Jul 7, 2009

ருசித்ததும் ரசித்ததும்

இம்முறை ஊரில் இருந்த போது நான் ரசித்தவற்றையும் ருசித்தவற்றையும் இங்கு உங்களோடும் பகிர்ந்து கொள்ள ஆசை. வாருங்கள் முருகனில் இருந்து ஆரம்பிப்போம்.

எனக்கு முருகன் இட்லிகடை இட்லி எப்போதும் விருப்ப உணவாகவே இருந்திருக்கிறது. இந்த முறை சுவைக்கும் வரை, முன்பெல்லாம் தினமும் நாலு முருகன் இட்லி உள்ளே போகவில்லை என்றால் உறக்கம் வராது. இப்போது ஒரே ஒரு நாள் சென்றும் ஏன் சென்றோம் என்றாகிவிட்டது. இட்லியின் சுவை குறைந்துவிட்டது. சாம்பாரும் நாலு வகை சட்னியும் சற்று தேவலாம். ஆனால் அங்கு எப்போதும் சேவை அவ்வளவு சிறப்பானதாக இருந்தது இல்லை. இப்போது மிகவும் மோசமான சேவை. கிட்டத்தட்ட அன்னதான முறையில் தான் சப்ளை செய்கிறார்கள். இப்படித்தான் கிடைக்கும், விருப்பமிருந்தால் வா என்பது போல, வெறுத்துவிட்டேன்.

அதேபோல டவுன்ஹால் ரோடு தாஜ் உணவகம், நண்பர்களுடன் மதிய உணவருந்திவிட்டு வீட்டிற்கும் வாங்கிச் சென்றேன். அன்று தாஜ் பிரியாணி உண்ட எங்கள் அனைவருக்கும் வயிறு கேடானது. ஃபுட் பாய்ஸன்? மற்றபடி அவர்கள் சேவையை குறை சொல்வதற்கில்லை.

டவுன்ஹால் ரோடு பெருமாள் தெப்பம் தெற்குத்தெருவிற்கு எதிர் தெருவில் (பெயர் நினைவில்லை) இருக்கும் மூகாம்பிகை மெஸ்ஸில் மதிய சாப்பாடு சுவை அப்படியே வீட்டு சமையலைப்போலிருக்கும். அண்ணன் தம்பி அனைவரும் கூட்டு குடும்பமாக இருந்து சமைப்பார்கள். வெண்டிக்காய் கூட்டும் நல்ல சுவையாக இருக்கும். ஆணி அதிகமென்றால் வீட்டிற்குச் செல்லாமல் மூகாம்பிகை செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தோம், நானும் எனது ஒரு நண்பரும். விலை குறைவைக்காட்டிலும் வீட்டுச்சுவை தான் அங்கு இழுத்துச் செல்லும். இப்போதும் ஒருநாள் அங்கு சென்ற போது இருக்கை காலி இல்லை. திரும்பி வரவேண்டிதாகிவிட்டது. பிறகுதான் அறிந்தேன் கூட்டுக்குடும்பம் பிரிந்த பிறகு சுவையும் அவர்களை விட்டு பிரிந்துவிட்டதாக.

காளவாசல் பெல் ரெஸ்டரண்ட், கேட்டரிங் மாணவர்களைக் கொண்டு நடத்தப்படுவதால் நல்ல சேவையும் சுமாரான சுவையும் கிடைக்கிறது. ஒரு முறை சுவைக்கலாம். இரண்டாவது முறையாக சுவைத்தேன். பரவாயில்லை.

பைபாஸ் ரோட்டிலிருக்கும் அழகப்பச்செட்டி அசைவ உணவகத்தில் நாட்டுக் கோழி குழம்பு நல்ல சுவையாக இருக்கும். சுவைக்க நேரம் இல்லை.

பெரியார் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் சுல்தான் உணவகத்திலும், மேல மாசி தெற்கு மாசி வீதி சந்திப்பில் இருக்கும் புகாரியிலும் புரோட்டா நன்றாக இருக்கும். எப்படியாவது ஒரு இரவு உணவு அங்கு அமைந்துவிடுகிறது, நண்பர்களுடன் சுற்றுவதால்.

குற்றாலம் சென்றிருந்த போது, தென்காசி பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ரஹ்மத் புரோட்டா கடையில் புரோட்டா சால்னா அடித்தேன். சும்மாச் சொல்லக்கூடாது. அருமை.

அனைத்தையும் விட, தென்காசியில் என் மாமாவுடைய தோப்பில் குடித்த இளநீர். இதைச் சொல்லவில்லை என்றால் நான் ருசித்த பட்டியல் பூர்த்தி அடையாது. முதல் முறையாக மரத்திலிருந்து வெட்டிய உடன் இளநீர் குடித்தேன். என்ன சுவை, விறு விறுவென்று உள்ளே இறங்கியது. ஒரே நேரத்தில் ஐந்து இளநீர் வெட்ட வெட்ட குடித்தேன். அன்று இரவு வயிறு என்னை அடித்ததை பொறுட்டாகக் கொள்ளவில்லை.

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

சிகரெட்

சிறிது புகையிலை சுற்றப்பட்ட ஒரு பேப்பரின் ஒரு முனையில் பத்தவைக்கப்பட்ட நெருப்பும் மறு முனையில் முட்டாளும்.

காதல்

கிரிக்கெட்டைப் போல, ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளை விட ஒருநாள் சர்வதேச போட்டிகள் பிரபலம்.

திருமணம்

ஒரு ஒப்பந்தம், இங்கு ஆண் தனது பேச்சுலர் டிகிரியை இழக்கிறான் பெண் தனது மாஸ்டர் டிகிரியை பெறுகிறாள்.

விவாகரத்து

திருமணத்தின் எதிர்காலப்பதம்.

சமாதானம்

தனக்கு கிடைத்ததுதான் பெரிய துண்டு என் அனைவரும் எண்ணும்படி கேக் வெட்டும் கலை போன்றது.

ஆங்கில அகராதி

இங்கு மட்டும் தான் திருமணத்திற்கு முன்பே விவாகரத்து வந்துவிடும்.

புன்னகை

சிறு வளைவால் பல கோணல்கள் நேராக்கப்படலாம்.

அலுவலகம்

கடுமையான குடும்ப வாழ்விற்குப்பிறகு ஓய்வெடுக்கும் இடம்.

கமிட்டி

ஒன்றுமே செய்ய இயலாத தனிமனிதர்கள் ஒன்றுகூடி இருக்கும் ஒரே இடம்.

அனுபவம்

முந்தைய தவறுகளுக்கு மனிதன் இடும் பெயர்.

அரசியல்வாதி

தேர்தலுக்கு முன்பு நமது கைகளையும், பின்பு நமது நம்பிக்கையையும் குலுக்குபவன்.

10 comments:

  1. //அங்கு எப்போதும் சேவை அவ்வளவு சிறப்பானதாக இருந்தது இல்லை. இப்போது மிகவும் மோசமான சேவை. /

    வரவர மாமியார் கழுதைப் போல்....ன்னு பழமொழி உண்டே மெய்பிக்க வேண்டாமா ?

    சிங்கையிலும் முருகன் இட்லி உண்டு, சுவையை நினைவில் வைத்துச் செல்பவர்கள் மீண்டு செல்வதில்லை.

    ஒரு ஸ்பூன் நெய்க்கு 1 வெள்ளி 25 காசு ( நம்ம இந்திய ரூ 42) வாங்குகிறார்கள். விலையும் கட்டுப்படி ஆகும் நிலையிலோ, சுவையும் மேம்பட்டதாகவோ இல்லை.

    ReplyDelete
  2. நல்ல பதிவு.

    நமக்கும் வரவர சுவை மாறுதுன்னு நினைக்கிறேன்.

    சரவணபவன் கூட கொஞ்சம் போரா இருக்கு நாலுநாள் தொடர்ந்து சாப்பிட்டால்.

    முருகன் இட்லிக்கடை சுஜாதா பேச்சைக்கேட்டு முதல்முறையாப் போனப்பவே பிடிக்கலை. அது ஆச்சு 2 வருசம்.

    சமீபத்தில் ரெண்டு வாரம் முன்பு அதன் இன்னொரு கிளைக்குப் போனால்......ஹூம் ஒன்னும் சொல்றதுக்கில்லை.

    கோபால் காஃபியில் ஈ விழுந்து கிடந்துச்சு. என்னதுலே இருந்துருந்து அவுங்களே நைஸா எடுத்துப்போட்டுட்டு வந்துருக்கலாம்.


    யார் கண்டா?

    ஆனாலும் எதிர் மேசையில் இருந்த ஜோடி சாம்பார் சட்னின்னு கேட்டுக்கேட்டு வாங்கி வெட்டுனதை மறக்கமுடியலை:-)

    சுவைகள் பலவிதம்!

    ReplyDelete
  3. நீங்க சொன்னதுல புகாரில மட்டும்தான் சாப்டுருக்கேன்...
    புகாரில புரோட்டா நல்லா இருக்கும்பா....!
    பைபாஸ் ரோட்ல "கௌரி கிருஷ்ணா"வும் நல்லா இருக்கும்.

    ReplyDelete
  4. //வாருங்கள் முருகனில் இருந்து ஆரம்பிப்போம்.//

    எனக்கு முருகன் தியேட்டர் ஞாபகம் வந்துவிட்டது!

    ReplyDelete
  5. //சிகரெட்

    சிறிது புகையிலை சுற்றப்பட்ட ஒரு பேப்பரின் ஒரு முனையில் பத்தவைக்கப்பட்ட நெருப்பும் மறு முனையில் முட்டாளும்.//

    அப்போ சிகரெட் குடிக்காதவங்க எல்லாம் புத்திசாலிங்களா?

    ReplyDelete
  6. நல்லா கலந்து கட்டி அடிச்சு இருக்கீங்க நண்பா.. அசத்தல்..

    ReplyDelete
  7. பொதுவா நிறைய இடங்களில் ஆரம்பத்தில் இருக்கும் சுவையோ, சேவையோ பின்னாளில் இருப்பதில்லை.

    அந்த ஒரு வரி விளக்கம் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  8. //கோவி.கண்ணன் said...

    ..... வரவர மாமியார் கழுதைப் போல்...//

    ஆமாம் கோ,
    ஆனால் அவர்களுக்கு'கழுதை கெட்டால் குட்டிச்சுவர்' என்ற பழமொழியும் மட்டும் நினைவில் உள்ளதோ என்னவோ.

    <<<>>>

    //துளசி கோபால் said...

    நல்ல பதிவு.

    நமக்கும் வரவர சுவை மாறுதுன்னு நினைக்கிறேன்.//

    நன்றி துளசி கோபால், இதுவும் காரணமாக இருக்கலாம், ஆனால் முருகன் மாறியதும் உண்மைதான்.

    <<<>>>

    டக்ளஸ்.... கௌரி கிருஷ்ணாவும் பரவாயில்லைதான்.

    <<<>>>

    நன்றி ஸ்ரீதர்,

    <<<>>>

    //வால்பையன் said...

    .... அப்போ சிகரெட் குடிக்காதவங்க எல்லாம் புத்திசாலிங்களா?//

    அது தெரியாது வால், ஆனால் நான் சிகரெட் குடிப்பதில்லை.

    <<<>>>

    நன்றி கார்த்திக், ஆனால் நான் தனித்தனியா தான அடிச்சேன்.

    <<<>>>

    நன்றி அக்பர்,

    ReplyDelete
  9. நான் இட்லிக்கடையை பற்றி மட்டும் எழுதியைருக்கிறேன். நீங்க எல்லாக் கடையை பற்றியும் பின்னிப்பெடலெடுத்திருக்கிறீர்கள். நல்ல பதிவு.

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.