Showing posts with label நபிமொழி. Show all posts
Showing posts with label நபிமொழி. Show all posts

Sep 18, 2009

யானைக்கு மதம் பிடிக்கும், வாலுக்கு?

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. – குறள்.

மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும். – உரை.

என் நண்பர், எங்கள் ஊர்காரர், என் முந்நாள் தெருவாசி, கோபக்காரர் திருமிகு வால்பையன் என்ற அருண் அவர்கள், இஸ்லாத்தை பற்றி தெளிவுபடுத்த கேட்டிருந்தார். அவருக்கான ப்ரத்தியேக இடுகை. என் நிலையை அவருக்குத் தெளிவுபடுத்துவதால் எங்கள் நட்பு பலப்படும் என்பதாலேயே இந்த இடுகை. இதன் உள்அர்த்தங்கள் எங்கள் இருவருக்கும் தெரியும் என்பதால் கலகக்காரர்களை கண்டு பயமில்லை. என்ன வால் நான் சொல்றது?

"இஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் குறித்து இன்னும் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் விமர்சிக்கும் தகுதிக்காகவாவது படித்து தெரிந்துகொள்ளுங்கள், பின்பு விவாதிக்கலாம்" என்று நான் சொன்னதற்கு...

வால்பையன், "படித்து தெரிந்து கொள்வதற்கு பதில் இப்போது உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன்! படி படி என்று சொல்லமால் நீங்கள் படித்ததை தெளிவுற சொல்லி கொடுங்களேன்!" என்று கேட்டிருந்தார்.

மிக்க மகிழ்ச்சி வால், இந்த தெளிவு ஒரு பொருளின் மீது விமர்சனத்தை வைக்கும் முன்பு இருந்திருக்க வேண்டும். பிழையான கருத்தை, ஆதாரமில்லாத குற்றச்சாட்டை அவையில் வைக்கும் முன்பு, அதை பாவிப்பவர்களின் புத்தகங்களை படித்தோ அல்லது நண்பர்களிடம் கேட்டோ தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பது தான் நான் சொன்னது. இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு, அதை கற்றுத்தேர்ந்த நம் பரஸ்பர நண்பர் அ.மு.செய்யது மற்றும் தேடிப்படித்த நான் இருக்கிறேன். இஸ்லாத்தை பற்றிய சந்தேகத்தை எந்நேரமும் எப்படியும் கேட்கலாம். (இரவு 12 மணிக்கு எழுப்பி, உன் பெயர் என்ன என்றும் என்னிடம் கேட்கலாம். மாத்ருபூதம் மாதிரி கோவப்படமாட்டேன். எனக்கு இப்போ நைட் ஷிஃப்ட் :-) ) உங்களுக்கான சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக எனது தேடல் இன்னும் அதிகமாகும் என்பதில் கூடுதல் மகிழ்ச்சியே. அது கிடக்கும்...

முஸ்லீம்கள் அரபியில் வழிபாடு நடத்துவதேன்? அல்லாவுக்கு அரபி மட்டும் தான் தெரியுமா?

முதலில் ஒரு விஷயம் புரிந்து கொள்ளுங்கள். எந்தவொரு மொழிக்கும் தனிச்சிறப்பென்பது கிடையாது. அதே போல எந்த மொழியும் தாழ்ந்த மொழி கிடையாது. அது காலத்தால் அழிந்த மொழியானாலும், பன்நெடுங்காலம் வாழ்ப்போகும் மொழியானாலும் சரியே. ஒரு மொழியில் புலமை பெற்றவர்கள், அதன் ஈர்ப்பினால், அம்மொழி மீது பற்று கொள்வது இயல்பே. அதேபோலத்தான் ஒருவர் தாய்மொழிப்பற்று கொள்வதும் இயற்கை, கடமை.

அரபி மொழி பேசுவர், அரபி அல்லாத மொழி பேசுபவரை விட உயர்ந்தவர் அல்லர். அரபி அல்லாத மொழி பேசுபவர், அரபி பேசுபவரைவிட உயர்ந்தவர் அல்லர் என்பது முஹம்மது நபியின் வாக்கு. (நபி = தூதர்)

வழிபாட்டிற்கான அழைப்பு அரபியில் 'அல்லாஹூ அக்பர்...' என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். இதை தமிழில்,' இறைவன் மிகப்பெரியவன்... வழிபாட்டிற்கு வாருங்கள்...' என்பதாக மொழி மாற்றம் செய்யலாம். சரி... இதை தமிழிலேயே சொல்லலாமே.. என்று கேட்பீர்கள். இஸ்லாம், ஒரு குறிப்பிட்ட பிராந்திய மக்களின் மார்க்கம் இல்லை. உலகம் முழுமைக்குமான மார்க்கம். அரபுநாட்டில் இருக்கும் தமிழ், மலையாளம், தெலுகு, பெங்காளி மற்றும் இன்னபிறவற்றை பேச்சு மொழியாக் கொண்டவர்களையும் இறை வழிபாட்டிற்கு அழைக்க ஒரு பொதுமொழியான குர்ஆன் எழுதப்பட்டிருக்கும் அரபியிலேயே 'பாங்கு' எனப்படும் வழிபாட்டிற்கான அழைப்பு விடுக்கப்படுகிறது. இதைக்கேட்பவர்கள் வழிபாட்டுதளம் சென்று தனது கடமையை நிறைவேற்றுகின்றனர். இறை வழிபாடும் அரபியிலேயே நிறைவேற்றப்படுவதற்கு காரணம் இதுவே. தனிப்பட்ட வேண்டுதல்களை அவரவருக்கு விருப்ப மொழியிலேயே கேட்டுக்கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே நிலைதான் மலையாளிகள் அல்லது நைஜீரியர்கள் தமிழ்நாடு வந்தாலும். மேலும், உலகெங்கும் வழிபாட்டை ஏற்று நடத்த, “அரபி கற்றவர், வயதில் மூத்தவர்” என்ற தகுதியே போதுமானது. அரபு நாட்டில் நானும் வழிபாட்டை முன்நின்று நடத்தியிருக்கிறேன். எனக்கு பிறகு வந்த அரபிகள் பின்னால் நின்று, என்னை தொடர்ந்தே இறைவனை வழிபட்டனர். (கருப்பர்கள், வெள்ளையர்கள், அரபிகள், அரபி அல்லாதோர் என்ற பாகுபாடும் இஸ்லாத்தில் இல்லை என்பதற்கும் இதை உதாரணமாக சொல்லலாம்) இறை வழிபாட்டிற்கு மொழி குறுக்கீடாகக்கூடாது என்பதே இதன் சாராம்சம்.

சரி… குர்ஆன் ஏன் அரபியில் இருக்க வேண்டும்? - முஹம்மது நபி அரபு நாட்டில் வாழ்ந்தார். அரபு மொழி பேசினார். அதனாலேயே அவருக்கு குர்ஆன் அரபி மொழியில் அருளப்பட்டது.

அன்னிய மொழியான அரபியை தமிழர் ஏன் படிக்க வேண்டும்? - மேற்சொன்ன ஒருமைப்பாட்டிற்குத்தான் அரபியை கற்றுக்கொள்கிறோம். மட்டுமல்லாது, அரபியில் உள்ள குர்ஆனை நேரடியாக விளங்கிக் கொள்வதற்காகவும்தான்.

அரபி தமிழர்கள் மீது திணிக்கப்படுகிறதே? - இல்லை. இது முற்றிலும் தவறான கருத்து. அரபி எந்த தமிழக பள்ளியிலும் கட்டாய பாடமில்லை. ஹிந்தி திணிப்பை எதிர்த்த நண்பர்கள், “ஹிந்தி தேவைப்படுவோர், விருப்பமுள்ளவர்கள் மட்டும் படிக்கட்டும்” என்று சொன்னது போல, விருப்பமுள்ளவர்கள் மட்டுமே, விருப்ப பாடமாக அரபியை படிக்கிறார்கள். அரபி படிக்கத்தெரியாத முஸ்லீம்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்கள், தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆனை படித்து விளங்கிக்கொள்கின்றனர். (குர்ஆன், பெரும்பாலான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்திலும் கூட) விரும்ப பாடமாக அரபி படிப்பவர்களிடம், ‘அது கூடாது, தமிழில் மட்டுமே படி’ என்று சொல்வதும் திணிப்புதான். அந்த திணிப்பு தவறென்றால், படிப்பதை தடுக்கும் இந்த திணிப்பும் தவறுதான்.

“இந்துக்கள் அனைவரும் சமஸ்கிருதத்தில் தான் பூஜை செய்ய வேண்டும் என்ற பார்பனீய சிந்தனையை ஒட்டி வருகிறது இது!, நான் பதிவில் கேட்டது போல் இஸ்லாமியர்களுக்கும் பார்பனீய சிந்தனை உள்ளதா?” – வால்பையன்.

வால், அரபியே முஸ்லீம்களின் பொது மொழியாக இருக்கிறது. அவ்வாறு இருப்பது எந்த ஒரு முஸ்லீமிற்கும் தொந்தரவில்லை என்பதால், அதையே அனைத்து முஸ்லீமும் விரும்புகின்றான். இதில் உங்களுக்கு ஏதாவது தொந்தரவு இருக்கிறதா? குறிப்பாக, கடவுளே இல்லை என்று சொல்லும் உங்களுக்கு, அவரை நம்புபவர்கள் எந்த மொழியில் வழிபாடு செய்தால் என்ன?

வால், நீங்களாக கேட்கும் கேள்விகளை விட, முகம் இல்லாதவர்கள் பத்தவைத்துவிட்டு போகும், முற்றிலும் அடிப்படை அறிவற்ற, ஆதாரமற்ற, கேவலமான கருத்துக்களைத்தான் ‘ஆமாம், எனக்கும் அதே கேள்வி உண்டு, நானும் அதுதான் நினைத்தேன்’ என்பதாக அதிகம் சொல்கிறீர்கள்.

எந்த சந்தேகம் என்றாலும் நேரடியாக கேட்கலாம். குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் சொல்லலாம்.

முன்பு உங்களுக்கு அதிகமான இஸ்லாமிய நண்பர்கள் இருந்ததாகவும் இப்போது குறைந்து விட்டதாகவும் அதனால் பிரியாணி வருவதில்லை என்றும் சொல்லியிருந்தீர்கள். ஆம்.. எனக்கும் தான். முன்பு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருந்தார்கள். இப்போது அவர்களுடைய தொடர்பில்லை. வேறென்ன… சோம்பேறித்தனம், அலுப்பு. ஆனால் எனக்கு சிறந்த நண்பர்கள் இப்போது கிடைத்துள்ளார்கள், வால்பையன், கோவியார், டக்ளஸ், கார்த்திகை பாண்டியன், லோகு, பாலா, ஜெகநாதன், மணிகண்டன், அப்துல்லா அண்ணன், செய்யது மற்றும் முகம் தெரியா பலர். உங்கள் குறை பிரியாணிதான் என்றால் நமது அடுத்த சந்திப்பில் என் வீட்டு பிரியாணி சாப்பிடலாம். ;)

  • இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் அபாண்டமாக குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிப்பதே நோக்கம். இவற்றை சொல்லாமல் விட்டால், தவறான எண்ணங்கள் வால்பையன் மனதிலும் உங்கள் மனதிலும் தங்கிவிட சாத்தியமுண்டு என்பதால் மட்டுமே. என் நண்பர்கள் மனதில் என்னைப்பற்றிய தவறாக எண்ணம் இருப்பதை நான் விரும்பவில்லை. எனக்கு கலங்கமில்லா நட்பு முக்கியம்.
  • மாற்று மத நண்பர்களின் கடவுள் கொள்கையையோ, அவர்களின் நம்பிக்கையையோ நான் எங்கும் கேள்வி எழுப்பியதில்லை. அது அவர்களின் நம்பிக்கை. என் பார்வையில் படுவதை கேள்வி கேட்க, கருத்து சொல்ல முழு உரிமை இருந்தும், நம் பண்பாடு, நாகரிகம் அதை செய்யச்சொல்லவில்லை.
  • அதற்காக இஸ்லாம் விமர்சனத்திற்கு அப்பார்பட்ட மார்க்கம் என்றும் சொல்லமாட்டேன். உங்கள் சந்தேகங்களை, தனி மெயிலில் அனுப்புங்கள். பதில் மெயிலிலோ அல்லது நீங்கள் விருப்பப்பட்டால், தனி இடுகையிலோ விவாதிப்போம்.

நன்றி.

Jul 27, 2009

தீர்ப்பு நாள்

முன்னரே சொல்லி விடுக்கிறேன், இது கோவியாரின் இடுகைக்கு எதிர் இடுகை அல்ல. ஆனால் அதை வாசித்த பின்பு தான், இதை எழுத எண்ணினேன். அவர் இடுகையில் சொல்லியுள்ள ஒரு வார்த்தை, இஸ்லாமியர்கள் குறிப்பிடும் 'தீர்ப்பு நாள்'. இவர்கள் குறிப்பிடும் தீர்ப்பு நாள் என்றால் என்ன? என்பதை இங்கே மிகச்சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன். இதே போன்று 'கலி முத்திடுத்து, கல்கி வரப்போறான்', 'ஜீஸஸ் வருகிறார்', என்பதையும் யாராவது சுருங்கச் சொன்னால், நான் புரிந்து கொள்வேன். இவைகள் சொல்லும் கருத்துக்களில் பெரிய வேறுபாடுகள் ஏதும் இல்லை என்பது என் புரிதல்.

முஸ்லீம் யார்?

இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ள உயிரினங்களையும் படைத்தவன் ‘அல்லாஹ்’ (ஒருவனே) என்று நம்பிக்கைவைத்து, அவனது இறைச்செய்தியைச் சொல்ல வந்த (கடைசி) தூதராக ‘முஹம்மது’ வை எற்றுக்கொண்டவர்கள் முஸ்லீம்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் அல்லது கருதப்படுகிறார்கள். பிறப்பால் மட்டுமே ஒருவர் முஸ்லீம் ஆகிவிட முடியாது. மேற்சொன்ன செய்தி, அதாவது

‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது அவனின் தூதராக இருக்கிறார்கள்’

என்று நம்பிக்கை கொள்ளும் அனைவரும் முஸ்லீம் தான். நம்பிக்கை கொண்டால் மட்டும் போதுமா…

முஸ்லீம் என்ன செய்ய வேண்டும்?

பாவச் செயல்களில் இருந்து விலகி, நன்மையான செயல்கள் மட்டுமே செய்ய வேண்டும். நன்மையே ஏவி தீமையை தடுக்க வேண்டும்.

  • பாவச் செயல்; இறைவனுக்கு இணை வைத்தல். உயிரினங்களுக்கு தீங்கிழைத்தல்.
  • நன்மையான செயல்கள்; இறைவனை வணங்குதல். உயிரினங்களுக்கு நன்மை செய்தல்.

நன்மையான செயல்களை செய்ய மக்களை ஏவ வேண்டும். தீமையை கண்டால் தடுக்க வேண்டும். (முதலில் கரம் கொண்டு தடுத்தல். முடியாவிட்டால், நா கொண்டு தடுத்தல். அதுவும் முடியாவிட்டால், குறைந்தபட்சம் அதிலிருந்து விலகி இருத்தல்)

ஏன் இவற்றை செய்ய வேண்டும்?

இறைவனின் வேதமான குர்ஆனிலும் தூதரின் வாழ்க்கையான ஹதீஸிலும் சொல்லியுள்ளது போல, இந்த உலக வாழ்க்கை நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு தேர்வுக் கூடம். இங்கு செய்யப்படும் வினைகளுக்கான கூலி தீர்ப்புநாளில் வழங்கப்பட்டு மறுமையில் நிறைவேற்றப்படும். அந்த நாளில் பணத்தாலும் பாசத்தாலும் யாரும் எதையும் சாதித்துவிட முடியாது. இவ்வுலகில் விதைத்ததை அறுவடை செய்யும் நாள் அது.

மறுமை

எந்தவொரு மனிதனும் மரணத்தை விரும்புவதில்லை. மரணிக்காமல் வாழவே விரும்புகிறான். அவன் விரும்பும் மரணமில்லா வாழ்க்கை மறுமையில் கிடைக்கும். மறுமை வாழ்க்கை முடிவற்ற ஒன்று. இறுதி தீர்ப்பு நாள் இருக்கிறது என்பதை இறைவேதம் குர்ஆன் பல வசனங்களில் சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக…

இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது, நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர் என்று அவர்கள் கூறினார்கள். (குர்ஆன், 006:029)

மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள். (குர்ஆன், 083:004 – 006)

அந்த நாள் எப்போது வரும்?

மறுமை நிச்சயமாக உண்டு என்று சொன்ன இறைவன், அந்த நாள் எப்போது வரும் என்பதை மறைத்து வைத்திருப்பதாகச் சொல்கின்றான்.

நிச்சயமாக அந்த நாள் வரக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது முயற்சிக்கேற்ப கூலி வழங்கப்படுவதற்காக அந்த நாளை மறைத்து வைத்திருக்கிறேன். (குர்ஆன், 020:015)

மேலும்,

அந்த நாள் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. (குர்ஆன், 31:34)

அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வராதென்றோ அல்லது, அவர்கள் அறியாதிருக்கும்போது திடீரென்று அந்த நாள் வராது என்று அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா? (குர்ஆன், 012:107)

இத்தகைய வசனங்களின் மூலம் தீர்ப்புநாள் நிச்சயம் வரும் எனபதில் நம்பிக்கை கொண்டோருக்கு எந்த சந்தேகமும் இல்லை. நாம் எதிர்பாராத நேரத்தில் அது சம்பவிக்கும் என்று நம்பிக்கை கொண்டு, பாவ செயல்களில் இருந்து விலகி நாம் நன்மையானவற்றை மட்டுமே செய்வதோடு மட்டுமல்லாமல், நன்மையை ஏவி தீமையை தடுக்கவும் வேண்டும்.

நான்

பாவச் செயல்களில் இருந்து விலகி இருக்கிறேன். முடிந்தவரை சக உயிரினங்களுக்கு நன்மை செய்கிறேன், அதையே ஏவுகிறேன். தீமையை கண்டால் என்னால் ஆன மட்டும் தடுக்கின்றேன். இதற்கெல்லாம், இறைவனை நம்புவதும் அதனால் தீர்ப்புநாளில் கூலி உண்டு என்ற நம்பிக்கையுமே காரணம். இந்த இறை நம்பிக்கை எனக்குள் இல்லாவிட்டால், கட்டுப்பாடில்லாமல் தான் தோன்றித்தனமாகத் திரிவேன். சுயத்தை மட்டுமே மனதில் கொண்டு, கொள்ளை கொலைகளை மலியச் செய்வேன். உடற்பசியை தீர்க்க உறவுகள் பாராது சமுதாயத்தை சீரழித்துவிடுவேன். இன்னும் கற்பனைக் கெட்டா குற்றங்களும் இங்கே நடத்தப்படும் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை.

நம்பிக்கை

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் யாரும் இல்லை. சிலருக்கு கடவுள் இருக்கிறான் என்ற நம்பிக்கை, சிலருக்கு கடவுள் இல்லை என்ற நம்பிக்கை. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. ஒருவருடைய நம்பிக்கையில் மற்றவர் குறுகிடாதவரை எந்த பிரச்சனையும் எழப்போவதில்லை.

நன்றி!

Jul 9, 2009

ஜிகர்தண்டா

நான் விரும்பி பருகும் ஜிகர்தண்டா இம்முறை என்னை பருகத் தவறியது விமான நிலையம் வந்த பின்புதான் நினைவு வந்தது.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

சிங்கை பதிவர்கள் – தமிழ்வெளி இணைந்து நடத்தும் மணற்கேணி 2009 போட்டியில் வெற்றி பெறுபவர்கள், ஸ்ரீலங்கன் விமானத்தில் டிக்கெட் கேளுங்கள். அதில் தான் இறைக்க இறைக்க ஊறும் நீரைப்போல கேட்ட கேட்ட ஊற்றித்தருகிறார்கள், இல்லை என்று சொல்லாமல். அட ஆமாங்க, எப்போதும் இல்லாமல் கடந்த இரண்டு முறையாக அதுதான் நடக்கிறது. இருந்தாலும் இருக்கைகள் காலியாகவே இருந்தன. ரிஷிசன் தான் காரணமோ?

Manarkeni 2009

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

விமானத்தில் செல்பவர்கள் கூடவே மௌஸ் ட்ராப்பும் கொண்டு செல்ல வேண்டும் போல, பிரட்டனில் இருந்து இஸ்லாமாபாத் வந்த விமானத்தில் எலிகள் தொல்லை தாங்க முடியவில்லையாம். வழக்கமா கொசு தொல்லைதான் இருக்கும். இப்போ எலி… புலி… ஐயோ நானில்லை.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

மறைந்த மைக்கேல் ஜாக்ஸன் சிறிது காலம் முன்பு இஸ்லாத்திற்கு மாறி தனது பெயரை மீகாயில் என மாற்றிக் கொண்டாராம். நெவர்லேண்ட் பண்ணை வீட்டில் அவரது ஆவியை பார்த்தாகவும், இன்னும் சாகவில்லை நாடகமாடுகிறார் என்று ஒரு கூட்டமும், அவர் கொலை செய்யப்பட்டார் என்று சிலரும், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார் என்பதாகவும் பல செய்திகள் வருகின்றன. இருக்கும் போதுதான் சர்ச்சையில் இருந்தார் இறந்த பின்பும் அது அவரை விடவில்லை.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

தேர்தலுக்கு முன்பு நடந்ததாக சொல்லப்படும் சம்பவம். மதுரை A குடும்பத்துடன் AA என்ற தேங்காய் நாட்டை சேர்ந்த சர்வதேச நகைக்கடைக்கு போய் 15 L க்கு நகை வாங்கிவிட்டு, ‘பில்ல வீட்டுக்கு குடுத்தனுப்பு’ என்று சென்றுவிட்டாராம். இரண்டு நாட்களாகியும் பில் செட்டில் ஆகாம இருக்க, மூன்றாவது நாள் வீட்டுக்கு ஆள் அனுப்பி கேட்க போக, கடைக்கு முன்னால் வரிசையா குழி தோண்டி போட்டதும் இல்லாமல் பணமும் தர முடியாது என்று சொல்லப்பட்டதாம். விற்ற சரக்குக்கு பணம் வராதது மட்டுமல்லாது, புது சரக்கும் விற்க முடியாமல் போனதால AA பவரை காட்ட வேண்டியதாப் போச்சாம். D கிணற்றில் பதுங்கி இருக்கும் D காதில் விசயத்தை போட, ஒரு மணி நேரத்தில் குழி மூடப்பட்டு பில்லும் செட்டில் செய்யப்பட்டு விட்டதாம்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

திரை அரங்குகளில் பாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், நம்ம டெயில் டெரர் ஆகப்போவதாக வதந்தி.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

வெல்லை பதிவரை விரட்டியதில், சமீப காலமாக கிசு கிசு எழுதியே கடை நடத்தும் நம்ம ஜன்னலுக்கும் முக்கிய பங்குண்டாம்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

ஒரு வரலாற்றுச் சம்பவம்; நபிகள் நாயகத்தின் சகாவாக இருந்த உமர் அவர்கள் ஒரு முறை 1000 ஒட்டகங்கள் வியாபாரத்திற்காக மொத்த விலைக்கு வாங்கி, அனைத்து ஒட்டகங்களையும் வாங்கிய விலைக்கே சில்லறைக்கும் விற்பனை செய்தார்கள். அதைப்பார்த்துக் கொண்டிருந்த உதவியாள், ‘இதனால் தங்களுக்கு என்ன லாபம்’ என்று கேட்ட, உமர் சொன்னாராம், ‘ஒட்டகத்தின் கழுத்தில் இருந்த கயிற்றை அவிழ்த்து வைத்துக்கொண்டு தானே அவற்றை விற்றேன், அந்தக்கயிறு தான் லாபம்’ என்பதாக.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

ஒரு சிறு பயிற்சி; இருக்கையில் அமர்ந்து, வலது காலை தூங்கி கடிகார சுழற்சி திசையில் சுற்றியவாறே வலது கையால் 6 என்று காற்றில் எழுதிப்பாருங்கள்… முடிந்தால்.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

ஒரு சிறு முயற்சி;

கடக்கவேண்டிய பாதை

பின் வர - நான்

எனக்காய்

என்றும் வாழாத

என் நாட்கள்

முன் வந்து

என்னைக் கொல்கிறது.

நன்றி!!!

Nov 16, 2008

அல்லாஹ்வின் அருள் அரபு நாடன் மீது...

நபி மொழி ஒன்று ஞாபகம் வருகிறது, அது மக்காவை விட்டு முஹம்மது நபி (ஸல்) மற்றும் நபிதோழர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்து நாட்கள் ஆன சமயம், (மதீனா வந்தபோது நபிதோழர்கள் மிக வறுமையில் இருந்தார்கள்) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போரில் கிடைத்த பொருட்களை பகிர்ந்தளித்து கொண்டிருக்கும் போது கூறியதாக அந்த நபி மொழி வருகிறது, "இனி உங்களுடைய வாழ்வில் செல்வ செழிப்புதான். வறுமையை கண்டு அஞ்ச தேவையில்லை, நான் அஞ்சுவதெல்லாம் உங்களுக்கு கிடைக்கபோகும் அந்த செல்வத்தை எண்ணித்தான்". எத்தனை உண்மை பாருங்கள்...