Oct 16, 2009

அம்மா

எனக்கு நான்கு வயதிருக்கும், பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஆயா வந்தபிறகு தான், அம்மா எனக்கு தலை சீவி விடுவாள். தேங்காய் எண்ணை தேய்த்து, ஏற்றி சீவி, பிறகு நெற்றியிலிருந்து முன்று இன்ஞ் அளவிற்கு விட்டு மீதி முடிகளை வலதிலிருந்து இடது வாகு எடுத்து ஒட்ட வகிர்ந்து விடுவாள். முன்பக்கம் மட்டும் தூக்கலாக பாப் ஆகி இருப்பதால், அதற்கு பெயர் பஃப். அவசரத்திற்கு வேறு மாதிரியாக சீவினாலும், அழுது அடம் பிடிப்பேன். என் ஃபேவரைட் பஃப் ஹேர்ஸ்டைல் தான். எனக்கு பஃப் சீவிவிட்டதிலிருந்து தான் என் அம்மா எனக்கு நினைவிருக்கிறாள். அதற்கு முன்பு, எனக்கு இந்த பூவுலகை காண்பிப்பதற்காக, என்னை பெற்றெடுப்பதற்காக 20 வருடங்களாக கோயில், குளம், தர்கா என்று வேண்டுதலுக்காக சுற்றியிருக்கிறாள். தன்னை வருத்தி எனக்கு உயிர் கொடுத்த என் அம்மா.

எனக்கு ஆறு வயதிருக்கும், அதிகாலை நான்கு / ஐந்து மணிக்கு, பாண்டி கடையில் வாங்கிவந்த டீ யை டம்ளரில் ஊற்றி ஆற்றியவாறே என்னை மட்டும் மெதுவாக எழுப்புவாள், 'டேய்.. பீரப்பா.. எந்திரிப்பா.. டீ குடிச்சுட்டு படுத்துக்கோ'. எனக்கு டீ குடிப்பதில் அலாதி பிரியம் இருந்தது. அருகில் உறங்கிக்கொண்டிருக்கும் அப்பாவிற்கு சத்தம் கேட்டுவிட்டால், அம்மாவிற்கு திட்டு விழும், 'தூங்கற பையன எழுப்பி டீ குடுக்குறியே.. அறிவிருக்கா உனக்கு, அவன கெடுக்கறது நீ தான்'. இல்லை.. எனக்காகவே என்னை எழுப்புவாள்,  எனக்காக திட்டு வாங்கிய என் அம்மா.

என் பதின் வயதிற்கு முன்பாகவே அப்பா இறந்துவிட்டார். அதன் பிறகு என் அம்மா தான் என்னை படிக்க வைத்தாள். 'வீட்டுப்பாடம் எழுதிட்டு போய் தூங்குப்பா' என்பாள். நான் எழுதி முடிக்கும்வரை அருகிலேயே அமர்ந்திருப்பாள். பீரப்பா.. குண்டு குண்டா.. அழகா எழுதுவான்.. தெரியுமா' என்று பக்கத்து வீடுகளில் பெருமையாய் பேசுவாள், எந்த மொழி எழுத்தானாலும், கட்டமும் வட்டமுமாக மட்டுமே அறிந்திருந்த, எழுதப்படிக்க தெரியா என் அம்மா.

முதன்முறை நான் வெளிநாடு கிளம்பும்போது, வாசலில் கட்டிபடித்து அழுது வழியனுப்பினாள். அன்றிலிருந்து இன்றுவரை பாசத்திற்காக ஏங்குகிறேன். அன்று அங்கு தொலைத்துவிட்டு இன்றும் எங்கோ தேடுகிறேன். இந்த பதின்இரண்டு ஆண்டுகளில் நான் மனதார மகிழ்ச்சியாய் இருந்த தருணங்களை மணிகளில் எண்ணிவிடலாம்.  பாசம் கிடைக்காத போது ஏங்குவதும், பாசம் காட்ட தருணம் வரும்போது பகிரத்தெரியாதவனாகவும் மாற்றிவிட்டது இந்த பதின்இரண்டு வருட வெளிநாட்டு வாழ்க்கை. அக்கா, தம்பி என கூட்டு ஒரே குடும்பமாக இருந்தாலும், தேவையான பணத்தை அனுப்பிவிட்டால் அம்மா சந்தோசமாக, சுகமாக இருப்பாள் என்றே இருந்துவிட்டேன். 'நீ சந்தோசமா இருக்கியாம்மா' ஒரு முறை கூட கேட்டதில்லை. முன்று முறை உம்ரா* செய்த நான், என் அம்மாவிற்கு ஒருமுறை கூட வாய்ப்பு கொடுக்கவில்லை. புழல் சிறையில் இல்லாவிட்டாலும், சூழல்சிறையின் குற்றவாளி நான்.

என்னை ஈன்ற பொழுதினை பெரிதாக உவந்திருப்பாளா தெரியவில்லை, ஆனால் இந்த தாய் வயிற்றில் பிறவி எடுத்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்.

நேற்று அக்காவிடமிருந்து போன், 'அம்மாக்கு சுகர் அதிகமாகி ஆஸ்பத்திரில சேர்த்திருக்கோம்பா'. நீண்ட நாட்களுக்கு பிறகு நான் அறியாமல் என் கண்களில் கண்ணீர். ஒன்றும் பேச முடியவில்லை. 'நீங்க வச்சிடுங்க, நான் திரும்ப கால் பண்றேன்' வைத்துவிட்டேன்.

படுப்பதும் திரும்ப எழுந்து அமர்வதுமாய் நேற்று காலையிலிருந்தே ஒரு மாதிரியாக இருந்திருக்கறார். கேட்டதற்கு, 'ஒன்றுமில்லை, தூக்கம் வருவதுமாதிரி இருக்கிறது' என்றாராம். மாலையில் அக்காவுடன் நடந்துதான் சக்கரை அளவு சோதனை செய்ய சென்றிருக்கிறார். மருத்துவனை சென்றதும், 'அல்லாஹ்' என்றவாரே விழுந்துவிட்டாராம். க்வாலிட்டி கேரில் ஈ.ஸி.ஜி எடுத்ததில், பல்ஸ் லோவாக இருப்பதால் உடனடியாக ஐ.சி.யூவில் வைக்க வேண்டும் என்றிருக்கிறார்கள். அங்கிருந்தே அம்புலன்ஸில் செண்பகம் மருத்துவமனை டாக்டர் அண்ணாமலைசாமியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். எனக்கு உயிர் கொடுத்த என் அம்மா உயிர்வாழ செயற்கையாய ஆக்ஸிஜன் சுவாசித்திருக்கிறார்.  எனக்கு தெரிந்த எந்த சொந்தமும் ஐ.சி.யூவில் இருந்ததில்லை. முதலாவதாய் என் அம்மா ஐ.சி.யூவில் இருந்த செய்தி என்னை நடுங்க வைத்தது. அப்போது என்னால் முடிந்தது 'என் அம்மா விரைவில் குணமடைய துஆ** செய்வது' மட்டும்தான்.
இன்று மதியத்திலிருந்து இயற்கை காற்றை சுவாசிக்கிறார். ம்... என் துஆ** ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. என்னிடம் போனிலும் பேசினார், 'நீ எப்டிப்பா இருக்க, உடம்ப பார்த்துக்க' என்று மட்டும்.

உம்ரா* மக்காவிலுள்ள புனித ஆலயம் 'காபா' வை தரிசிப்பது.
துஆ** பிராத்தனை.

20 comments:

  1. அம்மாவுக்கு சரியாயிடும். கவலைப்படாதீங்க. சீக்கிரம் திரும்பி போயிடுங்க.

    ReplyDelete
  2. நன்றி மணி,

    ம்.. திரும்பி போறதுக்கான நாட்களைதான் எண்ணிக்கிட்டிருக்கேன். +1 தியரி. :(

    ReplyDelete
  3. தங்கள் அம்மா சீக்கிரம் குணமடைந்து உங்களுடன உற்சாகமாக உரையாட வேண்டிக் கொள்கிறேன். இனியும் ஏக்கப்படாமல் அடுத்த உரையாடலில் உங்கள் அம்மாவிடம் அன்பை அழுத்தமாகவே வெளிக்காட்டி விடுங்கள்.

    அந்த பஃப் வைத்த சிகையலங்காரம் நானும் விரும்பி செய்துக் கொண்டதுதான்.

    ReplyDelete
  4. கவலை வேண்டாம்..அம்மா விரைவில் குணமடைவார்..

    ReplyDelete
  5. அம்மாவின்மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு கலங்க வைக்கிறது. நீண்ட நாட்கள் உடல் ஆரோக்கியத்துடன் உங்களுக்கு உறுதுணையாய் இருப்பார்கள். கலங்காதீர் பீர்... சென்று பார்த்து வாருங்கள்.

    பிரபாகர்.

    ReplyDelete
  6. Very touchy!!எனது பிரார்த்தனைகள்!!
    தங்கள் அம்மா விரைவில் பூரண குணமடைவார்.

    ReplyDelete
  7. பீர், இதை படிக்கும் போதே கொஞ்சம் கஷ்டமா இருக்கு.
    எல்லாம் சீக்கிரமாய் சரியா ஆகிவிடும்.

    ReplyDelete
  8. மணியின் இடுகையில் உங்களுக்கு பதிலாய் எழுதியதை இங்கு மாற்றிப்போட்டு அழித்துவிட்டேன், தவறாக என்ன வேண்டாம் பீர்.

    பிரபாகர்.

    ReplyDelete
  9. அம்மா விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் பீர் கவலைப்படாதீங்க...அம்மா நலமாயிடுவாங்க....

    ReplyDelete
  10. Dear Peer annaaa...
    Dont worry..we are praying to God that she will get well soon.

    ReplyDelete
  11. பீர், படிச்சவுடன் ரெம்ப நெகிழ்வா இருந்துச்சு. கவலைப்படாதிங்க இன்ஷா அல்லாஹ் உங்க அம்மா நல்ல குணம் அடைஞ்சுடுவாங்க, கூடிய சீக்கிறம் ஹஜ் அனுப்புங்க. ஊருக்கு சீக்கிறமா வாங்க, ஊரில் ஏதாவது செய்து இருக்க பாருங்க, சில காலங்களை தொலைத்து விட்டு அப்பறம் தேடுவது... கிடைக்காத ஒன்றுதான்.

    ReplyDelete
  12. நிச்சயம் அம்மாவுக்கு குணமாகும், எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுவதை தவிர ஒன்றுமில்லை..

    உம்ராவைவிட ஹஜ் சிறந்தது, எனவே கூடிய விரைவில் அனுப்ப நிய்யத் வையுங்க‌

    // 'நீ எப்டிப்பா இருக்க, உடம்ப பார்த்துக்க' என்று மட்டும்/

    இதுதான் அம்மா...!

    ReplyDelete
  13. எல்லா கடவுளும் ஒன்றுதான். அதே போல எல்லா தாயாரும் ஒன்றுதான். இந்த பதிவை பார்த்ததும் மனம் நெகிழ்ந்து போனது. உங்கள் தாயாருக்காக நானும் எனக்கு தெரிந்த கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.

    கவலை வேண்டாம் பீர். உங்கள் தாயார் விரைவில் குணமடைந்து விடுவார்.

    இதற்கு மேல் என்ன எழுதுவது என்று புரிய வில்லை.

    மீண்டும் ஒரு முறை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  14. அம்மாவுக்கு சரியாயிடும். கவலைப்படாதீர்கள்

    ReplyDelete
  15. பீர்,

    நாம் எல்லாருமே நம் பெற்றோரை சிறிய வயதில் நினைத்தது போலவே "சூப்பர்மேன்"களாகவே இப்பவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் சில விஷயங்களில் கவனம் செலுத்தத் தவறி விடுகிறோம். இன்ஷா அல்லாஹ் சரியாகிவிடும். கவலை கொள்ளாதீர்கள். இனி தாயாரின் உணவு, மருந்து விஷயங்களில் நீங்கள் நேரடியாக கவனம் செலுத்துங்கள்.

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. அன்புத் தோழர்களின் ஆறுதல் வார்த்தைகளால் நிலை திக்குமுக்காடிப்போனேன்.

    அம்மா நல்லாயிருக்காங்க, வீட்டுக்கு வந்திட்டாங்க. நார்மலா இருக்காங்க.

    உறவினர்கள் கிராமத்தில இருந்து கம்பு கொண்டுவந்து கொடுத்திருக்காங்க. அம்மாவும் கூல் காய்ச்சி, தயிர் ஊற்றி ஒரே நாள்ல மூன்று முறை குடிச்சிருக்காங்க.. அதுதான் சுகர் அதிகமானதுக்கு காரணமாம்.

    கம்பு கூல் குடிச்சா சுகர் அதிகமாகிடும் என்பது, இதுவரை எனக்கும் தெரியாது. ;(

    ReplyDelete
  18. அம்மா நலம் அடைந்தது குறித்து சந்தோசம்.. ஏதேனும் உதவிகள் செய்ய வேண்டுமானால் கண்டிப்பாக தெரிவிக்கவும்..

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.