Showing posts with label ஓடுங்க.... Show all posts
Showing posts with label ஓடுங்க.... Show all posts

Oct 30, 2010

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீடு செய்ய நான் தயார்

நான் இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறேன். இங்கு தொழில் செய்வதற்கு ஒரு நம்பிக்கையான துணையை தேடிக்கொண்டிருக்கிறேன். கைவசம் XXXXX பணம் இருக்கிறது. .................

இப்படியாகச் செல்கிறது அந்த மின்னஞ்சல். அது அப்படியே இங்கே...

Dear Friend.
Good day to you, I am so sorry for sending you unsolicited mail, I got your contact from a Gulf Business directory I saw in my agents office and decided to contact you directly for the sake of business,
 
My name is steven madurn from Gambia. I am now in United Arab Emirates searching for a reliable business partner, I have about 5.5 million dollars and would want to invest it here in Dubai, am only soliciting for your assistance to help me .If you are willing to invest in this business please give me your confidential,

contact phone number so that we can see and discuss in details.
Thank you once again for your interest.
Steven madurne

அது இன்று மதியம் என்னுடைய பெட்டியில் வந்து கிடந்தது. என்னால் முடிந்த வரையில் முதல் இரண்டு வரியை மட்டும் தமிழில் படுத்தியுள்ளேன். அதில் சொல்லப்பட்டுளளள 5.5 மில்லியன் என்பதற்கு எத்தனை பூஜ்யம் அதை எவ்வாறு இந்திய மதிப்பில் மாற்றுவது என்பது கூடத் தெரியாத என்னை எப்படி தேர்ந்தெடுத்தார்கள். நான் பிஸினஸ் செய்வதாகவோ, செய்யப்போவதாகவோ எந்த ஒரு பொதுத்தளத்திலும் சொன்னதில்லையே. அல்லது நான் செய்யப்போகும் பிஸினஸ்க்கு பணம் வேண்டும் என்று கூட யாரையும் கேட்டதில்லை. ஒருவரைத்தவிர, ஒரு வேளை அவர்... ச்சே ச்சே. வாய்ப்பில்லை. பிள்ளை பூச்சி அவர். ரொம்ம்ம்ப நல்லவர் கூட.  அது கிடக்கட்டும்...

இது போன்ற மின்னஞ்சல்களில் மட்டுமே மயங்கிவிடுவோம் என்று எப்படி நம்புகிறார்கள்? ஒருவேளை இதில் மயங்கி மடிபவர்களும் இருப்பார்களோ? ஒருவேளை மடலின் நடுவே மானே, தேனே, பொன்மானே இதெல்லாம் போட்டிருந்தால் கூட நானோ அல்லது அன்புக்கு அடிமையாகும் சக அன்பர்களோ மயங்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இத்துடன் டீ செலவுக்கு பணம் அனுப்பியுள்ளோம் என்றாவது இருந்திருக்கலாம். எதுவும் இல்லாமல் வெறுமனே.. ச்சே. என்ன பிஸினஸ் ப்ரப்போஸல் இது.

நானும் ஒருவருக்கு பிஸ்னஸ் ப்ரப்போஸ் செய்திருந்தேன். நாம் இருவரும் பாட்னர்ஸ். இருவருமே ஒர்கிங் பார்ட்னர்ஸ், (இருக்கும் இடத்திலிருந்தே) லாபத்தில் இருவருக்குமே பங்கிருக்கிறது. மட்டுமல்லாது, இதில் நீங்கள் பண முதலீடும் செய்ய விரும்பினால் அதற்கென தனியான லாபமும் கணக்கிடப்படும். ப்ராடக்ட் தயாரான உடனே, உங்களது அறிவு முதலீட்டிற்கான கூலி தரப்படும், சரக்கு விற்பனையாகும் போது பண முதலீட்டிற்கான லாபமும் கணக்கட்டு பகிரப்படும். இதுதான் நம்ம ப்ரப்போஸல். நீங்கள் தயார் என்றால் மேலே பேசலாம். 

அவர் இன்னும் தயாராகவில்லை, அவருக்கென வடிவமைத்த அந்த ப்ராடக்ட் அப்படியே நிற்கிறது.

Oct 28, 2010

ஜிகர்தண்டா - மீண்டு மீண்டும்

நீண்ட நாட்களுக்குப் பிறகு...


மீண்டும் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்து ஏறக்குறைய ஒரு வருடமாகிறது. ஒரு பத்தி எழுதியதும் பணிச்சுமை, அலுப்பு, எனக்கே வாசிக்க விருப்பமின்றி என பல காரணங்களால் அத்தோடு குப்பைக்கு சென்ற எழுத்துக்கள் ஏராளம். இதை சிசுக்கொலை அல்லது கருக்கலைப்பு என்றும் சொல்லிக் கொல்லலாம். இம்முறை சாண் பிள்ளையானாலும் என் பிள்ளை என்ற எண்ணத்திலேயே எழுத ஆரம்பிக்கிறேன். இது நான் வீட்டிற்கு சென்று உண்டுறங்கும் நேரம். இதற்கு மேலும் யாரும் வந்து என் அலுவலகத்தில் 'க்யூ' வரிசையில் நிற்க மாட்டார்கள். என் வீட்டிலிருந்து அழைப்பு வருவதற்குள் இதை எழுதி பதித்து விட வேண்டும் என்றே எழுதுகிறேன். அப்படியொன்றும் அவசரமாகச் சொல்வதற்கொன்றுமில்லை. இது ஒரு மீள் தொடக்கமாக இருக்கட்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன். இதில் ஏதும் விஷயத்தை தேடாதீர்கள், தொலைந்த நான் இங்கு மீண்டு வந்ததாக எண்ணம் கொள்ளலாம்.

ஒரு வருடமாக இங்கு ஏதும் எழுதவில்லையே தவிர வாசிக்க வேண்டிய பதிவுகளை வாசித்து வந்திருக்கிறேன். நேரமிருக்கும் போது தேவைப்படும் இடங்களில் மறுமொழியும் இட்டுவந்திருக்கிறேன்.

கடந்த வருடத்தை திரும்பி பார்க்கிறேன்-
குவைத்தில் இருந்து இந்தியா திரும்பியதும், நண்பர் நர்சிம் உதவியால் கிழக்கு பதிப்பகத்துடனான நட்புறவில் சிறிய வியாபாரம் செய்தது. சென்னையில் சில மாதங்கள் இருந்த போது ஒரு பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டது. அங்கு சற்றே கலவரச்சூழல் நிலவிய போது ஆளவிடுங்கப்பா என்று அடிபடாமல் திரும்பியது. மறுநாள் பதிவுச் செய்திகளில் எந்த வித சம்பாவிதமும் நடக்கவில்லை என்பதை வாசித்தறிந்து சற்றே ஏமாற்றம் அடைந்தது.

சற்றும் எதிர்பாராத நிகழ்வு நண்பர் நர்சிம் சர்ச்சையில் சிக்கிக்கொண்டது. எதிர்பார்த்தது போலவே அதிலிருந்து அவர் மீண்டு வந்தது. அந்த சர்ச்சையின் போதும் எதிர்பாராத திருப்பங்களும் சில பூனைகளும் வெளியே வந்தது. எப்போதும் போலவே லக்கி அதிஷா பெயர் கடிபட்டது.

அதைத் தொடர்ந்து இப்போதும் அடிக்கடி பிரிந்து சேரும் பதிவுலக பிதாமகன்கள் அவ்வப்போது அடித்துகொள்வது.

மதுரையில் நடந்த புத்தக கண்காட்சியில் ஞாநியுடனான சந்திப்பு மறக்க முடியாதது. மீண்டும் பதிவர்களை சந்தித்துக்கொண்டது. இடுகை, பின்னூட்டம் என்ற சொற்களை ஏற்றுக்கொள்ளாத ஞாநி, பதிவு, மறுமொழி என்பதே சரி என்பதை சரியாகச் சொல்லி விளக்கியது. மீண்டும் சீனா ஐயா வீட்டில் பதிவர்களை சந்தித்தது.

இடையே நடந்த ஆல் இன் ஆல் ராஜன் திருமண நிகழ்வு. (வாழ்த்துகள் ராஜன், நீங்கள் இருவரும் எல்லா வளமும், நம்பிக்கையும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நன்றி திருமதி. ராஜன், அவரை 'மனம்' மாற்றியதற்காக)

-------------

சமூக ஆர்வலர் அருந்ததி ராய் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசியதற்காக தேச பிரிவினைவாத சட்டத்தில் கைது செய்யப்படலாம் என்ற செய்தியை தொடர்ந்து கஷ்மீரில் இருந்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 'இந்த நாட்டை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது' என்கிறார். ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும் அவருடைய குரல் அரசியல்வாதிகளுக்கு தொண்டையை அடைக்கிறது. அ.மார்க்ஸ் எழுதியிருக்கும் காஷ்மீர்- என்ன நடக்குது அங்கே? என்ற புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதை விரிவாக பிறகு அலசுவோம்.

அடுத்த மாதம் மதுரை அழகர் மகனுக்கு திருமணமாம், இப்போதே பெரிய போஸ்டர்கள் சுவர்களை ஆக்கிரமிக்கத்தொடங்கிவிட்டன. அவர் ஹனிமூன் போகும் வரை மதுரை விழி பிதுங்கி திணரப் போகிறது. நகரெங்கும் வளரும் பெரிய பெயர் தாங்கிகளைத் தவிர ஒன்றும் வளர்ந்துவிடவில்லை. சூரியன் ஆட்சி செய்தும் மதுரைக்கு விடியல் இல்லை.

ஐந்து வருடங்களுக்குப்பிறகு மழையில் நனைகிறேன். போகும் இடமெல்லாம் கிடைக்கும் தண்ணீர் குடிக்கிறேன். நேரம் தவறிவிட்டால் கிடைப்பதை சாப்பாடாக்கிக் கொள்கிறேன். இப்போதெல்லாம் என் வயிற்றில் கடலை மிட்டாயும், கமர்கட்டுமே அதிக இடங்களை நிரப்பிக் கொள்கிறது. இப்போதும் 21;15 இரவு உணவு பற்றிய நினைப்பின்றி எழுதிக்கொக்..கொ.. கொண்டிருக்க முடியாமல் இத்தோடு பப்ளிஷ் பட்டனை அழுத்திவிடுகிறேன்.

Jan 5, 2010

உங்கள் தங்கமணியிடம் உதை வாங்குவது எப்படி?

திருமணம், விருந்து போன்ற நிகழ்வுகளில்...
தங்ஸ்ஸயே சுத்தி சுத்தி வாரீங்க >>> ம்.. பொழச்சு போங்க.
அப்படி சுத்தி வரும்போது சக பதிவரிடம் சீரியஸா பேசறீங்க >>> மூக்கிற்கு மேல் கோபத்தை பார்க்கலாம்.
அப்படி பேசும் போது இடையே ஹாய் சொல்பவருக்குப் பெயர் ரீடா, கீதா, ஜமீலா வாக இருந்துவிட்டால் >>> மூக்கிற்கு கீழேயும் கோபத்தை கேட்கலாம்.
அவர் உண்மையில் அழகி, புத்திசாலியும் கூட >>> வாழ்த்துக்கள்... உதை உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ் பிறந்தநாளின் போது...
வெளியே அழைத்துச் சென்றால் >>> ம்.. பொழச்சு போங்க.
அந்த இடம் உங்கள் விருப்ப இடமாக (மட்டும்) இருந்தால் >>> மூ. மே. கோ.
அங்கு தங்கஸ்க்கு பிடித்த டிஷ்/பொருள் கிடைக்காவிட்டால் >>> மூ. கீ. கோ.
இதையெல்லாம் விட ஆரம்பத்திலேயே பிறந்தநாள் தேதியை மறந்து (நினைவிருந்தாலும்) தொலைத்துவிட்டால் >>> வாழ்த்துக்கள்... உதை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ் சமைத்த உணவை சுவைக்கும்(?) போது...
ஒன்றும் பேசாமல் சாப்பிட்டால் >>> ம்.. பொழச்சு போங்க.
அட.. சுடுதண்ணி நல்லா பண்ணியிருக்கம்மா >>> மூ. மே. கோ.
இன்னிக்கும் அதே சாம்பாரா >>> மூ. கீ. கோ.
எங்க அம்மா சாம்பார் நல்லா வெப்பாங்க >>> வாழ்த்துக்கள்... உதை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ் கூட சினிமாவிற்கு செல்லும் போது...
சினிமா தங்ஸ்க்கு பிடிச்சிருக்கு >>> ம்.. பொழச்சு போங்க.
அதே சினிமா உங்களுக்கு பிடிக்கவில்லை >>> மூ. மே. கோ.
உங்களுக்கு பிடிச்சிருக்கு, தங்ஸ்க்கு பிடிக்கவில்லை >>> மூ. கீ. கோ.
அந்த சினிமா உலகத்தரத்தில் இருந்தால் >>> வாழ்த்துக்கள்... உதை உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ், உங்களிடம், 'இந்த ட்ரெஸ் எனக்கு எப்பிடியிருக்கு?' என்று கேட்கும் போது...
நீங்கள், 'நீ உடுத்தியிருப்பதால் தான் இந்த உடைக்கே அழகு' >>> ம்... பொழச்சு போங்க.
நல்லாயிருக்கு.. நல்லாயிருக்கு >>> மூ. மே. கோ.
அந்த நீலக்கலர் இதைவிட நல்லாயிருக்குமே >>> மூ. கீ. கோ.
வேறு ஏதாவது ஏடாகூட உண்மை சொல்றீங்க >>> வாழ்த்துக்கள்... உதை உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ், உங்களிடம் ஏதாவது பிரச்சனை பற்றி பேசும் போது...
லேப்டாப்பை மடித்துவைத்துவிட்டு கேட்டுக் கொண்டிருந்தால் >>> ம்.. பொழச்சு போங்க.
பின்னூட்டமிட்டுக்கொண்டே ம்.. ம்... என்று மட்டும் சொன்னால் >>> மூ. மே. கோ.
நீங்களும் திரும்ப ஏதாவது அறிவுரை சொன்னால் >>> மூ. கீ. கோ.
தங்ஸ் பேசிக்கொண்டிருக்கும் போது, நீங்கள் குறட்டைவிட்டால் >>> வாழ்த்துக்கள்.. உதை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

இனி வரப்போகும் நாட்களில் இன்னும் அதிகமாக டிப்ஸ் கிடைக்க வாய்ப்பிருக்கிறது :-)

Dec 4, 2009

வரலாறு முக்கியம் அமைச்சரே - மீண்டும் தொடர்

பதிவர் தன் வரலாறு கூறுதல் என்ற தொடர் பதிவு, ஊர் உலகமெல்லாம் சுற்றி நண்பர் ஊர்சுற்றி முலமாக என் காலை சுற்றியிருக்கிறது. இல்லாத ஒன்றை எழுதுவதன் வலி எழுதும் போதுதான் உணர்கிறேன்.  இது முன்பே தெரிந்திருந்தால் ஒருவேளை யோசித்திருப்பேனா தெரியாது. ஆனாலும் அண்ணன் ஊர்சுற்றியுடைய அப்ரோச் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதற்காகவாவது இதை எழுதுவது என்று முடிவுசெய்துவிட்டேன். ஆரம்பிதாகவிட்டது.. எதை எழுதுவது எங்கிருந்து தொடங்குவது  என்பதுதான் இன்னமும் பிடிபட மாட்டேன் என்கிறது.

முதலில் ஒன்றை சொல்லிவிடுகிறேன், நான் இலக்கியவாதியோ, பின்/முன் நவீனத்துவவாதியோ, தீவிர இலக்கிய வாசகனோ, எழுத்தாளனோ அல்ல. இணையத்தில் எழுதுவது சுயநலத்திற்காக மட்டுமே. பின்நவீன மொழியில் சொல்வதென்றால் சுய அரிப்பை தீர்த்துக்கொள்ளும் ஒரு சுய சொறிதல் தளம், அவ்வளவே. தமிழில் பிழையின்றி எழுத வேண்டும், தட்டச்ச வேண்டும் என்ற ஆசை மட்டுமே இச்சுய சொறிதலுக்கான காரணமாக இருக்கலாம் அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம். உலகத்தை புரட்டும் நெம்புகோலை தோளில் சுமந்து கொண்டு எதை உருட்டிப்புரட்டலாம் என்று விதிவழி தேடித்திரிபவன் அல்ல. ஆனால் அத்தகைய சூழல் வந்தால்  'என்னால் முடியும்' என்று திடமாக நம்புபவன். நான் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கோ அல்லது கருத்திற்கோ தவறான புரிதலில் மாற்றுக்கருத்து சொல்லப்படும் போது (கருத்து சொல்வது அவரவர் உரிமை என்றாலும்) அவற்றை பண்போடு எடுத்துச்சொல்லி புரிய வைப்பதும் என் உரிமையாகிறது. குறிப்பாக நான் அதிகம் நேசிக்கும்/வாசிக்கும் அன்பு நண்பர்கள் அதை சொல்லும் போது அவர்களுக்கு விளக்க வேண்டியது என் கடமையாகிறது.

இனி வரலாறு :) அப்போது அணி அதிகம் இல்லாத காலம். இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருக்கையில் எதுவோ கிடைத்தது போலத்தான் தமிழ் வலைப்பூ உலகம் அறிமுகமானது. எழுத்துறு இன்ஸ்டால் செய்துவாசிக்க வேண்டியிருந்த நேரத்தில், (என் அலுவலக கணினியில் ஒன்றையும் இன்ஸ்டால் செய்துவிட முடியாது என்பதால்) தமிழ் ஒருங்குறி எழுத்துக்களைத் தேடி வாசித்து வந்தேன். அப்போது நண்பர் அய்யனார் எழுதும் தனிமையின் இசை  வாசிக்க நேர்ந்தது. அதற்கு முன்னர் தமிழ் வலைப்பூ வாசித்திருக்கிறேனா என்பதை சரியாக நினைவுபடுத்த முடியவில்லை. தனிமையின் இசையை ஃபேவரிட்டில் வைத்து அவ்வப்போது வாசித்து வந்தேன். அதில் சிலருடைய மறுமொழிகளை வாசிக்கையில் சுவாரஸ்யமாக இருந்தது. யார் இவர்கள் என்று தொட்டு தேடிச்செல்கையில் பரந்த உலகம் அறிமுகமானது. தொடர்ச்சியாக ஆசிஃப் மீரான், சுகுணா திவாகர், லக்கிலுக், அறிவிழி, தமிழச்சி, விடாதுகருப்பு என்று நீண்டது. அந்தச்சூழலில் ஆணிகள் அதிகமாகிவிட்டாலும் இதற்கென நேரம் ஒதுக்கி வாசித்து வந்தேன். ஒருநிலையில் ஆணி மலைகளாகி விட்டதால் அறையில் இணைய இணைப்பு இழுக்க வேண்டியதாகிப்போனது. அரையிருட்டறையில் அதிக நேரம் அமர்ந்து வாசித்ததில் முதுகுத்தண்டு உராயத்தொடங்க, அப்போது மாறியதுதான் இந்த மடிக்கணினி 'தாரா' வுக்கு. மடியில் வைத்தால் சூடா(க்)கி விடுகிறது என்பதால் தலையணை மேல் வைத்திருக்கிறேன். அப்போ தலையணை கணினியா..? (அட.. போதும்பா கொசுவெல்லாம் ஆல்அவுட் ஆகிடுச்சு... விஷயத்துக்கு வா.) ஆமால்ல... டாபிக்க விட்டு வெளிய போயிட்டேனோ. இட்ஸ் ஓகே.. கயிறு கட்டிடலாம்.

தொடர்ந்து பதிவுகளை வாசித்து வந்தாலும் யாருக்கும் பின்னூட்டமிட்டதில்லை. சொல்வதற்கென்று கருத்து இருந்தாலும் அதை எப்படி சொல்வது என்பதில் குழப்பமும் கூடவே இருந்தது. அதாவது சொல்லும் முறை தெரியாதிருந்ததும் தமிழில் தட்டச்ச போதிய அறிவு இல்லாதிருந்ததுமே காரணம். அதற்கிடையில் ப்ளாக்ஸ்பாட் டாட் காம் 'ல் ஒரு கணக்கும் தொடங்கி வைத்திருந்தேன். என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியாமல்  கூகுல் ட்ரான்ஸ்லிட்ரேட்டில் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தேன். பிறகு, தமிழ்99 பற்றி ஒரு வலைப்பூவில் தெரிந்து கொண்டு W9 விசையை பயன்படுத்த ஆரம்பித்தேன். தமிழ்99 இலகுவாகவும் வேகமாகவும் தட்டச்ச உதவியது. ஆரம்பத்தில் எனக்கு வந்த சில மின்மடல்களை காப்பி பேஸ்ட் செய்து கடை நடத்திக்கொண்டிருந்தேன். அதற்கே தாவு தீர்ந்தது. எத்தனை முறை ப்ரூஃப் ரீட் செய்தாலும் மீண்டும் மீண்டும் தவறு தென்பட்டது. அதில் நானாக எழுதிய பல இடுகைகளை வெளியிடாமலேயே இருந்துவிட்டேன். இப்போது நான் பாவிக்கும் NHM Writer நண்பர் வால்பையன் அறிமுகப்படுத்தினார். மிகவும் இலகுவான தமிழ் எழுதி. நன்றி NHM, நன்றி வால். நான் பலருக்கும் இதை அறிமுகப்படுத்தியிருக்கிறேன், பரிந்துரைத்திருக்கிறேன். அதில் சில மலையாள, தெலுகு, ஹிந்தி மொழி நண்பர்களும் அடக்கம்.

இவ்வாறு தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்த போது பதிவர் கோவி. கண்ணனுடைய பதிவுகளை வாசிக்க நேர்ந்தது. இவருடைய எழுத்து நடையில் சுண்டி இழுக்கும் சுவாரஸ்யம் இல்லையென்றாலும், கருத்து விமர்சனம் கவனிக்கத்தக்கது. அதற்காகவே வாசித்துக்கொண்டிருந்தேன். தமிழில் சந்தி/இலக்கணப் பிழையின்றி எழுதுவதை குதிரைக்கொம்பென நினைத்துக்கொண்டிருந்த போது, கோவி.கண்ணனுடைய ஒரு பதிவு அட... நாமளும் எழுதலாமோ என்று நம்பிக்கையைத் தூண்டியது. சின்னச்சின்ன தவறாக இருந்தாலும் காலம் செல்லச்செல்ல திருத்திக்கொள்ளலாம் என்றே எழுதினேன். இன்றளவும் திருந்திக்கொண்டே இருக்கின்றேன் 'கல்லாதது உலகளவு'. எழுத்தாளர் 'குரு' பாரா சொல்லுவார், 'என் எழுத்தில் ஒரு பிழையை கூட கண்டுபிடிக்க முடியாது' என்று. இதே போன்று நானும் ஒருநாள் சவால் விடுவேன் என்று நம்புகிறேன்.  அதுவரை, என் எழுத்தில் இருக்கும் பிழைகளை சுட்டிக்காட்டுங்கள். என் எழுத்தை திருத்திக்கொள்ள உதவி செய்யுங்கள். ஆரம்பத்தில் நண்பர் டக்ளஸ் ராஜூ சிலவற்றை சுட்டிக்காட்டியிருக்கிறார். இப்போது குஜராத்தில் ஆணி அதிகம் போலிருக்கிறது. ஆளைக்காண முடியவில்லை... பாதகமில்லை மெதுவா வாங்க ராஜூ.. ஆனா வந்துடணும். :) 

முதலில் உற்சாகமூட்டிய பலரில் என் ஊர்வாசி, சகோதரர் கார்த்திகை பாண்டியன் பின்தொடருவோர் கேட்ஜட் இணைக்கச்சொல்லி ஜெய்ஹிந்த்புரத்தை பின் தொடர்ந்து ஊக்கமளிக்கிறார். சென்ற முறை நான் ஊருக்குச் சென்ற சமயத்தில் இவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு பிரமாண்ட பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன். அதன் பிறகே உருப்படியாக ஏதாவது எழுதுவது என்று எண்ணிக்கொண்டேன். (இதுவரை அப்படி ஏதாவது  எழுதியிருக்கேனா?) அன்றுவரை அறிமுகமில்லாத பலரும் நீண்ட நாள் நண்பர்கள் போல பேசி பழகியது மகிழ்ச்சியாக/நெகிழ்ச்சியாக இருந்தது.  இணைய வெளியில் நடக்கும் விவாதங்கள் பல நேரங்களில் எனக்கு பயனுள்ளதாக இருந்திருக்கிறது. நானும் பலவற்றில்  பங்கு பெற்றிருக்கிறேன். ஏதோ ஒரு விவாதத்தில் நான் சொன்ன ஏதோ ஒரு வார்த்தை, நான் எழுத காரணமான மூத்த பதிவர் கோவி.கண்ணனுடைய மனதை புண்படுத்தியிருக்க வேண்டும். அதற்காக வருந்துகிறேன் என்று முன்பே அவரிடம் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் என்னுடன் விவாதிப்பதில்லை என்று அவர் சொல்லியது மீண்டும் என்னை வருந்தச் செய்தது. :(

நான் எழுத ஆரம்பித்த சிலகாலம் வரையிலும் திரட்டிகளை பற்றிய அறிமுகம் இல்லை. திரட்டிகளுடைய அறிமுகம் கிடைத்தபிறகு, ஓட்டுகளில் ஆர்வம் இருந்தது. தினமும் ஹிட்ஸ்க்காகவும் பின்னூட்டத்திற்காகவும்  கல்லாப்பெட்டியை திறந்து வைத்து காவ காத்திருந்திருக்கிறேன். இப்போதும் கூட பின்னூட்டம் எனக்கு உற்சாகம் அளிக்கிறது என்றாலும் ஹிட்ஸ் மற்றும் திரட்டி குறித்த ஆர்வம் இல்லை. துளியும் இல்லை என்று சொல்வதற்கில்லை ஆனாலும் இல்லை. பதிவுகளை வாசிக்க கூகுள் ரீடர், ஃபீட், ஃபாலோ ஆப்ஷன் என்று பல வழிகள் இருந்தும் திரட்டிகளை தெய்வமாக நினைப்பதும் ஏன் என்பதும் புரியவில்லை. சந்தேகமில்லாமல் திரட்டிகளுடைய சேவை மிகப்பெரியது, பாராட்டத்தக்கது. ஆனாலும் திரட்டிகள் இல்லையென்றால் பதிவுலகம் அழிந்துவிடும் என்பது போன்ற இமேஜ் சரிதானா என்பதில் புரியாத புதிர் இருக்கிறது. எழுத்தாளர் யுவகிருஷ்ணா திரட்டிகளிலிருந்து விலகிய பிறகு சொன்னார், 'திரட்டிகளில் இருந்தாலும் 1000 ஹிட்ஸ், இல்லாவிட்டாலும் 1000 ஹிட்ஸ் என்பதை தெரிந்து கொள்ள இவ்வளவு நாட்களானது'. இது பலருக்கும் புரிவதில்லை என்றே நினைக்கிறேன். பதிவர்கள் தங்கள் எழுத்துக்களை மட்டுமே நம்ப வேண்டும், திரட்டிகளையோ பின்னூட்டங்களையோ நம்பி எழுதினால் வெகுஜன எழுத்தாளர்களின் வசவு கேட்க வேண்டிவரும்.

இந்தப்பத்தி எழுதுவதில் கர்வப்பட்டுக்கொள்கிறேன். இதுவரை  பதிவுகளில் எழுதவும், பின்னூட்டமிடவும் ஒரே பயனர் பெயரைத்தான் பாவித்து வருகிறேன். எங்கும் எதற்கும் அனானியாகவோ, வேறு பெயரிலோ பின்னூட்டியதில்லை, பதிவிட்டதில்லை என்று சொல்வதில் நேர்மையான பெருமை  இருக்கிறது. காதைக் கொண்டுவாங்க.. ஒரு பிரபல பதிவர் 25 ஐடி வைத்திருக்கிறாராம்.

சொல்வதற்கு பல விஷயங்கள் கிடப்பில் இருந்தாலும், அறையில் கிடைத்துக்கொண்டிருந்த இலவச இணைய இணைப்பு தடைபட்டு விட்டதால் இடுகைக்கான தகவல்களை திரட்ட முடியாது அத்தனையும் முடங்கிப் போய் கிடக்கிறது. புதிதாய் இணைப்பு வழங்குபவரும் ஊரில் இல்லை. அதனாலேயே இந்த தொடர் இடுகைகளை எழுதி உங்களை படுத்த வேண்டிதாகிப்போனது. தொடர் என்றதும நினைவு வருகிறது..

பதிவர் தன் வரலாறு கூறுதல் என்ற தொடர் இடுகையை தொடர்ந்து நடத்திச்செல்ல நான் அழைப்பது...
ஒரு வரியை வைத்தும் ஒரு இடுகையை எழுதிவிடலாம் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். நீங்களும் எழுதுங்க... இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல.

Nov 25, 2009

அன்புக்காக - தீபாவளி சிறப்புப் பதிவு 2009 - நம்புங்க


இந்த வாரம்... தொடெர்ர்ர்ர்ர் வாரம்.... ம்ம்ம்ம் மாட்னீங்க.

அருமை தம்பி அன்பு அவர்களின் அழைப்பை ஏற்று இந்த பதிவினை தொடர்கிறேன்..ஏனெனில் அவர் எனக்கு அடுத்த தீபாவளிக்கு சிவகாசி பட்டாசு தர இருப்பதால்…
பதிவிற்கான விதிமுறைகள் :
1. கேள்விக‌ளுக்கு உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் புதிய பதிவில் ப‌திலளியுங்கள். –
அளிச்சாச்சு.. அளிச்சாச்சு.
2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.
இட்டாச்சு... இட்டாச்சு.
3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.
படம் காட்ட.. விளம்பர கட்டணம் டிடி எடுத்து அனுப்பவும்.
4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.
திறப்பதற்கு மனம் இருந்தால்.. திறந்துவிடலாம்.
5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.. அவங்க எழுதறதுக்குள்ள அடுத்த தீவாளி வந்துடும்றதால... ஆணியே புடுங்க வேண்டாம்.

**************************
1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?
பெயர் பீர் முஹம்மத். ஊர் மதுரை, குடிசை குவைத்.
**************************
2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?
தளபதி.. அபூர்வ சகோதரர்கள்.
**************************
3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?
குவைத்.
**************************
4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?
குவைத்ல பட்டாசு வெடிச்சா உள்ள தூக்கி போட்றுவானுக.. அதுமட்டுமில்லாம குடும்பத்த விட்டு பிரிஞ்சிருக்கிறப்போ (இப்பல்லாம்) எந்த பண்டிகையும் கொண்டாடுறதில்ல...
**************************
5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
வாங்கவும் இல்லை. தைக்கவும் இல்லை.
**************************
6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?
மஃபின் பனானா நட் மற்றும் பேஸ்கின் ராபின்ஸ் ப்ராலின் க்ரீம் வாங்கினேன்.
**************************
7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை.
**************************
8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?
தொலைக்காட்சி.
**************************
9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
புதிய இடுகை வெளியிடுவதில்லை.
**************************
10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
அதுதான் சொல்லிட்டோம்ல... இதுவரை புடுங்கின ஆணியே ஒருவருஷத்துக்கு தாங்கும்...