Jan 17, 2009

பச்சைத் தேநீர்

"ஒரு டீ குடுங்க" என கடைக்காரரிடம் கேட்டு அவர் இரண்டரை இஞ்ச் குவளையில் நீட்டும் தேனீரை சுவைத்துக் குடிக்கும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் கிரீன் டீ என அழைக்கப்படும் பச்சைத் தேநீர் பற்றி ? நிமிடத்துக்கு பத்து என விளம்பரங்களில் தலைகாட்டும் தேநீர்களின் பெயர்களைக் கேட்டுக் கேட்டுக் குழம்பிப் போயிருக்கும் நம்மில் பலருக்கும் தெரியாமலே போய்விட்ட ஒன்று தான் இந்த பச்சைத் தேநீர். இந்தத் தேனீரில் மகத்துவமே இருக்கிறது என ஆராய்ச்சிகள் வியந்து பேசுகின்றன என்பது தான் இந்தத் தேனீரைப் பற்றி நாம் அறிந்து கொள்வது நல்லது என நானும் நினைப்பதற்குக் காரணம். இந்தத் தேனீரை அருந்தி வந்தால் உடல் பருமனாவதிலிருந்து தப்பலாம் எனவும், இந்த கிரீன் டீ உடலிலுள்ள இன்சுலின் சுரக்கும் தன்மையை வலிமைப்படுத்தும் எனவும் யூகேவின் பர்மிங்காம் பல்கலைக்கழகம் பச்சைத் தேநீர் பற்றி வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவிலிருந்தே துவங்குகிறேன். சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தேநீர் அருந்தத் துவங்கி விட்ட சீனாவில் தான் இந்த பச்சைத் தேனீரும் முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதே பெரும்பாலானோரால் ஒத்துக் கொள்ளப்பட்ட பச்சைத் தேநீர் வரலாறு. எனினும் சீனா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் இந்தியா வில் இந்த பச்சைத் தேநீர் மிகப்பழங்காலம் முதலே பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதே பரவலான நம்பிக்கை. எதற்குப் பயன்படுத்தினார்கள் என்பது கூடுதல் சுவாரஸ்யமானது. உடலில் காயம் ஏதேனும் ஏற்பட்டால் குருதி வழிதலைக் கட்டுப்படுத்தவும், காயத்தை ஆற்றவும், உடலின் வெப்பத்தை சமநிலைப்படுத்தவும், செரிமானத்தன்மையை அதிகப்படுத்தவும் மற்றும் குருதி சர்க்கரை அளவை மட்டுப்படுத்தவும் இந்த பச்சைத் தேநீர் பயன்படுத்தப்பட்டு வந்ததாம். "தி கிஸா யோஜோக்கி" ( பச்சைத் தேநீர் ) எனும் நூல் தான் பச்சைத் தேனீருக்கு இருக்கும் மகிமையை வியக்க வியக்க விவரிக்கும் முதல் நூல். இந்த நூலை எழுதியவர் ஒரு ஜென் துறவி. இவர் பச்சைத் தேனீரைக் குறித்து இந்த நூல் முழுக்க எழுதியிருப்பதைப் பார்த்தால் இந்த பச்சைத் தேநீர் ஒரு சர்வரோக நிவாரிணி என்பது போன்ற பிரமிப்பு உருவாகிறது. உடலின் மிக முக்கியமான ஐந்து உறுப்புகளுக்கு இந்த பச்சைத் தேநீர் எப்படியெல்லாம் பயன்படுகிறது என ஒரு கைதேர்ந்த மருத்துவரைப் போல இவர் விரிவாக விவரித்துள்ளார். குறிப்பாக இதயத்துக்கு பச்சைத் தேநீர் ஒரு வரப்பிரசாதமாம். இந்த நூல் வெளியான ஆண்டு 1191. பச்சைத் தேனீரைக் குறித்த மருத்துவப் பயன்களில் பல நிரூபிக்கப்பட்டவை, சில நிரூபிக்கப்படாத நம்பிக்கைகள். அந்த நம்பிக்கைகள் மறுக்கப்படவும் இல்லை என்பதே நம்பிக்கையுடன் பச்சைத் தேனீரை நோக்கி நம்மை அணுக வைக்கிறது. அல்சீமர், பார்கின்ஸன் என மருத்துவ உலகம் அச்சத்துடன் அணுகும் அதிபயங்கர நோய்கள் வராமல் தடுக்கும் வலிமை பச்சைத் தேனீருக்கு இருக்கிறதாம். பற்களைப் பாதுகாக்கிறது என்பது முதல் புற்று நோய் வராமல் தடுப்பது, மாரடைப்பு வராமல் தடுப்பது என உயிர்க்கொல்லி நோய்களுக்கு எதிராகவும் பச்சைத் தேநீர் நிமிர்ந்து நிற்கிறது என ஆங்காங்கே பச்சைத் தேனீரைக் குறித்துக் கிடைக்கும் தகவல்கள் பிரமிப்பூட்டுகின்றன. நியூயார்க் பத்திரிகையாளர் ஜாய் பானர், பச்சைத் தேநீர் மூளையின் வினையூக்கியாகச் செயல்படுகிறது, மூளையை சுறுசுறுப்புடனும் வலிமையுடனும் வைத்திருக்க உதவுகிறது என குறிப்பிடுகிறார். தினமும் ஐந்து கோப்பை பச்சைத் தேநீர் அருந்தி வந்தால் உடலிலிருந்து தேவையற்ற கொழுப்பு கரையும் என்கின்றனர் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள். உடற்பயிற்சிக் கூடத்தில் அரை மணி நேரம் ஓடுவதும் ஐந்து கோப்பை தேநீர் அருந்துவதும் ஒரே அளவு கலோரிகளைக் கரைக்கும் என்பது அவர்களது ஆராய்ச்சி முடிவு. ஆறு வாரங்கள் நீங்கள் காபியை விரட்டி விட்டு பச்சைத் தேனீரை அருந்தி வாருங்கள் உங்கள் உடல் எடை நான்கு கிலோ குறையும் என வியக்க வைக்கிறார் மருத்துவர் நிக்கோலர் பெரிகோன். அமெரிக்க புற்று நோய் ஆராய்ச்சிக் கூடம் வெளியிட்ட அறிக்கை ஒன்று பச்சைத் தேனீருக்கு புற்று நோயைத் தடுக்கும் வலிமை உண்டு என மருத்துவர் ஹான் சியோ மூலமாக மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதேபோல அமெரிக்க மருத்துவக் கழக பத்திரிகை 1996 செப்டம்பர் 13 இதழில் பச்சைத் தேநீர் இதயம் சார்ந்த நோய்களைத் தடுக்கும் வலிமை கொண்டது என ஆய்வு முடிவு வெளியிட்டிருந்தது. நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் அதிகப்படுத்துவதிலும், உயர் குருதி அழுத்தத்தைக் குறைப்பதிலும் தலை சிறந்தது பச்சைத் தேநீர் என்கின்றன சீன ஆய்வுகள். எல்லாவற்றுக்கும் மேலாக ஹைச்.ஐ.வி எனப்படும் எயிட்ஸ் கிருமி உடலின் டி-அணுக்களைப் பாதிக்காமல் பச்சைத் தேநீர் தடுக்கும் எனும் நிரூபிக்கப்படாத நம்பிக்கையும் மருத்துவ உலகில் நிலவுகிறது. உடல் சார்ந்த இத்தகைய பயன்களோடு மன அழுத்தம் போன்றவற்றைக் குறைக்கும் வலிமை கூட பச்சைத் தேனீருக்கு உண்டு என ஒரு ஆராய்ச்சி வியக்க வைக்கிறது. சற்றே மருத்துவ வாசனையில் சொன்னால், பச்சைத் தேனீரில் இருக்கும் எப்பிகலோகாட்ஸின் காலேட் ( EGCG ) எனப்படும் நச்சுத் தன்மையை எதிர்க்கும் பொருள் தான் பச்சைத் தேனீரை மருத்துவக் குணம் வாய்ந்த ஒன்றாக மாற்றுகிறது எனலாம். இந்தப் பொருள் தான் புற்று நோய் வர விடாமல் தடுப்பதுடன், உடலின் கொழுப்பைக் கரைத்தும், குருதிக் குழாய்களின் அடைப்பைக் கரைத்தும் உடலை ஆரோக்கியமாய் வைத்திருக்க உதவுகிறது. எழுபத்தைந்து விழுக்காடு மக்களும் புகைக்கு அடிமையாகி இருக்கும் ஜப்பானில் இதய நோயாளிகள் குறைவாகவே இருக்கிறார்களே !!! ஏன் ? ஏன் ? அது ஏன் ?? எனும் மருத்துவ வினாவுக்குப் பின்னால் புன்னகைத்துக் கொண்டிருப்பது இந்த பச்சைத் தேநீர் தான். கெமீலியா சைனாஸிஸ் என தாவரவியல் பெயரிட்டழைக்கும் இந்த தேயிலை மரத்திலிருந்து வேறு சில தேநீர் வகைகள் தயாரிக்கப்படுகின்றன என்றாலும் தயாரிப்பு முறையினால் இந்த பச்சைத் தேநீர் அதிக மருத்துவ குணம் வாய்ந்ததாகி விடுகிறது. சரி இந்தப் பச்சைத் தேனீரில் சிக்கல்களே இல்லையா என நீங்கள் கேட்பது புரிகிறது. உண்டு ! ஒரே ஒரு சிக்கல். பச்சைத் தேனீரிலும் காபியில் இருப்பது போன்ற காஃபைன் எனும் நச்சுத் தன்மை உண்டு. ஆனால் காபியுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது என்பதே சற்று நிம்மதிப் பெருமூச்சு விட வைக்கும் செய்தி. ஒரு நாளைக்கு எத்தனை கோப்பை பச்சைத் தேநீர் அருந்தலாம் என்பதற்கும் பல்வேறு ஆய்வுகளும் பல்வேறு விதமான பதில்களைச் சொல்கின்றன. எல்லா ஆய்வுகளையும் கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுப் பார்த்தால், தினமும் நான்கு அல்லது ஐந்து கோப்பை பச்சைத் தேநீர் அருந்துவது சாலச் சிறந்தது எனும் முடிவுக்கு வரமுடிகிறது. இதயம், நுரையீரல், குருதி, எலும்புகள் என உடலின் எல்லா பாகங்களுக்கும் நன்மையை விளைவித்து இந்தப் பச்சைத் தேநீர் தலை நிமிர்ந்து…. மன்னிக்கவும் இலை நிமிர்ந்து நிற்கிறது !

No comments:

Post a Comment

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.