Sep 26, 2008

பிறை

ஒரே பிறை ஒரே பிறையைத்தான் இருவரும் பார்க்கிறோம் களங்கம் அதிலில்லை தோழா காணும் நம் கண்களில்; செடிகளின் பசுமை உனக்குப் பிடிக்கிறது; நான் உடுத்திக்கொண்டால் தீண்டா நிறம் உனக்கு வெடி வெடித்தவன் தலையில் குல்லாவும் தாடையில் தாடியும் இருந்தால் நாங்கள் அனைவரும் மொட்டை போட்டு முகத்தில் முழுச்சவரம் செய்ய வேண்டுமா? பிடித்த நடிகன் முதல் விளையாட்டு வீரன் வரை 'கான்'களின் காலெண்டர் உன் வரவேற்பறையில்; என்னை வரவேற்க மட்டும் என் கடவுளோ உன் கடவுளோ குறுக்கே நிற்கிறார் எதிர் வீட்டில் என்னாரை (NRI) அண்டை வீட்டில் அமெரிக்கன் என்று பெருமைப் படுகிறாய் அருகில் என்னை மட்டும் அண்டவிடாமல் செய்கிறாய் எங்கள் இல்லங்களில் வெடிகுண்டு தயாரிப்பது குடிசைத் தொழிலென்று எண்ணுகின்றாய் போலும் குண்டுகளுக்கு மதமில்லை அவைகள் எல்லா உடல்களையும் சிதறடிக்கும் என்றுனக்குத் தெரியாதா? நீயொன்றும் மதவெறியனன்று; நீ 'ஹாப்பி கிறிஸ்மஸ்' பாடுவதைப் பார்த்திருக்கிறேன் நானும் தான் நண்பா 'கணபதி பப்பா மோரியா' என்றேன் நீயும் இம்முறையேனும் சொல்லக்கூடும் 'ஈத் முபாரக்' என்று. நன்றி; எங்கோ வாசித்தது

1 comment:

  1. அன்புள்ள சகோதரரே!

    //செடிகளின் பசுமை
    உனக்குப் பிடிக்கிறது;
    நான் உடுத்திக்கொண்டால்
    தீண்டா நிறம் உனக்கு//

    பசுமை தீண்டா நிறமல்ல எங்களுக்கு. அது கண்களுக்கும் இதயத்திற்கும் குளிர்ச்சி தரும் நிறமே. இதனால்தான் எங்கள் பரந்தாமனை பச்சை வண்ண மேனியன் என்றே அழைக்கிறோம்.

    //வெடி வெடித்தவன்
    தலையில் குல்லாவும்
    தாடையில் தாடியும் இருந்தால்
    நாங்கள் அனைவரும்
    மொட்டை போட்டு
    முகத்தில் முழுச்சவரம்
    செய்ய வேண்டுமா?//

    தேவையில்லை. உண்மையில் உலகிலேயே பெரிய தீவிரவாதிகள் மேலை நாட்டினர்தான். இஸ்லாமியர் அல்லர் என்பதை சரித்திரம் சொல்கிறது. பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்துவதாக எண்ணிக் கொண்டு சிலர், இங்குள்ள அப்பாவிகளைத் தாக்குவது உண்மையில் சகோதரத்துவம் விரும்பும் இஸ்லாமியருக்கே பெரும் சங்கடமாக முடிகிறது.

    //பிடித்த நடிகன் முதல்
    விளையாட்டு வீரன் வரை
    'கான்'களின் காலெண்டர்
    உன் வரவேற்பறையில்;
    என்னை வரவேற்க மட்டும்
    என் கடவுளோ உன் கடவுளோ
    குறுக்கே நிற்கிறார்//

    இந்தியர் எவருக்கும் என்றைக்கும் எதற்காகவும் குறுக்கே நின்றதில்லை. இதை நான் உறுதியுடன் சொல்ல முடியும். இதனாலேதான், இந்தியாவில் நுழைந்த அத்தனை கலாச்சாரங்கள் இங்கே இன்று ஒன்றென கலந்து நிற்கின்றன.

    //எதிர் வீட்டில் என்னாரை (NRI)
    அண்டை வீட்டில் அமெரிக்கன்
    என்று பெருமைப் படுகிறாய்
    அருகில் என்னை மட்டும்
    அண்டவிடாமல் செய்கிறாய்//

    இது கூட சில வாக்கு வங்கி அரசியலார் உருவாகிய மாயைதான். உண்மையான அன்புக்கு மதமுமில்லை, இனமுமில்லை, மொழியுமில்லை.

    //எங்கள் இல்லங்களில்
    வெடிகுண்டு தயாரிப்பது
    குடிசைத் தொழிலென்று
    எண்ணுகின்றாய் போலும்
    குண்டுகளுக்கு மதமில்லை
    அவைகள் எல்லா
    உடல்களையும் சிதறடிக்கும்
    என்றுனக்குத் தெரியாதா?//

    வறுமைக்கு எந்த மதமும் கிடையாது, தெரியவும் தெரியாது.

    எனக்குத் தெரியும், மத வேறுபாடு இன்றி உலகில் உள்ள எல்லா எளிய மக்களும் அன்றாட வாழ்வியல் போராட்டங்களில் சிக்கித் தவிக்கிறார்கள்.

    அவர்களுக்கு மத வெறி கிடையாது. வயிற்றுப் பசிதான் தெரியும்.

    //நீயொன்றும் மதவெறியனன்று;
    நீ 'ஹாப்பி கிறிஸ்மஸ்'
    பாடுவதைப் பார்த்திருக்கிறேன்
    நானும் தான் நண்பா
    'கணபதி பப்பா மோரியா' என்றேன்
    நீயும் இம்முறையேனும் சொல்லக்கூடும்
    'ஈத் முபாரக்' என்று. //

    கண்டிப்பாக. இதற்கென ஒரு தனிப் பதிவு கூட போட்டிருக்கிறேன்.

    ஒரு இஸ்லாமிய கவிஞர் சொன்னார். உலகில் உள்ள தீவிரவாதிகளில் பெரும்பான்மையோர் இஸ்லாமியர்களாக இருக்கலாம். ஆனால், இஸ்லாமியரில் பெரும்பான்மையோர் தீவிரவாதிகள் இல்லை என்று. அதே போல, நான் சொல்கிறேன். இந்துக்களில் சிலர் மத வெறியர்களாக இருக்கலாம். ஆனால் மிகப் பெரும்பான்மையோர், மத வேறுபாடு பாராட்டாதவர்களே.

    உங்கள் கவிதை வரிகளில் உள்ள வலி எனக்குப் புரிகிறது.

    நம்புங்கள்! நாங்களும் நல்லவர்களே!

    நன்றி.

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.