May 9, 2009

நானும் சிறை சென்றேன் – ஜெய்ஹிந்துபுரம் நினைவுகள் 02

அது 2002 ன் நவம்பர். நான் சவுதியில் விசா முடித்துவிட்டு ஊர் வந்திருந்தேன். இன்னும் 10-15 நாட்களில் ஈகைத் திருநாள் வரவிருந்தது. 5 வருடங்களுக்குப் பறகு குடும்பத்தினருடன் கொண்டாடும் திருநாள் என்பதால் தடபுடல் ஏற்பாடுகளோடு அனைவரும் ஆவலாயிருந்தோம். திருநாளுக்கு முதல் நாள், என் வீட்டிற்கு வந்திருந்த பெரியப்பா மகன் அனீஸ், மற்றொரு பெரியப்பா மகன் ஜலீல் மற்றும் உறவினரோடு வீடு மகிழ்ச்சியாகத் தானிருந்தது., அன்றிரவு வெளியே செல்லும் வரை.

ஒவ்வொரு திருநாளின் போதும் அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு இனிப்புகளோடு தினமணியின் ஈகைத்திருநாள் சிறப்பிதழும் அன்பளிப்பாக வழங்குவது வழக்கம். இரவு பத்து பதின்ஒரு மணியிருக்கும், இனிப்புகளும் ஈகைத்திருநாள் மலரும் வாங்கிவரலாம் என்று வெளியே கிளம்புகிறோம் நாங்கள் மூவரும். ஒன்று சேர்ந்தால் எங்களுக்கு ஒரு பழக்கம் தொற்றிக்கொள்ளும், நாயை கல்லால் அடிப்பது (அந்த அனுபவம் பிறகு). எங்கள் வீட்டிலிருந்து 30 வீடு கடந்து போயிருப்போம், ஒரு நாய் எங்களைப் பார்த்து குரைத்தது. நாய் சும்மா கிடந்தாலும் அடிப்போம், குரைத்தால் சும்மாவா விடுவோம். பின்னால் நடந்து வந்துகொண்திருந்த அனீஸ் கல்லை எடுத்துவிட்டான், 'கவனிக்க எடுத்தான் அடிக்கவில்லை.'

ஒரு குரல் வருகிறது, 'டேய்… கல்ல கீழ போடுடா..'

உடனே அனீஸ், 'நாய குரைக்காம இருக்க சொல்லுங்க'

நாயை நாய் என்று சொன்னதும் அவருக்கு கோவம், 'அதென்ன கடிக்கவா செஞ்சுது. அப்டித்தான்டா குரைக்கும், என்னடா செஞ்சுடுவ'

'ஏங்க, நான் மரியாதையாதான பேசுறேன், நீங்களும் மரியாதையா பேசுனா நல்லது'

'இல்லனா என்னடா செஞ்சுடுவ'

'கல்லால அடிப்பேன், நாய' இவண் நாய என்று சொன்னது அவருக்கு நாயே என்று கேட்டிருக்க வேண்டும்.

'…..த்தா, நில்ரா அங்கயே… இந்தா வரேன்' என்று சொல்லியவாறே (எதிர் வீட்டிலிருந்தவர், எங்களுக்கு குறுக்காக) அவர் வீட்டிற்குள் ஓடுகிறார்.

ஓடும் போதுதான் கவனித்தோம், அவர் யாரென்பதை.

எனது முந்தைய ஜெய்ஹிந்துபுரம் நினைவுகளில் சொல்லியிருக்கும் தெரு, தேவர்நகரில் இருந்து குறுக்கலாக பாரதியார் ரோடுவரை நீண்டிருக்கும் அந்த தெருவில் தான் அவர்களது வீடு இருக்கிறது, சம்பவமும் நடக்கிறது. நான் அப்போது பாடசாலை செல்லும் போது பார்த்திருக்கிறேன், இந்த வீட்டின் முன்னால் ஒரு பெரிய புல்லட் இருக்கும் ஒருவர் பெரிய மீசையுடன் செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருப்பார். இவர்களுக்கு பிரதான தொழில் அடிதடி, சைடில் கட்டப் பஞ்சாயத்தும் நடக்கும் என்பதும் சம்பவம் நடக்கும் போது பெரிய மீசைக்காரர் சிறையில் ஆயுல்கைதியாக இருப்பதாகவும் அவ்வப்போது பரோலில் வருவதாகவும் பிற்பாடு தெரிந்துகொண்டோம். உள்ளே ஓடியவனுக்கு 25 வயதும் மீசைக்காரரின் மகனாகவும் இருக்கலாம்.

சரி சம்பவத்திற்குள் செல்வோம்,

அதற்குள் சத்தம் பெரிதாக நானும் ஜலீலும் அங்கு வருகிறோம். அங்கிருந்து பத்து வீடு தாண்டினால் அனீஸ் வீடு, அங்கு அனீஸின் தம்பி, அக்கா பையன் எல்லாம் உறங்குகிறார்கள். வேகமாக நான் தான் வீட்டிற்குள் சென்று, 'டேய்… எந்திரிங்கடா.. ஒருத்தன் நம்மல அடிக்க சாமான் எடுக்க போயிருக்குறான்' என்று எழுப்பி வீட்டில் மறுநாள் பிரியாணிக்கு அடுப்பெரிக்க வைத்திருந்த விறகுகளை எடுத்துக்கொள்கிறோம். நாங்கள் 5 பேரும் வெளியே ஓடி வந்தால், அவர்கள் வீட்டு கேட் அடைத்தவாறே கிடக்கிறது. வெளியில் யாருமில்லை. எங்களுக்கோ இரத்தம் சூடாகிவிட்டது, ஏதாவது செய்தாக வேண்டும். (ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு)

ஜலீல் அவர்கள் வீட்டு கேட்டை தட்டிவாறே சப்தமிடுகிறான், 'யார்ரா அவன்… வெளிய வாடா… யார்கிட்ட… வெளியவாடா டேய்'

20 வயது மதிக்கத்தக்க ஒருவன் வெளியே வருகிறான், சாதாரணமாகத்தான். ஜலீல் அவன் சட்டையை பிடித்திழுத்து தெருவில் கிடத்துகிறான். அனைவரும் சேர்ந்து கட்டையால் அடிக்கிறோம், மிதிக்கிறோம். சரியாகச் சொல்வதென்றால், சட்டக்கல்லூரியில் ஒருவரை அடித்தார்களே அதேபோல. நமக்குத்தான் இயற்கையிலேயே இரக்க குணம் அதிகமாச்சே, நான் தான் சொன்னேன், 'விட்றா…செத்துர கித்துர போறான்' சரியாக அடித்துமுடிக்க உள்ளே சென்றவனும் உருட்டுக்கட்டையுடன் வருகிறான். அவனையும் இழுத்து போட்டு அடிக்கிறோம். ஆனால் அவனுக்கு சரியாக அடி விழுவதற்குள், அவன் வீட்டிலிருக்கும் பெண்கள் வந்து, 'ஐயோ… ஐயோ… கொல்றாங்ஞலே… விடுங்கடா டேய்' என்று கத்த ஆரம்பிக்க விட்டு விட்டு வந்துவிடுகிறோம்.

எங்களை அடையாளம் கண்டுவிட்டார்கள். அனீஸ் வீடு அவர்களுக்கு தெரியும் என்பதால் இரண்டு பையன்களையும் வீட்டில் நிறுத்திவிட்டு நாங்கள் புலிப்பாண்டியன் தெரு வழியாக ஜெய்ஹிந்துபுரம் முக்கிய வீதிக்கு வந்துவிட்டோம். எங்கள் மூன்று வீட்டினருக்கும் பொதுவான பெரியவர் என் மச்சான் என்பதால் அவருக்கு தொலைபேசியில் சம்பவத்தை சொல்லலாம் என்று பொது தொலைப்பேசி தேடினால், ஒன்று கூட பொதுவில் இல்லை எல்லாம் மூடிக்கிடந்தது. ஜலீல்தான் ஜெகதலக்கில்லாடி ஆச்சே (அதைப்பற்றியும் பிறகு) ஒரு பேக்கரியில் போய் பேசி தொலைபேசி பாவித்துக்கொள்ள அவரை சம்மதிக்க வைத்துவிட்டான். விடயத்தை கேட்டதும் என் மச்சான், சற்று கோவமாக, 'ஏண்டா அறிவு கெட்டவங்ஞளே… அடிதடி பண்ற அளவுக்கு நீங்க சண்டியராயிட்டீங்களா… அதும் நாளைக்கு பெருநாளை வச்சுக்கிட்டு. முட்டாப்பயல்களா… சேகர போய் பார்த்து, என்ன செய்யலாம்னு கேளுங்கடா' என்றார். அப்போதுதான் நினைவு வந்தது மறுநாள் திருநாள் என்பது. சரி சேகர் மாமா வை பார்க்கலாம் என்று ஜீவாநகர் வழியாக, அவர் வீட்டிற்குச் சென்றோம்.

சேகர் பற்றி, M.R.மணி ஜீவாநகரின் முக்கிய பிரமுகராயிருந்தார். இவரின் மகன்தான் M.R.M.சேகர். இவரும் பிரபலம் தான், இவரை தெரியாதவர்கள் ஜீவாநகர் சுற்றுவட்டாரத்தில் இருக்க முடியாது. முன்பு ஒரு மாதிரி இருந்து பிறகு மனிதர் ஆனார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர். சிறு வயதில் இருந்து நான் மாமா என்று தான் அழைப்பதுண்டு. எங்கள் குடும்ப நண்பர் கூட. ஒரு முறை 64வது வார்டு மாநகராட்சி கவுன்சிலருக்கு போட்டியிட்ட போது நானெல்லாம் நாயாக (மறுபடியும் நாயா) உழைத்தும் சிறு வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனார். எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லாவிட்டாலும் நமக்கு தெரிந்த ஒருவர் கவுன்சிலர் ஆகினால், நாமும் ஏதாவது காரியம் சாதிக்கலாமே என்ற சுயநலம் தான். அதுசரி, ஒவ்வொரு பொது நலத்திற்கு பின்னாலும் ஒரு சுயநலம் இருக்கத் தானே செய்கிறது. சுயநலம் இல்லாத பொதுநலம் ஏது? ஆஹா…ரூட்டு மாற்ற மாதிரி இருக்கு… புடிச்சு இழுத்துகிட்டுவா….

சம்பவத்திற்கு வருவோம்.

சேகர் மாமா வீட்டு கதவை தட்டுகிறோம்,

'என்ன மாப்ள இந்தநேரம், இப்ப தான் ப்ரசர் மாத்தர போட்டு படுத்தேன். சொல்லுப்பா'

'மாமா, இந்த மாதிரி ஆகிப்போச்சு' நடந்ததை நடந்த மாதிரியே சொன்னோம்.

'என்னடா… உங்களுக்கு அடிக்க வேற ஆள் கெடக்கலயா, அவிங்ஞ மேல போயா கைவெக்கனும்? கெரகம் புடிச்சவங்ஞலாச்சேடா… உங்க மச்சான்ட சொல்டீங்களா?'

'சொல்லிட்டோம் மாமா, அவங்க தான் உங்கள பார்க்க சொன்னாங்க'

'அவிங்ஞ ஒரு பஞ்சாயத்துங்கும் வர மாட்டாங்ஞலே… சரி நீங்க போயி போலீஸ் ஸ்டேசன்ல கம்ளைன்ட் குடுத்து எஃப்.ஐ.ஆர். பைல் பண்ண சொல்லுங்க, சீக்கிரம் போங்கடா மாப்ள… வண்டி வேணுமா?'

'இல்ல, வண்டி இருக்கு மாமா'

'அவிங்ஞ போறதுக்கு முன்னாடி போகணும், சீக்கிரம் போங்கடா. மத்தத காலைல பார்த்துக்கலாம்'

'சரி மாமா', என்று ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையம் கிளம்புகிறோம்.

காவல் நிலையத்திற்குள் நாங்கள் நுழையும் போது, அடிபட்டவர்கள் அங்கிருந்து வெளியே வருகிறார்கள். ஒருத்தன் முறைக்கிறான் மற்றவன் சிறிதாக சிரிக்கிறான். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வெளியில் நின்ற காவலரிடம் புகார் செய்கிறோம். அவர் உள்ளே பார்த்தவாறு, 'இந்தா… வந்துட்டாங்ஞப்பா, புடிச்சு உள்ள போடு' என்கிறார். நாங்களும் உள்ளே செல்கிறோம், நடக்கப்போவதை அறியாமல்.

'அப்டி உட்காருங்கப்பா' ஒரு காவலர்

வயர்லெஸ் கருவியை எடுக்கிறார். ஏதேதோ சொல்கிறார், அந்தப்பக்கமிருந்தும் ஏதோ சொல்லப்படுகிறது. இவர் மீண்டும், 'ஐயா, அக்யூஸ்ட புடிச்சுட்டோங்கய்யா… ஆமாங்கய்யா…இங்கதான்யா இருக்காங்ஞ, சரிங்கய்யா… ஐயா சரிங்கய்யா..' என்று வைத்துவிட்டு 'எப்பா ரைட்ரு, ஸ்டேட்மன்ட் வாங்கிக்கப்பா' என்கிறார். எழுத்தர் எங்கள் பக்கம் திரும்பி, 'வாங்க தம்பிகளா, என்ன நடந்தது சொல்லுங்க' என்கிறார். நாங்கள் விவரிக்கிறோம்.

'முதல்ல நீங்க அடிச்சிங்களா, இல்ல அவிங்ஞ அடிச்சாங்ஞளா?'

'சார், நாங்கதான் அடிச்சோம்'

'போலிஸ் ஸ்டேசன்ல வந்துட்டு அநியாயத்துக்கு நல்லவனா இருக்கீங்களேப்பா, கேஸ் வேற மாதிரி ஆகிப்போகும்… அவிங்ஞதான் அடிச்சாங்ஞன்னு போட்டுமா? அப்பதான் உங்க பக்கம் நிக்கும், என்ன சொல்றீங்க'

'சரிங்க சார்'

'இந்தாப்பா, மூனு பேரும் கையெழுத்து போடுங்க'

கையெழுத்து போட்டுவிட்டு, 'சார், நாங்க கெளம்பட்டுமா?'

'எங்க கெளம்ம போறீங்க?, இருங்கப்பா இன்னும் நாளிருக்கு'

அவர்கள் இருவரும் ஒரேபோல் 'சார்' என்று சொல்ல எனக்கு தொண்டை அடைத்து கண்ணீர் வரும் போலிருந்தது.

'உள்ள போயி உக்காருங்க'

உள்ளே இருந்த மர நாற்காலியில் அமர்ந்தோம். கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை. அங்கிருந்த ஒரு காவலர், 'ஃபேன வேணா போட்டுக்குங்க, டீ சாப்டுறீங்களா?' குடித்தால் தேவலாம் போலிருந்தது 'சரிங்க சார்'

தூக்கம் வரவில்லை. தினமும் விடியும் முன்பு எங்களுக்கு கடமையாக்கப்பட்ட அதிகாலை தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.

'சார், இங்க தொழுகலாமா?, விடியுறதுக்கு முன்னால தொழுதாகனும்'

'ஆங், அப்டி ஓரமா செஞ்சுக்கங்கப்பா'

'சார், மூஞ்சி, கை, கால் கழுவணும்'

'பின்னால தண்ணி இருக்கும், போங்க'

தொழுதுவிட்டு வந்தமர்ந்தோம். விடிந்து விட்டிருந்தது, இப்போது கேட்காமலேயே டீ வந்தது. குடித்தோம். காவலர்கள் இவ்வளவு நல்லவர்களா.

6 மணியிருக்கும் மச்சான், சேகர் மாமா மற்றும் 63வது வார்டு கவுன்சிலர் (மா. கம்யூனிஸ்டு) விஜயன் ஆகியோர் வந்தனர். எஸ்.ஐ இன்னும் வந்திருக்கவில்லை.

தோழர் விஜயன் எழுத்தரிடம், 'ஐயா இன்னும் வரலங்களா?'

'இன்னும் வரல சார், உட்காருங்க'

'பரவாயில்ல, நாங்க வெளில இருக்கோம்'

அரை மணி நேரத்தில் எஸ்.ஐ வந்தார். தோழர் விஜயன் அவரிடம் ஏதோ பேசினார். பிறகு நாங்களும் அழைக்கப்பட்டோம். சேகர் மாமா என் காதில் கிசு கிசுத்தார், 'நீ சவுதில இருக்கிறத சொல்லிடாத' பிறகு மூவருக்கமாக 'அவரு என்ன சொன்னாலும் தலயாட்டுங்க'

எழுத்தர், 'இங்க கையெழுத்து போடுங்க'

கையெழுத்து போடும் போது எஸ்.ஐ சொல்கிறார், 'அவிங்ஞ என்ன கம்ளைன்ட் குடுத்திருக்காங்ஞ தெரியுமா, நீங்க அவிங்ஞள அடிச்சு 10 பவுன் சங்கிலிய புடுங்கிட்டு போயிட்டீங்களாம், அவிங்ஞள பத்தி எனக்கு தெரியும், அவிங்ஞளோட கெட்ட பேருதான் உங்கள காப்பாத்துச்சு, இனிமேல் அடிதடின்னு போகாம ஒழுங்கா பொழக்கிற வழிய பாருங்கப்பா. எந்த பிரச்சனைனாலும் முதல்ல போலீஸ் ஸ்டேசன் வாங்க, புரியுதுல்ல? போங்க'

'சரிங்க சார்'

வெளியே வரும் போது, வாசலில் நின்ற காவலர் பணம் கேட்க, நான் ஐநூறு ரூபாய் குடுக்கலாமா என்று சேகர் மாமாவின் காதுக்குள் கேட்கிறேன் அவரோ 20 ரூபாய் எடுத்து கொடுக்கிறார்.

வீட்டிற்கு சென்றால், ஏதோ ஆயுல் தண்டனை கைதியை பார்ப்பது போல் பார்கிறார்கள்.

அக்கா, 'தாடிய ஷேவ் பண்ணிடு, இல்லனா… தீவிர வாதின்னு சொல்லிடுவாங்ஞ'

அது ஒரு வாரம் ஷேவ் செய்யாமல் வளர்ந்திருந்த முடி தான். என்ன செய்ய எனக்கும் பயம் உடனே எடுத்துவிட்டேன்.

Chill: சென்ற வாரம் அனீஸ் உடன் ஜிடாக் செய்து கொண்டிருந்த போது அவனிடம் சொன்னேன், 'நம்மளும் ஜெயிலுக்கு போயிட்டு வந்தவங்ஞதான், சொல்லி வையி… சொருகிடுவோம்னு' என்று சொல்ல, அவன் 'டேய் நம்ம போனது பேரு ஜெயில் இல்லடா, அது லாக்அப், யார்டையாவது சொல்லிடாத… சிரிச்சுவிட்டுட போறாங்ஞ' என்றான்.

அட இதுல இவ்வளவு விசயம் இருக்கா…. இது தெரியாம தலைப்பு வச்சுபுட்டேனே… சரி விடு எல்லாம் நம்ம ஆளுங்க தான், எதாயிருந்தாலும் பேசி தீத்துக்கலாம்.

5 comments:

  1. நம்ம மக்களோட சேர்ந்தா தினவு
    எடுக்கறது எல்லோருக்கும் பொது தான் போல

    ReplyDelete
  2. அண்ணே, நான் ஏதாவது தப்பா கிப்பா பேசியிருந்தாக்க, மன்னிச்சுருங்கண்ணே...!
    எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்..!

    ReplyDelete
  3. நல்ல பதிவு
    அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

    ReplyDelete
  4. நானும் ரவுடி தான் டைபுல!
    வாலண்டியரா போய் சிக்கியிருக்கிங்க!

    ReplyDelete
  5. //வால்பையன் said...

    நானும் ரவுடி தான் டைபுல!
    வாலண்டியரா போய் சிக்கியிருக்கிங்க!//

    அய்யய்யோ... நான் ரவுடி இல்லைன்னு தப்பா நினைச்சுடாதீங்க...

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.