படி கேக் வெட்டும் கலை போன்றது.

ஆங்கில அகராதி

இங்கு மட்டும் தான் திருமணத்திற்கு முன்பே விவாகரத்து வந்துவிடும்.

புன்னகை

சிறு வளைவால் பல கோணல்கள் நேராக்கப்படலாம்.

அலுவலகம்

கடுமையான குடும்ப வாழ்விற்குப்பிறகு ஓய்வெடுக்கும் இடம்.

கமிட்டி

ஒன்றுமே செய்ய இயலாத தனிமனிதர்கள் ஒன்றுகூடி இருக்கும் ஒரே இடம்.

அனுபவம்

முந்தைய தவறுகளுக்கு மனிதன் இடும் பெயர்.

அரசியல்வாதி

தேர்தலுக்கு முன்பு நமது கைகளையும், பின்பு நமது நம்பிக்கையையும் குலுக்குபவன்.

Jul 4, 2009

மதுரை சாலைகள்

சென்ற மதுரை பதிவர் சந்திப்பில் நண்பர் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார், ‘மதுரை பல ஆண்டுகளாக பெரிய வளர்ச்சியடையாமலும், இன்னும் இது ஒரு பெரிய கிராமமாகவே இருக்கிறதே, ஏன்?’ தெரிந்தவர்கள் சொல்லுங்கள், ப்ளீஸ்.

இம்முறை திருச்சி விமான நிலைத்திலிருந்து மதுரை செல்வது இந்த அளவுக்கு எளிதாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. முன்பொரு முறை திருச்சியில் இருந்து மதுரைக்கு கிட்டத்தட்ட 5 மணி நேரங்கள் ஆனது. இம்முறை வெறும் 2 மணி நேரங்கள் தான். நான்கு வழிச்சாலை கட்டுமான பணி மேலூர் வரை அனேகமாக அனைத்து இடங்களிலும் முடிந்துவிட்டிருந்தது. ஊர்களுக்கு வெளியேயே சாலையை கொண்டுபோயிருப்பதும் ஆங்காங்கே பேருந்து நிறுத்தங்களுக்கான அழகான நிழற்குடைகள் நிருவியிருப்பதும் இதன் சிறப்பு எனலாம். இடைப்பட்ட சிறிய பணிகள், மீதமிருக்கும் பாலம் கட்டுமானம் மற்றும் மேலூர் – மதுரை சாலையும் நிறைவடைந்துவிட்டால் 1 1/2 மணியில் திருச்சி – மதுரை யை கடக்கலாம் என நினைக்கிறேன். நகருக்கு வெளியே கட்டப்பட்டு வரும் சுங்க வாயில்கள்தான் வயிற்றில் சுண்ணாம்பைக் கறைக்கிறது.

மதுரை விமான நிலையத்தையும் சர்வதேச நிலையமாக்கும் பணிகள் நடப்பதாக அதுவும் அண்ணன் அமைச்சரான பிறகு விரைந்து நடப்பதாக வரும் தகவல்கள் வெளிநாட்டில் வேலை செய்யும் எம்போன்றோருக்கு மகிழ்ச்சி தருகிறது. மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக்கப்பட்டால் மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பயனடைவார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி இருக்கும் சித்திரை வீதி நான்கிலும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என முன்னமே அறிந்திருந்தாலும், தடைக்குப்பறகு அந்தப்பகுதிக்கு இதுவரை சென்றதில்லை. ஒரு முக்கிய பிரமுகரைக்காண நேரம் கேட்கையில் , ‘கோயிலைச் சுற்றி தான் காலையில் நடப்பதாகவும் நீயும் வந்தால் நடந்துகொண்டே பேசலாமே’ என்றதால், அவரைக் காண அதிகாலை ஆறு மணிக்கே அங்கு செல்லவேண்டி வந்தது. தட்டோடு போன்ற கற்கல் பதிக்கப்பட்டு சுற்றப்பாதை நன்றாகவே பராமறிக்கப்பட்டு வருகிறது. மாடுகள் குறுக்கே வராமலும் இன்னும் சற்று துப்புரவிலும் கவனம் செலுத்தினால், காலையில் வாக்கிங் செல்ல ஏற்ற இடம்.

பெரியார் பேருந்து நிலையம் அருகே இரயில்வே மேம்பாலம் அகலமாக கட்டியிருந்தாலும், பேருந்து நிலையத்தை சுற்றிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. மாவட்ட போக்குவரத்து ஆணையரும் அடிக்கடி போக்குவரத்தில் எத்தனையோ மாற்றம் கொண்டுவருகிறார். ஒன்றும் மாறியதாக இல்லை. மாநகராட்சி பேருந்து நிலையத்தின் வடக்கு பகுதி அதாவது ஜெயராம் பேக்கரி பகுதியில் தான் அதிகமான வாகன நெரிசலை காண முடிந்தது. அந்த பகுதியை கடப்பதுதான் எனக்கும் சிரமமாக இருந்தது. எனவே அங்குள்ள இருசக்கர வாகன நிறுத்தமும் அதை ஒட்டியுள்ள சிறு கடைகளும் மற்றும் மாநகராட்சி கட்டிடமும் சற்றே ஒதுக்கப்பட்டு அந்த சாலை விரிவு படுத்தப்படாத வரை வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியாது என நினைக்கிறேன்.

கூட்ட நெரிசல் இல்லாது இருந்த மேலமாசி வீதி தெற்கு பகுதியில் ஆலுகாஸ், பீமா நகைக்கடைகளும் தற்போது போத்தீஸூம் வந்த பிறகு நடக்க கூட இடமில்லை. போத்தீஸ் திறப்பு தினத்தன்று அந்த சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பைபாஸ் ரோடு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. காளவாசல் ஜோத்தீஸில் இருந்து நாயுடுஹால், அழகப்பச்செட்டி அசைவ உணவகம் மற்றும் பல கடைகள் புதிது புதிகாக முளைத்துள்ளது நகர் விரிவடைவதையும் நுகர்வோர் தேவை அதிகரிப்பதையும் காட்டுகிறது.

மதுரையில் நகர்புறச் சாலைகள் மேம்பட்டிருக்கிறது. ஒரு நாட்டின் உள்கட்டுமானம், அந்நாட்டு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மறுக்க முடியாதது. ஆக இனி மெல்ல மதுரை வளர்ச்சியடையும் என நம்பலாம்.

நன்றி.

Jul 2, 2009

கேள்வி யாரோ - பதில் நான்

நண்பர் டக்ளஸ் இதை எழுத அழைத்திருந்தார். நானும் எழுதுகிறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டேன், அதனால் தான் எழுதுகிறேன். இவற்றில் சில கேள்விகளில் எனக்கு உடன்பாடில்லை, அபத்தம் என்றே எண்ணுகிறேன். அவ்வாறு எண்ணும் கேள்விகளுக்கு பதில் எழுதாமல் விட்டிருக்கலாம், அவை நாகரிகம் காக்க இவை அனைத்திற்கும் பதில் எழுதியுள்ளேன். ஆனாலும் அவை நிறம் மாற்றப்பட்டுள்ளது.

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ? பீர் முகம்மது ஆகிய நான், என் சகோதரிக்கு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப்பிறகு பிறந்திருக்கிறேன். என் தாய் தந்தை ஊரில் இருக்கும் கோயில் குளம் எல்லாம் சுற்றி கடைசியில் தக்கலை என்ற ஊரில் இருக்கும் பீர்முகம்மது ஒலியுல்லா தர்ஹா வுக்குச் சென்று வந்ததற்குப் பிறகு தான் பிறந்தேனாம். அதனால் அவர் நினைவாக பீர்முகம்மது என்ற பெயர் வைத்திருக்கிறார்கள்.

பிடிக்கும்.

பிற்பாடு, படைத்த இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்றும் படைப்புகளை (தர்ஹாக்களில் இருக்கும் ஒலியுல்லாக்களையும்) வணங்கக்கூடாது என்பதற்காக முழு மூச்சாய் பாடுபடுவேன் என்று அப்போது சற்றும் நினைத்திருக்க மாட்டார்கள். 2) கடைசியாக அழுதது எப்பொழுது? கி.பி 2000, சவுதியில் மூன்று வருட வியர்வைக்குப்பிறகு மூன்று மாத விடுப்பில் ஊர் சென்றுவிட்டு மீண்டும் சவுதி திரும்பிய போது குளியலறையில் அழுதது இன்றும் நினைவில் இருக்கிறது.

நீண்ட பிரிவிற்குப் பிறகான கூடல் மகிழ்ச்சியை மீண்டும் இழந்த போதுதான் பிரிவிற்கான முழு அர்த்தமும் விளங்கப்பெற்றேன். 3) உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

என் கையொப்பம் பிடிக்கும். 4) பிடித்த மதிய உணவு என்ன? நெய்மீன் குழம்பும், சுடு சோறும்.

(குறிப்பிட்டு... நான் சமைக்கும் மீன் குழம்பு) 5) நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? ஆம் 6) கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா? கடலில் இதுவரை குளித்ததில்லை எனவே அருவியில் குளிப்பதும் பிடிக்கும். 7) முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்? ஆணாக இருந்தால் கண்.

பெண்ணாக இருந்தாலும் கண்தான். 8) உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ? பொறுமை

சோம்பேறித்தனம். 9) உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது? பேச்சு

பேச்சு 10) யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ? மனைவி, மகன் 11) இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ? வெள்ளை சட்டை, கருப்பு கால் சட்டை. சீறுடை 12) என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ? எந்தப்பாடலும் இல்லை 13) வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை? நான் நானாக இருக்கத்தான் ஆசை 14) பிடித்த மணம்? மல்லிகை 15) நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ? போதும் இதோட நிறுத்திக்குவோம். 16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ? டக்ளஸ்......இதெல்லாம் எழுதனும்னு என்னோட‌ விதி... 17 ) பிடித்த விளையாட்டு? இங்கு வேண்டாம். 18) க‌ண்ணாடி அணிபவரா? இல்லை. 19) எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்? திரைப்படம் அவ்வளவாக பார்ப்பதில்லை.

வெகுவாக பாராட்டப்பட்ட திரைப்படங்கள் மட்டும் அவ்வப்போது பார்ப்பதுண்டு. 20) கடைசியாகப் பார்த்த படம்? பசங்க 21) பிடித்த பருவ காலம் எது? இலையுதிர் காலம்

22) என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க? யுவகிருஷ்ணா - விஜயகாந்த் (புத்தகம் வாங்கிய பணத்தை ஆசிரமத்திற்கு கொடுத்திருக்கலாமோ?) 23) உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்? படங்கள் வைப்பதில்லை 24) பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்? மௌனம் 25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு? குவைத் மதுரையிலிருந்து 4316 கிமீ 26) உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா? ஒருவரை பார்த்து பேசியவுடன் அவரை தோராயமாக மதிப்படல். 27) உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்? பொய் 28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்? தூக்கம் 29) உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்? டெல்லி ஆக்ரா (இதுவரை சென்றதில்லை) 30) எப்படி இருக்கணும்னு ஆசை? இப்படித்தான் 31) மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ? தூக்கம் 32) வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க? வாழ்க்கை வாழ்வதற்கேவாழ்ந்துபார்.

ஜூன் - மறக்க நினைக்கும் மாதம்.

 

கடந்த ஜூன் மாதம் முழுவதும் என் வாழ்வில் மறக்க வேண்டிய நாட்களாக கடந்து போனது.

குவைத் வந்துவிட்டு மீண்டும் இந்தியா திரும்ப வேண்டிய குடும்ப சூழல். விடுப்பு தர மறுத்த மேனேஜரிடம் (வேலையில் திரும்பச் சேர்ந்த 4 நாட்களில் யார் தருவார்) வாக்குவாதம் முற்றி, கடைசியில் ‘நான் வேலையை விடுகிறேன்’ என்பதாக நின்றது. பின்பு அவரே தொடர்பு கொண்டு, எத்தனை நாட்கள் வேண்டும் என்று அனுப்பிவைத்தார்.

விமானத்தில் எனக்கு சன்னல் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது, கண்ணை மூடி தூங்க எத்தனித்த போது,

‘நீங்க தமிழா?’ ஒரு பெண் குரல் எழுப்பியது.

‘ம்… சொல்லுங்க’.

‘எனக்கு அந்த சீட் தர முடியுமா?’.

ஒன்றும் பேசாமல் வெளியே வந்து இடம் கொடுத்தேன்.

‘தேங்ஸ்’.

‘இதில என்னங்க இருக்கு பரவாயில்லை’  என்றேன்.

‘நான் கொலும்பு, நீங்க?’

‘மதுரை, தமிழ்நாடு’

‘ஓ… இந்தியாவா?’

விமானம் கிளம்பி சற்று நேரத்தில் துபாயில் தரையிரக்கப்பட்டது. வண்டி ஒரு மணி நேரம் நிக்கும், டீ வடை சாப்றவங்க சாப்டுக்கலாம் சொல்லாத குறை. ஆளாளுக்கு எழுந்து அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர். அப்போது வந்த குறுஞ்செய்தியை வாசிக்க கைபேசியை எடுத்த போதுதான் நினைவு வந்தது, அடடா… அவசரத்தில் அறையை பூட்ட மறந்துவிட்டோமோ என்பது. பக்கத்து அறைவாசிக்கு அடித்துச் சொல்லலாம் என்றால், ரோமிங் சார்ஜ் எக்குத்தப்பாய் ஏறும். வேண்டாம் இந்தியா சென்று இலவசமாய் இமெயில் செய்யலாம் என்று, கைபேசியை கைப்பைக்குள் வைக்கும் போது…

‘ஒரு கால் பண்ணிக்கலாமா?’ மீண்டும் அதே கொலுப்புப் பெண் (எழுத்துப்பிழை அல்ல)

‘ரோமிங் சார்ஜ் அதிகம் ஆகுமேங்க’

‘அவசரம்… ப்ளீஸ்…’

இந்தாங்க. (இளகிய மனம் அல்லது இளிச்ச மனம்)

போனில் கதைக்கிறாள். ‘நான் தான் கதைக்கிறேன். டுபாயில் இருக்கேன். இல்லை… ஒருமணியில் புறப்படும். நான் இல்லை என்டு கவலைப்பட வேண்டாம். நான் கோல் எடுக்கறேன் என்ன. இல்லை… இல்லை… ஓம்.. ஓமாம்.. (சிலபல ஓமாம் இல்லைகள் சிறிது கண்ணீருக்குப் பறகு) சரி நான் வக்கிறேன், பிறகு பாப்போம் என்ன. என்று இணைப்பை துண்டித்துவிட்டு என் கையில் பேசியை தருகிறாள். மீதித்தொகை 0.090 என்று வருகிறது. அப்போது கண்ணை மூடியவன்தான் கொலும்பு விமான நிலையத்தில் தான் திறந்தேன்.

மதுரையில் மே மாதத்தில் ஏறக்குறைய அனைத்து நாட்களிலும் மாலையில் மழை பெய்து குளிரூட்டியது. இம்முறை ஒரு நாளிலும் மழை இல்லை. வெய்யிலும் வாட்டி எடுத்தது. சிக்னலில் நிற்கும் போது காலில் யாரோ நெருப்பு வைப்பது போன்ற உணர்வு. சரி குற்றால அருவியில் தண்ணீர் நன்றாக விழுவதாகச் செய்திகளில் வருகிறதே குற்றாலத்தில் உடலைக் குளிரூட்டலாம் என்று அங்கு சென்றால், கிரகம் ஆட்டிப்படைக்கிறது. நேற்று வரை நன்றாக விழுந்த தண்ணீர் இன்று சிறுபிள்ளை மூத்திரம் போல விழுகிறது என்று கடைக்காரர்களின் கவலையை கேட்டுவிட்டுத் திரும்பினோம்.

மற்றொரு நாள் இராமநாதபுரம் உறவினர் திருமணத்திற்குச் சென்று திரும்புகையில் வண்டியில் குளிர்சாதனம் வேலை செய்யவில்லை. காலுக்கடியில் இன்ஜின் சூடு மொத்தம் வந்து பாதத்தை புண்ணாக்குகிறது. என்னப்பா இவ்வளவு சூடு என்று கேட்டால், ஓட்டுனர், ‘ரேடியேட்டர் பேன் வேல செய்யல போலயிருக்கு சார்’ என்கிறார்.

நண்பர் ‘அகநாழிகை‘  பொன்.வாசுதேவன் தனது ஒரு பதிவில் சொல்கிறார், ‘நம்மின் ஒரு சதவிகித செய்கையைக்கூட நாமே முடிவு செய்வதென்பது இயலாததாய் இருக்கிறது’ என்பதாக, இதை முற்றிலும் உண்மையாக இன்று நான் உணர்கிறேன்.

ஊருக்கு திரும்பிச் சென்ற காரியம் வெற்றியடைந்தது மட்டுமே மகிழ்ச்சி.

******************************

இடையில் இமெயில் நலம் விசாரித்த நண்பர் டக்ளஸ்… மற்றும் தொலைபேசியில் நலம் விசாரித்து தங்கை திருமண விழாவிற்கு அழைத்த நண்பர் கார்த்திகை பாண்டியன் (மன்னிக்கணும் சகா… அவசர வேலையில் சிக்கிக் கொண்டு வர முடியாமல் போய்விட்டது) மற்றும் தொலைபேசியிலும் இமெயிலிலும் தொடர்பு கொண்ட பதிவுலகம் சாரா என் அனைத்துத் தோழர்களுக்கும் நன்றியை எப்படிச் சொல்வது.

இனி தொடர்ந்து தொடர்பில் இருப்போம்.