மதுரை இப்போது ஜொலித்துக் கொண்டிருக்கிறது. பின்னே, மத்திய அமைச்சரின் மகனுக்கல்லவா திருமணம்?
ஒரு சராசரி பணக்காரனின் திருமணம் என்றாலே அந்தப் பகுதி கொஞ்சம் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகத்தான் செய்யும். (எல்லாம் ஒரு விளம்பரம்தான்!) மதுரை இளவரசருக்குக் கல்யாணம் என்றால் கேட்கவா வேண்டும்?
தயாநிதியை மதுரை இளவரசர் எனச் சொல்வதற்கு எனக்குக் கொஞ்சமும் கூச்சமில்லை. ஏனெனில் மதுரை மன்னருக்கு மகன் என்றால்... நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர் இளவரசர்தான்.
மதுரையில் (நான் பார்த்தவரை)ரயில்வே பாலம் மற்றும் மேயர் முத்து பாலங்கள் முழுவதும் சீரியல் லைட் அலங்காரம். மேலும், யானைக்கல் பாலம், விக்டர் ஆல்பர்ட் பாலம் முழுவதும் சீரியல் லைட்டுகள், சூரிய வடிவ டியூப் லைட்டுகள், கொடிகள், தோரணங்கள்.
என் நண்பன் சொன்னான்: வேற வீட்டுக்குக் கல்யாணத்துக்கு இவர்கள் வருவதாக இருந்தாலே அலங்கார வளைவுகள், தோரணங்கள், பேனர்கள் வானையும் நம் மூச்சையும் முட்டும்... இவர்களின் வீட்டுத் திருமணம் என்றால் என்னென்ன நடக்கப் போகுதோ?
ஆனால் அப்படியொன்றும் பெரிய அளவில் பேனர், தோரணங்கள் இல்லைதான் என முதலில் ஆறுதலடைந்தேன். ஆனால் இப்போது அப்படியிருந்தால் கூடப் பரவாயில்லை எனத் தோன்றுகிறது.
மதுரை உள்ளிட்ட தமிழக நகரங்கள் முழுவதும் மின்பற்றாக்குறையால் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. ஆனால் 13ஆம் தேதியிலிருந்து மதுரை நகர் இரவு முழுவதும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. நான்கு பாலங்கள் முழுவதும் டியூப் லைட்டுகள், சீரியல்கள் அத்துடன் தமுக்கம் மைதானம் போகும் வழியெங்கும் ஃபோகஸ் லைட்டுகள் எரிக்கப்படுவதற்காக நாம் பகலெல்லாம் புழுங்கிச் சாகிறோம். பிறகு இந்தியாவில் இரண்டாவது பணக்கார அமைச்சரின் பணத்தை செலவளிப்பதற்கு வேறு நியாயமான காரணம் வேண்டாமோ?
![]() | ||
சூரியனுக்கு வெளிச்சம் காட்டும் பல்பு |
![]() |
பாதை மறிக்கும் சூரியக்கூட்டம் |
![]() |
நோ கமண்ட்ஸ் (இடம் மதுரை கல்லூரி) |
ஆனால் நமது கேள்வியெல்லாம் ஒன்றுதான்... சூரிய குடும்பம் என்று தமிழகமே உங்களைப் போற்றுகிறது. உங்கள் பேனர்கள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன. சேகுவெரா, ஜார்ஜ் புஷ், சத்ரபதி சிவாஜி போன்ற உலக ஆளுமைகளின் பிம்பங்கள் எல்லாம் உங்கள் உடல்களில் பிரதி செய்யப்படுகின்றன... ரொம்ப மகிழ்ச்சி...
உங்கள் சூரிய குடும்பத்திலிருந்து மின்சாரம் எடுத்து இரண்டு மணி நேரம் மின்வெட்டை நிறுத்தினால் உங்களையும், திருமணம் செய்யப் போகும் இளவரசரையும் நாடு போற்றும். உங்கள் கட்சியினர் மட்டுமல்ல, கட்சி சாராத பொது மக்களும் போற்றுவார்கள்.
மதுரை மக்கள் மணமக்களைப் போற்றுவதற்கு மேலும் சில ஆலோசனைகள்
1. உடனடியாக மதுரை முழுவதும் சேதமடைந்திருக்கும் சாலைகளை புதிதாகப் போட்டால் அதற்குக் காரணமான மணமக்களை மதுரை மக்கள் மனம் நிறைவாகப் பாராட்டுவார்கள். வாழ்த்துவார்கள்.
2. கல்யாண விளக்குகள் எரியும் நாளிலிருந்து ஒரு மாதத்துக்கு மதுரை மக்களுக்கு மின்வெட்டு இல்லை.
3. திருமணத்திற்கு முன்னும் பின்னும் மொத்தம் மூன்று நாட்கள் மதுரை நகருக்குள் பேருந்தில் எங்கு சென்றாலும் இலவசம். (ஒரு நாளைக்காவது ஷேர் ஆட்டோ தொல்லையிலிருந்து மக்களுக்கு நிம்மதி கிடைக்கும்.)
4. யாரோ எம்.எல்.ஏ ஆவதற்காக ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தவர், மகன் திருமணத்துக்கு ஒரு வீட்டுக்கு ஆயிரம் ரூபாயாவது தருவார் என எதிர்பார்க்கலாம்.
5. திருமணத்தையொட்டி பெட்ரோல் விலையை சட்டென்று பாதியாகக் குறைக்கலாம்.
6. திருமணத்தன்று வாழ்த்துச் செய்தி அதிகமாகப் பரிமாறிக் கொள்ளப்படும் என்பதால் அன்று அனைத்து மொபைல் சர்வீஸும் எஸ்.எம்.எஸ் இலவசமாக்கப்படும்.
7. அன்று பிறக்கும் குழந்தைகளில் தயாநிதி பெயர் சூட்டுவோருக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்படும்.
8. அன்று மதுரை நகர் முழுவதும் மையங்கள் நிறுவி மக்களுக்கு விருந்தளிக்கப்படும்.
சட்டமன்ற தேர்தல் வெகு அண்மையில் இருப்பதால் அதை வெற்றிகரமாக எதிர்கொள்ள மேற்கண்ட ஆலோசனைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜோக்ஸ் அபார்ட், உண்மையில் தற்கால அமைச்சர் மகனுடைய திருமணம் என்கிற ஆடம்பர விதிகளின்படி திருமணம் நடந்தது எனில் ஜெயலலிதா ஆட்சியில் வளர்ப்பு மகன் திருமணம் ஏற்படுத்திய விளைவையே தி.மு.க.வும் சந்திக்கும். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாதபோது விதி எல்லோருக்கும் ஒன்றுதான், அது நியூட்டன் ஆனாலும் சரியே!
மறுபுறம், ஜெயலலிதாவை விமர்சித்த அளவுக்கு திமுகவை விமர்சிக்கும் நெஞ்சுரமோ துணிச்சலோ அஞ்சா நெஞ்சமோ தமிழகத்தின் பிழைப்புவாத ஊடகங்களுக்கு இல்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
`பேயாட்சி செய்யும் நாட்டில் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று சொன்ன பாரதியின் பாடல் இன்று எவ்வளவு கனகச்சிதமாய்ப் பொருந்துகிறது. பிறகு, எவ்வளவு அராஜகம் நடந்தாலும் வேறு வழியேயில்லாமல் முதலமைச்சரும், காவல்துறையும், அமைச்சர்களும், வணிக நிறுவனங்களும், பொதுமக்களும் இந்தத் திருமணத்தை வாழ்த்தித்தானே ஆக வேண்டியிருக்கிறது.
(சம்பந்தமில்லாத ஒரு குறிப்பு: நேற்று சி.டி.யில் மனோகரா திரைப்படம் பார்த்தேன். கதை, வசனம்: மு.கருணாநிதி)