Oct 12, 2011

கத்தார் - பறந்த எண்ணம்

Qatar-Fastest growing region in middle east என்று குவைத்தில் என் முன்னாள் சக பணியாள் ஒரு மலையாளி சொன்னதுமே அப்படி என்ன இருக்கிறது என்று பார்த்துவிடும் எண்ணம் இல்லாத மூளையின் ஒரு மூலையில் சம்மணமிட்டுக்கொண்டது. அடுத்த சில மாதங்களில் தமிழ்பிரியன் கத்தாரைப் பற்றிச் சொன்னதும் எண்ணம் உருமாறி விமானத்தில் பறந்தது.

தோஹா சர்வதேச விமான நிலையம்.
விமானத்திலிருந்து இறங்கி நான் ஏறிய பேருந்து, விமானநிலையம் வந்து சேர 2 கிலோமீட்டராவது உருண்டு சென்றிருக்கும். புதிதாக கட்டமைக்கப்பட்ட மிகப்பெரிய நிலையம். பரந்த இடத்தில் பரவலாக கொட்டாவி விட்டபடி அமர்ந்திருந்த குண்டு குடிபுகு அதிகாரி'னி என்னிடம்;
'எங்கிருந்து வருகிறாய்?'
'மதுரை' 
'ம்..?' 
'இல்லை.. சென்னை'
'டங்ங்ங்ங்' நெற்றிப்பொட்டில் ஸ்டாம்ப் அடிப்பது போன்ற உணர்வு. பாஸ்போர்டை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தேன். கான்வே பெல்டை ஒரு நேபாளி நாக்கால் நக்காதது தான் குறை, தேய் தேய் என் தேய்த்துக் கொண்டிருந்தான். ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் நான் இளித்த பல் தெரிந்தது.படு சுத்தம். தாமதிக்காமல் லக்கேஜ் நகர்ந்து வந்து சேர்ந்தது. வெளியே கம்பெனி பெயரை கையில் ஏந்தி காத்திருந்த சிங்களவனுடன் அடுத்த பயணம் தொடங்கியது.

'ஆ' வென்றிருந்த சாலை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும் ஆனால், மிகவும் உயரமில்லா பெரும்பாலும் பழைய  கட்டிடங்கள், அடிக்கடி நிறுத்திப்பார்க்கும் ட்ராஃபிக் சிக்னல், நகரத்தின் நடுநடுவே மிகப்பரவலான வெற்றிடமும் அதற்கடுத்து வரும் மாலின் சன நெரிசலும் ஏதோ இந்த நகரம் திட்டமிடாமல் தானாக அமைத்துக் கொண்டதை போன்ற உணர்வை ஏற்படுத்தியது. ஒன்றை சொல்லியே ஆகவேண்டும், கத்தாரில் நான் சென்ற இடங்கலெல்லாம் ரவுண்டானாக்களால் பின்னப்பட்டிருக்கிறது. நகரின் அதிமுக்கிய சாலைகளின் நெரிசல் ரவுண்டானாக்களால் கட்டுப்படுத்தப்படுவதும் சில ரவுண்டானாக்களில் வைக்கப்பட்டிருக்கும் ட்ராஃபிக் சிக்னலால் நெரிசல் அதிகரிப்பதை காணும் போதும் எரிச்சல் அதிகமாகும். இங்கு குறிப்பிட்டளவே பாலங்களை காணமுடிந்தது. நகருக்குள் இரண்டோ மூன்றோ பாலங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. தோஹாவின் உள்கட்டுமானம் படு மோசமாயிருந்தது.

கத்தார்-
1.6 மில்லியன் மக்கள் தொகைகொண்ட வளைகுடா நாடு. 19ம் நூற்றாண்டின் மத்தியலிருந்து அல்-தானி பரம்பரையால் ஆட்சி செய்யப்படுகிறது. இப்போது ஷேக் ஹாமத் பின் கலிஃபா அல் தானி கத்தாரின் மன்னராக இருக்கிறார். முக்கிய அரசபதவிகளில் அல்-தானி குடும்பத்தினரே அமர்த்தப்பட்டுள்ளனர். இஸ்லாமிய தண்டனைச் சட்டம் அமலில் உள்ளது என்று சொல்லிக் கொண்டாலும் அமேரிக்க படையினரோடு ஒப்பந்தம் செய்துகொண்டு இஸ்லாமிய ஆட்சி செய்வதாவது. பாரம்பரிய உடை என்று ஒன்று இருந்தாலும் உடைக்கட்டுப்பாடு இல்லை. குட்டை பாவாடையுடனான இருகிய உடையும், குதி நடையும் இங்கே சாதாரணம். அதே நேரம் பர்தா விற்பனையும் அமோகமாகயிருப்பது வளைகுடா நாடுகளுக்கேயான அழகிய முரண்.2022ல் உலகக் கோப்பை நடத்த கத்தார் தேர்வான பிறகு மளமளவென உள்வேலைகள் நடக்க ஆரம்பித்தது. மேலை நாடுகளுக்கு நாங்கள் சற்றும் சலைத்தவர்களல்ல என்று போட்டிபோட நகர் கட்டமைக்கப்படுகிறது. நகரின் மய்யத்தில் இருந்த பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அங்கு மிகப்பிரமாண்ட கட்டுமானப்பணி நடைபெறுகிறது. ஒவ்வொரு முறை அந்த பகுதியை கடக்கும் போதும் அங்கு உயர்ந்து நிற்கும் கட்டுமான இயந்திரங்கள் என்னை பிரமிப்பில் ஆழ்த்த மறப்பதில்லை. நகருக்கு சற்றே வெளியே 7 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு மால் தயாராகிறது. இது சிறு வியாபாரிகளுக்காக இருக்கலாம். தவிர, புதிய பாலங்கள், நகரம், விமான நிலையம் முக்கியமாக மைதானங்கள் அனைத்திற்குமான கட்டுமானப்பணிகளின் வேகத்தை பார்க்கையின் 2022க்கு இன்னும் 22 மாதங்களே மீதமிருப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

வில்லாஜியோ மால் - வானம் தொடும் தூரம்

இவையெல்லாவற்றையும் விட, உலகமயமாக்கல் பந்தயத்தில் ஐக்கிய அமீரகத்தை முந்திச் செல்ல இங்கும் மதுபான விடுதிகள் திறந்துவிடப் போகிறார்களாம். முதற்கட்டமாக 16 விடுதிகளுக்கு அனுமதியளித்துவிட்டதாகவும் செவிவழிச் செய்தி. முன்னதாகவே நட்சத்திர விடுதிகளில் மட்டும் மதுவிற்பனை அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாதையில் பயணிப்போம்.
<<<<<<<<>>>>>>>>>
அல்குர்ஆன்; நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? - மாயிதா :91

17 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  நடுநிலையுடன் எழுதப்பட்ட அருமையான பயணக்கட்டுரை. இதில் உள்ளவற்றை வாசிக்கும்போது ஒரு சில நல்ல விஷயங்கள் இருந்தாலும், மிகுதியாக கத்தாரின் எதிர்காலப்பயணப்பாதை பயத்தை ஊட்டுகிறது. அல்லாஹ் அவர்களுக்கு நல்ல புத்தியை குடுக்க இறைஞ்சுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.பீர்.

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  அன்பு சகோ பீர்.,

  இது உங்களின் அனுபவ பயணமாக இருந்தாலும்., வளைகுடா நாடுகளின் நிதர்சன மாற்றத்தை படம் பிடித்து காட்டீருயிருக்கிறீர்கள்., அதிலும் அந்த 3D VIEW ROAD SHOW மிக அருமை., மேற்கத்திய கலச்சார நிழல் அங்கும் தம் கால் பதிக்க முற்படுவது தான் வருத்தத்திற்குரியது :)

  ReplyDelete
 3. //வில்லாஜியோ மால் - வானம் தொடும் தூரம்//

  அழகு :-)

  ReplyDelete
 4. பாஸ், நேத்து பெஞ்ச உலகக்கோப்பையில முளைச்ச கத்தாரைப் பாத்தே இப்படின்னா, எங்க ‘டுபாய்’, ’அபுதாபி’யைப் பாத்தா என்ன செய்வீகளோ??!!

  நாகூட வீடியோவுல ‘டுபாய்’ ரோடுன்னு நினைச்சுட்டேன், ஆனா ச்சின்ன ச்சின்ன பில்டிங்கு, அப்புறம் பழைய மாடல் ச்சின்ன கார்களைப் பாத்துத்தான் அது டுபாய் இல்லைன்னு புரிஞ்சுது. :-)))))

  //தமிழ்பிரியன் கத்தாரைப் பற்றிச் சொன்னதும்//
  அதுக்கப்புறம்தான் அவரை ஆளையேக் காணோம். நீங்க எப்புடி? :-)))))))

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. உலகமயமாக்கல் பந்தயத்தில் ஐக்கிய அமீரகத்தை முந்திச் செல்ல இங்கும் மதுபான விடுதிகள் திறந்துவிடப் போகிறார்களாம். முதற்கட்டமாக 16 விடுதிகளுக்கு அனுமதியளித்துவிட்டதாகவும் செவிவழிச் செய்தி///

  மதுபானம் கடைகளில் விற்கப்படாத இஸ்லாமிய நாடு கத்தார் என்பதில் சற்று திருப்தியாக இருந்தது.அதற்கும் ஆப்பா?

  இன்னொன்று தெரியுமா?வீக் எண்டில் பெரிய மால்களுக்கு கத்தாரி ஆண்களைத்தவிர பிற நாடு ஆண்கள் தனியாகவோ ஆண்நண்பர்களுடனோ செல்லக்கூடாதாம்.அதற்கு அனுமதி இல்லையாம்.குடும்பத்தோடு என்றால் ஒகேவாம்.இதுவும் செவி வழிச்செய்தி.

  நீங்கள் காட்டிய வில்லேஜ் ஓ மாலில் ஒரு வெள்ளியன்று சென்று இருந்தபொழுது கத்தாரிகள் மட்டுமே இருந்ததையும்,மற்ற நாட்டவர்களில் யாரையும் காணவில்லையே என்று கேட்டபொழுது ஒரு கத்தார் வாசி சொன்ன தகவல் மேற்கண்டவை.உண்மையா என்று தெரிந்தவர்கள் பின்னூட்டட்டும்.

  ReplyDelete
 7. @குலாம், ஸலாம்..

  வளைகுடா நாடுகளின் நிதர்சனத்தை இன்னுமே அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். மது பற்றிய ஒற்றைச் செய்தியை இங்கு பதியவே ஆசைப்பட்டேன். என்னைப் பொருத்தவரை அந்த நிழல் இங்கு கால் பதித்து வெகுநாட்களாகிறது.

  ReplyDelete
 8. நன்றி @ஆமினா.

  @ஹூசைனம்மா, அதனால்தான் நான் இன்னும் அந்த 'நரகத்தின் நிழலை' க்கூட நெருங்காது இருக்கிறேன். ;-).... அப்போ எங்களைமாதிரி ஆட்கள் நடந்து போறத பார்த்தா நெல்லைன்னு சொல்லுவீங்களோ.
  தமிழ்பிரியனை நான் இன்னும் சந்திக்கவே இல்லை. ஆள் ரொம்பவே பிஸி.

  ReplyDelete
 9. @ஸாதிகா,
  1. நான் இருந்த சவுதி, குவைத் நாடுகளில் அதிகாரபூர்வ விற்பனை கிடையாது.

  2. ஆமாம், வாரயிறுதியில் எங்களுக்கெல்லாம் அனுமதியில்லை என்பது ரூல். அதனாலேயே நான் இதுவரை சென்றதெல்லாம் வாரயிறுதியில் தான். #ப்ரேக் த ரூல்.

  இந்த ரூல் பல மால்களுக்கு உண்டு, மட்டுமின்றி ஈரானி மார்கெட் என்று சொல்லப்படுகிற இடத்திற்கும் 'காஸ்ட்லி' பீப்பிள் மட்டுமே செல்ல அனுமதி. அந்த மார்கெட்டில் 'இங்கு சட்டவிரோத செயல்கள் அனைத்தும் நடக்கும்' என்று பெயர் பலகை மாட்டாத குறைமட்டுமே.

  ReplyDelete
 10. நான் சொல்ல வந்ததை ஹுஸைனம்மா சொல்லிட்டாங்க ... கத்தார்ல நீங்க சொல்ற வசதி வரும் போது துபாய் , அபுதாபியின் வளர்ச்சி எங்கே போய் நிற்குமோ....!!!! :-))

  ReplyDelete
 11. @ஜெய்லானி, அதுதான் பயந்துவருது, உங்களை நெனச்சா பாவமாவும் இருக்கு.

  ஸ்மைலி :-(( இப்படி போடணும்.

  ReplyDelete
 12. அஸ்ஸலாமு அலைக்கும்.

  நலமா!

  நேற்று தான் முதன் முறையாக துபாயில் (HCL) பார்ட்டி போயிருந்தேன், மிகவும் நொந்து தான் போனது அங்கு இருந்த நிலை ...

  ReplyDelete
 13. ///ஸ்மைலி :-(( இப்படி போடணும்.///

  hold on... hold on...

  அப்படி போட்டா அது 'சேட்லி'..!

  So sad... :-((

  ReplyDelete
 14. நீண்ட நாட்களுக்கு பின் வழக்கமான பீர்!!!

  ReplyDelete
 15. ரவுண்டானா என்று சொல்லலாமா? தமிழ் சொல்லா? #roundturnon #doubt

  ReplyDelete
 16. பாலா, ரவுண்டானான்னு சொல்லலாமா கூடாதான்னு தெரியல. ஆனா நாம அப்படித்தான் சொல்றோம்.

  கீச்சுல ரிப்ளை வந்தா சொல்லுங்க.

  ReplyDelete
 17. ஜமால், நலமே அல்ஹம்துலில்லாஹ்..

  பொருளாதாரத்தால் அடித்துப்பார்த்தான் உணரவில்லை.,

  ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.