Dec 25, 2009

டைம் மேனெஜ்மண்ட்

சென்ற மாதம் நான் கலந்துகொண்ட ஒரு ஓரியண்டேஷனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட பதிவு. டைம் மேனெஜ்மண்ட் -  இதை நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் நடைமுறைப்படுத்தி பயனடையலாம் என்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

டைம் மேனெஜ்மண்ட் - சமய | கால | நேர மேலாண்மை என்று பெயர்த்தெடுக்கலாமா? இல்லை டைம் மேலாண்மை? எதுவாகவும் இருந்துவிட்டு போகட்டும், எந்த மொழியில் இருந்தாலும் நம் தினசரி வாழ்வில் நமக்கான நேரத்தை திட்டமிட்டு செயல்படுத்துவதை டைம் மேனெஜ்மண்ட் எனலாம்.

டைம் மேனெஜ்மண்ட் ஏன்?
தினசரி வாழ்வில் நம்முடைய செயல்களை முறையாக திட்டமிடவும், பகுக்கவும். முக்கிய வேலைகளை கண்டறிந்து செயல்படுத்தவும்,
நம்முடைய மற்றும் நம் குழுவுடைய வேலைகளை கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்கவும், செயல்திறன் மற்றும் எண்ணிக்கையை வளர்த்துக்கொள்ளவும் டைம் மேனெஜ்மன்ட் அவசியமாகிறது.
காலம் - சேமித்து வைக்க முடியாது, வெகு விரைவில் அழிந்து போகக்கூடியது. இறந்து போகக்கூடியது, அளவானது. அதனால் தான் அதை சரியாக திட்டமிடுவதும் பகுப்பதும் மிக அவசியமாகிறது.

பொதுப்பிரச்சனைகள்
தெளிவற்ற எதிர்பார்ப்புகள், குறிக்கோள்கள்.
போதிய தொடர்பின்மை.
வீணாகும் முயற்சிகள்.
முறையற்ற திட்டமிடல், முக்கியப்படுத்தல்.
மன அழுத்தம்.

சரியான திட்டமிடல் என்பது; ஆற்றல் மிக்கதாகவும், பயிற்சிக்குகந்ததாகவும், வலைவுதன்மை மிக்கதாகவும், இலகுவானதாகவும், எளிதில் நடைமுறைப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

நேரத்தை திட்டமிடும் போது கவனிக்க வேண்டியவை;
சந்திப்புகள், தொடர்புகள்
காலாவதி தேதி குறிக்கப்பட்டவை
நடந்து கொண்டிருக்கும் வேலைகளில் தற்போது செய்யவேண்டியவை
குறிப்புகள், எண்ணங்கள், ஆலோசனைகள்
நிதி நிலைகள்
சொந்த வேலைகள்
சமுதாய வேலைகள்
பொழுது போக்கு

குறிப்பாக நேரத்தை திட்டமிடும் போது, அவற்றை முடிக்க வேண்டிய காலத்தையும் வரையருக்க வேண்டும். உதாரணமாக செய்து முடிக்க வேண்டிய வேலை, ஒரு மணி நேரத்திலா, ஒரு நாளிலா அல்லது ஒரு வாரத்திலா என்பதையும் வரையருக்க வேண்டும். அவை அலுவலக வேலையா, சொந்த வேலையா, சமுதாய வேலையா என்பதை பொருத்து அவற்றிற்கான முக்கியத்துவத்தையும் வகைப்படுத்தலாம். இவை ஒவ்வொன்றிலிருந்தும் அவசரமாக செய்து முடிக்க வேண்டியதையும் பகுக்க முடியும். உதாரத்திற்கு; அலுவலகப் பணியில் நமக்கு அவசரமானதையும் முக்கியமானதையும் முதலில் செய்து முடிக்கவேண்டும்.

மேலாளருக்கு செய்து தரவேண்டிய பணிகள் = முக்கியம் ஆனால் அவசரமில்லை. (அது அவருக்கு அவசரமாகவும் முக்கியமானதாகவும் கூட இருக்கலாம்... நமக்கில்லை) இதற்கான முக்கியத்துவத்தை இரண்டாவதாக்கலாம். இதே போல ஒவ்வொறு பணியையும் வகைப்படுத்தி திட்டமிடலாம்.

கீழிருக்கும் மேட்ரிக்ஸ் பாருங்கள்.


ஒரு பதிவர் என்ன வகையில்...
  1. அலுவலகப் பணி = முக்கியமானது+அவசரமானது - முதலில் செய்து முடிக்கப்பட வேண்டியது.
  2. சொந்த மடல்கள் வாசிப்பது = முக்கியமானது ஆனால் அவசரமில்லை - அடுத்ததாகச் செய்யலாம்.
  3.  பதிவு எழுதுவது = அவசரம் ஆனால் முக்கியமில்லை - மதியத்திற்கு மேல் வைத்துக்கொள்ளலாம்.
  4. பின்னூட்டம் | கும்மி | ஜங்க் மெயில் ஃபார்வட் = அவசரமுமில்லை முக்கியமுமில்லை - நேரமிருந்தால் செய்யலாம்.
[யாருப்பா அது... தீர்ப்ப மாத்தி எழுதச் சொல்றது :)]
  • ஒரு வேலையை செய்து முடிக்க நம்மிடம் இருக்கும் காலமும் இன்னபிற சாதனங்களையும் பொருத்து அவற்றிற்கான திட்டத்தை பகுக்க வேண்டும். - ஆள், பொருள், பண பலம்
  • ஒரு வேலையில் நமக்கான பங்களிப்பை பொருத்தே அவற்றின் முக்கியத்துவத்தை அமைக்க வேண்டும் - பணியிடம், குடும்பம், சமூகம்
  • ஒரு வேலையில் நமக்கான பொறுப்பு - மேலாண்மை, உறவு, பொதுநலன்
  • ஒரு வேலையை செய்து முடிக்கும் போது அதற்கிருக்கும் மதிப்பையும் கவனத்தில் கொண்டே நேரத்தையும் திட்டமிட வேண்டும்.
குறைந்தபட்சம் நம்முடைய அன்றாட வேலைகளை ஒரு வாரத்திற்கேனும் சரியாக திட்டமிட்டுச் செய்தால், அடுத்துவரும் வாரத்தில் முந்தைய (திட்டமிட்ட) வார பலன் கண்கூடாகத்தெரியும்.

ஆயிரம் மைல்களுக்கான பயணம் முதல் ஒரு அடியில் இருந்தே ஆரம்பிக்கிறது என்று யாரோ சொல்லியிருக்கிறார். நமக்கான பலன் தரக்கூடிய நம் வாழ்வின் திட்டமிடுதலை இன்றிலிருந்தே ஆரம்பிப்போம்.




Dec 21, 2009

பேயோன், விளம்பரம், பதிவர்கள் - மினி ஜிகர்தண்டா


விஜய் டிவி நீயா நானாவில் நேற்றைய தலைப்பு; வாழ்கையை அதிகம் ரசிப்பது - சோம்பேறிகளா? சுறுசுறுப்பானவர்களா?. தலைப்புக்கு பஞ்சம் வந்துவிட்டதோ என்று நினைத்துக்கொண்டே, சுறுசுறுப்பான நம்ம அணிதான் வெற்றிபெரும் என்ற முன்முடிவோடு பார்த்துக்கொண்டிருக்கையில், கோபிநாத் உடைய ஆதரவு சோம்பேறிகளுக்கு இருந்தது அதிர்ச்சியளிக்கவில்லை. ஒரு சுறுசுறுப்பானவரை பார்த்து கேட்டார், 'இன்று உங்களை கடந்து சென்ற பெண்ணை ரசித்தீர்களா? அதை வர்ணிக்க முடியுமா?' நம்மாள் அதான் சுறுசுறுப்பானவரால் முடியவில்லை. ஒரு மழையைக்கூட அவரால் வர்ணிக்க முடியவில்லை. இவரையெல்லாம் யார் சுறுசுறுப்பானவர் பக்கம் சேர்த்தது? இவர்களுக்கு சுறுசுறுப்பிற்கும் துறுதுறுவிற்கும் வித்தியாசம் தெரியவில்லை. அவசரக்குடுக்கைகளைத்தான் சுறுசுறுப்பானவர் என்று நினைத்தே பேசிக்கொண்டிருந்தனர். இடையிடையே ஐ.டி கடைக்காரர்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டே இருந்தனர். கடைசியில் ஒரு சுறுசுறுப்பானவர், 'அவரிடம் கேட்டீர்களே, இன்று கடந்து சென்ற ஒரு பெண்ணை ரசித்தீர்களா? அதை வர்ணிக்க முடியுமா என்று, என்னால் முடியும். நான் ஒரு பெண்ணை ரசித்தேன், இப்போதும் ரசிக்கிறேன்.' என்று தனக்கு முன் சோம்பேறிகள் அணியில் இருந்த ஒரு பெண்ணைக் காட்டினார். இருவரும் தங்களுக்குள் ஜாடையில் பேசிதையும் சொன்னார். அருமை... நிகழ்ச்சியில் ரசிக்கும்படியாக இருந்த செக்மண்ட் அதுதான்.

வந்தாச்சு வந்தாச்சு... ஒரு குண்டு மல்லிகா... என தொடங்கும் ஏதோவொரு சோப்பு விளம்பரம் என்னை மிகவும் கவர்ந்தது. ரசிக்கும்படியான காட்சியமைப்பு, த்ரிஷாவும் வருகிறாள், தேவையில்லாமல்.
பசங்க ஷோபிக்கண்ணு வரும் ஒரு விளம்பரமும் நைஸ்.
பிங்கோ சிப்ஸ் விளம்பரத்தில் ஒரு பெண் சிப்ஸ் தின்றுகொண்டே பாய் ஃப்ரெண்டிற்கு பறக்கும் முத்தம் கொடுக்கிறாள், அதை காதலன் தன் சட்டைப்பைக்குள் போட்டதும் தீப்பிடிக்கிறது. அவ்வளவு ஹாட்டாம்... சிப்ஸ். சூப்பர் தீம் இல்லையா? எவ்வளவு அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டாலும் ஒருசில விளம்பரங்களே மனதைக் கவர்கின்றன, பதிகின்றன. அதிலும் மிகச்சில மட்டுமே ப்ராண்ட் நேமையும் சேர்த்து மனதில் பதிக்கின்றன. அந்த வகையில் நிர்மா, லக்ஸ் ஸோப், வோடாபோன், வேட்டைக்காரன் போன்றவற்றிற்கு முதலிடம் தரலாம். சில விளம்பரங்கள் ப்ராண்ட் நேமையும் கெடுத்துவிடும் என்பதற்கு கடைசி விளம்பரமும் ஒரு உதாரணம்.

ஈரோடு வாழ் பதிவர்களால் 'ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம்' அமைக்கப்பட்டுள்ளது. உங்களுடைய குறிக்கோள்கள், திட்டங்களை அறியவும் ஆவலாய் உள்ளேன் ஐயா. (இந்த உள்ளேன் போட்டாலே.. ஐயா அதுவா வந்து ஒட்டிக்கிடுது) குறிக்கோள்கள், செயல் திட்டங்களை இல்லாத எந்த குழுமமும் வரலாற்றில் இடம் படித்ததில்லை தெரிந்திருப்பீர்கள். உங்களுடைய பணிகள் சிறக்கவும், தொய்வடையாமல் தொடந்து நடைபெறவும் வாழ்த்துக்கள் நண்பர்களே. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் அண்ணன் கார்த்திகை பாண்டியன் தலைமையில் நாங்களும் ஒன்று கூடுவோம்ல.

அமீரகப் பதிவர்களும் ஒரு மாநாடு நடத்தியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அவர்களே தயாரித்து(?) இயக்கி(?) நடித்து(?) இசையமைத்து(?) கட்டமைத்து(?) பிரியாணி சாப்பிட்டு விளம்பரப்படுத்திய(!) மெகா திரைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். ஜோலி போயாலும் ஜீவிக்காம்... இல்லே. (அலுவலகத்தில் ஊடூப் காத்து புடுங்கிட்டானுக... வீட்டில போய்தான் பார்க்கணும்)

தமிழ்மணம் விருது 2009 க்கான வாக்கெடுப்பு நடந்து வருகிறது. சில ஆயிரம் தமிழ் வலைப்பதிவர்கள் இருந்தும் மிகச்சில இடுகைகளே விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது ஏன் என்பது புரியவில்லை. தங்கள் எழுத்தின் மேல் தங்களுக்கே நம்பிக்கை இல்லாத பதிவர்களா? அல்லது இணையத்தில் எழுதுவதெல்லாம் எழுத்தே அல்ல என்ற வகையில் இருப்பவர்களா என்பதும் தெரியவில்லை. பரிந்துரைக்கப்பட்டுள்ள இடுகைகளில் நான் முன்பே வாசித்திருப்பவை மிகச்சில மட்டுமே. அவற்றிற்கு எனது வாக்கை யோசிக்காமல் அளித்துவிட்டேன். அதில் என்னுடைய இரண்டு இடுகைகளும் அடங்கும். நான் நேசிக்கும் என் எழுத்து.

ஒரு பாடல் தொலைக்காட்சியிலோ, வானொலியிலோ அல்லது வேறு ஊடகத்திலோ ஒலிபரப்பாகும் போது அதனுடன் நாமும் சேர்ந்து பாடினாலோ அல்லது குளியலரையில் பாடினாலோ இனிமையாக ஒலிக்கும் நம் குரலை தனியாக பாடும்போது நாமே சகிக்க முடியவதில்லையே... ஏன்? - சின்னப்பையன்.

ட்விட்டரில பல சுவாரஸ்யத் தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன என்பது அறிந்ததே. writerpayon மிகவும் சுவாரஸ்ய ட்விட்டியாக இருக்கிறார். அவருடைய சமீபத்திய சில ட்விட்ஸ்;

எனக்குள்ள சுதந்திரம் என் கதைகளுக்கு இல்லை. நான் எழுதுவதால் நன்றாக இருப்பது தவிர அவற்றுக்கு வேறு வழி இல்லை. வருத்தமாக, மகிழ்ச்சியாக உள்ளது. - 

புத்தக வெளியீடு என்றாலே லாரியில் அனுப்பியது போல் வந்துவிடுகிறார்கள் கூட்டமாய். இங்கே என்ன அவிழ்த்துப் போட்டா ஆடுகிறோம்? வருகைக்கு நன்றி. - 

வானம் மிக இருளும்போதெல்லாம்.... உலகம் அழிந்து எனது டிவிடி தொகுப்பு சேதமடைந்துவிடுமோ என்கிற பயம். சிறுவயதிலிருந்தே இந்த பயம் இருக்கிறது. - 

நான் ட்விட்டரில் ஆள் மற்றும் புத்தக பெயர்களை உதிர்ப்பதை பார்த்து சிலர் நான் நிறைய தெரிந்தவன் என நினைக்கிறார்கள். நடக்கட்டும், நடக்கட்டும். - 

டிஸ்கி: குளிர் அதிகமாக இருப்பதால் மினி ஜிகர்தண்டா. கண்டெண்ட் இல்லை என்றோ, ஆணி அதிகம் என்றோ நினைத்துவிட வேண்டாம் என்றால் நம்புவீர்களா? :) நம்பவில்லை என்பவர்களுக்காக மின்மினி ஜிகர்தண்டா, மின்னாமினி ஜிகர்தண்டா, மி.ஜி கூட வருங்காலத் திட்டத்தில் இருக்கிறது.

Dec 14, 2009

கடவுள் மறுப்பு - நம்பிக்கையாளன் பார்வையில்

என் மதம் சிறந்தது என்று சொல்லும் வரை பிரச்சனை இல்லை. உன் மதம் தாழ்ந்தது என்று சொல்லும் போதுதான் பிரச்சனைகள் ஆரம்பமாகிறது என்று எங்கோ யாரோ சொல்லியிருந்தார். இந்தக்கூற்றை இனம், மொழி, சாதி, மாநிலம், நாடு என பல விஷயங்களோடு பொருத்திப்பார்க்கலாம். குறிப்பாக பன்முகைத்தன்மை கொண்ட இந்தியா போன்ற நாடுகளின் ஒறுமைப்பாட்டிற்கு இதைப் பொருத்திப்பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

மதவாதிகள் என அடையாளம் காட்டப்படுவோரும், காட்டுவோரும் மேற்சொன்ன வாக்கியத்திலிருக்கும் உண்மையை உணர்ந்து கடைபிடித்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் எழுப்போவதில்லை. மதவாதிகளுக்கு இவற்றை உணரும் தன்மை இல்லையென்று 'இவர்கள்' சொல்லிக்கொள்வதால், அவர்களை ஒரு பக்கமாக ஒதுக்கிவைத்துவிடலாம். கடவுள் நம்பிக்கை இல்லாதவன், பகுத்தறிவாளி, மூட நம்பிக்கைகளின் எதிரி , முற்போக்குச் சிந்தனையாளன் என்று தனக்குத் தானே சொல்லிக்கொள்ளும் 'நியாயவான்கள்' இவ்விசயத்தை உணர்ந்தபாடில்லை. கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரமாக கடவுளையே சொல்வது இவர்களுடைய தொன்றுதொட்ட தொண்ணூற்றியெட்டு  வழக்கத்தில் ஒன்றாக இருக்கிறது. அதாவது, கடவுள் இருந்தால் அவனை இதை செய்து காட்டச்சொல், அதை நிறுத்திக்காட்டச்சொல் என்பதாகவே வாதிடுகிறார்களே தவிர ஒருபோதும் அதைவிடுத்து வெளியே வருவதில்லை.
கடவுளையும், கடவுள் நம்பிக்கையாளர்களையும் சாடுவதே இவர்களுடைய முழுநேரத் தொழிலாக இருக்கிறது.
கடவுள் இருக்கிறான் என்பதை என்னால் நிரூபித்துவிட முடியும் என்றால் அவன் கடவுளாக இருக்க முடியாது. அவனை சிந்தித்துணரலாம், சந்தித்தல்ல. அதனாலேயே நான் கடவுளை நம்புகிறேன். கடவுள் இல்லையென்று சொல்பவர்களுக்கு பலமுறை விடப்பட்ட சவால், நிரூபிக்க முடியாத சவாலாக இன்னும் தொடர்கிறது.
ஒன்றும் இல்லாததிலிருந்து ஏதாவதொன்றையோ அல்லது ஏதாவதொன்றை ஒன்றும் இல்லாததாகவோ ஆக்கிக்காட்டுங்கள். இது கடவுளால் மட்டுமே முடியும்.
இதற்கு ஒரே ஒரு கேள்வியைத்தான் திரும்ப திரும்ப வைக்கிறார்கள். 'கடவுள் எங்கிருந்து வந்தான்?' என்று. யாரும் படைக்க வேண்டியதில்லை என்பதாலேயே அவன் கடவுள், 'தி சூப்பர் நேச்சர் பவர்' என்கிறோம். மனித கற்பனைக்கு எட்டாத சக்தி அவனிடம் இருக்கிறது. சற்றே வேறு விதமாக வாசிக்க..
அவன் எத்தேவையும் அற்றவன். அவன் யாரையும் பெறவும் இல்லை. யாராலும் பெறப்படவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் இல்லை.
அதனாலேயே அவனை வணங்குகிறோம். அவனிடத்தில் உதவி தேடுகிறோம்.

ஐயாமார்களே, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக வேறு யாருக்கும் இருக்கக்கூடாது என்று நினைப்பது வாத நியாயமாகுமா? சரி..  நியாயமாமென்று ஏற்றுக்கொண்டாலும், முதலில் நீங்கள் அதை ஒழுங்காக கடைபிடிக்கிறீர்களா?  கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் கடவுள் சார்ந்த மத விழாக்களில், சடங்குகளில், கலந்து கொள்வதிலிருந்து தவிர்ந்திருக்க வேண்டும். இதைச்சொன்னாலும், 'உங்கள் வீட்டு விழாக்களில் கலந்து கொள்ளக்கூடாதா?' என்று கேட்கின்றனர். தாராளமாக வந்து கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். ஆனால், எங்கள் வீட்டு பிரியாணியில் ஆட்டுக்கறி போட்டிருப்போம். அந்த ஆட்டை இறைவனின் பெயர் சொல்லி அறுத்திருப்போம். இவ்வளவும் தெரிந்து கொண்டு பிரியாணியில் ஆட்டுக்கறி போட்டிருக்கிறார்கள் அந்த ஆட்டை இறைவனின் பெயர் சொல்லி அறுப்பது மூட நம்பிக்கை. அந்த வீட்டிற்கு வரும் பெண்கள் பர்தா போட்டிருப்பது பெண்ணடிமைத்தனம். இஸ்லாமிய பெண்கள் பர்தாவை வீசியெறிய வேண்டும் என்றெல்லாம் பகுத்தறிவு கொள்கைகளை அவிழ்த்து விடுகின்றனர். பர்தா அணியும் பெண்கள் அனைவரும், 'நான் விரும்பியே பர்தா அணிகிறேன்' என்று சொன்ன பிறகும், இவர்களுக்கு அதற்கும் பின்னால் என்ன வேண்டிகிடக்கு என்பதும் புரியவில்லை.

ஒருவர் பொதுவில் ஒரு கருத்தை/கொள்கையை சொல்லும் முன்பு, தான் அந்தக்கொள்கையை கடைபிடிக்க வேண்டும். மாற்று மதத்தவரின் கடவுள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். அவர்களுடைய வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்கிறேன். அங்கு கடைபிடிக்கப்படும் மதம் சார்ந்த சில நிகழ்வுகளில் எனக்கு விருப்பம் இல்லாததால் அவற்றில் இருந்து மட்டும் விலகி இருப்பேன். அது அவர்களுடைய நம்பிக்கை. அதனாலேயே வேறு எங்கும் சென்று அவற்றை  நான் குறை கூறுவதில்லை. ஆனால், வரதட்சணை வாங்கப்படும் கொடுக்கப்படும் சில திருமணங்களுக்குச் செல்லாமல் என்னை கட்டுப்படுத்திக்கொள்கிறேன். என் சொந்த சகோதரனுடைய திருமணத்தில் வரதட்சணை வாங்கப்பட்டாலும் என்னுடைய நிலை அதுவாகவே இருக்கும். இந்நிலையில்  இருக்கும் நான் வரதட்சணைக்கெதிராக எழுதுவது நியாயமாகும். அந்த கொடுமையை, மூட நம்பிக்கையையை எதிர்ப்பதில் அர்த்தம் இருக்கிறது. வரதட்சணை ஒரு சமூக குற்றம், கொடுமை, பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்றெல்லாம் கருத்துக்களை வாரிவழங்கிவிட்டு, அக்கா சொன்னாள், அம்மா அழுதாள் என்பதற்காக நானும் வரதட்சணை வாங்கினால் என்னை எதைக்கொண்டு அடித்தாலும் தகும். இன்னும் சொல்வதென்றால், நான் வரதட்சணையில் இருந்து விலகி இருக்கிறேன். அதையே மற்றவருக்கும் நாடுகிறேன் என்றால் முதலில் என் குடும்பம், சுற்றத்திற்கே அதைச் சொல்லி நடைமுறைப்படுத்த வேண்டும். கேட்காத பட்சத்தில் அங்கிருந்த வெளியேறி ஊருக்கு உபதேசம் செய்ய வரவேண்டும். மாறாக, என் சுற்றத்தில் இதைச்சொல்லி கெட்ட பெயர் வாங்கிக்கொள்ள விருப்பமில்லை என்ற நிலையிலிருப்பவர்களுக்கும் மேற்சொன்ன தண்டனை பொருந்தும். அதேபோல் விபச்சாரம் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வுகளிலும் நான் கலந்துகொள்வதில்லை. அதனாலேயே விபச்சாரத்தை எதிர்க்க எனக்கு முழுத்தகுதி இருக்கிறது. அதைப்பற்றிய எனது எண்ணத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.
'ஊருக்கு ஒரு கருத்தை சொல்லும் முன், நீ முதலில் கடைபிடியப்பா' என்று சொன்னால் மூக்கிற்கு மேல் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.
தனக்கென்று வரும்போது தான் வலி தெரியும். மதவாதிகளைவிட கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொள்பவர்களே விஷக் கருத்துக்களை பரப்பி பயங்கரவாதம் செய்கிறார்கள். சமீப காலமாக வட மாநிலங்களில் நடந்து வரும் குண்டுவெடிப்புகளும் கடத்தல் கொலைகளும் கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொள்பவர்களாலேயே நடந்தேருகிறது. தெலுங்கானா பிரச்சனையிலும் நக்ஸலைட்டுகள் ஊடுருவல் இருப்பதாக செய்திகள் சொல்கிறது.

கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் எந்நேரமும் அணியும் கருப்புசட்டையை விட்டுவிடுவார்கள், முஸ்லீம்கள் அணியும் வெள்ளைச்சட்டை மீது இவர்களுக்கு எந்த வெறுப்போ தெரியவில்லை. மட்டுமல்லாது...
முஸ்லீம்கள் அமர்ந்து சிறுநீர் கழிப்பதிலும்,
தாடி வைத்துக்கொள்வதிலும்,
மெக்காவிலிருக்கும் காபா 'வை முகம் நோக்கி வணக்குவதிலும்,
அரபியில் வணக்க வழிபாடுகளை செய்வதிலும்,
பின்னர் பிராத்தனைகளை தமிழில் செய்தாலும்,
பிரியாணியில் உப்பு குறைந்துவிட்டாலும்... என ஆகாத மருமகள் போல தொட்டதற்கெல்லாம் குற்றம் சொல்வதையே முழு நேரத்தொழிலாக வைத்திருக்கிறார்கள். குறைகளை கண்டுபிடிப்பதற்கென்றே பெயர் தெரியாதவர்கள் எழுதும் புத்தகங்களை வாங்கிப் படித்து தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்கிறார்கள்.

இன்னும் சிலர், தங்களுக்கிருக்கும் உயர்சாதி/சமஸ்கிருத வெறுப்பை சொல்லும் போது தன்னை நடுநிலையாளன் என காட்டிக்கொள்ளும் முயற்சிக்காக இஸ்லாமியர்களையும், கிறித்துவர்களையும் வலிந்து இழுத்து கருத்துச் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் கடவுள் மறுப்பாளன் என்று சொல்லிக்கொண்டே 'தமிழில் வழிபாடு' எனும் கோஷத்தையும் முன்வைக்கிறார்கள். மூட நம்பிக்கையின் எதிர்ப்பவன் என்று சொல்லிக்கொண்டே குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக அதை செய்பவர்களும் உண்டு. குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக சில பழக்கங்கள் கடைபடிப்பதை சரி என்று ஏற்றுக்கொண்டாலும், அதே பழக்கத்தை 'மூடநம்பிக்கையின் உச்சம்' என்று பொதுத்தளத்தில் முழங்குவதை என்னவென்று சொல்வது.

மதவாதிகளை விட அதி மூட நம்பிக்கையில் இருப்பது இவர்களே
  • பெரியார் என்ற மனிதருக்கு மாலை மரியாதை செய்து வழிபடுவது. அவரது எழுத்தையே வேதமாக கடைபிடிப்பது.
  • திருமணம் சட்டவிரோதமாக்கப்பட வேண்டும், பெண்களின் கருப்பையை அறுத்தெறிய வேண்டும் என்ற பெரியாரின் கூற்றை எதிர்க்காதது.
  • கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் என்றாலும் சிவில் சட்டத்தில் அவர்களுடைய சொத்து ஏதாவதொரு மதச் சட்டதை சார்ந்தே கையாளப்படும். சொத்துக்காக்க ஏதாவதொரு மதச்சட்டத்தை ஏற்க தயாராயிருப்பது.
  • இந்துவின் வாரிசு இந்து, முஸ்லீமின் வாரிசு முஸ்லீமாக வருவதைப்போல அல்லாமல் கடவுள் நம்பிக்கையில்லாதவரின் வாரிசுகளில் பெரும்பாலானவர்கள் பகுத்தறிந்து கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாகவே வளர்வதைப் பார்க்கிறோம்.
  • இவர்களுக்கிருக்கும் முக்கியமான பிரச்சனை கட்டுப்பாடு.  'என்னை யாரும் கட்டுப்படுத்தக்கூடாது. நான் தான்தோன்றியாக வாழப்பிறந்தவன்' என்றுச் சொல்லி, மதங்கள் மனிதர்களை கட்டுப்படுத்துவதாக நினைக்கிறார்கள். இவர்களை கட்டுப்படுத்த யாரும் தேவையில்லை என்று நினைத்துக்கொண்டால் அப்படியே இருந்துவிட்டு போக வேண்டியதுதானே. கட்டுப்பாடாக வாழ நினைப்பவனை ஏன் நொட்டை சொல்ல வேண்டும்?
  • கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால், பலர் காட்டுமிராண்டிகளாக போயிருப்பார்கள். 
கடவுள் நம்பிக்கையையும், வேத வாக்கையும் சரியாக கடைபிடிப்பவர்கள் நிச்சயம் மதவாத செயல்களில் ஈடுபட மாட்டார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் அவ்வாறென நிரூபித்துக்காட்டவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு வந்திருக்கிறது, நியாயவான்களாக இருக்கும்பட்சத்தில்.
பல தளங்களில் நான் சொன்னதையே இங்கும் பதிக்கிறேன்.
நான் மனிதனாக இருக்கக் காரணம் என் கடவுள் நம்பிக்கையே என்று திடமாக நம்புகிறேன். இந்த கடவுள் நம்பிக்கையிலிருந்து மாறிவிட்டால் மிருகமாகிவிடுவேனோ என்று அச்சப்படுகிறேன்.
அதைவிட, எனக்கும் கடவுள் நம்பிக்கை அற்றுப்போனால், இப்போதிருக்கும் 'கடவுள் நம்பிக்கையில்லாதவன்' என்று சொல்லிக் கொள்பவர்களைப் போல அடுத்தவர்களை குறை சொல்லியே காலம் கடத்த வேண்டுமோ என்ற பயமே அதிகமாக இருக்கிறது. நான் இங்கு முன்மாதிரியாகவே இருக்க எண்ணுகிறேன். அது கடவுள் நம்பிக்கையாளனுக்கான முன்மாதிரியா அல்லது நம்பிக்கை இல்லாதவனுக்கா என்பதற்கு அவர்களுடைய வாழ்வையே பார்க்க வேண்டியிருக்கிறது. இதுவரை பார்த்த வரையில் கடவுள் நம்பிக்கையாளனுக்கு முன்மாதிரியாக வாழ்ந்துவிடவே ஆசைப்படுகிறேன். ஏனென்றால் கடவுள் நம்பிக்கையாளனை விட நம்பிக்கை இல்லாதவன்  என்று சொல்லிக்கொள்பவன் போலி வேஷம் போட்டுச் செய்யும் மதவாதமே மிகவும் கொடியதாகத் தெரிகிறது.

மனிதர்களுக்கிடையே கடவுள் பெயரால் துவேஷத்தைப் பரப்பும் அனைவரும்  மதவாதிகளே. அது, கடவுள் நம்பிக்கை இல்லையென்று சொல்லிக்கொண்டு பரப்பினாலும் சரியே.


முக்கிய டிஸ்கி: உண்மையில் மூட நம்பிக்கையை எதிர்க்கும் பல சகோதரர்கள், பதிவுலகிலும், அதற்கு வெளியிலும் எனக்கு நட்பாய் இருக்கிறார்கள். அவர்களிடம் நானும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

Dec 4, 2009

வரலாறு முக்கியம் அமைச்சரே - மீண்டும் தொடர்

பதிவர் தன் வரலாறு கூறுதல் என்ற தொடர் பதிவு, ஊர் உலகமெல்லாம் சுற்றி நண்பர் ஊர்சுற்றி முலமாக என் காலை சுற்றியிருக்கிறது. இல்லாத ஒன்றை எழுதுவதன் வலி எழுதும் போதுதான் உணர்கிறேன்.  இது முன்பே தெரிந்திருந்தால் ஒருவேளை யோசித்திருப்பேனா தெரியாது. ஆனாலும் அண்ணன் ஊர்சுற்றியுடைய அப்ரோச் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதற்காகவாவது இதை எழுதுவது என்று முடிவுசெய்துவிட்டேன். ஆரம்பிதாகவிட்டது.. எதை எழுதுவது எங்கிருந்து தொடங்குவது  என்பதுதான் இன்னமும் பிடிபட மாட்டேன் என்கிறது.

முதலில் ஒன்றை சொல்லிவிடுகிறேன், நான் இலக்கியவாதியோ, பின்/முன் நவீனத்துவவாதியோ, தீவிர இலக்கிய வாசகனோ, எழுத்தாளனோ அல்ல. இணையத்தில் எழுதுவது சுயநலத்திற்காக மட்டுமே. பின்நவீன மொழியில் சொல்வதென்றால் சுய அரிப்பை தீர்த்துக்கொள்ளும் ஒரு சுய சொறிதல் தளம், அவ்வளவே. தமிழில் பிழையின்றி எழுத வேண்டும், தட்டச்ச வேண்டும் என்ற ஆசை மட்டுமே இச்சுய சொறிதலுக்கான காரணமாக இருக்கலாம் அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம். உலகத்தை புரட்டும் நெம்புகோலை தோளில் சுமந்து கொண்டு எதை உருட்டிப்புரட்டலாம் என்று விதிவழி தேடித்திரிபவன் அல்ல. ஆனால் அத்தகைய சூழல் வந்தால்  'என்னால் முடியும்' என்று திடமாக நம்புபவன். நான் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கோ அல்லது கருத்திற்கோ தவறான புரிதலில் மாற்றுக்கருத்து சொல்லப்படும் போது (கருத்து சொல்வது அவரவர் உரிமை என்றாலும்) அவற்றை பண்போடு எடுத்துச்சொல்லி புரிய வைப்பதும் என் உரிமையாகிறது. குறிப்பாக நான் அதிகம் நேசிக்கும்/வாசிக்கும் அன்பு நண்பர்கள் அதை சொல்லும் போது அவர்களுக்கு விளக்க வேண்டியது என் கடமையாகிறது.

இனி வரலாறு :) அப்போது அணி அதிகம் இல்லாத காலம். இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருக்கையில் எதுவோ கிடைத்தது போலத்தான் தமிழ் வலைப்பூ உலகம் அறிமுகமானது. எழுத்துறு இன்ஸ்டால் செய்துவாசிக்க வேண்டியிருந்த நேரத்தில், (என் அலுவலக கணினியில் ஒன்றையும் இன்ஸ்டால் செய்துவிட முடியாது என்பதால்) தமிழ் ஒருங்குறி எழுத்துக்களைத் தேடி வாசித்து வந்தேன். அப்போது நண்பர் அய்யனார் எழுதும் தனிமையின் இசை  வாசிக்க நேர்ந்தது. அதற்கு முன்னர் தமிழ் வலைப்பூ வாசித்திருக்கிறேனா என்பதை சரியாக நினைவுபடுத்த முடியவில்லை. தனிமையின் இசையை ஃபேவரிட்டில் வைத்து அவ்வப்போது வாசித்து வந்தேன். அதில் சிலருடைய மறுமொழிகளை வாசிக்கையில் சுவாரஸ்யமாக இருந்தது. யார் இவர்கள் என்று தொட்டு தேடிச்செல்கையில் பரந்த உலகம் அறிமுகமானது. தொடர்ச்சியாக ஆசிஃப் மீரான், சுகுணா திவாகர், லக்கிலுக், அறிவிழி, தமிழச்சி, விடாதுகருப்பு என்று நீண்டது. அந்தச்சூழலில் ஆணிகள் அதிகமாகிவிட்டாலும் இதற்கென நேரம் ஒதுக்கி வாசித்து வந்தேன். ஒருநிலையில் ஆணி மலைகளாகி விட்டதால் அறையில் இணைய இணைப்பு இழுக்க வேண்டியதாகிப்போனது. அரையிருட்டறையில் அதிக நேரம் அமர்ந்து வாசித்ததில் முதுகுத்தண்டு உராயத்தொடங்க, அப்போது மாறியதுதான் இந்த மடிக்கணினி 'தாரா' வுக்கு. மடியில் வைத்தால் சூடா(க்)கி விடுகிறது என்பதால் தலையணை மேல் வைத்திருக்கிறேன். அப்போ தலையணை கணினியா..? (அட.. போதும்பா கொசுவெல்லாம் ஆல்அவுட் ஆகிடுச்சு... விஷயத்துக்கு வா.) ஆமால்ல... டாபிக்க விட்டு வெளிய போயிட்டேனோ. இட்ஸ் ஓகே.. கயிறு கட்டிடலாம்.

தொடர்ந்து பதிவுகளை வாசித்து வந்தாலும் யாருக்கும் பின்னூட்டமிட்டதில்லை. சொல்வதற்கென்று கருத்து இருந்தாலும் அதை எப்படி சொல்வது என்பதில் குழப்பமும் கூடவே இருந்தது. அதாவது சொல்லும் முறை தெரியாதிருந்ததும் தமிழில் தட்டச்ச போதிய அறிவு இல்லாதிருந்ததுமே காரணம். அதற்கிடையில் ப்ளாக்ஸ்பாட் டாட் காம் 'ல் ஒரு கணக்கும் தொடங்கி வைத்திருந்தேன். என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியாமல்  கூகுல் ட்ரான்ஸ்லிட்ரேட்டில் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தேன். பிறகு, தமிழ்99 பற்றி ஒரு வலைப்பூவில் தெரிந்து கொண்டு W9 விசையை பயன்படுத்த ஆரம்பித்தேன். தமிழ்99 இலகுவாகவும் வேகமாகவும் தட்டச்ச உதவியது. ஆரம்பத்தில் எனக்கு வந்த சில மின்மடல்களை காப்பி பேஸ்ட் செய்து கடை நடத்திக்கொண்டிருந்தேன். அதற்கே தாவு தீர்ந்தது. எத்தனை முறை ப்ரூஃப் ரீட் செய்தாலும் மீண்டும் மீண்டும் தவறு தென்பட்டது. அதில் நானாக எழுதிய பல இடுகைகளை வெளியிடாமலேயே இருந்துவிட்டேன். இப்போது நான் பாவிக்கும் NHM Writer நண்பர் வால்பையன் அறிமுகப்படுத்தினார். மிகவும் இலகுவான தமிழ் எழுதி. நன்றி NHM, நன்றி வால். நான் பலருக்கும் இதை அறிமுகப்படுத்தியிருக்கிறேன், பரிந்துரைத்திருக்கிறேன். அதில் சில மலையாள, தெலுகு, ஹிந்தி மொழி நண்பர்களும் அடக்கம்.

இவ்வாறு தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்த போது பதிவர் கோவி. கண்ணனுடைய பதிவுகளை வாசிக்க நேர்ந்தது. இவருடைய எழுத்து நடையில் சுண்டி இழுக்கும் சுவாரஸ்யம் இல்லையென்றாலும், கருத்து விமர்சனம் கவனிக்கத்தக்கது. அதற்காகவே வாசித்துக்கொண்டிருந்தேன். தமிழில் சந்தி/இலக்கணப் பிழையின்றி எழுதுவதை குதிரைக்கொம்பென நினைத்துக்கொண்டிருந்த போது, கோவி.கண்ணனுடைய ஒரு பதிவு அட... நாமளும் எழுதலாமோ என்று நம்பிக்கையைத் தூண்டியது. சின்னச்சின்ன தவறாக இருந்தாலும் காலம் செல்லச்செல்ல திருத்திக்கொள்ளலாம் என்றே எழுதினேன். இன்றளவும் திருந்திக்கொண்டே இருக்கின்றேன் 'கல்லாதது உலகளவு'. எழுத்தாளர் 'குரு' பாரா சொல்லுவார், 'என் எழுத்தில் ஒரு பிழையை கூட கண்டுபிடிக்க முடியாது' என்று. இதே போன்று நானும் ஒருநாள் சவால் விடுவேன் என்று நம்புகிறேன்.  அதுவரை, என் எழுத்தில் இருக்கும் பிழைகளை சுட்டிக்காட்டுங்கள். என் எழுத்தை திருத்திக்கொள்ள உதவி செய்யுங்கள். ஆரம்பத்தில் நண்பர் டக்ளஸ் ராஜூ சிலவற்றை சுட்டிக்காட்டியிருக்கிறார். இப்போது குஜராத்தில் ஆணி அதிகம் போலிருக்கிறது. ஆளைக்காண முடியவில்லை... பாதகமில்லை மெதுவா வாங்க ராஜூ.. ஆனா வந்துடணும். :) 

முதலில் உற்சாகமூட்டிய பலரில் என் ஊர்வாசி, சகோதரர் கார்த்திகை பாண்டியன் பின்தொடருவோர் கேட்ஜட் இணைக்கச்சொல்லி ஜெய்ஹிந்த்புரத்தை பின் தொடர்ந்து ஊக்கமளிக்கிறார். சென்ற முறை நான் ஊருக்குச் சென்ற சமயத்தில் இவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு பிரமாண்ட பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன். அதன் பிறகே உருப்படியாக ஏதாவது எழுதுவது என்று எண்ணிக்கொண்டேன். (இதுவரை அப்படி ஏதாவது  எழுதியிருக்கேனா?) அன்றுவரை அறிமுகமில்லாத பலரும் நீண்ட நாள் நண்பர்கள் போல பேசி பழகியது மகிழ்ச்சியாக/நெகிழ்ச்சியாக இருந்தது.  இணைய வெளியில் நடக்கும் விவாதங்கள் பல நேரங்களில் எனக்கு பயனுள்ளதாக இருந்திருக்கிறது. நானும் பலவற்றில்  பங்கு பெற்றிருக்கிறேன். ஏதோ ஒரு விவாதத்தில் நான் சொன்ன ஏதோ ஒரு வார்த்தை, நான் எழுத காரணமான மூத்த பதிவர் கோவி.கண்ணனுடைய மனதை புண்படுத்தியிருக்க வேண்டும். அதற்காக வருந்துகிறேன் என்று முன்பே அவரிடம் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் என்னுடன் விவாதிப்பதில்லை என்று அவர் சொல்லியது மீண்டும் என்னை வருந்தச் செய்தது. :(

நான் எழுத ஆரம்பித்த சிலகாலம் வரையிலும் திரட்டிகளை பற்றிய அறிமுகம் இல்லை. திரட்டிகளுடைய அறிமுகம் கிடைத்தபிறகு, ஓட்டுகளில் ஆர்வம் இருந்தது. தினமும் ஹிட்ஸ்க்காகவும் பின்னூட்டத்திற்காகவும்  கல்லாப்பெட்டியை திறந்து வைத்து காவ காத்திருந்திருக்கிறேன். இப்போதும் கூட பின்னூட்டம் எனக்கு உற்சாகம் அளிக்கிறது என்றாலும் ஹிட்ஸ் மற்றும் திரட்டி குறித்த ஆர்வம் இல்லை. துளியும் இல்லை என்று சொல்வதற்கில்லை ஆனாலும் இல்லை. பதிவுகளை வாசிக்க கூகுள் ரீடர், ஃபீட், ஃபாலோ ஆப்ஷன் என்று பல வழிகள் இருந்தும் திரட்டிகளை தெய்வமாக நினைப்பதும் ஏன் என்பதும் புரியவில்லை. சந்தேகமில்லாமல் திரட்டிகளுடைய சேவை மிகப்பெரியது, பாராட்டத்தக்கது. ஆனாலும் திரட்டிகள் இல்லையென்றால் பதிவுலகம் அழிந்துவிடும் என்பது போன்ற இமேஜ் சரிதானா என்பதில் புரியாத புதிர் இருக்கிறது. எழுத்தாளர் யுவகிருஷ்ணா திரட்டிகளிலிருந்து விலகிய பிறகு சொன்னார், 'திரட்டிகளில் இருந்தாலும் 1000 ஹிட்ஸ், இல்லாவிட்டாலும் 1000 ஹிட்ஸ் என்பதை தெரிந்து கொள்ள இவ்வளவு நாட்களானது'. இது பலருக்கும் புரிவதில்லை என்றே நினைக்கிறேன். பதிவர்கள் தங்கள் எழுத்துக்களை மட்டுமே நம்ப வேண்டும், திரட்டிகளையோ பின்னூட்டங்களையோ நம்பி எழுதினால் வெகுஜன எழுத்தாளர்களின் வசவு கேட்க வேண்டிவரும்.

இந்தப்பத்தி எழுதுவதில் கர்வப்பட்டுக்கொள்கிறேன். இதுவரை  பதிவுகளில் எழுதவும், பின்னூட்டமிடவும் ஒரே பயனர் பெயரைத்தான் பாவித்து வருகிறேன். எங்கும் எதற்கும் அனானியாகவோ, வேறு பெயரிலோ பின்னூட்டியதில்லை, பதிவிட்டதில்லை என்று சொல்வதில் நேர்மையான பெருமை  இருக்கிறது. காதைக் கொண்டுவாங்க.. ஒரு பிரபல பதிவர் 25 ஐடி வைத்திருக்கிறாராம்.

சொல்வதற்கு பல விஷயங்கள் கிடப்பில் இருந்தாலும், அறையில் கிடைத்துக்கொண்டிருந்த இலவச இணைய இணைப்பு தடைபட்டு விட்டதால் இடுகைக்கான தகவல்களை திரட்ட முடியாது அத்தனையும் முடங்கிப் போய் கிடக்கிறது. புதிதாய் இணைப்பு வழங்குபவரும் ஊரில் இல்லை. அதனாலேயே இந்த தொடர் இடுகைகளை எழுதி உங்களை படுத்த வேண்டிதாகிப்போனது. தொடர் என்றதும நினைவு வருகிறது..

பதிவர் தன் வரலாறு கூறுதல் என்ற தொடர் இடுகையை தொடர்ந்து நடத்திச்செல்ல நான் அழைப்பது...
ஒரு வரியை வைத்தும் ஒரு இடுகையை எழுதிவிடலாம் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். நீங்களும் எழுதுங்க... இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல.