Oct 30, 2009

முல்லைப் பெரியாறு - பொதுப்பார்வை

மஹாராஷ்ட்ரா மற்றும் குஜராத்திற்கு இடையே தொடங்கி இந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது மேற்கு தொடர்ச்சி மலை. மேற்கிலிருந்து வரும் அரபிக்கடலின் குளிர் காற்றை தடுத்து, அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் மழை பொழியச்செய்து பல ஆறுகளை ரிப்பன் வெட்டாமல் தொடங்கி வைக்கும் பெருமை மேற்கு தொடர்ச்சி மலையையே சாரும். தனக்கு மேற்கே இருக்கும் பகுதிகளை தண்ணீர் பற்றாக்குறை இன்றி செழிப்பாக்கியும், கிழக்கே இருக்கும் பகுதிகளை தக்காண பீட பூமியாக்கி வறட்சியில் வைத்திருப்பதும் இம்மலைத்தொடரே என்றும் சொல்லலாம். மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் கலக்கும் பெரியாறு,
  • கேரளாவில் 244 கீ.மீ நீளமுள்ள மிகப்பெரிய வற்றாத ஆறாகவும்,
  • கேரள மின் தேவையை அதிக பட்சம் பூர்த்தி செய்வதாகவும், 
  • கேரளத்தின் பெரிய நகரங்களுக்கான பாசன மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாகவும் இருக்கிறது. 
  • கேரளத்தின் மிகப்பெரிய இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளதும் பெரியாற்றின் குறுக்கேயே.
  • இதனாலேயே பெரியாறு கேரளத்தின் உயிர்நாடி ஆறு என்று சொல்லப்படுகிறது.
பெரியாறு உற்பத்தியாகும் இடத்திற்கும் இடுக்கி அணைக்கும் இடையே தேக்கடியில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை - கழுகு பார்வையில் வரலாறு
வற்றாத உயிர் ஆறான பெரியாற்றின் தண்ணீர் வீணாக அரபிக்கடலில் கலப்பதை தடுக்க இடையில் ஒரு அணை கட்டவேண்டும் என்று திருவாங்கூர் மன்னரிடம் 1862 ல் பிரிட்டிஷ் பிரதிநிதியான மதராஸ் ஆளுனர் கோரிக்கையை முன்வைக்கிறார். ஆங்கிலேயரின் கோரிக்கையை மறுக்க முடியாமல் காலந்தாழ்த்தி வந்த திருவாங்கூர் மன்னருக்கு ஆங்கிலேயரால் நெருக்கடி தரப்படவே 1886 அக்டோபர் 21 ல் அணை கட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். ஒப்பந்தத்தின் சாரம்,

ஒப்பந்த தேதியில் இருந்து 999 ஆண்டுகள் வரை ஒப்பந்தம் செல்லுபடியாகும். அணையில் தேக்கப்படும் நீரில் 104 அடிக்கு மேலுள்ள நீர் சுரங்க வழியின் மூலம் மதராஸ் கொண்டு வர வேண்டும். அணை கட்டப்படுவதால் மூழ்கடிக்கப்படும் 8000 ஏக்கர் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 5 வீதம் 40,000 ரூபாய் வருட வாடகையாக சென்னை அரசாங்கம், திருவாங்கூர் மன்னருக்கு கொடுக்கவேண்டும். அதாவது அணை அமைந்திருப்பது கேரளாவில் என்றாலும் (999 வருட வாடகை ஒப்பந்த அடிப்படையில்) தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

60 ஆண்டுகள் இதே ஒப்பந்தம் நடந்து கொண்டிருக்கையில் தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சரி செய்ய, பெரியாறு தமிழகத்தில் நுழையும் இடத்தில் ஒரு மின உற்பத்தி நிலையம் கட்டுவதற்காக 1970 ல் பழைய ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அணை கட்டப்பட்டதால் அந்தப்பகுதியில் மூழ்கடிக்கப்பட்ட நிலத்திற்கு ஏக்கருக்கு ரூபாய் 30 வீதம் 8000 ஏக்கருக்கு 2,40,000 ரூபாய் வருட வாடகையாக தமிழக அரசு, கேரள அரசிற்கு கொடுக்க வேண்டும். மட்டுமின்றி அந்தப்பகுதி மீன் படி உரிமையும் கேரள அரசிடம் செல்கிறது.

இந்நிலையில் 1979 ல் மலையாள மனோரமா என்ற கேரள இதழ், 'முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயத்தில்' இருப்பதாக பரபரப்பு செய்தியை வெளியிடுகிறது. அதைத்தொடர்ந்து கேரள அரசு மற்றும் மத்திய நீர் வளத்துறையின் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு அணையை மேலும் வலுப்படுத்த முன்வருகிறது. அதுவரை தேக்கப்பட்டுக்கொண்டிருந்த நீர் 154 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்படுகிறது. அணையில் மராமத்து வேலைகள் செய்யப்பட்டு வலுப்படுத்தப்பட்ட பிறகு நீர் மட்டத்தை உயர்த்த கேரள அரசு மறுத்துவிட்டது, இன்று வரை மறுத்து வருகிறது.

என்ன பிரச்சனை?
 
அணையில் இருந்து வரும் நீர் முல்லை ஆறு வழியாக தேனி மாவட்டத்தின் முக்கிய நகரங்களுக்கு பாசன மற்றும் குடிநீர் தேவைகளை நிறைவு செய்து வைகை ஆற்றில் கலக்கிறது. அதுவே வைகை அணையின் நீர் ஆதாரமாகவும் இருக்கிறது. அதனாலேயே மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் பாசன மற்றும் மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவையும் நிறைவடைகிறது. இவற்றிக்கு தமிழ்நாட்டிற்கு குறைந்தபட்ச தேவை 84 மில்லியன் கனமீட்டர் தண்ணீர். இந்த குறைந்தபட்ச தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டுமாயின், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட வேண்டும். தற்போது இருக்கும் 136 அடியில் போதுமான தண்ணீர் கிடைக்காமல் மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல ஏக்கர் நிலம் தரிசாகிக் கிடக்கிறது. பல விவசாயக் குடும்பங்களின் தற்கொலைக்கும் பட்டினிச் சாவுக்கும் தண்ணீர் பற்றாக்குறையே காரணம்.

அணையின் நீர் மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டதால், நீரின் கொள்ளளவு 10.4 ல் இருந்து 6.4 டி.எம்.சி யாக குறைந்துள்ளது. அதனால் 140 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் கணிசமான அளவு மின் உற்பத்தி குறைந்துள்ளதும் தமிழக அரசிற்கு நஷ்டமே. அது மட்டுமின்றி, அணையிலிருந்து வழிந்தோடும் தண்ணீர் மூலம் அடுத்த அணையான இடுக்கியில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்திற்கே விற்கப்படுவது கொடுமை. நமக்கு தரவேண்டிய தண்ணீரைக் கொண்டு மின்சாரம் தயாரித்து அதை நமக்கே மீண்டும் விற்பனை செய்கிறார்கள்.

152 அடியாக இருந்த போது மூழ்கியதாக சொல்லப்பட்ட 8000 ஏக்கர் நிலம், தற்போது 136 அடியாக நீர் மட்டம் குறைக்கப்பட்டதால் மூழ்கிய நிலத்தில் பகுதி மீட்கப்பட்டுவிட்டது. மீதி நிலத்தை கேரள அரசும் கேரள மக்களும் பயன்படுத்திவருகின்றனர். ஆனாலும் தமிழக அரசு 8000 ஏக்கர் நலத்திற்கான வாடகையை செலுத்திவருகிறது. அணையின் நீர் மட்டம் உயர்த்தப்பட்டால் அந்த ஆக்கிரமிப்பு நிலங்களை காலிசெய்ய வேண்டிவரும் என்ற அச்சமும் உள் அரசியலும் இப்பிரச்சனையில் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

நீதிமன்ற வழக்கு

152 அடிக்கு நீர் தேக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்திலும், 136 மேல் உயர்த்தக்கூடாது என்று கேரள அரசு கேரள உயர் நீதி மன்றத்திலும் வழக்குத்தொடங்கியது. அவ்வழக்கு உச்சநீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு 2006 பிப்ரவரியில் இருமாநிலத்திற்கும் பொதுவாக 142 அடியாக நீர்மட்டத்தை வைத்துக்கொள்ள ஆணை பிறப்பிக்கப்படுகிறது. உச்சநீதி மன்றத்தின் ஆணையை சற்றும் மதிக்காத கேரள அரசு 136 அடியிலிருந்து நீர் மட்டத்தை உயர்த்தாததோடு மட்டுமின்றி, அணை அபாயகட்டத்தில் இருப்பதாகச்சொல்லி புதிய அணை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. பெரியாற்றில் புதிய அணை கட்டப்பட்டுவிட்டால் மேலே குறிப்பிட்டுள்ள தமிழக மாவட்டங்கள் குடிக்கவும் தண்ணீர் இன்றி பஞ்சத்தால் பாலைவனமாகிவிடும்.

அணை உடையும் அபாயமில்லை என்று தமிழக அரசும், அணை அபாய கட்டத்தில் இருப்பதாக கேரள அரசின் சார்பாக ஐஐடியின் அறிக்கையும் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்தவாரம் கேரள அரசு வெளியிட்ட ஒரு அறிக்கை, ‘முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் 40 லட்சம் பிணங்களை அரபிக் கடலில் தேடவேண்டியிருக்கும்’ என்று சொல்கிறது. முல்லை பெரியாறு அணையின் தண்ணீர் முழுவதையும் இடுக்கி அணையாலும் தாங்க முடியாது என்கிறது கேரள அரசு. இதற்கிடையே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள மத்தியஅரசின் ஒப்புதலும் கேரள அரசிற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • பெரியாறு அணையின் கடைசி தண்ணீர் குடிக்கப்படும் இராமநாதபுரம் கடலோர பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்கள் டன் கணக்கில் கேளராவுக்கு சென்று ஏற்றுமதியாகிறது.
  • ஒட்டஞ்சத்திரத்தில் இருந்து காய்கனிகள் கேரளாவிற்கு செல்கிறது. (இவ்வளவு நீர் வளம் இருந்தும் கேரளாவில் விவசாயம் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை என்பதை நினைவில் கொள்க)
  • வீடு கட்ட மணலும் கூலித்தொழிலாளர்களும் தமிழ்நாட்டிலிருந்தே செல்வதும் கவனத்தில் ஏற்கவேண்டும்.
  • அட இவ்வளவு ஏன்..  நல்ல கல்விக்கு கேரளமக்கள் தமிழ்நாட்டையே நம்பி இருக்கிறார்கள்.
இத்தகைய வாழ்வுசார் உதவிகள் தமிழ்நாட்டிலிருந்து கிடைப்பதற்கு கைமாறாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் நன்றியாக எண்ணி தமிழக தென் மாவட்டங்களின் தண்ணீர் தேவையை ஒரளவுக்கேனும் தீர்த்து வைக்க முன்வர வேண்டும்.

தமிழக அரசிற்கு: கேரள அரசு பிரதானமாக முன்வைக்கும், 'அதிக அளவு நீர் தேக்கம் அல்லது சிறிய (4 ரிக்டர் அளவு) நில நடுக்கத்தால் அணை உடைவதால் ஏற்படுவதாக கணிக்கும் உயிர் சேதத்தையும்' கவனத்தில் கொண்டு பேச்சு வார்த்தை செய்வதாலேயே ஏதாவது சாதகமான நிலை ஏற்படலாம். இயற்கை சீற்றத்தால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழுமாயின் இழப்பது லட்ச கணக்கான உயிர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அணையின் உண்மை நிலையை உள்ளது உள்ளபடி சொல்வதாலோ அல்லது இரு மாநிலங்களுக்கும் நடுவாக ஏதாவது வெளிநாட்டு அமைப்பைக்கொண்டு அணையை ஆய்வு செய்யச் சொல்வதாலோ கேரளாவோடு கை கோர்க்கலாம். குறைந்தபட்சம் 136 அடியிலேயே நீர்மட்டம் இருக்கச்செய்யலாம். எப்படியாவது புதிய அணை கட்டாது நிலைமையை சரிசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சி அரசியல் பாராது திராவிட கட்சிகளும், கம்யூனிஸ்டுகள் மற்றும் சரத்குமார்களும் இணைந்து செயல்பட்டு தென் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனையை தீர்த்துவைக்க வேண்டும். இது நடக்குமா?...

22 comments:

  1. யோவ் என்னங்கையா.,

    திண்டுக்கல், தேனி, மருதைன்னு நாலு மாவட்ட பிரச்சனை.. பிரச்சனை. சரி பண்ணுங்கன்னே பேசுறீங்க.

    இத வச்சுத்தான் ரெண்டு மாநிலத்துலையும், டில்லீலையும் அரசிலயலே நடந்துக்கிட்டு இருக்கு.

    நாலு மாவட்டம் மட்டும் நல்லா இருந்தா போதுமா?, அப்ப மத்தவீங்க(அரசியல்வாதி) எல்லாம், நாக்கு செரைக்க போறதா?

    ReplyDelete
  2. போராட்டம், ஒத்திவைப்பு, வாபஸ்... சொரணையற்றவர்கள். மக்களை நினக்காமால் மக்களை நினைந்து மாக்களாய் வாழும் இந்த பாழும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை.... கஷ்டமாயிருக்கிறது நண்பா!

    நல்ல இடுகை. உரைத்தால் சரி.

    பிரபாகர்.

    ReplyDelete
  3. இன்னும் எத்தனை பேர் இதை பதி எழுதுநாலும், உண்ணாவிரதம் இருந்தாலும் நம்ம செத்தே மடிந்தாலும் குடிக்க தண்ணி தர மாத்தானுங்க .......... ஏனெனில் நாமாலம் தமிழர்கள்..........

    ReplyDelete
  4. முரு, பிரபாகர்,
    சரியா கேட்டீங்க.. வாழ்வாதார பிரச்சனை என்று நினைத்திருந்தால் இந்தப்பரிச்சனை எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கலாம். அரசியல்வாதிகளுக்கு லாப நட்டம் என்பதை காட்டிலும் (பெரிதாக லாப நட்டம் இல்லை என்பதாலேயே) அக்கறை இல்லை என்று சொல்லலாமா?

    ReplyDelete
  5. ஊடகன், நம்முடைய இந்த நிலைக்கு என்ன காரணம்னு யோசனை பண்ணியிருக்கீங்களா? நம்ம மத்திய அமைச்சர்கள் அங்க போயி சரளமா பேச முடியுதா?

    ReplyDelete
  6. அரசியல்வா(வி)யாதிகளின் சித்து விளையாட்டில் இதுவும் ஒரு அங்கம். தமிழர்கள் நம்மிடம் ஒற்றுமை இல்லை. அண்டை மாநிலங்களில், பொதுப் பிரச்சனைக்கு ஒன்று சேருவது மாதிரி, தமிழ் நாட்டில் சேருவதில்லை. அப்புறம் எங்க இருந்து உருப்புடுவது.

    ReplyDelete
  7. முல்லை பெரியாறு அணையின் முழு வரலாறு அரிய தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  8. இராகவன் அண்ணே, சுயநல திராவிட கட்சிகள் மட்டுமின்றி பொதுவுடைமை பேசும் கம்யூனிஸ்டுகளும் இந்த விஷயத்தில் நமக்கு ஆதரவாக இல்லை. பொலீட் பீரோவில் கேரளாவிற்கு ஆதரவாகத்தான் பேசியிருக்கிறார்கள். அட.. இவ்வளவு ஏன் அருணாச்சலபிரதேச பிரச்சனையில் பட்டும் படாமல்தான் கருத்து சொல்கிறார்கள். என்ன செய்வது அவர்களும் அரசியலின் வியாதிகள் தானே.

    ReplyDelete
  9. வாங்க வால், 1798 ல் இராமநாதபுரம் மன்னர் சேதுபதியால் முன்வைக்கப்பட்ட திட்டம் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே அணை கட்டுவது. போதிய நிதி வசதி இல்லாததால் தொடக்கத்திலேயே பணி தடைபட்டதாக வரலாறு சொல்கிறது. எப்படியாயினும் அணை நமக்குச் சொந்தமானது. இப்போது தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை விட அணையின் கட்டுப்பாட்டு உரிமைதான் முக்கிய அரசியலாகவும் இருக்கிறது. மட்டுமின்றி புதிய அணை கட்டுவதால் அவர்களுக்கு பெரிய லாபம் ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. ஆனால் ஈடு செய்ய முடியாத இழப்பு நமக்கு.

    ReplyDelete
  10. அற்புத‌மான‌ இடுகை பீர் அண்ணே.செய்திக‌ளை சேக‌ரித்து தொகுத்திருக்கிறீர்க‌ள்.

    முல்லை பெரியாறு பிர‌ச்ச‌னை குறித்து அர‌ச‌ல் புர‌ச‌லாக‌த்தான் த‌க‌வ‌ல் தெரியும் ( ந‌ம் செல்வி ஜெய‌ல‌லிதா
    முல்லை பெரியாறு பிர‌ச்ச‌னையையும் சீனா பிர‌ம்ம‌புத்திரா ஆற்றின் குறுக்கே அணை க‌ட்டுத‌லையும் ஒப்பிட்ட‌
    செய்தியையும் சேர்த்து )

    உங்க‌ளின் இந்த‌ த‌க‌வ‌ல் ப‌ய‌ன‌ளிக்கும்.ஃபேவ‌ரைட்ஸில் இணைத்து கொண்டேன்.ந‌ன்றி !!!!

    ReplyDelete
  11. அது ஒன்னும் இல்லை பீர், நம்ம அரசியல் கட்சிகளுக்கு பேரறிஞர் அண்ணா தான் பிடிக்கும், பெரியார் அப்படினாலே அலர்ஜி தான்.....என்னங்க மொக்கை தாங்கலையா..

    இந்த பிரச்சினை பத்தி புரியாத பல விஷயம் நுண்ணியமாக விளக்கியுள்ளீர்கள், மிக்க நன்றி.

    ReplyDelete
  12. செய்யது, முல்லைப் பெரியாறு அணை பற்றி, மதுரை சோகோ ட்ரஸ்டிற்காக சகோதரர் அப்பாஸ் எழுதிய புத்தகம் உச்ச நீதி மன்ற தீர்ப்பை இன்னும் விரிவாக சொல்கிறது.
    முடிந்தவரை நமக்கு தேவையான தகவல்களை பல தளங்களில் இருந்து தொகுத்துள்ளேன்.

    இனி நடக்க இருப்பதை / என்ன நடக்க வேண்டும் என்பதை அலச வேண்டும்.

    ReplyDelete
  13. சாம், உண்மைய சொல்லணும்னா நீங்க ட்விட்டர்ல முல்லைப் பெரியாறு பற்றி கருத்து கேட்டதுதான் இந்த இடுகை எழுத காரணம். நன்றி.

    ReplyDelete
  14. பல விஷமமான விஷயங்கள் இருக்கு போல்..ம்ம்..நல்லது நடக்கணும் ..

    ReplyDelete
  15. நல்ல தகவல்கள், அறியாத செய்திகளை அறிந்துகொண்டேன்.. தற்போதைக்கு தேவையான பதிவு பீர் இது...

    ReplyDelete
  16. குட்டக் குட்டக் குனிந்து கொடுத்துக் கொண்டு தலையில் மிளகாய் அரைக்க இடம் கொடுக்கும் விதத்தில் தமிழகம் இருக்கும்போது கேரளத்துக்கு அறிவுரை கூறுவதில்/ பலன் எதிர்பார்ப்பதில் பிரயோஜனமில்லை.

    ReplyDelete
  17. ///ஊடகன் said...
    இன்னும் எத்தனை பேர் இதை பதி எழுதுநாலும், உண்ணாவிரதம் இருந்தாலும் நம்ம செத்தே மடிந்தாலும் குடிக்க தண்ணி தர மாத்தானுங்க .......... ஏனெனில் நாமாலம் தமிழர்கள்..........//

    ReplyDelete
  18. ஞான பித்தன், :)

    வசந்த், இதுல வெளிய சொல்ல முடியாத பல உள் அரசியல் இருக்கு. ம்.. நல்லது நடக்கணும்,இல்லைன்னா நமக்கெல்லாம் குடிக்க தண்ணி கிடைக்காது.

    மலிக்கா, எனக்கு தெரிந்தவற்றை தொகுத்திருக்கிறேன்.

    ஹூசைனம்மா, தேவை நமக்கு. எப்டியாவது தடைபடாம தண்ணி கிடைச்சா சரி. அதுக்காக குட்டு வாங்கினாலும் பாதகமில்லை.

    TVR சார், என்ன பண்றது இயற்கையிலேயே அந்தமாதிரி இடத்தில தமிழ்நாடு அமைஞ்சிருக்கு. இன்னும் நாம குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓட்டக்கூடாது.

    ReplyDelete
  19. //எப்டியாவது தடைபடாம தண்ணி கிடைச்சா சரி. அதுக்காக குட்டு வாங்கினாலும் பாதகமில்லை.//

    எங்க கிடைக்குது? எல்லாத்தையும் கொடுத்துட்டு, அவங்களோட தொழிற்சாலைக் கழிவுகளையும் கொட்டறதுக்கு இடம் கொடுத்துட்டு, குட்டும் வாங்கிகிட்டு....இப்படி இ.வா. ஆகத்தான் இருக்கோமே, தவிர தண்ணி வர்ற வழியக் காணோம்.

    ReplyDelete
  20. மிக அழகாக பிரச்சனையை அலசியுள்ளீர்கள். நான் பார்த்தவரையில், கேரள அரசியல்வாதிகளின் மற்றும் ஊடகங்களின் பொய்ப் பிராச்சாரத்தினால், அணை உடைந்து விடும் என்று பெரும்பான்யான கேரள மக்கள் நம்புகிறார்கள்.. அவர்களை பொறுத்தவரை புதிய அணைதான் ஓரே தீர்வு.. தண்ணீர் கொடுப்பதில் அவர்களூக்கு எந்தப் பிர்ச்சினையும் இல்லை..
    இந்திய அரசை நிர்பந்தப்படுத்தி ஒரு neutral international agency மூலம் அணையின் உறுதியை ஆய்வு செய்யலாம்.
    முடிவு தமிழகத்திற்கு சாத்கமாக இல்லாதப் பட்சத்தில், இப்பொழுது உள்ள ஒப்பந்தப்படியே கேரள அரசு நடக்க சம்மதிக்குமானால் (999 வருட ஒப்பந்தம், கூடுதல் தண்ணீர்) தமிழக அரசே முன்வந்து புதிய அணை கட்டித்தந்தால் என்ன??

    ReplyDelete
  21. ஹூசைனம்மா, நமக்கு இப்பவும் தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் போதுமானதாக இல்லை.

    152 அடியில் 10.4 டி.எம்.சி தேக்கப்படும் போது நிரம்பிஓடிய நீர் சற்றே போதுமானதாக இருந்தது. 132 அடியில் இப்போது தேக்கப்படும் 6.4 டி.எம்.சி யில் வழிந்து வரும் தண்ணீர் போதவில்லை.

    கேரளாவிற்கு எப்போதுமே தண்ணீர் தருவதில் பிரச்சனை இருந்ததாக தெரியவில்லை. அவர்களுடைய பிரச்சனை அணையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மற்றும் மின்சாரம். புதிய அணை கட்டும் பட்சத்தில் தண்ணீருக்கு மட்டுமல்லாது மின்சாரத்திற்கும் திண்டாட்டமாகிவிடும்.

    ReplyDelete
  22. பரத், அணை பாதுகாப்பு பற்றிய பிரச்சாரம் உண்மையா பொய்யா என்பது நடுநிலையில் எடுக்கப்படும் ஆய்வின் மூலமே நம்பத்தகுந்ததாக இருக்கும். துரதிஷ்டவசமாக இரு மாநில அரசுகளும் (மக்களுக்கு நல்லது செய்வதாக எண்ணிக்கொண்டு) நடுநிலையோடு நடப்பதில்லை.

    புதிய அணை கட்டுவதற்கான ஒப்பந்தத்தில் நமக்கான தண்ணீருக்கும் மின்சாரத்திற்கும் பாதிப்பு இல்லாத பட்சத்தில் அதையே ஆமோதிக்கலாம். ஆனால், அது சாத்தியம் இல்லை.

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.