Sep 26, 2008

பிறை

ஒரே பிறை ஒரே பிறையைத்தான் இருவரும் பார்க்கிறோம் களங்கம் அதிலில்லை தோழா காணும் நம் கண்களில்; செடிகளின் பசுமை உனக்குப் பிடிக்கிறது; நான் உடுத்திக்கொண்டால் தீண்டா நிறம் உனக்கு வெடி வெடித்தவன் தலையில் குல்லாவும் தாடையில் தாடியும் இருந்தால் நாங்கள் அனைவரும் மொட்டை போட்டு முகத்தில் முழுச்சவரம் செய்ய வேண்டுமா? பிடித்த நடிகன் முதல் விளையாட்டு வீரன் வரை 'கான்'களின் காலெண்டர் உன் வரவேற்பறையில்; என்னை வரவேற்க மட்டும் என் கடவுளோ உன் கடவுளோ குறுக்கே நிற்கிறார் எதிர் வீட்டில் என்னாரை (NRI) அண்டை வீட்டில் அமெரிக்கன் என்று பெருமைப் படுகிறாய் அருகில் என்னை மட்டும் அண்டவிடாமல் செய்கிறாய் எங்கள் இல்லங்களில் வெடிகுண்டு தயாரிப்பது குடிசைத் தொழிலென்று எண்ணுகின்றாய் போலும் குண்டுகளுக்கு மதமில்லை அவைகள் எல்லா உடல்களையும் சிதறடிக்கும் என்றுனக்குத் தெரியாதா? நீயொன்றும் மதவெறியனன்று; நீ 'ஹாப்பி கிறிஸ்மஸ்' பாடுவதைப் பார்த்திருக்கிறேன் நானும் தான் நண்பா 'கணபதி பப்பா மோரியா' என்றேன் நீயும் இம்முறையேனும் சொல்லக்கூடும் 'ஈத் முபாரக்' என்று. நன்றி; எங்கோ வாசித்தது

Sep 15, 2008

தினமலரை ஏன் வெறுக்க வேண்டும் ? - சிராஜுல் ஹஸன்

தினமலரை ஏன் வெறுக்க வேண்டும் ? - சிராஜுல் ஹஸன் தினமலர் உட்பட எந்த ஒரு நாளிதழையும் நாம் வெறுக்கவோ ஒதுக்கவோ தேவையில்லை. மாறாக - அந்த நாளிதழுடன் மட்டுமல்ல, மற்ற ஊடகங்களுடனும் நமது தொடர்பை வலுப்படுத்த வேண்டும். கேலிச்சித்திரத்துக்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்த நாம், நாம் அந்த ஊடகங்கள் செய்யும் நல்ல செயல்களை என்றேனும் பாராட்டியதுண்டா ? எடுத்துக்காட்டாக, முஸ்லிம்களை தீவிரவாதிகளாய் முத்திரை குத்தி செய்தி வெளியிடும் புகழ் பெற்ற தமிழ் நாளிதழ் ஒன்று, ஒவ்வோர் ஆண்டும் ரமளானில் முப்பது நாளும் இஸ்லாமியச் செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த நாளிதழுக்கு எத்தனை முஸ்லிம்கள் நன்றி தெரிவித்து பாராட்டுக் கடிதம் எழுதியிருப்போம் ? இதைத் தெரிந்து கொள்ள அந்த நாளிதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றும் என் நண்பரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'ஊஹூம்...! அத்தி பூத்தாற்போல் எப்போதாவது ஒன்றிரண்டு வரும்; அவ்வளவுதான்' என்று சொல்லி வருந்தினார். முஸ்லிம்கள் என்றால் எதற்கடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டுக் கத்துவார்கள்; ஆக்கபூர்வமாகச் செயல்பட மாட்டார்கள்; அப்படிக் கத்துவது கூட அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தானே தவிர மற்றவர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் கண்டு கொள்ளவே மாட்டார்கள்' எனும் ஒரு விமர்சனத்தையும் அந்த நாளிதழின் துணை ஆசிரியர் முன்வைத்தார். விலைவாசி ஏற்றம், குடிநீர்ப் பிரச்னை, மின்வெட்டு போன்ற பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சனைகளுக்காவது எந்த முஸ்லிம் அமைப்பாவது போராடி இருக்கிறதா ? எனும் வினாவையும் தொடுத்தார். இந்த விமர்சனம் சரிதானா ? வாசகர்களின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். - சிராஜுல் ஹஸன் பொறுப்பாசிரியர், சமரசம் www.samarasam.com www.iftchennai.org samarasam12@gmail.com 16-30 செப் 2008 சமரசம் இதழிலிருந்து

Sep 11, 2008

test

test