Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

Sep 4, 2011

தமிழ் தாய்க்கு ஒரு கடிதம்

இன்று ஆசிரியர் தினமாம். விடுமுறையில் வீட்டில் இருக்கும் அக்கா பையன் சொல்கிறான். ஆசிரியர் என்றதும் சட்டென என் நினைவில் வரும் என் தமிழ் ஆசிரியருக்கு வேறென்ன செயதுவிட முடியும் இந்த மீள்பதிவை தவிர.

Nov 15, 2010

பிணந்தின்னும் சாத்திரங்கள்

மதுரை இப்போது ஜொலித்துக் கொண்டிருக்கிறது. பின்னே, மத்திய அமைச்சரின் மகனுக்கல்லவா திருமணம்?

ஒரு சராசரி பணக்காரனின் திருமணம் என்றாலே அந்தப் பகுதி கொஞ்சம் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகத்தான் செய்யும். (எல்லாம் ஒரு விளம்பரம்தான்!) மதுரை இளவரசருக்குக் கல்யாணம் என்றால் கேட்கவா வேண்டும்?

தயாநிதியை மதுரை இளவரசர் எனச் சொல்வதற்கு எனக்குக் கொஞ்சமும் கூச்சமில்லை. ஏனெனில் மதுரை மன்னருக்கு மகன் என்றால்... நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர் இளவரசர்தான்.

மதுரையில் (நான் பார்த்தவரை)ரயில்வே பாலம் மற்றும் மேயர் முத்து பாலங்கள் முழுவதும் சீரியல் லைட் அலங்காரம். மேலும், யானைக்கல் பாலம், விக்டர் ஆல்பர்ட் பாலம் முழுவதும் சீரியல் லைட்டுகள், சூரிய வடிவ டியூப் லைட்டுகள், கொடிகள், தோரணங்கள்.

என் நண்பன் சொன்னான்: வேற வீட்டுக்குக் கல்யாணத்துக்கு இவர்கள் வருவதாக இருந்தாலே அலங்கார வளைவுகள், தோரணங்கள், பேனர்கள் வானையும் நம் மூச்சையும் முட்டும்... இவர்களின் வீட்டுத் திருமணம் என்றால் என்னென்ன நடக்கப் போகுதோ?

ஆனால் அப்படியொன்றும் பெரிய அளவில் பேனர், தோரணங்கள் இல்லைதான் என முதலில் ஆறுதலடைந்தேன். ஆனால் இப்போது அப்படியிருந்தால் கூடப் பரவாயில்லை எனத் தோன்றுகிறது.

மதுரை உள்ளிட்ட தமிழக நகரங்கள் முழுவதும் மின்பற்றாக்குறையால் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. ஆனால் 13ஆம் தேதியிலிருந்து மதுரை நகர் இரவு முழுவதும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. நான்கு பாலங்கள் முழுவதும் டியூப் லைட்டுகள், சீரியல்கள் அத்துடன் தமுக்கம் மைதானம் போகும் வழியெங்கும் ஃபோகஸ் லைட்டுகள் எரிக்கப்படுவதற்காக நாம் பகலெல்லாம் புழுங்கிச் சாகிறோம். பிறகு இந்தியாவில் இரண்டாவது பணக்கார அமைச்சரின் பணத்தை செலவளிப்பதற்கு வேறு நியாயமான காரணம் வேண்டாமோ?
சூரியனுக்கு வெளிச்சம் காட்டும் பல்பு

பாதை மறிக்கும் சூரியக்கூட்டம்
நோ கமண்ட்ஸ் (இடம் மதுரை கல்லூரி)

ஆனால் நமது கேள்வியெல்லாம் ஒன்றுதான்... சூரிய குடும்பம் என்று தமிழகமே உங்களைப் போற்றுகிறது. உங்கள் பேனர்கள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன. சேகுவெரா, ஜார்ஜ் புஷ், சத்ரபதி சிவாஜி போன்ற உலக ஆளுமைகளின் பிம்பங்கள் எல்லாம் உங்கள் உடல்களில் பிரதி செய்யப்படுகின்றன... ரொம்ப மகிழ்ச்சி...

உங்கள் சூரிய குடும்பத்திலிருந்து மின்சாரம் எடுத்து இரண்டு மணி நேரம் மின்வெட்டை நிறுத்தினால் உங்களையும், திருமணம் செய்யப் போகும் இளவரசரையும் நாடு போற்றும். உங்கள் கட்சியினர் மட்டுமல்ல, கட்சி சாராத பொது மக்களும் போற்றுவார்கள்.

மதுரை மக்கள் மணமக்களைப் போற்றுவதற்கு மேலும் சில ஆலோசனைகள்

1. உடனடியாக மதுரை முழுவதும் சேதமடைந்திருக்கும் சாலைகளை புதிதாகப் போட்டால் அதற்குக் காரணமான மணமக்களை மதுரை மக்கள் மனம் நிறைவாகப் பாராட்டுவார்கள். வாழ்த்துவார்கள்.
2. கல்யாண விளக்குகள் எரியும் நாளிலிருந்து ஒரு மாதத்துக்கு மதுரை மக்களுக்கு மின்வெட்டு இல்லை.
3. திருமணத்திற்கு முன்னும் பின்னும் மொத்தம் மூன்று நாட்கள் மதுரை நகருக்குள் பேருந்தில் எங்கு சென்றாலும் இலவசம். (ஒரு நாளைக்காவது ஷேர் ஆட்டோ தொல்லையிலிருந்து மக்களுக்கு நிம்மதி கிடைக்கும்.)
4. யாரோ எம்.எல்.ஏ ஆவதற்காக ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தவர், மகன் திருமணத்துக்கு ஒரு வீட்டுக்கு ஆயிரம் ரூபாயாவது தருவார் என எதிர்பார்க்கலாம்.
5. திருமணத்தையொட்டி பெட்ரோல் விலையை சட்டென்று பாதியாகக் குறைக்கலாம்.
6. திருமணத்தன்று வாழ்த்துச் செய்தி அதிகமாகப் பரிமாறிக் கொள்ளப்படும் என்பதால் அன்று அனைத்து மொபைல் சர்வீஸும் எஸ்.எம்.எஸ் இலவசமாக்கப்படும்.
7. அன்று பிறக்கும் குழந்தைகளில் தயாநிதி பெயர் சூட்டுவோருக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்படும்.
8. அன்று மதுரை நகர் முழுவதும் மையங்கள் நிறுவி மக்களுக்கு விருந்தளிக்கப்படும்.

சட்டமன்ற தேர்தல் வெகு அண்மையில் இருப்பதால் அதை வெற்றிகரமாக எதிர்கொள்ள மேற்கண்ட ஆலோசனைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜோக்ஸ் அபார்ட், உண்மையில் தற்கால அமைச்சர் மகனுடைய திருமணம் என்கிற ஆடம்பர விதிகளின்படி திருமணம் நடந்தது எனில் ஜெயலலிதா ஆட்சியில் வளர்ப்பு மகன் திருமணம் ஏற்படுத்திய விளைவையே தி.மு.க.வும் சந்திக்கும். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாதபோது விதி எல்லோருக்கும் ஒன்றுதான், அது நியூட்டன் ஆனாலும் சரியே!

மறுபுறம், ஜெயலலிதாவை விமர்சித்த அளவுக்கு திமுகவை விமர்சிக்கும் நெஞ்சுரமோ துணிச்சலோ அஞ்சா நெஞ்சமோ தமிழகத்தின் பிழைப்புவாத ஊடகங்களுக்கு இல்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

`பேயாட்சி செய்யும் நாட்டில் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று சொன்ன பாரதியின் பாடல் இன்று எவ்வளவு கனகச்சிதமாய்ப் பொருந்துகிறது. பிறகு, எவ்வளவு அராஜகம் நடந்தாலும் வேறு வழியேயில்லாமல் முதலமைச்சரும், காவல்துறையும், அமைச்சர்களும், வணிக நிறுவனங்களும், பொதுமக்களும் இந்தத் திருமணத்தை வாழ்த்தித்தானே ஆக வேண்டியிருக்கிறது.

(சம்பந்தமில்லாத ஒரு குறிப்பு: நேற்று சி.டி.யில் மனோகரா திரைப்படம் பார்த்தேன். கதை, வசனம்: மு.கருணாநிதி)

Nov 2, 2010

ஜனநாயகம் - சாபமான வரம்


தமிழ் நாட்டில் தேர்தல் அடுப்பு பற்றவைத்தாகிவிட்டது. இனி சூடுபிடித்து கொழுந்துவிட்டு எரியும்.  கருப்புகள் வெளியே வந்து ஓரளவுக்காவது பொதுசன மையத்தில் பணம் புரளும். அண்மையில் நடந்து முடிந்த ஆர்பாட்டங்களில் தலைக்கு 500+பிரியாணி விநியோகம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எனில் முத்திரைக்கு இன்னும் அதிகமாகவே பேரம் பேசலாம், பேசுவார்கள். போலி முக்த்திரையுடன் நம் காலில் விழுந்து, காசு கொடுத்து ஓட்டு பெற்றதும், வாய்கரிசி போட்டு செத்த பாம்பாக்கிவிடும் நிலை இங்கே மிகச்சாதாரணம். சாலையோரத்தில் அல்லது 'நடு' சென்டரில் நிற்கவைக்கப்பட்டிருக்கும் இலவச பறவை கழிப்பிடத்திற்கு காட்டப்படும் கரிசனம் கூட மனித மலக்கழிப்பிடத்தின் மீது இருப்பதில்லை. ஆண்டுக்கு ஒரு முறையேனும் பறவை கழிப்பிடத்தை சுத்தப்படுத்தி சுண்ணாம்பு தடவி, அதன் பெயரில் ஒரு கலவரத்தையும் நடத்துபவர்களும் சுயகழிவிறக்க முட்டுச்சந்தையே நாடும் அவலம் இங்கு மட்டுமே காணக்கிடைக்கும்.

கடந்த மாதத்தில் இரண்டு தினப்பத்திரிக்கை புண்ணியத்தில் இரண்டு பறவை கழிப்பிடங்களுக்கு மீள்வாழ்வு கிடைத்துள்ளது. அதற்கு சிறகில்லா காக்கைகளும் நன்றி செலுத்திதை தினமணி செய்திக்கு கிடைத்த வெற்றி என்று புகைப்படத்துடன் ஆதாரம் செய்துள்ளனர். சிம்மக்கல் பகுதியில் நடுரோட்டில் இருக்கும் அந்த சிலையை சற்றே இடம் மாற்றிவைக்கவும் அனுமதிக்காமல் போராட்டம் நடத்தி வெற்றிபெற்றது இந்தியாவை ஆளும் கட்சியினரே. கட்சத்தீவை இன்னும் மீட்கக்காணோம். காவேரி தண்ணீரை திறந்துவிட வக்கில்லை. சிலையை மீட்டுவிட்டதாய் போட்டோவிற்கு பல்லிளிக்கிறார்கள். அதைவிடக்கொடுமை, மதுரையின் சாலையோர வியாபாரிகளை தகர்த்து கொண்டுபோய் தல்லாகுளம் பகுதியில் ஒருங்கிணைந்த விற்பனைக்கூடத்தில் அடைத்திருக்கிறார்கள், தீபாவளி சிறப்பு விற்பனையாம். அங்கு ஏற்கனவே இருந்த சிலைக்கு அருகில் கடை விரித்தையும் கண்டித்து தினமணி செய்திவெளியிட அதற்கும் உடனடி நடவடிக்கை எடுத்து அந்த கடைகளை அப்புறப்படுத்திவிட்டது மாநகராட்சி. தினமணி செய்திக்கு துரித நடவடிக்கையாம்.

மதுரையில் தொழில் தொடங்குவதாய் இருந்த பன்னாட்டு கணிணி நிறுவனத்தினர் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை பார்வையிடச் செல்ல ரோட்டில் பல சாகசங்களை நிகழ்த்த வேண்டிய நிலை. 'ஐயோ போதும் ஆளை விடுங்க' என்று மேற்கு பக்கம் சென்றுவிட்டனராம். உள்கட்டுமானம் இல்லாத நாட்டில் ஒரு குப்பனும் குப்பை கொட்ட வரமாட்டான் என்பது சுப்பனுக்கு தெரிந்திருந்தும், சுற்றுவட்டாரத்திற்கு தெரியவில்லை. டிவிஎஸ் நகர் பளபளத்தால், மதுரை முழுக்க தங்கத்தால் தார் போட்டிருக்கும் என்ற நினைப்பாயிருக்கும்.

வெளிநாட்டு நிறுவனங்கள் வருவதற்கு உள்ளே வரச்சாலையில்லை சரி, குழிகளுக்கிடையில் அறிதாய் இருக்கும் குவிகளினூடே ஊர்ந்து வந்து கடை வைத்திருக்கும் பண முதலைகளையும் ஓடச்செய்யும் வழியை தம்பிகள் இனிதே செய்துவருகிறார்கள். முன்பு நகைக்கடையை எதிர்த்தது போல இப்போதும் ஒரு நகை மற்றும் ஜவுளிக் கடைக்கு தரும் நெருக்கடியில் அவர்கள் மதுரையை விட்டு ஓடும் எண்ணத்தில் இருப்பதாகப் பேச்சு.

இணையதளங்களில் பதிவு செய்யும் போது கேட்கப்படுவதால் என்னுடைய பிறந்த நாள் இன்னும் நினைவிருக்கிறது, ஆனால் எனக்கு எந்தவிதத்திலும் சொந்த/பந்தமில்லாத ஒருவரின் பிறந்தாள் என்றும் என் நினைவிலிருந்து மறப்பதில்லை. இது எனக்கு மட்டுமல்ல, மதுரை வாழ் மரத்தமிழன் ஒருவனுக்கும் மறக்க வாய்ப்பே இல்லை. மறந்துவிடாதீர்கள் மறந்தும் இருந்து விடாதீர்கள், மறந்துவிட்டால் இருக்க மாட்டீர்கள். என்று சொல்லாமல் சொல்லி எங்களை இம்சிக்கிறார்கள். ஜனவரிக்கு ஆறு மாதம் முன்பே சுவரெழுத்துகள் ஆரம்பமாகிவிட்டது. தன் தாய் தந்தை பிறந்தநாளையும் இப்படி செலவுசெய்து விளம்பரப்படுத்த மாட்டார்கள். உடன்பிறந்த அண்ணன் கஞ்சிக்கு வழியில்லாமல் இருப்பான், இவன் ஊருக்கு பிரியாணி பொட்டலம் கொடுத்துக்கொண்டிருப்பான். அதுசரி... இதெல்லாம் நேரடி முதலீடு. சொந்த அண்ணனுக்கு சோறு போட்டால், சொத்தையா எழுதி வைக்கப்போறான்.

இவை நம் நாட்டின் சாபக்கேடு. சாபத்தை சகித்தே வாழ வேண்டும். இத்துர்பாக்கிய நிலை நம்மீது திணிக்கப்பட்டிருப்பதை அறிந்தோ அறியாமலோ நாமும் ஏற்றுக்கொண்டுவிட்டோம். சகித்து வாழ்கிறோம், சந்தோஷமாக!

Aug 12, 2009

விளிம்புநிலை வியாபாரிகள்

அந்த இட்லிக்கடை நடத்துபவர் பெயர் இட்டலிக்காரம்மா. கடைக்குப் பெயரில்லை, கடை நடத்துபவர் பெயரையும் யாரும் தெரிந்து கொள்ள விரும்பியதில்லை. இது பெரும்பாலான தெருவோர கடைகளுக்குப் பொருந்தும். இத்தகைய கடைகளுக்குப் பெயர் போனது மதுரை. விலை உயர்ந்த உணவகங்களை காட்டிலும், நமக்கான விருப்ப சுவை கிடைப்பதும், அவை பர்ஸை பதம் பார்காததும் பலரை அங்கு அழைத்துச் செல்வதுண்டு. அதில் கடைக்காரர் பெயர் தெரிந்து என்ன செய்ய. போத்தீஸ்கடை, ஆத்தா கடை, ஐயப்பசாமி கடை என்று அந்த கடைகள் அடையாளப் படுத்தப்படுவதுண்டு. இரவு 7 மணிக்குப்பிறகு ஆரம்பமாகும் இக்கடைகள் நள்ளிரவு 2 மணிவரை கூட (திறந்திருப்பதுண்டு என்று சொல்வது பொருந்தாது, கதவில்லாக் கடைகள்) அடுப்பு எரிப்பதுண்டு. சென்றமர்ந்ததும் 4 இட்லி, பிறகு ஒரு தோசை அடுப்பில் இருந்து நேரடியாக நம் தட்டுக்கு மாற்றப்படும். கடைசியாக ஒரு முட்டை தோசையுடன் கை கழுவலாம். ‘14;50 குடுப்பா’. ‘ஒர்ருவா கம்மியா இருக்கேக்கா...’ ‘பரவாயில்லப்பா.. நாளபின்ன வந்தா குடு’. இருவரும் வியர்வையின் விலை தெரிந்தவர்கள், ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கை.

சில குடியிருப்பு பகுதிகளில் காலை மட்டுமே விரிக்கப்பட்டிருக்கும் கடைகளில் ஒன்றுதான் இட்லிக்காரம்மாவுடையது. ஜீவாநகரில் இருந்தபோது, எங்கள் தெருவோரத்தில் இருந்த இட்லி கடையில் எனக்கு பள்ளி மதிய உணவிற்கு இட்லி வாங்கித் தருவது அம்மாவின் வழக்கமாயிருந்தது. வீட்டை ஒட்டியே என் உறவினரின் பிரபல ஹோட்டல் இருந்தும் தெருவோரக் கடையில் இட்லி வாங்குவதற்கான சில காரணங்கள், ஹோட்டலை விட இங்கு பெரிதாய் கிடைக்கும் இட்லி, வீட்டுச் சுவையிலேயே சாம்பார் சட்னி, சில நேரங்களில் இலவசமாய் கிடைக்கும் குழிப்பணியாரம். அதைவிட முக்கியம் கைராசி.

தினமும் அதிகாலையில் பெருக்கி, நீர் தெளித்து கோலமிட்டு அதன் மேல் அடுப்பு ஏற்றப்படும். இரண்டே அடுப்புதான். இட்லி, குழிப்பணியாரம் இரண்டே மெனு தான். தோசைக்கு காத்திருக்க வேண்டும், இட்லி பாத்திரம் இறக்கப்பட்டு தோசைக்கல் ஏற்றப்படும்வரை. என்னயிருந்தாலும் ஏழு மணிக்கு முன்பு வியாபாரம் ஆரம்பிப்பதில்லை. ஏழு மணி என் தம்பி தூங்கி எழும் நேரம். அவன் கை ராசிக்கையாம். அவன் கையால் வியாபாரம் ஆரம்பித்தால் சுபிச்சமாக இருக்கும் என்பது இட்லிக்காரம்மாவுடைய நம்பிக்கை. அப்பாவிற்கு அந்த நம்பிக்கையில் நம்பிக்கை இல்லை என்றாலும் இட்லிக்காரம்மாவுடைய நம்பிக்கைக்காக தம்பியை தினமும் அனுப்பிவைப்பார், போனி செய்ய. அவனும் அந்தம்மா கடையில் இருந்தே 10 பைசா எடுத்து கொடுத்து ஒரு குழிப்பணியாரம் வாங்கி வருவான். அவன் கையால் பணம் வாங்குவதற்கு முன் இட்லிக்காரம்மா பணத்தைத் தொட மாட்டார். அவசரம் என்றால் மட்டுமே, தாமாக பணத்தை தட்டில் போட்டு இட்லியை எடுத்துச் செல்ல வேண்டும். அவருக்கு நம்பிக்கை என் தம்பிக் கை மீது. நாங்கள் வீடு மாறிய சில நாட்களிலேயே அவரும் கடையை நிறுத்திவிட்டதாக அறியப்பெற்றேன். ராசிக்கை போன கவலையாயிருக்கும்.

டவுன்ஹால் ரோடு, மதுக்கடைகள் அதிகமாக இருக்கும் தெருவில் ஒருவர் தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்கிறார். வண்டியை தள்ளலாம் என்றாலும் ஒரே இடத்தில் தான் வியாபாரம். வியாபாரம் இல்லாத நாட்களிலும் வண்டி அங்கேயே இடப்பட்டிருக்கும். சரக்கு தானியில் கொண்டுவரப்படலாம். ஆள் பார்க்க சுத்தமாக இருப்பார். நெற்றியில் எப்போதும் காணப்படும் ஒரு இன்ஞ் திருநீறு, வாடிக்கையாளரை வரவேற்கும் இன்முகம். அவருக்கு தன் வியாபார சரக்கு சுத்தமாக இருக்க வேண்டும். கடலையை கரண்டியில் தான் எடுப்பார், சரக்கில் கைபடுவதில்லை, யாரையும் கைவைக்க விடமாட்டார். சுத்தம் தான் என் முதலீடு என்பார். அதற்காகவே பலரும் அங்கு செல்வதுண்டு. ஃபுட் ஸேஃப்டி படித்த எனக்கு, சில குறைபாடுகள் கண்ணில் தெரியும். முக்கியமாக கடலை மடித்து கொடுக்கும் குமுதம், குங்குமம், ஆவி, தினமலர், மாலைமலர் போன்றவை வாசிக்கப்படும் சூழல், அதை நேரடியாக எடைக்கு வாங்கும் பழைய பொருள் தரகர். அது விற்கப்படும் மொத்தக் கடை. அங்கெல்லாம் நிறைந்திருக்கும் சுத்தமும் சுகாதாரமும். ஆனாலும் தன்னளவில் சுத்தமாக இருக்கமுனைபவரிடம் அவையெல்லாம் நினைவூட்டுவது அவரது நம்பிக்கையை தகர்ப்பதாக ஆகிவிடும். எனக்கு கடலை நினைவு வரும் போது சொந்த பாத்திரத்தில் வாங்கிவருவதன் காரணம் அதன் சுவை, என் விருப்ப சுவை.

மீனாட்சியை தருசிக்க வரும் கேரள ஆந்திர பக்தர்களை குறிவைத்து நடத்தப்படும் மார்கழி மாத மாசி வீதி கடைகளும் பிரசித்தி. அத்தகைய நடைகடை வியாபாரிகளில் பெரும்பாலானோர் ஐயப்ப பக்தர்களாக இருக்க பார்த்திருக்கிறேன். வியாபார நுண்ணரசியல். எழுகடல் தெருவில் ப்ளாஸ்டிக் பொருட்கள் மொத்தமாக வாங்கி, மதுரை முழுக்க தள்ளுவண்டியில் சில்லறைக்கு விற்பவர். சுக்குமல்லி காபி, போளி, போண்டா போன்றவற்றை சைக்கிள் உருட்டியே தினமும் விற்று தீர்ப்பவர் மற்றும் இளநீர், காய்கறி விற்கும் இன்னும் பலர்.

இவர்களுக்கெல்லாம் அன்றைய வியாபாரத்தின் லாபம் தான் அடுத்த நாளுக்கான சோறும், முதலீடும். நான்கைந்து நாட்கள் தொடர்ந்தார்போல் வியாபாரமோ அல்லது வியாபாரியோ படுத்துவிட்டால், அடுத்த நாள் சோற்றுக்கு கந்துவட்டியிடம் கையேந்தும் விளிம்புநிலை வியாபாரிகள் இவர்கள்.

மணிகளில் ஆயிரங்கள் பார்க்கும் தீபாவளி திடீர் கடைகளையும், பாலியல் தொழிலாளர்களையும் விளிம்புநிலை வியாபாரிகள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. நான் இவர்களை வீம்புநிலை வியாபாரிகள் எனச் சொல்லுவேன்.

நன்றி!!!

Jul 23, 2009

சிக்கி

நான் எட்டு முடித்து ஒன்பதின் முதல்நாள் வகுப்பில் அமர்ந்திருந்தேன். என் பழைய நண்பர்களில் சிலர் காணாமல் போயிருந்தனர். விசாரித்ததில், அடுத்த வருடம் பொது தேர்வு என்பதால் வேறு நல்ல பள்ளியில் சேர்ந்துவிட்டதாக அறியப்பெற்றேன். முதல் நாள் வகுப்பாசிரியர் வர தாமதம் ஆகும் என்பதால் அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம். அப்போது தான் அவர் வாசலில் நின்று எட்டிப்பார்த்தார். அரைக்கை காட்டன் சட்டை. மடித்து வாரப்பட்ட அடர்த்தியான தலைமுடி. மீசை மட்டுமல்லாது ஆளும் வளர்ந்திருந்ததால், பத்தாம் வகுப்பறையை தேடி வந்திருப்பார் போல என நினைத்து நான் தான் சொன்னேன், “என்ன பாஸ், பத்தாவதா? ரெண்டு க்ளாஸ் தாண்டி இருக்கு. போங்க”. அதற்கு அவர் சொன்னார், “இல்ல நைன்த் பி”. “அட நம்ம க்ளாஸ் தானா? உள்ள வாங்க, கடைசி பெஞ்சுல வந்து உட்காருங்க பாஸூ”. கவனிக்கவும் நானும் கடைசிபெஞ்ச் தான். சரியாக படிக்காதவர்களுக்குத் தான் கடைசி பெஞ்சு என்று நீங்கள் நினைத்தால், தவறு. நாங்கள் சுமாராக படித்தும், சற்றே உயரம் அதிகம் என்பதால் தான் கடைசியில் அமர வைக்கப்பட்டோம்.

கடைசி பெஞ்சில் என்னருகிலேயே வந்து அமர்ந்தார். வகுப்பில் அனைவரும் அவரையே பார்த்துக்கொண்டிருக்க, நான் தான் ஆரம்பித்தேன் “உங்க பேரு என்ன பாஸூ?” . “சிக்கந்தர் அலி” ‘”பாக்க பெரிய ஆளாட்டம் இருக்கீங்க, பெயில் ஆகிட்டீங்களா, சிக்கந்தர் அலி?”. “இல்ல. எங்க வாவாக்கு(அப்பாவுக்கு) மிலிட்டரில வேல, நார்த் சவுத்ன்னு மாறி மாறி அலஞ்சதுனால இடைல ரெண்டு வருஷம் மிஸ் ஆயிடுச்சு” “சிக்கந்தர் அலின்னு முழுப்பேரச் சொல்லி கூப்பிட வசதியா இல்ல, ஷாட்டா அலின்னு கூப்பிடவா, பாஸூ? அலி ன்னா அரபியில வீரன் ன்னு அர்த்தம், ஆனா இங்க அப்படி கூப்பிட்டா ஒரு மாதிரியா இருக்கும், சிக்கந்தர் – சிக் - சிக்கி ன்னு கூப்பிடலாமா?” இப்படியாக சிக்கி என்று நாமகரணம் சூட்டப்பட்டது. சிக்கி என்னைவிட இரண்டு வயது மூத்தவர். எனக்கு எப்படி அழைப்பது என்று தடுமாற்றம் இருந்ததை அவரேதான் கழைந்தார். “நீங்கன்னு ஏன் சொல்லிக்கிட்டு, நீ ன்னே சொல்லு. அப்பதான் நட்பு வலுப்படும்”. சிக்கந்தர் அலி என்ற அவர், சிக்கி என்ற அவனானான்.

எங்கள் பள்ளியிலேயே எட்டு ‘சி’யில் படித்த ராதா கிருஷ்ணன் என்ற ராதாவும், ஒன்பது ‘பி’க்கு மாற்றப்பட்டான். அவனும் சற்று உயரம் என்பதால் கடைசி பெஞ்சில் வந்தமர்ந்தான். மூவரும் சம்பிரதாயமாக பார்த்து சிரித்துக் கொண்டோம். சிக்கி, ராதா, நான் என்ற மூவர் கூட்டணி உருவானது இப்படித்தான்.

அந்த வருடம் நடந்த பள்ளி தேர்தலில், ஒவ்வொரு வகுப்பாக சென்று நாங்கள் மூவரும் சிக்கிக்காக வாக்கு சேகரிக்க, பள்ளி மாணவத் தலைவனாக சிக்கி தேர்ந்தெடுக்கப்பட்டான். அதன் பிறகு இரண்டு வருடம் பள்ளி எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது நல்ல அனுபவமாக இருந்தது. தைரியமாக பல சேட்டைகள் செய்தோம்.

சிக்கியிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. சக மாணவிகளை சைட் அடிக்க மாட்டான். அவனது தோற்றத்திற்கு மாணவிகள் தரும் மரியாதைக்காக இருக்கலாம் என்று நானாக எண்ணிக்கொண்டேன். அனைத்து மாணவிகளிடமும் அவன் சகஜமாக பேசுவான், அவைகளும் அவ்வாறே. ராதாவை கண்டாலே அனைவருக்கும் பயம் இருந்திருக்கும். யாரும் அவனிடம் பேசுவதில்லை. நான் மாணவிகளிடம் என்ன என்றால் என்ன அவ்வளவுதான் பேசுவேன்.

சிக்கிக்கு கொஞ்சம் டெக்னிகல் அறிவு இருந்தது. வீட்டில் பழைய ரேடியோ, டேப் ரிக்கார்டர் பொன்றவை அடுக்கிவைக்கப்பட்ட மேசை ஒன்றை வைத்திருந்தான். ஒருமுறை பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் நாங்களே எங்கள் வீடுகளில் இருந்து மைக், ஸ்பீக்கர் செட் கொண்டு வந்து பள்ளியை ஒலியில் மூழ்கடித்தோம். அந்த ஏற்பாடு தலைமைக்கு பிடித்துப்போக, பள்ளியில் நிரந்தரமாக இதே ஏற்பாட்டைச் செய்து தினமும் காலை ப்ரேயர் ஒலியை பெருக்க முடிவு செய்துவிட்டனர். அதற்கான பொறுப்பும் எங்களிடமே வழங்கப்பட்டது. அஹூஜாவில் 4 ஸ்பீக்கரும் மைக்கும் வாங்கியதில் ஒரு தொகை கிடைத்தது. ஆளுக்கு ஒரு வெள்ளைச் சட்டை வாங்கியது போக மீதி இருந்த பணத்தில் ஒரு பாட்டில் வாங்கி இருவரும் குடித்தார்கள். அது பற்றி கேட்டதற்கு, “பீர், நீ குடிக்க வேண்டாம் சும்மா இருந்தால் போதும்” என்று சிக்கி சொன்னான். அப்போதுதான் தெரிந்தது அவர்கள் தண்ணி அடிப்பார்கள் என்று. அதன் பிறகு ராதா தம் பற்றவைக்க, சிக்கியும் அதிலேயே அவனது தம்மையும் நெருப்பாக்கினான். “அடப்பாவிகளா…” “இல்லடா, தண்ணி அடிச்சிட்டு தம் அடிக்கலைன்னா ஒரு மாதிரியா இருக்கும்” “இதெல்லாம் நல்லதுக்கு இல்லடா…” “அப்ப… நீ பண்றது மட்டும் நல்லதா?” “நான் என்னடா பண்ணேன்?” “டேய் அந்த சுதா மேட்ரு எங்களுக்கும் தெரியும்டா” அவர்கள் வாயில் நெருப்பு வைத்து என் வயிற்றில் ஐஸ் வைத்தார்கள்.

சுதா அப்போதுதான் என்னை திரும்பி பார்க்க ஆரம்பித்து இருந்தாள். அதை நான் பார்ப்பதற்குள் இவர்கள் பார்த்துவிட்டார்கள் போல, க்ராதகர்கள். ஆனால் நல்லவர்கள், எப்போதாவது நான் அவளை பார்க்காமல் பாடத்தை கவனித்தால், சிக்கிதான் என் தொடையில் கிள்ளி திரும்பி பார்க்கச் சொல்லுவான். சில நாட்களிலேயே எங்கள் பார்வை புன்னகையாக உறுப்பெற்றது. அப்படி ஒருநாள் புன்னகைத்துக் கொண்டிருந்த போதுதான் தலையில் ‘டொய்ங்’ ஒரு குட்டு விழுந்தது, ஆ… தமிழம்மா. அடுத்த நாள் சுதா வகுப்பில் இல்லை. 9 ‘ஏ’ க்கு மாற்றிவிட்டார்களாம். புள்ளி வைப்பதற்குள் கொள்ளி வைத்து விட்டார்கள்.

ராதா அப்போதே தீபாவளிக்கு கிடைத்த பண்டிகை பணத்தை சேர்த்து வட்டிக்கு விட்டிருந்தான். இப்போதும் அதே தொழில் தான் என்று சிக்கி சொல்லக் கேட்டிருக்கிறேன். கடந்த மாதம் தான் திருமணம் முடிந்தது. நான் ஊரில் இருந்தேன், இருந்தாலும் கலந்து கொள்ளவில்லை. முதலாவது வரதட்சணை வாங்கப்படும் / கொடுக்கப்படும் திருமணங்களுக்கு செல்வதில்லை என்ற எனக்குள் நான் வைத்திருக்கும் கோட்பாடு. இரண்டாவது, வட்டி.

சிக்கி க்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். என் திருமண வரவேற்பிற்கும் வந்திருந்தார்கள். சின்னதாக ஒரு செல்போன் சர்வீஸ் சென்டர் வைத்திருக்கிறான். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருப்பதாகவும், வெளிநாட்டில் நல்ல வேலை வந்தால் தெரியப்படுத்தவும் சொன்னான். சிக்கிக்கு அப்போது நான் சொன்னது, “வெளிநாடு ஒரு போதை மாதிரி, அங்கிருப்பவர்கள் இங்கு வரவும், இங்கிருப்பவர்கள் அங்கு செல்லவும் நினைப்பார்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இழப்புகள் அதிகம். இதுவரை இழந்தது போதும் என்றுதான், நான் இங்கு வர நினைக்கிறேன். உனது தொழிலில் முழு திறமையை வெளிப்படுத்தினால் நிச்சயமாக இதை முன்னேற்றலாம், இதிலிருந்து முன்னேறலாம். வெளிநாட்டில் கூலி வேலை செய்யும் உன் மனோநிலையை மாற்றி, இந்த தொழிலை முன்னேற்ற அல்லது குறைந்தபட்சம் இதே நிலையில் தொடர்ந்து நடக்குமாறு பார்த்துக்கொள். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். எனக்கு நம்பிக்கை இருக்கிறது நிச்சயம் இருப்பாய்” என்று வாழ்த்திவிட்டு வந்தேன்.

நன்றி!

Jul 15, 2009

ஒரு கடிதம் - பொக்கிஷம்

அடுத்தது ஒரு கடித இடுகை என்று முடிவு செய்துவிட்டேன். அதில் இரண்டு வகைகள் உண்டு ஒன்று, நாம் யாருக்காவது எழுதி அதை அவருக்கு அனுப்பாமல் இங்கு இடுகையாக்கலாம். ஆனால் அதிலும் ஒரு சிக்கல், நமக்கோ உறப்படியாய் ஒன்றும் எழுத வராது. அப்படியே எழுதினாலும், சரியா வராது. நாலு பேர் வந்து சிரித்துவிட்டு போய்விடுவார்கள். சரி அது வேண்டாம், நமக்கு வந்த ஆயிரங்கணக்கான கடிதங்களில் ஒன்றை எடுத்து இடுகையாக்கலாம் என்று, தேடினால்... கிடைத்ததெல்லாம்,

நான் நலம் நீ நலத்துடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன். ஏன் இப்பல்லாம் அடிக்கடி கடிதம் எழுதுவதில்லை. நீ எப்ப ஊருக்கு வருகிறாய். வீட்டில் உன்னை எல்லோரும் தேடுகிறோம். எங்களை நினைத்து கவலை பட வேண்டாம். மற்றபடி நீ போன மாதம் பணம் அனுப்ப வில்லை. இந்த மாதம் மறக்காமல் அனுப்பிவிடு.....

அடுத்து தூரத்து உறவினரிடமிருந்து,

அன்புள்ள அண்ணனுக்கு, இங்கு அனைவரும் நலம், நீங்கள் நலமா? எங்களை மறந்து இருக்க மாட்டீர்கள் என் நம்புகிறோம். எங்களுக்கு சிறு உதவி, என் தம்பி பத்தாம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் சும்மா இருக்கான். அவனுக்கு ஏதாச்சும் விசா இருந்தால் ஏற்பாடு செய்யவும். ...

இப்படி போகும்...

என்ன செய்யலாம், சரி வந்த கடித்தை மட்டும் தான் இடுகையாக்குவது என்று ஏதும் வரைமுறை இருக்கிறதா, என்ன? நாமே ஒன்றை எழுதி வந்ததாகச்சொன்னால் என்ன. அட, அதிலும் ஒரு சிக்கல். நமக்குதான் பொய் சொல்ல தெரியாதே. சொன்னாலும் மாட்டிக்கொள்வோம். என்ன செய்வது, யோசி... யோசி.. மாத்தி யோசி.... அப்படி மாற்றி யோசித்தபோது தான் நினைவு வந்தது. தமிழ் ஆசிரியர் எனக்கு வரைந்த மடல். எனக்கு வந்த பொக்கிஷம் இது, இன்றும் பத்திரமாய் வைத்துள்ளேன். என் பள்ளி இறுதி ஆண்டின் தமிழ் ஆசிரியர் அருமை கனி அவர்கள் எனக்கு எழுதிய மடல். இறுதி நாளின் போது அவரிடமிருந்து பெற்ற வாழ்த்தையும் சேர்த்து இங்கே ஏற்றியுள்ளேன். வாழ்த்து எழுதியதும் அவரிடம் கேட்டேன், 'இந்த வாழ்த்தோடு முடிந்துவிட்டது, இனி நீங்கள் யாரோ நாங்கள் யாரோ, இல்லையாம்மா?'

'இல்லை பீர், மற்ற மாணவர்களைப் போலல்ல நீ, வகுப்பில் தனித்து நின்றாய். உன்னை நான் என்றும் மறக்க மாட்டேன்.' என்றார்.

'டேய், நீ அந்த கிழவிட்ட சொல்றா, நீ சொன்னா கேட்கும்' என்று சக மாணவர்கள சொன்ன போது நான் நம்பவில்லை அன்றுதான் உணர்ந்தேன், என் தமிழ் அம்மா என் மீது வைத்திருந்த அன்பை, மதிப்பை. தமிழ் அம்மா மீது கொண்டிருந்த மதிப்பு, எனக்கும் தமிழ் காதல் வந்தது. அதற்கு நேர் எதிராக கணக்கு டீச்சர் மீது இருந்த வெறுப்பு எனக்கு இன்றளவும் கணக்கு வராததிற்கு காரணமா என்று தெரியவில்லை. 15 + 5 என்றாலும் கால்சி யை தேட வேண்டிய நிலை.

தமிழ் தந்த வாழ்த்து

புன்னகை மன்னனே! பொல்லாதவனே!

புறம் பேசாத நல்லவனே!

நன்றாய் (போதையின்றி) நீ வாழ

நானிலத்தில் புகழ் பெற்று வாழ்

இன்றும் என்றும் மறவாது

இதயம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

என்னை பல வேளைகளில்

சினம் கொள்ள வைத்தவனே!

உன்னை உளமார வாழ்த்துகிறேன்.

என்றும் அன்புடன்,

அதன் பிறகு சில நாட்கள் சென்று ஒரு புத்தாண்டோ அல்லது பொங்கலோ நினைவில்லை என் தமிழ் அம்மாவிற்கு ஒரு வாழ்த்து அனுப்பினேன். மறக்காமல்...'நீங்கள் என்னை மறந்து விட்டீங்கள் அம்மா, ஒரு கடிதம் கூட இதுவரை எழுதவில்லையே. மறக்கவில்லை என்றால் கடிதம் எழுதவும்' என்று குறிப்பிட்டு. அதற்கு தமிழ் அம்மாவின் கடிதம்,

பொக்கிஷம்

அன்புள்ள மாணவன் போதைக்கு, (Peer Mohammed)

பாசமுடன் தமிழாசிரியை வரைவது, பிரியமுடன் நீ அனுப்பிய வாழ்த்து கிடைக்கப் பெற்றேன். மனம் நிறைந்த மகிழ்ச்சி அடைந்தேன். நிற்க! (Standup)

ஆங்கில வாழ்த்தால் மட்டுமல்ல யாராலும் நான் தமிழ் மீது கொண்ட பற்று மாறாது. தமிழு மொழி என் உயிரினும் மேலானது என்பதை விட உயிருடன் கலந்தது என்பதே உண்மை! சரி! சரி! அறுவையை நிருத்திக் கொள்கிறேன் மகனே! அமர்க! (Sitdown)

நீ எப்படி இருக்கிறாய்? உன் குடும்ப சூழல் எப்படி உள்ளது? முக்கியமாக உன் மனநிலை எப்படி உள்ளது? மறந்தும் தவறான பாதைகளில் சென்றுவிடாதே! இந்த தமிழ்கிழவியை; இந்தக் கிழவி தந்த அறிவுரைகளை மறந்து விடாதே! எந்தச்சூழலிலும் நற்பண்புகளில் இருந்து மாறவே கூடாது.

நல்ல பண்புகளாலும் நல்ல செயல்களாலும் தான் நாம் வாழ்வில் உயர முடியும். நீ நன்கு நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

என்றென்றும் என் அன்பும் பாசமும் வாழ்த்தும் உனக்கு உண்டு! என் அன்பு மாணவன் பீர் முகம்மதுவை என்றும நான் நல்லவனாய், அமைதியானவனாய் அன்பானவனாய் மட்டுமே காண வேண்டும்.

ஏண்டா இந்தக்கிழவியைக் கட்டாயம் கடிதம் கூறினோம்! கிழவி இப்படி அறுத்துவிட்டாளே என்று நீ திட்டுவது இங்கு கேட்கிறது. எனவே நிறுத்திக்கொள்கிறேன். கோபப்படாதே! நன்றி!

இவள்,

தமிழ்ஆசிரியைகனி.
தமிழ் அம்மாவின் கடிதத்திற்கு பதில் எழுதும் நேரம் வந்துவிட்டது. அடுத்த இடுகையில்....

Jul 7, 2009

ருசித்ததும் ரசித்ததும்

இம்முறை ஊரில் இருந்த போது நான் ரசித்தவற்றையும் ருசித்தவற்றையும் இங்கு உங்களோடும் பகிர்ந்து கொள்ள ஆசை. வாருங்கள் முருகனில் இருந்து ஆரம்பிப்போம்.

எனக்கு முருகன் இட்லிகடை இட்லி எப்போதும் விருப்ப உணவாகவே இருந்திருக்கிறது. இந்த முறை சுவைக்கும் வரை, முன்பெல்லாம் தினமும் நாலு முருகன் இட்லி உள்ளே போகவில்லை என்றால் உறக்கம் வராது. இப்போது ஒரே ஒரு நாள் சென்றும் ஏன் சென்றோம் என்றாகிவிட்டது. இட்லியின் சுவை குறைந்துவிட்டது. சாம்பாரும் நாலு வகை சட்னியும் சற்று தேவலாம். ஆனால் அங்கு எப்போதும் சேவை அவ்வளவு சிறப்பானதாக இருந்தது இல்லை. இப்போது மிகவும் மோசமான சேவை. கிட்டத்தட்ட அன்னதான முறையில் தான் சப்ளை செய்கிறார்கள். இப்படித்தான் கிடைக்கும், விருப்பமிருந்தால் வா என்பது போல, வெறுத்துவிட்டேன்.

அதேபோல டவுன்ஹால் ரோடு தாஜ் உணவகம், நண்பர்களுடன் மதிய உணவருந்திவிட்டு வீட்டிற்கும் வாங்கிச் சென்றேன். அன்று தாஜ் பிரியாணி உண்ட எங்கள் அனைவருக்கும் வயிறு கேடானது. ஃபுட் பாய்ஸன்? மற்றபடி அவர்கள் சேவையை குறை சொல்வதற்கில்லை.

டவுன்ஹால் ரோடு பெருமாள் தெப்பம் தெற்குத்தெருவிற்கு எதிர் தெருவில் (பெயர் நினைவில்லை) இருக்கும் மூகாம்பிகை மெஸ்ஸில் மதிய சாப்பாடு சுவை அப்படியே வீட்டு சமையலைப்போலிருக்கும். அண்ணன் தம்பி அனைவரும் கூட்டு குடும்பமாக இருந்து சமைப்பார்கள். வெண்டிக்காய் கூட்டும் நல்ல சுவையாக இருக்கும். ஆணி அதிகமென்றால் வீட்டிற்குச் செல்லாமல் மூகாம்பிகை செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தோம், நானும் எனது ஒரு நண்பரும். விலை குறைவைக்காட்டிலும் வீட்டுச்சுவை தான் அங்கு இழுத்துச் செல்லும். இப்போதும் ஒருநாள் அங்கு சென்ற போது இருக்கை காலி இல்லை. திரும்பி வரவேண்டிதாகிவிட்டது. பிறகுதான் அறிந்தேன் கூட்டுக்குடும்பம் பிரிந்த பிறகு சுவையும் அவர்களை விட்டு பிரிந்துவிட்டதாக.

காளவாசல் பெல் ரெஸ்டரண்ட், கேட்டரிங் மாணவர்களைக் கொண்டு நடத்தப்படுவதால் நல்ல சேவையும் சுமாரான சுவையும் கிடைக்கிறது. ஒரு முறை சுவைக்கலாம். இரண்டாவது முறையாக சுவைத்தேன். பரவாயில்லை.

பைபாஸ் ரோட்டிலிருக்கும் அழகப்பச்செட்டி அசைவ உணவகத்தில் நாட்டுக் கோழி குழம்பு நல்ல சுவையாக இருக்கும். சுவைக்க நேரம் இல்லை.

பெரியார் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் சுல்தான் உணவகத்திலும், மேல மாசி தெற்கு மாசி வீதி சந்திப்பில் இருக்கும் புகாரியிலும் புரோட்டா நன்றாக இருக்கும். எப்படியாவது ஒரு இரவு உணவு அங்கு அமைந்துவிடுகிறது, நண்பர்களுடன் சுற்றுவதால்.

குற்றாலம் சென்றிருந்த போது, தென்காசி பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ரஹ்மத் புரோட்டா கடையில் புரோட்டா சால்னா அடித்தேன். சும்மாச் சொல்லக்கூடாது. அருமை.

அனைத்தையும் விட, தென்காசியில் என் மாமாவுடைய தோப்பில் குடித்த இளநீர். இதைச் சொல்லவில்லை என்றால் நான் ருசித்த பட்டியல் பூர்த்தி அடையாது. முதல் முறையாக மரத்திலிருந்து வெட்டிய உடன் இளநீர் குடித்தேன். என்ன சுவை, விறு விறுவென்று உள்ளே இறங்கியது. ஒரே நேரத்தில் ஐந்து இளநீர் வெட்ட வெட்ட குடித்தேன். அன்று இரவு வயிறு என்னை அடித்ததை பொறுட்டாகக் கொள்ளவில்லை.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

சிகரெட்

சிறிது புகையிலை சுற்றப்பட்ட ஒரு பேப்பரின் ஒரு முனையில் பத்தவைக்கப்பட்ட நெருப்பும் மறு முனையில் முட்டாளும்.

காதல்

கிரிக்கெட்டைப் போல, ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளை விட ஒருநாள் சர்வதேச போட்டிகள் பிரபலம்.

திருமணம்

ஒரு ஒப்பந்தம், இங்கு ஆண் தனது பேச்சுலர் டிகிரியை இழக்கிறான் பெண் தனது மாஸ்டர் டிகிரியை பெறுகிறாள்.

விவாகரத்து

திருமணத்தின் எதிர்காலப்பதம்.

சமாதானம்

தனக்கு கிடைத்ததுதான் பெரிய துண்டு என் அனைவரும் எண்ணும்படி கேக் வெட்டும் கலை போன்றது.

ஆங்கில அகராதி

இங்கு மட்டும் தான் திருமணத்திற்கு முன்பே விவாகரத்து வந்துவிடும்.

புன்னகை

சிறு வளைவால் பல கோணல்கள் நேராக்கப்படலாம்.

அலுவலகம்

கடுமையான குடும்ப வாழ்விற்குப்பிறகு ஓய்வெடுக்கும் இடம்.

கமிட்டி

ஒன்றுமே செய்ய இயலாத தனிமனிதர்கள் ஒன்றுகூடி இருக்கும் ஒரே இடம்.

அனுபவம்

முந்தைய தவறுகளுக்கு மனிதன் இடும் பெயர்.

அரசியல்வாதி

தேர்தலுக்கு முன்பு நமது கைகளையும், பின்பு நமது நம்பிக்கையையும் குலுக்குபவன்.

Jul 4, 2009

மதுரை சாலைகள்

சென்ற மதுரை பதிவர் சந்திப்பில் நண்பர் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார், ‘மதுரை பல ஆண்டுகளாக பெரிய வளர்ச்சியடையாமலும், இன்னும் இது ஒரு பெரிய கிராமமாகவே இருக்கிறதே, ஏன்?’ தெரிந்தவர்கள் சொல்லுங்கள், ப்ளீஸ்.

இம்முறை திருச்சி விமான நிலைத்திலிருந்து மதுரை செல்வது இந்த அளவுக்கு எளிதாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. முன்பொரு முறை திருச்சியில் இருந்து மதுரைக்கு கிட்டத்தட்ட 5 மணி நேரங்கள் ஆனது. இம்முறை வெறும் 2 மணி நேரங்கள் தான். நான்கு வழிச்சாலை கட்டுமான பணி மேலூர் வரை அனேகமாக அனைத்து இடங்களிலும் முடிந்துவிட்டிருந்தது. ஊர்களுக்கு வெளியேயே சாலையை கொண்டுபோயிருப்பதும் ஆங்காங்கே பேருந்து நிறுத்தங்களுக்கான அழகான நிழற்குடைகள் நிருவியிருப்பதும் இதன் சிறப்பு எனலாம். இடைப்பட்ட சிறிய பணிகள், மீதமிருக்கும் பாலம் கட்டுமானம் மற்றும் மேலூர் – மதுரை சாலையும் நிறைவடைந்துவிட்டால் 1 1/2 மணியில் திருச்சி – மதுரை யை கடக்கலாம் என நினைக்கிறேன். நகருக்கு வெளியே கட்டப்பட்டு வரும் சுங்க வாயில்கள்தான் வயிற்றில் சுண்ணாம்பைக் கறைக்கிறது.

மதுரை விமான நிலையத்தையும் சர்வதேச நிலையமாக்கும் பணிகள் நடப்பதாக அதுவும் அண்ணன் அமைச்சரான பிறகு விரைந்து நடப்பதாக வரும் தகவல்கள் வெளிநாட்டில் வேலை செய்யும் எம்போன்றோருக்கு மகிழ்ச்சி தருகிறது. மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக்கப்பட்டால் மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பயனடைவார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி இருக்கும் சித்திரை வீதி நான்கிலும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என முன்னமே அறிந்திருந்தாலும், தடைக்குப்பறகு அந்தப்பகுதிக்கு இதுவரை சென்றதில்லை. ஒரு முக்கிய பிரமுகரைக்காண நேரம் கேட்கையில் , ‘கோயிலைச் சுற்றி தான் காலையில் நடப்பதாகவும் நீயும் வந்தால் நடந்துகொண்டே பேசலாமே’ என்றதால், அவரைக் காண அதிகாலை ஆறு மணிக்கே அங்கு செல்லவேண்டி வந்தது. தட்டோடு போன்ற கற்கல் பதிக்கப்பட்டு சுற்றப்பாதை நன்றாகவே பராமறிக்கப்பட்டு வருகிறது. மாடுகள் குறுக்கே வராமலும் இன்னும் சற்று துப்புரவிலும் கவனம் செலுத்தினால், காலையில் வாக்கிங் செல்ல ஏற்ற இடம்.

பெரியார் பேருந்து நிலையம் அருகே இரயில்வே மேம்பாலம் அகலமாக கட்டியிருந்தாலும், பேருந்து நிலையத்தை சுற்றிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. மாவட்ட போக்குவரத்து ஆணையரும் அடிக்கடி போக்குவரத்தில் எத்தனையோ மாற்றம் கொண்டுவருகிறார். ஒன்றும் மாறியதாக இல்லை. மாநகராட்சி பேருந்து நிலையத்தின் வடக்கு பகுதி அதாவது ஜெயராம் பேக்கரி பகுதியில் தான் அதிகமான வாகன நெரிசலை காண முடிந்தது. அந்த பகுதியை கடப்பதுதான் எனக்கும் சிரமமாக இருந்தது. எனவே அங்குள்ள இருசக்கர வாகன நிறுத்தமும் அதை ஒட்டியுள்ள சிறு கடைகளும் மற்றும் மாநகராட்சி கட்டிடமும் சற்றே ஒதுக்கப்பட்டு அந்த சாலை விரிவு படுத்தப்படாத வரை வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியாது என நினைக்கிறேன்.

கூட்ட நெரிசல் இல்லாது இருந்த மேலமாசி வீதி தெற்கு பகுதியில் ஆலுகாஸ், பீமா நகைக்கடைகளும் தற்போது போத்தீஸூம் வந்த பிறகு நடக்க கூட இடமில்லை. போத்தீஸ் திறப்பு தினத்தன்று அந்த சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பைபாஸ் ரோடு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. காளவாசல் ஜோத்தீஸில் இருந்து நாயுடுஹால், அழகப்பச்செட்டி அசைவ உணவகம் மற்றும் பல கடைகள் புதிது புதிகாக முளைத்துள்ளது நகர் விரிவடைவதையும் நுகர்வோர் தேவை அதிகரிப்பதையும் காட்டுகிறது.

மதுரையில் நகர்புறச் சாலைகள் மேம்பட்டிருக்கிறது. ஒரு நாட்டின் உள்கட்டுமானம், அந்நாட்டு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மறுக்க முடியாதது. ஆக இனி மெல்ல மதுரை வளர்ச்சியடையும் என நம்பலாம்.

நன்றி.

May 13, 2009

நாளை வருகிறேன் முத்தமிட...

இரண்டு மாத பிரிவாயினும், பல யுகங்களை பிரிந்த உணர்வு. நீ இல்லாத குவைத்தில் குப்பை கொட்டுவதும் பிடிக்கவில்லை. நாளை வருகிறேன் பெண்ணே முத்தமிட, உன்னையும் தாய் மண்னையும் - அன்பு மகனுக்கும் சொல்லிவிடு, அப்பா வருகிறார் நம்மை அள்ளிக் கொஞ்ச என்று - உனக்காய் நான் வாங்கியதைச் சொன்னால் வெட்கப்படுவாய், சோப்பு சீப்போடு சேர்த்து நீ சொல்லாத உன் ஆடையும் - நாளைய ஆரம்பத்திற்கு ஆயத்தமாயிரு.

உன்னைக் காண ஊர் வருவது எப்போதும் போல இப்போதும் மகிழ்ச்சி, இம்முறை சற்று அதிகம் ஆம்...இதுவரைக் காணாத பதிவர் சகாக்களையும் சந்திக்கப் போகிறேன்.

மற்றவை நேரில்...

சகாக்களே, இன்று இரவு இங்கிருந்து விமானம். நாளை முதல் இருபது நாட்களுக்கு நம் மதுரையில் இருப்பேன். என் புதிய சகாக்களை சந்திப்பது சத்தியமாய் ஆவல்.

மற்றவை நேரில்...

இந்திய செல்பேசி எண்; 9791579981.

சென்ற முறை ஆயுளுக்காய் வாங்கியது, ஆயுல் உள்ளதா என்பது அங்கு வந்தால்தான் தெரியும்.

May 9, 2009

நானும் சிறை சென்றேன் – ஜெய்ஹிந்துபுரம் நினைவுகள் 02

அது 2002 ன் நவம்பர். நான் சவுதியில் விசா முடித்துவிட்டு ஊர் வந்திருந்தேன். இன்னும் 10-15 நாட்களில் ஈகைத் திருநாள் வரவிருந்தது. 5 வருடங்களுக்குப் பறகு குடும்பத்தினருடன் கொண்டாடும் திருநாள் என்பதால் தடபுடல் ஏற்பாடுகளோடு அனைவரும் ஆவலாயிருந்தோம். திருநாளுக்கு முதல் நாள், என் வீட்டிற்கு வந்திருந்த பெரியப்பா மகன் அனீஸ், மற்றொரு பெரியப்பா மகன் ஜலீல் மற்றும் உறவினரோடு வீடு மகிழ்ச்சியாகத் தானிருந்தது., அன்றிரவு வெளியே செல்லும் வரை.

ஒவ்வொரு திருநாளின் போதும் அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு இனிப்புகளோடு தினமணியின் ஈகைத்திருநாள் சிறப்பிதழும் அன்பளிப்பாக வழங்குவது வழக்கம். இரவு பத்து பதின்ஒரு மணியிருக்கும், இனிப்புகளும் ஈகைத்திருநாள் மலரும் வாங்கிவரலாம் என்று வெளியே கிளம்புகிறோம் நாங்கள் மூவரும். ஒன்று சேர்ந்தால் எங்களுக்கு ஒரு பழக்கம் தொற்றிக்கொள்ளும், நாயை கல்லால் அடிப்பது (அந்த அனுபவம் பிறகு). எங்கள் வீட்டிலிருந்து 30 வீடு கடந்து போயிருப்போம், ஒரு நாய் எங்களைப் பார்த்து குரைத்தது. நாய் சும்மா கிடந்தாலும் அடிப்போம், குரைத்தால் சும்மாவா விடுவோம். பின்னால் நடந்து வந்துகொண்திருந்த அனீஸ் கல்லை எடுத்துவிட்டான், 'கவனிக்க எடுத்தான் அடிக்கவில்லை.'

ஒரு குரல் வருகிறது, 'டேய்… கல்ல கீழ போடுடா..'

உடனே அனீஸ், 'நாய குரைக்காம இருக்க சொல்லுங்க'

நாயை நாய் என்று சொன்னதும் அவருக்கு கோவம், 'அதென்ன கடிக்கவா செஞ்சுது. அப்டித்தான்டா குரைக்கும், என்னடா செஞ்சுடுவ'

'ஏங்க, நான் மரியாதையாதான பேசுறேன், நீங்களும் மரியாதையா பேசுனா நல்லது'

'இல்லனா என்னடா செஞ்சுடுவ'

'கல்லால அடிப்பேன், நாய' இவண் நாய என்று சொன்னது அவருக்கு நாயே என்று கேட்டிருக்க வேண்டும்.

'…..த்தா, நில்ரா அங்கயே… இந்தா வரேன்' என்று சொல்லியவாறே (எதிர் வீட்டிலிருந்தவர், எங்களுக்கு குறுக்காக) அவர் வீட்டிற்குள் ஓடுகிறார்.

ஓடும் போதுதான் கவனித்தோம், அவர் யாரென்பதை.

எனது முந்தைய ஜெய்ஹிந்துபுரம் நினைவுகளில் சொல்லியிருக்கும் தெரு, தேவர்நகரில் இருந்து குறுக்கலாக பாரதியார் ரோடுவரை நீண்டிருக்கும் அந்த தெருவில் தான் அவர்களது வீடு இருக்கிறது, சம்பவமும் நடக்கிறது. நான் அப்போது பாடசாலை செல்லும் போது பார்த்திருக்கிறேன், இந்த வீட்டின் முன்னால் ஒரு பெரிய புல்லட் இருக்கும் ஒருவர் பெரிய மீசையுடன் செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருப்பார். இவர்களுக்கு பிரதான தொழில் அடிதடி, சைடில் கட்டப் பஞ்சாயத்தும் நடக்கும் என்பதும் சம்பவம் நடக்கும் போது பெரிய மீசைக்காரர் சிறையில் ஆயுல்கைதியாக இருப்பதாகவும் அவ்வப்போது பரோலில் வருவதாகவும் பிற்பாடு தெரிந்துகொண்டோம். உள்ளே ஓடியவனுக்கு 25 வயதும் மீசைக்காரரின் மகனாகவும் இருக்கலாம்.

சரி சம்பவத்திற்குள் செல்வோம்,

அதற்குள் சத்தம் பெரிதாக நானும் ஜலீலும் அங்கு வருகிறோம். அங்கிருந்து பத்து வீடு தாண்டினால் அனீஸ் வீடு, அங்கு அனீஸின் தம்பி, அக்கா பையன் எல்லாம் உறங்குகிறார்கள். வேகமாக நான் தான் வீட்டிற்குள் சென்று, 'டேய்… எந்திரிங்கடா.. ஒருத்தன் நம்மல அடிக்க சாமான் எடுக்க போயிருக்குறான்' என்று எழுப்பி வீட்டில் மறுநாள் பிரியாணிக்கு அடுப்பெரிக்க வைத்திருந்த விறகுகளை எடுத்துக்கொள்கிறோம். நாங்கள் 5 பேரும் வெளியே ஓடி வந்தால், அவர்கள் வீட்டு கேட் அடைத்தவாறே கிடக்கிறது. வெளியில் யாருமில்லை. எங்களுக்கோ இரத்தம் சூடாகிவிட்டது, ஏதாவது செய்தாக வேண்டும். (ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு)

ஜலீல் அவர்கள் வீட்டு கேட்டை தட்டிவாறே சப்தமிடுகிறான், 'யார்ரா அவன்… வெளிய வாடா… யார்கிட்ட… வெளியவாடா டேய்'

20 வயது மதிக்கத்தக்க ஒருவன் வெளியே வருகிறான், சாதாரணமாகத்தான். ஜலீல் அவன் சட்டையை பிடித்திழுத்து தெருவில் கிடத்துகிறான். அனைவரும் சேர்ந்து கட்டையால் அடிக்கிறோம், மிதிக்கிறோம். சரியாகச் சொல்வதென்றால், சட்டக்கல்லூரியில் ஒருவரை அடித்தார்களே அதேபோல. நமக்குத்தான் இயற்கையிலேயே இரக்க குணம் அதிகமாச்சே, நான் தான் சொன்னேன், 'விட்றா…செத்துர கித்துர போறான்' சரியாக அடித்துமுடிக்க உள்ளே சென்றவனும் உருட்டுக்கட்டையுடன் வருகிறான். அவனையும் இழுத்து போட்டு அடிக்கிறோம். ஆனால் அவனுக்கு சரியாக அடி விழுவதற்குள், அவன் வீட்டிலிருக்கும் பெண்கள் வந்து, 'ஐயோ… ஐயோ… கொல்றாங்ஞலே… விடுங்கடா டேய்' என்று கத்த ஆரம்பிக்க விட்டு விட்டு வந்துவிடுகிறோம்.

எங்களை அடையாளம் கண்டுவிட்டார்கள். அனீஸ் வீடு அவர்களுக்கு தெரியும் என்பதால் இரண்டு பையன்களையும் வீட்டில் நிறுத்திவிட்டு நாங்கள் புலிப்பாண்டியன் தெரு வழியாக ஜெய்ஹிந்துபுரம் முக்கிய வீதிக்கு வந்துவிட்டோம். எங்கள் மூன்று வீட்டினருக்கும் பொதுவான பெரியவர் என் மச்சான் என்பதால் அவருக்கு தொலைபேசியில் சம்பவத்தை சொல்லலாம் என்று பொது தொலைப்பேசி தேடினால், ஒன்று கூட பொதுவில் இல்லை எல்லாம் மூடிக்கிடந்தது. ஜலீல்தான் ஜெகதலக்கில்லாடி ஆச்சே (அதைப்பற்றியும் பிறகு) ஒரு பேக்கரியில் போய் பேசி தொலைபேசி பாவித்துக்கொள்ள அவரை சம்மதிக்க வைத்துவிட்டான். விடயத்தை கேட்டதும் என் மச்சான், சற்று கோவமாக, 'ஏண்டா அறிவு கெட்டவங்ஞளே… அடிதடி பண்ற அளவுக்கு நீங்க சண்டியராயிட்டீங்களா… அதும் நாளைக்கு பெருநாளை வச்சுக்கிட்டு. முட்டாப்பயல்களா… சேகர போய் பார்த்து, என்ன செய்யலாம்னு கேளுங்கடா' என்றார். அப்போதுதான் நினைவு வந்தது மறுநாள் திருநாள் என்பது. சரி சேகர் மாமா வை பார்க்கலாம் என்று ஜீவாநகர் வழியாக, அவர் வீட்டிற்குச் சென்றோம்.

சேகர் பற்றி, M.R.மணி ஜீவாநகரின் முக்கிய பிரமுகராயிருந்தார். இவரின் மகன்தான் M.R.M.சேகர். இவரும் பிரபலம் தான், இவரை தெரியாதவர்கள் ஜீவாநகர் சுற்றுவட்டாரத்தில் இருக்க முடியாது. முன்பு ஒரு மாதிரி இருந்து பிறகு மனிதர் ஆனார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர். சிறு வயதில் இருந்து நான் மாமா என்று தான் அழைப்பதுண்டு. எங்கள் குடும்ப நண்பர் கூட. ஒரு முறை 64வது வார்டு மாநகராட்சி கவுன்சிலருக்கு போட்டியிட்ட போது நானெல்லாம் நாயாக (மறுபடியும் நாயா) உழைத்தும் சிறு வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனார். எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லாவிட்டாலும் நமக்கு தெரிந்த ஒருவர் கவுன்சிலர் ஆகினால், நாமும் ஏதாவது காரியம் சாதிக்கலாமே என்ற சுயநலம் தான். அதுசரி, ஒவ்வொரு பொது நலத்திற்கு பின்னாலும் ஒரு சுயநலம் இருக்கத் தானே செய்கிறது. சுயநலம் இல்லாத பொதுநலம் ஏது? ஆஹா…ரூட்டு மாற்ற மாதிரி இருக்கு… புடிச்சு இழுத்துகிட்டுவா….

சம்பவத்திற்கு வருவோம்.

சேகர் மாமா வீட்டு கதவை தட்டுகிறோம்,

'என்ன மாப்ள இந்தநேரம், இப்ப தான் ப்ரசர் மாத்தர போட்டு படுத்தேன். சொல்லுப்பா'

'மாமா, இந்த மாதிரி ஆகிப்போச்சு' நடந்ததை நடந்த மாதிரியே சொன்னோம்.

'என்னடா… உங்களுக்கு அடிக்க வேற ஆள் கெடக்கலயா, அவிங்ஞ மேல போயா கைவெக்கனும்? கெரகம் புடிச்சவங்ஞலாச்சேடா… உங்க மச்சான்ட சொல்டீங்களா?'

'சொல்லிட்டோம் மாமா, அவங்க தான் உங்கள பார்க்க சொன்னாங்க'

'அவிங்ஞ ஒரு பஞ்சாயத்துங்கும் வர மாட்டாங்ஞலே… சரி நீங்க போயி போலீஸ் ஸ்டேசன்ல கம்ளைன்ட் குடுத்து எஃப்.ஐ.ஆர். பைல் பண்ண சொல்லுங்க, சீக்கிரம் போங்கடா மாப்ள… வண்டி வேணுமா?'

'இல்ல, வண்டி இருக்கு மாமா'

'அவிங்ஞ போறதுக்கு முன்னாடி போகணும், சீக்கிரம் போங்கடா. மத்தத காலைல பார்த்துக்கலாம்'

'சரி மாமா', என்று ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையம் கிளம்புகிறோம்.

காவல் நிலையத்திற்குள் நாங்கள் நுழையும் போது, அடிபட்டவர்கள் அங்கிருந்து வெளியே வருகிறார்கள். ஒருத்தன் முறைக்கிறான் மற்றவன் சிறிதாக சிரிக்கிறான். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வெளியில் நின்ற காவலரிடம் புகார் செய்கிறோம். அவர் உள்ளே பார்த்தவாறு, 'இந்தா… வந்துட்டாங்ஞப்பா, புடிச்சு உள்ள போடு' என்கிறார். நாங்களும் உள்ளே செல்கிறோம், நடக்கப்போவதை அறியாமல்.

'அப்டி உட்காருங்கப்பா' ஒரு காவலர்

வயர்லெஸ் கருவியை எடுக்கிறார். ஏதேதோ சொல்கிறார், அந்தப்பக்கமிருந்தும் ஏதோ சொல்லப்படுகிறது. இவர் மீண்டும், 'ஐயா, அக்யூஸ்ட புடிச்சுட்டோங்கய்யா… ஆமாங்கய்யா…இங்கதான்யா இருக்காங்ஞ, சரிங்கய்யா… ஐயா சரிங்கய்யா..' என்று வைத்துவிட்டு 'எப்பா ரைட்ரு, ஸ்டேட்மன்ட் வாங்கிக்கப்பா' என்கிறார். எழுத்தர் எங்கள் பக்கம் திரும்பி, 'வாங்க தம்பிகளா, என்ன நடந்தது சொல்லுங்க' என்கிறார். நாங்கள் விவரிக்கிறோம்.

'முதல்ல நீங்க அடிச்சிங்களா, இல்ல அவிங்ஞ அடிச்சாங்ஞளா?'

'சார், நாங்கதான் அடிச்சோம்'

'போலிஸ் ஸ்டேசன்ல வந்துட்டு அநியாயத்துக்கு நல்லவனா இருக்கீங்களேப்பா, கேஸ் வேற மாதிரி ஆகிப்போகும்… அவிங்ஞதான் அடிச்சாங்ஞன்னு போட்டுமா? அப்பதான் உங்க பக்கம் நிக்கும், என்ன சொல்றீங்க'

'சரிங்க சார்'

'இந்தாப்பா, மூனு பேரும் கையெழுத்து போடுங்க'

கையெழுத்து போட்டுவிட்டு, 'சார், நாங்க கெளம்பட்டுமா?'

'எங்க கெளம்ம போறீங்க?, இருங்கப்பா இன்னும் நாளிருக்கு'

அவர்கள் இருவரும் ஒரேபோல் 'சார்' என்று சொல்ல எனக்கு தொண்டை அடைத்து கண்ணீர் வரும் போலிருந்தது.

'உள்ள போயி உக்காருங்க'

உள்ளே இருந்த மர நாற்காலியில் அமர்ந்தோம். கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை. அங்கிருந்த ஒரு காவலர், 'ஃபேன வேணா போட்டுக்குங்க, டீ சாப்டுறீங்களா?' குடித்தால் தேவலாம் போலிருந்தது 'சரிங்க சார்'

தூக்கம் வரவில்லை. தினமும் விடியும் முன்பு எங்களுக்கு கடமையாக்கப்பட்ட அதிகாலை தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.

'சார், இங்க தொழுகலாமா?, விடியுறதுக்கு முன்னால தொழுதாகனும்'

'ஆங், அப்டி ஓரமா செஞ்சுக்கங்கப்பா'

'சார், மூஞ்சி, கை, கால் கழுவணும்'

'பின்னால தண்ணி இருக்கும், போங்க'

தொழுதுவிட்டு வந்தமர்ந்தோம். விடிந்து விட்டிருந்தது, இப்போது கேட்காமலேயே டீ வந்தது. குடித்தோம். காவலர்கள் இவ்வளவு நல்லவர்களா.

6 மணியிருக்கும் மச்சான், சேகர் மாமா மற்றும் 63வது வார்டு கவுன்சிலர் (மா. கம்யூனிஸ்டு) விஜயன் ஆகியோர் வந்தனர். எஸ்.ஐ இன்னும் வந்திருக்கவில்லை.

தோழர் விஜயன் எழுத்தரிடம், 'ஐயா இன்னும் வரலங்களா?'

'இன்னும் வரல சார், உட்காருங்க'

'பரவாயில்ல, நாங்க வெளில இருக்கோம்'

அரை மணி நேரத்தில் எஸ்.ஐ வந்தார். தோழர் விஜயன் அவரிடம் ஏதோ பேசினார். பிறகு நாங்களும் அழைக்கப்பட்டோம். சேகர் மாமா என் காதில் கிசு கிசுத்தார், 'நீ சவுதில இருக்கிறத சொல்லிடாத' பிறகு மூவருக்கமாக 'அவரு என்ன சொன்னாலும் தலயாட்டுங்க'

எழுத்தர், 'இங்க கையெழுத்து போடுங்க'

கையெழுத்து போடும் போது எஸ்.ஐ சொல்கிறார், 'அவிங்ஞ என்ன கம்ளைன்ட் குடுத்திருக்காங்ஞ தெரியுமா, நீங்க அவிங்ஞள அடிச்சு 10 பவுன் சங்கிலிய புடுங்கிட்டு போயிட்டீங்களாம், அவிங்ஞள பத்தி எனக்கு தெரியும், அவிங்ஞளோட கெட்ட பேருதான் உங்கள காப்பாத்துச்சு, இனிமேல் அடிதடின்னு போகாம ஒழுங்கா பொழக்கிற வழிய பாருங்கப்பா. எந்த பிரச்சனைனாலும் முதல்ல போலீஸ் ஸ்டேசன் வாங்க, புரியுதுல்ல? போங்க'

'சரிங்க சார்'

வெளியே வரும் போது, வாசலில் நின்ற காவலர் பணம் கேட்க, நான் ஐநூறு ரூபாய் குடுக்கலாமா என்று சேகர் மாமாவின் காதுக்குள் கேட்கிறேன் அவரோ 20 ரூபாய் எடுத்து கொடுக்கிறார்.

வீட்டிற்கு சென்றால், ஏதோ ஆயுல் தண்டனை கைதியை பார்ப்பது போல் பார்கிறார்கள்.

அக்கா, 'தாடிய ஷேவ் பண்ணிடு, இல்லனா… தீவிர வாதின்னு சொல்லிடுவாங்ஞ'

அது ஒரு வாரம் ஷேவ் செய்யாமல் வளர்ந்திருந்த முடி தான். என்ன செய்ய எனக்கும் பயம் உடனே எடுத்துவிட்டேன்.

Chill: சென்ற வாரம் அனீஸ் உடன் ஜிடாக் செய்து கொண்டிருந்த போது அவனிடம் சொன்னேன், 'நம்மளும் ஜெயிலுக்கு போயிட்டு வந்தவங்ஞதான், சொல்லி வையி… சொருகிடுவோம்னு' என்று சொல்ல, அவன் 'டேய் நம்ம போனது பேரு ஜெயில் இல்லடா, அது லாக்அப், யார்டையாவது சொல்லிடாத… சிரிச்சுவிட்டுட போறாங்ஞ' என்றான்.

அட இதுல இவ்வளவு விசயம் இருக்கா…. இது தெரியாம தலைப்பு வச்சுபுட்டேனே… சரி விடு எல்லாம் நம்ம ஆளுங்க தான், எதாயிருந்தாலும் பேசி தீத்துக்கலாம்.

May 2, 2009

த்ரிஷா இடுப்பு எனக்கு பிடிக்கும் - ஜிகர்தண்டா©

ஜிகர்தண்டா தெரியாத மதுரைக்காரர்கள் இருக்க முடியாது. மற்றயாருக்கும தெரியாது என்று சொல்வதற்கில்லை. தெரியாதவர்களுக்காக சிறிய முன்னுரை, ஜிகர்தண்டா என்பது பாலாடை, ஐஸ்க்ரீம், கடல்பாசி (ஒருவகை தாவரத்தின் தண்டுப்பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறதாம், ஆங்கிலத்தில் ChinaGrass என்று சொல்கிறார்கள்) போன்றவற்றின் கலவை தான் ஜிகர்தண்டா என்பது. அதன் சரியான சுவையை ருசிக்க மதுரை விளக்குத்தூண் அருகேயுள்ள ஃபேமஸ் ஜிகர்தண்டாவுக்கு (இவர்களுக்கு வேறு கிளைகள் கிடையாதாம்) செல்லலாம். ஜிகர்தண்டாவுக்கு பெயர் காரணமாக அவர்கள் சொல்வது, ஹிந்தியில் (जिगर) ஜிகர் என்றால் இதயம், (ठंडा) தண்டா= குளிர், அதாவது ஜிகர் தண்டா = இதயத்திற்கு குளிர்ச்சி. (ஜிகர் க்கு அவர்கள் சொல்லாத தைரியம் என்ற ஒரு அர்த்தமும் ஹிந்தியில் உண்டாம் . நான் புரிந்துகொண்டது, தைரியம் இருந்தால் வந்து குடித்துப்பார், குளிர்ச்சியாவாய் என்பது).

அதெல்லாஞ்சரி... வெளக்குத்தூண் ஜிகர்தண்டாவுக்கு வெளம்பரஞ்செய்யத்தான் இன்னிக்கி கட திறந்தியான்னு நீங்க கேட்டா, இல்லங்க இல்ல...சத்தியமா இல்ல. கஸ்டமர கவர்பண்றதுக்காக, எங்க கடையிலையும் ஆன்லைன்ல ஜிகர்தண்டா விக்க ஆரம்பிச்சாச்சு. அட.. அதாங்க கொத்துபுரோட்டா, அவியல், குவியல், புவியல், வரலாறு, கிச்சடி, பச்சடி அந்த வரிசையில் ஜிகர்தண்டா©.

அதென்ன ஜிகர்தண்டா க்கு பக்கத்ல ©?

காபி ரைட் வாங்கிட்டோம்ல..

யார்ட வாங்ன?

யார்டயோ...

அடிவாங்க போறடா... டேய்....

எங்களுக்கேவா... நாங்கல்லாம்... மதுரக்காரங்ஞ, தெரியும்ல... எங்களுக்கு இல்லாம வேற யாருக்கு இந்த பேரு... யார் வந்தாலும் பாத்துக்குவோம்ல...

இந்த வாய்சவடாலுக்கு மட்டும் எந்த கொறச்சலும் இல்ல, மொதல்ல விசயத்துக்கு வாடா….

இந்தா வந்துட்டேங்க..

நேற்று வெள்ளி வார விடுமுறை அறைக்குள் பொழுதுபோகவில்லை என வலைக்குள் வந்தால்... (உழைப்பாளர் அனைவரும் குவாட்டர் அடிச்சுட்டு குப்புர படுத்துட்டாங்க போல) வெகு சிலரே பதிவிட்டிருந்தார்கள் அவர்களிடமும் புன்னகைத்துவிட்டு வந்தேன். என்ன செய்யலாம்... டிவி பார்த்து நாட்களாகிவிட்டிருந்தது, ரிமோட்டை தேடியெடுத்து டிவி ஆன் செய்தால்... என்ன கொடுமைங்க இது, கலைஞர் மட்டும்தான் காட்சிதந்தார். அதில் தலயும் சதாவும் அசாதரணமாக ஆடிக்கொண்டிருந்தனர். இந்த பசங்கல்லாம் தல தலன்னு அடிச்சுகிறாங்களே... அவருக்கு இன்று பிறந்தநாள் வேறு... சரி தல படம் பார்க்கலாமென்று ஜிஞ்சர் டீயுடன் வந்தமர்ந்தேன். படம் பெயர் திருப்பதியாம், இயக்கம் பேரரசு (நீ போர் அரசு). தல பஞ்ச் டயலாக் , 'நான் எறங்கி போறவன் இல்லடா, ஏறிப்போறவன்' நல்லா ஏறிப்போங்க எங்க தல...

அடுத்துவந்த அரைமணி ஹாரிஸ் ஜெயராஜுக்கு, பரவாயில்லை. அதன்பிறகு வந்தார் ஆதி... தளபதி. (அடப்பாவிங்களா... அதுக்குள்ள அடுத்த படமா...) இயக்குனர் ரமணா, திரைக்கதை நல்ல வேகம். தளபதியும் டயலாக் பேசினார்... ஒன்றும் மனதில் நிற்கவில்லை. புல்லட் விவேக், சும்மா சொல்லக்கூடாது... அருமை. மறுபடியும் தளபதி டயலாக் பேசவந்த போது டிவி யை மியூட்டில் போட்டுவிட்டு மீண்டும் தூங்கிவிட்டேன்.

கண்விழித்தால், ப்ரகாஷ் ராஜும் ப்ரியதர்ஷினியும்(உங்களுக்கு எப்போ டீன் ஏஜ் முடியும் மேடம்?) சைகையில் பேசிக்கொண்டிருந்ததை பார்க்க பாவமாயிருந்தது. போனால் போகட்டுமென்று அவர்களுக்கு பேச்சு அருள் கொடுத்தேன். நன்றாகத்தான் பேசினார்கள்.

ப்ரியதர்ஷினி; அபியும் நானும் படத்ல த்ரிஷாவ கொஞ்சம் கூட கிளாமர் இல்லாம காட்டியிருந்தத பத்தி?

ப்ரகாஷ் ராஜ்; அந்த படத்ல அபியா நடிகறதுக்கு எனக்கு முன்னனி நடிகை தேவைப்படல... ஆனாலும் த்ரிஷா இருக்கட்டுமேன்னு புக் பண்ணினோம். எல்லோருக்கும் அவ அபியாதான் தெரியணுமே த்ரிஷாவா தெரியக்கூடாதுங்றதில கவனமாயிருந்தோம். ஒரே ஒரு ஊரு... பாட்டுல ஒரு சீன் த்ரிஷா கைய மேல தூக்கி ஆடுற மாதிரி வரும். அப்டி ஆடும் போது த்ரிஷா இடுப்பு கொஞ்சம் தெரிஞ்சது. நானும் ராதாவும் ஓடுப்போயி 'த்ரிஷா, நீ கை தூக்கி ஆடும் போது, உன் இடுப்ப தெரியுது. நீ ஏதாவது கருப்பு இன்னர் போட்டுக்கோயேன்னு' சொன்னோம். அதுக்கு த்ரிஷா சொன்னா, 'ஏன் சார், எல்லாரும் என் இடுப்ப காட்ட சொல்வாங்க. என் இடுப்ப மறைக்க சொன்ன முதல் ஆள் நீங்கதான்.' அதுக்கு நான் சொன்னேன், அம்மா த்ரிஷா, உன் இடுப்பு எனக்கு பிடிக்கும், ஆனா அபி இடுப்பு காட்ட மாட்டான்னு.

இது எனக்கு மிகவும் பிடித்தது.

செய்தி; தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் நடத்தைவிதி மீறல், தேர்தல் ஆணையம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக தேர்தல் ஆணையர் குப்தா சொல்லியிருக்கிறாராம். நேரு அண்ணே உடனே, 'அப்டியெல்லாம் ஒண்ணுமில்லைன்னு' விளக்கம் கொடுத்துள்ளார்.

ஐயா... கட்டணம் குறைத்தால் தான் என்னன்னு கேட்கிறேன்.

செய்தி; மதுரையில் கட்டு கட்டாக பணம் ஸ்கார்பியோ டிக்கியில் இருந்தது பிடிபட்டது.

எங்க வீட்ல ஸாலிடா 10 ஓட்டு இருக்கு... யாருக்காவது வேணும்னா எனக்கு மடலிடலாம்

ஒருத்தர் வீட்ல நைட்டு திருட்டு போயிடுச்சாம். அவர் உடனே போலிஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து, திருடனும் பிடிக்கப்பட்டான். அவர் போலிஸ்ட கேட்டாராம், 'சார் நான் அவன்ட கொஞ்சம் பேசணும்' 'அதெல்லாம் முடியாது, எதுனாலும் கோட்ல பேசிக்கலாம்' னு போலீஸ் சொல்ல, அதுக்கு அவர், 'சார் வேற ஒண்ணும் இல்ல, என் மனைவி தூங்கிட்ருக்கப்ப, அவ எழுந்திரிக்காம எப்டி வீட்டுக்குள்ள வந்தான்னு மட்டும் கேட்டுக்கிறேன். நான் ரொம்ப நாளா முயற்சி பண்ணி மாட்டிக்கிறேன்.' அப்டின்னு சொன்னாராம்.

ஒரு குட்டிப்பொண்ணு கடவுளிடம்; எனக்கு தம்பி பாப்பா குடுத்ததுக்கு நன்றி கடவுளே, ஆனா நான் உன்ட நாய் குட்டிதான வேணும்னு கேட்டேன்.