Oct 4, 2009

தேக்கடி சொல்வதென்ன

தேக்கடியில் படகு விபத்து செய்தி ஓரளவு தெரியும். எத்தனை பேர், அதே தினம் நடந்த பீகார் படகு விபத்து பற்றிய செய்திகளை தெரிந்திருப்போம். பீகாரிலும் 50 க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. தேக்கடியில் இன்னும் சில சடலங்கள் மீட்கப்படவில்லை என்பது ஊடகங்களுக்கான தீனி இன்னும் முடிந்துவிடவில்லை என்பதை காட்டுகிறது. கைராளிகளும், ஏசியா நெட்களும் அவற்றை முக்கிய செய்தியாக்கிக்கொண்டிருந்த போது, இங்கு அதுவும் ஒரு செய்தியாக காட்டப்பட்டது. கலைஞருக்கு, ஆளுங்கட்சி தலைவரின் திருவாரூர் பயணம் அதி முக்கிய செய்தி.  வலைப்பூவிலும் கூட அவ்வளவாக இந்த செய்தியை பார்க்க முடியவில்லை. ஹிந்து அதிக தகவல்களை தொகுத்தருப்பது, மலையாளிகள் அதிகம் பணியிலிருப்பது காரணமாக இருக்கலாம். மற்றவர்களுக்கு ஏன் முக்கிய செய்தியாகப் படவில்லை. இச்சம்பவம் கேரளத்தில் நடந்தது என்பதாலா? இதை செய்தியாக்கினால் டிஆர்பி / ஹிட்ஸ் 'ல் பெரிய மாற்றம் இருக்காது என்பதாலா? தலைவலி நமக்கு நேர்ந்தால் துன்பம், விபத்து, அதே மற்றவருக்காகும் போது, வெறும் செய்தி என்ற அளவில் கூட முக்கியத்துவம் மாறுபடுகிறது. 

தேக்கடி துன்பத்தை பகிர்வதால், எனக்கு என்ன கிடைக்கும் என்ற வர்த்தகப் பொதுப்புத்தி நம் அனைவரிடமும் மலிந்து கிடப்பது வருத்தத்திற்குரியது. சுயநலம் கருதா மனிதன் இருக்க முடியாது, இருந்துவிட்டு போகட்டும். சுயநலம் இல்லா போதுநலம் இல்லை. குறைந்தபட்சம் ஒரு நிகழ்வு, விபத்து, துர் சம்பவம், தோல்வி போன்றவற்றிலிருந்து நமக்கு பாடம் இருக்கிறது என்ற அளவீட்டிலாவது இவற்றை அணுகலாம். 
விபத்துக்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
அ. இயற்கை சீற்றத்தால் நிகழ்வது. உதாரணமாக 'சுனாமி' 'வெள்ளம்' போன்றவற்றைச் சொல்லலாம். இவற்றை தடுக்க முடியாது. சரியான விழிப்புணர்வு இருந்தால், இழப்புகளை தவிர்க்கலாம்.  நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளால், விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்னும் எளிது.
ஆ. செயற்கை விபத்து, இவை மனிதர்களின் அறியாமையால், கவனக்குறைவால் ஏற்படுவது. விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், இவ்வகை விபத்துக்களையே தவிர்த்து விடலாம். அல்லது, அதிகபட்ச இழப்புகளை தடுக்க முடியும்.
511095248_3dfa6ca3f8

தேக்கடி படகு விபத்து பற்றிய குறிப்புகள்;
வழக்கமாக தேக்கடி படகு சவாரி நேரம் 07:00, 09:30, 11:30, 14:00, 16:00 மணி என்பதாக ஐந்து முறை செலுத்தப்படுகிறது. இரண்டு தளங்களை கொண்டதாக இருக்கும் படகுகளில், தாழ் தளத்திற்கு 50 ரூபாயும், மேல் தளத்திற்கு 90 ரூபாயும் ஒரு சுற்று சவாரிக்கு வசூலிக்கப்படுகிறது. இவ்விபத்தில் அதிகம் உயிரிழப்பு ஏற்பட்டது, தாழ்தளத்த thekkady பயணிகளிடையே. (டைட்டானிக் நினைவு வருகிறதா?)  மலிவு விலை உயிர். தாழ்தளம் ஃபைபர் கொண்டு அடைக்கப்பட்டிருந்ததால், அதை உடைத்துக்கொண்டு வெளியே வரமுடியாது போயிருக்கிறது. படத்தில் காண்பது போன்ற உடைந்த மரங்கள் நீருக்கு அடியிலும் அதிகம் இருப்பதாலும், அடிமட்டம் முழுவதுமாக சேற்று மணலால் நிரம்பியுள்ளதாலும், காப்பாற்றுவது கடினமாகிவிட்டிருக்கிறது. காலை 07:00 மணி சவாரியிலும், மாலை 16:00 மணி சவாரியிலும் வன விலங்குகள் காணக்கிடைக்கும், எனினும் மாலையே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். செப்டம்பர் 30 மாலையிலும், அதே போல பயணிகள் கூட்டம் இருந்திருக்கிறது. விபத்திற்குள்ளான படகில், 2 படகோட்டிகளும், கட்டணம் செலுத்திய 74 பயணிகளும், 5 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 7 பேரும் இருந்திருக்கிறார்கள். மொத்தமிருந்த 84 பேரில், உயிர் பிழைத்திருப்பது 15 பேர், இதுவரை 46 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இனியும் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதால். உயிரிழப்பு 68 ஆக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 
விபத்திற்கு காரணமாக படகோட்டி சொல்வது, 'ஒரு கரையில் வனவிலக்குகள் வந்ததால், பயணிகள் அனைவரும் படகின் ஒரு பக்கமாக சென்றனர். எனவே, படகு நிலையிழந்து ஒரு பக்கம் in.reuters.com சாய்ந்துவிட்டது'. இதை மறுக்கும் உயிர் பிழைத்தவர்களில் ஒருவரான பெங்களுருவை சேர்ந்த சிந்தாமணி என்பவர், 'வழக்கமாக மாலை 4 மணிக்கு கிளம்ப வேண்டிய படகு அன்று 4;30 க்கு கிளம்பியது, படகின் இன்ஜின் ஆன் செய்யும் போதே, வழக்கமான இன்ஜின் சத்தம் இல்லாமல் புதிய இரைச்சல் வந்தது. மெக்கானிகல் இன்ஜினியரான என் மனைவியிடமும் சொன்னேன். அதை, அவளாலும் உணர முடிந்தது. எனவே என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். விபத்திற்கு காரணம், படகில் இருந்த இயந்திரக் கோளாரே' என்கிறார். மட்டுமல்லாது, பயணிகள் ஒரு பக்கமாக சென்றனர் என்பதெல்லாம் பொய் என்கிறார். வேறு சிலரும் இதை ஆமோதிப்பதாக படகின் குறைபாடையும், படகோட்டியின் அலட்சியத்தையும் சொல்கின்றனர். ‘படகு மூழ்கத்தொடங்கியதும், படகோட்டிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. படகு பணியாளர்களுக்கு சரியான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கவில்லை. போதுமான உயிர் காக்கும் சட்டை இருந்தும் அவற்றை அணிந்துகொள்ளவோ, பாதுகாப்பு சோதனை குறித்த விளக்க அறிவுரையோ சொல்லப்படவில்லை’ என்பதும் பலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. 
Preventive is better then cure என்று சொல்வார்கள். அந்த வகையில் விபத்திலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது... நாம் செல்ல இருக்கும் சுற்றுலா படகு,
  1. அதன் இழுவை தகுதி (ஹார்ஸ் பவர்) மற்றும் சுமையின் அடிப்படையில் எத்தனை பயணிகளை ஏற்றிச்செல்ல தகுதி உடையது?
  2. அதன் இருக்கை வசதிக்கும் அதிகமாக பயணிகள் ஏற்றப்பட்டுள்ளனரா?
  3. ஏற்றப்பட்ட பயணிகளில் யாரேனும் இருக்கை அல்லாத இடத்தில் அமர்ந்தோ நின்றோ பயணக்கின்றனரா?
  4. பாதுகாப்பு மற்றும் முதலுதவி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா?
  5. உயிர் காப்பு அங்கி, கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். சிறுவர்களுக்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகிறது.
  6. முடிந்த அளவு காலநிலை தெரிந்து கொண்டு பயணங்களை தொடங்குவது நல்லது. இது அனைத்து பயணங்களுக்கும் பொருந்தும் என்றாலும், நீர் பயணத்தின் போது கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
  7. புகைபிடித்தல் மற்றும் மதுஅருந்துதல் முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். மது அருந்தியவர் படகை செலுத்த அனுமதிக்கக்கூடாது.
இவற்றில் ஏதேனும் மாறுபாடு தென்பட்டால், நிர்வாகத்தில் முறையிடுவதோடு பயணத்தையும் தவிர்த்துவிடுவது நல்லது. (வேறு பாதுகாப்பு நடவடிக்கை தெரிந்தவர்கள் பின்னூட்டதில் சொல்லலாம்)
நகரமயமாக்கலின் ஒரு விழைவு, இளைய தலைமுறையினருக்கு நீச்சல் தெரியாமை. நீரில் மட்டுமல்ல, நில வாழ்க்கையிலும். பெருகிவரும் நீச்சல் பயிற்சி மையங்கள் ஓரளவு நீரில் நீத்துவதை சொல்லித்தரலாம். நாளை 'சோறு தின்பது எப்படி' என்பதற்கான பயிற்சி மையங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. (ஏற்கனவே இருக்கிறதா?) அது கிடக்கட்டும், காசு கொடுத்து நீச்சல் கற்றுக்கொண்டாலும் பாதகமில்லை. நீச்சல் தெரிந்தவர் தம்மை மட்டுமல்ல, கூட பயணிப்பவரையும் கரை சேர்த்துவிடலாம். தேக்கடி விபத்தில், லண்டனை சேர்ந்த 70 வயது சுற்றுலா பயணி ஒருவர், 7 பேரை காப்பாற்றினாராம். 
மதுரையில் எங்கே நீச்சல் கற்றுக்கொடுக்கப்படுகிறது என்பதை தெரிந்தவர்கள் சொல்லுங்கள். எனக்கும், கூட மிதப்பவர்களை கரை சேர்த்துவிட விருப்பம்.
Peer Thekkady

23 comments:

  1. மதுரை கலெக்டர் ஆபிஸ் பக்கத்தில்அ மாநாகராட்சி நீச்சல் குளத்திலயே சொல்லித்தருவாங்க பாஸூ..

    ReplyDelete
  2. அதுக்காக இப்பிடியா தல காவக்காத்துட்டு உக்காந்துருக்குறது?

    விதி வலியதுன்னு மட்டும்தான் சொல்ல விருப்பம்....

    நடக்குறது நடக்காம இருக்காது

    ReplyDelete
  3. எத்தனை பேர் படகில் இருக்கிறார்களோ அத்தனை சேப்டி ஜாக்கட் இருந்திருக்கணும் படகில. மத்தவங்க உயிரைப்பத்தி யாரு கவலைப்படறாங்க. :(

    ReplyDelete
  4. கன்யாகுமரியில் வெறும் அஞ்சு நிமிசப் படகுப் பயணத்துக்கு பாதுகாப்பு ஜாக்கெட்டைக் கொடுத்து அதை எப்படிப் போட்டுக்கணுமுன்னு டிவியில் விளக்கம் போட்டுக் காமிச்சாங்க.

    இங்கே எல்லோரும் கட்டாயம் இதை அணியனுமுன்னு விதி வச்சுருக்கணும் இல்லையா?

    என்னவோ போங்க....மனுச உயிருக்கு ஒரு மதிப்பும் இல்லாத நாடு நம்ம நாடுதான். ரெண்டு போனா நாலு பெத்துக்குவாங்கன்ற எண்ணமோ? (-:

    ReplyDelete
  5. என்னாதான் சேப்டி ஜாக்கெட் போடச் சொன்னாலும் நம்ம மக்கள்ஸ் போடுவாங்கன்றீங்க..? நம்மெல்லாம் ஹெல்மெட் போடாத கூட்டம்தானே..!

    ReplyDelete
  6. \\இங்கு அதுவும் ஒரு செய்தியாக காட்டப்பட்டது. \\

    ம்ம்..ஒரு டிவியில கலைஞர் கக்கா போனாலும் நியூஸ்..இன்னோன்னுல அந்தம்மாவுக்கு அறிக்கை விடவே நேரமில்லை.மத்த சேனல்ஸுக்கு இருக்கவே இருக்கார் புவனேஸ்வரி அம்மையார். எனக்கு இரா.முருகன் வசனம் ஞாபகம் வருது.
    "நம்மெல்லாம் வேற ஊரு.. தமிழ்நாடு..அவனுகெல்லாம் வேற மொழி பேசுறவனுக."

    ReplyDelete
  7. சேப்டி ஜாக்கெட் போடமா யாரும் படகு சவாரி செய்யக் கூடாது. மேலும், நீங்க சொன்ன மாதிரி, நீச்சல் முக்கியமானது. பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் :(

    ReplyDelete
  8. ராஜு ♠ - இல்லைங்க ராஜூ. பெங்களூர்ல லும்பினி பார்க்ன்னு ஒரு இடத்துல, படகுல ஏற்றத்துக்கு முன்னாடி எல்லாரும் சேப்டி ஜாக்கெட் போட்டுருக்கனும். இல்லைன்ன ஏற விடமாட்டங்க. ஹெல்மெட் கதை வித்தியாசமானது. ஆனா, இது கொஞ்சம் எளிதாக நடைமுறைப்படுத்தக் கூடிய விஷயம் தான்.

    ReplyDelete
  9. நீங்களும், நானும் காமன் மென்.. நாம கவலைப்பட்டு என்ன பண்ண முடியும்???

    லைப் ஜாக்கெட் / ஹெல்மெட் குறித்த ராஜுவின் கருத்தை வழிமொழிகிறேன்..

    ReplyDelete
  10. நல்ல விரிவாக அலசியிருக்கிறீர்கள் பீர்!!

    என்னுடையது ஒரு சாதாரண பார்வையாக இருந்தது என்றால் உங்களது ராஜ பார்வை!!

    //மதுரையில் எங்கே நீச்சல் கற்றுக்கொடுக்கப்படுகிறது என்பதை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்//

    ஏன் குவைத்ல சொல்லித்தரமாட்டாங்களாமா?

    //பின்னோக்கி said...
    ஹெல்மெட் கதை வித்தியாசமானது.//

    எல்லாமே உயிர் சம்பந்தப்பட்டதுதானே, இதிலென்ன வித்தியாசம்?

    ReplyDelete
  11. நன்றி யாத்ரீகன், அங்க நீச்சல் குளம் இருக்கிறது தெரியும், பயிற்சி அளிக்கப்படுகிறதா.. நல்லது...

    நன்றி TVR,

    வசந்த், நடக்கிறது நடக்காம இருக்காது, அதுக்காக முன்னெச்சரிக்கை இல்லாம எதையும் செய்ய முடியாதில்ல...

    சின்ன அம்மிணி, ம்.. வெறும் 26 ஜாக்கட் தான் வைக்கப்படிருந்ததாம். மத்தவங்க உயிரைப்பத்தி வேற யாரும் கவலைப்படறத விட நாம், நம் உயிரை கவனப்படணும் இல்லையா?

    ReplyDelete
  12. துளசி கோபால், தேக்கடியில் அந்த மாதிரி ஏதும் ப்ரீஃபிங் இல்லைங்க :( ஆனாலும் நமக்குத்தான் நம் உயிரின் மதிப்பு தெரியும், தெரியவேண்டும். சேஃப்டி ஜாக்கட் கேட்டு வாங்க நமக்கு உரிமை இருக்கு, அது நம்முடைய கடமையும் கூட.

    ReplyDelete
  13. ம்.. ராஜூ, என்ன பண்றது, இருக்கிறபோது உயிரின் மதிப்பு தெரிவதில்லை. :(

    ReplyDelete
  14. ஒரு மூணரை வருசங்களுக்கு முன் தேக்கடி போய்வந்து ஒரு பதிவும் போட்டுருக்கேன். நேரம் கிடைக்கும்போது பாருங்க.

    http://thulasidhalam.blogspot.com/2006/03/blog-post_28.html

    ReplyDelete
  15. பின்னோக்கி, முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. நீச்சல் கத்துக்கணும்.. நானும்.


    லோகு, காமன் மேனுக்கு இல்லாத கவலை வேற யாருக்கு இருக்கும்றீங்க? (யார் காமன் மேன் என்பதுதான் இப்போ இருக்கும் பெரிய கவலை)

    ஹூஸைன்அம்மா, குவைத்தில நீச்சல் கத்துக்க என் சொத்து(அப்டி ஏதும் இருந்தா) எழுதி வைக்க வேண்டிவரும் என்பதால்.. மாநகராட்சி நீச்சல் குளமே என் சாய்ஸ்.

    ReplyDelete
  16. நிச்சயம் வாசிக்கிறேங்க, துளசி கோபால். நன்றி. :)

    ReplyDelete
  17. அன்பு பீர்,
    உங்கள் சமூக அக்கறை, பிரச்சினையை பல ​கோணங்களில் விரிவாக அலசியிருக்கும் சமார்த்தியம், வாதத்தை இன்னொரு தளத்துக்கு நகர்த்திச் ​செல்லும் லாவகம் அனைத்தையும் மிக வியக்கிறேன்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  18. தேக்கடி மட்டுமல்ல!

    உலகில் பல விபத்துக்களுக்கு காரணம், அடிப்படை விதிகளை மீறுவதே!

    ReplyDelete
  19. அண்ணா... நம்ம ஊருக்கு வாங்க...நம்ம ஊர்ல ரெண்டு வாய்க்கால் ஓடுது.. காசு எதுவும் குடுக்க வேண்டாம்... சும்மா ஒரு மணி நேரத்துக்குள்ள உங்கள ஒரு குற்றாலீசுவரனா மாத்திக்காட்டுறேன்

    டிஸ்கி: பாலா... எப்பூடி ?

    ReplyDelete
  20. தேக்கடி...///நினைவு அகல நிலைபடி.அதன் விதிபடி ../// சமிபத்தில் குடும்பத்துடன் தேக்கடி சென்றிருந்தோம் .ஏதோ ஜாலியாக அந்த படகு துறை அருகே சென்று நிருத்தினோம் ..சுற்றுலா வந்த களைப்பு நீ ங்க நாங்கள் எடுத்துத் வந்த ஸ்வி ட்ஸ் box எடுத்த போது எங்கிருந்தோ வந்த ஒரு குரங்கு ஸ்வீட்box ஐ பிடு ங்கி கொண்டு ஒடி மரஉச்சியில் அமர்ந்து கொண்டு box திறக்க பார்த்தது முடியவில்லை ....பிறகு நாங்கள் படகு துறை மூடி உள்ளதால் அதன் முன் அமர்ந்து படகு விபத்தை அலசி கொண்டு இருந்தோம் ..அப்போது நினைவில் நின்றது ..இத்தனை உயிர்களை இழந்த இந்த இடத்திலா இனிப்பு சாப்பிட வந்தோம் உறைய வைத்தது ...புரியவும் வைத்த மகான் வடிவில் வந்த அந்த மாக குரங்குக்கு சலாம்..////சித்ரம் ..//

    ReplyDelete
  21. this matter post googleserch..also thakadi....trip...

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.