இஸ்லாமியர்கள் வரலாற்று தவறிழைத்துவிட்டார்கள். இவர்களின் போராட்டத்திற்குப் பிறகுதான் அந்தத் திரைப்படம் பற்றி பலருக்கும் தெரியவந்தது. அது ஒரு இரண்டாம்தர, மஞ்சள் திரைப்படம். அதை இயக்கியவன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி வெளியே இருப்பவன். இவர்களுக்கு விளம்பரம் தேடித்தந்திருக்க வேண்டாம். - இவையெல்லாம் தம்மை நடுநிலைவாதி, கடவுள் மறுப்பாளன் என்று சொல்லிக் கொள்பவர்களின் விமர்சனம். தினமணி ஒருபடி மேலே போய் கூத்தாடி ஷாருக் கானும், சாமியார் அப்துல் கலாமும் அமெரிக்கா சென்ற போது அவமானப்படுத்தப்பட்டார்களே அப்போது நீங்கள் போராடவில்லையே என்று சொல்கிறது.
இவை மேலோட்டமாக கேட்கும் போது நியாயமான அக்கறை போல தோன்றினாலும், அவர்கள் இழிவுபடுத்தியிருப்பது நாம் உயிரினும் மேலாக நேசிக்கும் முஹம்மது நபியை (அவர் மீது அமைதி நிலவட்டும்). உயிரினும் மேலாக என்பது போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போவதல்ல, நமது உயிரைவிட அவர் மீது மதிப்பு வைத்துள்ளோம் என்பதைச் சரியாக புரிந்துகொண்ட மேற்கத்தீய சக்திகள் முஸ்லிம்களின் உணர்சியை தூண்டிவிட தவறான இடத்தில் கல்லடித்துள்ளனர். 9/11க்குப் பிறகான இஸ்லாத்தின் வளர்ச்சி வேகம் இவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கலாம். அதனாலேயே ஒன்றன் பின் ஒன்றாக முஸ்லிம்கள் மீதான இவர்களின் காழ்புணர்ச்சியை வெளிக்காட்டுகிறார்கள்.இப்போது ஃப்ரான்ஸில் வெளியிடப்பட்டிருக்கும் கார்டூனும் இதற்குச் சான்று. இது இன்னசன்ஸ் முஸ்லிகளை கொதிப்படையச் செய்து, கலவரத்தை உண்டுபண்ணச் செய்யும் என்ற எண்ணமாக இருக்கலாம்.
முஸ்லிம்கள் கலகக்கார்கள் அல்ல, அமைதியான முறையில் தமது எதிர்ப்பைக் காட்ட அறவழிப்போராட்டம் மேற்கொண்டாலும், இவர்களைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் தீவிரவாதத் சுவர் இவர்களை தீவிரவாதிகளாகவே வெளிக்காட்ட வேண்டும என்பதில் தீவிர இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் முனைப்பாக இருக்கிறார்கள். இவர்களுடைய எண்ணமெல்லாம் இஸ்லாம் ஒருபோதும் தன்னுடைய உண்மை முகத்தை வெளிக்காட்டிவிடக் கூடாது என்பதுதான். இஸ்லாமினுடைய உண்மையான அமைதி முகம் வெளித்தெரிகையில் இவர்கள் மீது இத்தனை நாளாக கட்டி எழுப்ப முற்படும் தீவிரவாத முகத்திரை பொய்த்துவிடும் என்பது இயல்பான பயம்.
சமீபத்தில் நடந்துவரும் ஏனைய போராட்டங்களின் போது காவல்துறை அத்துமீறலை, அடக்குமுறையை கண்டித்த பலரும், இந்தப் போராட்டத்தில் இன்னசன்ஸ் முஸ்லிம்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார்கள். மாமியார் உடைத்தால் மண்குடமாம். அமெரிக்க நாடுகளில் கூலி வாங்கும் பலரும் அவர்களுக்கு விசுவாசமாகவே இருந்து தொலைக்க வேண்டியிருக்கிறது.
வெள்ளையர்களைச் சுட்டு வீழ்த்திய கட்டபொம்மனையும், பகத்சிங்கையும், சுபாஷ் சந்திர போஸையும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களாக, தியாகிகளாக ஏற்றுக் கொள்ளும் நாம், சதாம் உசைனையும், ஒசாமாவையும் தீவிரவாதிகள் என சட்டென முத்திரை குத்திவிட்டோம். திப்பு சுல்தான் கோயில்களை கொள்ளையடித்தான் என்று சொல்லப்படுவதையும் மறுப்பேதும் இல்லாமல் ஏற்றுக்கொள்கிறோம். குறைந்தபட்சம் இவர்களுடைய வரலாறுகளையாவது படித்துப் பார்த்திருந்திருக்கலாம். இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் அதற்கெல்லாம் இடம் கொடுக்கவில்லை.
அதே இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல்தான் சென்னையில் மய்யப் பகுதியில் வரலாறு காணாத பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சிப் பெருக்கக் கூடிவந்து பேருந்து ஒன்றையும், இருசக்கர வாகனம் ஒன்றையும் எரித்தார்கள் என்பதை நம்ப வைக்கிறது. உயிரினும் மேலான முஹம்மது நபியை இழிவுபடுத்திய அமெரிக்கர்களை எதிர்க்க உணர்ச்சிப் பெருக்கில் அமெரிக்க தூதரகம் மீது கல்லெரிந்தாலும் (இதை நான் ஆதரிக்கவில்லை) அருகில் இருக்கும் வேறெந்த சொத்திற்கும் சேதம் விளைவிக்கவில்லை. காவல் துறையினரை திருப்பி அடிக்கவில்லை. அடிவாங்கியே பழக்கப்பட்ட இந்த சமுதாயம், இப்பவும் அடிவாங்கியவாறே ஓடிக் கலைந்தது. இதற்கு முந்தைய வாரத்தில் கூடங்குளத்தில் காவல்துறை தடியடி நடத்தியதைக் கண்டித்து முதலில் சென்னையில் மறியலில் ஈடுபட்டு கைதாகியது ஒரு முஸ்லிம் அமைப்பு.
இத்தகைய அறவழிப்போராட்டம் நடந்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இன்னும் சிலருக்கு சென்னையில் இத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பதே அதிர்சியாக இருக்கிறதாம். சிலருக்கு இனி அமெரிக்க விசா கிடைப்பது சிரமமாகிவிடும் என்ற கவலை. இன்னும் சிலர், அமெரிக்காகாரன் படமெடுத்தால் அமெரிக்க தூதரகத்தை ஏன் முற்றுக்கையிட வேண்டும் என்ற கோபம்.
இவையெல்லாவற்றையும் விட இணையப் போராளிகளின் அக்கறை புல்லரிக்க வைக்கிறது. அலுவலகத்தில் நேரம் போக்க ஃபேஸ் புக், ட்விட்டர், கூகள்+ல் தினம் போராட்டம் நடத்துகிறது இந்தக்கூட்டம். ஒரே போராட்டத்திற்கு தினமும் எழுதினால் போரடித்துவிடும் என்பதால் தினம் தினம் புதிய அவலை தேடி அலைகிறார்கள். ஈழம், கூடங்குளம், முல்லைப் பெரியாறு, ஹஜாரே, டீஸல், டி20 என இவர்களது சமூக ஆர்வம் பரந்து விரிந்தது. ராஜபக்சே மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்று ட்விட்டரில் எழுதும்போது கூடங்குளத்தில் அணுஉலை ஆபத்தானது என்று ஃபேஸ்புக்கில் எழுதுவார்கள். கூடங்குளத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம், அண்டை மாநிலத்துக்கு கொடுக்கக்கூடாது என்று கூகள்+ல் எழுதினால், காவிரி நீரில் நமக்கு முழு உரிமை உள்ளதென ப்ளாக்கில் எழுதுவார்கள். இலங்கை சுற்றுலா பயணிகளை அடித்து விரட்டியதை வெல்டன் என் எழுதிய கை, தூதரக சன்னல் கண்ணாடி உடைந்ததை அந்தோ பரிதாபம் என்று எழுதுகிறது.
கட்டிட நெரிசலில் சிக்கி உயிரிழந்த தூதரின் குடும்பத்திற்கு அழ்ந்த அனுதாபங்கள். அது நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய செயல், குற்றம் செய்தவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அதுபோலவே, இப்பிரச்னையில் சற்றும் தொடர்பில்லாத மாநகரப் பேருந்தை சேதப்படுத்திய உண்மையான குற்றவாளியும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இஸ்லாத்தை விமர்சிக்க உங்களுக்கு தாராள உரிமை இருக்கிறது, இழிவுபடுத்த எவருக்கும் உரிமையில்லை.
முஹம்மது நபியை உயிரினும் மேலாக நேசிக்கிறோம் என்பதை உலகிற்கு உணர்த்தவே இந்தப் அறப்போராட்டம். ஆம், நம் உயிரினும் மேலாக!