Jul 2, 2009

ஜூன் - மறக்க நினைக்கும் மாதம்.

 

கடந்த ஜூன் மாதம் முழுவதும் என் வாழ்வில் மறக்க வேண்டிய நாட்களாக கடந்து போனது.

குவைத் வந்துவிட்டு மீண்டும் இந்தியா திரும்ப வேண்டிய குடும்ப சூழல். விடுப்பு தர மறுத்த மேனேஜரிடம் (வேலையில் திரும்பச் சேர்ந்த 4 நாட்களில் யார் தருவார்) வாக்குவாதம் முற்றி, கடைசியில் ‘நான் வேலையை விடுகிறேன்’ என்பதாக நின்றது. பின்பு அவரே தொடர்பு கொண்டு, எத்தனை நாட்கள் வேண்டும் என்று அனுப்பிவைத்தார்.

விமானத்தில் எனக்கு சன்னல் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது, கண்ணை மூடி தூங்க எத்தனித்த போது,

‘நீங்க தமிழா?’ ஒரு பெண் குரல் எழுப்பியது.

‘ம்… சொல்லுங்க’.

‘எனக்கு அந்த சீட் தர முடியுமா?’.

ஒன்றும் பேசாமல் வெளியே வந்து இடம் கொடுத்தேன்.

‘தேங்ஸ்’.

‘இதில என்னங்க இருக்கு பரவாயில்லை’  என்றேன்.

‘நான் கொலும்பு, நீங்க?’

‘மதுரை, தமிழ்நாடு’

‘ஓ… இந்தியாவா?’

விமானம் கிளம்பி சற்று நேரத்தில் துபாயில் தரையிரக்கப்பட்டது. வண்டி ஒரு மணி நேரம் நிக்கும், டீ வடை சாப்றவங்க சாப்டுக்கலாம் சொல்லாத குறை. ஆளாளுக்கு எழுந்து அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர். அப்போது வந்த குறுஞ்செய்தியை வாசிக்க கைபேசியை எடுத்த போதுதான் நினைவு வந்தது, அடடா… அவசரத்தில் அறையை பூட்ட மறந்துவிட்டோமோ என்பது. பக்கத்து அறைவாசிக்கு அடித்துச் சொல்லலாம் என்றால், ரோமிங் சார்ஜ் எக்குத்தப்பாய் ஏறும். வேண்டாம் இந்தியா சென்று இலவசமாய் இமெயில் செய்யலாம் என்று, கைபேசியை கைப்பைக்குள் வைக்கும் போது…

‘ஒரு கால் பண்ணிக்கலாமா?’ மீண்டும் அதே கொலுப்புப் பெண் (எழுத்துப்பிழை அல்ல)

‘ரோமிங் சார்ஜ் அதிகம் ஆகுமேங்க’

‘அவசரம்… ப்ளீஸ்…’

இந்தாங்க. (இளகிய மனம் அல்லது இளிச்ச மனம்)

போனில் கதைக்கிறாள். ‘நான் தான் கதைக்கிறேன். டுபாயில் இருக்கேன். இல்லை… ஒருமணியில் புறப்படும். நான் இல்லை என்டு கவலைப்பட வேண்டாம். நான் கோல் எடுக்கறேன் என்ன. இல்லை… இல்லை… ஓம்.. ஓமாம்.. (சிலபல ஓமாம் இல்லைகள் சிறிது கண்ணீருக்குப் பறகு) சரி நான் வக்கிறேன், பிறகு பாப்போம் என்ன. என்று இணைப்பை துண்டித்துவிட்டு என் கையில் பேசியை தருகிறாள். மீதித்தொகை 0.090 என்று வருகிறது. அப்போது கண்ணை மூடியவன்தான் கொலும்பு விமான நிலையத்தில் தான் திறந்தேன்.

மதுரையில் மே மாதத்தில் ஏறக்குறைய அனைத்து நாட்களிலும் மாலையில் மழை பெய்து குளிரூட்டியது. இம்முறை ஒரு நாளிலும் மழை இல்லை. வெய்யிலும் வாட்டி எடுத்தது. சிக்னலில் நிற்கும் போது காலில் யாரோ நெருப்பு வைப்பது போன்ற உணர்வு. சரி குற்றால அருவியில் தண்ணீர் நன்றாக விழுவதாகச் செய்திகளில் வருகிறதே குற்றாலத்தில் உடலைக் குளிரூட்டலாம் என்று அங்கு சென்றால், கிரகம் ஆட்டிப்படைக்கிறது. நேற்று வரை நன்றாக விழுந்த தண்ணீர் இன்று சிறுபிள்ளை மூத்திரம் போல விழுகிறது என்று கடைக்காரர்களின் கவலையை கேட்டுவிட்டுத் திரும்பினோம்.

மற்றொரு நாள் இராமநாதபுரம் உறவினர் திருமணத்திற்குச் சென்று திரும்புகையில் வண்டியில் குளிர்சாதனம் வேலை செய்யவில்லை. காலுக்கடியில் இன்ஜின் சூடு மொத்தம் வந்து பாதத்தை புண்ணாக்குகிறது. என்னப்பா இவ்வளவு சூடு என்று கேட்டால், ஓட்டுனர், ‘ரேடியேட்டர் பேன் வேல செய்யல போலயிருக்கு சார்’ என்கிறார்.

நண்பர் ‘அகநாழிகை‘  பொன்.வாசுதேவன் தனது ஒரு பதிவில் சொல்கிறார், ‘நம்மின் ஒரு சதவிகித செய்கையைக்கூட நாமே முடிவு செய்வதென்பது இயலாததாய் இருக்கிறது’ என்பதாக, இதை முற்றிலும் உண்மையாக இன்று நான் உணர்கிறேன்.

ஊருக்கு திரும்பிச் சென்ற காரியம் வெற்றியடைந்தது மட்டுமே மகிழ்ச்சி.

******************************

இடையில் இமெயில் நலம் விசாரித்த நண்பர் டக்ளஸ்… மற்றும் தொலைபேசியில் நலம் விசாரித்து தங்கை திருமண விழாவிற்கு அழைத்த நண்பர் கார்த்திகை பாண்டியன் (மன்னிக்கணும் சகா… அவசர வேலையில் சிக்கிக் கொண்டு வர முடியாமல் போய்விட்டது) மற்றும் தொலைபேசியிலும் இமெயிலிலும் தொடர்பு கொண்ட பதிவுலகம் சாரா என் அனைத்துத் தோழர்களுக்கும் நன்றியை எப்படிச் சொல்வது.

இனி தொடர்ந்து தொடர்பில் இருப்போம்.

7 comments:

  1. பீர்,
    ரொம்ப வருத்தப்படாதீங்க.
    அடுத்த ஜுன் மாதம் சரியாகிடும்.

    ReplyDelete
  2. ஆமாங்க, இப்ப கொஞ்சம் வெயிலு ஜாஸ்திதான்!

    இவ்வளவு கஷ்டமா நம்ம ஊரு வந்த வங்களுக்கு?

    ReplyDelete
  3. பரவாயில்லை நண்பா.. மீண்டும் பதிவுலகில் கலக்க வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. நிறைய வடைய மிஸ் பண்ணிட்டிங்கன்னு தெரியுது!

    அடுத்த ஜூன்ல புடிச்சிருவோம்!

    ReplyDelete
  5. வருகைக்கு வாழ்த்துக்கள்.கலக்குங்க.

    ReplyDelete
  6. நன்றி வாசு அண்ணன், கொஞ்சூண்டு வருத்தம் இருந்தது, தொடர்புல வந்துட்டேன்ல இனி அதுவும் இருக்காது.


    புன்னகைக்கு நன்றி அன்பு & டக்...


    பப்பு வெயிலு கொஞ்சம் இல்ல, ரொம்பவே ஜாஸ்தியா இருந்தது.


    நன்றி கார்த்திக்,


    அடுத்த ஜூன் வரை காத்திருக்கப்போவதில்லை வால், வெகு விரைவில் பிடித்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.


    கட்டாயம் கலக்குவோம் ஸ்ரீதர்,

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.