Aug 12, 2009

விளிம்புநிலை வியாபாரிகள்

அந்த இட்லிக்கடை நடத்துபவர் பெயர் இட்டலிக்காரம்மா. கடைக்குப் பெயரில்லை, கடை நடத்துபவர் பெயரையும் யாரும் தெரிந்து கொள்ள விரும்பியதில்லை. இது பெரும்பாலான தெருவோர கடைகளுக்குப் பொருந்தும். இத்தகைய கடைகளுக்குப் பெயர் போனது மதுரை. விலை உயர்ந்த உணவகங்களை காட்டிலும், நமக்கான விருப்ப சுவை கிடைப்பதும், அவை பர்ஸை பதம் பார்காததும் பலரை அங்கு அழைத்துச் செல்வதுண்டு. அதில் கடைக்காரர் பெயர் தெரிந்து என்ன செய்ய. போத்தீஸ்கடை, ஆத்தா கடை, ஐயப்பசாமி கடை என்று அந்த கடைகள் அடையாளப் படுத்தப்படுவதுண்டு. இரவு 7 மணிக்குப்பிறகு ஆரம்பமாகும் இக்கடைகள் நள்ளிரவு 2 மணிவரை கூட (திறந்திருப்பதுண்டு என்று சொல்வது பொருந்தாது, கதவில்லாக் கடைகள்) அடுப்பு எரிப்பதுண்டு. சென்றமர்ந்ததும் 4 இட்லி, பிறகு ஒரு தோசை அடுப்பில் இருந்து நேரடியாக நம் தட்டுக்கு மாற்றப்படும். கடைசியாக ஒரு முட்டை தோசையுடன் கை கழுவலாம். ‘14;50 குடுப்பா’. ‘ஒர்ருவா கம்மியா இருக்கேக்கா...’ ‘பரவாயில்லப்பா.. நாளபின்ன வந்தா குடு’. இருவரும் வியர்வையின் விலை தெரிந்தவர்கள், ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கை.

சில குடியிருப்பு பகுதிகளில் காலை மட்டுமே விரிக்கப்பட்டிருக்கும் கடைகளில் ஒன்றுதான் இட்லிக்காரம்மாவுடையது. ஜீவாநகரில் இருந்தபோது, எங்கள் தெருவோரத்தில் இருந்த இட்லி கடையில் எனக்கு பள்ளி மதிய உணவிற்கு இட்லி வாங்கித் தருவது அம்மாவின் வழக்கமாயிருந்தது. வீட்டை ஒட்டியே என் உறவினரின் பிரபல ஹோட்டல் இருந்தும் தெருவோரக் கடையில் இட்லி வாங்குவதற்கான சில காரணங்கள், ஹோட்டலை விட இங்கு பெரிதாய் கிடைக்கும் இட்லி, வீட்டுச் சுவையிலேயே சாம்பார் சட்னி, சில நேரங்களில் இலவசமாய் கிடைக்கும் குழிப்பணியாரம். அதைவிட முக்கியம் கைராசி.

தினமும் அதிகாலையில் பெருக்கி, நீர் தெளித்து கோலமிட்டு அதன் மேல் அடுப்பு ஏற்றப்படும். இரண்டே அடுப்புதான். இட்லி, குழிப்பணியாரம் இரண்டே மெனு தான். தோசைக்கு காத்திருக்க வேண்டும், இட்லி பாத்திரம் இறக்கப்பட்டு தோசைக்கல் ஏற்றப்படும்வரை. என்னயிருந்தாலும் ஏழு மணிக்கு முன்பு வியாபாரம் ஆரம்பிப்பதில்லை. ஏழு மணி என் தம்பி தூங்கி எழும் நேரம். அவன் கை ராசிக்கையாம். அவன் கையால் வியாபாரம் ஆரம்பித்தால் சுபிச்சமாக இருக்கும் என்பது இட்லிக்காரம்மாவுடைய நம்பிக்கை. அப்பாவிற்கு அந்த நம்பிக்கையில் நம்பிக்கை இல்லை என்றாலும் இட்லிக்காரம்மாவுடைய நம்பிக்கைக்காக தம்பியை தினமும் அனுப்பிவைப்பார், போனி செய்ய. அவனும் அந்தம்மா கடையில் இருந்தே 10 பைசா எடுத்து கொடுத்து ஒரு குழிப்பணியாரம் வாங்கி வருவான். அவன் கையால் பணம் வாங்குவதற்கு முன் இட்லிக்காரம்மா பணத்தைத் தொட மாட்டார். அவசரம் என்றால் மட்டுமே, தாமாக பணத்தை தட்டில் போட்டு இட்லியை எடுத்துச் செல்ல வேண்டும். அவருக்கு நம்பிக்கை என் தம்பிக் கை மீது. நாங்கள் வீடு மாறிய சில நாட்களிலேயே அவரும் கடையை நிறுத்திவிட்டதாக அறியப்பெற்றேன். ராசிக்கை போன கவலையாயிருக்கும்.

டவுன்ஹால் ரோடு, மதுக்கடைகள் அதிகமாக இருக்கும் தெருவில் ஒருவர் தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்கிறார். வண்டியை தள்ளலாம் என்றாலும் ஒரே இடத்தில் தான் வியாபாரம். வியாபாரம் இல்லாத நாட்களிலும் வண்டி அங்கேயே இடப்பட்டிருக்கும். சரக்கு தானியில் கொண்டுவரப்படலாம். ஆள் பார்க்க சுத்தமாக இருப்பார். நெற்றியில் எப்போதும் காணப்படும் ஒரு இன்ஞ் திருநீறு, வாடிக்கையாளரை வரவேற்கும் இன்முகம். அவருக்கு தன் வியாபார சரக்கு சுத்தமாக இருக்க வேண்டும். கடலையை கரண்டியில் தான் எடுப்பார், சரக்கில் கைபடுவதில்லை, யாரையும் கைவைக்க விடமாட்டார். சுத்தம் தான் என் முதலீடு என்பார். அதற்காகவே பலரும் அங்கு செல்வதுண்டு. ஃபுட் ஸேஃப்டி படித்த எனக்கு, சில குறைபாடுகள் கண்ணில் தெரியும். முக்கியமாக கடலை மடித்து கொடுக்கும் குமுதம், குங்குமம், ஆவி, தினமலர், மாலைமலர் போன்றவை வாசிக்கப்படும் சூழல், அதை நேரடியாக எடைக்கு வாங்கும் பழைய பொருள் தரகர். அது விற்கப்படும் மொத்தக் கடை. அங்கெல்லாம் நிறைந்திருக்கும் சுத்தமும் சுகாதாரமும். ஆனாலும் தன்னளவில் சுத்தமாக இருக்கமுனைபவரிடம் அவையெல்லாம் நினைவூட்டுவது அவரது நம்பிக்கையை தகர்ப்பதாக ஆகிவிடும். எனக்கு கடலை நினைவு வரும் போது சொந்த பாத்திரத்தில் வாங்கிவருவதன் காரணம் அதன் சுவை, என் விருப்ப சுவை.

மீனாட்சியை தருசிக்க வரும் கேரள ஆந்திர பக்தர்களை குறிவைத்து நடத்தப்படும் மார்கழி மாத மாசி வீதி கடைகளும் பிரசித்தி. அத்தகைய நடைகடை வியாபாரிகளில் பெரும்பாலானோர் ஐயப்ப பக்தர்களாக இருக்க பார்த்திருக்கிறேன். வியாபார நுண்ணரசியல். எழுகடல் தெருவில் ப்ளாஸ்டிக் பொருட்கள் மொத்தமாக வாங்கி, மதுரை முழுக்க தள்ளுவண்டியில் சில்லறைக்கு விற்பவர். சுக்குமல்லி காபி, போளி, போண்டா போன்றவற்றை சைக்கிள் உருட்டியே தினமும் விற்று தீர்ப்பவர் மற்றும் இளநீர், காய்கறி விற்கும் இன்னும் பலர்.

இவர்களுக்கெல்லாம் அன்றைய வியாபாரத்தின் லாபம் தான் அடுத்த நாளுக்கான சோறும், முதலீடும். நான்கைந்து நாட்கள் தொடர்ந்தார்போல் வியாபாரமோ அல்லது வியாபாரியோ படுத்துவிட்டால், அடுத்த நாள் சோற்றுக்கு கந்துவட்டியிடம் கையேந்தும் விளிம்புநிலை வியாபாரிகள் இவர்கள்.

மணிகளில் ஆயிரங்கள் பார்க்கும் தீபாவளி திடீர் கடைகளையும், பாலியல் தொழிலாளர்களையும் விளிம்புநிலை வியாபாரிகள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. நான் இவர்களை வீம்புநிலை வியாபாரிகள் எனச் சொல்லுவேன்.

நன்றி!!!

33 comments:

 1. எல்லாவற்றையும் நியாபகப்படுத்திவிட்டீங்க ....

  ReplyDelete
 2. சித்திரைத் திருவிழாக் கடைகள்..?
  நல்ல Flow அண்ணே.

  ReplyDelete
 3. இன்னும் கொஞ்சம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கலாம் நண்பா.. அத்தோடு.. உங்கள் கடைசி வரிகளில் எனக்கு உடன்பாடு இல்லை..

  ReplyDelete
 4. பதிவுலகில் நீங்கள் கொஞ்சம் வித்தியாசமானவர் தான்.

  ஏனோதானோவென்று எழுதுவோரும், கறிக்கு உதவாத சப்பை பதிவுகள் எழுதும் ( என்னைப் போனறோரும் )
  உங்களைப் பார்த்து கற்று கொள்ள வேண்டும்.

  கையேந்தி பவன்களை பற்றி பலர் எழுதியிருந்தாலும், முற்றிலுமாக விளிம்பு நிலை மனிதர்களை பற்றி
  பதிவுலகில் சிரததை எடுத்து யாரும் எழுதுவதில்லை.

  பாராட்டுகள் பீர்.

  இது ஒரு நல்ல துவக்கம்.

  ReplyDelete
 5. வியர்வையின் விலை
  தெரிந்தவரின் உணவுக் கடை..
  இலவசமாய் கிடைக்கும்
  குழிப்பணியாரம்
  கோலமிட்டு அதன் மேல் அடுப்பு
  ராசிக்கை தூங்கி எழும் நேரம் - ஏழு மணி
  ராசிக்கை தம்பி கையால் பணம் வாங்காமல் பணத்தைத் தொடுவதில்லை..
  இட்லிக்காரம்மா நம்பிக்கை என் தம்பிக் கை
  ***
  மதுக்கடைகள் அதிகமாக இருக்கும் தெரு
  ஒரு இன்ஞ் திருநீறு நெற்றி
  சரக்கில் கைபடுவதில்லை
  தன்னளவில் சுத்தமாக இருக்கமுனைபவரிடம்
  நம்பிக்கையை தகர்ப்பதாக சூழல்
  மார்கழி மாத மாசி வீதி கடை
  ஏழுகடல் தெரு
  சுக்குமல்லி காபி, போளி, போண்டா
  அன்றைய வியாபாரத்தின் லாபம்
  அடுத்த நாளுக்கான முதலீடு
  எப்போதும் கந்துவட்டியிடம் கையேந்துவதில்லை
  வீம்புநிலை வியாபாரிகள்!!
  ***
  நிறைய அற்புதங்களை ஒரே இடுகையில் இறுக்கி கட்டிவிட்டது ​போல் உணர்கிறேன். ஒரு கவிதை களமாய் காட்சியளிக்கிறது. அதுதான் உங்கள் இடுகையிலிருந்தே வரிகளை உருவி ​சேர்த்துப் பார்த்தேன். பதமாய் இதமாய் விரிவாய், இட்லிக்காரம்மா குழிப்பணியாரம் போல் அடசல் அடசலாய் பகிர்ந்திருக்கலாமோ?

  ReplyDelete
 6. முழுதும் நல்ல பதிவு.

  /*மணிகளில் ஆயிரங்கள் பார்க்கும் தீபாவளி திடீர் கடைகளையும், பாலியல் தொழிலாளர்களையும் விளிம்புநிலை வியாபாரிகள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. நான் இவர்களை வீம்புநிலை வியாபாரிகள் எனச் சொல்லுவேன்.*/

  குறை சொல்லும் நோக்கில் அல்ல, இதில் எனக்கு உடன்பாடில்லை.

  ஒருவேளை இவர்கள் ஏமாற்றி விடுகிறார்கள் என்ற நோக்கில் சொல்லப்பட்டதோ?

  ReplyDelete
 7. அனைத்தும் உண்மை...
  செந்தூர் ஹோட்டல் பின்னால் தான அவர் சுண்டல் விற்பர்?
  இல்ல காலேஜ் ஹவுஸ் பக்கமா சரியாய் ஞாபகம் இல்ல.
  //மணிகளில் ஆயிரங்கள் பார்க்கும் தீபாவளி திடீர் கடைகளையும், பாலியல் தொழிலாளர்களையும்//
  நல்ல அசத்தலான வரிகள்!
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. நல்ல பதிவு.கடைசி வரிகளை நான் ஒத்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 9. விளிம்பு நிலை உறவுகளோடு உறவாடும் ஃப்லோ

  கடைசி வரி நச்

  வித்தியாசமான எழுத்து நடை

  \\நான் புட் சேஃப்டிக்கு படித்தவன்\\

  வளைகுடா ஃபுட் கன்ட்ரோல்லேயா வேலை?

  ReplyDelete
 10. Beautiful article!!! You were talking about "Kai Rasikarn". I know a guy who had the same reputation. Unfortunately, the same guy when grew up became a pauper and penniless!!! Even the nick name we opted to choose for the stores should relay good messages. Certain beliefs we uphold cannot be shaken easily. If in case a survivor of Swine Flue opens a tea stall or side walk vending, we dare not to call his place as Swin Flu store. That will drive away the customers.

  ReplyDelete
 11. நன்றி யாத்ரீகன், மகிழ்ச்சி.

  ReplyDelete
 12. டக்ளஸ் அண்ணே... சித்திரை திருவிழா கடைகளை பதிவின் ஒரு பத்திக்குள் சுருக்கி விட முடியாது, தனி பதிவாக்க முயற்சிக்கிறேன்.
  அவை அனைத்தும் விளிம்புநிலையில் வருவதல்ல.

  ReplyDelete
 13. நன்றி கார்த்திக்,

  அடுத்தடுத்த பதிவுகளில் முயற்சிக்கிறேன் நண்பா, தொடர்ந்து செதுக்குங்கள்.
  கடைசி வரிகள், பார்வைகள் மாறுபடலாம்.

  ReplyDelete
 14. அன்பின் ஜெகா, அதே தோழமை... அதே கைகுலுக்கல்.

  ReplyDelete
 15. மிக்க மகிழ்ச்சி முரளிகண்ணன், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்.

  ReplyDelete
 16. இதற்கு முன்னரும் கூட மதுரை இட்லி கடைகளைப் பற்றிய எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். குறிப்பாக, ராமகிருஷ்ணன் அவர்கள், பணம் நிறைய கிடைத்த போதும் கூட, தன்னை நம்பி வருபவர்கள் பசியாறாமல் போகக் கூடாது என்ற பாசத்துடன் ஒரு அரசியல் கூட்டத்திற்காக தன் கடையை காலி செய்ய மறுத்த ஒரு இட்லி கடை ஆயா பற்றி எழுதி இருந்தது நெஞ்சை நெகிழச் செய்தது.

  உங்கள் வரிகளை இன்று பார்க்கும் போது, நானும் கூட ஒரு முறை மதுரையில் ஆயாக் கடையில் இட்லி வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆவல் தோன்றுகிறது.

  அது மட்டுமல்ல, மதுரைக்காரர்கள் எல்லாம் "பாசக்காரப் பயலுகள்" என்று வடிவேலு அடிக்கடி சொல்வது எவ்வளவு உண்மை என்றும் புரிகிறது.

  உங்களைப் போன்ற மதுரைக்காரர்கள் அனைவருக்கும் பாசமிகு நல்வாழ்த்துக்கள்.

  நன்றி.

  ReplyDelete
 17. நைனா, முந்தைய இடுகையில் உம்ம நல்லவர்ர்ர்ர் ன்னு சொன்னதால சீரியஸான கேள்வியா?

  பதில் அடுத்த இடுகையில்...

  ReplyDelete
 18. பாலா, ரூபி லாட்ஜ் பக்கத்ல வண்டில வச்சிருப்பார். மேல பெருமாள் மேஸ்திரி வீதி என்று நினைவு...

  ReplyDelete
 19. நன்றி ஸ்ரீ,

  கார்த்திக், சொன்னேன்லயா... பார்வைகள்...

  ReplyDelete
 20. நன்றி அபுஅஃப்ஸர்,

  வளைகுடா நாட்டில் தான் வேலை... ம்ம்ம்... ஃபுட் கன்ட்ரோல் தான்.

  ReplyDelete
 21. நன்றி தமிழன்,
  அந்த இட்லிக்காரம்மாவும் இப்ப கைல காசில்லாம இருக்கிறதா தகவல், அவருடைய மகன் பற்றி ஒரு தொடர் பதிவே எழுதலாம்... பைத்தியமாகிப்போன தீவிர இலக்கிய வாசகன்.

  கடைகளுக்கான அடையாளப்பெயரில் பன்றிக்காய்சல் வர வாய்ப்பில்லை... இங்கிருந்த கடைகாரருக்குத்தான் பன்றிக்காய்சல் இருந்ததாம்.. என்று சொல்லப்படலாம்...

  ReplyDelete
 22. பழைய நினைவுகளை கிளரிப்போட்ட அருமையான பதிவு!

  ஒருநாளைக்கு(ஒருவேளை மட்டும்) இரவு பத்து இட்லி மட்டும் சாப்பிட்டு மூணு மாதம் இருந்தேன்!

  ReplyDelete
 23. நன்றி Maximum India சார்..

  (உங்களை அழைப்பது எப்படி?)

  ReplyDelete
 24. இட்டிலிக்கடை இட்டிலியின் சுவை நம் வீட்டு இட்லியில் இல்லை!!

  ReplyDelete
 25. நன்றி வால்,

  எனக்கும் இன்னும் ஆழமா பழைய நினைவுகள் நிறைய இருக்கு, வால். அவ்வப்போது அவை ஒன்று சேரும் போது மௌனத்தினூடாய் உருப்பெருகிறது.

  ReplyDelete
 26. //Blogger தேவன் மாயம் said...

  இட்டிலிக்கடை இட்டிலியின் சுவை நம் வீட்டு இட்லியில் இல்லை!!//

  ஆமாம் டாக்டர்..

  ReplyDelete
 27. சென்னையில் காசில்லாமல் சுற்றிய காலங்களில் இவர்களினால் உடல் உயிர்பெற்றது... இதில் கொடுமை என்னவென்றால் நான் தினம்தொறும் உணவறுந்த செல்லும் ஒரு இட்லிஅக்கா கடையல் காக்கி உடுப்பில் உள்ள ஒரு அட்டைப்பூச்சி முக்கு மட்ட தின்றுவிட்டு பார்சலூம் வாக்கி கொண்டு தினமும் நடையைக்கட்டும்...

  தாங்கள் சொல்லியது போல் "வியர்வையில் விலையறிந்தவர்கள்" ளிடமாவது இதுபோல் அட்டைப்பூச்சிகள் உறியாமல் இருக்க பிராத்திக்ன்றேன்...

  ReplyDelete
 28. // பீர் | Peer said...
  நன்றி Maximum India சார்..
  (உங்களை அழைப்பது எப்படி?)
  //
  அகண்ட பாரதம் ???

  ReplyDelete
 29. அஞ்சு நிமிஷம் அப்பிடியே மதுர கண்ணுக்கு முன்னாடி வந்துட்டு போயிடுச்சு................

  ReplyDelete
 30. //மணிகளில் ஆயிரங்கள் பார்க்கும் தீபாவளி திடீர் கடைகளையும், பாலியல் தொழிலாளர்களையும் விளிம்புநிலை வியாபாரிகள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. நான் இவர்களை வீம்புநிலை வியாபாரிகள் எனச் சொல்லுவேன்.//

  மிகவும் சரியான கருத்து, முழுதும் நான் உடன்படுகிறேன். நடையும் விவரித்தலும் மிக அற்புதம்....

  பிரபாகர்.

  ReplyDelete
 31. ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க...
  நம்மல்ல எத்தனை பேரு அப்படி சுவையா சாப்பிட்டுட்டு அவங்கள வாய்விட்டு பாராட்டியிருக்கோம்? திருச்சி மெயின்காட் கேட் பஸ் ஸ்டாண்ட் ல கம்மங்கூல், கேப்பகூழ் ரொம்ப பிரபலம்... நல்ல பசியோட ஒரு முறை கம்மங்கூல் குடிச்சிட்டு அவர மனசு விட்டு பாராட்டினதுனால ரொம்ப நெகிழ்ந்து போய்ட்டார். என்னோட தொலைபேசி என்ன கேட்டுக்கிட்டு ரெண்டொரு தினங்களுக்கு அப்புறம் அவரே எனக்கு போன் செய்தார்.. எங்களது தொடர்பு நான் குவைத் வந்தப்புறம் கூட தொடர்ந்துகிட்டு இருக்கு.

  ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.