Aug 15, 2009

உண்மைத் தமிழனுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்

உண்மைத் தமிழன் அண்ணாச்சி, அவரது அண்ணன் சேரன் இயக்கிய பொக்கிஷம் என்ற திரைப்படத்தை முதல் ஷோ பார்த்துவிட்டு வந்து, செய்திகளை முந்தித்தரும் அவசரத்தில் அத்திரைப்படத்தை விமர்சனம் செய்துள்ளார், கூடவே ஒரு சமூகத்தையும்.
அண்ணாச்சி, நீங்கள் திரைவிமர்சனத்தோடு நின்றிருந்தால் நான் இந்த பதிவை எழுத வேண்டிய அவசியம் வந்திருக்காது. விமர்சனத்தின் இடையிடையே இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கம் எதிரான கருத்துகளை தனது வாசகர்கள் மனதில் நாசூக்காக ஏற்ற முயற்சிப்பது வருத்தமளிக்கிறது. இஸ்லாத்தை பின்பற்றும் நான், மற்ற கடவுள் நம்பிக்கையாளர்களையும் அவர்களது நம்பிக்கைகளையும் குறைகூறி ஏளனம் செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படாதோ / நியாயமில்லையோ, அதைவகையில் நீங்கள் செய்ததும். திரைப்பட விமர்சனத்தில் ஒரு சமூகத்தின் மீது உங்கள் வெறுப்பை காட்ட வேண்டிய அவசியம் என்ன அண்ணாச்சி? உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எங்கள் நம்பிக்கை எங்களுக்கு. ஒருவர் நம்பிகையில் மற்றவர் குறுக்கிடாதவரை இங்கே எந்த சச்சரவும் எழப்போவதில்லை.
உங்களது கருத்துக்களை மறுத்து விளக்க வேண்டிய கடமை எனக்குள்ளது. நீங்கள் சொல்லியுள்ள,
அந்த பர்தாவை அணிந்து கொண்டு ஒரு ஐந்து நிமிடம்கூட நம்மால் நிற்க முடியாது.. எப்படித்தான் அந்தப் பெண்கள் அணிகிறார்களோ தெரியவில்லை.
பர்தா மட்டுமல்ல, இன்னும் பெண்கள் அணியும் பலவற்றை உங்களால் அணியமுடியாது அண்ணாச்சி. அது பெண்களுக்கேயான உடல் அமைப்பிற்கானது, பாதுகாப்பிற்கானது. அந்நிய ஆண்களின் இச்சைப் பார்வையில் இருந்து தன்னையும் தன் உடலையும் பாதுகாத்துக் கொள்ள அவசியமாகிறது.
முதலில் பர்தா என்றால் என்ன என்று விளங்கிக் கொள்ளுங்கள். ஒரு பெண் தன் முகம் மற்றும் மணிக்கட்டிற்கு கீழான கை ஆகியவை தவிர மறைக்க வேண்டிய பாகங்களை ஆடையால் மறைப்பது. அந்த ஆடை, இறுக்கமானதாகவோ, உடல் பாகங்களை வெளிக்காட்டக்கூடிய மெல்லியதாகவோ இருக்கக் கூடாது. முக்கியமாக ஒரு ஆணின் உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்தாத உடையாக இருக்க வேண்டும். அது எந்த நிறத்திலும் இருக்கலாம். எதற்காக இந்த உடை? கண்ணியமான உடை, பெண்களுக்கு, ஆண்களிடத்தில் கண்ணியத்தை ஏற்படுத்துகிறது. அதனால் அவர்கள் சீண்டப்பட மாட்டார்கள், தொல்லைகள் படுத்தப்பட மாட்டார்கள். பர்தா அணியும் பெண்களைக் கேட்டால் சொல்லுவார்கள், அது தன் மானத்தை எந்தளவு பாதுகாக்கிறது என்று. பர்தா அணியும் பெண்களிடம் பாலியல் வன்கொடுமை குறைவு என்பதும் அறிந்திருப்பீர்கள்.
கடைவீதியில் நடந்து செல்லும் சம அழகுள்ள இரட்டைப்பிறவி சகோதரிகளில், ஒரு பெண் இஸ்லாமிய முறைப்படி உடையணிந்திருக்கிறாள். மற்றொரு பெண் உடலின் பாகங்களை வெளிக்காட்டும் மெல்லிய இறுக்கமான உடை அணிந்திருக்கிறாள். இப்போது இவ்விரு பெண்களில் கடைத்தெருவில் இருக்கும் சிலரால் கேலிக்கும், கிண்டலுக்கும், தொல்லைக்கும் ஆளாவது இஸ்லாமிய உடையணிந்திருக்கும் பெண்ணா? அல்லது இறுக்கமான உடையணிந்திருக்கும் பெண்ணா? நிச்சயமாக இறுக்கமான உடை அணிந்தவள் தான் கேவலத்திற்கு உள்ளாவாள். ஏனென்றால் அவளுடைய ஆடை கடைத்தெருவிலிருக்கும் சிலரின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களை அவ்வாறு தவறு செய்யத் தூண்டுகிறது.
ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாட்டுக்கு முதல் உதாரணம் அந்த பர்தாதான் என்பதில் எனக்கு இன்றைக்கும் சந்தேகமில்லை.
உங்கள் அண்ணன் சேரன் தன் காதலியை பாடல் காட்சிகளில் திறந்து காட்டச்சொல்லியிருப்பாரே… அது போதாதா உங்களுக்கு? மறைக்கப்பட வேண்டிய தனது அந்தரங்க பகுதிகளை அந்நியரிடமிருந்து ஒரு பெண் மறைத்துக் கொள்வது தான் ஆணாதிக்கச் சிந்தனையா? உங்கள் பார்வையில் படும் அனைத்து பெண்களும் உங்களுக்கு இடுப்பையும், அந்தரங்க பகுதிகளையும் காட்டிவிட வேண்டுமா. இறுக்கமான, அரைகுறை அடையுடன் கவர்ச்சிப் பொருளாக காட்சித் தரவேண்டும் என்பது தான் உங்கள் சிந்தனையா? அவ்வாறு சிந்திப்பது தான் முற்போக்கு என்று நினைத்தால், மாற்றிக் கொள்ளுங்கள், அதுதான் ஆணாதிக்கப் போக்கு.
இஸ்லாம் பெண்களைக் கண்ணியமானவர்களாகக் கருதுவதால் இத்தகைய சீர்கேட்டை ஒரு போதும் அனுமதிப்பதில்லை. இறுக்கமான அல்லது உள்ளே உள்ளவைகளை வெளியே காண்பிக்கும் மெல்லிய ஆடைகளை அணிபவர்களை, ஆடை அணிந்தும் அணியாதது போன்றவர்கள் என்று இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
முஸ்லீம் வீடுங்கிறதால வீட்டுக்குள்ள வெளி ஆளை அனுமதிக்க மாட்டோம். ஆனா நீங்க எங்களுக்கு பெரும் உதவி செய்தவர்ங்கிறதால அதையெல்லாம் நான் பார்க்கலை.." என்று சொல்கின்றபோது முஸ்லீம சமுதாயத்தினரின் கட்டுப்பெட்டியான அந்த விதிமுறைகள் மீதிருக்கும் கோபம் தெறிக்கிறது.
எதை ஐயா கட்டுப்பெட்டியான விதிமுறைகள் என்று சொல்கிறீர்கள? பெண்கள் இருக்கும் வீட்டில் வெளி ஆண்களுக்கு அனுமதி இல்லை என்பததா?. பெண்கள் இருக்கும் வீடுகளில் எல்லாம் உங்களுக்கு ரெட் கார்பெட் விரிக்கணுமா?
முஸ்லீம் பெண்களுக்குத்தான் எத்தனை, எத்தனை கஷ்டங்கள்..? 'வெளியாட்கள் யாரைப் பார்த்தாலும் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும்..' 'உடல் முழுக்க போர்த்திக் கொண்டுதான் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டும்'. 'வெளி நபர்களிடம் பேசக் கூடாது..' 'பழக்கம் கூடாது' என்று காட்டுமிராண்டித்தனமான இந்தப் பழக்கத்தை தட்டிக் கேட்கும் வாய்ப்பு அண்ணன் சேரனுக்கு இருந்தும், அவரது ஒரே நோக்கம் 'காதல்'தான் என்பதால் அதனை லேசாகத் தொட்டுப் பார்த்து அகன்றுவிட்டார்.
எது காட்டுமிராண்டித்தனம்? அந்நிய ஆண்களிடம் பேசாமல் இருப்பது காட்டுமிராண்டித்தனமா? வெளியாட்களிடம் முகத்தை காட்டி, உடல் முழுக்க திறந்து கொண்டும், பார்க்கும் நபர்களிடம் எல்லாம் பேசிக் கொண்டும், பழகிக் கொண்டும் இருப்பது தான் நாகரிகத்தின் வளர்ச்சி என்று நினைக்கிறீர்களா?
மருத்துவமனையில் ஆபரேஷனுக்காக வந்து படுத்திருக்கும் நதீராவின் தாயாரே மிகக் கஷ்டப்பட்டு பேசும் நிலையில் இருக்கும்போது தனக்காகவும், நதீராவுக்காகவும் பேச வருகின்ற காட்சியே இதற்கு சாட்சி. இப்படியொரு சூழல் முஸ்லீம் பெண்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்.. வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டாமா..? என்று தணியும் இந்தக் கொடுமை..
ரொம்ப அக்கறை தான் உங்களுக்கு, உங்கள் அண்ணன் சேரன் அப்படி காட்டிவிட்டார் என்பதற்காக அதுவே சாட்சியாகிவிடுமா? ஐயா, இன்றும் வலையில் எத்தனையோ முஸ்லீம் பெண்கள் எழுதுகிறார்கள். இங்கு எழுதும் பல ஆண்களைக் காட்டிலும் நல்ல எழுத்தாக இருக்கிறது. ஒரு சகோதரி தமிழில், உங்களுக்கும் எனக்கும் தெரியாத கணினி துறை சார்ந்த நுண் விசயங்களை அவ்வப்போது பதிவேற்றி வருகிறார். ஒருவர் அரசியல் கட்சி தலைவியாகவும் இருந்து வருகிறார். வெளியுலகில் அவரை பர்தா இல்லாமல் பார்க்க முடியாது. வசதியும் வாய்ப்பும் உள்ள பலரும் பட்டப் படிப்புகள் படித்து வருகிறார்கள். இவர்கள் எல்லாம் கண்ணியமான முறையில் மற்றவருடன் பேசுகிறார்கள் / கண்ணியமான நட்பும் வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
எனது இந்த இடுகையை நீங்களை வாசித்திருக்க வாய்ப்பில்லை. உங்கள் எழுத்தை நீண்ட நாட்களாக வாசித்து வருகிறேன். உங்களிடமிருந்து நிறைய ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன். இப்படி அடுத்தவர் நம்பிக்கையில் மூக்கை நுழைக்கும் ஒரு சமூகத்தாக்குதல் வேண்டாமே, அண்ணாச்சி.
நான் பார்க்காத பொக்கிஷம் சினிமாவை விமர்சிக்கவில்லை, தேவையும் இல்லை. அந்தப்பட விமர்சனத்தின் ஒரு சமூகத் தாங்குதலைத் தான் தவறென்று விளக்கியுள்ளேன்.

74 comments:

  1. //உண்மை தெரிஞ்சாகணும்//

    பர்தா அணிஞ்சா கேன்சர் வருதாமே

    ReplyDelete
  2. நல்லதொரு இடுகை நண்பரே. கலாசாரம் என்பது ஒரு ஒவ்வொரு சமுகத்தையும் சார்ந்தது. அந்த அந்த சமுகத்தைச் சேர்ந்த்வர்கள் அதனைப் பின் பற்றவேன்டியது அவர்களின் கடமை. அதனை இன்னொருவர் கட்டுப்படுத்தக் கூடாது..

    நாம் கலாசாரம் பற்றிப் பேசினால் நம்மை கேலி செய்யும் கூட்டமும் இருக்கின்றது எனது அண்மைய பதிவுகளைப் பாருங்கள்.

    ReplyDelete
  3. பெண்கள் இயல்பாக உடை அணிய, இயலாமல் இருப்பது மதம் தாண்டி ஆண்தான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

    பர்தா ஆணின் பார்வையில் இருந்து தப்ப என்று ஏற்றுக்கொள்கிறேன்.

    அதே சமயம் உடம்பில் எந்த பகுதியிலும் வெப்பம் தொடர்ந்து படாமல் இருக்கவும் பாதுகாக்கவே இந்த பழக்கம் முதலில் தோன்றியிருக்க வேண்டும்.காரணம் வெப்பபிரதேசங்களில் வசித்ததால்..

    இது யூகம்தான்., வேறு விளக்கங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்

    ReplyDelete
  4. இந்த பதிவை பாருங்கள்
    http://saidapet2009.blogspot.com/2009/08/blog-post_7211.html

    ReplyDelete
  5. //இப்போது இவ்விரு பெண்களில் கடைத்தெருவில் இருக்கும் சிலரால் கேலிக்கும், கிண்டலுக்கும், தொல்லைக்கும் ஆளாவது இஸ்லாமிய உடையணிந்திருக்கும் பெண்ணா? அல்லது இறுக்கமான உடையணிந்திருக்கும் பெண்ணா?//

    இரண்டு பேரையும் தான் கிண்டல் பண்ணுவாங்க. கருப்பாக முழு உடைப் போட்ட பெண்ணை 'பேய்...போகுது' ன்னு சொல்வதை காதால் கேட்டி இருக்கிறேன்.

    :)

    ReplyDelete
  6. தம்பி பீர்,

    மாற்றுக்கருத்துகள் நிறைய உண்டு,

    கண்ணியமான உடை என்பது இஸ்லாமிய வரைமுறை, முழுக்க முழுக்க மதம் தொடர்புடையது, அனைத்துப் பெண்களுக்கும் ஏற்ற உடை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.
    மத நம்பிக்கையில் அணிகிறோம் என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும்.

    ஆண்கள் பார்வை, ஆண்களுக்கு பயந்து கொண்டு என்றெல்லாம் சொல்வது அதீத கட்டுமானம்.

    மற்ற பெண்களெல்லாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுகிறார்களா ?

    திருந்து வைப்போம் ஆண்கள் பார்த்து ரசிக்கட்டும் என்ற இடுப்பு, கைகால்களை காட்டுகிறார்களா ?

    நம்ம ஊரு பாட்டிங்க 60 வயதுக்கு மேல் ஜாக்கெட் கூட அணிவது இல்லை, அது ஒன்றும் தவறாகவும் தெரியவில்லை.

    ஒரு பெண் இடுப்பு பகுதி திறந்து இருப்பதைப் பார்த்து ஒரு ஆண் சலனம் அடைகிறான் என்றால் அவன் கண்ணுலதான் கோளாறு.

    எதையும் பொதுப்படுத்தி ஞாயம் சொல்லாதீர்கள், அப்படிச் சொன்னால் மற்ற பெண்களை இழிவு படுத்துவது போல ஆகும்.

    இது இஸ்லாமிய வழக்கம், அதில் நம்பிக்கை உள்ள நாங்கள் அதை ஏற்கிறோம், உங்களுக்கு என்ன ? என்ற கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை உண்டு.

    ReplyDelete
  7. //Blogger jaisankar jaganathan said...

    //உண்மை தெரிஞ்சாகணும்//

    பர்தா அணிஞ்சா கேன்சர் வருதாமே//

    நன்றி jaisankar jaganathan,

    காபி குடிச்சாலும் கேன்சர் வருதாம் ;)

    ReplyDelete
  8. நன்றி சந்ரு, வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  9. நன்றி நிகழ்காலத்தில்,
    இயல்பான உடை என்று நீங்கள் எதைச்சொல்கிறீர்கள். குட்டை பாவாடையா?

    ReplyDelete
  10. நண்பா,

    உங்களின் மனக்குமுறல் புரிகிறது. மதங்களை வைத்து நிகழும் எந்த ஒரு இழிவான விஷயமும் விஷமானவையே... பதிவர்கள் கண்டிப்பாய் மனதிலிருத்த வேண்டிய ஒன்று. வருத்தத்தை விடுங்கள்.

    பிரபாகர்.

    ReplyDelete
  11. நன்றி கிருஷ்ணா,

    அந்த பதிவை வாசித்தேன், திரைவிமர்சனம், பொக்கிஷம்.

    ReplyDelete
  12. நன்றி VANJOOR,

    சுருக்கமாக உங்கள் கருத்தை சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒவ்வொரு பதிவையும் சென்று வாசிக்க பலருக்கும் நேரம் இருப்பதில்லை.

    ReplyDelete
  13. //Blogger கோவி.கண்ணன் said...
    .. இரண்டு பேரையும் தான் கிண்டல் பண்ணுவாங்க. கருப்பாக முழு உடைப் போட்ட பெண்ணை 'பேய்...போகுது' ன்னு சொல்வதை காதால் கேட்டி இருக்கிறேன். :)//

    பேய் போகுதுன்னு சொல்றத விட அவுத்து பொட்டு ......... போறான்னு சொல்றது தேவலாம் இல்லையா?

    ReplyDelete
  14. //மாற்றுக்கருத்துகள் நிறைய உண்டு,//

    ஒரு கருத்தை உங்கள் மீது திணிக்கும் போது அதைச் சொல்ல வேண்டும்.

    //கண்ணியமான உடை என்பது இஸ்லாமிய வரைமுறை, முழுக்க முழுக்க மதம் தொடர்புடையது, அனைத்துப் பெண்களுக்கும் ஏற்ற உடை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.//

    முஸ்லீம்கள் அல்லாத மற்றவர்களுக்கு அது கண்ணியகுறைவான ஆடையாக தெரிகிறதா?
    இஸ்லாம், முழுக்க முழுக்க கண்ணியத்தினாலான வாழ்க்கை நெறி. (மற்ற நம்பிகையாளர்களை கண்ணிய குறைவானவர்கள் என்று நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன்)
    சவுதியில் அனைத்து பெண்களும் அணிகிறார்கள், ஏற்ற உடையாக இருக்கிறது.

    //மத நம்பிக்கையில் அணிகிறோம் என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும்.//

    நம்பிக்கையில் அணிகிறார்கள்.

    //ஆண்கள் பார்வை, ஆண்களுக்கு பயந்து கொண்டு என்றெல்லாம் சொல்வது அதீத கட்டுமானம்.//

    அதுதான் உண்மை. அரைகுறை ஆடையுடன் ஒரு பெண் உங்கள் அருகில் வந்தமர்ந்தால், சலனப்பட மாட்டீர்களா? ஒரு டிவி (இன்ஷூரன்ஸ் என்று நினைவு) விளம்பரம், விமானத்தில் ஆணின் அருகே ஒரு பெண் இருப்பதை காட்டி, அதிஷ்டம்.. வாழ்க்கை நொடியில் மாறுகிறது என்று, பொருளை சந்தைபடுத்துகிறார்கள். பாருங்கள்...

    //மற்ற பெண்களெல்லாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுகிறார்களா ? //

    பொதுவாக பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதில்லை என்று சொல்கிறீர்களா?
    நான் சொல்வது, பர்தா அணிந்த பெண்களிடம் பாலியல் வன்கொடுமை குறைவு என்று.

    //திருந்து வைப்போம் ஆண்கள் பார்த்து ரசிக்கட்டும் என்ற இடுப்பு, கைகால்களை காட்டுகிறார்களா ?//

    இல்லை, உடை இடுக்கில் இடுப்பு தெருந்தால், ஆண்கள் பார்ப்பார்கள், பார்ப்போம்...

    //நம்ம ஊரு பாட்டிங்க 60 வயதுக்கு மேல் ஜாக்கெட் கூட அணிவது இல்லை, அது ஒன்றும் தவறாகவும் தெரியவில்லை.//

    பர்தா அணியும் பாட்டிங்களை பற்றியா அவர் சொல்றார்? பாட்டி மட்டும் பர்தா அணிந்தால், எந்த போலி முற்போக்குவாதியும் வாய் திறக்க மாட்டார்.

    //ஒரு பெண் இடுப்பு பகுதி திறந்து இருப்பதைப் பார்த்து ஒரு ஆண் சலனம் அடைகிறான் என்றால் அவன் கண்ணுலதான் கோளாறு.//

    என்ன சார் சொல்றீங்க?

    //எதையும் பொதுப்படுத்தி ஞாயம் சொல்லாதீர்கள், அப்படிச் சொன்னால் மற்ற பெண்களை இழிவு படுத்துவது போல ஆகும்.//

    நிச்சயமாக மற்ற பெண்களை இழிவு படுத்துவதாகாது.
    நான் சொன்ன விளக்கத்தில் எங்கும் மற்ற நம்பிக்கையாளருடன் ஒப்பிட்டு சொல்லவில்லை. தெரியாமல் இல்லை ஆனாலும், மற்றவர் நம்பிக்கையில் குறுக்கிடுவதில்லை, குழப்பம் விளைவிப்பதில்லை.

    மீண்டும் சொல்கிறேன், எங்கள் நம்பிக்கை எங்களுக்கு, இதில் யாரும் குறுக்கிட வேண்டாம்.

    ReplyDelete
  15. //ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாட்டுக்கு முதல் உதாரணம் அந்த பர்தாதான் என்பதில் எனக்கு இன்றைக்கும் சந்தேகமில்லை.//

    குட்டைப்பாவாடை (ஸ்கர்ட்) அணிந்து வந்தால் ஆணாதிக்கம் குறைவாக காணப்படுமா? இல்லை அப்போதுதான் மோகம் அதிகமாகி ஈவ்டீசிங்க் வரை கொண்டுசெல்லும்

    ReplyDelete
  16. கருத்து சுதந்திரம் யாருக்கும் உண்டு ஆனால் அதை எந்த ஒரு பிரிவினரையும் சாராமல் இருந்தால் அதுவே நலம் எல்லோருக்கும் ஆரோக்கியம்

    ReplyDelete
  17. மி்க நல்ல பதிலடி..அந்த விமர்சனத்தை படிக்கும் போது எனக்கும் கோபம் வந்தது பின்னர் உங்கள் பின்னூட்டத்தையும் பார்த்தேன் அதன் பின் நீங்கள் பதில் எழுதவில்லை அப்போதே நினைத்தேன் நீங்கள் பதிவு போடுவீர்கள் என்று

    ReplyDelete
  18. சரியான பதிவு.

    சினிமா விமர்சனம் என்ற பெயரில், ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் வாழ்கையைக் விமர்சன்ம் செய்தல் தவறு. என்று அப்போலித்தமிழனின் வலைபதிவில் பின்னூட்டம் போட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  19. பீர் ஸார்..!

    இந்த பர்தா பிரச்சினையில் கருத்துப் பரிமாற்றம் என்பது பல ஆண்டுகளாக வலையுலகில் நடந்து வருகிறது. நானும் சிலரிடம் இது பற்றி கருத்துப் பரிமாற்றம் செய்துள்ளேன்.

    உங்களுடைய இந்த நம்பிக்கையைப் போலவே எனது நம்பிக்கை அது முட்டாள்தனமானது என்பது..

    இல்லை என்று நீங்கள் எத்தனை முறை, எப்படி மறுத்தாலும் நான் என் தரப்பு வாதத்தையும் வைப்பேன். முடிவுதான் கிடைக்காது..

    உங்கள் நம்பிக்கை உங்களுக்கு.. என் நம்பிக்கை எனக்கு..

    பதில் சொல்லவில்லையே என்று யாரும் கருத வேண்டாம்..

    எப்படி எனக்கு என் அப்பன் முருகனோ.. அதே போல் உங்களுக்கு அல்லா..

    பர்தா, பெண்களை அந்நிய ஆண்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றும் என்பது உங்களது நம்பிக்கை..

    அது அடிமைத்தனம் என்பது எனது நம்பிக்கை..

    மேலும், மேலும் பேசி நம்முடைய நேரத்தை நாம் வீணாக்க வேண்டாம்.

    சினிமா விமர்சனமாகவே இருந்தாலும், என் பார்வையில் சொல்ல வேண்டும் என்று சொல்வதை சொல்வதற்கு எனக்கு உரிமை உண்டு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

    வாழ்க வளமுடன்..!

    ReplyDelete
  20. நன்றி பிரபாகர்,

    தெளிவான வார்த்தைகள்.

    ReplyDelete
  21. //Blogger அபுஅஃப்ஸர் said...

    கருத்து சுதந்திரம் யாருக்கும் உண்டு ஆனால் அதை எந்த ஒரு பிரிவினரையும் சாராமல் இருந்தால் அதுவே நலம் எல்லோருக்கும் ஆரோக்கியம்//

    நன்றி அபுஅஃப்ஸர்,

    இதைத்தான் விளக்க நினைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  22. //Blogger shabi said...

    மி்க நல்ல பதிலடி..அந்த விமர்சனத்தை படிக்கும் போது எனக்கும் கோபம் வந்தது பின்னர் உங்கள் பின்னூட்டத்தையும் பார்த்தேன் அதன் பின் நீங்கள் பதில் எழுதவில்லை அப்போதே நினைத்தேன் நீங்கள் பதிவு போடுவீர்கள் என்று//

    இல்லை ஷப்பி, இது பதிலடி இல்லை. கருத்துச் சுதந்திரம் என்ற பெயிரில் மற்றவர் நம்பிக்கையில் மூக்கை நுழைப்பவருக்கு நம்பிக்கையாய் மறுத்தளிக்கும் எண்ணம்.

    ReplyDelete
  23. \\இயல்பான உடை என்று நீங்கள் எதைச்சொல்கிறீர்கள். குட்டை பாவாடையா?\\

    இதே மாதிரி பதில் சொல்கிறேன்,

    பர்தாவுக்குள் அணிந்துள்ள உடைகளையே இயல்பான உடை என்கிறேன். அது குட்டை பாவாடையா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

    இன்னொரு யூகத்திற்கு பதில் இல்லை, ஏன்?

    ReplyDelete
  24. //Blogger வெண் தாடி வேந்தர் said...

    சரியான பதிவு.

    சினிமா விமர்சனம் என்ற பெயரில், ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் வாழ்கையைக் விமர்சன்ம் செய்தல் தவறு. என்று அப்போலித்தமிழனின் வலைபதிவில் பின்னூட்டம் போட்டிருக்கிறேன்.//

    நன்றி வெண் தாடி வேந்தர், நல்லது.

    ReplyDelete
  25. உண்மைத்தமிழன் மிக சரியாக சொல்லியுள்ளீர்கள்,

    //எப்படி எனக்கு என் அப்பன் முருகனோ.. அதே போல் உங்களுக்கு அல்லா..//

    கருத்துச் சுதந்திரம் என்று சொல்லி, அப்பன் முருகனை நான் விமர்சித்தால்.. எல்லோருக்கும் பிரச்சனை.

    அதனால் தான்...

    //உங்கள் நம்பிக்கை உங்களுக்கு.. என் நம்பிக்கை எனக்கு..//

    அப்படியே இருந்துவிட்டு போவோம்.

    //மேலும், மேலும் பேசி நம்முடைய நேரத்தை நாம் வீணாக்க வேண்டாம்.//

    //வாழ்க வளமுடன்..!//

    ReplyDelete
  26. [[[பீர் | Peer said...
    உண்மைத்தமிழன் மிக சரியாக சொல்லியுள்ளீர்கள்,
    //எப்படி எனக்கு என் அப்பன் முருகனோ.. அதே போல் உங்களுக்கு அல்லா..//
    கருத்துச் சுதந்திரம் என்று சொல்லி, அப்பன் முருகனை நான் விமர்சித்தால்.. எல்லோருக்கும் பிரச்சனை. அதனால்தான்...]]]

    ஒரு பிரச்சினையும் இல்லை.. தாராளமாக முருகனை நீங்கள் விமர்சிக்கலாம்.. முருகனுக்கு இங்கு யாரும் அத்தாரிட்டி இல்லை..

    என் பக்தி அவனுடன் மட்டும்தான்.. அவனுக்கும் எனக்குமான உறவில் வேறொருவருக்கு இடமில்லை..

    அவனுக்கும் உங்களுக்கும் பிரச்சினையெனில் அவன்தான் பதில் சொல்ல வேண்டும்..!

    என்னிடத்தில் கேட்டீர்களேயானால் அது என் நம்பிக்கை என்று ஒற்றை வரியில் சொல்வேன்..

    அமைதிக்கும், நட்புக்கும் பல வழிகள் உண்டு பீர் ஸார்..!

    ReplyDelete
  27. //அந்நிய ஆண்களின் இச்சைப் பார்வையில் இருந்து தன்னையும் தன் உடலையும் பாதுகாத்துக் கொள்ள அவசியமாகிறது. //

    தலை, என்னை போன்ற ஆள்களுக்கு முகமும் மணி கட்டும் கூட இச்சை பார்வை பார்க்க தூண்டுபவை. பர்தா போட்ட பெண்களுக்கும் பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்டதாக செய்திகள் இருக்கின்றனா. அதை தவிர்ப்பதற்காக நீங்கள் பெண்களை வீட்டில் வைத்து பூட்டி விட்டு நீங்களே வீடிற்கு வெளியேயான எல்லா வேலைகளையும் செய்தால் என்ன ??

    ReplyDelete
  28. //Blogger நிகழ்காலத்தில்... said...

    \\இயல்பான உடை என்று நீங்கள் எதைச்சொல்கிறீர்கள். குட்டை பாவாடையா?\\

    இதே மாதிரி பதில் சொல்கிறேன்,

    பர்தாவுக்குள் அணிந்துள்ள உடைகளையே இயல்பான உடை என்கிறேன். அது குட்டை பாவாடையா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். //

    எனக்கு ஆடையாக இருப்பவள், எனக்காக அணிவது குட்டைப் பாவாடை, மற்றவர்களுக்கு பர்தா.

    யூகத்திற்கு பதில் வேணுமா சார்???

    பர்தாவிற்கான விளக்கத்தை இடுகையிலேயே சொல்லிவிட்டேன்.

    ReplyDelete
  29. //Blogger களப்பிரர் - jp said...
    .. தலை, என்னை போன்ற ஆள்களுக்கு முகமும் மணி கட்டும் கூட இச்சை பார்வை பார்க்க தூண்டுபவை. பர்தா போட்ட பெண்களுக்கும் பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்டதாக செய்திகள் இருக்கின்றனா. அதை தவிர்ப்பதற்காக நீங்கள் பெண்களை வீட்டில் வைத்து பூட்டி விட்டு நீங்களே வீடிற்கு வெளியேயான எல்லா வேலைகளையும் செய்தால் என்ன ??//

    நண்பர் களப்பிரர், உங்களுக்கு முகமும் மணிக்கட்டும் இச்சை தூண்டுவதால் தான், சிலர் அதையும் மூடிக் கொள்கின்றனர். ;)

    இது அவரவர் விருப்பங்க, யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை.

    பர்தா பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை குறைவு என்பது தான் செய்தி. உங்களைப்போன்ற மணிக்கட்டு இச்சைப் பார்வையுடையோர் குறைவு என்பதால்.

    அவள் விருப்பத்திற்கு அவள் ஆடையை தேர்ந்தெடுத்து அணிகிறாள், வெளியே செல்கிறாள். அதை ஏன் நான் தடுக்க வேண்டும்?

    ReplyDelete
  30. உதவி கேட்டேன் தான். ஆனா, நம் நட்புக்களின் வலைப்பூக்கள் பலரையும் சென்றடையட்டுமே என்ற நல்லெண்ணத்தில், அதுக்காக, உதவி செய்யணுமாம் என்று தலைப்பு கொடுப்பதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையா?

    ReplyDelete
  31. இந்த பதிவுக்கு நேரடியாக தொடர்பில்லாமல் ஒரு ஐயம்.

    ஏராளமான திருமண அழைப்பிதழ்களில் மணமகளின் பெயர் நூர்-ஈ-சஷ்மி என்று கூறப்பட்டுள்ளதே! அந்த பெயருக்கு என்ன அர்த்தம்?

    ஏன் அந்தப் பெயர் அவ்வளவு பரவலாக பயன்படுத்தப்படுகிறது?

    ReplyDelete
  32. நண்பரே,
    இந்த இடுகையை தாங்கள் எழுதியவுடன், ஒரு பெண்ணின் பார்வையில் பர்தா என்று நானும் எழுத நினைத்தேன். ஆனால்,ஏற்கனவே சர்ச்சைக்குரிய பல இடுகைகளால், பல பெருந்தலைகளுக்கு பயந்து கொண்டு பலர் நல்ல இடுகைக்கு கூட ஓட்டு போடுவதில்லை. ஆதலால், இதை பின்னூட்டமாகவே இடுகிறேன்.

    நல்ல சவுக்கடி! ஒரு மனைவி கணவனுக்கு ஆடையாகவும், ஒரு கணவன் மனைவிக்கு ஆடையாகவும் இருக்கிறான் என்பது ஹதீஸ்.

    நான் முழுபர்தாவில் இருக்கிறேன். எனக்கு இது மிகப்பெரும் பாதுகாப்பு கவசமாகும். ஆனால், இது என் முன்னேற்றத்தை எவ்விதத்திலும் தடுக்கவில்லை. மாறாக, ஒரு மரியாதையைத் தான் ஏற்படுத்தி இருக்கிறது.

    நான் பர்தாவில், டூ வீலர் ஓட்டுகிறேன். அதோடு, என் கணவரின் எல்லா விஷயங்களுக்கும் உறுதுணையாக இருக்கிறேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், பர்தாவில் இருக்கும் எல்லாரும் கட்டுப் பெட்டிகள் அல்ல.

    ஆனால், எனக்கும் இது போன்ற அனுபவம் நேர்ந்திருக்கிறது. என்னை ஒரு கட்டுப் பெட்டியாக பலரும் பார்த்து, என் தோற்றத்தை வைத்து என்னை எடை போட்டிருக்கிறார்கள். அத்தகையவர்களை நான் என் நுனிநாக்கு ஆங்கிலத்தை வைத்து மிரட்டி இருக்கிறேன்.

    நான் பர்தா அணிந்திருப்பதால், நைட்டியுடன் கூட வெளியே போக முடியும். என் கணவர் வெளியே போக அழைத்தாரானால், தலை வாரி பூச்சூட வேண்டிய அவசியம் இல்லையாதலால், உடனே கிளம்ப முடிகிறது. ஆனால், பல வீடுகளில், வெளியே கிளம்ப அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் காரணத்தால் பல பிரச்சினைகள் வருவதை நான் அறிவேன்.

    பர்தாவால் கேன்சர் வருகிறது என்றால் இது என்ன புகையிலையா, சிகரெட்டா? அப்படியானால், நூற்றுக்கணக்கான கிறிஸ்த்துவ சிஸ்டர்ஸுக்கு ஏன் கேன்சர் வருவதில்லை? அவர்களும் ஒரு வித பர்தா தானே அணிந்திருக்கிறார்கள்!

    பர்தா என்பது ஒரு கவசம். என்னுடைய அழகு என் கணவருக்கு மட்டும் தான். யாருக்கும் நான் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அழகை பார்த்து தான் ஒருவரை ஆராதிக்க வேண்டுமானால், அத்தகைய ஆராதனை கேடாய் தான் முடியும்.

    நினைத்து பாருங்கள், ஒரு சமூகத்தில், 100 விழுக்காடு பெண்கள் பர்தாவுடன் சென்றால், அங்கே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்குமா? ஈவ் டீசிங் நடக்குமா?

    பர்தாவில் இருப்பதால், என்னுடைய எந்த முன்னேற்றமும் பாதித்ததில்லை. நான் B.A ஆங்கில இலக்கியம், M.Com படித்து, தற்சமயம், கரெஸ்ஸில் M.A. ஆங்கில இலக்கியமும், காலேஜ் சென்று B.Ed ம் பயின்று வருகிறேன். அதோடு, ஹிந்தியில் 2 எக்ஸாம் எழுதியிருக்கிறேன். டைப் ரைட்டிங் ஹையர் முடித்திருக்கிறேன். கணினியிலும் பரந்து பட்ட அறிவு உள்ளது. ஆனால், நான் முழு பர்தாவில் இருக்கிறேன், என்னுடைய 12வது வயது முதல்.

    என்னை யாரும், என் கணவர் உட்பட கட்டாயப்படுத்தியதில்லை. அதே போல யாரிடமும் நான் என் கருத்தை திணிக்கவில்லை. முஸ்லிம் சமுதாயத்தின் ஒரு பெண்ணாக இருந்து சொல்கிறேன், எனக்கு பிடித்திருக்கிறது. அதில் பாதுகாப்பு உணர்கிறேன். அணிகிறேன்.

    எத்துணையோ இணைய நட்புகள் இருக்கிறார்கள். ஆனால், யார் எவ்வளவு தூரம் கேட்டும், போனிலோ, மெஸ்ஸஞ்சரிலோ நான் பேசியதில்லை. பெண்களிடம் பேசி இருக்கிறேன். காரணம் இதெல்லாம் தேவையில்லாத பின் விளைவை ஏற்படுத்தும்.

    போன வாரம் கூட யூ.எஸ்ஸில் இருக்கும் ஒரு தோழர், என் பிடிவாதம் கண்டு தன் மனைவியிடம் சொல்லி என்னிடம் பேச சொன்னார்.

    பர்தா அணிகிறேன். ஆனால், நான் பர்தா அணியாதவர்களை விட சுதந்திரமாக உள்ளேன். சந்தோஷமாக உள்ளேன்.

    போலியான வெளி அலங்காரம் எனக்கு தேவையில்லை. என் வாழ்க்கை என் கணவருக்காகவே! அவருக்கு திருப்தி தராத ஒன்று எனக்கு வேண்டாம்.

    இதை ஒவ்வொரு பெண்ணும் எண்ணினால், எப்படி இருக்கும் நம் சமுதாயம்?

    சந்தோஷம் என்பது அடுத்தவரை சந்தோஷப்படுத்துவது தான் என்பது ஆங்கில பழமொழி! அதில் முதல் இடம் நம் குடும்பத்தார்.

    அடுத்த மதத்தின் தனித்தன்மைகளை விமர்சிக்க ஆரம்பித்தால், அது ஆரோக்கியமான ஜனநாயக சோஸலிசத்தை வளர்க்காது.

    மற்ற மதங்களிலுள்ள முட்டாள்தனங்களை யாராலும் பட்டியலிட முடியும். ஆனால், அந்த மதத்திலும், எமக்கு உயிர் நண்பர்கள் உள்ளனர், அவர்கள் மனம் ஒரு போதும் புண்பட்டு விட கூடாது!

    Your Freedom stops before others nose என்பதை யாவரும் புரிந்து செயல்பட வேண்டும்.

    பெண்ணினமாகிய எமக்கே, அது ஒரு பாரமாக தெரியாத போது, அதை ஒரு சுதந்திர உணர்வாக நினைத்து பெருமைப்படும் போது, அதை பற்றி மாற்று மத அன்பர்கள் அதிகம் கவலைப்பட வேண்டாம் என்பது என் எண்ணம்.

    சினிமாவில் காட்டப்படுவது எல்லாம் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல. புற்றுக்கு பால் வார்த்தால் புண்ணியம் என்பதெல்லாம் அவரவர் நம்பிக்கையை பொறுத்த விஷயம்.

    அடுத்தவர் மத நம்பிக்கை புண்படாத வகையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது தான் நம் பாரத மரபு.

    இந்த சுதந்திர நன்னாளில் அதை நாம் கைகொள்ள முயற்சிப்போமாக!

    ReplyDelete
  33. //Blogger SUMAZLA/சுமஜ்லா said...

    உதவி கேட்டேன் தான். ஆனா, நம் நட்புக்களின் வலைப்பூக்கள் பலரையும் சென்றடையட்டுமே என்ற நல்லெண்ணத்தில், அதுக்காக, உதவி செய்யணுமாம் என்று தலைப்பு கொடுப்பதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையா?//

    நன்றி சுமஜ்லா,
    மாத்திட்டேங்க...

    ReplyDelete
  34. //சுந்தரராஜன் said...

    இந்த பதிவுக்கு நேரடியாக தொடர்பில்லாமல் ஒரு ஐயம்.

    ஏராளமான திருமண அழைப்பிதழ்களில் மணமகளின் பெயர் நூர்-ஈ-சஷ்மி என்று கூறப்பட்டுள்ளதே! அந்த பெயருக்கு என்ன அர்த்தம்?

    ஏன் அந்தப் பெயர் அவ்வளவு பரவலாக பயன்படுத்தப்படுகிறது?//

    நணபர் சுந்தரராஜன்,
    எனக்குத் தெரியலைங்க, அது உர்து வார்தை மாதிரி இருக்கு.
    < மணமகள்; செல்வி > என்பது போன்ற அலங்கார வார்த்தைகளாக இருக்கலாம்.

    நான் எனது திருமணத்திற்கு பத்திரிக்கை அச்சடிக்க வில்லை. உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நேரடி மற்றும் தொலைபேசி அழைப்புதான்.

    தொடர்பில்லாதது,

    மாலை இல்லை, ஆரத்தியும் இல்லை. நான், மனைவி, மகன் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம், இருப்போம்.

    நன்றி.

    ReplyDelete
  35. //கண்ணியமான உடை என்பது இஸ்லாமிய வரைமுறை, முழுக்க முழுக்க மதம் தொடர்புடையது, அனைத்துப் பெண்களுக்கும் ஏற்ற உடை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.//

    //முஸ்லீம்கள் அல்லாத மற்றவர்களுக்கு அது கண்ணியகுறைவான ஆடையாக தெரிகிறதா?

    இஸ்லாம், முழுக்க முழுக்க கண்ணியத்தினாலான வாழ்க்கை நெறி. (மற்ற நம்பிகையாளர்களை கண்ணிய குறைவானவர்கள் என்று நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன்)
    சவுதியில் அனைத்து பெண்களும் அணிகிறார்கள், ஏற்ற உடையாக இருக்கிறது. //

    நான் அப்படிச் சொல்லவில்லை, அவர்கள் அணியும் ஆடைதான் கண்ணியம் மிக்கது என்றால் சேலை அணிபவர்களும், தாவணி அணியும் பெண்களுக்கும் உங்களுக்கு கண்ணியக் குறைவாக தெரிகிறதா என்றே கேட்கிறேன் ?

    சவுதியில் அது ட்ரெஸ் கோட். இந்தியாவில் எந்த உடை அணிந்திருந்தாலும் காம வெறியர்கள் அவர்களை இரவில் நடமாட விடமாட்டார்கள். தாய்லாந்தில் உடைக்கட்டுபாடு கிடையாது பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று, அங்கு பாலியல் வன்புணர்வு குறைவு, பெண்களின் நடமாட்டம் பயமின்றியதாக நல்லிரவு தாண்டியும் இருக்கும்.

    //மத நம்பிக்கையில் அணிகிறோம் என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும்.//

    நம்பிக்கையில் அணிகிறார்கள். > அதைத்தாங்க சொல்கிறேன்......நம்பிக்கை என்றால் வேறென்ன நம்பிக்கை மத நம்பிக்கை தானே ? மதப் பண்பாடு, கலாச்சாரம்,.

    //அதுதான் உண்மை. அரைகுறை ஆடையுடன் ஒரு பெண் உங்கள் அருகில் வந்தமர்ந்தால், சலனப்பட மாட்டீர்களா? //

    அவ்வளவு மோசமாக என்னையெல்லாம் வளர்க்கவில்லை, வளர்ப்பு என்று எடுத்துக் கொள்ளாவிட்டாலும், நான் அந்த அளவுக்கெல்லாம் சலனப்படுவதில்லை. நீங்கள் வேண்டுமானால் சோதித்துப் பார்க்கலாம் :)

    //ஒரு டிவி (இன்ஷூரன்ஸ் என்று நினைவு) விளம்பரம், விமானத்தில் ஆணின் அருகே ஒரு பெண் இருப்பதை காட்டி, அதிஷ்டம்.. வாழ்க்கை நொடியில் மாறுகிறது என்று, பொருளை சந்தைபடுத்துகிறார்கள். பாருங்கள்...//

    சபல புத்திக்காரர்கள் உண்டு, ஆனால் அனைவரும் சபல புத்திகாரர்கள் கிடையாது, வெளியூரில் இருக்கும் வயது வந்த ஆண்கள் வாய்ப்பு இருந்தும் எல்லோருமே விலைமகளிரிடம் செல்கிறார்கள் என்று எவரும் சொன்னால் அதில் உண்மை எத்தனை விழுக்காடு ?

    //பொதுவாக பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதில்லை என்று சொல்கிறீர்களா?
    நான் சொல்வது, பர்தா அணிந்த பெண்களிடம் பாலியல் வன்கொடுமை குறைவு என்று. //

    அதற்குக்காரணம் அந்த நாடுகளில் இருக்கும் கடுமையான சட்டமேயன்றி உடைக்கும் குற்றத்திற்கும் தொடர்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

    //இல்லை, உடை இடுக்கில் இடுப்பு தெருந்தால், ஆண்கள் பார்ப்பார்கள், பார்ப்போம்...//

    பார்ப்பது பார்காதது பிரச்சனை இல்லை, கையை வைத்தால் தான் பிரச்சனையே... சிங்கப்பூரில் உடைக்கட்டுபாடு எதுவும் கிடையாது, இங்கெல்லாம் பாலியல் குற்றம் மிக மிகக் குறைவு. அப்படிப் பார்த்தால் இஸ்லாமி ஆண்கள் கண்ணியம் காக்க தொலைக்காட்சி, சினிமா பார்க்கவே கூடாது ! :)

    பர்தா அணியும் பாட்டிங்களை பற்றியா அவர் சொல்றார்? பாட்டி மட்டும் பர்தா அணிந்தால், எந்த போலி முற்போக்குவாதியும் வாய் திறக்க மாட்டார்.

    //ஒரு பெண் இடுப்பு பகுதி திறந்து இருப்பதைப் பார்த்து ஒரு ஆண் சலனம் அடைகிறான் என்றால் அவன் கண்ணுலதான் கோளாறு.//

    என்ன சார் சொல்றீங்க? > //

    நம்ம இந்தியாவில் புடவை என்ற ஒரு உடை இருக்கிறது, இடுப்பு தெரியும் உடை. அதை பெண்களில் 80 விழுக்காட்டினர் அணிகின்றார்கள், சாலையில் போகும் ஆண்கள் அனைவருமே திரும்பி திரும்பி ஒவ்வொரு பெண்ணையும் இடுப்பைப் பார்த்து பார்த்து செல்கிறார்களா ? என் தங்கையும், அக்காவும் அம்மாவும் கூட புடவை தான் உடுத்துகிறார்கள், பிற பெண்களிடம் நீங்கள் குறிப்பிடும் சலனம் என் அம்மா, அக்கா, தங்கையிடம் கூட எனக்கு வருமா ? அவர்களும் பெண்கள் தானே. நான் கண்ணில் கோளாறு என்று சொல்வதில் பிழை என்ன ? நீங்கள் சொல்லும் ஆண்களின் சபலம் சிறுமிகளைக் கூட விட்டுவைக்காது சார். அந்த அளவுக்கு ஆண்களையும் மிகக் கீழாக நினைக்காதீர்கள், அப்படி ஆண்கள் மிகக் கீழாக ஒருகாலத்தில் இருந்ததால் என்னவோ இந்த பர்தா பழக்கம் வந்திருக்கலாம், இந்தியாவில் இல்லை, அரேபிய பூமியில்.

    அதனால் தான் நான் முதல் பின்னூட்டத்தில் குறிப்பிட்டேன் பர்தா இஸ்லாமிய நம்பிக்கை, பழக்கம் அந்த அளவில் தான் நான் புரிந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  36. இதுவும் ‘நமக்கு உதவி’ நல்லா இல்லை. வலைப்பூ புத்தக இணைப்பு: என்று கொடுத்தால் தேவலாம். இல்லாட்டி என்னம்மா பெரிய உதவி என்று என்னிடம் யாராவது சண்டைக்கு வர கூடும்:-)

    ReplyDelete
  37. //நணபர் சுந்தரராஜன்,
    எனக்குத் தெரியலைங்க, அது உர்து வார்தை மாதிரி இருக்கு.
    < மணமகள்; செல்வி > என்பது போன்ற அலங்கார வார்த்தைகளாக இருக்கலாம்.

    நான் எனது திருமணத்திற்கு பத்திரிக்கை அச்சடிக்க வில்லை. உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நேரடி மற்றும் தொலைபேசி அழைப்புதான்.

    தொடர்பில்லாதது,

    மாலை இல்லை, ஆரத்தியும் இல்லை. நான், மனைவி, மகன் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம், இருப்போம்.

    நன்றி//

    நூர்-ஈ-சஷ்மி என்ற சொல்லுக்கு, கடவுளுக்கு பிரியமானவள் என்று பொருள் என ஒரு இஸ்லாமிய நண்பர் சொன்னார். ஆனால் அவரும் என்னைப் போல ஒரு நாத்திகர் என்பதால் அதனை உறுதி செய்யவே உங்களிடம் கேட்டேன்.

    அந்த இறை நம்பிக்கை இல்லாத, இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த நண்பர், அவ்வாறு மணமகளின் பெயரை குறிப்பிடுவதற்கு ஒரு காரணத்தையும் சொன்னார்: இஸ்லாம் பெண்களின் உடலுக்கு மட்டும் பர்தா போடுவதில்லை. பெயருக்கும் பர்தா போடுகிறது - அந்த பர்தாதான் "நூர்-ஈ-சஷ்மி" என்று.

    உண்மைதானா என அறிய ஆவல்.

    ReplyDelete
  38. முரணான முத்துக்கள்:

    //இந்தியாவில் எந்த உடை அணிந்திருந்தாலும் காம வெறியர்கள் அவர்களை இரவில் நடமாட விடமாட்டார்கள்.//

    //அந்த அளவுக்கு ஆண்களையும் மிகக் கீழாக நினைக்காதீர்கள், அப்படி ஆண்கள் மிகக் கீழாக ஒருகாலத்தில் இருந்ததால் என்னவோ இந்த பர்தா பழக்கம் வந்திருக்கலாம், இந்தியாவில் இல்லை, அரேபிய பூமியில்.//

    வார்த்தைகளில் கவனம் தேவை கோவியாரே!

    //என் தங்கையும், அக்காவும் அம்மாவும் கூட புடவை தான் உடுத்துகிறார்கள், பிற பெண்களிடம் நீங்கள் குறிப்பிடும் சலனம் என் அம்மா, அக்கா, தங்கையிடம் கூட எனக்கு வருமா ?//

    எங்கள் அண்ணன்கள் முன்பாக நாங்கள் பர்தா அணிய வேண்டும் என்று ஒரு போதும் யாரும் சொன்னதில்லையே?!

    ReplyDelete
  39. //அவனுக்கும் உங்களுக்கும் பிரச்சினையெனில் அவன்தான் பதில் சொல்ல வேண்டும்..! //

    உங்கள் முருகனை நீங்கள் வேறொருவரிடம் இப்படி விட்டுத்தருவது போல, எங்கள் மார்க்கத்தை நாங்கள் விட்டுத் தர முடியாது.

    ReplyDelete
  40. நூரே-எ-ஷஷ்மி என்றால் ஒளி நிறைந்தவள் என்று பொருள். நூர் என்றால் ஒளி!

    ஆனால், இவ்வாறு போடுவது தேவையில்லை.

    எல்லா இஸ்லாமியரும் இஸ்லாம் மார்க்கப்படி நடக்கிறார் என்று சொல்ல முடியாது. அறியாமை எல்லா இடத்திலும் இருக்கிறது. இவ்வாறு போடுவது குடும்ப வழக்கமே தவிர இஸ்லாம் சொல்லவில்லை. அதனால், இது குறித்து இங்கு சர்ச்சை தேவையில்லை.

    ReplyDelete
  41. பெண்களின் பெயருக்கும் இஸ்லாம் பர்தா போடுவதாக நினைத்தால், பல வீர பெண்மணிகளின் வரலாறுகள் நமக்கு இன்று தெரிந்திருக்காது.

    இஸ்லாம் ஒரு இயற்கை மார்க்கம். அதை முழுமையாக புரியாமல், ஒருவர் அவதூறு சொன்னால், அது கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிவதற்கு சமம்.

    ReplyDelete
  42. ///SUMAZLA/சுமஜ்லா said...

    //அவனுக்கும் உங்களுக்கும் பிரச்சினையெனில் அவன்தான் பதில் சொல்ல வேண்டும்..!//

    உங்கள் முருகனை நீங்கள் வேறொருவரிடம் இப்படி விட்டுத் தருவது போல, எங்கள் மார்க்கத்தை நாங்கள் விட்டுத் தர முடியாது.///

    யார் சொன்னது விட்டுக் கொடுத்தது என்று..?

    "அவன்தான் பதில் சொல்ல வேண்டும்.." என்றால், அவன் உங்களுடைய வாழ்நாளில் என்றேனும் ஒரு நாள் கிடைக்கப் போகும் அனுபவத்தில்தான் அவன் தான் யாரென்று காட்டப் போகிறான் என்று உறுதியாகச் சொல்கிறேன்..!

    ஏனெனில் நான் முருகனை அனுபவத்தால்தான் உணர்ந்தேனே தவிர.. புத்தகங்களாலோ, பாடல்களாலோ, எழுத்துக்களாலோ அல்ல..!

    நீங்களும் வேறொருவர் அல்ல.. அவனுடைய குழந்தைதான்.. பிள்ளைதான்.. அந்தந்த புள்ளைக்கு சந்தேகமெனில் அவனே பாடம் புகட்டுவான்.. அல்லது சொல்லித் தருவான்..!

    எந்த மதமும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை.

    நீங்கள் அல்லாவாக பார்க்கிறீர்கள். நான் முருகனா பார்க்கிறேன். அவ்வளவுதான் வித்தியாசம்..!

    இதே பதில்கள் எனக்கும் பொருந்தும்..

    முருகன் இடத்தில் அல்லாவின் பெயரை இட்டு நிரப்பிப் பாருங்கள்.. கச்சிதமாக இருக்கும்..!

    ReplyDelete
  43. ஹா ஹா என்ன அருமையான பதில்.

    உங்களுக்கு தெரியுமா அல்லாஹ் என்றால் என்ன என்று? அல் என்பது அரபியில் The என்பதாகும். அல்லாஹ் என்பது, The God என்பதன் அரபி ஆக்கம். ஆக, அல்லாஹ் என்பது இறைவன் என்பது தான் பொருளே தவிர, நீங்கள் எந்த பெயரிட்டு அழைத்தாலும் அந்த படைத்தவன் செவி மடுப்பான், இதில் யாருக்கும் எந்த ஒரு சந்தேகமும் தேவையில்லை. இதை காரணம் காட்டி அடித்து கொள்வது எம் நோக்கம் அல்ல. அதை விட ஆக்கபூர்வ பணிகள் நிறைய உள்ளன.

    முதலில், அறிவீனர்களுடன் தர்க்கம் செய்யக்கூடாது என்று எங்கள் மார்க்கம் கட்டளை இட்டுள்ளது. நீங்கள் அறிவுள்ளவர், அடுத்தவரின் மத நம்பிக்கையை புண்படுத்தாதவர் என்ற எண்ணத்தில் தான் இதுகாறும் புரிய வைக்க முயன்றேன். என்ன என் நம்பிக்கை சரிதானே?!

    ReplyDelete
  44. [[[நீங்கள் அறிவுள்ளவர், அடுத்தவரின் மத நம்பிக்கையை புண்படுத்தாதவர் என்ற எண்ணத்தில் தான் இதுகாறும் புரிய வைக்க முயன்றேன். என்ன என் நம்பிக்கை சரிதானே?!]]]

    எனது முதல் பி்ன்னூட்டத்திலேயே தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

    உங்கள் நம்பிக்கை உங்களுக்கு.. எனது நம்பிக்கை எனக்கு என்று..!

    பர்தா அணிவது உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்றால் எனக்கு ஒன்றும் ஆட்சேபணையில்லை..

    அதற்கான எனது நம்பிக்கையை நான் தளர்த்திக் கொள்ளப் போவதில்லை.

    உலகத்தில் உங்களைப் போலவே அனைத்து முஸ்லீம் பெண்களும் இல்லை சகோதரியே..!

    ReplyDelete
  45. //இரண்டு பேரையும் தான் கிண்டல் பண்ணுவாங்க. கருப்பாக முழு உடைப் போட்ட பெண்ணை 'பேய்...போகுது' ன்னு சொல்வதை காதால் கேட்டி இருக்கிறேன்.//

    இது போன்ற அனுபவம் எனக்கு நிகழ்ந்ததுண்டு, ஆனால், இது எனக்கு சந்தோஷமே ஏற்படுத்தியது என்றால் உண்மை! காரணம் பேய் எனும் போது பயந்து ஒளிபவர்கள், பெண் எனும் போது, ஈவ் டீசிங் செய்வார்களே?!(நான் எல்லா ஆண்களையும் சொல்லவில்லை! உங்களைப் போல ஒரு சில நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்)

    ReplyDelete
  46. //ஒரு பெண் இடுப்பு பகுதி திறந்து இருப்பதைப் பார்த்து ஒரு ஆண் சலனம் அடைகிறான் என்றால் அவன் கண்ணுலதான் கோளாறு.//

    கண்ணில் கோளாறு அல்ல,.தற்கால சினிமாவில் இடுப்பை மையப்படுத்தி வரும் பாடல்களால் ஏற்பட்ட கோளாறு!

    //இது இஸ்லாமிய வழக்கம், அதில் நம்பிக்கை உள்ள நாங்கள் அதை ஏற்கிறோம், உங்களுக்கு என்ன ? என்ற கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை உண்டு.//

    சபாஷ் இதே தான் நானும் சொன்னேன்.

    ReplyDelete
  47. ////SUMAZLA/சுமஜ்லா said...

    முரணான முத்துக்கள்:

    //இந்தியாவில் எந்த உடை அணிந்திருந்தாலும் காம வெறியர்கள் அவர்களை இரவில் நடமாட விடமாட்டார்கள்.//

    //அந்த அளவுக்கு ஆண்களையும் மிகக் கீழாக நினைக்காதீர்கள், அப்படி ஆண்கள் மிகக் கீழாக ஒருகாலத்தில் இருந்ததால் என்னவோ இந்த பர்தா பழக்கம் வந்திருக்கலாம், இந்தியாவில் இல்லை, அரேபிய பூமியில்.//

    வார்த்தைகளில் கவனம் தேவை கோவியாரே!//

    நான் தவறாக எதையும் சொல்லவில்லை. குற்றம் கடுமையாக நடக்கும் இடங்களில் தான் கடுமையான சட்டதிட்டம் தேவைப்படும். அங்கு பெண்களுக்கு தொல்லைகள் மிகுதியாக இருந்து அதைத் தடுக்க அந்த பழக்கம் வந்திருக்கலாம். காலம் மாறி இருக்கிறது, மனிதர்களும் மாறி இருக்கிறார்கள்.

    // //என் தங்கையும், அக்காவும் அம்மாவும் கூட புடவை தான் உடுத்துகிறார்கள், பிற பெண்களிடம் நீங்கள் குறிப்பிடும் சலனம் என் அம்மா, அக்கா, தங்கையிடம் கூட எனக்கு வருமா ?//

    எங்கள் அண்ணன்கள் முன்பாக நாங்கள் பர்தா அணிய வேண்டும் என்று ஒரு போதும் யாரும் சொன்னதில்லையே?!
    ////

    ஆண் பெண் உடல்.......இதில் உறவு முறைகளை மட்டும் எப்படி கண்ணியமாகப் பார்க்கிறோமோ....அதே போல் பிற பெண்களைப் பார்க்க மனதில்லாமல் போகும் ஆண்களைத்தான் திருத்த வேண்டும்.

    ReplyDelete
  48. // அதை தவிர்ப்பதற்காக நீங்கள் பெண்களை வீட்டில் வைத்து பூட்டி விட்டு நீங்களே வீடிற்கு வெளியேயான எல்லா வேலைகளையும் செய்தால் என்ன ??//

    நீங்கள் தான் பெண்ணடிமைத்தனத்தை வளர்க்கிறீர்கள். அவரவர் குடும்பத்தில் பெண்களை பூட்டி வைத்தால் என்ன திறந்து வைத்தால் என்ன? அது அவருக்காச்சு, அவர் குடும்ப பெண்களுக்காச்சு, யாராவது உங்களிடம் வந்து முறையிட்டால், பின் சொல்லுங்கள்.

    ReplyDelete
  49. //உலகத்தில் உங்களைப் போலவே அனைத்து முஸ்லீம் பெண்களும் இல்லை சகோதரியே..!//

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமல்லவா?

    நண்பரே,
    இன்னொரு விஷயம், பர்தா பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் தான், என்ன வித்தியாசமாக இருக்கிறதா? ஆம், ஆண்கள் அணியக்கூடிய நீளமான அங்கி, தொப்பி, போன்றவை அவர்கள் உள்ளத்திலே, ஒரு வித இறை பயத்தை ஏற்படுத்தி, அவர்கள் பார்வையை கட்டுப்படுத்தும்(பிற மதம் பற்றி நான் சொல்லவில்லை) இதையெல்லாம் கூட ஆணடித்தனம் என்று சொல்வீர்களா?

    அதோடு, நண்பரே, எப்படி காவியுடை தரித்தவர்களை நாங்கள் கண்ணியமாக பார்க்கிறோமோ, அதே போன்று பர்தா அணிந்தவரை தாங்கள் பார்க்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தது எங்கள் அறிவிலித்தனமாகக் கூட இருக்கலாம். மன்னிக்கவும். அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் அனுமதி இல்லை. அப்படி ஒருவர் தலையிட்டால், அதற்கு பதில் தந்து அதை பிரதானமாக்குவதும் சரியல்ல. அவர் தான் முட்டாள் என்று நன்றாக தெரிகிறதே, பிறகு ஏன் முட்டாள்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்?

    ReplyDelete
  50. //ஆண் பெண் உடல்.......இதில் உறவு முறைகளை மட்டும் எப்படி கண்ணியமாகப் பார்க்கிறோமோ....அதே போல் பிற பெண்களைப் பார்க்க மனதில்லாமல் போகும் ஆண்களைத்தான் திருத்த வேண்டும்//

    பிற ஆண்களைத் திருத்த எங்களுக்கு உரிமை இல்லை. அதனால், நாங்கள் எங்களுக்கு கவசமிட்டுக் கொள்கிறோம். என்னைப் பொறுத்தவரை பர்தா இல்லாமல் போவது, கவசமில்லாமல் போருக்கு போவது போல.

    ஒரு சிலருக்கு அது சுலபமாக இருக்கலாம். எனக்கு இல்லை.

    ReplyDelete
  51. தரக்குறைவான வார்த்தைகளுக்கு இங்கு அனுமதி கிடையாது.

    அனானிகள் நிறுத்திக்கொள்ளலாம். ஏதாவது சந்தேகம் என்றால், உண்மைப் பெயரில் வரவும்.

    ReplyDelete
  52. //சுந்தரராஜன் said...
    //நணபர் சுந்தரராஜன்,

    நூர்-ஈ-சஷ்மி என்ற சொல்லுக்கு, கடவுளுக்கு பிரியமானவள் என்று பொருள் என ஒரு இஸ்லாமிய நண்பர் சொன்னார். ஆனால் அவரும் என்னைப் போல ஒரு நாத்திகர் என்பதால் அதனை உறுதி செய்யவே உங்களிடம் கேட்டேன்
    //


    தோழ‌ர் சுந்த‌ர்ராஜ‌ன், நீங்க‌ள் குறிப்பிட்ட அந்த‌ ந‌ண்ப‌ர் இறை ம‌றுப்ப‌வ‌ராக‌ (நாத்திக‌ர்) இருந்தால் அவ‌ர் நிச்ச‌ய‌ம் முஸ்லீமாக‌வே இருக்க‌ மாட்டார், இறை ம‌றுப்பாள‌ர் நிச்ச‌ய‌ம் முஃமீன் இல்லை என்ப‌து தெளிவாக‌ எடுத்துச்சொல்ல‌ப்ப‌ட்டிருக்கிற‌து

    நூர்‍ ஈ ச‌ஷ்மி என்ப‌து இறைவ‌னுக்கு பிரிய‌மான‌வ‌ளே என்ரு சொன்னாலும் அதில் ஒருறும் த‌வ‌ரில்லையே, இறைதூத‌ரின் பெய‌ரை த‌ன் பெய‌றுட‌ன் சேர்த்துக்கொள்வ‌து போல்

    ReplyDelete
  53. //ஆண் பெண் உடல்.......இதில் உறவு முறைகளை மட்டும் எப்படி கண்ணியமாகப் பார்க்கிறோமோ....அதே போல் பிற பெண்களைப் பார்க்க மனதில்லாமல் போகும் ஆண்களைத்தான் திருத்த வேண்டும்//

    கேவியார் அவர்களே நாம் யாரையும் திருத்தமுயற்சி செய்தாலும் முடியாது, எனவே இறையச்சம் மனதில் வந்துவிட்டால் நிச்சயம் ஆண்கள் மனைவி/தாய் தவிர அனைவரையும் சகோதரிபோலவே பாவிப்பார்கள்

    ReplyDelete
  54. //கோவி.கண்ணன் said...
    ...நான் அப்படிச் சொல்லவில்லை, அவர்கள் அணியும் ஆடைதான் கண்ணியம் மிக்கது என்றால் சேலை அணிபவர்களும், தாவணி அணியும் பெண்களுக்கும் உங்களுக்கு கண்ணியக் குறைவாக தெரிகிறதா என்றே கேட்கிறேன் ? ////

    என் தாய் தங்கை அணியும் உடையை நான் எப்படி கண்ணியக்குறைவான ஆடை என்று சொல்லுவேன்?

    ஆனால், பர்தா கண்ணியமான ஆடை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

    ReplyDelete
  55. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    [[[நீங்கள் அறிவுள்ளவர், அடுத்தவரின் மத நம்பிக்கையை புண்படுத்தாதவர் என்ற எண்ணத்தில் தான் இதுகாறும் புரிய வைக்க முயன்றேன். என்ன என் நம்பிக்கை சரிதானே?!]]]

    எனது முதல் பி்ன்னூட்டத்திலேயே தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

    உங்கள் நம்பிக்கை உங்களுக்கு.. எனது நம்பிக்கை எனக்கு என்று..!
    //

    உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம், அதற்காக அடுத்தவர் நம்பிக்கையை விமர்சிப்பதற்கு உங்களுக்கு உரிமையில்லை தோழரே.

    ReplyDelete
  56. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    [[[நீங்கள் அறிவுள்ளவர், அடுத்தவரின் மத நம்பிக்கையை புண்படுத்தாதவர் என்ற எண்ணத்தில் தான் இதுகாறும் புரிய வைக்க முயன்றேன். என்ன என் நம்பிக்கை சரிதானே?!]]]

    எனது முதல் பி்ன்னூட்டத்திலேயே தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

    உங்கள் நம்பிக்கை உங்களுக்கு.. எனது நம்பிக்கை எனக்கு என்று..!

    பர்தா அணிவது உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்றால் எனக்கு ஒன்றும் ஆட்சேபணையில்லை..
    //

    சகோதரர் உண்மைத்தமிழன்...முஸ்லீம் பெண்கள் அனைவரும் விரும்பியே பர்தா அணிகிறார்கள், அவர்களுக்கு இது 100% பாதுகாப்பாக‌வும், இறைமார்க்க‌த்தை பேணுப‌வ‌ர்க‌ளாக‌வும் இருக்கிற‌து..

    ReplyDelete
  57. //கோவி.கண்ணன் said...
    ...அவ்வளவு மோசமாக என்னையெல்லாம் வளர்க்கவில்லை, வளர்ப்பு என்று எடுத்துக் கொள்ளாவிட்டாலும், நான் அந்த அளவுக்கெல்லாம் சலனப்படுவதில்லை. நீங்கள் வேண்டுமானால் சோதித்துப் பார்க்கலாம் :)//

    நாம் சலனப்படுவதில்லை கோவியாரே, மணிக்கட்டை பார்த்தும் இச்சை வரும் / சலனப்படுகிறேன் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு இன்ஞ் இடுப்பு போதும். ;)

    ReplyDelete
  58. //களப்பிரர் - jp said...
    //அந்நிய ஆண்களின் இச்சைப் பார்வையில் இருந்து தன்னையும் தன் உடலையும் பாதுகாத்துக் கொள்ள அவசியமாகிறது. //

    தலை, என்னை போன்ற ஆள்களுக்கு முகமும் மணி கட்டும் கூட இச்சை பார்வை பார்க்க தூண்டுபவை. பர்தா போட்ட பெண்களுக்கும் பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்டதாக செய்திகள் இருக்கின்றனா. அதை தவிர்ப்பதற்காக நீங்கள் பெண்களை வீட்டில் வைத்து பூட்டி விட்டு நீங்களே வீடிற்கு வெளியேயான எல்லா வேலைகளையும் செய்தால் என்ன ??
    //

    தோழர் களப்பிரரே மணிக்கட்டையும், முகத்தையும் பார்த்து இட்சைக்கொள்ளும் உங்களைப்போன்றவர்கள் மத்தியில் சேலை/தாவணியுடன் வரும் பெண்கள் என்னா பாடுப‌டுவார்க‌ள்??? இத‌னால்தான் ஒட்டுமொத்த‌ ஆண் சமூக‌த்திற்கே கெட்ட‌ப்பெய‌ர்..

    ReplyDelete
  59. //SUMAZLA/சுமஜ்லா said...
    நூரே-எ-ஷஷ்மி என்றால் ஒளி நிறைந்தவள் என்று பொருள். நூர் என்றால் ஒளி!

    ஆனால், இவ்வாறு போடுவது தேவையில்லை.

    எல்லா இஸ்லாமியரும் இஸ்லாம் மார்க்கப்படி நடக்கிறார் என்று சொல்ல முடியாது. அறியாமை எல்லா இடத்திலும் இருக்கிறது. இவ்வாறு போடுவது குடும்ப வழக்கமே தவிர இஸ்லாம் சொல்லவில்லை. அதனால், இது குறித்து இங்கு சர்ச்சை தேவையில்லை//
    ===================================
    //அபுஅஃப்ஸர் said...
    //சுந்தரராஜன் said...
    //நணபர் சுந்தரராஜன்,

    நூர்-ஈ-சஷ்மி என்ற சொல்லுக்கு, கடவுளுக்கு பிரியமானவள் என்று பொருள் என ஒரு இஸ்லாமிய நண்பர் சொன்னார். ஆனால் அவரும் என்னைப் போல ஒரு நாத்திகர் என்பதால் அதனை உறுதி செய்யவே உங்களிடம் கேட்டேன்
    //


    தோழ‌ர் சுந்த‌ர்ராஜ‌ன், நீங்க‌ள் குறிப்பிட்ட அந்த‌ ந‌ண்ப‌ர் இறை ம‌றுப்ப‌வ‌ராக‌ (நாத்திக‌ர்) இருந்தால் அவ‌ர் நிச்ச‌ய‌ம் முஸ்லீமாக‌வே இருக்க‌ மாட்டார், இறை ம‌றுப்பாள‌ர் நிச்ச‌ய‌ம் முஃமீன் இல்லை என்ப‌து தெளிவாக‌ எடுத்துச்சொல்ல‌ப்ப‌ட்டிருக்கிற‌து

    நூர்‍ ஈ ச‌ஷ்மி என்ப‌து இறைவ‌னுக்கு பிரிய‌மான‌வ‌ளே என்ரு சொன்னாலும் அதில் ஒருறும் த‌வ‌ரில்லையே, இறைதூத‌ரின் பெய‌ரை த‌ன் பெய‌றுட‌ன் சேர்த்துக்கொள்வ‌து போல்//


    ????????????????

    ReplyDelete
  60. பர்தா அல்லாத உடைகள் அணிவது பார்க்கும் ஆண்களின் மனதை சலனப்படுத்தும் என்றால்...

    சாதாரண உடை அணிந்து வரும் பெண்களைப் பார்த்து சலனப்படாமல் இருக்க இஸ்லாமிய ஆண்கள் கடைப்பிடிக்கும் வழக்கம் என்ன?

    ReplyDelete
  61. இப்படித்தான் உலகத்திலே தேவையேயில்லாமல் பிரச்சினையை உருவாக்குகிறார்கள்... ஒவ்வொரு சமூகமும் அதற்குரிய தனிப்பட்ட தனித்தன்மை வாய்ந்த பழக்கங்களையும் வழக்கங்களையும் நெறிமுறைகளையும் கொண்டுள்ளது. வேட்டி, சேலை கட்டுவது எமக்கு எவ்வாறு கஷ்டமில்லையோ அதுபோலத் தான் அவர்களுக்கும். உண்மையாகப் பார்த்தால் இது சமூகப் பழக்கங்களின் வேறுபாடன்றி வேறொன்றுமில்லை... தேவையில்லாத கதைகளால் வீண் கசப்புணர்வையும், வெறுப்புணர்வுகளையும் சம்பாதிப்பதை விட்டு விட்டு ஆரோக்கியமான கருத்துக்களால் உலகை கட்டியெழுப்பப்பாருங்கள். இந்தப் பதிவையிட்டதற்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  62. //SUMAZLA/சுமஜ்லா said...

    ஹா ஹா என்ன அருமையான பதில்.

    உங்களுக்கு தெரியுமா அல்லாஹ் என்றால் என்ன என்று? அல் என்பது அரபியில் The என்பதாகும். அல்லாஹ் என்பது, The God என்பதன் அரபி ஆக்கம். ஆக, அல்லாஹ் என்பது இறைவன் என்பது தான் பொருளே தவிர, நீங்கள் எந்த பெயரிட்டு அழைத்தாலும் அந்த படைத்தவன் செவி மடுப்பான், இதில் யாருக்கும் எந்த ஒரு சந்தேகமும் தேவையில்லை. இதை காரணம் காட்டி அடித்து கொள்வது எம் நோக்கம் அல்ல. அதை விட ஆக்கபூர்வ பணிகள் நிறைய உள்ளன.//

    அல்லாஹ்' என்றால் இல்லாது எங்கும் நிறைந்து இருப்பவன் என்று பொருள். இது நான் கேள்விப்பட்டது. சரிதானே...

    ReplyDelete
  63. //உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம், அதற்காக அடுத்தவர் நம்பிக்கையை விமர்சிப்பதற்கு உங்களுக்கு உரிமையில்லை தோழரே.//

    தனி மனித நம்பிக்கைகளை விமர்சிப்பது கூட தவறல்ல. ஆனால் போனால் போகட்டும் அது தேவையில்லை என்று சொல்லிவிடலாம். ஆனால் மதங்களின் பெயரால் நடத்தப்படும் நம்பிக்கைகளை யார் வேண்டுமானாலும் கேள்விக்குட்படுத்தலாம் என்று கருதுகிறேன்.

    மண்டையில் தேங்காய் உடைப்பதிலிருந்து, எங்கும் நின்றுகொண்டு 'பாவிகளே' என்றழைக்கும் கூட்டம் பற்றியும், பர்தா போடுவதையும் ஒன்றாகத்தான் எல்லோரும் பார்க்கிறோம். ஆனால் பர்தாவைப் பற்றி அதிக பதிவர்கள் கண்டு கொள்வதில்லை. எனக்குத் தெரிந்த காரணம் ஒன்றுண்டு.

    உண்மைத் தமிழன், கோவியார் கருத்துக்களை முழுமையாக ஆதரிக்கிறேன். பெண்ணடிமைத்தனம் என்பதைத் தவிர இதற்கு வேறு வார்த்தைகள் கிடையாது.

    ReplyDelete
  64. ஒவ்வொரு மதத்திலும் சமூகத்திலும் பல கருத்துக்கள், பழக்க வழக்கங்கள் பழங்காலத்தியவை. பழங்கால நாகரிகங்களுக்கு தக்கவாறு வடிவமைக்கப் பட்டவை. அவற்றை நவீன உலகத்தின் தேவைகளுக்கு தக்கவாறு மாறுதல் செய்வது அவசியமானது.

    தேவைப் பட்டால், அந்த பழக்க வழக்கங்களை இன்றைய காலகட்டத்திற்கு தகுந்தார் போல் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியது, அந்தந்த சமூகத்தை சேர்ந்த பெரியோர்களுக்கு மட்டுமே உள்ள கடமை, பொறுப்பு மற்றும் உரிமை ஆகும்.

    அதே சமயத்தில், ஒரு குறிப்பிட்ட மத மற்றும் சமூக பழக்க வழக்கங்களை மற்ற மதத்தவரும் சமூகத்தினரும் விமர்சனம் செய்வது அநாகரிகமானது. தேவையற்றது. கண்டிக்கத் தக்கது.

    நன்றி.

    ReplyDelete
  65. ஒவ்வொரு மதத்திலும் சமூகத்திலும் பல கருத்துக்கள், பழக்க வழக்கங்கள் பழங்காலத்தியவை. பழங்கால நாகரிகங்களுக்கு தக்கவாறு வடிவமைக்கப் பட்டவை. அவற்றை நவீன உலகத்தின் தேவைகளுக்கு தக்கவாறு மாறுதல் செய்வது அவசியமானது.

    தேவைப் பட்டால், அந்த பழக்க வழக்கங்களை இன்றைய காலகட்டத்திற்கு தகுந்தார் போல் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியது, அந்தந்த சமூகத்தை சேர்ந்த பெரியோர்களுக்கு மட்டுமே உள்ள கடமை, பொறுப்பு மற்றும் உரிமை ஆகும்.

    அதே சமயத்தில், ஒரு குறிப்பிட்ட மத மற்றும் சமூக பழக்க வழக்கங்களை மற்ற மதத்தவரும் சமூகத்தினரும் விமர்சனம் செய்வது அநாகரிகமானது. தேவையற்றது. கண்டிக்கத் தக்கது.

    நன்றி.

    ReplyDelete
  66. //பர்தா, பெண்களை அந்நிய ஆண்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றும் என்பது உங்களது நம்பிக்கை..

    அது அடிமைத்தனம் என்பது எனது நம்பிக்கை.. //

    முத்தாய்ப்பாய் நான் ஒன்று சொல்கிறேன். நம்ம உண்மை தமிழர் ஊட்டிக்கு போனால், அங்கு சுவட்டர் அணிவது கூட அடிமைத்தனம் என்பார். ஆனால், அது பெண்ணடிமைத்தனம் என்ற வார்த்தைக்குள் வராது என்பதால், பொதுவடிமைத்தனம் என சொல்லகூடும்.

    இவ்வளவு ஏன், ஆடை அணிவது கூட அடிமைத்தனம் என்றும் வாதிடலாம். கற்கால மனிதர்கள் ஆடை அணிந்தார்களா என்ன? ஏன் ஆடை என்ற பெயரால், உடலின் சில பாகங்களை மறைக்கிறீர்கள்? வெட்கம் தானே? உங்களுக்கு உடலின் ஒரு சில பாகங்களில் மட்டும் இருக்கும் வெட்கம், எங்களுக்கு எல்லா இடத்திலும் இருக்கிறது. அதனால் தான் நாங்கள் பர்தா அணிகிறோம்.

    அலகு குத்துவது அறிவிலித்தனம், காவடி தூக்குவது காட்டுமிராண்டித்தனம் என்று எந்த ஒரு இஸ்லாமியனும் சொல்லாத போது, எங்கள் கலாச்சாரத்தை விமர்சிக்க உமக்கு என்ன உரிமை இருக்கிறது? முதலில், உமது கலாச்சாரத்தில் இருக்கும் அனாச்சாரத்தை களைந்து விட்டு வாரும், பின் பேசலாம்.

    ReplyDelete
  67. தருமி, பர்தா அணியும் பெண்ணே தன் நிலையை தெளிவாகச் சொன்ன பின்னும், இன்னும் பெண்ணடிமைத்தனம் என்று சொல்லிக் கொண்டிருப்பது நகைமுரண்.

    ஆண்கள் பனியனில் திரியும் போது, பெண்களுக்கு மட்டும் 5 மீட்டர் துணியை சுற்றிவிட்டு நடக்கச் சொல்வது பெண்ணடிமைத்தனம் என்று சொல்லும் குழுவும் இங்குண்டு, ஐயா.

    ReplyDelete
  68. சுமஜ்லா..எழுதிய ..
    //அடுத்தவர் மத நம்பிக்கை புண்படாத வகையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது தான் நம் பாரத மரபு. இந்த சுதந்திர நன்னாளில் அதை நாம் கைகொள்ள முயற்சிப்போமாக! ////
    maximum இந்திய ...எழுதிய
    //அதே சமயத்தில், ஒரு குறிப்பிட்ட மத மற்றும் சமூக பழக்க வழக்கங்களை மற்ற மதத்தவரும் சமூகத்தினரும் விமர்சனம் செய்வது அநாகரிகமானது. தேவையற்றது. கண்டிக்கத் தக்கது.///

    இவர்களுடைய கருத்து ரொம்பவே பிடித்திருக்கிறது.
    அடுத்தவர் மத நம்பிக்கை (புரியாமல்) விமர்சினம் பண்ணுவது அவரவர்க்கு உரிமை இருக்கு, ஆனால் அப்படி பண்ணுவது அநாகரிகமானது, தேவையற்றது.. சுமஜ்ள, maximum india ..நல்ல கருத்து நன்றி , 'பீர்'பால் நல்ல இடுகை நன்றி

    ReplyDelete
  69. //தனி மனித நம்பிக்கைகளை விமர்சிப்பது கூட தவறல்ல. ஆனால் போனால் போகட்டும் அது தேவையில்லை என்று சொல்லிவிடலாம். ஆனால் மதங்களின் பெயரால் நடத்தப்படும் நம்பிக்கைகளை யார் வேண்டுமானாலும் கேள்விக்குட்படுத்தலாம் என்று கருதுகிறேன்.//

    ஒப்புக்கொள்ளப் பட வேண்டியது....வழி மொழிகிறேன்....

    ReplyDelete
  70. //Blogger RAD MADHAV said...

    //தனி மனித நம்பிக்கைகளை விமர்சிப்பது கூட தவறல்ல. ஆனால் போனால் போகட்டும் அது தேவையில்லை என்று சொல்லிவிடலாம். ஆனால் மதங்களின் பெயரால் நடத்தப்படும் நம்பிக்கைகளை யார் வேண்டுமானாலும் கேள்விக்குட்படுத்தலாம் என்று கருதுகிறேன்.//

    ஒப்புக்கொள்ளப் பட வேண்டியது....வழி மொழிகிறேன்....//

    அடுத்தவன் வீட்டு கழிவறை ஓட்டையால் நமக்கு நாற்றம் அடிக்கும் போது, அதை சரி செய்ய கேட்பது நியாயம். நம் வீட்டில் கழிவறை இல்லை என்பதற்காக, அவனது கழிவறையையும் இடிக்கச்சொல்வது, எந்த விதத்தில் வாத நியாயம்?

    ReplyDelete
  71. என்றாலும் பர்தா பற்றிய இந்த சர்ச்சை இவ்வளவு சூடு பிடிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது உண்மை.

    குளிரை எதிர் கொள்வதற்காக மேலை நாடுகளில், பருவ நிலைக்கேற்ப பயன்படுத்தும் கோட் , சூட், டை, சாக்ஸ் இவைகளை இன்றும் நாகரீக முகம் கருதி நாம் பயன்படுத்துகின்றோம். நம்மால் தவிர்க்க முடிகின்றதா.

    அரேபிய பாலைவனத்தில் கடும் வெப்பம் மற்றும் மணல் காற்று இவைகளில் நின்று பாதுகாத்துக் கொள்ள அரேபியர்கள் உபயோகித்த உடைமுறைகள் தான், ஆணுக்கு 'கந்துர, மற்றும் பெண்ணுக்கு ' பர்தா.
    (இங்குள்ள கால நிலை 'ஆறு மாதம் வெப்பம், ஆறு மாதம் குளிர்')

    ஆண்கள் பொதுவாக அதிகம் வெளியில் செல்பவர்கள். எனவே வெப்பம் குறைவாக தாக்கும் 'வெள்ளை உடை. பெண்கள் பொதுவாக வெளியில் செல்வது மிகவும் குறைவு.
    எனவே 'வெப்பம் அதிகம் தாக்கும் 'கருப்பு உடை.

    முதலில் பர்தா என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டும் அணியும் உடை என்ற கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள். இங்கு கிருத்துவர், யூதர், பெண்களும், பர்தா அணிவார்கள்.

    இத்தோடு பர்தா விவாதத்தை முடித்து விடுவது நல்லது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  72. //RAD MADHAV said...
    ... இத்தோடு பர்தா விவாதத்தை முடித்து விடுவது நல்லது என்று நினைக்கிறேன்.//

    RAD MADHAV, சரிதான்.

    போர்டு போட்ருவோம்.

    இன்றே இப்படம் கடைசி

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.