Jan 25, 2009

Bush Failures and Successes - போ! மறுமையில் சந்திப்போம்

எட்டு ஆண்டுகள்! எத்தனை மனிதர்கள்.இந்த மண்ணில் பிறந்து அதன் அழுக்கைக் கூட ரசித்து வாழப் பிறந்தவர்களை உன் ஆயுதங்களால் அழித்தாய். அதற்காக உன்னை ஆண்டவனே அனுப்பியதாகவும் அறிவித்தாய்!உன் அத்தனைத் திமிரையும் ஒரு செருப்பு அடக்கியதே! அந்த நேரம் கூட செத்து விடுவோம் என்று நீ பதை பதைத்தாயே! ஆனால்... எத்தனை பச்சிளம் குழந்தைகள் உன் குண்டுகளுக்கு இரையாகி துடிதுடித்து இறந்தது. எத்தனை குழந்தைகள் தன் சொந்தங்களைப் பிரிந்து அனாதையாகிவிட்டது. விதவையாகிய பெண்கள் எத்தனை? துணையை இழந்த ஆண்கள் எத்தனை? தள்ளதாத வயதில் வீல் செயரில் தள்ளிச் செல்லக்கூட ஒரு உறவினர் இல்லாத எத்தனையோ முதியவர்கள்? பிள்ளைக்குப் பெற்றோர் இல்லை! பெற்றோருக்குப் பிள்ளைகள் இல்லை! ஒரு உறவுக்கு மறு உறவு இல்லை என நீ துண்டாடியது எத்தனை பேர்?சொந்தங்கள் எத்தனை சொத்துக்கள் எத்தனை என்று அத்தனையும் கணக்கிட்டுப் பார்த்ததில் ஒரு சிறிய பங்கு உன் செல்ல மகளுக்கு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தாயா?இத்தனை நாள் செய்ததினால் ஏற்பட்ட விரக்தியில் மனமுளைச்சலாகி பகலிலும் கனவிலும் உன்னை நீயே கொல்லத்தான் போகின்றாய்.நேற்றுவரை உன்னை நேசித்தவர்கள் நாளை எப்படி பேசப்போகின்றார்கள் ஏசப்போகின்றார்கள் என்றும் பார்க்கத்தான் போகின்றாய்.உலகம் முழுக்க உனக்கு கிடைத்ததை மரியாதை என்று மாற்று வார்த்தையாகவல்லவா பார்த்து வந்தாய். கொன்றால் கோடி முறை கொன்று விடுவார்கள் என்று பயந்ததனாலல்லவா இரும்புக் கோட்டையை கட்டி நடமாடினாய்.ஊடகம் ஒரு ஆயுதம் என்று கேட்டிருக்கின்றோம். அது மெய்யா பொய்யா என்பதுவல்ல. ஆனால் அந்த ஊடகத்துறையிலிருந்த ஒருவன் தன் கால் செருப்பையே ஆயுதமாக்கி உன்னை அனுப்பியனானல்லவா, அதுவே பெரிய ஆயுதம்.இதற்கு மேலுமா வேண்டும் உனக்கு மரியாதை? வேட்டி மடித்து நடப்பவர்கள் தெருநாயைப் பார்க்கையில் மடிப்பை அவிழ்த்து விடுவார்கள். அது அது நாயை மரியாதை செய்வதற்காக அல்ல! கடித்து குதறிவிடும் என்ற பயத்தினால்தான். அதைப் போன்று உன் காட்டேறித் தனம் பாயாமல் இருப்பதற்காக தன்னை பாதுகாத்துக் கொண்ட நிகழ்வைத்தான் நீ மரியாதை என்று கருதினாய். எம்மைப் பொறுத்தமட்டில் இரண்டும் ஒன்றே!உன் நாக்கில் உமிழ் நீர் இருந்ததோ இல்லையோ ஆனால் ஒவ்வொரு நொடியிலும் தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற வார்த்தைகள்தான் இருந்தது. உலகில் யாரும் பயங்கரவாதம் செய்யக் கூடாது என்று நீ ஓலமிட்டபோதெல்லாம் அதில் நிறைந்திருந்து மறைந்திருந்த வார்த்தைகள் இன்று புரிகின்றது.பயங்கரவாதியாக நான் ஒருவனிருக்க உலகில் வேறு பயங்கரவாதிகள் இருக்கக் கூடாது என்றுதானே நீ ஓலமிட்டாய். அதிலும் கூட பல பயங்கரவாதிகள் இருப்பதாக நீ காட்டியதும் பெரும் பொய்யல்லவா?உயிரியல் ஆயுதம் என்று கூறி நீ பறித்த உயிர்கள்தான் எத்தனை? ஆனால் பின்னர் ஒரு மயிர் அளவு கூட உன்னால் அதை காட்ட முடியாததும் நீ பொய்யர் சக்கரவர்த்தி என்ற மணி மகுடத்தை சூட்டி உன்னை நீ இழிவு படுத்தியதும் உயிருள்ள ஒரு மனிதனால் சுமக்க முடியாதல்லவா? அதனால்தான் வெட்கம் கெட்டவனாகிய நீ சுமந்து திரிந்தாயோ?பால் குடிக்கும் பாலகர்கள் பரிதவிக்கும் மாதர்கள் துணையிழந்த கணவர்கள் துயரம் தின்னும் பெரியவர்கள் என்ற பெரும் பட்டியல்கள் உன்மீது கேட்டுவைத்த சாபங்கள் உன்னை சும்மா விடாது. இன்று சொல்லப்படுவதைப்போல் ஒரு செருப்பால் முடிந்துவிடாது.போர் போர் போர் என்று நீ செய்ததெல்லாம் அமைதிக்காக என்று காரணம் கூறிய கொடுங்கோலனே. உன் அகராதியில் அமைதிக்குப் போர் என்பது கன்னித்துவத்திற்கு கற்பழிப்பு என்ற வாதத்திற்கும் எள்ளளவும் வித்தியசம் தெரியவில்லையே!அதனால்தான் அஃப்கானிலும் இராக்கிலும் இன்ன பிற அப்பாவி நாடுகளிலும் சென்று உன் ஆட்கொல்லி உருவங்கள் கொலை நடத்தியதுடன் கற்பழிப்புகளும் நடத்தியதா? என்ன கிடைத்தது உனக்கு? எண்ணை கிடைத்தது! அப்படித்தானே.நீ அமைதியை நாடியிருந்தால் எத்தனையோ நாடுகள் உண்ண உணவின்றி உடுத்த உடையின்றி உறங்க ஒர் உறவிடமின்றி தவிக்கின்றதே அதில் ஏன் கவனம் செலுத்தவில்லை? ஒரு வேளை சோறு போடுவதால் உன் ஆயுதம் விற்றுத் தீர்ந்துவிடாது என்பது தெரியாமலிருக்க நீ மடையன் ஒன்றும் அல்ல! அப்படித்தானே?அமைதியை விரும்பும் நீ முதலில் ஆயுதத்தை தவிர். ஆயுதம் ஏந்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை உருவாக்கு! அதையே உலகமயக் கொள்கையாக்கு! இதைச் செய்தால் நீ அமைதியை விரும்புபவன் எனலாம். ஆனால் நீயோ அண்டை நாடுகளில் சிண்டு முடிந்துவிட்டு அங்கும் இங்குமாய் ஆயுதம் விற்று அப்பாவிகளின் இரத்தத்தையல்லவா உணவாகப் பருகுகின்றாய்.உனக்கு அடிமையாக வாழ்கின்ற எல்லா நாடுகளிலும் அறிவாளிகள் எனப்படுவோர் ஆட்சியாளர்களாக இருந்தாலும் அவர்களும் உன் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி ஆயுதம் வாங்கிக் குவிப்பது உன் வெற்றி என்று கருதுகின்றாய். அரசன் அன்று கொன்றால் தெய்வம் நின்று கொல்லும்!அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிபர் என்ற பெயரில் இன்னும் சில மணித்துளிகள் கூட அதன் சுகம் அனுபவித்துச் செல்லும் உன்னால் ஏற்பட்ட சோகம் ஏராளம். நீ மட்டும் தான் இப்படி எனவில்லை. உன் நாட்டின் வெளியுறவுக் கொள்கை இது. அதில் நீ கூடுதல் கவனம் செலுத்தி கூடுதல் இரத்தம் குடித்தாய் அவ்வளவே!இனிவரும் அதிபர் பாரபட்சமில்லாமல் பலருக்கும் பணியாற்றியதைக் கேட்டிருக்கின்றறோம். அவன் இரத்தத்தில் அது ஊறிக் கிடந்தால் இனியும் அது ஊற இருந்தால் ஒரு சில காலங்கள் உலகம் சற்று அமைதியாகும்.உன்னைப் போன்றல்ல இறைவன். அவன் நாடியதைச் செய்வான். செய்ததன் காரணங்கள் மறுமையில் கிடைக்கும். அதில் எந்த பொய்யும் இருக்காது. அந்த நாளில் நீயும் உன் அப்பன் புஷ்ஷும் அள்ளி வீசிய குண்டுகள் உன்னைத் திருப்பித் தாக்கும். அந்த மறுமை நிச்சயம். அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் வழி இல்லாமல் இல்லை!ஆம்! உன் இதயம் தூய்மையுற்றால், உன் பாவங்களுக்கு பரிகாரமாய் இறைவனிடம் இன்றே நீ கேட்டுவிட்டால் கருணையுள்ள இறைவன் உன்னை மன்னிக்கக்கூடும்
நன்றி; எங்கோ வாசித்தது