Apr 27, 2009

பதிலூட்டமே தனிப்பதிவாக - ஜெய்ஹிந்துபுரம் நினைவுகள் 01

நயன்தாராவும் ஞானும் இன்னபிறவும் பகுதி II பதிவில் பின்னூட்டமிட்ட நண்பர் விஸ்வநாதன் விட்டுச்சென்ற எங்கள் பழைய ஜெய்ஹிந்துபுரம் பற்றிய உள்ளக்கிளக்கல்தான் இந்தப்பதிவு. சரியாக சொன்னால் இது அவருக்கெழுதிய பதிலூட்டம், நினைவுகளை மட்டுப்படுத்த முடியாமல் நீளம் மிகுதியானதால், பதிலூட்டத்தை பதிவாக இடும்படியாயிற்று.

அது 80 களின் தொடக்கமாயிருக்கலாம், அப்போது நாங்கள் இருந்தது ஜீவாநகர் முதல் தெரு, கடைசியில். எனது ஆரம்பக்கல்வியை பாரதியார் ரோட்டில் இருக்கும் (இப்போதும் இருக்கிறதா?) கிரேஸ் ஆங்கிலப்பள்ளியில் பயின்றேன். என் வீட்டிலிருந்து பாரதியார் ரோட்டிலிருக்கும் பாடசாலை குறைந்தது 2 கி.மீட்டராவதிருக்கலாம். ஆயா தான் எங்களை வீட்டிலிருந்து அழைத்துச்செல்வதும், திரும்ப வந்துவிடுவதும் (பிள்ளை பிடிப்பவனிடமிருந்து பாதுகாக்க). என் வீடுதான் பாடசாலையிலிருந்து தூரமென்பதால், ஆயா முதலில் என் வீட்டிற்கு வந்துவிடும். ஆயாவுக்கு அதிகப்படியான நாட்களில் காலை உணவு எங்கள் வீட்டில்தான். அம்மா எவ்வளவு தான் வற்புருத்தி, சூடாக (இட்லி தோசை பொங்கல் அல்லது சோறு) எது கொடுத்தாலும் வாங்க மறுத்துவிட்டு, 'மாமி, பழைய கஞ்சியும், உப்பு ஊறுகாயும் மட்டும் குடு, அதுபோதும் நீ சீக்கரம் ராசாவ கெளப்பிவுடு ஆத்தா' என்று சொல்லும்.

நான் தயாராகி கிளம்பிவிட்டால், என் கையை பிடித்தவாறே ஆயா நடையை துவக்கும். வழியில் புலிப்பாண்டியன் தெரு, ராமையா குறுக்கு வீதி, வீரகாளியம்மன் கோயில் தெருக்களில் இரண்டு மூன்று பையன்களையும் அழைத்துக்கொண்டு நடை தொடர்ந்துகொண்டேயிருக்கும். இரண்டிரண்டு பேராக கைகோர்த்து நடக்கவேண்டும். கடைசியாக, நேதாஜி தெருவிலிருந்து ரோஸியும் எங்களோடு சேர்ந்தவுடன், எனது கையை விடுவித்து ரோஸியின் கையை பிடித்துக்கொள்ள சொல்லும். எங்கள் அனைவருடைய மதிய உணவு கூடையையும் ஆயாதான் சுமந்துவரும்.

காலம் சென்ற என் தந்தையிடம் அப்போது ஒரு லூனா மொபட் இருந்தது. எப்போதாவது ஆயா வராவிட்டாலோ அல்லது எனக்கு வகுப்பில் தாமதமானாலோ, அப்பா தான் பள்ளியில் விடுவதும் அழைத்துவருவதும். அப்பாவுடன் லூனாவில் பயணிப்பது எனக்கு விருப்பமாயிருந்தது. வழியிலிருக்கும் வெண்மணி சைவ உணவகத்தில் பொங்கல் வடையோ அல்லது பாண்டியன் ஸ்டோரில் சாக்லேட்டோ கிடைக்குமென்பது காரணம்.

மிக அரிதாக ஆயாவும் வராமல், அப்பாவுக்கும் வேலையிருந்து விட்டால், தனியாளாக தல மாதிரி நடக்கவேண்டியதுதான். அப்போதெல்லாம் அம்மா சொன்ன, 'வாப்பா... வழில யார் கூப்டாலும் போவகூடாது... சாக்லேட் குடுத்து, அம்மா கூப்டுராங்கனு கூப்டுவாங்ஞ.. போயிடாத, வீடுவிட்டா பள்ளியோடம், பள்ளியோடம் விட்டா வீடுன்னு வந்துடனும்...சரியாப்பா...' என்பதை நினைவில் நிறுத்திக்கொள்வேன். தனியாகச்சென்றால், தேவர்நகரிலிருந்து பாரதியார் ரோடு வரை குறுக்காக நீண்டிருக்கும் பாதையை பயன்படுத்துவதுதான் வழக்கமாயிருந்தது, ராமையா வீதி சந்திக்கும் இடத்திலிருக்கும் நாடார்கடையில் கமர்கட் வாங்கிக்கடிப்பதும்.

அப்படி தனியே வந்துகொண்டிருந்த ஒருநாள்,

ராமையா வீதி சந்திப்பருகே வருகையில், எப்போதும் அங்கிங்குமாய் அலைந்துகொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தை காணவில்லை. தொலைவிலிருந்தே நோட்டமிட்டேன், நாடார் கடை பூட்டிக்கிடந்தது. "ச்சே..." . இருட்ட துவங்கிவிட்டிருந்தது. நாலைந்து அடி வைத்திருப்பேன், காலில் ஏதோ மாட்டு சாணம் போல... மிதித்துவிட்டேன். 'அடச்சே...என்னடா... இது' கடுப்பாகிவிட்டது. அருகில் கிடந்த மரக்கட்டையோ, டயரோ தெரியவில்லை, வாட்டர் கேனால் ஒரு அடி. கோபம் குறைந்தது போல ஓர் உணர்வு. பாருங்கள், நமக்கு நம் மீதோ அல்லது வேறு எதன் மீதோ உள்ள வெறுப்பை, மற்றொன்றின் மீது நமது அதிகாரத்தை செலுத்துவதன் மூலம் குறைத்துக்கொள்கிறோம் அல்லது குறைந்ததாய் எண்ணிக்கொள்கிறோம்.

வீட்டிற்கு வந்தவுடன் அம்மா, 'வாப்பா... வா.... கையால் கழுவிட்டு சாப்டலாம் வா...., டேய்.... ஷூல்ல என்னடா செவப்பு, என்னத்த மிதிச்சுட்டு வந்த? இங்கிட்டு வா... தேச்சு கழுவி விட்றேன்.'

'அம்மா... அந்த நாடார்கட பக்கத்ல வரும்போது... என்னத்தையோ மிதிச்சிட்டேம்மா....'

'அடப்பாவி மவனே... அங்கிட்டு தானடா தவக்காள பாண்டிய வெட்டி போட்ருக்கதா... சீதாக்கா சொல்லுச்சு...அவென் பொணத்தயாடா மிதிச்சிட்டு வந்து நிக்கிற?'

'அம்மா...அதில்லம்மா...'

'நீ சும்மா...கெட எனக்கு தெரியும், வா... தலக்கி குளிக்க ஊத்தி... மந்திரிச்சு விட்றேன்... அப்பரமா போய் தூங்கு'

மறுநாள் அம்மா வெளியில் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டு எழும்புகிறேன்,

'ஆத்தா... எம்மவே... நேத்து தவக்கள பாண்டி பொணத்த மிதிச்டு வந்துட்டான் ... காச்ச நெருப்பா.... கொதிக்குது'

'மாமி... வேப்பல மாரியாத்தட்ட போயி... மந்திரிச்சிட்டு வா... எல்லாம் சரியாபோயிடும்.'

('அடப்பாவிகளா.... பச்சபுள்ளய நைட்டு தலக்கி குளிக்க ஊத்திட்டு...சாப்பாடு குடுக்காம தூங்கப்போட்டா.... காய்சல் வராம வேற என்னடா வரும்.')

******************************************************************

பழைய ஜெய்ஹிந்துபுரம் இப்படித்தான் இருந்தது. எதற்கெடுத்தாலும் வெட்டு... குத்து... சர்வ சாதாரணமாக நடக்கும். அப்பொழுதெல்லாம், ரிக் ஷா ஆட்டோ காரர்கள் ஜெய்ஹிந்துபுரமென்றால் சவாரி வர மாட்டார்களாம்

Chill: நாங்களெல்லாம் வெளிநாடு சென்றவுடன்தான் ஜெய்ஹிந்துபுரம் அமைதியாக இருப்பதாக அங்கு பெட்டிக்கடை வைத்திருக்கும் பெரியவர் சொன்னதாக தகவல்.

******************************************************************

நினைவுகள் நீளும்…

அடுத்த பதிவில்...ஜெயிலுக்கு போறேன்... ஜெயிலுக்கு போறேன்... ஜெயிலுக்கு போறேன்... அட...நெசந்தாங்க...

அன்பார்ந்த வாக்காள பெருங்குடிமக்களே.. ஒங்க பொன்னான வாக்குகள்ல ஒண்ண எனக்கும் க்ளிக்குங்க......

17 comments:

 1. ஏப்பா...உங்க வீடு முருகன் தியேட்டர் பக்கத்துலயும் அரவிந்த் தியேட்டர் பக்கத்துலயும் இல்லயா..?
  எனக்கு தெரிஞ்சதெல்லாம் ஜெய்ஹிந்துபுரத்துல அந்த ரெண்டு தியேட்டரு மட்டும்தான்..!

  ReplyDelete
 2. அண்ணே நானும் உங்க ஏரியா தான்!

  ஜீவா நகர் மூணு போஸ்ட் பக்கத்துல முருகன் பள்ளிக்கூடம் இருக்குமே அங்க தான் படிச்சேன்!

  அப்புறம் பசுமலை ஹாஸ்டல்! தற்சமயம் ஈரோட்டில் வசிக்கிறேன்!

  உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி!

  ReplyDelete
 3. அடப்பாவி மனுஷா.. இம்புட்டு அருமையா நம்ம ஏரியா பத்தி எழுதி இருக்கியே? இன்னும் ஸ்கூல் அங்கதான்ப்ப இருக்கு.. ஆனா ஜெய்ஹிந்துபுறம் முன்ன மாதிரி இல்ல..மார்க்கெட்டு TVS நகருக்கு போய்டுச்சு.. சண்டை எல்லாம் கிடையாதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எல்லாம் இன்னும் ஞாபகம் வச்சிக்கிட்டு.. உங்களை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷம்மா இருக்கு தோழா..

  //டக்ளஸ்....... said...
  ஏப்பா...உங்க வீடு முருகன் தியேட்டர் பக்கத்துலயும் அரவிந்த் தியேட்டர் பக்கத்துலயும் இல்லயா..?
  எனக்கு தெரிஞ்சதெல்லாம் ஜெய்ஹிந்துபுரத்துல அந்த ரெண்டு தியேட்டரு மட்டும்தான்..!//

  நான் அந்த ஏரியா ஒன்னு விடாம எல்லாத்துலையும் இருந்திருக்கேன் டக்கு,..

  வால்பையன் அண்ணே.. நீங்களும் நம்ம ஊரு தானா? கேக்கவே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..

  ReplyDelete
 4. // டக்ளஸ்....... said...
  ஏப்பா...உங்க வீடு முருகன் தியேட்டர் பக்கத்துலயும் அரவிந்த் தியேட்டர் பக்கத்துலயும் இல்லயா..?//

  ஆமா டக்.. முருகன் தியேட்டர் பக்கத்ல தான் எங்க வீடு இருந்தது.

  பி.கு. நான் ஒரேயொரு முறை முருகன் தியேட்டருக்கு சென்றிருக்கிறேன், (அது,தனிப்பதிவாக வரும்) அரவிந்த் தியேட்டருக்கு இதுவரை சென்றதில்லை...

  ஆமா....நீங்க எந்த ஏரியால குப்ப கொட்டுனீங்க?

  ReplyDelete
 5. //வால்பையன் said...
  அண்ணே நானும் உங்க ஏரியா தான்!

  ஜீவா நகர் மூணு போஸ்ட் பக்கத்துல முருகன் பள்ளிக்கூடம் இருக்குமே அங்க தான் படிச்சேன்!//

  வாங்க வாலு, நம்ம பிரேமா ஸ்கூல்லயா படிச்சீங்க?
  "பின்னூட்ட பிரபலம் வால்பையன்" இங்க வந்துல...ரொம்ப..... மகிழ்ச்சி,

  நம்மல்லாம் ஒண்ணு சேர்ந்தத பார்த்து வலையுலகமே டர்ர்ர்.. ஆக போகுது...

  ReplyDelete
 6. நன்றி கார்த்திகைப் பாண்டியன்! நம்ம மீட்டிங்குக்கு ஒரு டேட் ஃபிக்ஸ் பண்ணுங்களேன்.

  மே 20 - 27 வரை...

  ReplyDelete
 7. ஊருக்கு வரீங்களா.. ரொம்ப சந்தோஷம்.. டக்கும் அப்ப ஊர்லதான் இருக்காப்புல.. கண்டிப்பா பார்க்கலாம் நண்பா

  ReplyDelete
 8. //வால்பையன் அண்ணே.. நீங்களும் நம்ம ஊரு தானா? கேக்கவே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.//

  இந்த குசும்பு தானே வேணாம்கிறது!
  தம்பி கல்யாணத்துக்கு வில்லாபுரம் வந்திங்கல்ல

  ReplyDelete
 9. அரவிந்த் தியேட்டருக்கு இதுவரை சென்றதில்லை...//

  அரவிந்த் தியேட்டர் புதுசு!
  தற்சமயம் சுப்பிரமணியபுரம் போலிஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ளது!

  ReplyDelete
 10. யப்பு வாலு, தியேட்டர் இருக்கிறது தெரியும்... தியேட்டருக்குள்ள போனதில்லன்னு சொன்னேன்.

  ReplyDelete
 11. Thank you for honouring me by way of writing an exclusive memories. Your style of writing is very nice and almost it resembles Sujata`s style (Srirangam thevathaigal). Pandian stores still exists and he is a good friend of mine. During those days, he used to sell the product cheaper than the MRP (Some people used to doubt the product's quality because of this). But his friendly marketing methods keep him still in business. Remember Ragavendra Hotel. He is also continuing his business because of the food quality.

  I am just longing for those good olden days.

  Looking forward for more on Jaihindpuram.

  Sorry for writing in english. I just do not know how to type in tamil

  p viswanathan

  ReplyDelete
 12. //நம்ம மீட்டிங்குக்கு ஒரு டேட் ஃபிக்ஸ் பண்ணுங்களேன்.

  மே 20 - 27 வரை...//

  ஆட்டையில என்னையும் சேத்துக்கங்க'ப்பா ..........

  ReplyDelete
 13. //நம்ம மீட்டிங்குக்கு ஒரு டேட் ஃபிக்ஸ் பண்ணுங்களேன்.

  மே 20 - 27 வரை...//

  ஆட்டைய்ல என்னையும் சேத்துக்கங்க'ப்பா ... ஆனா நான் 23 தேதியிலிருந்துதான் ரெடி. அதுனால தேதியை 23-27ன்னு சுருக்கிங்க'ப்பா

  ReplyDelete
 14. //தருமி said...
  ஆட்டைய்ல என்னையும் சேத்துக்கங்க'ப்பா ... ஆனா நான் 23 தேதியிலிருந்துதான் ரெடி. அதுனால தேதியை 23-27ன்னு சுருக்கிங்க'ப்பா//


  அண்ணே... ரொம்ப சந்தோஷமா இருக்கு... கண்டிப்பா கலந்து பேசுவோம்ணே...

  @கார்த்திக், @டக்ளஸ், நோட் பண்ணிக்குங்கப்பா... அப்டியே, அந்த பப்புவையும் உள்ள இழுத்து போடுங்க...

  ReplyDelete
 15. வருகைக்கு மீண்டும் நன்றி விஸ்வநாதன் ஐயா, பதிவில் குறிப்பிட்டுள்ளது போல, தங்களது பின்னூட்டம் தான் 'ஜெய்ஹிந்துபுரம் நினைவுகள்' எழுத தூண்டியது. மறக்கமுடியாத நனைவுகள் அவை, நிச்சயம் தொடரும். வாழ்த்துங்கள்... நன்றி!

  பி.கு. சுஜாதா சாரின் எழுத்துகளை நினைவுபடுத்தியதற்கு நன்றி... ஸ்ரீரங்கத்து தேவதைகளை இப்போது கூட pdf ல் வைத்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். எத்தனையாவது முறை என்று தெரியவில்லை.

  //almost it resembles Sujata`s style//
  I don’t know, I’m worth to this word. its been a month only, I’m writing here. I have to prove something for this word. Visit often and place your comments.

  Please try this link for writing in tamil. http://wk.w3tamil.com

  ReplyDelete
 16. "பாரதியார் ரோடு, ராமையா தெரு, பாண்டியன் ஸ்டோர்ஸ் ( பாண்டி கடை ), கிரேஸ் ஸ்கூல், வீரகாளியம்மன் கோயில், புலிப்பாண்டியன் தெரு, ....................."
  ................. நம்ம ஏரியா இன்னும் அப்படியே தாங்க இருக்கு ....

  நல்லா எழுதி இருக்கீங்க "Chill - Peer" , வாழ்த்துக்கள் ...

  //'அடப்பாவிகளா.... பச்சபுள்ளய நைட்டு தலக்கி குளிக்க ஊத்திட்டு...சாப்பாடு குடுக்காம தூங்கப்போட்டா.... //

  :) :) :)

  //நமக்கு நம் மீதோ அல்லது வேறு எதன் மீதோ உள்ள வெறுப்பை, மற்றொன்றின் மீது நமது அதிகாரத்தை செலுத்துவதன் மூலம் குறைத்துக்கொள்கிறோம் அல்லது குறைந்ததாய் எண்ணிக்கொள்கிறோம். //

  பழைய நினைவுகள் பதிவுலையும் , ஒரு கருத்தா !!!!,,,,, அருமை .......

  //அரவிந்த் தியேட்டர் புதுசு!//

  அரவிந்த் தியேட்டர், அப்போ ரொம்ப நாளா கட்டி முடிக்கப்படாமல் இருந்த "ஸ்ரீனிவாசா தியேட்டர்" தான் ....

  ReplyDelete
 17. நன்றி பாலகுமார், நம்ம ஊர்கார பசங்கள சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசமா இருக்கு சகா.

  'சோலைஅழகுபுரம்' ஜொலிக்கிறது. வாழ்த்துக்கள்...

  ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.