Nov 15, 2010

பிணந்தின்னும் சாத்திரங்கள்

மதுரை இப்போது ஜொலித்துக் கொண்டிருக்கிறது. பின்னே, மத்திய அமைச்சரின் மகனுக்கல்லவா திருமணம்?

ஒரு சராசரி பணக்காரனின் திருமணம் என்றாலே அந்தப் பகுதி கொஞ்சம் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகத்தான் செய்யும். (எல்லாம் ஒரு விளம்பரம்தான்!) மதுரை இளவரசருக்குக் கல்யாணம் என்றால் கேட்கவா வேண்டும்?

தயாநிதியை மதுரை இளவரசர் எனச் சொல்வதற்கு எனக்குக் கொஞ்சமும் கூச்சமில்லை. ஏனெனில் மதுரை மன்னருக்கு மகன் என்றால்... நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர் இளவரசர்தான்.

மதுரையில் (நான் பார்த்தவரை)ரயில்வே பாலம் மற்றும் மேயர் முத்து பாலங்கள் முழுவதும் சீரியல் லைட் அலங்காரம். மேலும், யானைக்கல் பாலம், விக்டர் ஆல்பர்ட் பாலம் முழுவதும் சீரியல் லைட்டுகள், சூரிய வடிவ டியூப் லைட்டுகள், கொடிகள், தோரணங்கள்.

என் நண்பன் சொன்னான்: வேற வீட்டுக்குக் கல்யாணத்துக்கு இவர்கள் வருவதாக இருந்தாலே அலங்கார வளைவுகள், தோரணங்கள், பேனர்கள் வானையும் நம் மூச்சையும் முட்டும்... இவர்களின் வீட்டுத் திருமணம் என்றால் என்னென்ன நடக்கப் போகுதோ?

ஆனால் அப்படியொன்றும் பெரிய அளவில் பேனர், தோரணங்கள் இல்லைதான் என முதலில் ஆறுதலடைந்தேன். ஆனால் இப்போது அப்படியிருந்தால் கூடப் பரவாயில்லை எனத் தோன்றுகிறது.

மதுரை உள்ளிட்ட தமிழக நகரங்கள் முழுவதும் மின்பற்றாக்குறையால் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. ஆனால் 13ஆம் தேதியிலிருந்து மதுரை நகர் இரவு முழுவதும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. நான்கு பாலங்கள் முழுவதும் டியூப் லைட்டுகள், சீரியல்கள் அத்துடன் தமுக்கம் மைதானம் போகும் வழியெங்கும் ஃபோகஸ் லைட்டுகள் எரிக்கப்படுவதற்காக நாம் பகலெல்லாம் புழுங்கிச் சாகிறோம். பிறகு இந்தியாவில் இரண்டாவது பணக்கார அமைச்சரின் பணத்தை செலவளிப்பதற்கு வேறு நியாயமான காரணம் வேண்டாமோ?
சூரியனுக்கு வெளிச்சம் காட்டும் பல்பு

பாதை மறிக்கும் சூரியக்கூட்டம்
நோ கமண்ட்ஸ் (இடம் மதுரை கல்லூரி)

ஆனால் நமது கேள்வியெல்லாம் ஒன்றுதான்... சூரிய குடும்பம் என்று தமிழகமே உங்களைப் போற்றுகிறது. உங்கள் பேனர்கள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன. சேகுவெரா, ஜார்ஜ் புஷ், சத்ரபதி சிவாஜி போன்ற உலக ஆளுமைகளின் பிம்பங்கள் எல்லாம் உங்கள் உடல்களில் பிரதி செய்யப்படுகின்றன... ரொம்ப மகிழ்ச்சி...

உங்கள் சூரிய குடும்பத்திலிருந்து மின்சாரம் எடுத்து இரண்டு மணி நேரம் மின்வெட்டை நிறுத்தினால் உங்களையும், திருமணம் செய்யப் போகும் இளவரசரையும் நாடு போற்றும். உங்கள் கட்சியினர் மட்டுமல்ல, கட்சி சாராத பொது மக்களும் போற்றுவார்கள்.

மதுரை மக்கள் மணமக்களைப் போற்றுவதற்கு மேலும் சில ஆலோசனைகள்

1. உடனடியாக மதுரை முழுவதும் சேதமடைந்திருக்கும் சாலைகளை புதிதாகப் போட்டால் அதற்குக் காரணமான மணமக்களை மதுரை மக்கள் மனம் நிறைவாகப் பாராட்டுவார்கள். வாழ்த்துவார்கள்.
2. கல்யாண விளக்குகள் எரியும் நாளிலிருந்து ஒரு மாதத்துக்கு மதுரை மக்களுக்கு மின்வெட்டு இல்லை.
3. திருமணத்திற்கு முன்னும் பின்னும் மொத்தம் மூன்று நாட்கள் மதுரை நகருக்குள் பேருந்தில் எங்கு சென்றாலும் இலவசம். (ஒரு நாளைக்காவது ஷேர் ஆட்டோ தொல்லையிலிருந்து மக்களுக்கு நிம்மதி கிடைக்கும்.)
4. யாரோ எம்.எல்.ஏ ஆவதற்காக ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தவர், மகன் திருமணத்துக்கு ஒரு வீட்டுக்கு ஆயிரம் ரூபாயாவது தருவார் என எதிர்பார்க்கலாம்.
5. திருமணத்தையொட்டி பெட்ரோல் விலையை சட்டென்று பாதியாகக் குறைக்கலாம்.
6. திருமணத்தன்று வாழ்த்துச் செய்தி அதிகமாகப் பரிமாறிக் கொள்ளப்படும் என்பதால் அன்று அனைத்து மொபைல் சர்வீஸும் எஸ்.எம்.எஸ் இலவசமாக்கப்படும்.
7. அன்று பிறக்கும் குழந்தைகளில் தயாநிதி பெயர் சூட்டுவோருக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்படும்.
8. அன்று மதுரை நகர் முழுவதும் மையங்கள் நிறுவி மக்களுக்கு விருந்தளிக்கப்படும்.

சட்டமன்ற தேர்தல் வெகு அண்மையில் இருப்பதால் அதை வெற்றிகரமாக எதிர்கொள்ள மேற்கண்ட ஆலோசனைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜோக்ஸ் அபார்ட், உண்மையில் தற்கால அமைச்சர் மகனுடைய திருமணம் என்கிற ஆடம்பர விதிகளின்படி திருமணம் நடந்தது எனில் ஜெயலலிதா ஆட்சியில் வளர்ப்பு மகன் திருமணம் ஏற்படுத்திய விளைவையே தி.மு.க.வும் சந்திக்கும். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாதபோது விதி எல்லோருக்கும் ஒன்றுதான், அது நியூட்டன் ஆனாலும் சரியே!

மறுபுறம், ஜெயலலிதாவை விமர்சித்த அளவுக்கு திமுகவை விமர்சிக்கும் நெஞ்சுரமோ துணிச்சலோ அஞ்சா நெஞ்சமோ தமிழகத்தின் பிழைப்புவாத ஊடகங்களுக்கு இல்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

`பேயாட்சி செய்யும் நாட்டில் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று சொன்ன பாரதியின் பாடல் இன்று எவ்வளவு கனகச்சிதமாய்ப் பொருந்துகிறது. பிறகு, எவ்வளவு அராஜகம் நடந்தாலும் வேறு வழியேயில்லாமல் முதலமைச்சரும், காவல்துறையும், அமைச்சர்களும், வணிக நிறுவனங்களும், பொதுமக்களும் இந்தத் திருமணத்தை வாழ்த்தித்தானே ஆக வேண்டியிருக்கிறது.

(சம்பந்தமில்லாத ஒரு குறிப்பு: நேற்று சி.டி.யில் மனோகரா திரைப்படம் பார்த்தேன். கதை, வசனம்: மு.கருணாநிதி)

Nov 2, 2010

ஜனநாயகம் - சாபமான வரம்


தமிழ் நாட்டில் தேர்தல் அடுப்பு பற்றவைத்தாகிவிட்டது. இனி சூடுபிடித்து கொழுந்துவிட்டு எரியும்.  கருப்புகள் வெளியே வந்து ஓரளவுக்காவது பொதுசன மையத்தில் பணம் புரளும். அண்மையில் நடந்து முடிந்த ஆர்பாட்டங்களில் தலைக்கு 500+பிரியாணி விநியோகம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எனில் முத்திரைக்கு இன்னும் அதிகமாகவே பேரம் பேசலாம், பேசுவார்கள். போலி முக்த்திரையுடன் நம் காலில் விழுந்து, காசு கொடுத்து ஓட்டு பெற்றதும், வாய்கரிசி போட்டு செத்த பாம்பாக்கிவிடும் நிலை இங்கே மிகச்சாதாரணம். சாலையோரத்தில் அல்லது 'நடு' சென்டரில் நிற்கவைக்கப்பட்டிருக்கும் இலவச பறவை கழிப்பிடத்திற்கு காட்டப்படும் கரிசனம் கூட மனித மலக்கழிப்பிடத்தின் மீது இருப்பதில்லை. ஆண்டுக்கு ஒரு முறையேனும் பறவை கழிப்பிடத்தை சுத்தப்படுத்தி சுண்ணாம்பு தடவி, அதன் பெயரில் ஒரு கலவரத்தையும் நடத்துபவர்களும் சுயகழிவிறக்க முட்டுச்சந்தையே நாடும் அவலம் இங்கு மட்டுமே காணக்கிடைக்கும்.

கடந்த மாதத்தில் இரண்டு தினப்பத்திரிக்கை புண்ணியத்தில் இரண்டு பறவை கழிப்பிடங்களுக்கு மீள்வாழ்வு கிடைத்துள்ளது. அதற்கு சிறகில்லா காக்கைகளும் நன்றி செலுத்திதை தினமணி செய்திக்கு கிடைத்த வெற்றி என்று புகைப்படத்துடன் ஆதாரம் செய்துள்ளனர். சிம்மக்கல் பகுதியில் நடுரோட்டில் இருக்கும் அந்த சிலையை சற்றே இடம் மாற்றிவைக்கவும் அனுமதிக்காமல் போராட்டம் நடத்தி வெற்றிபெற்றது இந்தியாவை ஆளும் கட்சியினரே. கட்சத்தீவை இன்னும் மீட்கக்காணோம். காவேரி தண்ணீரை திறந்துவிட வக்கில்லை. சிலையை மீட்டுவிட்டதாய் போட்டோவிற்கு பல்லிளிக்கிறார்கள். அதைவிடக்கொடுமை, மதுரையின் சாலையோர வியாபாரிகளை தகர்த்து கொண்டுபோய் தல்லாகுளம் பகுதியில் ஒருங்கிணைந்த விற்பனைக்கூடத்தில் அடைத்திருக்கிறார்கள், தீபாவளி சிறப்பு விற்பனையாம். அங்கு ஏற்கனவே இருந்த சிலைக்கு அருகில் கடை விரித்தையும் கண்டித்து தினமணி செய்திவெளியிட அதற்கும் உடனடி நடவடிக்கை எடுத்து அந்த கடைகளை அப்புறப்படுத்திவிட்டது மாநகராட்சி. தினமணி செய்திக்கு துரித நடவடிக்கையாம்.

மதுரையில் தொழில் தொடங்குவதாய் இருந்த பன்னாட்டு கணிணி நிறுவனத்தினர் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை பார்வையிடச் செல்ல ரோட்டில் பல சாகசங்களை நிகழ்த்த வேண்டிய நிலை. 'ஐயோ போதும் ஆளை விடுங்க' என்று மேற்கு பக்கம் சென்றுவிட்டனராம். உள்கட்டுமானம் இல்லாத நாட்டில் ஒரு குப்பனும் குப்பை கொட்ட வரமாட்டான் என்பது சுப்பனுக்கு தெரிந்திருந்தும், சுற்றுவட்டாரத்திற்கு தெரியவில்லை. டிவிஎஸ் நகர் பளபளத்தால், மதுரை முழுக்க தங்கத்தால் தார் போட்டிருக்கும் என்ற நினைப்பாயிருக்கும்.

வெளிநாட்டு நிறுவனங்கள் வருவதற்கு உள்ளே வரச்சாலையில்லை சரி, குழிகளுக்கிடையில் அறிதாய் இருக்கும் குவிகளினூடே ஊர்ந்து வந்து கடை வைத்திருக்கும் பண முதலைகளையும் ஓடச்செய்யும் வழியை தம்பிகள் இனிதே செய்துவருகிறார்கள். முன்பு நகைக்கடையை எதிர்த்தது போல இப்போதும் ஒரு நகை மற்றும் ஜவுளிக் கடைக்கு தரும் நெருக்கடியில் அவர்கள் மதுரையை விட்டு ஓடும் எண்ணத்தில் இருப்பதாகப் பேச்சு.

இணையதளங்களில் பதிவு செய்யும் போது கேட்கப்படுவதால் என்னுடைய பிறந்த நாள் இன்னும் நினைவிருக்கிறது, ஆனால் எனக்கு எந்தவிதத்திலும் சொந்த/பந்தமில்லாத ஒருவரின் பிறந்தாள் என்றும் என் நினைவிலிருந்து மறப்பதில்லை. இது எனக்கு மட்டுமல்ல, மதுரை வாழ் மரத்தமிழன் ஒருவனுக்கும் மறக்க வாய்ப்பே இல்லை. மறந்துவிடாதீர்கள் மறந்தும் இருந்து விடாதீர்கள், மறந்துவிட்டால் இருக்க மாட்டீர்கள். என்று சொல்லாமல் சொல்லி எங்களை இம்சிக்கிறார்கள். ஜனவரிக்கு ஆறு மாதம் முன்பே சுவரெழுத்துகள் ஆரம்பமாகிவிட்டது. தன் தாய் தந்தை பிறந்தநாளையும் இப்படி செலவுசெய்து விளம்பரப்படுத்த மாட்டார்கள். உடன்பிறந்த அண்ணன் கஞ்சிக்கு வழியில்லாமல் இருப்பான், இவன் ஊருக்கு பிரியாணி பொட்டலம் கொடுத்துக்கொண்டிருப்பான். அதுசரி... இதெல்லாம் நேரடி முதலீடு. சொந்த அண்ணனுக்கு சோறு போட்டால், சொத்தையா எழுதி வைக்கப்போறான்.

இவை நம் நாட்டின் சாபக்கேடு. சாபத்தை சகித்தே வாழ வேண்டும். இத்துர்பாக்கிய நிலை நம்மீது திணிக்கப்பட்டிருப்பதை அறிந்தோ அறியாமலோ நாமும் ஏற்றுக்கொண்டுவிட்டோம். சகித்து வாழ்கிறோம், சந்தோஷமாக!