Oct 29, 2009

குவைத்தில் சென்றவார இரண்டு நிகழ்வுகள்

ஆன்லைன் மோசடிகளில் பலவற்றை பல தளங்களில் வாசித்திருக்கிறேன். என்னைத்தெரிந்த நண்பர்களுக்கும் எனக்குத்தெரிந்தவரை மோசடிக்காரர்களின் வகை நுட்பங்களை அவ்வப்போது சொல்லிவருகிறேன். ஆனாலும் அறிமுகமானவரோ அல்லாதவரோ ஏமாற்றப்பட்டதாக அவ்வப்போது வரும் செய்திகள் வேதனையளிக்கிறது. ஏமாற்றுபவர்களும் புதிது புதிதாக யோசிக்கிறரார்கள். நமக்கு தோன்றாத, கற்பனைக்கு எட்டாத வகையில் எல்லாம் ஏமாற்றுகிறார்கள், ஏமாறுகிறவர்களும் அவ்வாறே.
நமக்கு முற்றிலும் பரிச்சயம் இல்லாத புதியவர்களின் ஆசை வார்த்தைகளை, தொடர்பு முயற்சியை மோசடி என்று உறுதியாக அனுமானிக்காவிட்டாலுமே அவற்றை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது என்று பலராலும் அறிவுருத்தப்படுகிறது. இவற்றை நாம் தெரிந்திருந்தாலும் சில வேளைகளில் அதிமேதாவித்தனமாக நடந்துகொள்வதுண்டு. உதாரணமாக, இணையத்தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் ஒரு முறையாவது இப்படியான மின்னஞ்சல் வந்திருக்கும்.
Congratulations, it's your lucky day! You've just won $5,000!
இதை படிக்கும் அனைவருக்கும் சபலம் தட்டும், இருந்தும் ஷிஃப்ட் டெலிட் செய்பவர்கள் யதார்த்தவாதிகள். இதற்கு ஒரு பதில் அனுப்பினால் என்ன நஷ்டம் வந்துவிடப்போகிறது என்று ரிப்ளையை தட்டுபவர்கள் யதார்த்தவாதியாக தன்னை நம்பிக்கொல்’பவர்கள். மெயில் அனுப்பியவன் பார்வையில் இவர்கள் ‘வலையில் அருகே வந்துவிட்ட மீன்’ அதை எப்படி வலைக்குள் சிக்க வைக்க வேண்டும் என்பதும் வலை வீசியவனுக்குத் தெரியும். லாட்டரியில் கிடைத்திருக்கும் பணத்தில் உனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு மீதியை எனக்கு அனுப்பு’ என்பது போன்று பலரும் மெயில் செய்ததாக சொல்லக்கேட்டிருக்கேன். எனக்குத்தெரிந்த பலர் மெயில் ரிப்ளை செய்துவிட்டு அவன் கேட்ட பணம் அனுப்பாவிட்டாலும் அவர்களோடு போனில் பேசியே பணத்தை விட்டிருக்கிறார்கள்.  ஆனால் சென்ற வாரம் நான் கேட்டறிந்த ஒரு புதிய செய்தி மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.
தென் ஆர்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ரஹீம் என்பவர், 80 குவைத் தினாருக்கு செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். அவர் பாவிக்கும் மொபைலின் சேவை வழங்கும் வத்தானியாவிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது, பேசியவர் அவ்வாறுதான் சொல்லியிருக்கிறார். அழைப்பின் போது நம்மாளின் பெயர், அவரது சிம் கார்டு சீக்ரட் நம்பர் மற்றும் சிம் கார்டுடைய தனிப்பட்ட நம்பர் ஆகியவற்றை சொல்லி, ‘உங்களுக்கு 30,000 குவைத் தினார் பரிசு கிடைத்திருப்பதாகவும் குவைத்தில் லாட்டரி தடைசெய்யப்பட்டிருப்பதால், குவைத்திற்கு வெளியே நடைபெற்ற குலுக்கலின் பரிசுத்தொகை நேரடியாக இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்படும், எனவே இந்தியாவிற்கு அனுப்புவதற்கான செலவு மற்றும் சில அலுவலக செலவுகளுக்காக 200 குவைத் தினார் அனுப்ப வேண்டும்’ என்றும் சொல்லியிருக்கிறார். நம்மாள் இதை யாருக்கும் சொல்லவில்லை. அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் ஐந்தும் பத்துமாக கடன் வாங்கி 160 தினார் வெஸ்டன் யூனியன் மூலமாக அனுப்பியிருக்கிறார். பணம் அனுப்பும் போது வெஸ்டன் யூனியனில் கேட்டிருக்கிறார்கள், ‘நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு பணம் அனுப்பவேண்டும்?, ஏதும் தவறான செயலில் ஈடுபடுகிறீர்களா?’ என்பதாக, இவரும் இல்லை.. இல்லை.. என்னுடன் வேலை செய்யும் நண்பர் லீவில் சென்றிருக்கிறார். ஏதோ கஷ்டமாம், அவருக்குத்தான் அனுப்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.  பாகிஸ்தானில் பணம் கிடைக்கப்பெற்றதும், இன்று மாலை 5 மணிக்கு உங்களது பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும். வீட்டிலிருந்து யாரையாவது வெஸ்டன் யூனியனுக்கு சென்று காத்திருக்கச் சொல்லுங்கள் என்று சொல்லப்பட,  இவரும் வீட்டிற்கு அழைத்து ‘நாம பணக்காரங்களாகிட்டோம், இனி நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்திடும், ஒரு பெரிய பைய எடுத்திட்டு போயி வெஸ்டன் யூனியன்ல வெயிட் பண்ணுங்க. நான் போன் பண்றேன்’ என்று சொல்லிவிட்டாராம். வீட்டிலிருந்து சென்றவர்கள் இரவு வெஸ்டன் யூனியன் கதவு மூடப்படும்வரை காத்திருந்து திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.
மறுநாள் ரஹீம் அறைவாசியிடம் மெதுவாக விஷயத்தை சொல்லியிருக்கிறார். அறைவாசி மூலமாக விஷயம் கசிந்திருக்கிறது. ரஹீமை தெரிந்தவர்கள் அனைவரும் போய் அனுதாபத்தோடு சிலர் திட்டவும் ஆரம்பிக்க, ரஹீம் பாகிஸ்தானுக்கும் சவுதிக்கும் (அங்கிருந்துதான் அழைப்பு வந்திருக்கிறது) மீண்டும் மீண்டும் போன் செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த நபர், நான் பாகிஸ்தானிலிருந்து உன் வீட்டிற்கு பணம் அனுப்பினால் உன்னை தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் கைது செய்து உன் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி விடுவார்கள். குவைத்திற்கு அனுப்பினாலும் நீ ஊர் திரும்ப முடியாது. இப்போது சொல்.. பணம் வேண்டுமா? என்று மிரட்டியிருக்கிறார். இவர் விடாமல் மீண்டும் மீண்டும் போன் செய்து தங்கை கல்யாணம், அம்மா ஆபரேஷன் என அழுதிருக்கிறார். அந்த நபருக்கு மனம் உருகியோ அல்லது ரஹீமுடைய தொந்தரவு தாங்காமலோ சுமார் 150 தினார் இந்தியாவிற்கு அனுப்பி கொடுத்திருக்கிறார். ரஹீம் கொடுத்ததில் மீதி மற்றும் போனுக்கு செலவு செய்தது என சுமார் 5000 ரூபாய் நட்டம், இருந்தாலும் ஆள் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
சாதாரணமாக இம்மாதிரி மோசடிக்காரர்கள் யாரும் பணத்தை திரும்ப தந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. இவர் ஏதோ தொழிலுக்கு புதுசு போல… பாவம். நான் நினைக்கிறேன் வேறு யாரோடமோ ஏமாற்றிய பணத்தை ரஹீமுக்கு நேரடியாக அனுப்பியிருக்கிறார் போல. பணம் கையில் கிடைத்ததும் ரஹீம் அவருக்கு மிரட்டல் அறிவுரை செய்தாராம். :)
இவ்வகை மோசடிகளில் இருந்து காத்துக்கொள்ளவும், அவற்றை பகுத்தறியவும் இங்கே சொல்லப்பட்டுள்ளதை விளங்கிக்கொள்ளலாம்.
<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பகாலா என்று சொல்லப்படும் அரபு நாடுகளின் சிறு மளிகை கடைகளில் பெரும்பாலும் இந்தியர்கள், பெங்காலிகள் வேலைக்கு இருப்பார்கள். என் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு 24 மணி நேர பகாலாவில் பெங்காலி ஒருவர் கல்லாவில் இருப்பார். அன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இரண்டு மூன்று குவைத்தி சிறுவர்கள் வந்து பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். பெங்காலி தர மறுக்கவே திருப்புளி (ஸ்க்ரூ ட்ரைவர்) யை கொண்டு  அவர் வயிற்றில் குத்தியவாறே திருப்புளியை சுற்றியிருக்கிறார்கள். நிகழ்விடத்திலேயே உயிர் போய்விட்டது. இரண்டு மணி நேரத்திற்கு பிறகுதான் யாரோ பார்த்து காவல்துறைக்கு தகவல் சொல்ல, அதற்கடுத்த நாளே கொலைகாரனை பிடித்துவிட்டார்கள்.cctv-poster
பகாலாவிற்கு எதிரில் இருக்கும் அபார்ட்மண்டின் சிசிடிவி  பதிவில் இருந்து கொலைகாரனுடைய வாகன எண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்டி கொடுத்த குற்றவாளிகள் பற்றிய பல செய்திகளை படித்திருக்கிறேன். குற்றவாளிகளால் ஊகிக்க முடியாத தடயமாக சிசிடிவி இருக்கிறது என்றாலும் கொல்லப்பட்ட உயிர் திரும்ப வராது.
இன்றும் சில அரபிகள், இந்தியர்கள் (பெங்காலி, நேபாளி, இலங்கையர்) என்றாலே ஏளனமாகத்தான் பார்க்கிறார்கள். பேருந்தில் பயணிக்கும், தெருவில் நடந்து செல்லும் நம்மவர்களைக் கண்டால் தொல்லைகள் தருவதும் பணம் பரிப்பதும் அன்றாட நிகழ்வே. குவைத்தில் அரபி சிறுவர்களுக்கு பேருந்து கட்டணம் இல்லை என்பதால், மாலை வேளைகளில் குழுவாக பேருந்தில் சென்று விளையாடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். இவர்களின் குழுவைக் கண்டால் பேருந்து ஓட்டுனர் நிறுத்தாமல் சென்றுவிடுவார். அவ்வாறு நிறுத்தாமல் செல்லும் பேருந்தின் சன்னலில் கல் எறிந்து கண்ணாடி உடைக்கப்படும். அதை பழுதுபார்க்கும் செலவும் ஓட்டுனர் சம்பளத்தில் பிடித்துக்கொள்ளப்படுகிறது.
நாம் வேலைக்குச் செல்லும் நாட்டின் குடிகளையும் வேலை வாங்கும் திறமையான வேலைக்குச் செல்பவர்களுக்கே மதிப்போடு மரியாதையும் கிடைக்கிறது என்பதை சவுதியிலும் குவைத்திலும் கண்டிருக்கிறேன். ஏனைய நாடுகளிலும் அவ்வாறே இருக்க வேண்டும். அம்மாதிரி தகுதியான வேலையில் நல்ல ஊதியத்தோடு வெளிநாடுகளில் வேலை செய்பவர்களாலேயே வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக்கொள்ள முடிகிறது. குவைத்தை பொருத்தவரை தினார் 250 (1 X 163 இந்திய ரூபாய்) க்கும் அதிகமாக ஊதியம் வாங்குபவர்களே ஓரளவு பணத்தை சேமிக்க முடிகிறது. மற்றவர்களின் வரவுக்கும் குடும்ப செலவுக்கும் சரியாக போய்விடுகிறது. வீட்டு வேலைக்கும், கட்டிட வேலைக்கும் வந்து பல துன்பங்களை சகித்தவாறே நாட்களை கடத்தும் இந்தியர்களை காணும் போதும், அவர்களின் துன்ப நிகழ்வுகளை கேட்டறியும் போதும் மனம் வேதனையடைகிறது. குறைந்த சம்பளத்திற்கு வெளிநாடு வந்து சிரமப்படும் இந்தியர்களை பற்றி அடுத்த வாய்ப்பில் எழுத முயற்சிக்கிறேன். இறைவனை நாடினால்…

21 comments:

  1. நைஜீரியால இருந்து பக்கதில வந்துருச்சே இந்த மோசடி. இதுல பாதிக்கப்படறது பெரும்பாலும் ஏழைங்கதான்னு நினைச்சா இன்னும் வருத்தமா இருக்கு.

    ReplyDelete
  2. தமிழகத்தில் அதிகம் இந்த மாதிரி மெசேஜ் அனுப்புறாங்க வெளிநாட்டில் இருந்து, காவல்துறை பத்திரிகைகளில் இதை பற்றி எச்சரிக்கை பண்ணி இருக்காங்க.

    //நம்மாளின் பெயர், அவரது சிம் கார்டு சீக்ரட் நம்பர் மற்றும் சிம் கார்டுடைய தனிப்பட்ட நம்பர் ஆகியவற்றை சொல்லி//

    சீக்ரட் நம்பர் ?...யாரோ தெரிஞ்சவன் ஏமாதிருபார்களோ, அதான் மனம் இறங்கி பணம் திருப்ப.....ஒரு சின்ன வ்யூகம்.

    ReplyDelete
  3. ஆமாம் பீர், ஏன் தான் இப்படி ஏமாறுகிறார்களோ தெரியவில்லை. எனக்கும் சந்தோஷமாய் இருக்கிறது நண்பருக்கு பணம் திரும்ப கிடைத்ததில்... அவர் அதிர்ஷ்டசாலிதான். இவ்வாறு ஏமாந்ததில் திரும்ப கிடைத்ததில் அவர் தான் முதல் நபர் என்கிறேன். பேசி கல்லையும் கரைத்திருக்கிறார்.

    பிரபாகர்.

    ReplyDelete
  4. I heard Kuwait community changed much better as before 5 years.

    But from this news seems nothing changed looks same :(

    Do u think they punish the locals?

    This guy Rahim nothing to say.

    ReplyDelete
  5. இதேபோல் போன்கால்கள் இங்கும் வருவதாக சொல்கிறர்கள் அதிர்ஸ்டம் கொட்டப்போகுதுன்னு நினைத்துக்கொண்டு உள்ளதையும் தொலைத்து நின்றவர்களும் இருக்கிறார்கள்,

    கவனம் கவனம், இதை எத்தனை முறை சொல்லியபோதும் ஏமார்ந்து தொலைப்பதே மனிதகுணம்..

    நல்ல இடுகை பீர்...

    ReplyDelete
  6. எனக்கும் இந்த அனுபவம் இருக்கிறது நண்பா.. இங்கிலாந்து லாட்டரியில் பவுண்டு கிடைச்சதுன்னு சொன்னாங்க.. நானும் ஆரம்பத்துல நம்பினேன்.. அப்புறம்தான் தெரிஞ்சது அத்தனையும் டுபாக்கூருன்னு.. அவ்வவ்:-((((((

    ReplyDelete
  7. சும்மா எவனாவது பணம் தருவானா!?
    நான் தன்ணி அடிச்சே மொத்த காசையும் காலி பண்ணாலும் பண்ணுவேனே தவிர இப்படி ஏமாறவே மாட்டேன்!

    ReplyDelete
  8. ஷிஃப்ட் டெலிட் செய்பவர் வரிசையில் நானும ஒருவன்.....

    ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருக்கத்தான் செய்வார்கள்

    ReplyDelete
  9. சின்ன அம்மிணி, ஆமாம்.. ஏழைகளுக்குத்தான் பணத்தேவைக்கு அதிஷ்டத்தை நம்பியவர்களாக இருப்பதும், 5000 டாலர் என்பது கனவிலும் பார்த்திராத மிகப்பெரிய தொகையாக தெரிவதும் காரணமாக இருக்கலாம். :(

    ReplyDelete
  10. இல்ல சாம், தெரிஞ்சவன் செஞ்சதில்ல.. யாரோ பாகிஸ்தானி தான் போன் பண்ணியிருக்கான். ஆனா சீக்ரட் நம்பரும், சிம் கார்ட் நம்பரும் கரெக்டா சொன்னதும் தான் இவர் விழுந்திட்டார். :)

    ReplyDelete
  11. ஆமாம் பிரபாகர், கஷ்டத்தை அழுது புலம்பியிருக்கிறார். கல்லும் கறைந்துவிட்டது.

    யாசவி, இன்னும் குவைத் அப்படியே இருக்கிறது. 6 வருடங்களுக்கு முன்பு பார்த்ததும் இப்போதும் என்ற மாற்றமும் இல்லை.

    மலிக்கா, என்ன செய்வது ஆசைதான் அனைத்திற்கும் காரணம். ஓவர் நைட்டில் கோடீஸ்வரனாக வேண்டும் என்ற ஆசை.

    கார்த்திக், பணம் கொடுத்திடலையே... தப்பிச்சீங்க.

    வால், சரியா சொன்னீங்க.. சும்மா எதுக்கு அவன் நமக்கு பணம் தரணும்னு நினைச்சிருந்தாலே இதை இக்னோர் பண்ணிடலாம். ஆனாலும் தண்ணி... ஹி ஹி..

    முனைவர்.இரா.குணசீலன், சரியான வார்த்தைகள், ஏமாறுபவன் இருப்பதால் ஏமாற்ற திட்டம் தீட்டுகிறார்கள்.

    ReplyDelete
  12. 10 வருஷத்திற்கு முன்னர் இது மாதிரி துபாயில் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன், இப்போ இதெல்லாம் குறைந்திருக்கிறது என்பது என் கருத்து...

    சவூதியிலும், குவைத்திலும் இதுமாதிரி இருப்பதற்கு காரணம் உள்நாட்டினருக்கும், வெளிநாட்டினருக்கும் சட்டம் வெவ்வேறாக செயல்படுவதாலேயே.. அந்த வகையில் துபாய் அரசியலை கொஞ்சம் பாராட்டலாம்

    ஷிஃப்ட் அமுக்கி டெலீட் செய்யும் வரிசையில் நானும் ஒருவன்.. ஒரே நைட்டில் கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்ற ஆசை எந்த சாமானியனையும் விட்டுவைப்பதில்லை

    தொடருங்க பீர்

    ReplyDelete
  13. நல்ல இடுகை! நல்ல ஃப்ளோ!! தொடரட்டும் தங்கள் சமூகப்பணி!

    ReplyDelete
  14. கிரிமினல் சட்டங்கள் தீவிரமாக கடைபிடிக்கப்படும் அரபு நாடுகளில் கூடவா இது போன்ற மோசடிகளும்
    குற்றச்செயல்களும் மலிந்து கிடக்கின்றன ??

    அதிர்ச்சி தகவல்கள் !!!

    ReplyDelete
  15. நல்ல இடுகை அண்ணா

    ReplyDelete
  16. //Congratulations, it's your lucky day! You've just won $5,000!//

    சாரிங்க இவ்ளோ சீப்பா எல்லாம் வரதில்லை.. பின்னாடி பத்து பதினஞ்சி சைபரோட தான் வரும்.. :)

    மக்கள் கொஞ்சம் யோசிக்கனும்.. உலகத்துல எதுமே இலவசம் இல்லைனு..

    ReplyDelete
  17. யு.ஏ.இ.யில் வெற்றிகரமா செயல்பட்டு வந்த அதே மோசடி குவைத்லயும் நடக்குதா? ஒரு குருப்பாத்தான் திரியுறாங்க போல!! ஆனா எனக்கு மட்டும் அந்த ஃபோன்கால் வரவேயில்லை :-( வந்தா, நீ முக்காவாசி எடுத்துட்டு, எனக்கு கால்பகுதி (லெக்பீஸ் இல்லீங்கோ) தந்தாபோதும்னு சொல்லணுன்னு நினைச்சிருக்கேன். பேராசை படக்கூடாதில்லையா?

    அப்புறம், அந்த பெங்காலி கடைக்காரர்... என்ன சொல்வது... அமீரகம் இப்போ நகர்ப்புறங்களில் எவ்வளவோ பரவாயில்லை; புறநகர்ப் பகுதிகளில் சில தொந்தரவுகள் இருக்கலாம்.

    ReplyDelete
  18. பகாலா சம்பவம் கவலைக்குறியது, குழந்தைகளை சரியான வழியில், நம்மவர்கள் புத்திமதி கூறி வளர்ப்பது போல் இவர்கள் வள்ர்ப்பதில்லை, இது போல ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அந்தச் சிறுவனை கண்டிப்பதற்க்கு பதிலாக, அவன் சிறுவன் தானே அப்படித்தான் இருப்பான்னு சொல்லிடுறாங்க. இங்கேயும் பல நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கு நண்பரே.

    ReplyDelete
  19. அப்அஃப்ஸர், உள்நாட்டினருக்கும் வெளிநாட்டினருக்கும் வெவ்வேறாக சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. ஒரு வேளை சாலை விதிமுறை மீறலில் அவ்வாறு இருக்கலாம். ஆனால் குற்றவியல் சட்டங்களில் தண்டனை அனைவருக்கும் ஒன்றே. பல தண்டனைச் செய்திகளில் அவற்றை உறுதிப்படுத்த முடிகிறது.

    ஷிஃப்ட் டெலிட்... நைஸ். :)

    ReplyDelete
  20. சந்தனமுல்லை, நன்றி. ஆனா.. < நல்ல ஃப்ளோ > இது கொஞ்சம் ஓவர் இல்ல... :)

    செய்யது, கிரிமினல் சட்டங்கள் கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. குற்றவாளிக்கு (கொலைகாரனுக்கு) அதற்கு தகுந்த தண்டனை உறுதி, குற்றம் இழைக்கப்பட்டவரின் (கொலையானவரின்) வாரிசால் மன்னிக்கப்படும் வரை.

    நன்றி அன்பு,

    ReplyDelete
  21. சஞ்சய், சரியான வார்த்தைகள் 'உலகில் எதுவும் இலவசமில்லை' என்பது. யோசிக்க மாட்டானுவளே...

    ஹூசைனம்மா, நான் போன் பண்றேன். முக்காவாசி பணம் கையில் கிடைத்த 12 மணி நேரத்தில் உங்கள் கால் (வாசி) கையில் கிடைக்கும். டீல் :)

    ஆமா ஷஃபிக்ஸ் 8, 10 வயது சிறுவர்கள் கூட கையில் சிகரெட்டுடன் ரோட்டில் திரிவதை அடிக்கடி பார்க்க முடிகிறது. சொன்ன மாதிரி வளர்ப்பு சரியில்லை. :(

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.