Oct 30, 2009

முல்லைப் பெரியாறு - பொதுப்பார்வை

மஹாராஷ்ட்ரா மற்றும் குஜராத்திற்கு இடையே தொடங்கி இந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது மேற்கு தொடர்ச்சி மலை. மேற்கிலிருந்து வரும் அரபிக்கடலின் குளிர் காற்றை தடுத்து, அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் மழை பொழியச்செய்து பல ஆறுகளை ரிப்பன் வெட்டாமல் தொடங்கி வைக்கும் பெருமை மேற்கு தொடர்ச்சி மலையையே சாரும். தனக்கு மேற்கே இருக்கும் பகுதிகளை தண்ணீர் பற்றாக்குறை இன்றி செழிப்பாக்கியும், கிழக்கே இருக்கும் பகுதிகளை தக்காண பீட பூமியாக்கி வறட்சியில் வைத்திருப்பதும் இம்மலைத்தொடரே என்றும் சொல்லலாம். மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் கலக்கும் பெரியாறு,
  • கேரளாவில் 244 கீ.மீ நீளமுள்ள மிகப்பெரிய வற்றாத ஆறாகவும்,
  • கேரள மின் தேவையை அதிக பட்சம் பூர்த்தி செய்வதாகவும், 
  • கேரளத்தின் பெரிய நகரங்களுக்கான பாசன மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாகவும் இருக்கிறது. 
  • கேரளத்தின் மிகப்பெரிய இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளதும் பெரியாற்றின் குறுக்கேயே.
  • இதனாலேயே பெரியாறு கேரளத்தின் உயிர்நாடி ஆறு என்று சொல்லப்படுகிறது.
பெரியாறு உற்பத்தியாகும் இடத்திற்கும் இடுக்கி அணைக்கும் இடையே தேக்கடியில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை - கழுகு பார்வையில் வரலாறு
வற்றாத உயிர் ஆறான பெரியாற்றின் தண்ணீர் வீணாக அரபிக்கடலில் கலப்பதை தடுக்க இடையில் ஒரு அணை கட்டவேண்டும் என்று திருவாங்கூர் மன்னரிடம் 1862 ல் பிரிட்டிஷ் பிரதிநிதியான மதராஸ் ஆளுனர் கோரிக்கையை முன்வைக்கிறார். ஆங்கிலேயரின் கோரிக்கையை மறுக்க முடியாமல் காலந்தாழ்த்தி வந்த திருவாங்கூர் மன்னருக்கு ஆங்கிலேயரால் நெருக்கடி தரப்படவே 1886 அக்டோபர் 21 ல் அணை கட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். ஒப்பந்தத்தின் சாரம்,

ஒப்பந்த தேதியில் இருந்து 999 ஆண்டுகள் வரை ஒப்பந்தம் செல்லுபடியாகும். அணையில் தேக்கப்படும் நீரில் 104 அடிக்கு மேலுள்ள நீர் சுரங்க வழியின் மூலம் மதராஸ் கொண்டு வர வேண்டும். அணை கட்டப்படுவதால் மூழ்கடிக்கப்படும் 8000 ஏக்கர் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 5 வீதம் 40,000 ரூபாய் வருட வாடகையாக சென்னை அரசாங்கம், திருவாங்கூர் மன்னருக்கு கொடுக்கவேண்டும். அதாவது அணை அமைந்திருப்பது கேரளாவில் என்றாலும் (999 வருட வாடகை ஒப்பந்த அடிப்படையில்) தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

60 ஆண்டுகள் இதே ஒப்பந்தம் நடந்து கொண்டிருக்கையில் தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சரி செய்ய, பெரியாறு தமிழகத்தில் நுழையும் இடத்தில் ஒரு மின உற்பத்தி நிலையம் கட்டுவதற்காக 1970 ல் பழைய ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அணை கட்டப்பட்டதால் அந்தப்பகுதியில் மூழ்கடிக்கப்பட்ட நிலத்திற்கு ஏக்கருக்கு ரூபாய் 30 வீதம் 8000 ஏக்கருக்கு 2,40,000 ரூபாய் வருட வாடகையாக தமிழக அரசு, கேரள அரசிற்கு கொடுக்க வேண்டும். மட்டுமின்றி அந்தப்பகுதி மீன் படி உரிமையும் கேரள அரசிடம் செல்கிறது.

இந்நிலையில் 1979 ல் மலையாள மனோரமா என்ற கேரள இதழ், 'முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயத்தில்' இருப்பதாக பரபரப்பு செய்தியை வெளியிடுகிறது. அதைத்தொடர்ந்து கேரள அரசு மற்றும் மத்திய நீர் வளத்துறையின் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு அணையை மேலும் வலுப்படுத்த முன்வருகிறது. அதுவரை தேக்கப்பட்டுக்கொண்டிருந்த நீர் 154 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்படுகிறது. அணையில் மராமத்து வேலைகள் செய்யப்பட்டு வலுப்படுத்தப்பட்ட பிறகு நீர் மட்டத்தை உயர்த்த கேரள அரசு மறுத்துவிட்டது, இன்று வரை மறுத்து வருகிறது.

என்ன பிரச்சனை?
 
அணையில் இருந்து வரும் நீர் முல்லை ஆறு வழியாக தேனி மாவட்டத்தின் முக்கிய நகரங்களுக்கு பாசன மற்றும் குடிநீர் தேவைகளை நிறைவு செய்து வைகை ஆற்றில் கலக்கிறது. அதுவே வைகை அணையின் நீர் ஆதாரமாகவும் இருக்கிறது. அதனாலேயே மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் பாசன மற்றும் மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவையும் நிறைவடைகிறது. இவற்றிக்கு தமிழ்நாட்டிற்கு குறைந்தபட்ச தேவை 84 மில்லியன் கனமீட்டர் தண்ணீர். இந்த குறைந்தபட்ச தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டுமாயின், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட வேண்டும். தற்போது இருக்கும் 136 அடியில் போதுமான தண்ணீர் கிடைக்காமல் மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல ஏக்கர் நிலம் தரிசாகிக் கிடக்கிறது. பல விவசாயக் குடும்பங்களின் தற்கொலைக்கும் பட்டினிச் சாவுக்கும் தண்ணீர் பற்றாக்குறையே காரணம்.

அணையின் நீர் மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டதால், நீரின் கொள்ளளவு 10.4 ல் இருந்து 6.4 டி.எம்.சி யாக குறைந்துள்ளது. அதனால் 140 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் கணிசமான அளவு மின் உற்பத்தி குறைந்துள்ளதும் தமிழக அரசிற்கு நஷ்டமே. அது மட்டுமின்றி, அணையிலிருந்து வழிந்தோடும் தண்ணீர் மூலம் அடுத்த அணையான இடுக்கியில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்திற்கே விற்கப்படுவது கொடுமை. நமக்கு தரவேண்டிய தண்ணீரைக் கொண்டு மின்சாரம் தயாரித்து அதை நமக்கே மீண்டும் விற்பனை செய்கிறார்கள்.

152 அடியாக இருந்த போது மூழ்கியதாக சொல்லப்பட்ட 8000 ஏக்கர் நிலம், தற்போது 136 அடியாக நீர் மட்டம் குறைக்கப்பட்டதால் மூழ்கிய நிலத்தில் பகுதி மீட்கப்பட்டுவிட்டது. மீதி நிலத்தை கேரள அரசும் கேரள மக்களும் பயன்படுத்திவருகின்றனர். ஆனாலும் தமிழக அரசு 8000 ஏக்கர் நலத்திற்கான வாடகையை செலுத்திவருகிறது. அணையின் நீர் மட்டம் உயர்த்தப்பட்டால் அந்த ஆக்கிரமிப்பு நிலங்களை காலிசெய்ய வேண்டிவரும் என்ற அச்சமும் உள் அரசியலும் இப்பிரச்சனையில் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

நீதிமன்ற வழக்கு

152 அடிக்கு நீர் தேக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்திலும், 136 மேல் உயர்த்தக்கூடாது என்று கேரள அரசு கேரள உயர் நீதி மன்றத்திலும் வழக்குத்தொடங்கியது. அவ்வழக்கு உச்சநீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு 2006 பிப்ரவரியில் இருமாநிலத்திற்கும் பொதுவாக 142 அடியாக நீர்மட்டத்தை வைத்துக்கொள்ள ஆணை பிறப்பிக்கப்படுகிறது. உச்சநீதி மன்றத்தின் ஆணையை சற்றும் மதிக்காத கேரள அரசு 136 அடியிலிருந்து நீர் மட்டத்தை உயர்த்தாததோடு மட்டுமின்றி, அணை அபாயகட்டத்தில் இருப்பதாகச்சொல்லி புதிய அணை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. பெரியாற்றில் புதிய அணை கட்டப்பட்டுவிட்டால் மேலே குறிப்பிட்டுள்ள தமிழக மாவட்டங்கள் குடிக்கவும் தண்ணீர் இன்றி பஞ்சத்தால் பாலைவனமாகிவிடும்.

அணை உடையும் அபாயமில்லை என்று தமிழக அரசும், அணை அபாய கட்டத்தில் இருப்பதாக கேரள அரசின் சார்பாக ஐஐடியின் அறிக்கையும் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்தவாரம் கேரள அரசு வெளியிட்ட ஒரு அறிக்கை, ‘முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் 40 லட்சம் பிணங்களை அரபிக் கடலில் தேடவேண்டியிருக்கும்’ என்று சொல்கிறது. முல்லை பெரியாறு அணையின் தண்ணீர் முழுவதையும் இடுக்கி அணையாலும் தாங்க முடியாது என்கிறது கேரள அரசு. இதற்கிடையே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள மத்தியஅரசின் ஒப்புதலும் கேரள அரசிற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • பெரியாறு அணையின் கடைசி தண்ணீர் குடிக்கப்படும் இராமநாதபுரம் கடலோர பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்கள் டன் கணக்கில் கேளராவுக்கு சென்று ஏற்றுமதியாகிறது.
  • ஒட்டஞ்சத்திரத்தில் இருந்து காய்கனிகள் கேரளாவிற்கு செல்கிறது. (இவ்வளவு நீர் வளம் இருந்தும் கேரளாவில் விவசாயம் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை என்பதை நினைவில் கொள்க)
  • வீடு கட்ட மணலும் கூலித்தொழிலாளர்களும் தமிழ்நாட்டிலிருந்தே செல்வதும் கவனத்தில் ஏற்கவேண்டும்.
  • அட இவ்வளவு ஏன்..  நல்ல கல்விக்கு கேரளமக்கள் தமிழ்நாட்டையே நம்பி இருக்கிறார்கள்.
இத்தகைய வாழ்வுசார் உதவிகள் தமிழ்நாட்டிலிருந்து கிடைப்பதற்கு கைமாறாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் நன்றியாக எண்ணி தமிழக தென் மாவட்டங்களின் தண்ணீர் தேவையை ஒரளவுக்கேனும் தீர்த்து வைக்க முன்வர வேண்டும்.

தமிழக அரசிற்கு: கேரள அரசு பிரதானமாக முன்வைக்கும், 'அதிக அளவு நீர் தேக்கம் அல்லது சிறிய (4 ரிக்டர் அளவு) நில நடுக்கத்தால் அணை உடைவதால் ஏற்படுவதாக கணிக்கும் உயிர் சேதத்தையும்' கவனத்தில் கொண்டு பேச்சு வார்த்தை செய்வதாலேயே ஏதாவது சாதகமான நிலை ஏற்படலாம். இயற்கை சீற்றத்தால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழுமாயின் இழப்பது லட்ச கணக்கான உயிர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அணையின் உண்மை நிலையை உள்ளது உள்ளபடி சொல்வதாலோ அல்லது இரு மாநிலங்களுக்கும் நடுவாக ஏதாவது வெளிநாட்டு அமைப்பைக்கொண்டு அணையை ஆய்வு செய்யச் சொல்வதாலோ கேரளாவோடு கை கோர்க்கலாம். குறைந்தபட்சம் 136 அடியிலேயே நீர்மட்டம் இருக்கச்செய்யலாம். எப்படியாவது புதிய அணை கட்டாது நிலைமையை சரிசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சி அரசியல் பாராது திராவிட கட்சிகளும், கம்யூனிஸ்டுகள் மற்றும் சரத்குமார்களும் இணைந்து செயல்பட்டு தென் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனையை தீர்த்துவைக்க வேண்டும். இது நடக்குமா?...

Oct 29, 2009

குவைத்தில் சென்றவார இரண்டு நிகழ்வுகள்

ஆன்லைன் மோசடிகளில் பலவற்றை பல தளங்களில் வாசித்திருக்கிறேன். என்னைத்தெரிந்த நண்பர்களுக்கும் எனக்குத்தெரிந்தவரை மோசடிக்காரர்களின் வகை நுட்பங்களை அவ்வப்போது சொல்லிவருகிறேன். ஆனாலும் அறிமுகமானவரோ அல்லாதவரோ ஏமாற்றப்பட்டதாக அவ்வப்போது வரும் செய்திகள் வேதனையளிக்கிறது. ஏமாற்றுபவர்களும் புதிது புதிதாக யோசிக்கிறரார்கள். நமக்கு தோன்றாத, கற்பனைக்கு எட்டாத வகையில் எல்லாம் ஏமாற்றுகிறார்கள், ஏமாறுகிறவர்களும் அவ்வாறே.
நமக்கு முற்றிலும் பரிச்சயம் இல்லாத புதியவர்களின் ஆசை வார்த்தைகளை, தொடர்பு முயற்சியை மோசடி என்று உறுதியாக அனுமானிக்காவிட்டாலுமே அவற்றை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது என்று பலராலும் அறிவுருத்தப்படுகிறது. இவற்றை நாம் தெரிந்திருந்தாலும் சில வேளைகளில் அதிமேதாவித்தனமாக நடந்துகொள்வதுண்டு. உதாரணமாக, இணையத்தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் ஒரு முறையாவது இப்படியான மின்னஞ்சல் வந்திருக்கும்.
Congratulations, it's your lucky day! You've just won $5,000!
இதை படிக்கும் அனைவருக்கும் சபலம் தட்டும், இருந்தும் ஷிஃப்ட் டெலிட் செய்பவர்கள் யதார்த்தவாதிகள். இதற்கு ஒரு பதில் அனுப்பினால் என்ன நஷ்டம் வந்துவிடப்போகிறது என்று ரிப்ளையை தட்டுபவர்கள் யதார்த்தவாதியாக தன்னை நம்பிக்கொல்’பவர்கள். மெயில் அனுப்பியவன் பார்வையில் இவர்கள் ‘வலையில் அருகே வந்துவிட்ட மீன்’ அதை எப்படி வலைக்குள் சிக்க வைக்க வேண்டும் என்பதும் வலை வீசியவனுக்குத் தெரியும். லாட்டரியில் கிடைத்திருக்கும் பணத்தில் உனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு மீதியை எனக்கு அனுப்பு’ என்பது போன்று பலரும் மெயில் செய்ததாக சொல்லக்கேட்டிருக்கேன். எனக்குத்தெரிந்த பலர் மெயில் ரிப்ளை செய்துவிட்டு அவன் கேட்ட பணம் அனுப்பாவிட்டாலும் அவர்களோடு போனில் பேசியே பணத்தை விட்டிருக்கிறார்கள்.  ஆனால் சென்ற வாரம் நான் கேட்டறிந்த ஒரு புதிய செய்தி மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.
தென் ஆர்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ரஹீம் என்பவர், 80 குவைத் தினாருக்கு செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். அவர் பாவிக்கும் மொபைலின் சேவை வழங்கும் வத்தானியாவிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது, பேசியவர் அவ்வாறுதான் சொல்லியிருக்கிறார். அழைப்பின் போது நம்மாளின் பெயர், அவரது சிம் கார்டு சீக்ரட் நம்பர் மற்றும் சிம் கார்டுடைய தனிப்பட்ட நம்பர் ஆகியவற்றை சொல்லி, ‘உங்களுக்கு 30,000 குவைத் தினார் பரிசு கிடைத்திருப்பதாகவும் குவைத்தில் லாட்டரி தடைசெய்யப்பட்டிருப்பதால், குவைத்திற்கு வெளியே நடைபெற்ற குலுக்கலின் பரிசுத்தொகை நேரடியாக இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்படும், எனவே இந்தியாவிற்கு அனுப்புவதற்கான செலவு மற்றும் சில அலுவலக செலவுகளுக்காக 200 குவைத் தினார் அனுப்ப வேண்டும்’ என்றும் சொல்லியிருக்கிறார். நம்மாள் இதை யாருக்கும் சொல்லவில்லை. அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் ஐந்தும் பத்துமாக கடன் வாங்கி 160 தினார் வெஸ்டன் யூனியன் மூலமாக அனுப்பியிருக்கிறார். பணம் அனுப்பும் போது வெஸ்டன் யூனியனில் கேட்டிருக்கிறார்கள், ‘நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு பணம் அனுப்பவேண்டும்?, ஏதும் தவறான செயலில் ஈடுபடுகிறீர்களா?’ என்பதாக, இவரும் இல்லை.. இல்லை.. என்னுடன் வேலை செய்யும் நண்பர் லீவில் சென்றிருக்கிறார். ஏதோ கஷ்டமாம், அவருக்குத்தான் அனுப்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.  பாகிஸ்தானில் பணம் கிடைக்கப்பெற்றதும், இன்று மாலை 5 மணிக்கு உங்களது பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும். வீட்டிலிருந்து யாரையாவது வெஸ்டன் யூனியனுக்கு சென்று காத்திருக்கச் சொல்லுங்கள் என்று சொல்லப்பட,  இவரும் வீட்டிற்கு அழைத்து ‘நாம பணக்காரங்களாகிட்டோம், இனி நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்திடும், ஒரு பெரிய பைய எடுத்திட்டு போயி வெஸ்டன் யூனியன்ல வெயிட் பண்ணுங்க. நான் போன் பண்றேன்’ என்று சொல்லிவிட்டாராம். வீட்டிலிருந்து சென்றவர்கள் இரவு வெஸ்டன் யூனியன் கதவு மூடப்படும்வரை காத்திருந்து திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.
மறுநாள் ரஹீம் அறைவாசியிடம் மெதுவாக விஷயத்தை சொல்லியிருக்கிறார். அறைவாசி மூலமாக விஷயம் கசிந்திருக்கிறது. ரஹீமை தெரிந்தவர்கள் அனைவரும் போய் அனுதாபத்தோடு சிலர் திட்டவும் ஆரம்பிக்க, ரஹீம் பாகிஸ்தானுக்கும் சவுதிக்கும் (அங்கிருந்துதான் அழைப்பு வந்திருக்கிறது) மீண்டும் மீண்டும் போன் செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த நபர், நான் பாகிஸ்தானிலிருந்து உன் வீட்டிற்கு பணம் அனுப்பினால் உன்னை தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் கைது செய்து உன் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி விடுவார்கள். குவைத்திற்கு அனுப்பினாலும் நீ ஊர் திரும்ப முடியாது. இப்போது சொல்.. பணம் வேண்டுமா? என்று மிரட்டியிருக்கிறார். இவர் விடாமல் மீண்டும் மீண்டும் போன் செய்து தங்கை கல்யாணம், அம்மா ஆபரேஷன் என அழுதிருக்கிறார். அந்த நபருக்கு மனம் உருகியோ அல்லது ரஹீமுடைய தொந்தரவு தாங்காமலோ சுமார் 150 தினார் இந்தியாவிற்கு அனுப்பி கொடுத்திருக்கிறார். ரஹீம் கொடுத்ததில் மீதி மற்றும் போனுக்கு செலவு செய்தது என சுமார் 5000 ரூபாய் நட்டம், இருந்தாலும் ஆள் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
சாதாரணமாக இம்மாதிரி மோசடிக்காரர்கள் யாரும் பணத்தை திரும்ப தந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. இவர் ஏதோ தொழிலுக்கு புதுசு போல… பாவம். நான் நினைக்கிறேன் வேறு யாரோடமோ ஏமாற்றிய பணத்தை ரஹீமுக்கு நேரடியாக அனுப்பியிருக்கிறார் போல. பணம் கையில் கிடைத்ததும் ரஹீம் அவருக்கு மிரட்டல் அறிவுரை செய்தாராம். :)
இவ்வகை மோசடிகளில் இருந்து காத்துக்கொள்ளவும், அவற்றை பகுத்தறியவும் இங்கே சொல்லப்பட்டுள்ளதை விளங்கிக்கொள்ளலாம்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பகாலா என்று சொல்லப்படும் அரபு நாடுகளின் சிறு மளிகை கடைகளில் பெரும்பாலும் இந்தியர்கள், பெங்காலிகள் வேலைக்கு இருப்பார்கள். என் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு 24 மணி நேர பகாலாவில் பெங்காலி ஒருவர் கல்லாவில் இருப்பார். அன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இரண்டு மூன்று குவைத்தி சிறுவர்கள் வந்து பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். பெங்காலி தர மறுக்கவே திருப்புளி (ஸ்க்ரூ ட்ரைவர்) யை கொண்டு  அவர் வயிற்றில் குத்தியவாறே திருப்புளியை சுற்றியிருக்கிறார்கள். நிகழ்விடத்திலேயே உயிர் போய்விட்டது. இரண்டு மணி நேரத்திற்கு பிறகுதான் யாரோ பார்த்து காவல்துறைக்கு தகவல் சொல்ல, அதற்கடுத்த நாளே கொலைகாரனை பிடித்துவிட்டார்கள்.cctv-poster
பகாலாவிற்கு எதிரில் இருக்கும் அபார்ட்மண்டின் சிசிடிவி  பதிவில் இருந்து கொலைகாரனுடைய வாகன எண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்டி கொடுத்த குற்றவாளிகள் பற்றிய பல செய்திகளை படித்திருக்கிறேன். குற்றவாளிகளால் ஊகிக்க முடியாத தடயமாக சிசிடிவி இருக்கிறது என்றாலும் கொல்லப்பட்ட உயிர் திரும்ப வராது.
இன்றும் சில அரபிகள், இந்தியர்கள் (பெங்காலி, நேபாளி, இலங்கையர்) என்றாலே ஏளனமாகத்தான் பார்க்கிறார்கள். பேருந்தில் பயணிக்கும், தெருவில் நடந்து செல்லும் நம்மவர்களைக் கண்டால் தொல்லைகள் தருவதும் பணம் பரிப்பதும் அன்றாட நிகழ்வே. குவைத்தில் அரபி சிறுவர்களுக்கு பேருந்து கட்டணம் இல்லை என்பதால், மாலை வேளைகளில் குழுவாக பேருந்தில் சென்று விளையாடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். இவர்களின் குழுவைக் கண்டால் பேருந்து ஓட்டுனர் நிறுத்தாமல் சென்றுவிடுவார். அவ்வாறு நிறுத்தாமல் செல்லும் பேருந்தின் சன்னலில் கல் எறிந்து கண்ணாடி உடைக்கப்படும். அதை பழுதுபார்க்கும் செலவும் ஓட்டுனர் சம்பளத்தில் பிடித்துக்கொள்ளப்படுகிறது.
நாம் வேலைக்குச் செல்லும் நாட்டின் குடிகளையும் வேலை வாங்கும் திறமையான வேலைக்குச் செல்பவர்களுக்கே மதிப்போடு மரியாதையும் கிடைக்கிறது என்பதை சவுதியிலும் குவைத்திலும் கண்டிருக்கிறேன். ஏனைய நாடுகளிலும் அவ்வாறே இருக்க வேண்டும். அம்மாதிரி தகுதியான வேலையில் நல்ல ஊதியத்தோடு வெளிநாடுகளில் வேலை செய்பவர்களாலேயே வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக்கொள்ள முடிகிறது. குவைத்தை பொருத்தவரை தினார் 250 (1 X 163 இந்திய ரூபாய்) க்கும் அதிகமாக ஊதியம் வாங்குபவர்களே ஓரளவு பணத்தை சேமிக்க முடிகிறது. மற்றவர்களின் வரவுக்கும் குடும்ப செலவுக்கும் சரியாக போய்விடுகிறது. வீட்டு வேலைக்கும், கட்டிட வேலைக்கும் வந்து பல துன்பங்களை சகித்தவாறே நாட்களை கடத்தும் இந்தியர்களை காணும் போதும், அவர்களின் துன்ப நிகழ்வுகளை கேட்டறியும் போதும் மனம் வேதனையடைகிறது. குறைந்த சம்பளத்திற்கு வெளிநாடு வந்து சிரமப்படும் இந்தியர்களை பற்றி அடுத்த வாய்ப்பில் எழுத முயற்சிக்கிறேன். இறைவனை நாடினால்…

Oct 20, 2009

மிஸ் சுப்புலட்சுமி

iniyaal: சுப்புலட்சுமியை ரமேஷ் கொலை செய்துட்டானாம்.
சுப்புலட்சுமி தெரியும்ல.. நம்ம கூட படிச்சாளே...
me:  ஆமாமா தெரியும்.  :( ஏன்.. என்னாச்சு?

ஸ்ரீரங்கம் புனித அந்தோனியர் மேல்நிலைப்பள்ளி 11 ஆம் வகுப்பில்தான் சுப்புலட்சுமி எனக்கு பழக்கம். அதற்கு முன்பு ஆலங்குடி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் படித்திருக்கிறாள். அவளும் ஆணிமுத்துவும் வயல், தோப்பு, கம்மாய் என ஒன்றாய் சுற்றியிருக்கிறார்கள். பிறகு ஆணிமுத்து கறவை மாடுகளுடன் அதே இடங்களை சுற்ற, கிராம தலையாரி மகளான சுப்புலட்சுமி மேல் படிப்பிற்காக திருச்சி ஸ்ரீநிவாசா நகரிலிருக்கும் தலையாரியின் தங்கை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அதன் பிறகு எப்போதாவது ஆலங்குடி போகும்போது ஆணிமுத்து நேரிட்டால் 'ஹாய் ஆணி.. ஹவ் ஆர் யூ' என்பதோடு சரி. இப்போதெல்லாம் ஆணியை  தீர மறந்துவிட்டாள் போலும். அவன் பற்றிய பேச்சே இல்லை.

இரண்டு வருடங்களில் சுப்புலட்சுமி நிறையவே மாறிவிட்டிருந்தாள்.  கல்லூரியில் சேர்ந்த பிறகு சுப்புலட்சுமி நவமணி என்ற பெயரை சுலக்ஷனா என்பதாக மாற்றிக்கொண்டாள். லைஃப்ஸ்டைல் மாறிவிட்டது. சுப்புலட்சுமியாக இருந்தபோது கண்டுகொள்ளாத கந்தசாமிகள், சுலக்ஷனாவான பிறகு சும்ம்மா பின்னால் அலைந்தனர், அவளும்தான்.  கந்தசாமிகளில் ஒருவனான ரமேஷிடம் மட்டும் நெருங்கி பழக ஆரம்பிக்க, மற்றவர்கள் ஒதுங்கிவிட்டிருந்தார்கள்.  அவனோடு சேர்ந்து திருச்சியில் அவள் சுற்றாத இடமில்லை. அடிக்கடி இருவரையும் முக்கொம்பு அணைக்கட்டில் பார்த்ததாக இனியவள் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஸ்ரீரங்கத்திலிருந்து லாங்ஜம்ப் தூரம் என்பதால் முக்கொம்பை தெரிவு செய்திருக்கலாம். இருவருக்கும் அசைவ உணவு பிடித்திருந்தது. புகாரியில் வாரம் இருமுறை மதிய உணவிற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். ரமேஷ், சுலக்ஷனாவிற்குள் இருந்த சுப்புலட்சுமியை காதலித்தான். அவளுள் இருந்த கிராமத்து அழகை ரசித்தான். ஆனால், சுலக்ஷனா தான் கிராமத்துக்காரி என்று அறியப்படுவதை வெறுத்தாள். அதை வெளிக்காட்டுவதை அவமானமாக உணர்ந்தாள். அவளுக்கு ரமேஷ் என்ற பெரிய இடத்து பையனைத்தான் பிடித்திருந்தது.  ஒரு வார விடுமுறையில் ஆலங்குடி சென்றுவந்த சுலக்ஷனாவிடம், ரமேஷ் சுவீடனுக்கு சென்றுவிட்டதாக இனியாள்தான் சொல்லியிருக்கிறாள். ஆத்திரமடைந்த சுலக்ஷனா, ரமேஷ் தன்னை ஏமாற்றவிட்டதாக அவனை மட்டுமல்ல மொத்த ஆண்களையும் வெறுக்க ஆரம்பித்தாள். அதற்கடுத்த மாதமே ஆஸ்திரியாவில் கிடைத்த இரண்டு வருட ஒப்பந்த வேலைக்கு சென்றுவிட்டாள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இனியாள் சாட்டில் வந்தாள். சுலக்ஷனா கொலை செய்யப்பட்டுவிட்டாளாம். அவளது சொந்த ஊரான கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடியில் வைத்து ரமேஷ் தான் கொலைசெய்திருக்கிறான் என்றும் சாட்டினாள்.

ரமேஷ் பெரிய இடத்து பையன், பிறந்ததில் இருந்து போஷாக்கானவன். தாய் மற்றும் மூன்று தாதிகளின் பராமரிப்பில் வளர்ந்தவன். இன்று ஒரு MNC வங்கியின் Investment டிவிஷனுக்கு வைஸ் பிரசிடன்ட்.  எனக்கு ரமேஷ் அவ்வளவாக பழக்கமில்லை என்பதால், அவனைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள இனியாளைக் கேளுங்கள்.

இந்தக்கொலையை ரமேஷ் செய்திருக்கமாட்டான் என்று நம்புகிறேன்.  அவன் அவளை எப்போதும் வெறுத்ததில்லை. கடைசிவரை அவளுடன் நெருக்கமாகவே இருந்திருக்கிறான். ஒரு வேளை ஆணி? விஷயம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்... 

இப்படிக்கு,
மணிமேகலை.
ஸ்ரீரங்கம்.

Oct 18, 2009

நட்பு என்பது...

நட்பு என்பது... 'மன்னிச்சுக்கோங்க பாஸ்' என்பதல்ல, 'தப்பு உம்மேல தான்டா' என்பது.
நட்பு என்பது... 'உனக்காக நான் இருக்கிறேன்' என்பதல்ல, 'எங்கடா அடி வாங்குன' என்பது
நட்பு என்பது... 'நான் புரிந்து கொண்டேன்' என்பதல்ல, 'எல்லாம் உன்னாலதான்டா' என்பது
நட்பு என்பது... 'உன்னை நான் கவனமாக பார்த்துக்கொள்வேன்' என்பதல்ல,'நாயே, உன்ன விட்டுட்டு எங்கடா போகப்போறேன்' என்பது
நட்பு என்பது... 'உன் வெற்றியில் மகிழ்கிறேன்' என்பதல்ல. 'பார்ட்டிக்கு ஏற்பாடு பண்றா மாப்ள' என்பது.
நட்பு என்பது... 'நான் அவளை காதலிக்கிறேன்' என்பதல்ல, 'டேய் மரியாதையோட பாருடா.. அவ உன் அண்ணி' என்பது
நட்பு என்பது... 'நாளைக்கு வெளிய போகலாமா?' என்று கேட்பதல்ல, 'நடிக்காதடா... நாளைக்கு நாம வெளிய போறோம்' என்பது
நட்பு என்பது... 'விரைவில் குணமடையணும்' என்பதல்ல, 'ஜாஸ்தி குடிச்சா இப்டித்தான் ஆகும், என்பது
நட்பு என்பது... 'உன் பதவி உயர்வுக்கு வாழ்த்துக்கள்' என்பதல்ல, 'வண்டி ஓவர் ஸ்பீட்ல போகுது, ப்ரேக் போட்றா' என்பது
 நட்பு என்பது... 'அம்மா செலவுக்கு பணம் அனுப்பு' என்பதல்ல, 'அடுத்த தடவ போன் பண்ணும் போது மனசுவிட்டு பேசுடா, சின்ன வயசில பார்த்த சூப்பர் வுமன் இல்ல.. அம்மா, பக்கத்தில இருந்து கவனிச்சுக்கணும், உடனே ஊருக்கு கிளம்பி போ, காசு நாளைக்கு சம்பாதிக்கலாம்' என்பது.
 இத்தகைய நட்பை எனக்கு பெற்றுத்தந்த இணையத்திற்கு.... ஐ... நன்றி சொல்வேன்னு நெனச்சீங்களா... போய் வேலைய பாருங்க... 

Oct 16, 2009

அம்மா

எனக்கு நான்கு வயதிருக்கும், பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஆயா வந்தபிறகு தான், அம்மா எனக்கு தலை சீவி விடுவாள். தேங்காய் எண்ணை தேய்த்து, ஏற்றி சீவி, பிறகு நெற்றியிலிருந்து முன்று இன்ஞ் அளவிற்கு விட்டு மீதி முடிகளை வலதிலிருந்து இடது வாகு எடுத்து ஒட்ட வகிர்ந்து விடுவாள். முன்பக்கம் மட்டும் தூக்கலாக பாப் ஆகி இருப்பதால், அதற்கு பெயர் பஃப். அவசரத்திற்கு வேறு மாதிரியாக சீவினாலும், அழுது அடம் பிடிப்பேன். என் ஃபேவரைட் பஃப் ஹேர்ஸ்டைல் தான். எனக்கு பஃப் சீவிவிட்டதிலிருந்து தான் என் அம்மா எனக்கு நினைவிருக்கிறாள். அதற்கு முன்பு, எனக்கு இந்த பூவுலகை காண்பிப்பதற்காக, என்னை பெற்றெடுப்பதற்காக 20 வருடங்களாக கோயில், குளம், தர்கா என்று வேண்டுதலுக்காக சுற்றியிருக்கிறாள். தன்னை வருத்தி எனக்கு உயிர் கொடுத்த என் அம்மா.

எனக்கு ஆறு வயதிருக்கும், அதிகாலை நான்கு / ஐந்து மணிக்கு, பாண்டி கடையில் வாங்கிவந்த டீ யை டம்ளரில் ஊற்றி ஆற்றியவாறே என்னை மட்டும் மெதுவாக எழுப்புவாள், 'டேய்.. பீரப்பா.. எந்திரிப்பா.. டீ குடிச்சுட்டு படுத்துக்கோ'. எனக்கு டீ குடிப்பதில் அலாதி பிரியம் இருந்தது. அருகில் உறங்கிக்கொண்டிருக்கும் அப்பாவிற்கு சத்தம் கேட்டுவிட்டால், அம்மாவிற்கு திட்டு விழும், 'தூங்கற பையன எழுப்பி டீ குடுக்குறியே.. அறிவிருக்கா உனக்கு, அவன கெடுக்கறது நீ தான்'. இல்லை.. எனக்காகவே என்னை எழுப்புவாள்,  எனக்காக திட்டு வாங்கிய என் அம்மா.

என் பதின் வயதிற்கு முன்பாகவே அப்பா இறந்துவிட்டார். அதன் பிறகு என் அம்மா தான் என்னை படிக்க வைத்தாள். 'வீட்டுப்பாடம் எழுதிட்டு போய் தூங்குப்பா' என்பாள். நான் எழுதி முடிக்கும்வரை அருகிலேயே அமர்ந்திருப்பாள். பீரப்பா.. குண்டு குண்டா.. அழகா எழுதுவான்.. தெரியுமா' என்று பக்கத்து வீடுகளில் பெருமையாய் பேசுவாள், எந்த மொழி எழுத்தானாலும், கட்டமும் வட்டமுமாக மட்டுமே அறிந்திருந்த, எழுதப்படிக்க தெரியா என் அம்மா.

முதன்முறை நான் வெளிநாடு கிளம்பும்போது, வாசலில் கட்டிபடித்து அழுது வழியனுப்பினாள். அன்றிலிருந்து இன்றுவரை பாசத்திற்காக ஏங்குகிறேன். அன்று அங்கு தொலைத்துவிட்டு இன்றும் எங்கோ தேடுகிறேன். இந்த பதின்இரண்டு ஆண்டுகளில் நான் மனதார மகிழ்ச்சியாய் இருந்த தருணங்களை மணிகளில் எண்ணிவிடலாம்.  பாசம் கிடைக்காத போது ஏங்குவதும், பாசம் காட்ட தருணம் வரும்போது பகிரத்தெரியாதவனாகவும் மாற்றிவிட்டது இந்த பதின்இரண்டு வருட வெளிநாட்டு வாழ்க்கை. அக்கா, தம்பி என கூட்டு ஒரே குடும்பமாக இருந்தாலும், தேவையான பணத்தை அனுப்பிவிட்டால் அம்மா சந்தோசமாக, சுகமாக இருப்பாள் என்றே இருந்துவிட்டேன். 'நீ சந்தோசமா இருக்கியாம்மா' ஒரு முறை கூட கேட்டதில்லை. முன்று முறை உம்ரா* செய்த நான், என் அம்மாவிற்கு ஒருமுறை கூட வாய்ப்பு கொடுக்கவில்லை. புழல் சிறையில் இல்லாவிட்டாலும், சூழல்சிறையின் குற்றவாளி நான்.

என்னை ஈன்ற பொழுதினை பெரிதாக உவந்திருப்பாளா தெரியவில்லை, ஆனால் இந்த தாய் வயிற்றில் பிறவி எடுத்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.

நேற்று அக்காவிடமிருந்து போன், 'அம்மாக்கு சுகர் அதிகமாகி ஆஸ்பத்திரில சேர்த்திருக்கோம்பா'. நீண்ட நாட்களுக்கு பிறகு நான் அறியாமல் என் கண்களில் கண்ணீர். ஒன்றும் பேச முடியவில்லை. 'நீங்க வச்சிடுங்க, நான் திரும்ப கால் பண்றேன்' வைத்துவிட்டேன்.

படுப்பதும் திரும்ப எழுந்து அமர்வதுமாய் நேற்று காலையிலிருந்தே ஒரு மாதிரியாக இருந்திருக்கறார். கேட்டதற்கு, 'ஒன்றுமில்லை, தூக்கம் வருவதுமாதிரி இருக்கிறது' என்றாராம். மாலையில் அக்காவுடன் நடந்துதான் சக்கரை அளவு சோதனை செய்ய சென்றிருக்கிறார். மருத்துவனை சென்றதும், 'அல்லாஹ்' என்றவாரே விழுந்துவிட்டாராம். க்வாலிட்டி கேரில் ஈ.ஸி.ஜி எடுத்ததில், பல்ஸ் லோவாக இருப்பதால் உடனடியாக ஐ.சி.யூவில் வைக்க வேண்டும் என்றிருக்கிறார்கள். அங்கிருந்தே அம்புலன்ஸில் செண்பகம் மருத்துவமனை டாக்டர் அண்ணாமலைசாமியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். எனக்கு உயிர் கொடுத்த என் அம்மா உயிர்வாழ செயற்கையாய ஆக்ஸிஜன் சுவாசித்திருக்கிறார்.  எனக்கு தெரிந்த எந்த சொந்தமும் ஐ.சி.யூவில் இருந்ததில்லை. முதலாவதாய் என் அம்மா ஐ.சி.யூவில் இருந்த செய்தி என்னை நடுங்க வைத்தது. அப்போது என்னால் முடிந்தது 'என் அம்மா விரைவில் குணமடைய துஆ** செய்வது' மட்டும்தான்.
இன்று மதியத்திலிருந்து இயற்கை காற்றை சுவாசிக்கிறார். ம்... என் துஆ** ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. என்னிடம் போனிலும் பேசினார், 'நீ எப்டிப்பா இருக்க, உடம்ப பார்த்துக்க' என்று மட்டும்.

உம்ரா* மக்காவிலுள்ள புனித ஆலயம் 'காபா' வை தரிசிப்பது.
துஆ** பிராத்தனை.

Oct 14, 2009

க்ராஸ் டாகிங்

முன் குறிப்பு: தலைப்பை பார்த்து இரண்டு அமைச்சர்களுக்கிடையே நடந்த தொலைப்பேச்சுக்களை ஒட்டுக்கேட்டு எழுதப்பட்ட பதிவு என்றோ அல்லது வேறு தவறான புரிதலுடனோ வந்திருந்தால்.. மன்னிக்கணும். இது துறை சார்ந்த பதிவு. Cross Docking என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ் சொல் கிடைக்காததால், அதையே அப்படியே தமிழில் படுத்தியிருக்கிறேன்.

பலதரப்பட்ட அல்லது தனிப்பட்ட ஒரு உற்பத்தியாளர்களிடமிருந்து விற்பனையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய உற்பத்தி பொருள் (அல்லது சரக்கு), கிடங்கில் இருப்பு (Stock) வைக்கப்பட்டு, தேவைப்படும் பொழுது விற்பனையாளருக்கு அல்லது நுகர்வோருக்கு அனுப்பப்படும். இம்முறைக்கு பெயர் லாஜிஸ்டிக்ஸ் அல்லது வேர்ஹவுசிங் எனப்படுகிறது. இவற்றில் பல வகைகள் உண்டு, அவற்றை வேறொரு இடுகையில் பார்ப்போம். இங்கு, தளவாட மேலான்மையின் (Logistics Management) பொருட்செலவையும், நேரத்தையும் பெருமளவு குறைத்த நுட்பமான க்ராஸ் டாகிங் பற்றி தெரிந்து கொள்வோம்.
cross-1
மேற்சொன்ன தளவாட வசதியை பயன்படுத்தாத உற்பத்தியாளருடைய உற்பத்தி பொருள் விற்பனையாளருக்கோ நுகர்வோருக்கோ நேரடியாக அனுப்பப்படும். இவ்வாறு அனுப்புவதால் நேரம், ஆள்பலம், பண விரயம் அதிமாகும்.

உதாரணத்திற்கு, ப்ரிட்டானியா பிஸ்கட் சென்னையில் உற்பத்தி செய்யப்படுகிறது. மதுரை, கொச்சின் மற்றும் ஹைத்ராபாத்தில் இருக்கும் மொத்த விற்பைனையாளர்களுக்கு முறையே 60, 40, 50 பெட்டிகள் அனுப்ப வேண்டும். இந்த 150 பெட்டிகளும் ஒரு (Truck) சுமை வாகனத்தில் அடைத்துவிடக்கூடியதாக இருந்தாலும், ப்ரிட்டானியா நிறுவனம் வெவ்வேறு ஊர்களுக்கும் தனித்தனியாக அனுப்புமேயானால், மேற்சொன்ன நேரம், ஆள்பலம், பண விரயம் ஆகியவற்றோடு எரிபொருளும் வீணாகும் என்பதால், இச்செலவுகளை ப்டிட்டானியா தன் உற்பத்தி பொருளான பிஸ்கட்டின் விலையிலேயே சேர்க்க வேண்டிவரும். இதனால் நுகர்வோரும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுவர். சில நேரங்களில் கிராமத்தில் விளையும் காய்களுக்கான உற்பத்தி செலவை விட, விற்பனை விலையை விட,  சந்தைக்கு கொண்டு செல்லும் பொக்குவரத்து செலவு அதிகமாகிறது. அதாவது, தேவைக்கதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி. காய்களை வைத்திருந்தால் தன்னோடு சேர்ந்து காயும் அழுகும் என்பதால், துக்கம் தன்னோடு போகட்டும் என்று விவசாயிகள், விளைந்த பொருட்களை கிராமத்திலேயே குழி தோண்டி புதைத்துவிடுவார்களாம்… வேதனை. இம்மாதிரி நேரங்களில் அரசு மானியம் கொடுத்து விவசாயிகளை ஆறுதல்படுத்த வேண்டும். ரிமோட்டை தேட வேண்டாம், விஷயத்திற்கு வருகிறேன்...எங்கவிட்டோம்.. ஆங்.. ப்ரிட்டானியா.

இந்த சூழ்நிலையில் ப்ரிட்டானியா என்ன செய்யும், செய்ய வேண்டும்?

1. உற்பத்தி சரக்கை முன்னமே கொண்டு வந்து தளவாடத்தில் இருப்பு வைத்து, தளவாட சேவையாளரிடம் (Logistics Provider) சரக்கு சேர்ப்பிடத்திற்கான (Destination) தகவலை கொடுத்துவிட்டால், தேவையான பொருளை தேவையான இடத்தில் அவரே சேர்த்துவிடுவார். இம்முறையில், போக்குவரத்து செலவு மட்டுமின்றி, தளவாடத்தில் இருப்பு வைப்பதற்கான (Warehousing) வாடகையும் தர வேண்டும்.
2. க்ராஸ் டாகிங்  முறையை பயன்படுத்தலாம்.

க்ராஸ் டாகிங் - Cross Docking
ப்ரிட்டானியா போல இன்னும் பல உற்பத்தியாளர்களால் வணிக மையத்திற்கு கொண்டுவரப்படும் சரக்குகள் இறக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, சேர்ப்பிடத்திற்கு செல்லும் வாகனத்தில் ஏற்றப்படும். உதாரணமாக; அ, இ, உ, ஏ என்ற நான்கு உற்பத்தியாளரிடமிருந்து வரும் சரக்கானது க, ச, ட என்ற மூன்று விற்பனையாளர்களுக்கு மாற்றி ஏற்றப்படும்.
crossdocking-2
வலது மேல் படத்தில்; உற்பத்தியாளர், உற்பத்திப் பொருளை நேரடியாக விற்பைனையாளரிடம் சேர்ப்பதையும், வலது கீழ் படத்தில், அவையே க்ராஸ் டாகிங் செய்யப்பட்டு விற்பனையாளருக்கு அனுப்பப்படுவதையும் புரிந்து கொள்ளலாம்.

மேற்சொன்ன வகைகள் மட்டுமல்லாது, கடல், வான் மற்றும் தரை வழியில் வரும் சரக்குகள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றி ஏற்றி அனுப்பப்படுவதும் க்ராஸ் டாகிங் என்றே அழைக்கப்படுகறது. அதாவது, தாய்லாந்திலிருந்து மும்பை செல்ல வேண்டிய சரக்கானது, சென்னை வரை கப்பலில் கொண்டுவரப்படும். சென்னையில் க்ராஸ் டாகிங் செய்யப்பட்டு, தரைவழியிலோ அல்லது விமானத்திலோ மும்பைக்கு அனுப்பி வைக்கப்படும். இதேயே மும்பை வரையில் கடல் வழியிலேயே அனுப்பவேண்டுமெனில்,  கப்பல் தலையை சுற்றி மூக்கைத்தொட வேண்டும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
Map
மத்திய கிழக்கு நாடுகளுக்கான (Hub) இணைப்பாக துபாய் செயல்படுகிறது. அங்கு ஒரு தளவாட நகரமே இயங்குகிறது.

க்ராஸ் டாகிங் செய்யப்படுவதன் நன்மைகள்.
குறைந்த செலவு.
உற்பத்தி பொருளின் மீதான விலை குறைப்பு.
குறைந்த காலஅவகாசத்தில், நிறைந்த தூரம்.
அவசியமற்ற தளவாட வாடகை.
ஒருங்கிணைந்த தொழில் திட்டம்.
பரவலான வேலைவாய்ப்பு.
எரி பொருள் சிக்கனம்.
தளவாட மொழியில் (Logistics Language) இன்னும் பல நன்மைகளையும் அடுக்கலாம்.

தற்போது உலகம் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியில் அதிகம் பாதிப்படையாதது தளவாட துறை. இப்பவும் இதில் வேலை வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்னர் எனக்கு தெரிந்த ஒரு தளவாட நிறுவனத்தில், 20 முதல் 25 சதவிகிதம் ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய தளவாடத்துறையில் தான் நாங்களும் ஆணி புடுங்குகிறோம்… ஸ்ஸ்ஸ்ஸப்பா.. இதைச் சொல்ல இவ்வளவு இழுவையா? ம்… காதில் விழுகிறது…

நன்றி.

Oct 12, 2009

ஓசியில் ஓர் உலகத் தந்தி - ட்விட்டர்

ஓசியில் ஓர் உலகத் தந்தி - ட்விட்டர்

மாலையில் அலுவலகம் சென்று விட்டால், ஒரு காஃபி குடிக்கக்கூட வெளியில் செல்ல முடிவதில்லை. பின்ன.. அந்த கேப்புல நம்ம பசங்க ஏதாவது ட்விட்டுறாங்களே. நேத்து அப்டித்தான் 'சின்ன வேலையா' போயிட்டு வரதுக்குள்ள, நம்ம மேல அபாண்டமா குற்றம் சொல்லிட்டாங்க.. சாரி.. ட்விட்டிட்டாங்க. ஆனாலும் சில உண்மைகள், 'பெண்களுக்கு ரொம்ப பிடிச்சவன்'. அப்டிங்கிற ரேஞ்சில் ட்விட்டினதுனால போனாபோகுதுன்னு விட்டுட்டேன். நான் பொறுமையா இருந்ததால அத்தோட போச்சு இல்லைன்னா.. போன், பார், குத்து, ரத்தம், ஆஸ்பத்திரி அளவுக்கு பெருசா போயிருக்கும்.

அப்போ ட்விட்டர் அவ்ளோ மோசமானதா? இல்லைங்க...  நம்ம வீட்டு வேலைக்காரி மாதிரி, அக்கம் பக்கம் நடக்கிற விஷயத்தையெல்லாம் நம்ம அடுப்பங்கறையில வந்து சொல்லும். அண்டார்டிகாவில் இருந்து ஆஸ்டின்பட்டி வரை எல்லாமே ட்விட்டருக்கு அக்கம் பக்கம்தான்.
  • தலைமை அலுவலகத்தில் இருந்து மேனேஜர், என் அலுவலகம் வர ஆயத்தமாகிறார்.
  • சென்னையில் இரு முக்கிய பதிவர்களுக்கிடையே கைகலப்பு, ரத்தம்.
  • தேக்கடியில் படகு கவிழ்ந்தது.
  • சோழவந்தானில் பட்டாசுவெடி விபத்து.
  • திருப்பூர் அரசாங்க கடை எண் 214க்கு எதிரில் இருக்கும் பாட்டிக்கு அழகான பேத்தி இருக்கிறாள்.
  • பெங்களூருவில் மழை, விமான நிலையம் செல்ல பேருந்து இல்லை.
  • தமிழில் கிரந்தம் தேவையா?
  • புட்டு என்பதை இலங்கையில் பிட்டு என்று சொல்வார்கள்.
  • பாராக் ஒபாமாவிற்கு நோபல் பரிசு.
  • அடுத்த நோபல் ஒசாமாவிற்கு வழங்கப்படுமா?
  • சுமத்ராவில் சுனாமி எச்சரிக்கை.
  • அமெரிக்க சூறாவளிக்கு பெயர் கேத்ரீனா என்றால், தமிழக சூறாவளிக்குப் பெயர் புவனா?
  • வெண்பாம்... 
இது போன்ற அவசியமான மொக்கைகளும், அவசியமில்லாத குப்பைகளும் ட்விட்டரில் உடனுக்குடன் பரிமாறப்படும். ஆற்றுநீரில் அனைத்தையும் அள்ளிக் குடிக்க முடியாது, நமக்கு வேண்டியதை எடுத்து பயன்பெறலாம்.

யாரேனும் எனக்கு செய்தி சொல்ல வேண்டும் என்றால், நான் 24 மணி நேரமும் ஆன்லைனில் இருப்பேனே.. சாட்டிங்கில் சொல்லலாமே. என்றால், அங்குதான் ட்விட்டர் மாறுபடுகிறது, இது உங்களுக்கென்று சொல்லப்படும் செய்தியல்ல, ஆனால் உங்களுக்காகவும் சொல்லப்படும் செய்தி. உங்களுக்குத் தேவையானதை நீங்கள் எடுத்துக்கொண்டு மேலே உரையாடலாம்.

ட்விட்டரில் கணக்கு துவங்குவது எப்படி? 

http://twitter.com/ நுழைந்து பயனர் கணக்கு துவங்கி கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்தவர்களை, உங்களை தெரிந்தவர்களை பின் தொடருங்கள்.  உங்கள் சகோதரனான என்னை பின்தொடர, http://twitter.com/PeerMhd சென்று Follow வை க்ளிக் செய்ய வேண்டியதுதான்.
Follow
இனி எனது ட்விட் (மெஸேஜ்) எல்லாம் உங்களுக்கும் தெரியவரும். உங்கள் (அடுப்பங்கறை) தளத்திற்கே வரும். நானும் உங்களை தொடர்ந்தால், உங்கள் ட்விட்களும் எனக்கு தெரியவரும்.
உங்கள் ட்விட்டர் தளத்தின் Home  சென்றால், கீழுள்ளவாரு பெட்டி வரும்.
twitting
பெட்டிக்குள் உங்களது ட்விட்டை எழுதி அப்டேட் செய்யுங்கள். அவ்வளவுதான்.. உங்கள் ட்விட் உலகத்திற்கு சொல்லப்பட்டுவிட்டது. ஓசியில் ஒரு உலக தந்தி. ம்.. ஒரு விஷயம், ஒரு ட்விட்டில் 140 எழுத்துக்களுக்கே அனுமதி. அதே நேரம், நீளமான சில சுட்டிகள் இணைக்கப்படும் போது, அவை தானாக சுருங்கிக்கொள்கிறது. (அதன் நுட்பம் தெரிந்தவர்கள் சொல்லவும்)

ட்விட்டர் ட்ரிக்ஸ்...
  • ஒருவர் பெயருக்கு முன்னால் @ சேர்த்தால், அது அவருக்கு சொல்லப்படும் செய்தி, ஆனாலும் அனைவரும் படிக்கலாம். எ.கா; @PeerMhd
  • ஒருவர் பெயருக்கு முன்னால் d சேர்த்தால், அது அவருக்கு மட்டும் சொல்லப்படும் நேரடி செய்தி, வேறு யாருக்கும் தெரியாது. (அவரும் நம்மை பின்தொடர வேண்டும்) எ.கா d peermhd (no case sensitive)
  • ஒரு வார்த்தைக்கு முன்னால் # சேர்த்தால் பிற்பாடு தேடி எடுக்க உதவும். எ.கா #Nobel
இவற்றை  செய்யலாம்..
  • எளிதாகவும் சிறியதாகவும் பயனர் பெயர் வைத்துக்கொள்ளலாம் 
  • உங்கள் எண்ணத்தோடு ஒத்துப்போகும் மற்ற ட்விட்டர்களை தொடரலாம்.
  • அடிக்கடி ட்விட்டுங்க..
  • இடையிடையே எதிர்வினைக்கு இடமளிங்க..
  • ஆசுவாசமா இருங்க..
  • ஒவ்வொரு எழுத்துக்கும முக்கியத்துவம் கொடுங்க.. 
  • ஒவ்வொரு ட்விட்டுக்கும் / வார்த்தைக்கும் மதிப்பு கொடுங்க..
  • பீக் அவர்ல ட்விட்டுங்க..
  • நேர்மையா இருங்க, சந்தோசமா இருங்க..
  • எந்தப்பொருளையும் விற்பனை செய்ய முயற்சிக்காதீங்க..
  • ஒரு பொருளுக்கும் நமக்கும் உண்டான தொடர்பை சொல்லலாம், தொடர்பு இல்லாததையும் சொல்லலாம்.
  • சுட்டிகளை பரிமாறலாம்,
  • நேரத்திற்கு ஏற்றாற்போல் சூடான தகவல்களை பரிமாறலாம்.
  • கேள்வி கேட்கலாம், பதில் சொல்லலாம்..
  • என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று சொல்லலாம்..
  • நம்மை பின் தொடருபவர்களையும் மதிக்க வேண்டும்,
இவற்றை தவிர்க்கலாம்...
  • உங்களால் சமாளிக்க முடியாத அளவிற்கான ட்விட்டர்களை பின்தொடரவேண்டாம். 
  •  யாரையும், எதையும் குறை சொல்ல வேண்டாம். 
  •  ஒவ்வொரு ட்விட்டுக்கு முன்பும் கவனம். 
  •  140 எழுத்துக்கள்.. மற்றவருக்கு உதவியாகவோ, காயப்படுத்தவோ, ஆறுதலாகவோ அல்லது தவறான புரிதலாகவோ இருக்க முடியும்.
சரி.. ட்விட்டரினால் கிடைக்கும் லாபம் என்ன?
  • ஒத்த கருத்துக்களுடனான அறிவு பலப்படும். 
  •  மாற்று கருத்து குறித்தான பரவலான மனநிலை அறியலாம் 
  •  சமகால நிகழ்வுகளை உடனுக்குடன் அறியலாம். 
  •  வலைப்பக்கத்தின் தரம் உயரும். 
  •  வலைப்பக்க ஹிட்ஸ் அதிகரிக்கும் 
  •  மற்ற பதிவர்களுடனான தொடர்பு ஏற்படுத்தலாம்.
  •  ஒத்த கருத்துடையவர்களுடனான நட்பு பெருகும். 
  •  ட்விட்டர் விளம்பரத்தின் மூலம் பணமும் பண்ணலாம்.
Firefox நெருப்புநரி பாவிப்பவர்கள் http://twitterfox.net/ Addon இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். TwitterFox இப்போது EchoFon என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

echo

http://www.tweetdeck.com/beta/ இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். TweetDeck ப்ரௌஸர் இல்லாமலேயே இயங்கக்கூடியது. ரிப்ளை ஆல், வியூ ப்ரோஃபைல் போன்ற பல பில்ட்இன் ஆப்ஷன்ஸ் உள்ளது.
TwitterDeck
    ட்விட்டர் தளத்தின் ஸ்டேட்ஸ் தெரிந்து கொள்ள http://tweetstats.com/ செல்லலாம். அங்கு கீழுள்ளது போன்ற விபரங்கள் திரட்டி தரப்படுகிறது.
    tweetstats
    tweetstats1 tweetstats2

    ட்விட்டர் பிரபலங்களின் முகவரி,
    http://twitter.com/PeerMhd – பீர் | Peer [Its Me… :-)]

    http://twitter.com/BarackObama – ஒபாமா
    http://twitter.com/schwarzenegger - அர்னால்ட்
    http://twitter.com/mrskutcher – டெமிமூர்
    http://twitter.com/britneyspears – ப்ரிட்னி ஸ்பியர்ஸ்

    http://twitter.com/SMKrishnaCong – எஸ்.எம். கிருஷ்ணா
    http://twitter.com/ShashiTharoor – சசி தரூர்
    http://twitter.com/chetan_bhagat – சேட்டன் பகத்
    http://twitter.com/PrabhuChawla – பிரபு சாவ்லா
    http://twitter.com/MallyaMan – விஜய் மல்லையா
    http://twitter.com/heshpathi – மகேஷ் பூபதி
    http://twitter.com/mdhoni – ம. சிங் தோனி
    http://twitter.com/Aamir_Khan – ஆமிர்கான்
    http://twitter.com/amitabh_bachan – அமிதாப் பச்சன்
    http://twitter.com/preityzinta – ப்ரீதி ஜிந்தா
    http://twitter.com/DuttaLara லாரா தத்தா
    http://twitter.com/arrahman – ஏ ஆர் ரஹ்மான்
    http://twitter.com/aishwarya_rai - ஐஷ்வர்யாராய்
    http://twitter.com/Shahrukh_Khan – ஷாருக்கான்
    http://twitter.com/R_Khanna – ராகுல் கண்ணா
    http://twitter.com/konkonas – கொங்கனா சென்
    http://twitter.com/priyankachopra – ப்ரியங்கா சொப்ரா
    http://twitter.com/MallikaLA – மல்லிகா ஷெராவத்
    http://twitter.com/Neha_Dhupia – நேஹா தூபியா
    http://twitter.com/kunal_deshmukh – குனால் தேஷ்முக்
    http://twitter.com/emraanhashmi – இம்ரான் ஹாஷ்மி
    http://twitter.com/Asin_Thottumkal – அசின்
    http://twitter.com/chinmayi – சின்மயி
    http://twitter.com/shrutihaasan – ஷ்ருதிஹாசன்
    http://twitter.com/shreyaghoshal – ஷ்ரேயா கோஸல்
     
    http://twitter.com/nramind – ஹிந்து ராம்
    http://twitter.com/maalan – மாலன்
    http://twitter.com/writerpara – பா.ராகவன்
    http://twitter.com/nchokkan - சொக்கன்
    http://twitter.com/luckykrishna – யுவகிருஷ்ணா
    http://twitter.com/snapjudge – பாஸ்டன் பாலா
    http://twitter.com/NagoerRumi – நாகூர் ரூமி
    http://twitter.com/orupakkam – ஒருபக்கம்
    http://twitter.com/bseshadri – கிழக்கு பத்ரி
    http://twitter.com/spinesurgeon – புருனோ
    http://twitter.com/ivansivan – இவன்சிவன்
    http://twitter.com/dynobuoy – டைனோ
    http://twitter.com/jyovramsundar - ஜ்யோவ்ராம்
    http://twitter.com/rozavasanth – ரோஸாவசந்த்
    http://twitter.com/athisha – அதிஷா
    http://twitter.com/elavasam -  இலவசகொத்தனார்

    http://twitter.com/bbcbreaking – பிபிசி
    http://twitter.com/the_hindu – தி ஹிந்து
    http://twitter.com/vikatan - விகடன்
    http://twitter.com/youthfulvikatan – யூத் விகடன்
    http://twitter.com/dinamalarweb - தினமலர்
    ட்விட்டர் உபயோகமில்லாதது என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்காமல், முயற்சி செய்து பாருங்கள். இது ஒரு குழுமம், சமூகம், இங்கிருந்து பல அறிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.. ஒவ்வொரு ட்விட்டும் ஒரு நுண் வலைப்பதிவு.
    நன்றி.

    Oct 6, 2009

    பாலியல்புவனா, கேரளமண், கிழக்கு - ஜிகர்தண்டா

    அண்டை மாநில கனமழைக்கு பலியானவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

    ஜார்கண்ட் நக்சல் தீவிரவாதிகள்,  காவல்துறை அதிகாரி ஃப்ரான்ஸிஸை கடத்தி கொண்டுபோய் தலை துண்டித்து கொலை செய்திருக்கிறார்கள். ஃப்ரான்ஸிஸ் குடும்பத்தாருக்கு அஞ்சலிகள். தீவிரவாதத்திற்கு கடும் கண்டனங்கள்.

    சோழவந்தான் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்போ, பட்டாசு வெடிப்போ, 4 பேர் பலி, பலர் காயம். பெரிய சைஸ் பட்டாசு தானே குண்டு... உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலிகள். (சிலிண்டர் வெடிப்பாம்)
    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு சென்றுகொண்டிருந்த ஆற்றுமணல் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் கேரளாவில், ரூபாய் பத்து ஆயிரத்திற்கு விற்கப்பட்ட மணல், தற்போது நாற்பத்துஐந்து ஆயிரம் ரூபாயாம். கட்டுமானப்பணிகள் தடைபட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரும்வரை, இங்கிருந்து மணல் அனுப்பப்படாது என்பது காரணமாம். தேசிய அரசியலை கழுகாய் பார்த்தால், இது சரியா என்பது எனக்குத்தெரியவில்லை. ஆனால், தமிழக அரசியலில் இது ஒரு வரவேற்கப்பட வேண்டிய நல்ல முடிவாகப்படுகிறது.
    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    பாலியல் தொழிலாளி கம் நடிகை புவனேஸ்வரியின் வாக்குமூலத்தை தினமலரில் படித்தேன். சில நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டே எழுதியிருந்தார்கள். இப்படி நேரடியாக பெயர் குறிப்பிடுவதால் ஏதும் பிரச்சனை வராதா என்று ட்விட்டரிலும் கேட்டிருந்தேன். நினைத்த மாதிரியே நடிகர் சங்கத்துகாரர்கள் பிரச்சனை செய்துவிட்டார்கள். நினைத்த மாதிரியே பிரச்சனைக்கு அந்த நடிகைகளும் வந்திருந்தார்கள். நினைத்த மாதிரியே கோவியாரும் பதிவு போட்டுவிட்டார்... நினைத்த மாதிரியே மீ த எஸ்கேப்பு...
    பாலியல் தொழில் பற்றிய சட்டத்தை தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.
    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    நடிகை பூமிகா சாவ்லா, மார்பக புற்று நோய் விழிப்புணர்விற்காக நடை பயணம் மேற்கொண்டாராம். நடிகைகளின் பப்ளிசிட்டியை சோப்பு சீப்பிற்கு மட்டுமல்லாது, இந்த மாதிரி சமூக விழிப்புணப்புணர்வு விளம்பரங்களுக்கும்  பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    வாராவாரம் ஆஹா எஃப்எம்மில் கிழக்கு பதிப்பகத்தார் நடத்தும் கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி பயனுள்ளதாக இருக்கிறது. வியாபார நுணுக்கம் அனைத்தும் தெரிந்திருக்கிறார்கள். இது வாஷிங் பவுடர் நிர்மாவை விட நல்ல விளம்பரம் என்பதில் சந்தேகம் இல்லை. வீடு வீடாக சென்று சாம்பிள் பேக் கொடுப்பதை போல, ஒலிப் புத்தகத்திலிருந்து சில பகுதிகளும் ஒலிபரப்பப்படுகிறது. குறிப்பிட்ட புத்தகத்திலிருந்தே கேள்விகளை கேட்டு புத்தகத்தையே பதிலாக சொல்வது.. எல்லாமே அருமை. ஆனால், பேட்டி எடுப்பவர் கிட்டத்தட்ட அனைத்து பேட்டியிலும், 'அதாவது... நான் உங்க புத்தகத்தில படிச்சேன், இந்த மாதிரி சொல்லியிருக்கீங்கல்லையா... இதப்பத்தி என்ன சொல்றீங்க' என்பது டிபிகல் நாடகத்தனமாக இருக்கிறது. கொஞ்சமா மாத்தி மாத்தி யோசிங்க... மேடம்.
    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    ஏர் இந்தியா விமானத்தில் பணியாளர்கிடையே ஏற்பட்ட தகராறில் பயணிகள் அதிருப்தி. இந்த நேரத்தில், நான் அனுபவித்த விமான சேவையின் தரத்தை சொல்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். குவைத் ஏர்லைன்ஸ், சௌதியா - அவர்கள் தருவதுதான் சேவை, விருப்பமிருந்தால் வா என்கிற தோணி. ஏர் இந்தியா - சொல்லவேண்டாம், சில நேரங்களில் கொசு அடிக்க வேண்டியிருக்கும், சிலநேரங்களில் எலி(புலி வராத வரை பாதகமில்லை). அல்ஜஸீரா, ஏர் அரேபியா - பட்ஜட் ஏர்லைன்ஸாம், குடிக்க தண்ணீர் கூடத்தர மாட்டார்கள். அல்ஜஸீராவில், குவைத்-மும்பை ஒரு தினாருக்கும் டிக்கெட் விற்கப்பட்டதுண்டு. ஏர் அரேபியா, இப்போது குவைத்-சென்னை 3780 ரூபாய். ஸ்ரீலங்கன், எமரேட்ஸ் - நான் அனுபவித்ததில் நல்லதாகப்பட்டது.
    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    தனித்தமிழ், விக்கி-தமிழ் பற்றிய எழுத்தாளர் ஜெயமோகன் பதில்கள் யோசிக்கவைக்கிறது. ஜெர்மனியை செர்மனி என்றும், ஸ்பெயினை எசுப்பானியா என்று எழுதுவதையும் விமர்சிக்கிறார். வாசித்து பாருங்கள்...
    <<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

    என் ஒரே மகன் ஃபர்ஹான் நேற்றைக்கு முந்தின நாளோடு பதின்இரண்டு மாதம் நிறைவு செய்து, நேற்று முதல் வயதில் நான்கு அடி எடுத்துவைத்திருக்கிறான். அவன் வயதை எப்படி சொல்வது. இப்போது அவனுக்கு ஒரு வயதா? இரண்டு வயதா? Promil வாங்கும் போது, 1 முதல் 3 வயது வரை என்று போட்டிருக்கிறார்களே... 12 மாதங்கள் கடந்தால் தான் ஒரு வயது ஆரம்பிக்கிறதா? தெரிந்தவர்கள் விளக்கவும். பிறந்தநாளான நேற்று, ஜட்டிகூட போடாமல் குற்றாலத்தில் குளித்துக் கொண்டிருந்தானாம். ஷேம் ஷேம்.. நோ பி'டே பார்ட்டீஸ்...

    Oct 4, 2009

    தேக்கடி சொல்வதென்ன

    தேக்கடியில் படகு விபத்து செய்தி ஓரளவு தெரியும். எத்தனை பேர், அதே தினம் நடந்த பீகார் படகு விபத்து பற்றிய செய்திகளை தெரிந்திருப்போம். பீகாரிலும் 50 க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. தேக்கடியில் இன்னும் சில சடலங்கள் மீட்கப்படவில்லை என்பது ஊடகங்களுக்கான தீனி இன்னும் முடிந்துவிடவில்லை என்பதை காட்டுகிறது. கைராளிகளும், ஏசியா நெட்களும் அவற்றை முக்கிய செய்தியாக்கிக்கொண்டிருந்த போது, இங்கு அதுவும் ஒரு செய்தியாக காட்டப்பட்டது. கலைஞருக்கு, ஆளுங்கட்சி தலைவரின் திருவாரூர் பயணம் அதி முக்கிய செய்தி.  வலைப்பூவிலும் கூட அவ்வளவாக இந்த செய்தியை பார்க்க முடியவில்லை. ஹிந்து அதிக தகவல்களை தொகுத்தருப்பது, மலையாளிகள் அதிகம் பணியிலிருப்பது காரணமாக இருக்கலாம். மற்றவர்களுக்கு ஏன் முக்கிய செய்தியாகப் படவில்லை. இச்சம்பவம் கேரளத்தில் நடந்தது என்பதாலா? இதை செய்தியாக்கினால் டிஆர்பி / ஹிட்ஸ் 'ல் பெரிய மாற்றம் இருக்காது என்பதாலா? தலைவலி நமக்கு நேர்ந்தால் துன்பம், விபத்து, அதே மற்றவருக்காகும் போது, வெறும் செய்தி என்ற அளவில் கூட முக்கியத்துவம் மாறுபடுகிறது. 

    தேக்கடி துன்பத்தை பகிர்வதால், எனக்கு என்ன கிடைக்கும் என்ற வர்த்தகப் பொதுப்புத்தி நம் அனைவரிடமும் மலிந்து கிடப்பது வருத்தத்திற்குரியது. சுயநலம் கருதா மனிதன் இருக்க முடியாது, இருந்துவிட்டு போகட்டும். சுயநலம் இல்லா போதுநலம் இல்லை. குறைந்தபட்சம் ஒரு நிகழ்வு, விபத்து, துர் சம்பவம், தோல்வி போன்றவற்றிலிருந்து நமக்கு பாடம் இருக்கிறது என்ற அளவீட்டிலாவது இவற்றை அணுகலாம். 
    விபத்துக்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
    அ. இயற்கை சீற்றத்தால் நிகழ்வது. உதாரணமாக 'சுனாமி' 'வெள்ளம்' போன்றவற்றைச் சொல்லலாம். இவற்றை தடுக்க முடியாது. சரியான விழிப்புணர்வு இருந்தால், இழப்புகளை தவிர்க்கலாம்.  நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளால், விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்னும் எளிது.
    ஆ. செயற்கை விபத்து, இவை மனிதர்களின் அறியாமையால், கவனக்குறைவால் ஏற்படுவது. விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், இவ்வகை விபத்துக்களையே தவிர்த்து விடலாம். அல்லது, அதிகபட்ச இழப்புகளை தடுக்க முடியும்.
    511095248_3dfa6ca3f8

    தேக்கடி படகு விபத்து பற்றிய குறிப்புகள்;
    வழக்கமாக தேக்கடி படகு சவாரி நேரம் 07:00, 09:30, 11:30, 14:00, 16:00 மணி என்பதாக ஐந்து முறை செலுத்தப்படுகிறது. இரண்டு தளங்களை கொண்டதாக இருக்கும் படகுகளில், தாழ் தளத்திற்கு 50 ரூபாயும், மேல் தளத்திற்கு 90 ரூபாயும் ஒரு சுற்று சவாரிக்கு வசூலிக்கப்படுகிறது. இவ்விபத்தில் அதிகம் உயிரிழப்பு ஏற்பட்டது, தாழ்தளத்த thekkady பயணிகளிடையே. (டைட்டானிக் நினைவு வருகிறதா?)  மலிவு விலை உயிர். தாழ்தளம் ஃபைபர் கொண்டு அடைக்கப்பட்டிருந்ததால், அதை உடைத்துக்கொண்டு வெளியே வரமுடியாது போயிருக்கிறது. படத்தில் காண்பது போன்ற உடைந்த மரங்கள் நீருக்கு அடியிலும் அதிகம் இருப்பதாலும், அடிமட்டம் முழுவதுமாக சேற்று மணலால் நிரம்பியுள்ளதாலும், காப்பாற்றுவது கடினமாகிவிட்டிருக்கிறது. காலை 07:00 மணி சவாரியிலும், மாலை 16:00 மணி சவாரியிலும் வன விலங்குகள் காணக்கிடைக்கும், எனினும் மாலையே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். செப்டம்பர் 30 மாலையிலும், அதே போல பயணிகள் கூட்டம் இருந்திருக்கிறது. விபத்திற்குள்ளான படகில், 2 படகோட்டிகளும், கட்டணம் செலுத்திய 74 பயணிகளும், 5 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 7 பேரும் இருந்திருக்கிறார்கள். மொத்தமிருந்த 84 பேரில், உயிர் பிழைத்திருப்பது 15 பேர், இதுவரை 46 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இனியும் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதால். உயிரிழப்பு 68 ஆக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 
    விபத்திற்கு காரணமாக படகோட்டி சொல்வது, 'ஒரு கரையில் வனவிலக்குகள் வந்ததால், பயணிகள் அனைவரும் படகின் ஒரு பக்கமாக சென்றனர். எனவே, படகு நிலையிழந்து ஒரு பக்கம் in.reuters.com சாய்ந்துவிட்டது'. இதை மறுக்கும் உயிர் பிழைத்தவர்களில் ஒருவரான பெங்களுருவை சேர்ந்த சிந்தாமணி என்பவர், 'வழக்கமாக மாலை 4 மணிக்கு கிளம்ப வேண்டிய படகு அன்று 4;30 க்கு கிளம்பியது, படகின் இன்ஜின் ஆன் செய்யும் போதே, வழக்கமான இன்ஜின் சத்தம் இல்லாமல் புதிய இரைச்சல் வந்தது. மெக்கானிகல் இன்ஜினியரான என் மனைவியிடமும் சொன்னேன். அதை, அவளாலும் உணர முடிந்தது. எனவே என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். விபத்திற்கு காரணம், படகில் இருந்த இயந்திரக் கோளாரே' என்கிறார். மட்டுமல்லாது, பயணிகள் ஒரு பக்கமாக சென்றனர் என்பதெல்லாம் பொய் என்கிறார். வேறு சிலரும் இதை ஆமோதிப்பதாக படகின் குறைபாடையும், படகோட்டியின் அலட்சியத்தையும் சொல்கின்றனர். ‘படகு மூழ்கத்தொடங்கியதும், படகோட்டிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. படகு பணியாளர்களுக்கு சரியான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கவில்லை. போதுமான உயிர் காக்கும் சட்டை இருந்தும் அவற்றை அணிந்துகொள்ளவோ, பாதுகாப்பு சோதனை குறித்த விளக்க அறிவுரையோ சொல்லப்படவில்லை’ என்பதும் பலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. 
    Preventive is better then cure என்று சொல்வார்கள். அந்த வகையில் விபத்திலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது... நாம் செல்ல இருக்கும் சுற்றுலா படகு,
    1. அதன் இழுவை தகுதி (ஹார்ஸ் பவர்) மற்றும் சுமையின் அடிப்படையில் எத்தனை பயணிகளை ஏற்றிச்செல்ல தகுதி உடையது?
    2. அதன் இருக்கை வசதிக்கும் அதிகமாக பயணிகள் ஏற்றப்பட்டுள்ளனரா?
    3. ஏற்றப்பட்ட பயணிகளில் யாரேனும் இருக்கை அல்லாத இடத்தில் அமர்ந்தோ நின்றோ பயணக்கின்றனரா?
    4. பாதுகாப்பு மற்றும் முதலுதவி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா?
    5. உயிர் காப்பு அங்கி, கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். சிறுவர்களுக்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகிறது.
    6. முடிந்த அளவு காலநிலை தெரிந்து கொண்டு பயணங்களை தொடங்குவது நல்லது. இது அனைத்து பயணங்களுக்கும் பொருந்தும் என்றாலும், நீர் பயணத்தின் போது கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
    7. புகைபிடித்தல் மற்றும் மதுஅருந்துதல் முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். மது அருந்தியவர் படகை செலுத்த அனுமதிக்கக்கூடாது.
    இவற்றில் ஏதேனும் மாறுபாடு தென்பட்டால், நிர்வாகத்தில் முறையிடுவதோடு பயணத்தையும் தவிர்த்துவிடுவது நல்லது. (வேறு பாதுகாப்பு நடவடிக்கை தெரிந்தவர்கள் பின்னூட்டதில் சொல்லலாம்)
    நகரமயமாக்கலின் ஒரு விழைவு, இளைய தலைமுறையினருக்கு நீச்சல் தெரியாமை. நீரில் மட்டுமல்ல, நில வாழ்க்கையிலும். பெருகிவரும் நீச்சல் பயிற்சி மையங்கள் ஓரளவு நீரில் நீத்துவதை சொல்லித்தரலாம். நாளை 'சோறு தின்பது எப்படி' என்பதற்கான பயிற்சி மையங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. (ஏற்கனவே இருக்கிறதா?) அது கிடக்கட்டும், காசு கொடுத்து நீச்சல் கற்றுக்கொண்டாலும் பாதகமில்லை. நீச்சல் தெரிந்தவர் தம்மை மட்டுமல்ல, கூட பயணிப்பவரையும் கரை சேர்த்துவிடலாம். தேக்கடி விபத்தில், லண்டனை சேர்ந்த 70 வயது சுற்றுலா பயணி ஒருவர், 7 பேரை காப்பாற்றினாராம். 
    மதுரையில் எங்கே நீச்சல் கற்றுக்கொடுக்கப்படுகிறது என்பதை தெரிந்தவர்கள் சொல்லுங்கள். எனக்கும், கூட மிதப்பவர்களை கரை சேர்த்துவிட விருப்பம்.
    Peer Thekkady